Showing posts with label கிராமம். Show all posts
Showing posts with label கிராமம். Show all posts

Tuesday, October 30, 2012

குளத்தில் முளைக்கும் மரங்கள்

ஒவ்வொரு ஊரிலும் அனாதையாக கிடக்கிறது எப்போதோ வாழ்ந்த தெப்பக்குளங்கள். அலைகளாக வந்து கரை மோதிய அந்த தெப்பக்குள தண்ணீரையும் வீடுவரை ஒலிக்கும் அதன் இரைச்சலையும் ஞாபகமாகப் பாதுகாக்கிறார்கள் ஊர் பெரியவர்கள். கரும்பச்சை நிறத் தண்ணீருடன் இருக்கும் எங்கள் ஊர் தெப்பக்குளத்துக்கும் அதன் ஆலமரத்துக்கும் ஆழமான கதைகள் உண்டு. இந்த கதைகளை வரலாறுகளில் இருந்து சொல்ல முற்படும் தாத்தாக்களின் வார்த்தையில், உண்மையின் அளவு தெரிய வாய்ப்பில்லை. இருந்தாலும் தல விருட்ச கதைகள் மாதிரி தெப்பக்குளக் கரையில் வளர்ந்திருக்கிற ஆல மரத்துக்கும் கதைகள் இருக்கலாம்தான். ஒன்றில் ஆரம்பித்து ஏதோ ஒன்றில் முடிப்பதுதான் கதை என்றால் இங்கு எல்லாவற்றுக்கும் கதைகள் உண்டு.

தெப்பம் ஓடியதற்கான எந்த அறிகுறியும் இல்லாமல் இப்படியொரு குளம் எப்படி வந்திருக்கும் என்பதற்கான விவாதத்தை ஆலமரத்திண்டில் அமர்ந்து, கல்லூரி படிக்கும் அண்ணன்கள் ஆரம்பித்து வைத்ததில் இருந்து தெப்பக்குளப் பாசம் எனக்கும் பிடித்துக்கொண்டது. ஊரின் மேற்கே இருக்கிற சிவன் கோவிலுக்கான குளமாக இது இருந்ததாகவும் சில நூற்றாண்டுகளுக்கு முன் இங்கு தெப்பம் ஓடியதாகவும் பேசப்பட்டது. இப்போதே கிராமமாக இருக்கிற ஊர், சில நூற்றாண்டுகளுக்கு முன், ஒரே ஒரு குடும்பமாக மட்டுமே இருந்திருக்கும் என்றும் தோன்றியது. கூடவே ஒரே ஒரு குடும்பத்துக்காகத் தெப்பம் ஓடியிருக்குமா என்ற சந்தேகமும். பக்கத்து ஊரான ஆழ்வார்க்குறிச்சியில் ஒவ்வொரு வருடமும் தெப்பம் ஓடுகிறது. அக்கம் பக்கத்து ஊர்களில் இருந்து கூட்டம் கூட்டமாக வந்து அந்த தெப்பத்தை பார்ப்பதையும் அதன் பொருட்டு நடக்கிற திருவிழா தடல்புல்களும் தெப்பக்குள திண்டு, திருமண மண்டபம் போல மக்கள் கூடியிருக்கும் அரங்கமாகி இருப்பதும் மகிழ்ச்சி பிரவாகமாக இருக்கிறது. அப்படி ஒரு தெப்பம் இந்த குளத்தில் ஓடியதை யாரும் பார்த்ததில்லை. ஆனால், குளத்தை பார்க்கும்போது, தெப்பமும் திருவிழாவும் மனதுள் வந்துபோவது தானாக நடந்துவிடுகிறது.

மழை, வெள்ளம் வருகிற காலங்களில் தெப்பக்குளத்தின் கீழ்முக்கில், ஒதுங்கி கிடக்கிற பொருட்களை வேடிக்கைப் பார்த்துக் கொண்டோ, அல்லது அதில் தலை தூக்கி அசைந்து கிடக்கிற பாம்புகள் மீது கல்லெறிந்து கொண்டோ அலையும் டவுசர் காலத்தில், இந்த குளம் மாடுகள் குளிப்பதற்காகத்தான் என்பதாகவே நினைத்தேன். ரெண்டாத்து முக்கிற்கு மாடுகள் பத்தி செல்கிற புனமாலை அண்ணன், குளத்தின் இந்த கரையில் இருந்து அந்த கரைக்கு மாடுகளை பத்திவிட்டு ஏதாவது ஒரு மாட்டின் மீதமர்ந்து நடு குளத்தில் பொத்தென்று குதித்து எழும்போது மனிதர்களும் குளிக்கலாம் என உணர்ந்தேன். நீச்சல் தெரியாத சிறு பயல்கள் பயந்துகொண்டு கரையில் நிற்க, அவர்களை தண்ணீருக்குள் தள்ளிவிட்டுவிட்டு வேடிக்கைப் பார்ப்பார்கள் அண்ணன்கள். தத்தக்கா பித்தக்கா என்று முங்கி, மோதி, தவித்து, தண்ணீர் குடித்து அவர்கள் தானாக நீச்சல் கற்றுக்கொள்ளும் இடமும் தெப்பம் ஓடாத இந்த குளம்தான்.


இந்த குளத்தின் வடபக்கப் படித்துறை ஒன்று சிதைந்து மாடுகளை குளத்துக்குள் இறக்க, ஊர்க்காரர்கள் தடுமாறியபோது பஞ்சாயத்து சார்பாகச் சாய்வுதளம் ஒன்று கட்டப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, வேர்களைப் பிதுக்கி திமிறிக்கொண்டிருக்கிற ஆலமரத்தை சுற்றி திண்டு ஒன்றும் கட்டப்பட்டது. அதுவரை வேரில் அமர்ந்து கதை பேசியவர்கள், திண்டுக்கு மாறினார்கள். எப்போதாவது தெப்பக்குளத்துக்கு வந்து போய்கொண்டிருந்த & திருட்டுத்தனமாகப் புகைப்பிடிக்கிற அண்ணன்களுக்கு இப்போது இது நிரந்தர இடமாகிவிட்டது. அண்ணன்கள் மாலையிலும் மாடுமேய்ப்பவர்கள் மற்றும் வயலுக்கு செல்பவர்கள் காலையிலும் என பரப்பரப்பாகிவிட்டது திண்டு. இதற்கு இன்னொரு சிறப்பும் இருப்பதாக, காபி கடைகளில் பேசிக்கொண்டார்கள்.

‘வீட்டுல உருண்டு உருண்டு படுத்தாலும் தூக்கம் வரமாட்டேங்குடே. தெப்பக்குளத் திண்டுல துண்டை விரிச்சு சும்மா படுத்துப் பாரேன். எப்ப தூங்குனம்னே தெரியாது. எந்துச்சு பாத்தாதான் தூங்கிருக்கோம்னு தெரியும்’& என்றார்கள். கோடைகாலங்களில் நண்பகல் நேரத்தில் திண்டில் தூங்க இடம் கிடைப்பது அரிது. தூங்கிக்கொண்டிருப்பவர்களின் கால்களை ஒதுக்கிவிட்டு கொஞ்சம் உட்கார்ந்து கொள்ள வாய்ப்பிருக்கும்.

ஊரில் இருந்து தனியாக இருக்கிற இந்தத் திண்டு, தூங்கவும் கதைகள் அல்லது பொரணி பேசும் இடமாகவும் மாறிப்போனதில் தெப்பக்குளத்துக்கும் வருத்தம் இருந்திருக்கலாம். அவளை, அவன் வைத்துக்கொண்டிருக்கிறான் என்கிற கிளு கிளு கதையில் இருந்து சொந்தக்கார குடும்பத்துக்கு எப்படி குடைச்சல் கொடுக்கலாம் என்கிற கொடுரம் வரை அலசப்படும் இடமாக மாறிப்போன திண்டும் அதன் தோழன் தெப்பக்குளமும் பேசத் தொடங்கினால், என்ன பேசியிருக்கும்? தினமும் வந்தமர்கிறவர்களுடன் அவையும் ஒன்றாக, தங்கள் கருத்தை சொல்லி இருக்கலாம். அல்லது, ‘இங்க உட்கார்ந்து இதையெல்லாம் பேசாத’ என்கிற ஆட்சேபத்தையும் எழுப்பி இருக்கலாம். அல்லது மவுனமாகச் சிரித்துக்கொண்டும் இருந்திருக்கலாம்.

ஊரில், கல்யாணம் மற்றும் கோயில் கொடை காலங்களில் இந்த தெப்பக்குளத் திண்டுதான் சாராயம் குடிப்பதற்கான இடமாகவும் இருக்கும். இருட்டில் திருட்டுத்தனமாகப் பாட்டில்களை கொண்டு வந்து குடிக்கவும் பேசவுமாக, திண்டு மாறிபோனதின் தடதடப்பு, மறுநாள் தலைவலியில் தெரியும்.

இப்படி பரபரப்பாக இருக்கும் தெப்பக்குளமும் திண்டும் தென்னரசுவின் அக்கா, குளத்தில் பிணமாக மிதந்ததில் இருந்து வெறிச்சோடிப்போனது. துறுதுறுவென்று இருக்கும் தென்னரசுவின் அக்காவுக்கு ஊரில் அழகி என்றும் பெயர். காதல் சமாசாரங்கள் கெட்டவார்த்தையாகப் பார்க்கப்பட்ட ஊரில் பிறந்தது அவளது குற்றம். விஷயம் வீட்டுக்குத் தெரிந்து அவசரம் அவசரமாக, மாமன் மகன் மாப்பிள்ளையாக நிச்சயிக்கப்பட்டான். பெரியவர்களின் கவுரவம் சிறுசுகளின் ஆசையை எப்போதும் கொலை செய்யத்தான் துடித்துக்கொண்டிருக்கிறது. தனது காதல் நிராகரிக்கப்பட்டதன் விளைவாக தெப்பக்குளத்தில் விழுந்து பிணமானாள். வீட்டில் ஆளைக் காணோமென்று விடிய விடிய தேடியும் கிடைக்கவில்லை. மறுநாள் காலையில் பக்கத்து ஊருக்கு பால் விற்கப்போகும் கணேசன், தற்செயலாக குளத்தை பார்க்க, விஷயம் ஊருக்குப் போனது. மொத்த ஊரும் குளத்தில் கூடி கண்ணீர் சிந்திய பின், குளத்துக்கு இன்னொரு பெயரும் வைக்கப்பட்டது. கொலைகார குளம்! தண்ணீரும் கொலைக்கான ஆயுதமானது ஆச்சர்யம்தான்.

காலங்கள் வேகமாக ஓடுகிறது. பிழைப்பின் பொருட்டு பெருநகருக்கு புலம்பெயர்ந்தாலும் எப்போதும் உள்ளுக்குள் ஊசலாடிக்கொண்டே இருக்கிறது ஊர். ரகளையும் ரசனையுமாக இருந்த தெப்பக்குளத்தை சமீபத்தில் எட்டிப்பார்க்கிறேன். தென்னரசுவின் அக்காள் பிணமாக மிதந்த வடக்கு முக்கில், குளத்தின் சுவரோடு மரமொன்று முளைத்திருக்கிறது. அவள் அணிந்திருந்த பச்சைத் தாவணியாய் கிளைபரப்பி பார்க்கிறது மரம். குப்பைகள் சுமக்கும் குளத்து தண்ணீர், குட்டையாகி இருக்கிறது. பாசி படர்ந்திருக்கிற படித்துறை, செடிகளால் மூடப்பட்டிருக்கிறது. எப்போதும் ஆட்களோடு இருக்கும் திண்டு, பாம்பு சட்டைகள் படர்ந்திருக்க, பேச்சுத் துணையின்றி மூச்சற்றுக் கிடக்கிறது. குளத்தை பார்க்கப் போனவன், குறைகளை எழுத தொடங்குகிறேன்

Monday, November 7, 2011

சோடா என்றொரு மாடல்

எப்போதாவது பேஷன் ஷோக்களில் கலந்துகொள்ளும் வாய்ப்பு நண்பர்களுடன் எனக்கும் கிடைத்திருக்கிறது. சென்னையில் ஏதாவது ஒரு நட்சத்திர ஓட்டல் ஒன்றில், விளக்குகள் குறைவாக எரிகிற இடங்களில் இம்மாதிரியான ஷோக்கள் நடக்கும். விதவிதமான உடைகளில் இளைஞிகளும் இளைஞர்களும் கூடியிருக்க, அவர்களின் மேக்கப் மற்றும் பேச்சுகளைப் பார்த்தால் தாழ்வு மனப்பான்மை வந்துவிடும். மனீஷ் மல்கோத்ரா மாதிரியான பெரிய ஆட்களின் ஷோக்களில் நட்சத்திரங்கள் கலந்துகொள்வது ஷோக்களுக்கான பேஷன். அப்படியொரு ஷோவில் கலந்துகொள்ளும் வாய்ப்பு கிடைக்கவில்லை என்றாலும் சில ஷோக்களில், கிழிந்து தொங்கும் உடைகளுடன் நடந்து வரும் பெண்களை, கையில் ஒயின் கிளாஸுடன் ஸ்டைலாக நின்றுகொண்டு பார்த்தால் பாவமாகத்தான் தோன்றும்.


இதை பெரியாச்சி பார்த்தால், ‘ஏட்டி, ஒனக்கென்ன கோட்டியா புடிச்சிருக்கு... இப்படி கிழிச்சுப் போட்டுட்டு அலையுதெ...மானங்கெட்ட செரிக்கி...‘‘ என்று வெற்றிலைச் சாறைத் துப்பிவிட்டு திட்டியிருப்பாள். முதுகில் பெரிதாக இடம் விட்டு ஜாக்கெட் போட்ட பெரிய மாமா பொண்டாட்டிக்கே அர்ச்சனை அதிகமாக விழுந்தது என்றால் இந்த பெண்களுக்கு என்ன மாதிரியான அர்ச்சனை நடக்கும் என்று யோசித்துக் கொள்வேன். ஒயினுக்குப் பிறகு பிராண்டிக்குப் போனதும் இவர்களை பெரியாச்சியிடம் பிடித்துக்கொடுக்க வேண்டும் எனத் தோன்றும்.

இதே போல விதவிதமாக உடைகளை சுமந்துகொண்டு வரும் இளைஞர்களைப் பார்த்தால், ‘சோடா‘ ஞாபகம்தான் வரும். இரண்டு மூன்று கலர்களில் சட்டை, இதில் உள்சட்டை, வெளிசட்டை, முட்டியில் கிழிந்த ஜீன்ஸ், சீவப்படாத தலைமுடி என பேஷன் ஷோக்களில் நடந்து வருபவர்களுக்கு ‘சோடா‘ ஒன்றும் குறைச்சல் இல்லை. இவர்களுக்கு ஈடான அல்லது இவர்களை விட அதிகப்படியான அழகை அவன் கொண்டிருந்தான். ஆனால், அவன் கொஞ்சம் மனநிலைப் பாதிக்கப்பட்டவன்.

அக்ரஹாரத்தில் யார் வீட்டிலோ கொடுத்த ஜீன்ஸ் பேண்ட் மற்றும் சிவப்பு, வெள்ளை, மற்றும் ஊதா நிறத்தில் கோடு போட்ட சட்டைகளை மொத்தமாக அணிந்திருந்தான். தூரத்தில் இருந்து அவன் நடந்து வருவதைப் பார்த்தால் பேஷன் ஷோவில் நடந்து வரும் மாடல்களைப் போன்றே தோன்றும்.
ஊருக்கு மேற்கே இருக்கிற பஞ்சாயத்து போர்டு திண்டுதான், சோடாவின் சொகுசு வீடு. இங்கு பெரும்பாலும் யாரும் வருவதில்லை என்பதும் இரவு நேரங்களில் அதிகப்படியான தொந்தரவு இல்லை என்பதும் சோடா இந்த இடத்தை தேர்வு செய்ததற்கு காரணமாக இருந்திருக்கலாம். எப்போதும் சட்டைப் பையில் பீடி கட்டு இருக்கும். அப்படி இல்லையென்றால் அவன் குடித்துப் போட்ட துண்டுகளை சேகரித்து, பீடி கட்டினுள்ளே சொருகியிருப்பான். அவன் எதற்கும் கவலைப்பட்டதில்லை.

பஞ்சாயத்து போர்டு திண்டின் பின்பக்கம் இருக்கிற பிள்ளையார் கோவில் வாய்க்காலுக்கு காலையில் ஆட்கள் செல்லும் சத்தம் கேட்டதும் எழுந்து சுவரோரமாக குத்த வைத்து உட்கார்ந்துகொள்வான். எதிரில் மஞ்சளாக வெளிச்சம் தரும் செவனனின் டீக்கடை திறந்திருக்கும். பால் கொதிக்கும் சத்தத்துடன் செவனனின் கொட்டாவி சத்தமும் கேட்கும்.

தலையில் தலைப்பாகை கட்டிக்கொண்டு வந்து பெஞ்சில் உட்கார்கிற பேச்சி நம்பியாரும், புனமாலையும் பேச்சை ஆரம்பிப்பார்கள். முதல் போணி பேச்சி நம்பியார்தான். அவர் காசைக்கொடுத்து டீயை குடித்ததும் திண்டிலிருந்து இறங்குவான் சோடா. அவன் நடந்து வர வர, ‘சோடா வாராண்டே‘ என்ற சத்தம் கடையில் கேட்கும். போய் கடை வாசலில் நின்றதும், டீயை நீட்டுவார் செவனன். வாங்கி சூட்டோடு குடித்துவிட்டு கிளாசை கழுவி விட்டு ஓரமாக வைப்பான். வைத்துவிட்டு அவன் போகாமல் நின்றால், பீடி வேண்டும் என்று அர்த்தம். இரண்டு செய்யது பீடிகளை நீட்டுவார். வாங்கிக்கொண்டு அங்கேயே பத்த வைத்துக்கொண்டு நடப்பான்.

‘இதெல்லாம் கரெக்டா பண்ணுதாம்... ஏதாவது கேட்டாதான் பதிலு பேசமாட்டங்காம்‘ என்று முனங்குவார் புனமாலை.

‘அவன் என்ன கொழுத்துபோயா அப்படி செய்யுதாம்? எவனும் செய்வினை வச்சிருப்பானுவோ பாவம்...‘ என்பார் பேச்சி நம்பியார்.

திரும்பவும் திண்டில் வந்து உட்கார்ந்துகொள்வான். வாய்க்காலில் குளிக்கப் போகிற, வருகிறவர்களைப் பார்த்துவிட்டு ஏதோ கற்பனையில் உட்கார்ந்திருப்பான். எட்டு மணிக்கு டாணா, விக்ரமசிங்கபுரம் வழியாக நாங்குநேரி செல்லும் தேவி பஸ் வந்ததும் சோம்பல் முறித்துவிட்டு பஸ்&ஸ்டாண்ட் நோக்கி நடப்பான். எதையோ முணுமுணுத்துக்கொண்டிருக்கும் அவனது உதடு. திடீரென்று சிரித்துக்கொள்வதும் சாலையில் ஓரத்தில் மட்டுமே நடப்பதுமான அவனது விதிகளில் இன்னொன்றும் பிரதானமாக இருந்தது.

அது பாடல்.

யாரிடமும் அதிகம் பேசாத சோடா, ஒரு கட்டு செய்யது பீடிக் கொடுத்தால் பழைய பாடல்களை ஸ்ருதி குறையாமல், அட்சரச் சுத்தமாக பாடுவான். அதில் சீனிவாஸ், ஏஎம் ராஜா பாடல்களே அதிகம் இருக்கும்.

பஸ்-ஸ்டாண்டின் கீழ்ப்பக்கம் இருக்கும் கணேசன்னனின் கடையில் வலது ஓரம் அமர்ந்துகொண்டு, ‘நீ போகுமிடமெல்லாம் நானும் வருவேன் போ போ‘ என்ற ‘இதய கமலம்‘ பட பாடலுடன் கச்சேரி ஆரம்பமாகும். சண்முகத் தேவரும் சீனி ஆசாரியும் துண்டை விரித்து தூணில் சாய்ந்துகொண்டு மெய் மறந்து போவார்கள். அவர்கள் காலத்து காதலை நினைத்திருப்பார்களோ என்னவோ?
அடுத்ததாக ஏஎம் ராஜாவின் ‘பாட்டுப பாடவா பாடம் சொல்லவா‘ என்ற பாடல் தொடரும். இதற்குள் நான்கு கட்டுப் பீடிகள் சேர்ந்திருக்கும் சோடாவுக்கு. கண்களை மூடி சோடா, தன்னிலை மறந்து பாடலுக்குள் போய்க்கொண்டிருப்பான். கேட்டுக்கொண்டிருப்பவர்களும் அப்படியே. பாடல்களில் வரும் பெண்குரலையும் ஆணின் குரலிலேயே அவன் பாடினாலும் அப்படியொரு இனிமை. இதில் அதிகமாக, சோகப்பாடல் பாடும்போது, சண்முகத்தேவருக்கு கண்ணீர் வந்துவிடும். கடை கணேசன்னனும் தன் பங்குக்கு ஒரு டீயை கொடுப்பான்.

‘ச்சே... கொன்னு போட்டாம்லே... பய கொஞ்சம் ஒரு மாதிரியா இருந்தாலும் என்னமா பாடிட்டாங்க... மனசு கேட்கலைடா‘ என்று சொல்லும் சீனி ஆசாரி, வேட்டியை அவிழ்த்து ‘இந்தாடா...‘ என்று இரண்டு ரூபாயை கொடுப்பார்.

ஸ்கூல், கல்லூரி செல்பவர்கள் பஸ்&ஸ்டாண்டில் கூடியதும் திரும்பவும் மேற்கு நோக்கி நடப்பான். அவனது அதிகப்பட்ச சந்தோஷம் பீடியாகவே இருக்கும். வயிறு பசித்தால் ஏதாவதொரு வீட்டு வாசலில் போய் நிற்பான். வீட்டுக்குள்ளிலிருந்து யாராவது அவர்களாகவே பார்த்தால்தான் உண்டு. இலலையென்றால் பார்க்கும் வரை அப்படியே நிற்பான்.

தற்செயலாக அவனைப் பார்த்துவிட்டு, ‘சோடாவா, ஒரு சத்தம் கொடுத்தா என்னடே‘ என்று எழுந்து வருவார்கள். குறிப்பிட்ட வீடுகளில் அவனுக்கென்று தனி பீங்கான் தட்டு இருக்கும் வாசலிலேயே. அதை எடுத்து சோடாவே கழுவிக்கொள்வான். பிறகு வீட்டிலிருப்பவர்கள் சோறோ, கஞ்சித்தண்ணியோ கொடுப்பார்கள். முதன்முறை எவ்வளவு கொடுக்கிறார்களோ அவ்வளவுதான். பிறகு அவன் கேட்கமாட்டான். சாப்பிட்டு ஏப்பம் விட்டுவிட்டு தட்டைக் கழுவி வைத்துவிட்டுப் போவான்.

எல்லோரும் ஆச்சர்யப்படும் படி அவன் எப்போதாவது ஆற்றில் குளித்துவிட்டு வருவான். உச்சிவெயில் மண்டையை பிளக்கிற நண்பகலில் அணிந்திருக்கிற துணிகளை களைந்து குளித்துவிட்டு நனைந்த பேண்ட், சட்டைகளுடன் அப்படியே அவன் வருவதை பார்க்க ஒரு மாதிரியாகத் தோன்றும்.

‘நின்னு காயப்போட்டுட்டு உடுத்திட்டு போனா என்னல... இப்படி நனைஞ்சதை உடுத்திட்டுப் போற?‘ என்று யாராவது சொன்னால், அவன் ஒரு சிரிப்பை மட்டும் பதிலாகத் தருவான்.

அவன் உள்ளூர்க்காரனா இல்லை வெளியூர்க்காரனா? அல்லது இங்கிருப்பவர்களுக்கு சொந்தக்காரனா என்கிற விவரம் எனக்கு தெரியவில்லை. விசாரித்தாலும் அதே பதில்தான். இதற்கிடையே இவனது மனைவி பற்றி ஒரு பலாத்கார கதையும் அதன் காரணமாகவே இவன் மனநிலைப் பாதிக்கப்பட்டான் என்கிற கதையும் ஊரில் எப்படியோ ஆங்காங்கே கொடுமையாக வலம் வந்துகொண்டிருந்தன. கதையை கேட்ட சில நொடிகளிலேயே அப்படி எதுவும் அவனுக்கு நிகழ்ந்திருக்காது என முடிவு செய்துகொண்டேன்.

அநியாயமாக ஊர் பெயர் எதுவும் தெரியாத உள்ளூருக்கு வந்திருக்கிற ஒரு மனநோயாளிக்கு வக்ரப் பின்னணி கொண்ட ஒரு கதையை ஏன் உருவாக்க வேண்டும் எனவும் தோன்றியது. ஊரில் வேலை இல்லாதவர்களுக்கு இப்படி கதைகளை உருவாக்குவதும் ஒரு வேலைதான்.

ஸ்கூல் லீவு நாட்களை கொண்ட சனி, ஞாயிறுகளில் பிள்ளைகள் பஞ்சாயத்து போர்டு திண்டில் கூடிவிடும். எதிரில் இருக்கிற வேப்ப மரத்தில் ஏற்கனவே சேலை துணியால் கட்டியிருக்கிற ஊஞ்சலில் ஆடுவது இவர்களுக்குப் பொழுதுபோக்கு. சோடாவுக்கு இந்த கிழமைகளில் அவனையறியாமல் மகிழ்ச்சி வந்துவிடும். சிறிது நேரம் அவர்களை வேடிக்கைப் பார்த்து சிரித்துக்கொண்டிருப்பான். யாராவது நன்றாக ஆடிக்கொண்டிருந்தால் திடீரென்று அவர்களை நோக்கி கைதட்டுவான்.

‘ஏட்டி, சோடா உன்னைய பாத்து கைதட்டிட்டான் பாரு...‘ என்று எவளாவது சொல்ல, ‘ஆமா, ஒனக்கு புருஷம்லா‘ என்று மற்றொருவள் சொல்ல, சண்டை ஆரம்பிக்கும். தலைமுடியை இழுத்துக்கொண்டு ஆளாளுக்கு ஓடுவார்கள்.

அவர்கள் போன பிறகு சோடாவுக்கு ஆசை வரும். ஓடிப்போய் தொங்கும் சேலையில் உட்கார்ந்து அங்கும் இங்கும் ஆடுவான். இரண்டு மூன்று ஆட்டத்துக்குப் பிறகு ஒன்று சேலை கிழியும் அல்லது சேலை கட்டப்பட்டிருக்கிற மரக்கிளை முறியும். டொப்பென்று பின்பக்கம் தரையில் மோதி விண்ணென்று தெறிக்கும் வலியை பொருட்படுத்தாமல் அப்படியே திண்டில் வந்து உட்காருவான்.

எதிரில் சைக்கிளில் போகிறவர்கள் யாராவது இதைப் பார்த்தால், ‘ஒனக்கும் கெடக்க முடியலை என்னா..? எருமை மாடு மாதிரி இருந்துட்டு எதுல ஏறி ஆடுத...‘ என்று சத்தம் போடுவார்கள். அதை இவன் கண்டுகொண்டால்தானே.

தேர்தல்கள் நடந்து பஞ்சாயத்து போர்டு விரிவாக்கம் செய்யப்பட்டதன் பொருட்டு, சோடா அங்கு தங்குவதில்லை. திண்டின் எதிரில் புதிதாக, ‘ஊஞ்சல்களை கொண்ட சிறுவர் பூங்கா‘ வந்திருக்கிறது. எதிரில் இருந்த செவனன் கடைக்குப் பதிலாக இன்னும் சில மாடர்னான டீக்கடைகள் முளைத்திருக்கிறது. சாலைகளின் இருமருங்கிலும் மரங்கள் வளர்ந்திருக்கின்றன. திண்டின் வலப்பக்கம் திறந்தவெளி ஜிம் உருவாகியிருக்கிறது. காலை, மாலையில் இளைஞர்கள் விளையாடுகிறார்கள்.

ஊருக்குப் போன போது, சோடா எங்கே போயிருப்பான் என்பதாகவே இருந்தது என் தேடல்.

‘‘ஏய், சீதை பெரிம்ம, உம் மவனை பார்த்தியா? ஊர்ல இருந்து வந்த பய, அம்மா எப்படியிருக்கா? அக்கா எப்படியிருக்கானெல்லாம் கேட்கலை... எவனோ சோடாவாம்... அவன் எப்படியிருக்காம்னு கேக்காம்... கேட்டியா பெரிம்ம...‘‘ என்று சிரித்தாள் சித்தி மகள் பிரேமா. கல்லூரி படிக்கும் அவளது மகன் மந்திரம், என்னை ஒரு மாதிரியாகப் பார்த்துக் கொண்டிருந்தான். தெருவில் விசாரித்தால் ஏதும் நினைக்கலாம் என்று உலகநாதன் மளிகைக் கடைக்குப் போனேன்.

‘‘உலகா, சோடா எங்கயிருக்கான்?‘‘

‘‘இன்னா வருவாம் பாரு‘‘ என்றான்.

சிறிது நேரத்துக்குப் பிறகு நரைத்த தாடிகளுடன் அதே மாதிரியான உடைகளை உடுத்திக்கொண்டு பீடி புகைத்தவாறே கடைக்கு வந்தான். ஓடிப்போய் ஒரு கட்டு, செய்யது பீடியை வாங்கி அவன் கையில் திணித்தேன்.

என்னைப் பார்த்தவன், ‘‘எய்யோ... எப்படியிருக்கியோ...?‘‘ என்றான்.

ஆமாம். சோடா பேசத்தொடங்கியிருந்தான்.

Sunday, October 9, 2011

தள்ளாடி தடுமாறும் நடைகள்

மூக்காண்டியை இப்படி பார்ப்பது அரிதான காட்சிதான். புதுவேட்டி, சந்தனக்கலர் சட்டை, சவரம் செய்யப்பட்ட முகத்துடன் அவனைப் பார்த்து மாதங்களாகி விட்டது. மடித்துக்கட்டிய வேட்டிக்குள்ளியிலிருந்து தொடைவரை தொங்கும் பட்டாபட்டி டிரவுசருக்குள் பீடிக்கட்டும் தீப்பெட்டியும் தனியாக தெரிந்துக் கொண்டிருந்தது. தோளில் தொங்குகிற, மஞ்சள்நிற கறை கொண்ட வெண்ணிறத் துண்டில், சந்தனம் தடவப்பட்டிருந்தது. நடுவி்ல் உச்சியெடுக்கப்பட்ட எண்ணெய் தடவிய தலையில், இடமும் வலமும் படிக்கட்டுகளைப் போல சுருண்டு மடிந்து இருந்தது முடி. கன்னம் வரை வந்திருந்த கிருதா, அனாதரவாக நின்றிருந்தது இரண்டு பக்கமும்.

பஸ்நிறுத்தத்தில் நிழல் கொடுத்துக் கொண்டிருக்கிற வேப்ப மரத்தில் ஒரு கையை வைத்துக்கொண்டு மறுகையால் இடுப்பைப் பிடித்தபடி நின்றிருந்தான் அவன். சிறியதுமல்லாமல் பெரியதுமல்லாமல் வளர்ந்திருக்கிற மீசையை திருக்கியிருந்தான். குழந்தையாக இருந்தபோது நேர்த்திக்கடனுக்காக அவன் மூக்கில் ஒரு வளையம் போடப்பட்டிருந்தது. சிறுவயதில் அடிக்கடி ஏதாவது ஒரு நோயின் தாக்கத்தால் பலமிழந்திருப்பான் மூக்காண்டி. அடிக்கடி இப்படி நோய் தாக்குவதால், ஏதாவது சாமி குத்தம் இருக்குமோ என்று ஆண்டி கோயிலில் குறி கேட்கப்போனாள் மூக்காண்டியின் ஆச்சி. அங்கு குறிசொன்னவர், 'மூக்கை கோரப்படுத்தி சாமியை கும்புடு சரியாவும்' என்று அருள் வந்து ஆடி சொன்ன குறியின் பொருட்டு அவன் மூக்கு கோரப்படுத்தப்பட்டது. இதனால் அவன் 'மூக்குவாளி' என்று சிறுவயதில் அழைக்கப்பட்டிருந்தான். இப்போது மூக்கு வளையம் இல்லை. அது போடப்பட்டிருந்த வலது பக்க மூக்கில், கருப்பு நிறத்தில் மக்கிப்போன ஓட்டை, அடையாளமாக இருந்தது.

அதே இடத்தில் நின்றுகொண்டே, வலப்பக்கமாக அடிக்கடி தலையை நீட்டி நீட்டி, பஸ் வருகிறதா என்றும் பார்த்துக்கொண்டான். தூரத்தில் வருகிற வேன் அல்லது லாரிகளின் சத்தங்கள், பஸ் என்று ஏமாற்றிக்கொண்டிருந்தது.

'என்ன மூக்கா... வெளியூராடே..?' -போகிற வருகிறவர்கள் கேட்கிற இந்த கேள்விக்கு, தொண்டையை கணைத்துக்கொண்டு பதில் சொல்வான்.

'ஆமா... விகே.புரத்துல சின்ன மாமன் மவா, சடங்காயிருக்கா. அதான்' என்கிற அவன் சத்தம், கிட்டதட்ட பஸ் நிறுத்தத்தை சுற்றியிருக்கிற பெரும்பாலான வீடுகளுக்கு தகவலாகச் சென்றிருக்கும். அப்படியொரு அவயம் அவனுடையது. சிலருக்கு சத்தங்கள்தான் பலம். சிலருக்கு உருவங்கள். சிலரின் உருவத்துக்கும் சத்ததுக்கும் சம்பந்தமில்லாமல் இருப்பதும் உண்டு. ஆனால், மூக்கனுக்கு இந்த சத்தம்தான் பலம்.

'சரி, இப்படி வெள்ளையும் சொள்ளையுமா போறானே... சாயந்திரம் இப்படியே வந்துருவானாட்டி, பாப்போம்' என்கிற பெண்களின் கிண்டல்கள் அவனை நேரடியாகவே பல முறை தாக்கியிருக்கின்றன. எந்த இடக்கும் அவனை எதுவும் செய்துவிடாது.

அதிகாலையில் நான்கு மணிவாக்கில் என்ன மழை, பனியடித்தாலும் சரியாக எழுந்துவிடுவது, மாடுகளில் பாலை கறந்துவிட்டு ஆழ்வார்க்குறிச்சி, செட்டிகுளம், கல்யாணிபுரம், சிவசைலம், கோயிந்தபேரி ஆகிய கிராமங்களுக்கு சைக்கிளில் சென்று கொடுத்துவிட்டு வீட்டுக்கு திரும்ப, பகல் பதினோரு மணிக்கு மேலாகிவிடும். வரும் வழியில் ஆற்றில் பால்கேனை நன்றாக கழுவுவான். பிறகு காலை நனைக்கும் தண்ணியில் குளியலை போடுவான். புறப்பட்டு வருவதற்குள் நனைத்த துணிகள் காய்ந்துவிடும். பஸ் நிறுத்தத்தில் இருக்கிற துரையப்பா கடையில் டீ குடித்துவிட்டு, நின்றுகொண்டே நாளிதழ்களை மேம்போக்காக பார்ப்பான்.

''நேத்து காலைல ஆழ்வாரிச்சுக்கு எம்மெல்லே வந்தாரு... போட்டோவயே போடலையே?'என்பான் பக்கங்களை புரட்டிவிட்டு. பிறகு ஒரு பீடியை பற்றவைத்துவிட்டு சைக்கிளை மிதிப்பான். கருவேலப்பிறை தாண்டியதும் வலப்பக்கம் திரும்பி சைக்கிளை வீட்டின் சுவற்றில் சாய்ப்பான். பூட்டி சாவியை எடுத்துவிட்டு வீட்டுக்குள் போவான். திண்ணை தாண்டிய வீட்டு வாசலுக்கு மேலே, வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற கருப்பு வெள்ளை புகைப்படங்களில், மாலையணிவித்து பொட்டு வைத்திருக்கிற மணிமேகலையின் அருகில் அவன் புகைப்படமும் இருக்கும். அவனையறியாமலேயே கண்ணிலிருந்து பொல பொலவென்று தண்ணீர் வரும். வீட்டுக்குள் அம்மாவானவள், கஞ்சி, தண்ணியை வைத்திருப்பாள். ஈராயங்கத்தோடு ரெண்டு சட்டி தின்பான். சாப்பிட்டு ஏப்பம் விட்டதும் குட்டித்தூக்கம். இரண்டு மணி வாக்கில் எழுந்ததும்தான் அவனது உலகம் ஞாபகத்துக்கு வரும்.

அம்மாவானவளுக்கும் அவனுக்கும் கடந்த சில வருடங்களாக பேச்சுவார்த்தை இல்லை. பேச்சு வார்த்தைதான் இல்லையே தவிர, மற்றபடி சாப்பாடு உள்ளிட்ட தேவைகளுக்கு பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்திருந்தான். வேறு தேவைகள் என்றால் பக்கத்து வீட்டு பிரமு மகன், ''ஏண்ணே, ஆச்சிக்கு இருவது ரூவா வேணுமாம்?" என்பான். ஏன், எதற்கு என்ற கேள்வியெல்லாம் கிடையாது. இருந்தால் கொடுத்துவிடுவான்.

வீட்டிலிருந்து நடப்பான். அவனது நடையும் போகிற வேகமும் எங்கு போகிறான் என்பதை தெருவில் இருக்கிறவர்களுக்கு உணர்த்திவிடும். இது ஒன்றும் புதிதில்லை என்பதால், அவர்களுக்கு அது பற்றிய அக்கறை இல்லை. புளியமரங்கள் இருக்கும் சாலையின் எதிரே மரத்தட்டிகளால் மறைக்கப்பட்டிருக்கிற கடைக்குள் போவான். இவனைப்போலவே அங்கு நான்கைந்து பேர் இருப்பார்கள். கடையில் இருக்கும் கோபாலு, 'மணியாச்சே... ஆளை காணும்னு பாத்திட்டிருந்தேன்" என்பான். ஒரு பாட்டிலை வாங்கி அதை மூன்று கிளாஸ்களில் விடுவான். ஒரே மடக்கில் ஒரு கிளாசை முடித்துவிட்டு, பட்டை ஊறுகாயை நக்கிக் கொள்வான். இப்படியே ஒவ்வொரு கிளாசையும் முடித்துவிட்டு, தலையை ஒரு சிலுப்பு. நரம்புகளின் வழியே ஜிவ்வென்று வீரம் தலைக்கேறும். ஜல்லிக்கட்டில் திமுறுகிற காளைகளின் கண்கள் மாதிரி ஆக்ரோஷமாக பார்வை மாறும். கால்கள் தடுமாற ஆரம்பிக்கும். உள்ளேயே சிறிது நேரம் குத்த வைத்து அமர்ந்திருப்பான். ஊறுகாய் காலியான பட்டையை நக்கிவிட்டு, ஸ்ஸ் என்பான். அதற்கு பிறகு அவனால் அங்கு இருப்பு கொள்ள முடியாது. வெளியே வருவான். கால்கள் தள்ளாட தள்ளாடி தடுமாறும் நடை.

எதிரில் வந்து போகிற யாராவது, 'ஏல, ஏம் இப்படி போற... அந்தா அந்த திண்ணையில உட்காரு' என்றதும் அவன் வார்த்தைகள் வேறு வடிவம் எடுக்கும். ஊரில் புழங்குகிற கெட்டவார்த்தைகள் இவன் வாயின் வழியாக வெளிவந்து சிதறும். இதனாலேயே, உள்ளூர்க்காரர்கள் அவனை எதுவும் சொல்வதில்லை. அவனது திட்டல்கள் எந்த தனிப்பட்ட நபரை பற்றியானதாக இருக்காது. பொதுவானதாகவே இருக்கும். கெட்டவார்த்தைகளை கூட, அடுக்குமொழி போல் பேசுகிற சுபாவம் கொண்ட மூக்கன், சில நேரம் அந்த தெருவில் இருக்கிற கீரைத்தோட்டத்துக்கு முன்பக்கமாக மல்லாந்துவிடுவான். தெம்பாக உணர்கிற சில நாட்களில் கொஞ்சம் அதை தாண்டி கருவேலப்பிறை வாசல்வரை தாங்கும். தரையில் உருண்டு புரண்டு புழுதியோடு அவன் கிடப்பதைப் பார்க்க பாவமாக இருக்கும். மூக்கன் உள்ளாடை அணிவதில்லை என்பதால் அவன் கோலம் எப்படி இருக்கும் என்பதை உணர்ந்துகொள்க.

அந்த வழியாக செல்கிற பெண்கள், இதை கண்டும் காணாமலும் போக முடியாது.

'ஏய் செல்லையா, இந்தப் பய வேட்டியை ஒழுங்கா இழுத்து விடுல... குடிகார நாயி கெடக்கு பாரு... கழுதைக்கு கெடந்தால' என்கிற அவர்களின் வார்த்தைகள், எப்போதும் கையில் கம்போடு அலையும் செல்லையாவுக்கு கேட்டதும் வேட்டியை இழுத்துவிடுவான். கிட்டத்தட்ட செல்லையாவுக்கு இது தினசரி வேலையாகவே போய்விட்டது. யார் சொல்லியும் அவன் கேட்கவில்லை. அவனது சித்தப்பா உள்ளிட்ட உறவுகள் பேசிப்பேசி பார்த்தும் அவன் குடியை விடுவதாக இல்லை என்று தெரிந்ததும் அவனை கை விட்டார்கள்.

மாலை ஆறரை, ஏழு மணி வாக்கில் எழுந்திருப்பான். தலை முதல் கால்வரை புழுதி போர்த்தியிருக்கும். விலகி தூரமாக கிடக்கும் வேட்டியை வேகமாக எடுத்து இடுப்பில் கட்டுவான். அக்கம் பக்கம் யாருமிருக்கிறார்களா என்பதை பார்த்துவிட்டு துண்டை தேடுவான். அது கொஞ்சம் பின்பக்கமாகவோ அல்லது முன் பக்கமாகவோ கிடக்கும். எழுந்து நிற்கும் போது கால் தடுமாறும். தலையை அங்கும் இங்கும் ஆட்டுவான். வாய்க்காலை நோக்கி நடக்கத்தொடங்குவான்.

இதுவரை என்ன நடந்தது என்பது அவனுக்கு தெரியாது. 'என்னடே உங்க பெரியம்மையே இந்தா ஏச்சு ஏசுன?" என்றாலோ, 'பக்கத்து வீட்டுக்காரை அடிக்கப் போயிட்டியே" என்பதாக யாராவது கேள்வி கேட்டால், 'அப்படியா... ச்சே...ச்சே, நான் போய் அப்படி செய்வனா?' என்பான் சிரித்துக்கொண்டு. வாய்க்காலில் குளித்துவிட்டு, கருவேலப்பிறை டீக்கடை. சுக்காப்பிகுடித்துவிட்டு, வீட்டுக்கு கிளம்புவான். வீட்டுக்கு திரும்பும் முக்குக்கு முன்னால் இருக்கிற பஜனை மட திண்டில் அமர்வான். ஏற்கனவே அங்கு அமர்ந்திருக்கிறவர்கள், '' என்னடே, சாயந்திரம் நல்ல தூக்கம் போலுக்கு" என்று கேலி பேசினால், சிரிப்புதான் அதற்கு பதில்..

மூக்கனின் மனைவி மணிமேகலை தலை பிரசவதுக்கு அவளது ஊரான தென்காசி அருகேயுள்ள புலியூருக்குப் போனபோது மருத்துவமனையில் இறந்துபோனாள். மொத்த ஊரும் கூடி புலியூரில் கதறி அழுத போது, மூக்கன் மட்டும் அவ்வளவாக அழாமல் இருந்தான். எல்லாம் முடிந்து வீட்டுக்கு வந்த பிறகுதான் அவனுக்கு வெறுமை புரிந்தது. அழுதான். அழுதுகொண்டே இருந்தான். பதினாறாவது நாள் கழித்து அவனுக்கு இன்னும் அழுகை அதிகமாகியது. மூன்று நாட்கள் அவன் வீட்டை விட்டு வேறெங்கும் செல்லவில்லை.

'ஏந்தாயி உம் மவன் பைத்தியம் பிடிச்ச மாதிரி இருக்காம்' என்று கேட்கிற பக்கத்து வீட்டுக்காரிகளுக்கு அவளது அம்மாவால் பதில் சொல்ல முடியவில்லை.

'இன்னொரு கல்யாணத்தை முடிச்சு வையி. வேறென்ன செய்ய முடியும். எல்லாம் நம்ம கையிலயா இருக்கு?' என்று சொந்தக்காரிகள் சொல்லிப்போன பின், அதை மூக்கனிடம் அம்மா விவரிக்க, இருவருக்குமான பேச்சுவார்த்தை முறிந்தது அன்றிலிருந்துதான்.

பிறகுதான் குடிக்கத் தொடங்கினான். முதலில் கொஞ்சமாக குடிக்க ஆரம்பித்தவன் , உள்ளூர் கூட்டாளிகள் புண்ணியத்தில் அதை தொடரலானான். குடி அவனை ஆசுவாசப்படுத்தியிருக்க வேண்டும். தினமும் அந்த போதையில் அவன் எதையோ தேடிக்கொண்டிருக்கலாம். அல்லது பேசிக்கொண்டிருந்திருக்கலாம். ஏன், மறைந்து போன அவன் மனைவியிடம் கூட பேசியிருந்திருக்கலாம்.

தூரத்தில் பஸ் வரும் சத்தம் கேட்டது. பாபநாச ரூட்டில் திரும்பி நின்றதும் இடுப்பு வேட்டியை ஒருகையால் பிடித்துக்கொண்டே முன்பக்க வாசலில் ஏறினான் மூக்கன். விசில் சத்தம் கேட்டு பஸ் புறப்பட்டதும் எதிர்கடையில் இருக்கிற சுப்பையாவும் அரைபல்லுவும் போட்டிப் போட்டு பந்தயம் கட்டிக்கொண்டிருந்தனர்.

'இங்கரு, வீட்டுல போயி தலைய காட்டிட்டு, இதே பஸ் திரும்பிவரும்போது, இங்க இறங்குதானா, இல்லையான்னு மட்டும் நீ பாரு'- இது சுப்பையா.

'ம்ஹும். போனதும், அங்க உள்ள சாராயக்கடைல ரெண்டு கிளாசை போட்டுட்டு, வீட்டுக்குப் பின்னால விழுந்துகெடந்துட்டு ராத்திரிக்குதான் வருவாம்'- இது அரைப்பல்லு.

குடிக்கிறவர்களை குழந்தையாகவே பார்க்க வேண்டும் என்பான் நண்பன். பல்வேறு பிரச்னை காரணமாக குடிக்க வருபவர்கள், தனது பிரச்னையை யாரிடமாவது கதறி கொட்ட, போதையை பயன்படுத்துகிறார்கள். மனதுக்குள்ளேயே உழன்று கொண்டிருக்கிற ஏதாவது ஒரு பிரச்னை போதையில் கரைந்துவிடுவதாக உணர்கிறார்கள். சென்னையில் டாஸ்மாக் ஒன்றில் குடித்துக் கொண்டிருந்த போது, 'எக்ஸ்கியூஸ் மி, கொஞ்சம் தண்ணி கிடைக்குமா?' என்ற பக்கத்து இருக்கை மனிதரை பார்த்ததும், சிரித்தார். ஏதோ ஒரு ஐடி கம்பெனியின் டேக் கழுத்தில். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக பேசி பேசி, எதிர் இருக்கைக்கு வந்தார். 'உங்களுக்கு மேரேஜ் ஆயிடுச்சா சார்..?' என்றவரிடம், 'ஒரு லவ் ஓடிக்கிட்டிருக்கு' என்றான் நண்பன். 'லவ் பண்ணுங்க... ஆனா, கல்யாணம் பண்ணாதீங்க...உங்களை மாதிரிதான் நான்..' -கதை தொடர்ந்தது. பேசி, அழுது, கண்ணீர் விட்டு, சோகமாகி, மகிழ்ந்து, சிரித்து, 'டைம் ஆயிடுச்சு, இன்னொரு நாள் பேசுவோம்... இதுதான் என் கார்டு... எப்ப வேணாலும் பேசுங்க' என்று கிளம்பியவரை அதற்குப் பிறகு பார்க்கவில்லை. வேறு ஏதோ பாரில், யாருடனோ இதே கதையை அவர் சொல்லியிருக்கக் கூடும்.

அவர்களின் உரையாடலை வேடிக்கை பார்த்துவிட்டு வந்தபோதுதான், இப்போது நீங்கள் வாசிக்கிற மூக்காண்டி ஞாபகத்துக்கு வந்தான். இங்கு எல்லாமே போதைதான். ஒவ்வொரு போதைக்கும் ஒவ்வொரு பெயர்.
மூக்கனுக்கு சாராயம். உங்களுக்கு வாசிப்பு. எனக்கு எழுத்து!
...............................

Tuesday, October 4, 2011

செல்வி சவுண்ட் சர்வீஸும் சிங்கப்பல் முத்துவும்

ஒலிபெருக்கிகள் வந்த பிறகுதான், ஊர் கெட்டுவிட்டதாகச் சொல்வார் உச்சிமகாளி தாத்தா. திண்ணையில் அமர்ந்துகொண்டு வெண்கல நிறத்திலான செவ்வக வடிவம் கொண்ட வெற்றிலைப் பெட்டியை திறந்ததும் சின்னதாக ஒரு ஏப்பம். பாக்கு, சுண்ணாம்பு கலந்த வெற்றிலை மடிக்கப்பட்டு வாய்க்குள் சென்றதும் அங்குவிலாஸ் புகையிலையை குத்துமதிப்பாக கொஞ்சம் அள்ளி போட்டு சவைத்துக் கொண்டு, எதிரில் ஒரு பார்வை. பக்கத்தில் அவரது துணைக்கு இருக்கிற கம்பர் தாத்தா, ‘நீரு சொன்னா சர்தாம்... நான் எங்க போயி கண்டேன், ஒலிபெருக்கியையும் ஊர் கெட்டதையும்' என்பார்.

சாலையின் எதிரே, சரியாக இவரது திண்ணைக்கு எதிரில் இருக்கிற வீட்டு வாசலில், ஒலிபெருக்கி குழாய்களையும் சீரியல் பல்புகளையும் சரி செய்வதற்காக கிடத்தி வைத்திருப்பான் முத்து. செல்வி சவுண்ட் சர்வீஸ் ஓனர். குருவி கூடு தலையுடன், வாயில் ஒரு வயர் துண்டை கடித்துக்கொண்டே இருக்கும் முத்துவின் சட்டைப் பையில், பேனா போல எப்போதும் ஒரு டெஸ்டர் இருக்கும். நேற்றைய தூக்கமும் நாளைய முழிப்பும் கண்களில். நொடிக்கொருதரம் இடதுகையை முதுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு நடப்பதும், எடுப்பதும் அவனது மேனரிசம்.

திருநெல்வேலியில் இருந்து புதிதாக வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகள், ஓரமாக அடுக்கப்பட்டிருக்கும். வட்ட வடிவத்தில் கலர் கலராக வைக்கப்பட்டிருக்கும் வயர்கள், அட்டைக் கவருக்குள் பாதுக்காக்கப்பட்டிருக்கும் ட்யூப் லைட்கள், கோபுர வடிவ சீரியல் அலங்கார செட்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளேயும் வெளியேயும் இறைந்துகிடக்கும். லுங்கியை மடித்துக்கட்டி, சிறு மரப்பலகையில் அமர்ந்துகொண்டு, தரையில் கால் நீட்டி, ஒவ்வொரு சீரியல் பல்புகளுக்கும் ஜிகினா பேப்பர்களை சுற்றத் தொடங்குவான் முத்து. சிங்கப்பல் முத்து.

இவனிடம் வேலை பார்க்கும் கிட்டு, கீழ்ப்பக்கமாகவும் அய்யன் மேல் பக்கமாகவும் அமர்ந்துகொள்வார்கள்.

‘முத்தண்ணே... கருத்தப்பிள்ளையூர்க்காரன் பாக்கிய கொடுத்துட்டானா?'-பீடியை பற்ற வைத்ததும் கிட்டு கேட்பான்.

‘அடுத்த வாரம் அங்க சடங்கு வீடு இருக்குலா, போவும்போது கேப்போம்' என்பான் முத்து. அய்யன் குழாய்களை துடைக்கத் தொடங்குவான். ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்' என்று குழாயில் வட்ட வடிவில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தின் பெயிண்ட் உறிந்து, சில இடங்களில் வெட்டையாக இருக்கும். அதைத் துடைக்கும்போது அய்யனுக்கு கோபமாக வரும்.

‘இதுக்கொரு பெயிண்ட் அடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கேன்... நீ காதுலயே வாங்கமாட்டேங்க... என்ன, ஒரு அரை மணி நேரம் ஆவுமா..?'

‘பொறுல... அடுத்த வாரம் பாப்போம்...' என்பான் முத்து.

எதிரிலிருந்து இறுமல் சத்தம் கேட்கும். கம்பரும், உச்சிமகாளி தாத்தாவும் இங்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த பார்வைக்கு, ‘ஊரைக் கெடுப்பதற்கான வேலைகளை தொடங்குபவர்களே...' என்று பொருள். கிட்டு முத்துவை பார்ப்பான். முத்துக்கு சிரிப்பு வரும். ‘பாட்டையாவ வீட்டுக்குள்ள போவ வச்சிருமா?' என்பான். ‘இன்னும் செத்த நேரம் இரு' என்றபடி, ஜிகினா வேலை தொடங்கும்.

இதற்குள் ரோட்டில் மேலத்தெருவிலிருந்து பஸ்ஸ்டான்ட் செல்பவர்கள், தாத்தாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு போவார்கள். அப்படி யாராவது வணக்கம் சொன்னால், லேசில் விட்டுவிட மாட்டார் தாத்தா.

‘நம்ம சூச்சாரு மவனாடே...'

‘ஆமா... மறந்துட்டேளா?'

‘ச்சே மறக்க முடியுமாடா, உன் அப்பனையும் ஒன்னையும்... தூரமா போற?'

‘இன்னா, இடைகால்ல ஒரு துட்டி வீடு.., இப்பம் ஒரு பஸ் வரும்லா..'

‘ஆமாமா... வார நேரம்தான்' என்று தாத்தா சொன்னதும், நடப்பான் சூச்சாரு மவன்.

சொத்து பத்து அதிகம் வைத்திருந்த தாத்தா எல்லாவற்றையும் மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டு, இப்போது பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் இருப்பவர்.

புதிதாக வாங்கியிருந்த நீண்ட மூக்கு குழாய்களில் இரண்டை எடுத்து வாசலில் இரண்டு பக்கமும் வைத்து வயரால் திருக்குவான் கிட்டு. வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகளில், ‘கோழி கூவுது’ படத்தின், ‘ஏதோ மோகத்தை தேடி அதன் மேல் முள்ளை வைப்பான். பாடல் தொடங்குவதற்கு முன்னான, ‘கிர்ர்ர்ர்ர்ர்' ஆரம்பிக்கும்போது தாத்தாவை பார்ப்பான் கிட்டு. அவர், ஏதோ செய்வதாக நினைத்துக் கொண்டு கம்பரிடம், ‘என்னடே செய்தானுவோ' என்று கேட்பார்.

கிர்ரென இழுத்து, பாடல் ஆரம்பித்ததும் தாத்தா, கம்பரை பார்ப்பார். அவர் உதட்டைப் பிதுக்கி, காலம் கெட்டுப்போச்சு என்பது மாதிரி கையை மேல தூக்குவார். பாடல் சத்தம் கேட்டு, பாபநாசம் கல்லூரியில் படிக்கும் மணியும், ஆழ்வார்க்குறிச்சியில் படிக்கும் உமயரும் பவுடர் அப்பிய முகத்துடன், வருவார்கள். அய்யன் அவர்களை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருப்பான்.

முத்து, ‘ஏ அய்யா, அந்த சேரை எடுத்து போடுல' என்பான். இவன் சொன்னாலும் அவன் எடுக்க மாட்டான். ‘நான் வேலையா இருக்கம்லா... அண்ணனுவோ எடுக்க மாட்டாவோளோ?' என்று அவன் சொன்னதும், மணி, ‘நீயெல்லாம் என்னத்த உருப்பட போறலே' என்று சொல்லிவிட்டு சேரை எடுத்து வெளியே போடுவான்.

உமயரும் தானாகவே சேரை எடுத்து வந்து உட்கார்ந்துகொள்வான். இவர்கள் இப்படி உட்கார்வது பாடலை மட்டும் ரசிப்பதற்கு அல்ல. நான்காவது வீட்டிலிருக்கும் அய்யன் சகோதரி, தனது தாவணி தோழிகளுடன் பாடல் கேட்டு வாசலில் வந்து பீடி சுற்றுவாள் என்பதற்காக. அதனாலேயே அய்யனுக்கு இவர்கள் மீது கடுப்பு.

தாத்தா நகர்வது போலில்லை என்று தெரிந்ததும் குழாயை அவர் இருக்கும் திசைக்கு எதிராக திருப்பி, வால்யூமை கூட்டுவான் கிட்டு. டப் என்று இரண்டு காதையும் பொத்திக்கொண்டு இருவரும் வீட்டுக்குள் நடப்பார்கள். உள்ளே போனதும் ஜன்னலை அடைத்து மூடும் சத்தம் கேட்டதும், முத்துவும் கிட்டுவும் சிரித்துக் கொள்வார்கள், ‘பாட்டையா, நம்மளையா கொற சொல்லுது?' என்று.
முத்து எங்கு போயும் எலெக்ட்ரிக் தொழில் படித்ததில்லை. ஏற்கனவே ஊரில் இருக்கும் பாலன் சவுண்ட் சிஸ்டத்தில் டைம்பாஸுக்காக வேலைக்குச் சென்று தொழில் கற்றுக்கொண்டதன் விளைவு, ஊரில் இருக்கிற மூன்று மைக் செட்களுடன் நான்காவதாக உதயமானது ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்'. முத்துவின் வாயில், முன் பல் ஒன்று குழாய் கட்ட போஸ்டில் ஏறும்போது மோதி உடைந்துவிட்டது. அந்த பல்லுக்குப் பதில் தங்கப்பல் கட்ட இருப்பதாக அவன் சொல்லிக்கொண்டு அலைந்தான். அலைந்தானே தவிர, இன்றுவரை அவன் கட்டவில்லை. என்றாலும் தங்கப்பல் முத்து என்கிற பெயர் அவனுக்கு நிலைத்துவிட்டது. நிலைப்பதும் நிலையாததும் அவரவர் கர்மா சார்ந்தது.

கிட்டுக்கும், அய்யனுக்கும் எப்போதும் அந்த ஆச்சர்யம் இருந்துகொண்டிருக்கும். எங்கு போய் மைக் செட் கட்டினாலும் அங்கு ஏதாவது ஒரு பெண் முத்துக்கு தோதாகிவிடும் ஆச்சர்யம் இருவருக்கும் புகைச்சலை ஏற்படுத்தும். போனமுறை மன்னார்கோயிலில் கல்யாணவீடொன்றுக்கு செட் கட்டியிருந்தபோது, ஒரு தாவணிப் பெண், ‘அந்தப் பாட்டிருக்கா, இந்தப் பாட்டிருக்கா' என்று கேட்டுவிட்டு போனாள். கேட்டபாடலை போட்டுவிட்டு காத்திருப்பான் முத்து. கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை ஆரம்பித்த இந்த சுகமான தொந்திரவு, கல்யாணம் முடிந்த மறுநாள் காலைவரை தொடர்ந்தது. ஆனால், அதற்கடுத்த சில மாதங்கள் வரை கடித வாயிலாக இது தொடரும் என்பதை முத்து கூட அறிந்திருக்கவில்லை.

இதே போல தாட்டாம் பட்டிக்கு ஆறு மாசத்துக்கு முன்னால் ஒரு சடங்கு வீட்டுக்கு செட் கட்டப் போயிருந்தார்கள். மாலை நேரம் கால் கொலுசு சலசலக்க வந்தவள் ஒரு சீட்டில் நான்கைந்து பாடலை எழுதி முத்துவிடம் கொடுத்துவிட்டு, பேசாமல் தலையாட்டினாள். இந்த தலையாட்டலுக்கு பாடல்கள் எல்லாம் இருக்கிறதா என்று அர்த்தம். முத்துவும் சிரித்துக்கொண்டே தலையாட்டினான். பிறகு ஒவ்வொன்றாக போட்டுவிட்டு, சடங்கு வீட்டுக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த கடையில் சாப்பிட போனார்கள். பார்த்தால் அதே கொலுசு பெண். நாலு பரோட்டா இறங்கும் முத்துவுக்கு அன்றைக்கு ஏழெட்டு புரோட்டா இறங்கியதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாள் கூத்துக்குப் பிறகு ஊருக்கு வந்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னால் அங்கு வேறொரு கல்யாண வீட்டுக்கு சென்றால், கொலுசு பெண், அதே சிரிப்போடு நின்றிருந்தாள். மீண்டும் அவள் கடையிலேயே சாப்பாடு.. முத்துக்கு குஷியாகிவிட்டது. இம் மாதிரியான கடும் உழைப்பை வாங்குகிற தொழில்களில், இதுபோன்ற இனிமைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.
‘நாங்களும்தான் இருக்கோம்... ஒரு குருவாங்கூட பார்க்க மாட்டேக்கே... அப்படி என்னண்ணே இருக்கு ஒங்கிட்டே?' கிட்டுதான் இப்படி கேட்டது. பக்கத்தில் இருந்த அய்யன், ‘அழுக்கு சாரமும், வேர்வை நாத்தம் புடிச்ச சட்டையும்தான்' என்றதும் முத்துக்கு சட்டென கோபம் ஏறும்.

இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். ‘இது ரொம்ப அவசியம்ல... கேள்வி கேக்காம் பாரு, போய் குழாயை அவுரு' என்று விரட்டுவான். பல்லால் வயரை கடித்து இழுத்து, அவன் கனெக்ஷன் கொடுக்கும் அழகே தனி. சில நேரங்களில் ஊர் தெருவிளக்கு எரியவில்லை என்றால், அதை சரிசெய்யும் பொறுப்பும் முத்துவுக்கு இருந்தது. வெளியூரில் வசிக்கும் உள்ளூர் வயர்மேன், இதற்காக அந்த ஊரிலிருந்து இரவில் வருவது சாத்தியமில்லாததால் இந்த பணி.

இதுதவிர, ஊரில் நடக்கிற கட்சிக் கூட்டங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள், முத்தாரம்மன், தங்கம்மன், வடக்குவா செல்வி அம்மன், மந்திரமூர்த்தி, கருப்பசாமி, சுடலை, ராமர், விநாயகர் ஆகிய சாமிகளின் கொடைகள் மற்றும் கல்யாணம், காதுகுத்து, பெயர் சூட்டு விழா, சடங்கு வீடு ஆகிய விழாக்களால் முத்து உள்ளிட்ட உள்ளூர் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

உச்சிமகாளி தாத்தாவின் மருமகள் செண்பகம், அவருக்கு நீத்தண்ணி கொடுத்துவிட்டு வரும்போது, நேராக முத்துவைப் பார்க்க வருவாள்.

‘ஒனக்கெல்லாம் எடக்கு ஜாஸ்திடே' என்பாள்.

ஒன்றுமே தெரியாதது போல, ‘என்னது சித்தி' என்பான் முத்து.

‘அவரு ஒனக்கு தாத்தா இல்லையோடே... அவரை விரட்டி விரட்டி வுடுதியாம்...'

‘அவரு சொல்லுதாரோ..? பெறவு, நாங்க ஊரை கெடுக்க வேலை பாக்கோம்னு போற வாரவோட்டலாம் ஆவலாதி சொல்லிட்டிருக்காரு...'

‘அவரு சொன்னாருன்னா அதுக்கு குழாயை திருப்பி பாட்டை வைப்பியோ... ஏல கிட்டு, வாலை சுருட்டிட்டு இருல... பெரிய மனுஷனுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க கத்துக்கிடுங்க' என்று சொல்லிவிட்டு போவாள்.
‘பாட்டையா, இன்னும் போட்டுக் கொடுக்கு பாரேன்' என்று கிட்டு சொன்னதும், ‘நாளைக்கு வச்சுக்கிடுவோம், பாக்கியை' என்பான் முத்து.

ஒலிபெருக்கிகள் பற்றி தாத்தா இப்படியொரு கருத்து வைத்திருந்தாலும், பாகவதர் பாடல்கள் தாண்டி, அவர் கடைசியாக பார்த்த, ‘தில்லானா மோகானாம்பாள்' பாடல்கள் அல்லது ‘திருவிளையாடல்’ வசனங்களை போட்டால் சந்தோஷமாகிவிடும் தன்மையை கொண்டிருந்தார்.

என்றைக்காவது போதையில் வரும் நாட்களின் கருக்கலில், முத்துவுக்கு தாத்தா மீது பாசம் வந்துவிடும். ‘நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா...' என்ற பாடலை மெதுவாக ஓடவிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்துகொள்வான் முத்து. எதிரில் ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டதும் முத்து அவர் தெரிகிறாரா என்று பார்ப்பான். வெளிச்சத்தில் இவன் இருப்பதால், அவர் முகம் தெரியாது. ஆனால், தாத்தா ரசிக்கிறார் என்பதை அறிவான். நான்கைந்து பாடல்களுக்குப் பிறகு தூக்கம் வந்துவிடும் முத்துவுக்கு. லைட்டை அணைத்துவிட்டு படுப்பான்.

பாவூர்சத்திரத்தில் மூன்று நாள், கோயில் கொடைக்கு போய்விட்டு, மூன்று சைக்கிள்களில் குழாய் மற்றும் பொருட்களை கொண்டு திரும்பியிருந்தனர் முத்து அண்ட் கோ. சாலையை விட்டு இறங்கும்போதே தாத்தா வீட்டில் பெருங்கூட்டம். சிவலோகப் பதவி அடைந்திருந்தார் தாத்தா என்பதை அந்தக் கூட்டம் தெரிவித்துக்கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக பொருட்களை இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குள் போனார்கள். பெரிய மீசையுடன், நெற்றியில் பட்டையடித்து கட்டிலில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார் தாத்தா. மகன், மகள்கள், மருமகள் கீழே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்கள். அவர் முகத்தில் அப்படியொரு சிரிப்புக் களை தெரிந்தது.

முத்து அவரது காலை தொட்டு கும்பிட்டுவிட்டு, திரும்பினான்.

‘நலம்தானா?' என்று தாத்தா கேட்பது போலிருந்தது.
............

Saturday, May 28, 2011

கதைகள் உலாவும் வளவு

‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி, இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு’.

பிச்சம்மாள் பாட்டி, முதன்முதலில் கவனித்துச் சொன்னபோது வளவில் பீடிச்சுற்றிக் கொண்டிருந்தவர்கள் அதைப் பொருட்படுத்தவில்லை. பொருட்படுத்தாதற்கு, ‘கெழவிக்கு வேலை இல்லை’ என்பதாகவோ, ‘இப்படியெல்லாமா இருக்கும்?’ என்பதாகவோ காரணமாக இருக்கலாம். இரண்டு கருப்பட்டித் துண்டுகளை வாயில் போட்டுக்கொண்ட வசந்தா, இலைக்குள் புகையிலையை வைத்து உருட்டிக்கொண்டே, ‘கெழவி, அவன் பேரனை பத்தி ஏதாவது சொன்னா கொதிப்பா. மத்தப் பயலுவோன்னா எக்காளம் பேசுவா' என்று லேசான குரலில் சொன்னாள். அவளது இந்தப் பேச்சை ஆமோதிப்பதாக, வட்டமாக அமர்ந்து பீடி சுற்றும் பிள்ளைகள், ‘ஆமாமா" என்று தலையாட்டினார்கள். பாம்படம் ஆடும் பாட்டிக்கு காது கொஞ்சமாகத்தான் கேட்கும் என்கிற தைரியத்தில் அவளை, இவர்கள் அவ்வப்போது வாறுவதை பாட்டி அறிந்திருக்கவில்லை. பாட்டிக்கு காதுதான் கேட்கவில்லையே தவிர, கண்களின் பவர், ஜாஸ்தியாகவே இருந்தது.

ஆறு ஆறு என இரண்டு பக்கமும் 14 வீடுகளை கொண்ட, ‘ப’ வடிவத்தை மாற்றிப்போட்டால் இருப்பது போன்ற வடிவிலான வளவின் முதல் வீடு, லட்சுமணப் பெருமாளுடையது. சாக்கடை ஓடும் தெருவில் இருந்து, வளவின் படியேறி நின்றால், வலப்பக்கம் தெரியும் நீ...ண்ட திண்ணையில் எப்போதும் ஐந்தாறு பேர் கதையடித்துக் கொண்டிருப்பார்கள். குறிப்பாக தாவணி அணிந்த பெண்கள். லட்சுமணப் பெருமாளும் அவரது மனைவியும் வயல் வேலைக்குப் போன பிறகு, பிச்சமாள் பாட்டிதான், வீட்டுக்கும் அவளது பேத்தி, மூக்கம்மாளுக்கும் காவல். ஏதோ காரணத்தால் கடந்த 5 வருடங்களாக திருமணம் தடைபட்டு தடைபட்டு, ‘எவன் வரப்போறானோ?’ என்று காத்திருப்பவள் மூக்கம்மாள். சைக்கிள் கடை செல்லையாவுக்கும் இவளுக்கும் அது இது என்று அரசல் புரசல் பேச்சும் ஊரில் கசிந்துகொண்டிருந்தது. இப்படி யாரையாவது பற்றி, கோள் சொல்லிக்கொண்டோ, அல்லது உண்மையை பேசிக்கொண்டோ இருக்காவிட்டால் உள்ளூர்க்காரர்களுக்கும் பொழுது போக வாய்ப்பில்லைதான்.

வீட்டின் திண்ணை சும்மாதான் இருக்கிறது என்பதாலும் இங்கே உட்கார்ந்தால் தெருவில் செல்பவர்கள், வருபவர்களை பார்க்கலாம் என்பதாலும் அக்கம் பக்கத்து குமரிகள் இங்கு பீடி சுற்ற ஆரம்பித்தனர்.

ஆரம்பத்தில் பாட்டி சொல்லும் கிளு கிளு கதைகளில் விழுந்த கிடந்தார்கள் குமரிகள். அதை ரசிக்காதவர்களாகக் காட்டிக்கொண்டாலும் இன்னைக்கு, என்ன கதை சொல்லுவா? என்கிற தொனியில் அவர்களின் ஆர்வம் இருந்தது. இந்த கிளு கிளு கதைகள் பெரும்பாலும் ஊரின் மேல, கீழ, வட, தெற்கு தெருவில் பட்டப்பெயர்களுடன் அலையும் ஏதாவது ஒருத்தியை/ஒருவனைப் பற்றியதாக இருக்கும். இந்த கதைகளின் பொருட்டு பாட்டிக்கான முக்கியத்துவம் வளவின் இளம்பெண்களிடம் அதிகமாகியிருந்தது.

ஒரு மழை காலத்தில் மூன்றாவது வீட்டு கடையநல்லூராள் மகள், கடைக்காரனுடன் ஓடிப்போனதிலிருந்து அந்த மாதிரி கதைகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தாள் பாட்டி. ஏதோ எடக்காக சொல்ல போய், பிள்ளைகளின் தன்னுணர்ச்சியை கீறி விடும் அவலத்துக்கு தான் காரணமாகி விடக்கூடாது என்று நினைத்ததையடுத்து பாட்டியின், அந்த மாதிரி கதைகள் அறவே நின்று போனது. ஏதாவது கல்யாணம், காட்சி என்று வளவு காலியாக இருக்கும்போது, இப்போதும் வசந்தா, ஆரம்பிப்பாள்:

‘ஏ கெழவி, நீ கதை சொல்லி எவ்வளவு நாளாச்சு, இன்னைக்கொரு கதை சொல்லு?’

‘நம்ம அம்மன் கதையை சொல்லுதேன், கேக்கேளாட்டியோ?' என்றதும் சுவாரஸ்யம் புஸ்ஸாகிவிடும்.

‘அந்த கதையை எத்தனை தடவைதான் சொல்லுவ? செரி, விடு. கதையும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்'.

‘ம்ம்ம்...உங்களுக்கெல்லாம் இடுப்ப ஒடிக்க ஒருத்தன் வந்தாதான் சரிபடுவியோ, கொழுப்பெடுத்துலா இருக்குவோ?' என்று தனக்குத்தானே பாட்டி புலம்பிவிட்டு வெற்றிலை பாக்குக்கு தாவிவிடுவாள்.

பாட்டி, இப்போது குறை சொல்லும் கல்யாணி பயல், உள்ளூர் மீனாட்சிப் பள்ளிக்கூடத்தில் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருப்பவன். படிப்பின் இடையே, பீடி சுற்றும் இளங்குமரிகளுக்கு தகவல் தெளிக்கும் தன்னலமில்லா தொண்டன். தொண்டன் என்கிற பதம் சரியானதாகவே இருக்கும். ஏனென்றால் புதிதாக தெரிந்த தகவலை சொல்லிவிடவில்லை என்றால், மண்டை வெடித்துவிடும் அளவுக்கு தவித்துவிடுவான் இவன். குறிப்பாக, பீடி சுற்றும் எல்லாரும் கல்யாணத்துக்கு காத்திருப்பவர்கள் என்பதால், தெருவில் ஏதாவது பேன்ட் & ஷர்ட் அணிந்த புதுமுகம் தெரிந்தாலோ, பட்டு, வேட்டி கட்டிக்கொண்டு புகைபிடித்து அலைகிற வீராப்பு பார்ட்டிகள் தெரிந்தாலோ, அவர்களைப் பற்றிய ஏ டூ இசட் விஷயங்களை அடுத்த நிமிடமே கொண்டுவந்து பகிர்பவன் கல்யாணி. இதோடு ஊரில் யார் வீட்டுக்கு பெண் பார்க்க வர இருக்கிறார்கள், அல்லது யார் யார் வீட்டில் பிரச்னை என்பது உள்ளிட்ட தகவல்களை காலை 8 மணி வாக்கிலும் மாலை ஆறு மணி வாக்கிலும் இரண்டு பகுதியாக பகிர்பவன். இதற்காக வளவு ஏரியாவில் பீடி சுற்றுபவர்களின் செல்லப்பிள்ளையாகி இருந்தான் கல்யாணி. இந்த செய்திகளுக்கு கைமாறாக & அவன் எதிர்பார்க்கவில்லை என்றாலும் கொடுக்கப்படுவது, அவித்த பயித்தங்காய், பொறி அரிசி, கிளிமூக்கு மாங்காய் துண்டுகள்.

இப்போது அவனைப் பற்றிய பிரச்னை என்னவென்றால் மண் தின்கிறான் என்பதுதான். மண் என்றால் ஆற்றுமணலோ, தரையில் கிடக்கும் புழுதி மண்ணோ அல்ல. சுவற்று மண். அதாவது மண்சுவற்றில் கட்டியாக, மஞ்சள் நிறத்தில் உறைந்து இருக்கும் சாரல் மண்.

பிச்சம்மாள் பாட்டி, தொழுவில் சாணத்தை அள்ளி, எருக்கெடங்கில் போடுவதற்காகப் போகும் போது, சந்திரமய்யர் வீட்டின் பின்பக்கத்து மண்சுவற்றில் கல்யாணி, ஏதோ செய்துகொண்டிருந்ததைப் பார்த்தாள். முதலில் பார்த்தபோது அவளுக்கு எந்த சந்தேகமும் வந்ததில்லை. தொடர்ந்து நான்கைந்துமுறை அதே இடத்தில் அவனைப் பார்க்கவும் நேராக, கிட்டே போய்விட்டாள். கிழவியை பார்த்ததும், மண்ணை கீழே போட்டுவிட்டு, ‘என்ன பாட்டி?’ என்றான். அவனது முகத்தில் எந்தவித சலனமும் இல்லை. பாட்டி பார்த்துவிட்டாள் என்பதாகவோ, நாம் செய்வது மகா தவறு என்றோ, அவன் நினைக்கவில்லை. ஆனால், பாட்டிக்கு அது மகா தவறாக தெரிந்தது.

‘இங்ஙன என்னல பண்ணுத’

‘சும்மா நிக்கேன்’

‘கட்டமண்ணு கிட்ட வந்து சும்மா நிக்கேன்னா என்னடே அர்த்தம்’

‘என்ன கெழவி பொசமுட்டிப் போச்சா ஒனக்கு?. எருக்கெடங்குல கொட்டிட்டன்னா போவியா? கேள்வி கேக்க’

‘ஏல, பொய் சொல்லாத, வாயை காட்டு’

‘இந்தா பாத்துக்கோ’ என்று நாக்கை நீட்டினான். மஞ்சள் நிற மண்ணாகி இருந்த நாக்கு, ஒப்புவித்தது.

‘மண்ணால திங்கே...’

‘போ... கெழவி, தொண்டைய போட்டு ஊரெல்லாம் கொட்டடிக்காத...’

‘ஒங்கம்மகிட்ட சொல்லுதேன்’

‘சொல்லிக்கோ’

கெழவி மட மடவென்று கிளம்பிவிட்டாள். அவள் சொன்னமாதிரி கல்யாணியின் அம்மாவிடம் இதை சொல்லவில்லை. அதற்கு அவளை நேரில் காணவில்லை என்பது காரணமாக இருந்தது. பீடி சுற்றுபவர்களிடம் சொல்லிப் பார்த்தாள்.


‘இந்த கல்யாணி பயலுக்கு மட்டும் என்னட்டி இப்படியொரு புத்தி? ஆச்சர்யமால்லா இருக்கு". அவர்கள் கண்டு கொள்ளவில்லை.

'ஏட்டி, நான் என்ன சொல்லுதேன். நீங்க கேக்கேலா'’ என்று வசந்தாவின் வாயசைவை பார்த்து பாட்டி அதட்டவும், அவளை கவனித்தார்கள். அந்த இளங்கூட்டத்தில் வசந்தாதான் சீனியர் என்பதால் பாட்டி அவளிடம் கடிந்தாள்.

‘அவன் எப்படி கெழவி, மண்ணைப் போய் திம்பான். நீயும் சொல்லுதே’

‘ஏட்டி, நா என்ன பொய்யா சொல்லுதேன். கையும் களவுமாலா புடிச்சேன்’

‘அந்தப் பய வரட்டும். கேட்டுருவோம்’


மேகம் மூட்டமாக இருந்தது. இன்னும் செத்த நேரத்தில் மழை பெய்யலாம். கிழக்கே எங்கோ மழை பெய்வதை, வேகமாக வரும் குளிர்காற்று சொல்லிப்போயிற்று. வீட்டின் கொடியில் துணிகளை காயப்போட்டிருந்தவர்கள் அவசரம் அவசரமாக எடுத்துக்கொண்டிருந்தார்கள். வீட்டின் வாசலில் காயப்போட்டிருந்த விறகு கட்டைகளை, உள்ளே அள்ளிப்போட்டுக்கொண்டிருந்தனர் சிலர். லேசான மழைத்துளி ஒன்று கல்யாணியின் கன்னத்தில் விழ, கைகளை மோட்டார் பைக்காக்கி டர் டர் என்று வேகமாக ஓடி வந்தான் வளவுக்கு. வந்து நின்றதும் மூச்சிறைத்தது. கொஞ்சம் ஆசுவாசப்படுத்திக்கொண்டு, வாயில் ஆரஞ்சு வில்லையை எடுத்துப்போட்டான். திண்ணையில் யாருமில்லை. அவன் கால் டிரவுசர் பாக்கெட் இரண்டும் புடைத்துக்கொண்டிருந்தது.

வீட்டுக்குள்ளிருந்து நனைய வைத்த அரிசியை தின்றுக்கொண்டு வந்த வசந்தா, அவனை அழைத்து, ‘ஏடே மண்ணு திங்கியாமே, நெசமா?’ என்றாள்.

‘ஆமா’ என்று லேசாக சிரித்துக்கொண்டே, தலையாட்டினான் கல்யாணி.

‘ஏல, புள்ளத்தாச்சி பொம்பளைலுவோ, மாங்கா, சாம்பல், சார மண்ணுன்னு திம்பாவோ. ஒனக்கெதுக்கு? நீ பிள்ளையால பெக்க போறே?’

‘அந்த அக்காளுக்காவ, கொண்டு போயி, கொடுத்து கொடுத்து எனக்கும் பழவி போச்சு’

அவன் சொல்ல சொல்ல வசந்தாவின் பின்னால் நின்று நாக்கைத் துறுத்தியும் கையை ஆட்டியும் சொல்லாதே என்று சைகை காட்டிக்கொண்டிருந்தாள் மூக்கம்மாள்.

Wednesday, October 27, 2010

சாமிகள் பற்றிய குறிப்புகள்

0 ஆக்ரோஷமாக ஆடும்

ஆயுதங்கள் கொண்ட குலசாமிகளின்
கண்களில் தெரிவது
அருளா? கொலைவெறியா?
.....................

0 கொடையில்லா நாளில்
கோயில் மரத்தில்
இலை தின்னும் ஆடுக்கு தெரியாது
நேர்ந்துவிட்டதும்
நேர்த்திக் கடனானதும்

........................
0 வேப்ப மரத்துக்கு
ஆத்தா வந்ததிலிருந்து
பால் குடிக்க பழகிவிட்டது வேர்
..........................

0 சாமி சொன்னதாக
குறி சொல்கிறாள் அம்மா
சாமிக்கு யார் சொல்லுவார்?
.......................

0 ஏழு கெடா வெட்டி
சாமிக்கு படைக்கப்படும் சோறில்
களவாடப்படுவது
கறிதுண்டுகள்.

...................

0 வேட்டைக்கு போகும் சாமியின்
எதிரில் சென்றால் அடித்துவிடும்
மனிதனை அடிப்பது
சாமியாகுமா?
.............

0 பெரியசாமிக்கு யாராடுவது
என்கிற சண்டையில்
நடக்கிறது வெட்டு குத்து.
வேடிக்கை பார்க்கிறது
காக்கும் சாமி.


நன்றி: தினகரன் தீபாவளி மலர்

Thursday, August 26, 2010

அலைபாயும் அரிசிகள்

'ஏ சொல்லமுத்து, பொண்டாட்டிய கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வந்திருல'


'ஏம் மைனி'

'புது அரிசிடே'

-இப்படி சொல்லி அழைப்பாள் அம்மா. அறுவடை முடிந்து, விற்றது போக, மூட்டையாகியிருக்கிற நெற்களில் ஒரு உழக்கு சாமிக்கு. அவித்த நெல் அரிசியாகி, பானையில் ஏறுகிற ஏதாவதொரு நாள் புதுஅரிசி நாள். இதற்காக, கீழத் தெருவில் இருக்கிற சுப்பு சித்தி வீட்டில் புதுபானை வாங்கி வருவாள் அம்மா. காலையிலேயே வாய்க்காலில் குளித்துவிட்டு அம்மன் கோவிலில் விழுந்து வணங்கி வீட்டுக்கு வரும்போது, பசி கப்பென்று இருக்கும். 'கொஞ்சம் நெரம் பொறுத்துங்கல' என்றவாறு அடுப்பில் விறகை திணிப்பாள். பானைக்கு பட்டை போடப்பட்டிருக்கும். டிரங்கு பெட்டியில் இருக்கிற புது துணியை நாங்கள் உடுத்த வேண்டும். (புது துணி என்பது தீபாவளிக்கோ, சித்திரை விசுவுக்கோ எடுத்து உடுத்திய துணி).

பாச்சா உருண்டை மணக்கிற சட்டை, டிரவுசை போட்டுக்கொண்டு ஹீரோவாகிவிட்ட உணர்வில் வாசலில் நின்று கொண்டு, மேல வீட்டு முத்துவை, 'ஏல முத்து வாரியா...' என்று ஒரு கத்து. 'உங்கம்மா மத்தியானம்லா வர சொல்லியிருக்கா' என்றவாறே புது சட்டையை பாப்பான்.

'புதுசாடே' ,

' தீவாளிக்கு எடுத்தது'

இது எனக்கு. அக்காவுக்கு கீழ வீட்டு பிச்சம்மா பிள்ள.

இன்னும் சோறு ரெடியாகியிருக்காது. சித்தி, சித்தப்பா, மாமா வருகைக்கு பிறகு,ஆச்சியின் புண்ணியத்தில் குத்துவிளக்கு சாமியாகும். மாலையிலேயே புளிபோட்டு விளக்கி புதுசாக்கியிருப்பாள் விளக்கை. செவ்வாய், வெள்ளி மட்டுமல்ல, எல்லா நாட்களுமே, சாயங்காலம் விளக்கு சாமியாகும் நாட்கள். கூடவே ஏதாவது ஒரு அகர் பத்தியின் வாசனை வீட்டிலும் தொழுவத்திலும் மணந்துகொண்டே இருக்கும். இருட்டும் அல்லாத பகலும் அல்லாத அந்த சாயங்காலங்கள் இனிமையானவை.

குமரியாகியிருக்கிற அக்காள்கள் குடத்தை தூக்கிக்கொண்டு இப்போதுதான் வாய்க்காலுக்கு தண்ணீர் எடுக்க செல்வார்கள். குற்றாலம் கல்லூரியில் படித்த சுந்தரவடிவு அத்தை பற்றிதான் ஊரில் அப்போது அதிகமான பேச்சு. அந்த கால ஸ்ரீப்ரியா மாதிரி, முடியை காதுக்கருகில் ஸ்டைலாக இழுத்துக்கொண்டும், வழு வழுக்கிற சேலையுமாக அவள் வருகிற அழகே அழகு.

'ஏல செவத்தான், நேத்து சொல்லிக்கொடுத்த கணக்கை போட்டியா?' என்று ஆரம்பிப்பாள் சு.வ.அத்தை. இவள் வந்தாலே, போதுமென்று எதிரில் இருக்கிற ஆச்சி வீட்டு மச்சில் ஒளிந்துகொள்வேன். பிறகு எப்படியோ இழுத்து வந்து சொல்லித்தருவாள். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அத்தை பாடம் சொல்லிக்கொடுக்க வருவாள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருக்கும். பிறகொரு சாயங்காலத்தில் கணேச மாமாவை அவள் காதலிக்கிற விஷயம் தெரிந்ததில் இருந்து எனக்கு நிம்மதியானது. சு.வ.அத்தை எனக்கு பாடம் எடுப்பதில்லை.


குத்துவிளக்குக்கு எதிரில் பெரிய வாழை இலை போட்டு சோறு பரிமாறப்பட்டிருந்தது. சித்தி, சித்தப்பா, மாமா எல்லோரும் விளக்கை விழுந்து கும்பிட்டார்கள். கூடவே நானும் அக்காவும். சு.வ.அத்தை சிறிது நேரம் கழித்து வந்தாள். எல்லோருக்கும் ஆச்சி திருநீறு பூசிவிட்டாள். பிறகு எல்லோரும் வரிசையாக உட்கார்ந்து, வாழை இலைகளில் சாப்பாடு. சு.வ.அத்தைதான் பரிமாறினாள்.

'ஏட்டி, எல்லாத்தையும் அவனுக்கே (மாமா) வச்சிட்டிருக்காத, பிள்ளைலுவோலுக்கும் வையி' - அம்மா கிண்டலாக சொல்வாள்.

சின்னதாக சிரித்து, பெரிதாக வெட்கப்பட்டு, 'போங்க' என்றாள்.

அடுத்த அறுவடை நாள் முடிந்து, புது அரிசி சமைக்கும்போது, வீட்டில் வேறொரு அத்தை இருந்தாள்.

கோயில் கொடையில் நடந்த தேவையில்லாத தகராறில் சு.வ.அத்தை வெறொருவரையும் மாமா வேறொரு அத்தையையும் கட்டிக்கொண்டார்கள்.

Monday, July 5, 2010

மாட்டின் அழுகை

என் நள்ளிரவு கனவு பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள். வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை. எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது.


எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான விஷயங்கள் தூரமானது.

தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை! அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை. எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவி்ன அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி்ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ்ரின் அடர்த்தியி்ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.

அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்து்ம் அந்தப் பசு்வை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன. மாடுகளின் பாஷை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.

தாங்க முடியாத குளிரின் பொருட்டும் நான் முக்காடாகப் போட்டு மூடியிருந்த சாரம் நனைந்ததன் பொருட்டும் அந்த சோகத்தை முழுவதுமாகச் சுமந்து வீட்டுக்குள் சென்றேன். எனனுறக்கம், என்னை இழுத்துச் சென்றது. அதனதன் இழுப்புக்கு ஆட்படுவதே மனித பண்பு.

அது நிலவொளி. பரந்து விரிந்த பனங்காடு. கள் கொடுக்கும் பனை மரங்களினடியில் சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. விற்கப்படும் போதைகளுக்கு ஏற்ப பணம். கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு கடனும் உண்டு. இளஞ்சூட்டு சாராயத்துக்கான ஆட்களும், பணமும் வெவ்வேறு. குடிப்பவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றிரண்டாக இருந்த ஆட்களி்ன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைப்பாகைகளுடன் தலைகள் பெருகுகின்றன.

அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் ஆச்சர்யமாகக் கத்துகிறான். அவன் கத்தல் கேட்டு கூட்டம் திரும்புகிறது. ஒரு மாடு்ம் ஆடு்ம் ஏதோ பேசியபடி பணத்தைக்கொடுத்து சாராயம் கேட்கிறது. மாடு பேசுவதைக் கேட்டு அங்கு ஆச்சரியம் கலந்த பயம். போதையேறிய சிலர் கல்லெடுக்கிறார்கள். ஒருவன் பனை மட்டையை ஓங்குகிறான். 'ஏலேய்...' குரல் கேட்டு பனங்காடு அதிர்கிறது. அது மாட்டின் குரல்.

'நீ கொத்தனார் மவந்தானலே. கல்லெறிஞ்சனா ஒழுங்கா வீடு போ்ய் சேரமாட்டே. உங்கப்பனுக்கு நீ கொள்ளி வைக்கணுமா? உனககு ஒங்கப்பன் கொள்ளி வைக்கணுமா? ம்ம்ம்..." மாட்டின் அதட்டல் எதிரொலித்து வருகிறது. மட்டையை எடுத்தவன் மலைத்துப் போய் நிற்கிறான். கல்லெடுத்தவன் பயத்தில் பின்னோக்கி நகர்கிறான். இந்த அதிசயத்தை சாரயக்காரன் கலக்கத்தோடு கவனிக்கிறான். மாட்டின் மடியில் பெரிய பை இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளாக எடுத்து அவனிடம் கொடுக்கிறது. ஞாபகமாக அருகிலிருக்கும் ஆடு, பாக்கிச் சில்லறை கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சிதற, மாடும் ஆடும் அங்கேயே அமர்கின்றன. ஆடு ஊறுகாய் கேட்கிறது. மாடு தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறது.

உரையாடல் தொடர்கிறது.

'வர வர சரக்கு ரொம்ப கசக்குது'

'நீ நேத்தே சொல்லியிருந்தேனா, காய்ச்சிர இடத்துக்குப்போயி, இளஞ்சூட்டோட நல்ல சரக்கு அடிச்சிருக்கலாம்'

அவசர அவசரமாக குடிக்கும் ஆடு இறுமுகிறது.

'மெதுவா குடி. முந்தா நாள் பல்லிலிச்சான் வந்தான். அவசர அவசரமா குடிச்சுட்டு அங்கயே கக்கி தொலைச்சு கேவலப்படுத்திட்டான்'

'எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது'

இவை குடிககும் அழைகைப் பார்க்க கூட்டம் சுற்றி நின்றது.

மாட்டுக்குப் போதை ஏறுகிறது. எழுந்து நின்று தலையை அங்குமிங்கும் திருப்புகிறது. நேராக சாராயம் விற்பனி்ன் இடத்துக்கு போய் அவன் சாய்ந்திருக்கும் பனை மரத்தில் முட்டுகிறது. சரியும் மரம் வேகமாக அவன் மீது விழுகிறது. அவனுக்கு அடியேது்மில்லை. எழுந்து முதுகை துடைத்துவிட்டு 'ஏனிப்படி பண்றே' என்கிறான் மாட்டை நோக்கி. அது கேட்கிறது.

'நேத்து என் சேக்காளி கால்ல கல்லெறிஞ்சு உடைச்சது நீதானே'

'சேக்காளியா?' அவனுக்கு குலை நடுக்கம். பயத்தி்ல் உளறல்.

'நேத்து வயல்ல பயிறை மேய்ஞ்சுட்டான்னு கல்லால எறிஞ்சு அவன் காலை ஒடைச்சல்ல...இப்ப பாரு...உன்னை...'

அவன் ஓடுகிறான். உயிருக்குப் பயந்து ஓடுகிறான். ஆடு்ம் அவனைத் துரத்துகிறது.

டக்கென்று விழித்துப் பார்த்தால் விடிந்திருந்தது. மழை இல்லை. அம்மாவிடம் மாடு அழுததை சொன்னேன். அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சொன்னாள்;

'போ்ன வருஷம் இதே நாள்லதான் அதோட கன்னு பஸ்காரன் அடிச்சுச் செத்துப்போச்சு.

(பழசு).


Sunday, June 27, 2010

கேரக்டர் 10: கிட்னம்மா 1

பயலுக்கு களவு அதிமாயிட்டு. சொந்த வீட்டுல திருடுன பய, அக்கம் பக்கம் வீட்டுல கையை வைக்க ஆரம்பிச்சுட்டான். ஒரு நாளு காலையில சுவரு முட்டி விக்கிற, கொட்டை கடைகிட்ட நல்ல கூட்டம். கடையில இருந்த ஒரு 45 ரூவாயையும் பெரிய சுவர் கடிகாரத்தையும் காணலை. கொட்டை கடை கதவுங்கறது ஈசியா திறந்துட கூடியதுதான். இதுவரை இபப்டியொரு சம்பவம் நடக்காத ஊர்ல, நல்லா பூட்டிட்டு போவணும்னு அவரும் நினைப்பாரா என்ன?


கடைக்குள்ள அழுக்குபுடிச்ச, செவப்பு நிற சீசன் துண்டு மட்டும் கெடக்கு. கொட்டை, கடைக்குள்ள வேற என்னலாம் காணாம போயிருக்குன்னு பார்க்குறாரு. கொட்டை மவனுவோ, 'கடையில கைய வச்ச நாயி மட்டும் கெடச்சது, இங்கயே பொலி போட்டுர வேண்டியதான்"னு குதிக்காவோ.

துண்டை பார்த்ததும் கொட்டைக்கு புடிபட்டு போச்சு. நேத்து சாய்ங்காலமா, சைலு பயதான் இந்த மாதிரி துண்டை போட்டுட்டு வந்து சுவருமுட்டி குடிச்சுட்டு போனாம்னு. மவனுவோட்ட சொல்லாம, ஏல, கடைய பாத்துக்கன்னு சொல்லிட்டு நேரா, கிட்னம்மா வீட்டுக்கு வந்தாரு.

வாசல்ல உக்காந்து குறுணையை பொடச்சுட்டு இருந்தா கிட்னம்மா.

' உம் மவன் இருக்கானா?

'ராத்திரில இருந்தே காணலையே... எங்க குடிச்சுட்டு எங்க கெடக்கானோ தெரியலையே. ஏம்யா எதுவும் வேலையா?"

'வந்தாம்னா, நான் தேடுனன்னு சொல்லு'ன்னுட்டு கொட்டை திரும்புனதும், தூரத்துல தெரியுத ராமசாமி பண்டுவன் தொழுவுல, ஒரு தலை குணிஞ்சு குணிஞ்சு எந்திரிக்கதை பாத்துட்டாரு.

அவரு சந்தேகம் சரியாயிட்டு. இந்தப் பயதான் வந்துருக்காம்னு. அவன கவனிக்காத மாதிரி பின் பக்கம் இருக்குத கருவ மூட்டுக்குள்ள ஒண்ணுக்கு இருக்குத மாதிரி உக்காந்துகிட்டாரு. இவரு இங்ஙன இருக்கது கிட்னம்மா மவன் சைலுக்கு தெரியலை. மெதுவா அங்க இங்கன்னு பார்த்துட்டு வீட்டு வாசல்ல நின்னவனை, 'ஏம்ல, கொட்டை வந்து தேடிட்டு போனாரு. என்னத்தையும், எழவை இழுத்துட்டு வந்தியா"ன்னா கிட்னம்மா.

'ஒரு எழவையும் இழுக்கலை. நீத்தண்ணி இருந்தா கொடு'ன்னான்.

டமார்னு முள்ளுக்கம்பை வச்சு பொத்துன்னு ஒரு அறை அவன் முதுவுல விழுந்ததும் அம்மான்னு கீழ விழுந்தாம்.

கிட்னம்மா பதறிட்டு வெளிய வந்தா.

கொட்டை, கம்பை தூக்கிட்டு திரும்பவும் மண்டையில ஒரு போடு போட்டாரு.

'எய்யா எய்யா அடிக்காதீங்கய்யா... எம்புள்ள என்னய்யா பண்ணுனா... அவன விட்டுருங்கய்யா'ன்னு கெஞ்சுதா கிட்னம்மா.

ஆத்திரம் தீரலை. கொட்டைக்கு. கிட்னம்மாவை தள்ளிவிட்டு, சைலு இடுப்புல ஒரு மிதி.

யம்மான்னு அழுதாம்.

அக்கம் பக்கத்து வீட்டுலயிருந்து ஆட்கள் வந்துட்டாவோ.

'ஏம், அந்த ஏலுவத்த பயலை போட்டு அடிக்கீரு... அந்த பய என்ன பண்ணுனாம்"ன்னு கேக்காவோ.

கொட்டை, கம்பை தூர போட்டுட்டு, ' ஏல, மேல தெரு பக்கம் இனும பாத்தேன். சங்கை அறுத்துருவேன்"ன்னுட்டு, பக்கத்துல நின்னவோட்ட, விஷயத்தை சொன்னாரு.

கிட்னம்மாவுக்கு தூக்கி வாரி போட்டு. ஒப்பாரியை ஆரம்பிச்சுட்டா. இதுக்கா நான் புள்ளை வளர்த்தேன். ஊர்க்காரன் என் கண்ணு முன்னால அடிச்சு மிதிக்கிற மாதிரி வச்சுட்டியே... இன்னும் நான் உயிரோட இருக்கணுமா?

இதுக்குப் பெறவு கிட்னம்மாவுக்கு அடிக்கடி உடம்பு சொகமில்லாம போவும். மவன் கவலையிலே பாதி உசுரு போயிட்டு. மருவகாரியும் இங்க வார மாதிரியும் தெரியல. இவனும் திருந்துத மாதிரி தெரியல.

ஒத்தப்பனைகிட்ட சாராயம் வடிக்குத மாரிகிட்ட அஞ்சாறு பாட்டிலை வாங்கி போட்டுக்கிட்டு, கருத்த பிள்ளையூர்ல விக்குத வேலையை பாத்தான் சைலு. ஒரு நாளு போலிசு பிடிச்சுட்டு போன பெறவுதான் கிட்னம்மாவுக்கு விஷயம் தெரிஞ்சுது. அன்னைக்கு படுத்தவதான். ஒரேடியா கெடயில கெடந்துட்டா.

அவ இபப்டி கெடந்தாலும் இந்தப் பய, தன்னோட குடியை நிறுத்தலை. சொந்தகாரவோ எல்லாம் வந்து எவ்வளவோ புத்தி சொல்லியும் திருந்தலை இந்த ப்ய.

இன்னா, உயிரு அந்தா இந்தான்னு இழுத்துக்கிட்டு கெடக்கு. பொட்டுன்னு அவ உசுரு போனாலும், 'ஏ ஆத்தா போயிட்டியே"ன்னு ஓங்கி அழதுக்கு அவாட்ட ஒரு பொட்டப்புள்ள கூட இல்லை.

Thursday, May 20, 2010

இடையில் சில குறிப்புகள்

ஒரு வருடத்துக்குப் பிறகு ஊருக்குப் போவது என்பது கொஞ்சம் அதிகப்படியான சந்தோஷத்தை தந்திருந்தது. கேபினுக்குள்ளும் கம்ப்யூட்டருக்குள்ளும் அடைந்துகொண்ட வாழ்க்கையின் பிரதானம் வருவாய் மட்டுமே. இதை தாண்டிய மகிழ்ச்சிகளை, தந்துவிடுவதான பாவலாவை, சினிமா பார்ட்டிகளும், ஈசிஆர் விசிட்டுகளும் ஏகாந்தமாய் செய்கின்றன.


தொழில் நிமித்தம் நடக்கின்ற இக்காணிக்கைகளை தாண்டி, அடிநெஞ்சில் அம்மணமாக எல்லாருக்குள்ளும் உலவி கொண்டிருக்கிறது பிறந்து வளர்ந்த ஊரும், பிஞ்சில் ஆடிய நினைவுகளும்.

டிவியில் ஓடுகிற--, வயக்காட்டையும் ஆற்றையும் தோப்புகளையும் கொண்டு செல்கிற ஏதாவதொரு கிராமத்து பாடல், உடைத்துவிட்டு போகிறது இப்போலி வாழ்வை. பிழைப்பின் நிமித்தம் தங்கிவிட்டாலும் எல்லோரின் சட்டைப்பைக்குள்ளும் கிராமம், சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது உறங்கிவிடாமல்.

ஆடி அசையும் குளிர்சாதன, தூங்கும் வசதிகொண்ட பேரூந்தில் திருநெல்வேலிக்கு ஏறிய போது, மணி இரவு 9.00. காலையில் 7.30க்கு நெல்லை புது பஸ்டாண்ட் வந்திருந்தது.

பிடித்து வளர்த்த மைனா குஞ்சுகளும், கிளிகுஞ்சுகளும் கண்களின் பறக்க, வளர்த்த வெள்ளாட்டு குட்டியில் முகம் புதைத்து ஆடிக்கொண்டிருந்தது மனசு. அம்பாசமுத்திரம் பஸ் பிடித்து, குட்டித் தூக்கம்.

இறங்கி,கொட்டாவி விட்டுக்கொண்டே, டவுண் பஸ்சுக்கு காத்திருந்த போது, கேட்டது குரல்.

'நீங்க ஆடுமாடுதானே'

இதென்ன கூத்தா இருக்கு என நினைத்துவிட்டு, 'ஆமா, நீங்க'

'நான் ராஜா, துபாய் ராஜா'

'அட, எப்படி சார், முகமே தெரியாம, இவ்வளவு கரெக்டா என்னை அடையாளம் கண்டீங்க?'

'உறவினர் ஊருக்கு போறாங்க, பஸ் ஏத்த வந்தேன். திடீர்னு பார்த்தா பேக்கோட நின்னீங்க. போன வாரமே சொன்னீங்கள்ல, இன்னைக்கு வருவீங்கன்னு. அதனால, குத்து மதிப்பாதான் கேட்டேன்'

சில நிமிட பேச்சுக்குப் பிறகு, அவரவர் பாதையில் பிரிந்தோம்.

எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

................................................

புறாக்கூண்டு வீடுகளில் வாழ பழக்கிவிட்டிருக்கிறது சென்னை. வீடு மாற்றும் பொருட்டு, (தூசிகளோடு) அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களை ஏதாவது லைப்ரரிக்கு கொடுத்துவிடுவது என்று 3 அட்டைப்பெட்டிகளை ரெடி செய்து அடுக்கி வைத்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 527 புத்தகங்கள்! வார இதழ் ஒன்றில் வேலை பார்த்தபோது விமர்சனங்களுக்காக வந்த புத்தகங்கள் அதிகம். ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருந்தபோது, கண்ணில் பட்டது சு.சமுத்திரத்தின் வாடாமல்லி.

'ஏ அய்யா, நான் சுத்துன ஊரைத்தானே நீயும் எழுதத... ஒரு நாளு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வா. நிறைய பேசுவோம்' என்ற சமுத்திரம், 'தோழர்' கதைக்காக பெரிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதை படித்துவிட்டு அவரது அனைத்து புத்தகங்களையும் மொத்தமாக படித்துவிடுவதென முடிவு செய்து, ஆச்சர்யத்தின் ஆழ்ந்தேன். இன்னும் பல நினைவுகள் வந்து வந்து சென்றது.

அவர் இறக்குமுன் கடைசியாக பேசியது என்னிடமாகத்தான் இருக்கும்.

இதே போல இன்னொருவர் எழுத்தாளர் கந்தர்வன்.

'பேசக்கூடாதுன்னு டாக்டரு சொல்லியிருக்காரு. இவரு பாட்டுக்கு போன்ல பேசிட்டிருக்காருப்பா... கொஞ்சம் சொல்லேன்' என்ற அவரது மனைவியின் கரிசனையை அவர் பொருட்படுத்தவே இல்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களில் நினைவுகளும் புதைத்திருக்கிறது.

Friday, April 9, 2010

காடு - 13

சரிந்துசெல்லும் வனாந்தரத்தில் தன் நினைவை இறக்கிக்கொண்டிருந்தான் உ.மகாளி. வனம் என்கிற வாழ்க்கை அவனுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சடாரென மோதிச்செல்லும் குளிர்காற்றில் சிலிர்த்த உடலை, தனக்குள் வாங்கிக்கொண்டான். தூரத்தில் தெரிகிற மரத்தின் வேர்களில் தொங்கும் பலாக்களாக கொஞ்சம் மாறிப்பார்த்தான். முட்கள் தாங்கிய உடலோடு அவனைப் பார்க்க அதிசயமாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்து, அதை கவ்வும் நரியின் வாயில் அகப்பட்டால்?


தன்னை, இன்னொன்றாக மாற்றிப்பார்க்கும் அனுபவம் அலாதியானது. உ.மகாளி, இன்னும் சாக்கு மூட்டையில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தான். கால்களி்ல் ஏறிச்செல்லும் சிறு பூச்சியின் மேனியில் வண்ணங்கள் படர்ந்திருந்த்தைப் பார்த்தான். அதைப் பின் தொடரும் மற்றொரு பூச்சியின் மேனி வண்ணங்களற்று இருந்தது. வண்ணங்களானதும் வண்ணங்களற்றதுமான வாழ்க்கையை பற்றிய யோசனை அவனுக்கு அப்போது எழ வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் காட்டின் காற்றில் இரை தேடிக்கொண்டிருந்தான்.

நொடிஞ்சானும், கேசரியும் குடிலைப் புதுப்பித்துக்கொண்டிருந்தனர். மரப்பலகைகளில் சில துகளாகியிருந்தது. அதில நான்கைந்து பாம்பு சட்டைகள் பெரியதும் சிறியதுமாக நைந்து தொங்கிக்கொண்டிருந்தன. நொடிஞ்சான், அவற்றை எடுத்துப்பார்த்துவிட்டு, 'எங்க வந்து ஏறியிருக்கு பாரு' என்றான்.

குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. கந்தையாவும் தவிட்டானும் சில கோங்கு கம்புகளைக்கொண்டு ஒரு ஆள் உயரத்துக்கான ஏணியை தயார் செய்திருந்தனர். ஏணி என்பது போல சமமான மரக்கம்புகளால செய்யப்பட்ட்வை அல்ல அது. அங்கும் இங்கும் நெளிந்து மரக்கம்புகளின் சைசுக்கு ஏற்றார் போல அது ஒரு வடிவத்தில் இருந்தது.

அதை, குடிலின் மேல்பாகத்தோடுச் சேர்த்து கட்டி விடலாம் என்றான் தவிட்டான். கந்தையா வேண்டாம் என்றான்.

'ராத்திரி எல்லாரும் மேல ஏறுன பெறவு, ஏணியை தூக்கி மேலய போட்டுர வேண்டியதானல' என்றான்.

'ஏம், எதுவும் ஏணியோடி ஏறி வந்திரும்னு நெனக்கியோ'

'வரணும்னா எதுவும் எப்படியும் வந்திரும்ல... ராத்திரி போடுத தீக் கங்குக்கு கிட்ட ஒண்ணும் வராது'

ஏணி ரெடியாகி, குடிலின் மேல் பக்கத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த உ.மகாளியை, நொடிஞ்சான் அழைத்தான்.

'இப்படியே படுத்துக்கிடந்தன்னா, கெடக்க வேண்டியதாம்ல... போய் வெறவு பொறக்கிட்டு வா இவங்களோட. இன்னும் சோறு பொங்க வேண்டியிருக்கு'

கேசரி, கந்தையாவுடன் விறகு பொறுக்க ரெடியானான் உ.மகாளி.

இறங்கினார்கள். மைதானம் மாதிரியான இந்த இடத்திலிருந்து கொஞ்சம் வடக்குப் பக்கம் நடந்தால் அடர்த்தியான மரங்களின் பெருங்காடு. சுற்றி மரங்கள் அடர்ந்திருந்தாலும் வடக்குப் பக்கம் மேடாக இருந்ததால் மரக்கட்டைகளை தூக்கிக்கொண்டு வர வசதியாக இருக்கும்.

'ஏல மரத்துல உள்ளதை வெட்டிராதிங்க... பச்சையை. எரியாததை வச்சு என்னத்த மாரடிக்க' என்று குடிலின் மேலிருந்து கத்தினான் நொடிஞ்சான்.

மரங்களின் நிழல்கள் அதற்குள் இருட்டாக்கி இருந்தது சூழலை. வயதான மரங்களின் வேர்கள் மலைப்பாம்பை போல அங்கங்கு நெளிந்து வளைந்து கிடந்தது. மண்ணுக்குள் அமிழ்ந்தும் வெளிப்பட்டும் மீண்டும் அமிழ்ந்தும் கிடக்கிற வேர்களில், நம் முப்பாட்டன்களின் கால் ரேகைகள் பதிந்து கிடக்கலாம். வேரோடு வேராக நம் மூதாதையர்களின் வேர்வைகளும் வளர்ந்திருக்கலாம்.

அவற்றின் மீதேறி செடிகளோடு காய்ந்து கிடக்கிற கம்புகளைப் பொறுக்கலானான் உ.மகாளி. மரத்தோடு இருக்கிறவரை, கிளையாகும் கம்புகள் முறிந்து விழுந்ததும் விறகாகும் சூத்திரத்தை கிண்டலாகச் சொன்னான் கேசரி.

மரத்திலிருந்து தாவிப்போகும் பறவைகளின் படபடக்கிற சத்தங்களில் காட்டின் நிசப்தம் ஓய்ந்து அதிர்ந்தது. இவர்களின் காலடி சத்தம் கேட்டு, உதிர்ந்து கிடக்கிற செத்தைகளில் இருந்து வேகமாக ஓடுகிற ஊர்வன வகைகளில் எறும்பு தின்னியை மட்டும் பார்த்தான் உ.மகாளி.

'ஏண்ணே அங்கரு'
'ஆமா, அதுக்கென்னா, இதுக்கே இப்படின்னா? இன்னும் என்னமெல்லாம் பாக்கப்போற பாரு'
'ஏண்ணே, அதை பிடிச்சுரலாமா?'
'பொறுல... வந்த அன்னைக்கேவா. மொதல்ல வேலையை பாப்போம்'

இதற்கு முன், சிவசைலத்தில் சாமி சப்பரம் தூக்கச் சென்ற போது அங்கு, எறும்புதின்னியைப் பார்த்திருக்கிறான் உ.மகாளி. ஆறுகால் கன்னுக்குட்டி பிறந்த சொக்கம்பட்டியான் வீட்டு வாசலில், நான்கைந்து பேர் அதை வைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தனர். உடலோடு இருக்கிற அதன் செதில்கள் ரசனையானவை. உ.மகாளியும் அவர்களோடு வேடிக்கப் பார்த்துவிட்டு வந்ததில், 'நமக்கு இப்படியேதும் கிடைக்க மாட்டேங்குதே' என்று நினைத்துக்கொண்டான். இப்போது பார்த்துவிட்டான்.
'ஏண்ணே, போறதுக்குள்ள எங்கயாவது இதை தூக்கிரணும்'
'அதெல்லாம் ஒரு வெஷயமால. நாலஞ்சு ஐட்டம் இருக்கு, கொண்டு போறதுக்கு'
'நாலஞ்சா, வேற என்னண்ணே இருக்கு?'
'நீ மொதல்லா, வெறவெல்லாத்தையும் வச்சு மூணு தலைக்கு இந்த கயிறை வச்சு கெட்டு. போயிட்டு பேசிக்கிடுவம்'

விறகுகளை கட்டிக்கொண்டு குடிலுக்கு வரும் போது, இதே போல ஒரு கோடையில் மாத்ராங்குளத்து பொத்தையில் இருந்து விறகு தூக்கிக்கொண்டு வந்த பிச்சம்மாள், இப்போது உ.மகாளியின் ஞாபகத்துக்கு வந்தாள்.

தொடர்கிறேன்.

Tuesday, March 16, 2010

குறுணை

வாசலில் வெண்மையாகச் சிதறி கிடந்த முருங்கைப் பூக்களின் மீது சருவச்சட்டியிலிருந்து சாணிக்கரைசலை தெளித்தாள் கிட்னம்மா. சாணத் தண்ணி பட்டு அவற்றின் நிறம், பாதி கரும்பச்சையும் பாதி வெள்ளையுமாக காட்சியளித்தன.

விடிந்தும் கூவிக்கொண்டிருந்த பக்கத்து வீட்டு சேவல், சாவகாசமாக இவள் வீட்டு வாசலில் நடந்தது. நேற்று, முள் கிழித்திருந்த அதன் கொண்டையில் ரத்தம் காய்ந்து போய், முருங்கை பிசின் மாதிரி திட்டித்திட்டாய் இருந்தன.

எதிரில் கோழி கூட்டின் மீதிருந்த நான்கைந்து கட்டவாரியல்களில் தென்னங்கீற்று வாரியலை எடுத்தாள். அதன் கைப்பிடி அருகில் கோழி ஒன்று 'ஆய்' போயிருந்தது. 'சனியன் எங்க வந்திருக்கு போயிருக்கு பாரு' என்று பேசிக்கொண்டே, பக்கத்தில் கிடந்த பழைய துணி மீது அந்தப் பகுதியை வைத்து, வாரியலை அங்கும் இங்கும் இழுத்துத் தேய்த்தாள். அரைகுறையாகத்தான் போயிருந்தது. 'சரி பரவாயில்ல' என்று பெருக்க ஆரம்பித்தாள்.

தரையில் இரண்டு இழுப்பு இழுத்ததும் வயிற்றுக்குள்ளிலிருந்து ர்ர்ரென்று சத்தமெழும்பி, வாய் வழியே காற்றாகப் போனது. ஒரு நிமிடம் இடுப்பைப் பிடித்துக்கொண்டு நிமிர்ந்து நின்றாள். ஆயாசமாக வந்தது அவளுக்கு. கண்கள் லேசாக சொருகின. பசி. இன்னும் செத்த நேரம் தூங்கலாம் போலிருந்தது. ஒரெடியாய் பெருக்கிவிட்டு தூங்கலாம் என்று நினைத்து ஆரம்பித்தாள்.

பறவைகள் கூட்டமாய் கிழக்கு நோக்கிப் பறந்து கொண்டிருந்தன. இறக்கைகள் அடிக்கும் ஒலி காற்றில் மிதந்து வந்தது.

வாசலை பெருக்கும் சத்தம் கேட்டு, கீழ வீட்டுக்காரி மாரியம்மா, 'என்ன பெரியம்ம, ராத்ரி நேரத்தோட தூங்கிட்டியோ' என்று கேட்டாள்.

அவள் கருப்பநம்பிக்கு திருமணமாகி வந்தவள். இன்னும் கழுத்தில் புது தாலி சரடு மஞ்சள் போகாமல் அப்படியே இருக்கிறது. கூடவே பெரும் எடைகள் கொண்ட நகைகள்.

'நம்ம தங்கிடு மட்டும் ஒழுங்கா இருந்திருந்தால் பெரும் நகைகளோடு திருமணம் செய்து வைத்திருக்கலாம். ம்ம் எல்லாம் எந்தல விதி' என்று நினைத்துக்கொண்டாள் கிட்னம்மா.

'ஏ பெரியம்ம, உன்னதான கேக்கேன்... காதும் அவிஞ்சுபோச்சா ஒனக்கு'

'ஆங்... ஆமாதாயி, பொழுதோடயே நேத்துபடுத்துட்டேன். விடிய விடிய முழிச்சு எந்த கடல்ல முத்தெடுக்கப் போறேன்'

'நேத்து, அவ்வோ தெப்பக்குளத்துல மீன் புடிச்சுட்டு வந்திருந்தாவோ. கொழம்பு நெறய மிச்சமாயிட்டு. கொண்டு வந்து வாசல்ல நின்னு பெரியம்ம, பெரியம்மன்னு கூப்பாடு போடுதேன். பேச்சு மூச்ச காணும். அந்த நேரம் பாத்து நம்ம சலவக்காரி செண்டு வந்தா. எல்லாத்தையும் தூக்கி அவாட்ட கொடுத்தேன்'

'ஏட்டி, அதுயென்ன வம்பாவா போவும்? அடுப்புல சுடவச்சு, சுண்டவச்சுப் போட்டனா, காலைல சாப்புட, அல்வா மாறி இருக்குமட்டி, அவகிட்ட கொடுத்தேங்கியே'

'சர்தாம்... இவ்வோளுக்கு தொண்டையில எறங்கலையே'

'மீனு ஏம்டி ஏறங்கல?'

'ரெண்டு மொளத்தா கூடிப்போச்சு. வாயில வச்சா எரிச்சு கொல்லுது. பின்ன என்ன பண்ண சொல்லுத? கழுதய அவகிட்ட கொடுத்தேன். வீணாத்தான போடணும்'

சுருக்கென்றது கிட்னம்மாவுக்கு.

'தூரப்போடுததை கொண்டு வந்து, கதவை தட்டிருக்காளே... எச்சிக்கலைன்னே நெனச்சிட்டாளா? எடுபட்ட செரிக்கி. அவ வாயில ஈரமண்ணு விழ...'

குபுக்கென்று கண்ணீர் வந்தது. வேறெதுவும் அவளுடன் ஏசவில்லை. அவசர அவசரமாக தூத்து ஒதுக்கிவிட்டு, வீட்டு வாசலில் போய் உட்கார்ந்தாள்.

சேலை முந்தானையை தரையில் விரித்து ஒருக்கு சாய்த்துப் படுத்துக்கொண்டாள்.

'இந்தப் பய ஒழுங்கா இருந்திருந்தான்னா, நான் இந்த நெலமைக்கு ஆளாவணுமா? கண்ட கண்ட பேதில போவாருட்டயெல்லம் இப்படி பேச்சுக் கேக்கணுமா? ஏ தெய்வமே... என்னைய இதுக்குதான் படைச்சியா?'

கண்ணைத் துடைக்க துடைக்க அழுகை பீறிட்டு வந்தது. ஊற்று மாதிரி.

தங்கிடு ஒன்றும் அப்படிப் படிக்கவில்லை. சிறுவயதிலேயே அவன் அப்பா மாதிரி நெடு நெடுவென்று வளர்ந்திருப்பான். ஊர் சுற்றிக்கொண்டிருந்தான். வேலை வெட்டி எதுக்கும் செல்லவில்லை. பாபநாசம் மலைக்கு மேல சேர்வலாறு அணை கட்ட லாரியில் வேலைக்கு ஆள் கூட்டிச்சென்றார்கள். சோத்துச்சட்டியை தூக்கிக்கொண்டு அப்போதுதான் முதன்முதலாக அவன் வேலைக்கு போனது. ஒன்றரை வருட வேலை. மூன்றாவது மாதத்தில் அவன் வாங்கிகொடுத்த சேலையால் பூரித்துப் போனாள் கிட்னம்மா. இந்தப் பூரிப்பு நீண்ட நாள் நீடிக்கவில்லை. அணைக்கட்டு வேலை முடிந்து, அவன் கூப்பிட்ட வேலைக்கு சென்று வந்த நாட்களில், அவன் நடை உடைகளில் மாற்றம் வந்தது. கைகளில் தாராளப் பணப்புழக்கம். என்னதான் மாங்கு மாங்கு என்று வேலை செய்தாலும் முப்பது ரூபாய்க்கு மேல் தேறாது. ஆனால், தங்கிடு கைகளில் நூறுகளாகப் புரண்டது.

'ஏதுல இவ்வளவு ரூவா'

'ஆங்... தெருவுல கெடந்தது'

'தெருவுலயா'

'தெருவுல கெடக்குமோ...போவியா, எப்படி வந்துச்சு... ஏன் வந்துச்சுன்னு'
அதன் பிறகு எதுவும் கேட்கவில்லை அவள். ஒரு நாள் உச்சிவெயிலில் மேலத்தொரு மோர்க்காரி, 'ஏக்கா, உம்மவன போலீஸ்காரன் அடிச்சு தரதரன்னுலா இழுத்துட்டு போனாம் காலைல' என்றதும் அரண்டுவிட்டாள்.

'ஏ நாசமா போறவனுவோ, எம்புள்ளைய ஏம் அடிக்கானுவோ'

தலைய விரித்துப்போட்டு ஒப்பாரி வைத்தாள்.

'உம்மவன் பண்ணுனதுக்கு, அடிக்காம என்ன செய்வான் போலீசுகாரன். ஒத்த தென்னம்புள்ள பக்கத்துல சாராயம் காய்ச்சுனாம்னா விடுவானா?'

கெதக் என்றது அவளுக்கு.

எந்த தொழில் அவன் அப்பனோட போகட்டும் என்று நினைத்தாலோ... அதே தொழில் மகன்.

பிறகு யாராவது வீட்டுக்கு வருவார்கள். 'இப்ப அம்பாசமுத்ரம் ஜெயில்ல இருக்காம். பாத்துட்டு வரசொன்னாம்' என்பார்கள். பிறகு பாளையங்கோட்டை ஜெயில்.

ஒரு முறை தங்கிடுவிடம் கேட்டாள்.

'இந்த நாசமா போற தொழிலு வேணுமால'

'சும்மா தொன தொனங்காத... போலீசுகாரனுவோ துட்டை வாங்கிட்டு சும்மாதான் இருந்தானுவோ. வந்திருக்கவன் புது எஸ்.ஐ. அடங்கமாட்டேங்கான். எங்க போயிருவான்?'

'சாராயத்தை வித்துதான் வயிறு வளக்கணுமா.. ஒங்கூட சேர்ந்தவந்தானல கருப்பநம்பி. இன்னைக்கு கல்யாணம் காச்சின்னு இருக்காம்லா. போலீஸ்காரன் கையில அடிவாங்கிதான் சாவணுங்கியோல'

'இங்கரு... இப்டி பேசிட்டிருந்தனா, எட்டிட்டு மிதிச்சிருவேன்'

'அது ஒண்ணுதாம்ல பாக்கி. ஏற்கனவே ஊர்ல உள்ளவ எல்லாம் காறிட்டு துப்பாத கொறயா பேசுதா...நீ இதையும் செஞ்சுட்டானா போதும்'

'எவளாவது ஏதாது சொன்னானா சொல்லு. தலைய எடுத்துருதன்'
'த்தூ...நாய, உன்னை பெத்ததுக்கு அதோடயாவது விட்டாளுவோன்னு பெருமபடு'
'எந்த எழவுக்குதான் வீட்டுக்கு வரமாட்டேங்கேன். ஒம் எமத்துல நிக்க முடியல'
'நீ எப்ப பரதேசம் போற, எப்ப வீட்டுக்கு வாரன்னு ஒரு மண்ணும் தெரியல. நான் என்ன ஈரமண்ணயால திங்க. இல்ல எனக்குதான் எளமை திரும்புதுன்னு நெனக்கியா"

'இங்கரு இருந்தா தின்னு. இல்லனா ஒரேடியா போய்ச்சேரு'

கிளம்பிவிட்டான். இதற்கு பிறகு தங்கிடு வீட்டுக்கு வருவதில்லை.
 இப்போதெல்லாம் கிட்னம்மாவின் வயிற்றுப்பாட்டுக்கு இரைபோடுவது பம்பாய்க்காரம்மாதான். இவள் மீது இரக்கப்பட்டு, வாரம் ஒரு முறை குறுணையை கொடுத்துக்கொண்டிருந்தார்கள்.

முதலில் கேவலமாகத்தான் இருந்தது,'கோழிக்கு போடுத குறுணைய கேட்டவா' என்று. பிறகு பழகிவிட்டது.

அவள் கொடுத்த குறுணை நேற்றோடு காலியாகிவிட்டது. பெட்டியோடு பம்பாய்க்காரம்மா வீட்டுக்கு சென்றாள். விருந்தாட்கள் இருந்தார்கள். இவளைப் பார்த்த அந்தம்மா, 'பொறவாசலோடி வாயேன்' என்றாள்.

புறவாசலில் எச்சில் இலைகள் அதிகம் கிடந்தன. இளம்பச்சை நிறத்தில் கிடந்த அந்த இலைகளையும், தெறித்துக் கிடந்த மிச்ச சோற்றுப்பருக்கைகள் மற்றும் கூட்டுப்பொரியல்களைப் பார்த்ததும் எச்சில் ஊறியது.

'கிட்னம்மா... எம் மவனுக்கு அடுத்த வாரம் கல்யாணம் பம்பாயில. கூட வேலை பாக்குதவளை கெட்டபோறான். ராத்திரி ரயிலை புடிக்கணுங்கதுக்காக குறுணை எல்லாத்தையும் கெட்டி, அரங்கூட்டுல வச்சுட்டேன். இப்ப எடுக்க முடியாது. வேணா சோறு தாரேன். கொண்டு போறியா'
கொஞ்ச நஞ்சமாவது கிடைத்து வந்த வயிற்றுப்பாட்டிலும் இடி. வயிற்றுக்குள் கொட கொடத்து வந்தது ஏப்பம் வந்தது. பசி ஏப்பம். இடுப்பில் வைத்திருந்த கொட்டா பெட்டிக்கூட கனமாக தெரிந்தது.
வெளியில், போத்தி கோயில் இருந்தது. திண்டில் அமர்ந்து சாமி கும்பிட்டாள்.

'என்னைய ஏன் இப்படி சோதிக்க சாமி. ராணி மாதிரி வாழ்ந்தேனே. இன்னைக்கு ஒருவேளை கஞ்சிக்கு கையேந்த வச்சிட்டியே சாமி. எனக்கு நல்ல புருஷனையும் கொடுக்கல. நல்ல புள்ளையும் கொடுக்கல். எனக்கு மட்டும் ஏஞ்சாமி இப்படி... நீங்கள்லாம் இருக்கியேளா... இல்லையா"
அழுது புரண்டாள். சாமிக்கு என்ன கேட்டதோ?

அடுத்து யாரிடம் குறுணை கேட்கலாம் என்று நினைத்ததும் சிட்டுக்குருவி ஞாபகத்துக்கு வந்தாள். வசதியானவள். தருவாளா மாட்டாளா? என்று யோசித்துக்கொண்டே பிள்ளையார் கோவில் அருகிலுள்ள அவள் வீட்டுக்குச் சென்றாள். வீட்டு வாசலில் நான்கைந்து ஆம்பளைகள் இருந்தார்கள். இப்போது அவள் வீட்டு வாசல் முன் நின்று கேட்க வெட்கம். திரும்பி போனவளை பார்த்துவிட்டு சிட்டுக்குருவி, 'ஏக்கா என்ன வந்துட்டு போற' என்று கேட்டாள்.

'ஒன்னயதாம் பாக்கலாம்னு வந்தேன்'

'வந்தேன்னுட்டு போறியே'

'ஆமா, ஒண்ணுமில்ல தாயி, கொஞ்சம் குருணை கெடக்குமா?'

சிட்டுக்குருவி சிரித்தாள். அவளின் உடைந்த முன்பக்க பற்கள் தெரியுமாறு சிரித்தாள்.

இந்த சிரிப்பு ஏளனமா? எக்காளமா என்பது கிட்னம்மாவுக்குத் தெரியவில்லை.

'யக்கா, சரியா போச்சு போ. இப்பதான் கோழிப்பண்ணைக்காரன், டக்கு மோட்டார்ல வந்து அரை மூட்டை குருணைய ரூவா குடுத்து வாங்கிட்டு போறான். இப்ப வந்து கேக்கியே. இப்பலாம் முன்ன மாதிரி இல்லக்கா. குருணைக்கும் நல்ல துட்டு கிடைக்கு பாத்துக்கோ'

சொல்லிவிட்டு சிட்டுக்குருவி சிரித்துக்கொண்டிருக்க, கிட்னம்மாவுக்கு ஏப்பம் வந்துகொண்டிருந்தது. பசி ஏப்பம்!

எனது தொகுப்பிலிருந்து...

Thursday, March 11, 2010

காடு - 12

உ.மகாளி, பாம்பைக் கண்டதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நிற்பதை பார்த்தான் முத்தையா. அவனிடம் மூச் என்று சைகை செய்துவிட்டு, பக்கத்தில் இருந்த சிவப்பு கலர் போர்வையை எடுத்தான். பாம்பு, சாக்கு மூட்டையின் மேல் நின்று தலையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருந்தது. கருநாகமாக இருக்கலாம். தலையிலிருந்து வழு வழு என்றிருந்த அதன் உடலில் நான்கைந்து வரிகோடுகள் இருந்தன. அது தலையை விரிக்கவோ, படமெடுக்கவோ செய்யவில்லை.


அதன் பின்பக்கம் இருந்த பெருங்கல்லில் மெதுவாக ஏறினான் முத்தையா. போர்வையை, மீன் பிடிக்க வலை வீசுவது போல, பாம்பின் மீது வீசினான். அது -பாம்பின் தலையை தொடுவதற்குள் சீறிப் பாய்ந்தது பாம்பு. இருந்தாலும் போர்வைக்குள் சிக்கிக்கொண்டு அங்கும் இங்கும் போர்வையோடு உருண்டது. அந்த கணத்த போர்வையை உடலோடு இழுத்துக்கொண்டே பாறைக்குள் செல்ல முயன்றது. அதற்குள் அருகில் கிடந்த மூன்று வெற்று சாக்குகளை எடுத்து அதன் மீது போட்டான் உ.மகாளி. இப்போது அந்த பாம்பால் வேகமாகச் செல்ல முடியவில்லை. இருந்தாலும் போர்வையில் இருந்து விடுபடும் பொருட்டு, அங்கும் இங்கும் உருண்டு கொண்டு முன்னேறியது.

அதற்குள், உ.மகாளி ஒரு பெரிய கல்லைத் தூக்கி அதன் மீது வீசப்போனான். தடுத்தான் முத்தையா. இப்போது பாம்பு மேலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரும்பாறையின் அடியில் முட்டி உருண்டு கொண்டிருந்தது. ஆடிய அசைவில், சாக்கின் அடியில் வால் மீண்டது. இப்போது முழுவதுமாக பாம்பு வெளியே வந்துவிடும்.

உ.மகாளி, 'ஏண்ணே, இப்ப எகிறிட்டுன்னா' என்று பயத்தில் கேட்டான்.

'பேசாம இருல... அது போயிரும்'

'பழிவாங்கிருமேண்ணே'

'ஏதையாவது உளறாதல... இந்த மாதிரி இடங்கள்ல பாம்புவோ கிடக்கத்தான் செய்யும். அதுக்காவ கொல்லக்கூடாது. அதுவோளும் வாழணும்லால'

'இப்ப கடிச்சிருந்ததுன்னா'

'அதுக்கென்ன செய்ய முடியும். அதாம், மருந்து இருக்குல்லா. அதெல்லாம், கொண்டாராம, இங்க வ்ர முடியுமால'

இந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தவர்களில் கேசரி, அருகில் உருண்டதில் பாறையில் தலை பட்டு, தடவிக்கொண்டே எழுந்தான்.

சுத்தி பார்த்தான். உ.மகாளியும் கந்தையாவும் பாறைக்கு வெளியில் அமர்ந்து பேசுக்கொண்டிருந்தார்கள்.

'ஏண்ண, தூக்கமே வரமாட்டேக்கு" என்றான் கேசரி, கொட்டாவி விட்டுக்கொண்டே.

'அப்ப நீ முழில. நாங்க தூங்குதோம்'

நொடிஞ்சானும் எழுப்பப்பட்டான். இப்போது தூக்கம் முறை மாறியது.

காலையில், நேற்றைய சோறின் மிச்சமான, நீத்தண்ணியை குடித்துவிட்டு, பயணம் தொடங்கியது. மாடுகளுக்கு தன்ணீர் காட்டிவிட்டு மேலே பத்தினான் கேசரி. அதன் பின்னால் பயணம் தொடங்கியது. செங்குத்தான பாதை. இதைக் கடந்ததும் வழுக்காம் பாறை இருக்கிறது. இங்குதான் கஷ்டம் மாடுகளுக்கு. மெதுவாக நடக்க வேண்டும். அடிக்கடி வழுக்கும் தன்மை கொண்ட இந்தப் பாறையின் ஓரத்தில், அதை வெட்டி பாதையாக்கியிருந்தார்கள். மாடுகள் அதில் சென்று தடுமாறினால், பள்ளத்தில் விழ வேண்டிய சூழல் இருப்பதால், அந்த வழியை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஐம்பது அடிதான். அதைத்தாண்டி விட்டால் 'அப்பாடா' என்றிருக்கும்.

கப்பைக்கொம்பு எருமைதான் அதில் நடக்க சிரமப்பட்டது. இரண்டு முறை சறுக்கி, தடுமாறி ஏறியது. ஊசி கொம்பு உள்ளிட்ட எருமைகள், தத்தக்கா பித்தக்கா என்று கடந்துவிட்டது. இதைதாண்டியதும் சுடலை கோயில். இந்தக் கோயிலின் சிறப்பே அந்த பெரிய மணி.

சின்ன பீடம். உருவம் சிதைந்த சிலை மட்டும்தான் கோயில். அருகில் இட, வலப்புறங்களில் தலா ஒரு சிலைகள். எதிரில் இரண்டு பக்கமும் கற்தூண்களைக்கொண்ட பரணில் பெரும் மணி. எந்த காலத்திலோ, யாரோ இதை இங்கு கட்டியிருக்க வேண்டும். எப்போதோ இங்கு பூஜை செய்ததற்கான அடையாளமாக, காய்ந்து, கருகி நைந்துபோன பூமாலைகள், கிழந்து போன சாமி வேட்டி என சிதறி கிடந்தன.

சாமி கும்பிட்டுவிட்டு, தொடர்ந்தார்கள். இன்னும் பதினைந்து நிமிட பயணம்தான்.

'ஏல, போனதும் கம்புவோ வெட்டணும்டே' என்றான் நொடிஞ்சான்.

'வடிப்பு (சாராயம்) எப்பம்' கந்தையா.

'அதுலயே இருங்கல... எதுக்கு வந்திருக்கோம், என்ன, ஏதுன்னு கேப்பியா?, ஆட்டை அறுக்கதுக்குள்ளயே புடுக்கை சுடுத கதையா, பேசுதாம் பாரேன்'

கேசரியும் கந்தையாவும் சாராயம் காய்ச்சுவதில் கில்லாடிகள். ஊரில், பெரும்பாலானவர்கள் இந்த தொழில் தெரிந்தவர்களாக இருந்தாலும், மஞ்சப்புளிச்சேரி மாரியை போலீஸ் பிடித்து, தலையில் பானையை வைத்து தெருத் தெருவாக அழைத்து சென்றதிலிருந்து அத்தொழில் ஊரில் இல்லாததாக ஆனது. ஆனாலும் கோயில் கொடை, சொந்தக்காரன் கல்யாணங்களுக்கு திருட்டுத்தனமாக, 'வடிப்பு' நடந்து வரத்தான் செய்கிறது.

வடிப்பு எப்படியிருந்தாலும் நண்பர்களுக்காக காய்ச்சுவதில் சில கைப்பக்குவங்கள் இருக்கிறது. அந்த பக்குவத்தில் கந்தையா கெட்டிக்காரனாக இருந்தான்.

இவர்கள் போகும் குள்ராட்டியை, நெருங்கும் முன்பே குளிர் வந்து மோதியது. நடக்கும் போது உரசும், செடிகளும் ஜில்லென்றிருந்தன. மாடுகள், உடலை சிலுப்பிக்கொண்டு நடந்தன.

'இதென்ன பனி காலம் மாதிரி...' என்றான் உ.மகாளி.

'இதுக்கே இப்டின்னா... ராத்திரிலாம் எப்டி இருக்கும் தெரியும்லா'

'ரெண்டு சாக்கை போத்துனாலும் குளுரு விடாது போலிருக்கே'

'நீ ஏம்ல நடுங்குத... இந்தா போனதும் வடிச்சிர வேண்டியதாம். ரெண்டு நாளு கண்ணை பொத்திட்டு இருந்தம்னா, அடுத்தாப்ல சரக்கு புண்ணியத்துல வெது வெதுதான்'

'அதுலயே இருங்கல'
குள்ராட்டி வந்துவிட்டது. வட்ட வடிவிலான, காடு. பெரும் மைதான அளவில் இடம் விட்டு மரங்கள் தனியாக வளர்ந்து நின்றன. இந்த வட்டவடிவத்தில் மட்டும் எப்படி மரங்கள் வளராமல் இருந்தது? இது இயற்கையே செய்து வைத்திருக்கிற காட்டின் மைதானம்.

மாடுகள் அங்கு கிடத்தப்பட்டன. கடந்த முறை வந்தபோது கட்டிய உயரமான குடில் பாழடைந்தது போல் இருந்தது. குடிலின் உள்ளே பூச்சிகள் வாழலாம். அதில் ஏறுவதற்குப் போடப்பட்டிருந்த மரப்படிகள் உடைந்து கிடந்தன. அதனருகில் சில விலங்குகளின் சாணங்கள். சமீபத்தில் போட்டுச்சென்றிருக்கலாம். கந்தையா, அந்த சாணத்தின் மீது கால்களை விட்டு நின்றான். கதகதப்பாக இருந்தது.

'ஏல எல்லாரும் அருவாளை எடுத்து வாங்க' என்றான் நொடிஞ்சான்.

உ.மகாளி, தலையில் இருந்த மூட்டையை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கிடந்த எருமையின் முதுகில் சாய்ந்து உட்கார்ந்தான். எதிரில் சரிவு. சரிவுக்கு கீழே கடனாநதி ஆற்றின், கண்ணாடி தண்ணீர். அதில் அலையும் மீன்களும், காய்ந்து விழுந்த மரங்களின் நனந்த கிளைகளும் அவனுக்கு புது உலகத்தைக் காட்டின.

அடுத்தது அறியாதவரை அவரவர்களுக்கு கிடைப்பதே சுகம்.

உ.மகாளி கண்ணை அகல விரித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

குடிலின் கிழே தூண் போல இருந்த மரக்கம்பை வெட்ட ஆரம்பித்தான் நொடிஞ்சான்.

தொடர்கிறேன்.

Thursday, February 25, 2010

காடு - 11

கிடைப்பதறிந்தே தேவைகள் அதிகரிக்கிறது. பத்தையூராளை விரும்புகிற யாரையும், அவள் கவனத்தில் கொள்வதில்லை. யார் தேவை என்பதை அவளே முடிவுசெய்பவளாக இருந்தாள். இப்படியொரு பெரும் மனம் அவளிடமிருந்ததை, முக்கு கடைகளில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவள் செயல்பாடுகள் எப்படியிருந்தாலும் அவளைத் தொடரும் நடவடிகைக்களை, மீசையை திருக்கும் கீழ, மேல தெரு ஆண்கள் விடவில்லை. என்றாவது ஒரு நாள் இரங்கிவர மாட்டாளா என்பதாக அது தொடர்ந்தது.


வாய்க்காலில் துணி துவைக்கும்போதோ, ஒரு கிலோமீட்டர் நடந்து அவள் தனியாக ஆற்றுக்கு செல்லும்போதோ, அவளிடம் பேச வேண்டும் என்றே ஒரு கூட்டம் அலைந்தது.

'என்னா ஆத்துக்கா'

'பின்ன எப்படி தெரியுது'

'இல்ல கேட்டேன்'

அவ்வளவுதான், அதோடு பேச்சை முடித்துவிடுவாள். யாரிடம் தொடர வேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும். கார்சாண்டில் கடைவைத்திருக்கும் ஊழைக்காதன், அவளை கெஞ்சி, கால் கையில் விழுந்து அனுபவித்ததாகச் சொல்லியிருக்கிறான். ஊரில் அவன் இதை தம்பட்டம் அடித்ததில் இருந்து, இன்னும் பலருக்கு ஏக்கம் ஏக்கமாகவே இருந்தது.

இப்போது அவள் தன்னை மாற்றியிருக்கிறாள். மகன் வளர்ந்துவிட்டான். நான்கைந்து பசுக்கள், ஏழெட்டு செம்மறியோடு அவள் வாழ்க்கைச் சென்றுகொண்டிருக்கிறது.

கூட்டாஞ்சோறும் காண துவையலும் வயிற்றை அடைத்தாலும், இன்னும் வேண்டுமாய் இருந்தது ருசி. இங்கேயே இரவை கழித்துவிட்டு செல்ல முடிவு செய்தார்கள். இருட்டு மெல்ல சூழத் தொடங்கியது. உ.மகாளியும் கேசரியும் தீப்பந்தங்களை நான்கு பக்கம் சொருகி வைத்துவிட்டு, மணலில் படுத்தார்கள். மூன்று பேர் முதலில் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் என்பதும் பிறகு அவர்கள் முழித்துக்கொள்ள, இவர்கள் தூங்க வேண்டும் என்றும் முடிவானது.

உ.மகாளியும் கந்தையாவும் முழித்துக்கொண்டிருந்தார்கள். காட்டின் இருட்டு பயத்துக்குப் பதிலாக, ரசிக்கச் சொன்னது அவர்களை. எங்கிருந்தோ வரும் புரியாத சத்தம் இதமாக இருந்தது. கூடவே, உய்ய்ய் என்ற வண்டுகளின் ஒலியும். அருவியில் தண்ணீர் குறைவுதான் என்றாலும் சர்ர்ர் சத்தம் வந்துகொண்டிருந்தது.

இவர்கள் இருக்கும் இடத்துக்கு மேல் பக்கம், ஓநாய்களின் இரைச்சல் கேட்டது. அல்லது ஏதோ ஒன்று ஏதோ ஒன்றை அடித்து முடித்திருக்கலாம். சிறிது நேரத்தில் சத்தம் மெது மெதுவாக அடங்கி முடிந்தது. ஓநாய் இறந்திருக்கலாம். அதை எந்த மிருகம் அடித்திருக்கும் என்கிற ஆவல் உ.மகாளிக்கு. சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்தான். செடி, செத்தைகள் அசைவது கேட்டது.

'போய் பாக்குமா' என்றான்.

'பாக்குமாவா? செந்நாய் மாதிரி எதுவும் நின்னா, கொட்டைய கவ்விரும்ல, தெரிஞ்சுக்கோ'

'இன்னா, அறுவா எதுக்கிருக்கு கையில'

'ஆங்... கிழிச்சே... அது வந்து பாய்ஞ்ச பெறவு, அரிவாளை எங்க போய் எடுக்க'

'என்னண்ணே செந்நாய்க்கு இந்தாப் பயப்படு பயப்படுத'

'நீ பெரிய வீரன்தாண்டே... இந்த காட்டுக்கு ஒண்ணு ரெண்டு தடவ இல்லல, நாலு வருஷமா வந்திட்டிருக்கேன். எனக்கு தெரியாதோல... பொத்திட்டு இருப்பியா...'

'நீ ஒரு வெலங்காதவன், செரி, எவ்வளவு நேரந்தான் இப்படியே இருக்க. அவங்க தூங்குததை பாத்தா எனக்கும் தூக்கம் வந்துரும்'

'இந்தா தாயத்தை போடுவோம்'

மணலில் தாயக்கட்டத்தை வரைந்தான் கந்தையா. காய்களுக்குப் பதிலாக, வெவ்வேறு வண்ணங்களிலான கூழாங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.

வீட்டில் பீடி சுற்றும் பெண்கள், வளவில் பெரிய வீடான, வீரமணி வீட்டு திண்ணையில் இருந்துதான் சுற்றுவார்கள். கீழ், மேல், வட சுவர் ஓரங்களில் அவர்கள் உட்கார்ந்துகொள்வார்கள். தொடையில் பீடி தட்டு. இரவு ஒன்பது மணிவாக்கில் கரண்ட் அணைந்து எரியும். அதுவரைதான் பீடி சுற்றல். பிறகு தாயம் விளையாட ஆரம்பிப்பாகள்.

உ.மகாளி நேரம் போகாத நாட்களில் இவர்களோடு வந்து அரட்டையடிப்பான்.

'ஏல உச்சி, உனக்கு செக்க செவேல்னு ஒரு பொணு பாத்திரும்ல' என்பாள் சுந்தரி அத்தை.

'செவப்பு சேலை உடுத்துனவளையா?' என்று ஆரம்பிப்பாள் முத்தம்மா பாட்டி.

இவன் என்ன சொன்னாலும் ஏதாவது ஒரு கொக்கியை போட்டு வம்படிப்பார்கள். இந்த வம்படித்தலில்தான் இந்த விளையாட்டை கற்றான்.

இரண்டு மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு, வாய் பிளக்க கொட்டாவி வந்து இம்சித்தது. கந்தையா, பீடியை பற்ற வைத்துக்கொண்டான். இப்போது குளிர் அதிகமாகியிருந்தது. தீப்பந்தம் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. பின்பக்கம் வைத்திருந்த பந்தம் அணைந்துவிட்டது. மீண்டும் அதை பற்ற வைக்க சோம்பல்.

கண்ணை கசக்கி விட்டு, சாக்கில் இருந்த மாங்காயை எடுக்கப்போனான் உ.மகாளி. சாக்கின் மேல் கருநிற பாம்பு ஒன்று விஷுக்கென்று சீறி நின்றது.

தொடர்கிறேன்.

Saturday, February 20, 2010

காடு - 10

சோறு, சாம்பார், ரசம் என்றில்லாமல் காய்கறி குழம்பு கலந்த கூட்டாஞ்சோறும் காண துவையலும் ரெடியானது.


ஈயப்பாத்திரைத்தை விட மண்பானையில் செய்யப்படும் சோறுக்கு ருசி ஜாஸ்தி. பயணத்தின் பொருட்டு மண் பானையை கொண்டு வருவது சாத்யமில்லாததால், ஈயப்பாத்திரம் சோறாக்கப் பயன்படுத்தப்பட்டது.

கூட்டாஞ்சோறின் வாசம் மூக்கைத் துளைத்தது. உ.மகாளி இன்னொரு ஈயப்பாத்திரத்தில் ஆற்றிலிருந்து குடிக்க தண்ணீரும், சாப்பிடுவதற்கு தேக்கு இலைகளையும் பறித்து வந்தான்.

நொடிஞ்சான், அடுப்பிலிருந்து பானையை இறக்கும் முன், மூடியை அகற்றிப் பார்த்துவிட்டு, 'அரிசிக்கு யாருல தண்ணி ஊத்துனா?" என்று கேட்டான்.

'நாந்தான்' என்றான் உ.மகாளி.

'கூறுகெட்டவன... இவ்வளவு தண்ணியால ஊத்துவாவோ'

'நெறய ஊத்திட்டனோ... அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'

பசி, வாயின் வழியாக ஏப்பத்தைக்கொண்டு வந்திருந்தது. ஆனால், இன்னும் கொஞ்சம் அடுப்பில் கிடந்தால்தான் தண்ணீர் உறியப்பட்டு சோறு நன்றாக இருக்கும் என்பதால், மீண்டும் ஆளுக்கொரு பீடியை எடுத்து பற்ற வைத்தார்கள்.

உ.மகாளி சாப்பிட கொண்டு வந்திருந்த இலைகளை கழுவிகொண்டு வைத்தான். பாறையில் அரைக்கப்பட்ட காணத்துவையலை அள்ளி, ஒரு தேக்கிலையில் வைத்தான்.

குப்பென்று மணம். நொடிஞ்சான், அப்படியே துவையலில் ஒரு குத்து அள்ளி வாயில் போட்டான். கேசரிக்கும், கந்தையாவுக்கும் எடுக்கலாம் போலிருந்தது. இப்போதே துவையலை சாப்பிட்டுவிட்டால் சோறு இறங்காது என்பதால் மனதை நிறுத்தி வைத்தனர்.

பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.

நொடிஞ்சானும் கேசரியும் சாப்பாட்டுப் பிரியர்கள். பிரியர்கள் என்பதற்கு ருசி தேடிச் சாப்பிடுபவர்கள் என்பதான அர்த்தமல்ல. இருவரும் சொள்ள மாடன் சாமிக்கு வைக்கும் படப்பு சோறு போல, ரவுண்ட் கட்டி சாப்பிடுபவர்கள்.

அதுவும் கெடைச்சோறு என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். இதற்காகவே ஊரில் எந்த வயக்காடாக இருந்தாலும் யாராவது பக்கத்தூர்க்காரர்கள் கெடை போட்டிருந்தால் சாப்பிட கிளம்பிவிடுவார்கள்.

நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன.

போனமுறை கல்லிடைக்குறிச்சானும் அவனது தம்பியும் இங்கு கெடைப்போட்டிருந்தார்கள். 25 வெள்ளாடுகள். இரவு 7 மணி வாக்கில் தோப்பு மணலில் அடுப்பு மூட்டி சோறாக்குவார்கள். தண்ணீரோடு சேர்த்து ஆக்கும் சோறு. கூடவே அனைத்து காய்கறிகளையும் போட்டு கூட்டு மாதிரி தொட்டுக்குள்ள. இல்லையென்றால் ஈராய்ங்க துவையல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்.

அடுப்பிலிருந்து சோறை இறக்கி கொஞ்சம் ஆற வைப்பார்கள். கல்லிடைக்குறிச்சானுக்கு சுட சுட தின்றுதான் பழக்கம். ஆனால், பனையோலையை மடக்கி கூம்பு மாதிரி செய்யப்பட்ட தட்டு, சூடு தாங்காது என்பதால் காத்திருப்பான்.

வெறும் சோறும் தண்ணி, துவையல்தான். ஆனால், கெடைக்காரர்கள் பொங்கும்போதுமட்டும் அவ்வளவு ருசு. ஏனென்பது தெரியவில்லை. இருட்டு வயக்காடும் காற்றும், பனையோலை வாசமும் நாக்கை இழுக்க வைக்குமோ என்னமோ?

அதே போல ஆவலில் இருந்தார்கள் இப்போது இவர்கள்.

இதற்கு மேல் பசி தாங்காது என்று சோறு பரிமாறப்பட்டது. உ.மகாளிக்கு சோற்றில் போடப்பட்டு வெந்த மாங்காய் துண்டுகள் மீது தனி ப்ரியம். அவனுக்கு மட்டும் ஒவ்வொன்றாய் பொறுக்கி இலையில் வைத்தான்.

'ஏல நாங்கலாம் மனுசம் இல்லையால... நீயே பொடையில போடுத'

'இரிண்ணே... எல்லாத்துக்குந்தான் சேர்த்து எடுக்கேன்'

தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. மாடு கெடையில் கிடந்த இடத்தில் இருந்து ரெண்டு மாடுகள் முட்டிக்கொள்வது போலவும் சத்தம்.

'ஏல அங்கென்னன்னு பாரு'

'நீயும் வாயேன்'

சாப்பாட்டை முடிக்காமல், பாதி சாப்பிட்டவாறே சென்றார்கள். கப்பை கொம்பு பசுவும், நீட்டிக்கொம்பு எருமையும் முட்டிக்கொண்டு நின்றன.

'இதென்னல கூத்தா இருக்கு...'

உச்சி மகாளி அருகில் சென்றதும் பசு, திரும்பி அவனைப் பார்த்தது. முதுகில் ஒரு குத்து விட்டான். எருமை, துள்ளிக்கொண்டு அருகில் ஓடியது.

'இது யாரு எருமை... பத்தையூரா(ள்) மாடுதான'

'ஆமா'

'ராத்திரியானா அவளை மாதிரிதான் துள்ளிட்டு அலையுது பாரேன்'

எல்லாரும் சிரித்தார்கள்.

'ஏம், நீ, அவா வீட்டுக்கு போலயோல'

'ச்சீ... அவ, வா வான்னு தாங்குனாலும் நா போமாட்டேன்'

'ஏண்டே'

'ஒண்ணா, ரெண்டா... ஒரு ஊரே நின்னு மேய்ஞ்சிருக்கு... அதை போயி'

'த்தூ... மூஞ்சியில வக்கு'

பத்தையூரா கட்டுப்பட்டியான ஊரில் வித்தியாசமானவள். அவள் திருமணம் முடிந்து வந்த 7 மாதத்தில், அவள் கணவனாகப்பட்ட கருப்ப நம்பி, வாழைத்தோப்பில் மருந்தடித்து தற்கொலை செய்துகொண்டான். அவர்ன் இறந்ததற்கான காரணங்கள் பலவாறு ஊரில் சொல்லப்பட்டன. அதில் ஒன்று:

'அவா, ஏழு மாசமா இருக்காளாம். இந்த பய்லுக்கு அதுக்கான வழி கிடையாதமே... பின்ன எப்படி வயித்துல உண்டான்னான்னு மனசொடிஞ்சு போயி, இப்படி பண்ணிட்டானாம்".

உண்மை வெளியில் வரும் வரை உலகம் போடும் கதைகள் ஆயிரம்.

பிறகு, சில காலம் தனது அப்பா ஊரில் வசித்தாள் பத்தையூரா... அவளது பெயர் செங்கமலம் என்பது யாருக்கும் தெரியாதது.

மகன் பிறந்ததும் கணவன் ஊர்க்கு வந்துவிட்டாள். கருப்பநம்பிக்கு சொத்துகள் அதிகம்.

முதலில் அரசல் புரசலாக அவள் பற்றி வரும் செய்திகளை அதிகம் நம்ப முடியாமல் இருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற இவளும், மாடுமேய்த்துக்கொண்டிருந்த கொடுக்கு ராசுவும் ஆற்றில் உள்ள பாழ் மண்டபத்தில் இருந்து அலங்கோலமாக வருவதை சுப்பு மைனி பார்த்ததில் இருந்து அவள் பற்றிய பேச்சு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

ஊரில் ஒரு மாதிரி பேசுவார்களே என்கிற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. உடல் தேவை, உள்ளத்தை மீறுவது இயல்பு.

பிறகு, அவள் ஊரில் பல பேருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தாள். இவ்வளவுக்கும் அவள் உ.மகாளிக்கு சித்தி முறை. நொடிஞ்சான், கந்தையா, கேசர் போன்றோருக்கும் ஏதோ ஒரு வகையில் உறவு. முதலில் சொந்தக் கார பயல்களுடன் 'வாழ்ந்து' கொண்டிருந்த அவள், தெரு தாண்டி தன் எல்லையை விரித்தபோது, ஊர் பஞ்சாயத்து வரைக்கும் விஷயம் வந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவர், மற்றும் செயலாளரின் மனைவிகள், அவளிடம் பேசினார்கள்.

'இதெல்லாம் நல்லதுக்கில்ல... கேவலமாலா இருக்கு'

'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'

இன்னும் பேசினால் பெரும் பிரச்னையாக வாய்ப்பிருப்ப்பதாலும், அது சொந்தங்களுக்குள் சிக்கலை உருவாக்கும் என்பதாலும் அந்த ப்ஞ்சாயத்து அதோடு நிறுத்தப்பட்டது.

பின்னர் அவள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் தேவையாக இருந்தாள்.

Thursday, February 18, 2010

காடு - 9

பள்ளம் என்பது அருவி நீர் பட்டுத் தெறித்து குளமாக்கப்பட்ட பகுதி. முழுவதும் தண்ணீர் இல்லாமல் ஒரு ஓரமாக மட்டும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. மறுபக்கம் மணலாகவே காட்சியளித்தது. கண்ணாடியான தண்ணீரை மேலிருந்து பார்க்கும் போது, அடியில் மணல்களும் கூழாங்கற்களும் தெரிந்தன.


தண்ணீரில் பாதி முங்கிய நிலையில் உடல்கள் வீங்கிய உருவம் தெரிந்தது.

கேசரி கொஞ்சம் நடுக்கமாகி, 'ஏல இங்கரு... எவனோ செத்துகிடக்காம்" என்றான்.

எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத கந்தையா, எந்தவித ரியாக்சனையும் காட்டாமல், எட்டிப்பார்த்தான்.

பிறகு கேசரிக்கு பொடதியில் ஒரு போடு.

'உனக்கு கண்ணு எளவும் தெரியாதால'

'ஏம்'

'செத்துக்கிடக்குதது கரடி'

'கரடியா... மனுசம் மாதிரிலா தெரியுது"

'ஆக்கங்கெட்ட கூவை... நல்லா பாருல'

கண்ணைக் கசக்கி கொண்டு பார்ர்த்தான் கேசரி. மல்லாக்க கிடந்திருந்தது கரடி. அதன் கரு உருவங்கள் கரடி என்பதை தீர்மானித்திருந்தன.

நள்ளிரவில், புலி போன்ற விலங்குகள் அல்லது கொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் கடி வாங்கி கரடி இறந்திருக்கலாம் என்பது கேசரியின் நினைப்பு.

ஆனால், புலி எப்போதும் இடதுபக்கமாகத்தான் தாக்கும் என்பது ஊர் பெருசுகளின் பேச்சு. அது ஒரு போதும் வலபக்கம் அடிக்காது என்றும், தானே அடித்துதான் சாப்பிடும், இறந்துகிடப்பதை தொடாது என்பதும் பேச்சிதாத்தாவின் வாயிலிருந்து கேட்கப்பட்டவை.

பேச்சித் தாத்தா ஊரில் வீரம் செறிந்தவராக காணப்பட்டார். அவரது இளம் வயது கதைகள், அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

துப்பாக்கிகள் நகரங்களில் அறிமுகமாகியிருந்த காலத்தில், ஆழ்வார்க்குறிச்சி சின்ன ராசாவுடன் அவரும் ஒரு துப்பாக்கி வாங்கியிருந்தார்.

எப்படி சுடுவது என்பது உள்ளிட்டவற்றை சின்ன ராசா கற்றுக்கொடுத்திருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் பொதிகை மலைக்குள் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் தாத்தா. அதற்கு அத்தாட்சியாக, அவர் வீட்டு வாசலின் இரண்டு பக்கமும் மான் கொம்புகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன.

சட்டையில்லாத அவரு நெஞ்சில் ஆடும் பெரிய தங்க சங்கிலியில் சிங்கப்பல் பொருத்தியிருப்பதாக சொல்வார்கள்.

'எங்காலத்துல எல்லாம் இப்டியாடா... உங்க தாத்தாவும் நானும்தான் சேக்காளியோ. அந்தானி, வில்வண்டியை (கூண்டு வண்டி) எடுத்தம்னா, ரெண்டு மூணு நாளு ஆவும் வீட்டுக்கு வர.

ஏழெட்டு மானு, முயலுவோ, கருவாலி அது இதுன்னு அள்ளிப்போட்டுட்டு வருவோம். ஒரு தடவை, மலைக்கு மேலே வண்டி போற பாதை மாதிரி இருந்தது. தீப்பந்தத்தை வண்டியில சொருவி வச்சுட்டு அதுபாட்டுக்கு போயிட்டிருந்தோம். போனா, விடிஞ்சு போச்சு, உச்சிமலைக்கு வந்திட்டோம். சரியான காடு. பக்கத்துல தேயில தோட்டமா இருக்கு. அந்தானி வண்டிய நிறுத்தி மாட்டை அவுத்து, செத்த நேரம் படுக்கப்போட்டுட்டு, நின்னா, மலையில வாழுறவங்க ஒரு ஏழெட்டு பேரு வந்துட்டாங்க. விஷயத்தை சொன்னோம்.

சரின்னு ஒருத்தன் வீட்டுல போயி, நீத்தண்ணி குடிச்சிட்டு, பேசிட்டிருக்கோம். அவங்க பேச்சு நம்ம தமிழ் மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு.

அதுல ஒருத்தியை, உங்க தாத்தன் பாத்துட்டாம். அவ என்னடான்னா கலருன்னா கலரு, அப்படியொரு கலரு. அவளை கூட்டிட்டு போயிரணும்னு ஒத்த கால்ல நிக்காம். குடிக்க தண்ணி கொடுத்த இடத்துல அப்படிலாம் பண்ணக்கூடாதுடான்னு வந்துட்டோம்.

வரும்போதே, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு நிக்குத மாதிரி, வா வீட்டுக்குபோலாம்னு பறந்துட்டிருப்பாம்... ஏம்னா, அவனுக்கு உங்க ஆச்சி பக்கத்துல தூங்கலைன்னா தூக்கம் வராது" என்று சொல்லிவிட்டு மீசையை திருகியவாறு, பலமாக சிரிப்பார் பேச்சித் தாத்தா.

அவருக்கான காலமும், அனுபவமும் அவருக்கானதுதான்.

சமையலுக்கான வேலைகள் ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. உ.மகாளி கண்களின் தண்ணீர் வர வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தான்.

ஏற்கனவெ அங்கு அடுப்பு மூட்டியிருந்த்தால் வசதியாக இருந்தது. அவர்கள் வேலைப் பார்த்துக்கொண்டிருக்க, கந்தையாவும் கேசரியும் அருகிலேயே மணலில் படுத்தார்கள்.

'சுகமா இருக்குலா... அப்டியே தூங்கிருவேம் போலிருக்கு'

'தூங்கேன். எங்களுக்கு ஒரு பிடி சோறு மிச்சமாவும்"

'நீங்க செஞ்சாலும் செய்வியோ" என்றவாறே எழுந்தார்கள் இருவரும்.

நாலைந்து பேர்கள் ஊரில் கூடுகிற இடத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணைப் பற்றியோ, அல்லது வேறு தெரு பெண்களைப் பற்றியோ இல்லாததும் பொல்லாததுமாக கதைகள் நடக்கும்.

இப்படியானதொரு தனிமையில் அது இல்லையென்றால் எப்படி?
நொடிஞ்சான்தான் ஆரம்பித்தான்.

'கொண்டை ஐயரு வீட்டுல வேலை பார்த்தாம்லா, கருப்பையா'

'ஆமா'

'அவன், அடிவாரத்துல இருந்து ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்காணாமே'

உ.மகாளி, ஆர்வமாகி, தொடந்தான்,

'ஆமா, இந்தப்பய ஐயரு வீட்டு, தென்னை மரத்துல இருந்து காய் எடுத்துட்டு வர, வண்டியில அடிக்கடி போயிருக்காம்... முதல்ல கொஞ்சம் தண்ணிக்கொடுங்கன்னு ஆரம்பிச்சிருக்கான். பிறவு, அப்படி இப்படி பழக்கமாயிருக்கு. பொண்டாட்டிக்காரிக்கு தெரிஞ்சு, வாரியலை எடுத்து அடிச்சுருவேன்னு சொல்லி ஒப்பாரி வச்சிருக்கா. அந்தப் புள்ளய விட்டுட்டு அவனுக்கு இருக்க முடியலை. அந்தானி ஐயரு வீட்டு தொழுவுல வாடகைக்கு வச்சிருக்காம். பாதி நேரம் இவன், தேங்காய் எடுக்க, ரைஸ் மில்லுக்கு மூட்டைய தூக்கிட்டு போவன்னுதான் இருக்காம். ஆனா, ஐயரு...'

'அப்படியில்லலை... அடிவாரத்துல ஒரு நா போதை போட்டுட்டு, பிரச்னையாகி தெருவுல கிடந்திருக்காம்... தண்ணிக்குப் போன இந்த புள்ள, ஐயோ பாவம்னுட்டு மூஞ்சியில் தெளிச்சிருக்கு. அதுக்குப் பிறவுதான் உணரு வந்து, அவளை பத்தி விசாரிச்சிருக்காம்... அந்தானி தொடர்ந்துட்டு தொடுப்பு'

அடுப்பில் சோறு கொதித்து கொண்டிருக்க, கதைகள் தொடர்ந்துகொண்டிருந்தது.



நானும் தொடர்கிறேன்.

Tuesday, February 16, 2010

காடு-8

மாடுகள் சென்றுக்கொண்டிருந்தபோது, கீழே கிடக்கும் சருகுகளில் இருந்து சர்புர் சத்தம் வந்துகொண்டிருந்தது. நிழலாக மூடியிருந்த மரக்கிளைகளில் இருந்து விழுந்துகிடந்த அவற்றின் மீது அணில்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.


தூரத்தில் இருந்து, இதுவரை கேட்டிராத பல பறவை மற்றும் வண்டுகளின் சத்தங்கள் ராகங்களாய் வந்துகொண்டிருந்தன. உ.மகாளி அவற்றை ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நடந்தான்.

உயரமான மரங்களில் இருந்து தாவும் கருங்குரங்கள், மாடுகளையும் இவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சென்றன. குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் இப்படியான குரங்களை பார்த்திருக்க முடியாது. இது பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டிருக்கும் குரங்கு. சாதாரண குரங்குகளை விட இவை, அதிக சேட்டைகளை கொண்டவை.

உ.மகாளியின் தலையில் இருக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய மூட்டையை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, அவனை முன்னே விட்டு, பின்னால் வந்தார்கள தவிட்டான் உள்ளிட்டவர்கள்.

இந்த வகை குரங்குகள் எதற்கும் பயப்படாதவை. நேராக தலையில் வந்தமர்ந்து மூட்டையை தள்ளி, அள்ளிக்கொண்டு போகும் வகையறாக்கள்.

உ.மகாளிக்கு இப்படியானதொரு குரங்கு அனுபவம் ஏற்கனவே இருக்கிறது.

அக்ரஹாரத்துக்கு புதிதாக வந்திருந்த கல்யாணி டீச்சர், பின் வாசலில் நின்று மேலே பார்த்துக்கொண்டிருந்தாள். உ.மகாளி கீழ வீட்டில் பால் கறந்துகொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

சில பல முறை கல்யாணி டீச்சர், அவனை பார்த்திருந்தாலும் பேசிக்கொண்டதில்லை. அறிமுகமில்லாதவனிடம் எப்படி பேச என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.

உ.மகாளிக்கு அறிமுகங்கள் தேவையில்லை. முகத்தை பார்த்தே நோக்கம் அறிந்துகொள்ளும் அபிப்ராயன். இருந்தாலும் கல்யாணி டீச்சர், இளவட்ட பசங்களின் கனவு கன்னியாக இருந்த படியாலும் இப்படியான பெண்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்பதாலும் கொஞ்சம் துணிந்தே கேட்டான் உ.மகாளி.

'என்ன டீச்சரு மேலயே பார்த்துட்டு இருக்கீயோ"

'தேங்கா உடைச்சேன். குரங்கு தூக்கிட்டு மச்சிக்கு ஓடிட்டு. தேங்கா போனா கூட பரவாயில்லை. சேலை, ஜாக்கெட் எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டு"

'மச்சியிலதான இருக்கு. இந்தா போறேன் பாருங்க" என்ற உ.மகாளி, அவள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி. மச்சிக்கு சென்றான். அங்கு இருக்கிற அறை பூட்டி இருந்தது. அதற்கு அடுத்து, அடுத்த வீட்டின் மச்சி. அது ராசா ஐயர் வீட்டினுடையது. அங்கு அனுமதி இல்லாமல் பிரவேசித்தால் திருட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்பதால் இங்கிருந்தே அவர் வீட்டு மச்சியை எட்டிப்பார்த்தான்.

குரங்கு இல்லை. ஆனால், சிவப்பு கலர் ஜாக்கெட்டும், இரண்டு கருப்பு கலர் பிராவும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்தது. டீச்சர் இதைதான் எதிர்பார்த்தாள் என்பதால், ஆசையாக முதலில் பிராவையும் பிறகு ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு திரும்பும்போது... வேகமாக வந்து முதுகில் விழுந்தது குரங்கு. முதுகில் டர்ர்ர்ர். கொஞ்சம் பயமும், திகிலும் கலந்த உ.மகாளி மச்சியில் இருந்து எப்படி விழுந்தான் என்று தெரியாது. கிழே காயப்போட்டிருந்த மிளாகாய் வத்தலில் மீது சப்பென்று அவனின் பின்பகுதி அமர்ந்திருந்தது.

துணி காய போடுவதற்காக கட்டப்பட்டிருந்த கொடியை கிழித்தும் விழுந்திருந்தான் உ.மகாளி. பிறகு எப்படி டீச்சரின் வீட்டுக்குள் தூக்கிச்செல்லப்பட்டான். சட்டை களைந்து தூங்க வைகக்ப்பட்டான் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது. அவன் உணர்வு வந்து பார்த்தபோது, அவனது பின்பக்கத்தை ஐயோடக்ஸால் தடவிக்கொண்டிருந்தாள் டீச்சர்.

டமாலென்று அவளது கையை தட்டிவிட்டு, எழுந்தான். லேசாக வலி இருந்தது. சாரத்தை இழுத்துக்கட்டிக்கொண்டான்.

டீச்சர் அவனது முகத்தைப் பார்க்காமல் பேசினாள்

'ஐயோ நேக்கு உயிரே போயிடுச்சு... சிவ சிவா"- கண்ணை கசக்கினாள்.

'ஒண்ணுமில்ல டீச்சரு. அது முதுவுல விழுந்ததும் காலு தடுமாறிபோச்சு. லேசாதான் வலி, பரவாயில்ல".

பிறகு பலமுறை அவனது கனவுகளில் டீச்சர் வரத்தொடங்கினாள் என்பதும், ஐயோடக்ஸ் மேட்டர் அடிக்கடி ரிபீட் ஆவதும் தனிக்கதை.


வெயில் மறைய தொடங்கிவிட்டது. இப்போது அவர்கள் தோணியாறை நெருங்கி இருந்தார்கள். சின்ன அருவியும் பெரும் பள்ளமும் நிறைந்த பகுதி இது. அருகிலேயே இவர்கள் மாதிரி மாடு மேய்க்க, தேன் எடுக்க, விறகு வெட்ட வருபவர்கள் இங்கு ஏற்கனவே அடுப்பு மூட்டி சோறாக்கிய வடுக்கள் அங்கு இருந்தன.

இரண்டு பாறைகள் ஒன்றுக்கொன்று ஆங்கில ஏ எழுத்து போல சேர்ந்து குகை மாதிரி இருந்ததால், நடுவில் உட்கார்ந்து சோறாக்க வசதியாக இருந்தது. பறைகள் மீது சாக்பீசால், முத்தம்மா, செல்லத்துரை லவ் என்கிற மாதிரியான ஆர்டின் வடிவ சிம்பல்கள் அதிகமாகச் செதுக்கப்பட்டிருந்தன. இப்படியான பெயரிகளில், தான் எவள் பெயரைச் சேர்த்து எழுதுவது என்று நின்று யோசித்துக்கொண்டிருந்தான் உ.மகாளி.

காலை மதியத்திற்கு கொண்டு வரப்பட்ட பழையச்சோறு காலியானதால் இங்கு சோறாக்கிவிட்டு செல்வது என்று முடிவெடுத்தார்கள்.

அப்பகுதி முழுவதும் வீட்டில் செய்யப்படும் முறுக்கின் வாசனை வந்துகொண்டிருந்தது.

'இங்க யாரு வந்து, முறுக்கு சுட போறா" என்று உ.மகாளி, மூக்கை இன்னும் உரிஞ்சு உரிஞ்சு வாசம் தேடிக்கொண்டிருந்தான். தூரத்தில் சாய்ந்து கிடக்கிற மரத்தில் அமர்ந்து பீடிக்குடிக்கலாம் என்றிருந்தவனை, காய்கறி வெட்ட சொன்னான் தவிட்டான்.

'முறுக்கு வாசனை வருது... அங்க இங்கன்னு அலையாத... பாம்புவோ எங்கயாது கிடந்து காத்து குடிச்சாதான் இப்படி வாசனை வரும்" என்று நொடிஞ்சான் சொன்னதும் உ.மகாளிக்கு குபுக்கென வியர்த்தது.

கந்தையாவும் கேசரியும் மாடுகளை கிடையில் போட்டுவிட்டு வந்தார்கள். கால், கைகளை கழுவிவிட்டு வர அருவி அருகே செல்லும் போது, பக்கத்து பள்ளதில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

எட்டிப்பார்த்தான் கேசரி, திக்கென்றிருந்தது அவனுக்கு.

தொடர்கிறேன்.

Thursday, February 4, 2010

காடு -6

அம்மன் கோயில் கொடை நடந்துகொண்டிருந்தது அப்போது. பால் குடம் எடுத்துச்செல்பவர்கள் கூட்டமாக சென்றுக்கொண்டிருந்தனர். இவர்கள் ஒரு தெருவில் வருகிறார்கள் என்றால் அவர்கள் அடுத்து வரப்போகும் தெருவில் கரகாட்டாம் சென்றுக்கொண்டிருக்கும். தெருவில் ஏதாவது ஒரு முனையில் நின்று, கொளுத்தும் வெயிலில் வேர்க்க வியர்க்க அவர்கள் ஆடுவார்கள். மாலை குறிப்பிட்ட நேரம் வரை தெருத் தெருவாக நின்று ஆடிவிட்டு, அறைக்கு சென்றுவிடுவார்கள். பிறகு இரவு 9 மணிக்கு மேல் அம்மன் கோயில் வாசலில் நடக்கும் ஆட்டம்.

உ.மகாளி உள்ளிட்ட இளசுகள் இதுகாலத்தில், நெல்லையில் இருந்து வந்திருந்த விஜயலட்சுமி அக்கா அண்ட் பார்ட்டியின் நடனம் மற்றும் தெரியும் அங்கங்களுக்காக தவம் கிடப்பார்கள். சுத்துப்பட்டில், விஜயலட்சுமி அக்கா, கரகாட்டத்தில் பிரபலமாகியிருந்ததற்கு, அவரது அழகு முக்கியமானதாக இருந்தது.

ஊர் பெருசுகள், கொடைக்கு நாள் குறித்த நாளிலேயே, விஜயலட்சுமிக்கு அட்வான்ஸ் கொடுக்க செல்வதில் பரபரப்பாகி விடுவார்கள். இரண்டு மூன்று பேர் போதுமென்கிற அட்வான்ஸ் விஷயத்துக்கு ஏழெட்டு பேர். இந்த ஆர்வம், மேளக்காரர்களுக்கு, பந்தல் போடுவர்களுக்கு வில்லடிப்பவர்களுக்கு அட்வான்ஸ் கொடுக்கும் நேரங்களில் இருப்பதில்லை என்பதற்கான காரணம் அறிந்ததுதான்.

விஜயலட்சுமி அக்காவுக்கும் இது தெரியாமலில்லை. ஆனால், இனிமையான அவளது குரலால், பெருசுகளை கிறக்கத்தில் நடமாட விட்டிருந்தாள். அந்த பேச்சு மற்றும் சிரிப்பை தவிர அவளிடம் வேறு எதையும் எதிர்பார்க்க முடியாது.

பார்ட்டிகளோடு ஊர் வந்து இறங்கியதுமே, தனது சுய புராணத்தை, பாதுகாப்பு காரணங்களுக்காக ஆரம்பித்துவிடுவாள். இந்த ஆரம்பம், பெரும்பாலும் அதிகமான கூட்டம் இருக்கும்போதாக இருக்கும்.

'புலியூர்ல ஆட்டத்துக்கு போயிருந்தம்ணே... கேட்டேளா? ரெண்டு பயலுவோ, சும்மா கண்ணடிக்காம், இங்க வர்றியா, அங்க வர்றியான்னு அசிங்க அசிங்கமா செய்கை பண்ணிட்டிருந்தாம்... ஆட்டத்தை முடிச்சுட்டு, வெளியில வந்ததும் போட்டம் பாருங்க... அன்னைக்கு வேற அரிவாளை எடுத்துட்டு வ்ரலை. இருந்திச்சுன்னா அங்கயே பொலி போட்டிருப்பேன்'

அடுத்த நிமிடமே, பெருசுகள், 'அப்டியா தாயீ, நீ நல்லா சாத்திருக்கணும். எங்கூட்டாளி அங்க இருந்தம்னா, கண்ணை நோட்டி எடுத்திருப்பேன்' என்று சொல்லிவிட்டு இடத்தை காலி செய்வார்கள்.

இந்த முறை விஜயலட்சுமி அக்கா, அவளது உறவுக்கார பெண்ணை ஆட்டத்துக்கு அழைத்து வந்திருந்தாள். எல்லாரும் மூக்கு குத்திக்கொண்டிருந்தாலும் அவளது ஒற்றைக்கல் மூக்குத்திக்கு ஏதோ சிறப்பு இருப்பதாகவே பட்டது. பாவாடை, தாவணியில் தேவதையாக தெரிந்ததற்கு வேறு சில காரணங்களும் இருந்தன.

பகல் ஆட்டத்தில் கலந்து கொள்ளாமல், இரவு நேர ஆட்டத்துக்கு மட்டும் அவள் பயன்பாடு இருந்தது. விஜயலட்சுமி அண்ட் கோ தங்கியிருந்தது உ.மகாளியின் வீட்டுக்கு அடுத்த வீட்டில். அதாவது சூச்சமடையான் வீட்டு மச்சியில். அங்கிருந்து தலைமுடியை சிக்கெடுக்கும் வி.லட்சுமி அக்காவை பார்க்க, எதிரில் இருக்கும் பஜனைமடத்தில் ஊர்க்கதை பேசுவது போல் கூட்டம் காத்திருக்கும்.

'பசும்பால் இங்க கிடைக்கும்னு சொன்னாங்க' என்று கண்ணாடி வளையல் தேவதையின் குரல் வந்ததிலிருந்து இடத்தை விட்டு நகரவில்லை உ.மகாளி. மஞ்சளும் சிகப்பும் கலந்த நிறத்தில் அவள் இருந்தாள்.

'கொஞ்சம் பொறுக்கேளா? இன்னா கறந்து சுட சுடத் தாரேன்' என்றான் உ.மகாளி. கறக்கும் சாக்கில் கிடைத்த அவள் பற்றிய விவரம்:
பெயர், லட்சுமி. வி.அக்காவுக்கு தூரத்து உறவு. வயது ம்ஹூம்.

பாலைக்கொடுத்துவிட்டு, தாங்கமாட்டாத சிரிப்போடு உ.மகாளி சொன்னான்:
'நீங்க ரொம்ப அழகாயிருக்கீங்க'

வெட்கப்பட்டுக்கொண்டே, பெரும் புன்னகையோடு சென்றாள் லட்சுமி, வீட்டு வாசலுக்குள் நுழையுமுன் அவள் திரும்பி பார்த்தபோது, உ.மகாளி, தன்னை கிள்ளிப்பார்த்துக்கொண்டான்.

'இப்டிலாம் நடக்குமால'

இதையடுத்து மச்சியின், வெளியில் அவள் நிற்பதும் சிரிப்பதும், உ.மகாளியை காதல் பைத்தியக்காரனாக்கிக் கொண்டிருந்தது.

மாலையில் சில வீடுகளில் பால் கறந்துகொடுத்துவிட்டு, சீக்கிரமாக வீடு வந்துவிடுவான் உ.மகாளி. விஜயலட்சுமி அண்ட் கோ இங்கிருக்கப்போவது வெறும் இரண்டு நாட்கள். இரண்டாவது நாள் இரவே கிளம்ப ரெடியாகிவிடுவார்கள்.

இதில் லட்சுமியை எப்படி காதலிப்பது என்கிற யோசனையில் ஒரு பகல் கழிந்திருந்தது. விஷயம் வி.அக்காவுக்கு தெரிந்தால் சில விபரீதங்களும் நடக்கலாம் என்பதால், காதலை எப்படி சொல்லித்தொலைப்பது என்பதில் குழப்பமடைந்திருந்தான்.

'எப்பவும் வீட்டுல ஒரு நிமிஷம் நிக்க மாட்டே. இன்னைக்கு என்னடா பேரா, வீட்டையே சுத்தி சுத்தி வாரே'

செவிட்டுப்பாட்டி, இப்படிச் சத்தமாக கேட்கவும் விஜயலட்சுமி அக்காவும் லட்சுமியும் கீழே எட்டிப்பார்த்தார்கள்.

தொடரும்...