Tuesday, October 4, 2011

செல்வி சவுண்ட் சர்வீஸும் சிங்கப்பல் முத்துவும்

ஒலிபெருக்கிகள் வந்த பிறகுதான், ஊர் கெட்டுவிட்டதாகச் சொல்வார் உச்சிமகாளி தாத்தா. திண்ணையில் அமர்ந்துகொண்டு வெண்கல நிறத்திலான செவ்வக வடிவம் கொண்ட வெற்றிலைப் பெட்டியை திறந்ததும் சின்னதாக ஒரு ஏப்பம். பாக்கு, சுண்ணாம்பு கலந்த வெற்றிலை மடிக்கப்பட்டு வாய்க்குள் சென்றதும் அங்குவிலாஸ் புகையிலையை குத்துமதிப்பாக கொஞ்சம் அள்ளி போட்டு சவைத்துக் கொண்டு, எதிரில் ஒரு பார்வை. பக்கத்தில் அவரது துணைக்கு இருக்கிற கம்பர் தாத்தா, ‘நீரு சொன்னா சர்தாம்... நான் எங்க போயி கண்டேன், ஒலிபெருக்கியையும் ஊர் கெட்டதையும்' என்பார்.

சாலையின் எதிரே, சரியாக இவரது திண்ணைக்கு எதிரில் இருக்கிற வீட்டு வாசலில், ஒலிபெருக்கி குழாய்களையும் சீரியல் பல்புகளையும் சரி செய்வதற்காக கிடத்தி வைத்திருப்பான் முத்து. செல்வி சவுண்ட் சர்வீஸ் ஓனர். குருவி கூடு தலையுடன், வாயில் ஒரு வயர் துண்டை கடித்துக்கொண்டே இருக்கும் முத்துவின் சட்டைப் பையில், பேனா போல எப்போதும் ஒரு டெஸ்டர் இருக்கும். நேற்றைய தூக்கமும் நாளைய முழிப்பும் கண்களில். நொடிக்கொருதரம் இடதுகையை முதுக்குப் பின்னால் வைத்துக்கொண்டு நடப்பதும், எடுப்பதும் அவனது மேனரிசம்.

திருநெல்வேலியில் இருந்து புதிதாக வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகள், ஓரமாக அடுக்கப்பட்டிருக்கும். வட்ட வடிவத்தில் கலர் கலராக வைக்கப்பட்டிருக்கும் வயர்கள், அட்டைக் கவருக்குள் பாதுக்காக்கப்பட்டிருக்கும் ட்யூப் லைட்கள், கோபுர வடிவ சீரியல் அலங்கார செட்கள் உள்ளிட்ட பொருட்கள் உள்ளேயும் வெளியேயும் இறைந்துகிடக்கும். லுங்கியை மடித்துக்கட்டி, சிறு மரப்பலகையில் அமர்ந்துகொண்டு, தரையில் கால் நீட்டி, ஒவ்வொரு சீரியல் பல்புகளுக்கும் ஜிகினா பேப்பர்களை சுற்றத் தொடங்குவான் முத்து. சிங்கப்பல் முத்து.

இவனிடம் வேலை பார்க்கும் கிட்டு, கீழ்ப்பக்கமாகவும் அய்யன் மேல் பக்கமாகவும் அமர்ந்துகொள்வார்கள்.

‘முத்தண்ணே... கருத்தப்பிள்ளையூர்க்காரன் பாக்கிய கொடுத்துட்டானா?'-பீடியை பற்ற வைத்ததும் கிட்டு கேட்பான்.

‘அடுத்த வாரம் அங்க சடங்கு வீடு இருக்குலா, போவும்போது கேப்போம்' என்பான் முத்து. அய்யன் குழாய்களை துடைக்கத் தொடங்குவான். ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்' என்று குழாயில் வட்ட வடிவில் எழுதப்பட்டிருக்கும் எழுத்தின் பெயிண்ட் உறிந்து, சில இடங்களில் வெட்டையாக இருக்கும். அதைத் துடைக்கும்போது அய்யனுக்கு கோபமாக வரும்.

‘இதுக்கொரு பெயிண்ட் அடிக்கணும்னு சொல்லிட்டே இருக்கேன்... நீ காதுலயே வாங்கமாட்டேங்க... என்ன, ஒரு அரை மணி நேரம் ஆவுமா..?'

‘பொறுல... அடுத்த வாரம் பாப்போம்...' என்பான் முத்து.

எதிரிலிருந்து இறுமல் சத்தம் கேட்கும். கம்பரும், உச்சிமகாளி தாத்தாவும் இங்கு பார்த்துக் கொண்டிருப்பார்கள். அந்த பார்வைக்கு, ‘ஊரைக் கெடுப்பதற்கான வேலைகளை தொடங்குபவர்களே...' என்று பொருள். கிட்டு முத்துவை பார்ப்பான். முத்துக்கு சிரிப்பு வரும். ‘பாட்டையாவ வீட்டுக்குள்ள போவ வச்சிருமா?' என்பான். ‘இன்னும் செத்த நேரம் இரு' என்றபடி, ஜிகினா வேலை தொடங்கும்.

இதற்குள் ரோட்டில் மேலத்தெருவிலிருந்து பஸ்ஸ்டான்ட் செல்பவர்கள், தாத்தாவுக்கு வணக்கம் சொல்லிவிட்டு போவார்கள். அப்படி யாராவது வணக்கம் சொன்னால், லேசில் விட்டுவிட மாட்டார் தாத்தா.

‘நம்ம சூச்சாரு மவனாடே...'

‘ஆமா... மறந்துட்டேளா?'

‘ச்சே மறக்க முடியுமாடா, உன் அப்பனையும் ஒன்னையும்... தூரமா போற?'

‘இன்னா, இடைகால்ல ஒரு துட்டி வீடு.., இப்பம் ஒரு பஸ் வரும்லா..'

‘ஆமாமா... வார நேரம்தான்' என்று தாத்தா சொன்னதும், நடப்பான் சூச்சாரு மவன்.

சொத்து பத்து அதிகம் வைத்திருந்த தாத்தா எல்லாவற்றையும் மகன்களுக்குப் பிரித்துக்கொடுத்துவிட்டு, இப்போது பேச்சுத்துணைக்கு கூட ஆளில்லாமல் இருப்பவர்.

புதிதாக வாங்கியிருந்த நீண்ட மூக்கு குழாய்களில் இரண்டை எடுத்து வாசலில் இரண்டு பக்கமும் வைத்து வயரால் திருக்குவான் கிட்டு. வாங்கி வந்திருந்த இசைத்தட்டுகளில், ‘கோழி கூவுது’ படத்தின், ‘ஏதோ மோகத்தை தேடி அதன் மேல் முள்ளை வைப்பான். பாடல் தொடங்குவதற்கு முன்னான, ‘கிர்ர்ர்ர்ர்ர்' ஆரம்பிக்கும்போது தாத்தாவை பார்ப்பான் கிட்டு. அவர், ஏதோ செய்வதாக நினைத்துக் கொண்டு கம்பரிடம், ‘என்னடே செய்தானுவோ' என்று கேட்பார்.

கிர்ரென இழுத்து, பாடல் ஆரம்பித்ததும் தாத்தா, கம்பரை பார்ப்பார். அவர் உதட்டைப் பிதுக்கி, காலம் கெட்டுப்போச்சு என்பது மாதிரி கையை மேல தூக்குவார். பாடல் சத்தம் கேட்டு, பாபநாசம் கல்லூரியில் படிக்கும் மணியும், ஆழ்வார்க்குறிச்சியில் படிக்கும் உமயரும் பவுடர் அப்பிய முகத்துடன், வருவார்கள். அய்யன் அவர்களை அலட்சியப் பார்வை பார்த்துவிட்டு, கண்டுகொள்ளாமல் இருப்பான்.

முத்து, ‘ஏ அய்யா, அந்த சேரை எடுத்து போடுல' என்பான். இவன் சொன்னாலும் அவன் எடுக்க மாட்டான். ‘நான் வேலையா இருக்கம்லா... அண்ணனுவோ எடுக்க மாட்டாவோளோ?' என்று அவன் சொன்னதும், மணி, ‘நீயெல்லாம் என்னத்த உருப்பட போறலே' என்று சொல்லிவிட்டு சேரை எடுத்து வெளியே போடுவான்.

உமயரும் தானாகவே சேரை எடுத்து வந்து உட்கார்ந்துகொள்வான். இவர்கள் இப்படி உட்கார்வது பாடலை மட்டும் ரசிப்பதற்கு அல்ல. நான்காவது வீட்டிலிருக்கும் அய்யன் சகோதரி, தனது தாவணி தோழிகளுடன் பாடல் கேட்டு வாசலில் வந்து பீடி சுற்றுவாள் என்பதற்காக. அதனாலேயே அய்யனுக்கு இவர்கள் மீது கடுப்பு.

தாத்தா நகர்வது போலில்லை என்று தெரிந்ததும் குழாயை அவர் இருக்கும் திசைக்கு எதிராக திருப்பி, வால்யூமை கூட்டுவான் கிட்டு. டப் என்று இரண்டு காதையும் பொத்திக்கொண்டு இருவரும் வீட்டுக்குள் நடப்பார்கள். உள்ளே போனதும் ஜன்னலை அடைத்து மூடும் சத்தம் கேட்டதும், முத்துவும் கிட்டுவும் சிரித்துக் கொள்வார்கள், ‘பாட்டையா, நம்மளையா கொற சொல்லுது?' என்று.
முத்து எங்கு போயும் எலெக்ட்ரிக் தொழில் படித்ததில்லை. ஏற்கனவே ஊரில் இருக்கும் பாலன் சவுண்ட் சிஸ்டத்தில் டைம்பாஸுக்காக வேலைக்குச் சென்று தொழில் கற்றுக்கொண்டதன் விளைவு, ஊரில் இருக்கிற மூன்று மைக் செட்களுடன் நான்காவதாக உதயமானது ‘செல்வி சவுண்ட் சர்வீஸ்'. முத்துவின் வாயில், முன் பல் ஒன்று குழாய் கட்ட போஸ்டில் ஏறும்போது மோதி உடைந்துவிட்டது. அந்த பல்லுக்குப் பதில் தங்கப்பல் கட்ட இருப்பதாக அவன் சொல்லிக்கொண்டு அலைந்தான். அலைந்தானே தவிர, இன்றுவரை அவன் கட்டவில்லை. என்றாலும் தங்கப்பல் முத்து என்கிற பெயர் அவனுக்கு நிலைத்துவிட்டது. நிலைப்பதும் நிலையாததும் அவரவர் கர்மா சார்ந்தது.

கிட்டுக்கும், அய்யனுக்கும் எப்போதும் அந்த ஆச்சர்யம் இருந்துகொண்டிருக்கும். எங்கு போய் மைக் செட் கட்டினாலும் அங்கு ஏதாவது ஒரு பெண் முத்துக்கு தோதாகிவிடும் ஆச்சர்யம் இருவருக்கும் புகைச்சலை ஏற்படுத்தும். போனமுறை மன்னார்கோயிலில் கல்யாணவீடொன்றுக்கு செட் கட்டியிருந்தபோது, ஒரு தாவணிப் பெண், ‘அந்தப் பாட்டிருக்கா, இந்தப் பாட்டிருக்கா' என்று கேட்டுவிட்டு போனாள். கேட்டபாடலை போட்டுவிட்டு காத்திருப்பான் முத்து. கல்யாணத்துக்கு முதல் நாள் மாலை ஆரம்பித்த இந்த சுகமான தொந்திரவு, கல்யாணம் முடிந்த மறுநாள் காலைவரை தொடர்ந்தது. ஆனால், அதற்கடுத்த சில மாதங்கள் வரை கடித வாயிலாக இது தொடரும் என்பதை முத்து கூட அறிந்திருக்கவில்லை.

இதே போல தாட்டாம் பட்டிக்கு ஆறு மாசத்துக்கு முன்னால் ஒரு சடங்கு வீட்டுக்கு செட் கட்டப் போயிருந்தார்கள். மாலை நேரம் கால் கொலுசு சலசலக்க வந்தவள் ஒரு சீட்டில் நான்கைந்து பாடலை எழுதி முத்துவிடம் கொடுத்துவிட்டு, பேசாமல் தலையாட்டினாள். இந்த தலையாட்டலுக்கு பாடல்கள் எல்லாம் இருக்கிறதா என்று அர்த்தம். முத்துவும் சிரித்துக்கொண்டே தலையாட்டினான். பிறகு ஒவ்வொன்றாக போட்டுவிட்டு, சடங்கு வீட்டுக்காரர்கள் ஏற்பாடு செய்திருந்த கடையில் சாப்பிட போனார்கள். பார்த்தால் அதே கொலுசு பெண். நாலு பரோட்டா இறங்கும் முத்துவுக்கு அன்றைக்கு ஏழெட்டு புரோட்டா இறங்கியதற்கான காரணம் இன்றுவரை தெரியவில்லை. ஒரு நாள் கூத்துக்குப் பிறகு ஊருக்கு வந்துவிட்டு கடந்த சில நாட்களுக்கு முன்னால் அங்கு வேறொரு கல்யாண வீட்டுக்கு சென்றால், கொலுசு பெண், அதே சிரிப்போடு நின்றிருந்தாள். மீண்டும் அவள் கடையிலேயே சாப்பாடு.. முத்துக்கு குஷியாகிவிட்டது. இம் மாதிரியான கடும் உழைப்பை வாங்குகிற தொழில்களில், இதுபோன்ற இனிமைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.
‘நாங்களும்தான் இருக்கோம்... ஒரு குருவாங்கூட பார்க்க மாட்டேக்கே... அப்படி என்னண்ணே இருக்கு ஒங்கிட்டே?' கிட்டுதான் இப்படி கேட்டது. பக்கத்தில் இருந்த அய்யன், ‘அழுக்கு சாரமும், வேர்வை நாத்தம் புடிச்ச சட்டையும்தான்' என்றதும் முத்துக்கு சட்டென கோபம் ஏறும்.

இருந்தாலும் வெளிக்காட்டிக்கொள்ள மாட்டான். ‘இது ரொம்ப அவசியம்ல... கேள்வி கேக்காம் பாரு, போய் குழாயை அவுரு' என்று விரட்டுவான். பல்லால் வயரை கடித்து இழுத்து, அவன் கனெக்ஷன் கொடுக்கும் அழகே தனி. சில நேரங்களில் ஊர் தெருவிளக்கு எரியவில்லை என்றால், அதை சரிசெய்யும் பொறுப்பும் முத்துவுக்கு இருந்தது. வெளியூரில் வசிக்கும் உள்ளூர் வயர்மேன், இதற்காக அந்த ஊரிலிருந்து இரவில் வருவது சாத்தியமில்லாததால் இந்த பணி.

இதுதவிர, ஊரில் நடக்கிற கட்சிக் கூட்டங்கள், தலைவர்களின் பிறந்த நாள் விழாக்கள், முத்தாரம்மன், தங்கம்மன், வடக்குவா செல்வி அம்மன், மந்திரமூர்த்தி, கருப்பசாமி, சுடலை, ராமர், விநாயகர் ஆகிய சாமிகளின் கொடைகள் மற்றும் கல்யாணம், காதுகுத்து, பெயர் சூட்டு விழா, சடங்கு வீடு ஆகிய விழாக்களால் முத்து உள்ளிட்ட உள்ளூர் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் வாழ்ந்து வந்தார்கள்.

உச்சிமகாளி தாத்தாவின் மருமகள் செண்பகம், அவருக்கு நீத்தண்ணி கொடுத்துவிட்டு வரும்போது, நேராக முத்துவைப் பார்க்க வருவாள்.

‘ஒனக்கெல்லாம் எடக்கு ஜாஸ்திடே' என்பாள்.

ஒன்றுமே தெரியாதது போல, ‘என்னது சித்தி' என்பான் முத்து.

‘அவரு ஒனக்கு தாத்தா இல்லையோடே... அவரை விரட்டி விரட்டி வுடுதியாம்...'

‘அவரு சொல்லுதாரோ..? பெறவு, நாங்க ஊரை கெடுக்க வேலை பாக்கோம்னு போற வாரவோட்டலாம் ஆவலாதி சொல்லிட்டிருக்காரு...'

‘அவரு சொன்னாருன்னா அதுக்கு குழாயை திருப்பி பாட்டை வைப்பியோ... ஏல கிட்டு, வாலை சுருட்டிட்டு இருல... பெரிய மனுஷனுக்கு கொஞ்சமாவது மரியாதை கொடுக்க கத்துக்கிடுங்க' என்று சொல்லிவிட்டு போவாள்.
‘பாட்டையா, இன்னும் போட்டுக் கொடுக்கு பாரேன்' என்று கிட்டு சொன்னதும், ‘நாளைக்கு வச்சுக்கிடுவோம், பாக்கியை' என்பான் முத்து.

ஒலிபெருக்கிகள் பற்றி தாத்தா இப்படியொரு கருத்து வைத்திருந்தாலும், பாகவதர் பாடல்கள் தாண்டி, அவர் கடைசியாக பார்த்த, ‘தில்லானா மோகானாம்பாள்' பாடல்கள் அல்லது ‘திருவிளையாடல்’ வசனங்களை போட்டால் சந்தோஷமாகிவிடும் தன்மையை கொண்டிருந்தார்.

என்றைக்காவது போதையில் வரும் நாட்களின் கருக்கலில், முத்துவுக்கு தாத்தா மீது பாசம் வந்துவிடும். ‘நலம்தானா... நலம்தானா... உடலும் உள்ளமும் நலம்தானா...' என்ற பாடலை மெதுவாக ஓடவிட்டுவிட்டு கட்டிலில் சாய்ந்துகொள்வான் முத்து. எதிரில் ஜன்னல் திறக்கும் சத்தம் கேட்டதும் முத்து அவர் தெரிகிறாரா என்று பார்ப்பான். வெளிச்சத்தில் இவன் இருப்பதால், அவர் முகம் தெரியாது. ஆனால், தாத்தா ரசிக்கிறார் என்பதை அறிவான். நான்கைந்து பாடல்களுக்குப் பிறகு தூக்கம் வந்துவிடும் முத்துவுக்கு. லைட்டை அணைத்துவிட்டு படுப்பான்.

பாவூர்சத்திரத்தில் மூன்று நாள், கோயில் கொடைக்கு போய்விட்டு, மூன்று சைக்கிள்களில் குழாய் மற்றும் பொருட்களை கொண்டு திரும்பியிருந்தனர் முத்து அண்ட் கோ. சாலையை விட்டு இறங்கும்போதே தாத்தா வீட்டில் பெருங்கூட்டம். சிவலோகப் பதவி அடைந்திருந்தார் தாத்தா என்பதை அந்தக் கூட்டம் தெரிவித்துக்கொண்டிருந்தது. அவசரம் அவசரமாக பொருட்களை இறக்கிவைத்துவிட்டு வீட்டுக்குள் போனார்கள். பெரிய மீசையுடன், நெற்றியில் பட்டையடித்து கட்டிலில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தார் தாத்தா. மகன், மகள்கள், மருமகள் கீழே அமர்ந்து அழுதுகொண்டிருந்தார்கள். அவர் முகத்தில் அப்படியொரு சிரிப்புக் களை தெரிந்தது.

முத்து அவரது காலை தொட்டு கும்பிட்டுவிட்டு, திரும்பினான்.

‘நலம்தானா?' என்று தாத்தா கேட்பது போலிருந்தது.
............

6 comments:

துபாய் ராஜா said...

ஊர்க்கதையெல்லாம் சொல்லி கடைசியிலே உலக்கையால அடிச்சுப்புட்டியளே அண்ணாச்சி...

அருமையான கதை.

// இம் மாதிரியான கடும் உழைப்பை வாங்குகிற தொழில்களில், இதுபோன்ற இனிமைகளும் இல்லையென்றால் வாழ்க்கை சூன்யமாகிவிடும் வாய்ப்பிருக்கிறது.//

ஆழமான உணர்வுகளை அற்புதமாக வெளிப்படுத்தியுள்ளீர்கள்.

சித்திரவீதிக்காரன் said...

''மதுரை மாநகர மக்களால் நற்புகழ் நல்லாசி பெற்று வரும் நமது இசை இளவரசி மீனாட்சி ரேடியோஸ்'' என்ற ஒலிபெருக்கி குரலை ஞாபகமூட்டிய பகிர்வு. உண்மையில் ரேடியோ கட்டும் போது அந்தத் தாத்தாவை போல எரிச்சல் பட்டாலும் நமக்கு பிடித்த பாடலை கேட்கும் பொழுது கிடைக்கும் மனநிறைவே தனி. அற்புதமான பகிர்வு. நன்றி.

ஆடுமாடு said...

''ஊர்க்கதையெல்லாம் சொல்லி
கடைசியிலே உலக்கையால
அடிச்சுப்புட்டியளே அண்ணாச்சி..."

என்னைக்காவது ஊர்க்காரங்க
இதைப் படிச்சாங்கன்னா,
என்னைய உலக்கையால
அடிச்சிருவாங்கன்னு நினைக்கிறேன்.

நன்றி ராஜா சார்.

ஆடுமாடு said...

சித்திரவீதிக்காரன் நன்றி

க.பாலாசி said...

அருமையான படைப்பு.. முத்துவுக்கும் தாத்தாவுக்குமுள்ள ஒரு மெல்லிய பாசப்பிணைப்பு நலந்தானா பாட்டுடனே தெரிகிறது. எப்போதும்போல் உங்களின் மண்வாசனை...

ஆடுமாடு said...

நன்றி பாலாசி.