Showing posts with label குறிப்புகள். Show all posts
Showing posts with label குறிப்புகள். Show all posts

Thursday, May 20, 2010

இடையில் சில குறிப்புகள்

ஒரு வருடத்துக்குப் பிறகு ஊருக்குப் போவது என்பது கொஞ்சம் அதிகப்படியான சந்தோஷத்தை தந்திருந்தது. கேபினுக்குள்ளும் கம்ப்யூட்டருக்குள்ளும் அடைந்துகொண்ட வாழ்க்கையின் பிரதானம் வருவாய் மட்டுமே. இதை தாண்டிய மகிழ்ச்சிகளை, தந்துவிடுவதான பாவலாவை, சினிமா பார்ட்டிகளும், ஈசிஆர் விசிட்டுகளும் ஏகாந்தமாய் செய்கின்றன.


தொழில் நிமித்தம் நடக்கின்ற இக்காணிக்கைகளை தாண்டி, அடிநெஞ்சில் அம்மணமாக எல்லாருக்குள்ளும் உலவி கொண்டிருக்கிறது பிறந்து வளர்ந்த ஊரும், பிஞ்சில் ஆடிய நினைவுகளும்.

டிவியில் ஓடுகிற--, வயக்காட்டையும் ஆற்றையும் தோப்புகளையும் கொண்டு செல்கிற ஏதாவதொரு கிராமத்து பாடல், உடைத்துவிட்டு போகிறது இப்போலி வாழ்வை. பிழைப்பின் நிமித்தம் தங்கிவிட்டாலும் எல்லோரின் சட்டைப்பைக்குள்ளும் கிராமம், சம்மணம் போட்டு அமர்ந்திருக்கிறது உறங்கிவிடாமல்.

ஆடி அசையும் குளிர்சாதன, தூங்கும் வசதிகொண்ட பேரூந்தில் திருநெல்வேலிக்கு ஏறிய போது, மணி இரவு 9.00. காலையில் 7.30க்கு நெல்லை புது பஸ்டாண்ட் வந்திருந்தது.

பிடித்து வளர்த்த மைனா குஞ்சுகளும், கிளிகுஞ்சுகளும் கண்களின் பறக்க, வளர்த்த வெள்ளாட்டு குட்டியில் முகம் புதைத்து ஆடிக்கொண்டிருந்தது மனசு. அம்பாசமுத்திரம் பஸ் பிடித்து, குட்டித் தூக்கம்.

இறங்கி,கொட்டாவி விட்டுக்கொண்டே, டவுண் பஸ்சுக்கு காத்திருந்த போது, கேட்டது குரல்.

'நீங்க ஆடுமாடுதானே'

இதென்ன கூத்தா இருக்கு என நினைத்துவிட்டு, 'ஆமா, நீங்க'

'நான் ராஜா, துபாய் ராஜா'

'அட, எப்படி சார், முகமே தெரியாம, இவ்வளவு கரெக்டா என்னை அடையாளம் கண்டீங்க?'

'உறவினர் ஊருக்கு போறாங்க, பஸ் ஏத்த வந்தேன். திடீர்னு பார்த்தா பேக்கோட நின்னீங்க. போன வாரமே சொன்னீங்கள்ல, இன்னைக்கு வருவீங்கன்னு. அதனால, குத்து மதிப்பாதான் கேட்டேன்'

சில நிமிட பேச்சுக்குப் பிறகு, அவரவர் பாதையில் பிரிந்தோம்.

எனக்கு இன்னும் ஆச்சர்யமாகவே இருக்கிறது!

................................................

புறாக்கூண்டு வீடுகளில் வாழ பழக்கிவிட்டிருக்கிறது சென்னை. வீடு மாற்றும் பொருட்டு, (தூசிகளோடு) அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களை ஏதாவது லைப்ரரிக்கு கொடுத்துவிடுவது என்று 3 அட்டைப்பெட்டிகளை ரெடி செய்து அடுக்கி வைத்தேன். எனக்கே ஆச்சர்யமாக இருந்தது. 527 புத்தகங்கள்! வார இதழ் ஒன்றில் வேலை பார்த்தபோது விமர்சனங்களுக்காக வந்த புத்தகங்கள் அதிகம். ஒவ்வொன்றாக எடுத்துக்கொண்டிருந்தபோது, கண்ணில் பட்டது சு.சமுத்திரத்தின் வாடாமல்லி.

'ஏ அய்யா, நான் சுத்துன ஊரைத்தானே நீயும் எழுதத... ஒரு நாளு போன் பண்ணிட்டு வீட்டுக்கு வா. நிறைய பேசுவோம்' என்ற சமுத்திரம், 'தோழர்' கதைக்காக பெரிய கடிதம் ஒன்றை அனுப்பியிருந்தார். அதை படித்துவிட்டு அவரது அனைத்து புத்தகங்களையும் மொத்தமாக படித்துவிடுவதென முடிவு செய்து, ஆச்சர்யத்தின் ஆழ்ந்தேன். இன்னும் பல நினைவுகள் வந்து வந்து சென்றது.

அவர் இறக்குமுன் கடைசியாக பேசியது என்னிடமாகத்தான் இருக்கும்.

இதே போல இன்னொருவர் எழுத்தாளர் கந்தர்வன்.

'பேசக்கூடாதுன்னு டாக்டரு சொல்லியிருக்காரு. இவரு பாட்டுக்கு போன்ல பேசிட்டிருக்காருப்பா... கொஞ்சம் சொல்லேன்' என்ற அவரது மனைவியின் கரிசனையை அவர் பொருட்படுத்தவே இல்லை.

அடுக்கி வைக்கப்பட்டிருக்கிற புத்தகங்களில் நினைவுகளும் புதைத்திருக்கிறது.

Friday, July 17, 2009

கொஞ்சம் அச்சமும் காதல் குறிப்பும்

சினேகாவின் அழகான புகைப்படங்கள் தந்த தாக்கத்தில் 'அச்சமுண்டு அச்சமுண்டு' பிரிவியூக்கு கொஞ்சம் ஆசையாகவே சென்றிருந்தேன். இயக்குனர் அருண் வைத்தியநாதன், முன்னாள் பதிவர் என்பதாலும் 'நல்லா எடுத்திருப்பான்' என்று டுபுக்கு எப்போதோ சொன்ன ஆவலில் இன்னும் கூடியிருந்தது எதிர்பார்ப்பு. பிரசன்னா, சினேகா அமெரிக்க தம்பதி. எட்டு வயது குழந்தை. அவளை கடத்த துடிக்கும் வில்லன். இவர்களைச் சுற்றிதான் கதை. படத்தின் மேக்கிங். ஒளிப்பதிவு அருமையாக வந்திருக்கிறது. சுவாரஸ்யமான வசனம் ப்ளஸ். ப்ராட் செமின்னாப், பின்னணி இசையில் பின்வாங்கிவிட்டதால் பட இடங்களில் உணர்ச்சியற்று இருக்க வேண்டியிருக்கிறது. கிளைமாக்ஸ் சப்பென்றிருக்கிறதே என்று இயக்குனர் ஒருவரிடம் கேட்டேன். வழக்கமா நம்ம தமிழ் படங்கள் பார்த்து, கிளைமாக்ஸ்ல ஷாக் வேணும்னு பழகிட்டோம்ல என்றார்.
சரிதான் என்று பட்டது.
அச்சம் வெல்ல வாழ்த்துகள்.

...........................

பாடலாசிரியர் எஸ்.ரா
எஸ்.ராமகிருஷ்ணனின் எழுத்து, மயக்கும் தன்மை கொண்டது. அவரது சின்ன விவரிப்பும் ஜில்லென்று, மனதை காட்சிக்குள் செலுத்தும் மாயம் கொண்டது. எல்லாரையும் போலவே நானும் அவரது எழுத்துக்கு ரசிகன். ரசிகன் என்ற பதம் கெட்டவார்த்தையாக ஆகி இருப்பதால் அதீத வாசகன். இப்போது, பாடலாசிரியர் ஆகியிருக்கிறார். மனுஷ்யபுத்திரன் உன்னைப்போல் ஒருவனில் முந்திக்கொண்டார். இப்போது நாஞ்சில் நாடன், எஸ்.ரா, ஜெயமோகன் மூவரும் டியூனுக்கு பாட்டெழுதியிருக்கிறார்கள். இளையராஜா இசை அமைத்துள்ள அந்த படம் 'படித்துறை'. (இந்த தலைப்பை கேட்டாலே சாணக்கியாவின் கதைதான் ஞாபகத்துக்கு வருகிறது). எழுத்தாளர்கள் சினிமாவுக்கு வருவது ஆரோக்கியமான விஷயம்தானே.
............................

காதல் குறிப்பு

'இன்னும் பத்திரமாகவே இருக்கிறது உடைந்து போன உன் கண்ணாடி வளையலும் என் காதலும். வெயில் கொழுத்தும் கோடையில் ஆற்றருகே இருக்கிற என் தோப்பில் நடந்தது அது. மணல்கள் மூடி இருக்கும் சின்ன தென்னையில் ஏறி கொண்டேன் நான். கை பிடித்து மேலேறினாய் நீயாய். தடுமாறி விழபோனபோது என் கால்களைப் பிடித்திருந்த நேரத்தில் உடைந்தது அந்த சிவப்பு நிற கண்ணாடி வளையல்..."-
-----இப்படி எழுத ஆரம்பித்த நேரத்தில், டெக்ஸ்டாப் அருகில் இருந்துகொண்டு தட்டு தடுமாறி வாசித்தான் பெரிய மகன்.

'ஒண்ணுமே புரியலைப்பா'
மவுனத்தை பதிலாக்கிவிட்டு புள்ளி வைத்தேன்.
புரியாததெல்லாம் புரியாததல்ல.
....................................

மூன்றாம் கை

சமீபகாலமாக இப்படியொரு கனவு வந்து அநியாயத்துக்கு இம்சை பண்ணுகிறது. நள்ளிரவில் திடுக்கிட்டு எழுந்து ரெண்டு கிளாஸ் தண்ணீர் குடித்துவிட்டு படுத்தாலும் மீண்டும் அதே கனவு. கனவுகள் ஆழ்மன எச்சம் என்றாலும் இப்படியொரு கனவு எப்படி ஆழ்மன நினைப்பாக இருக்க முடியும். கடந்த வாரம்தான் முதன் முதலில் இப்படி வந்தது. அதாவது நெஞ்சில் இருந்து ஒரு கை முளைத்து, தோசை சாப்பிடுகிறது. முதுகு சொரிகிறது. மற்ற ரெண்டு கைகளும் செயலலிழந்து விட்டன. எதிர்த்த வீட்டுக்காரனுடன் வாய்ச்சண்டையில் இருக்கும் போது படாரென்று எழுந்து குத்து விடுகிறது. இதென்னா விபரீத கை! ஒரு நாளோடு இந்த கனவு போய் தொலைந்தது என்று விட்டால், மூன்று நாட்களுக்கு பிறகு மீண்டும். இப்போது இன்று காலையும். ஏதாவது மனநல மருத்துவரிடம் என்னை காண்பிக்க வேண்டியிருக்குமோ என்னமோ?
.......................

Thursday, August 14, 2008

சத்யமும் சில குறிப்புகளும்

நண்பன் இயக்கியதாலும், விஷால் என்னிடம் சொன்ன பில்டப்பாலும் பார்க்க நேர்ந்தது 'சத்யம்' படத்தை. வித்தியாசமான கதை களைத்தை சிந்திக்கும் அறிமுக இயக்குனர்களுக்கு மத்தியில் ஆக்சன் குப்பைக்குள் அகப்பட்டுக்கொண்ட நண்பனுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்.

முதல் பாதியில் குழந்தைகளுடன் நயன் அடிக்கும் சின்ன சின்ன விஷயங்களை ரசிக்க முடிகிறது. வில்லன் என்ற பெயரில் கோட்டா சீனிவாச ராவ் பேசும் ஹைபீச் வசங்களில் காது ஜவ்..கிர்ர்ர்! (வில்லன்னா கத்திப்பேசணும்னு ஏதாவது விதி இருக்கா?) கன்னட ஹீரோ உபேந்திராவின் கேரக்டர் நன்றாக இருந்தாலும், மூன்று பேரை கொன்றுவிட்டு அவர் வெளியில் ஜாலியாக நடமாடுவது எப்படி என்றெல்லாம் கேட்கக்கூடாது. போலீஸ் பற்றி விஷாலும் அவரும் பேசும் வசனங்கள் சுவாரஸ்யம்.

'பத்து வருசத்துக்கு முன்னால நான் பிராத்தல் கேஸ்ல உள்ள தள்ளினவ, இப்ப அமைச்சர். அவளுக்கு நாம சல்யூட் அடிக்கணும்? கேவலமா இல்ல'

ஆனால் 'போலீஸ்னா...' என்று ஆரம்பித்து விஷால் எடுக்கும் லெக்சர் கொட்டாவி. சினிமா விஷூவல் மீடியம் என்பதை எப்போதுதான் புரிவார்களோ தெரியவில்லை. கிளைமாக்ஸில் 20 நிமிடத்திற்கு வசனம் பேசியே கொல்கிறார்கள்( தெலுங்கு வாடை). வெளியில் வந்தும் மனதில் நின்றவர் உபேந்திரா மட்டுமே.

சத்யம் வெல்ல வாழ்த்துகள்!

.........


ஒவ்வொரு வருடமும் தவறாமல் வந்துவிடுகிற சுதந்தர தினம் ஏதாவதொன்றை ஞாபகப்படுத்தி போகிறது. ஒரு நாள் லீவுக்காக வீட்டுக்குள் அடைபட்டிருந்த பள்ளி காலங்களில் ஆரஞ்சு வில்லைக்காக கொடியேற்றம் போவ விரட்டுவதுண்டு அம்மா. 5 பைசா ஆரஞ்சு வில்லை அப்போது பெரிய விஷயம் அம்மாவுக்கும் எனக்கும்.

ஒரு சுதந்திரதினத்தன்று கோயில் கொடைக்கு வரி கொடுக்காததற்காக, வீட்டிலிருந்த பித்தளை குடம், ஊர்பஞ்சாயத்தால் தூக்கி செல்லப்பட்டது. குடத்திலிருந்த தண்ணீர் வாசலில் கொட்டப்படும்போது என் கால்களை நனைத்து சென்ற தண்ணீரில் அம்மாவின் கண்ணீரே அதிகம். ஒரு சுதந்தரத்தினத்திற்கு முன் வந்த ஜாதி சண்டையில் என் வீட்டின் ஓடுகள் அடித்துநொறுக்கப்பட்டன. வேப்பமர நிழலில் கோலிவிளையாடிபடியே அம்மாவுடன் சுதந்திரத்தை கொண்டாடிய அனுபவம் யாருக்கும் கிடைத்திருக்காதது.

பத்தாவது படிக்கும் போது வந்த சுதந்திரத்தினத்தன்று மாமா வாங்கி கொடுத்த சைக்கிள் திருடுபோனது. அதை கண்டுபிடிக்க, 50 ரூபாய் கேட்ட ஏட்டின் சிரிப்பு இன்னும் கண்ணுக்குள் நிற்கிறது.

இப்போதெல்லாம் சுதந்திரத்தினத்தன்று இம்மாதிரி சம்பவங்கள் நடைபெறுவதில்லை. பீடி சுற்றும் அம்மாவுக்கு இருமல் அதிகமாகியிருக்கிறது. பெரிய மகன் படிப்புக்காக வீட்டை விலை பேசுகிறாள் அக்கா. வாங்கிய மனைக்கான பட்டாவுக்காக வருடக்கணக்காக அலைந்து கொண்டிருக்கிறேன் நான். அடுத்த வருடமும் வரும் சுதந்திரதினம்!

................................

இரண்டு மாதத்துக்கு முன்னால் நண்பருடன் இலங்கை செல்ல நேரிட்டது. யுத்த பூமியில் நான்கு நாள். விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள ஹோட்டல் தாஜ்க்கு போவதற்குள் ஏழு இடத்தில் செக்கிங். ஒவ்வொரு இடத்திலும் 'வி ஆர் பிரம் இண்டியா' ரிபீட். கூடவே பாஸ்போர்ட்டையும் காண்பிக்க வேண்டும். எந்த காரண காரியமும் இல்லாத பயணம் என்பதால், ஒரு வேனையும் டிரைவரையும் எங்களுடன் இருக்க உதவியிருந்தார் உள்ளூர் நண்பர்.

கொஞ்சம் தூங்கிவிட்டு எழுந்தால் இருட்டியிருந்தது. அருகிலேயே கடற்கரை. ரத்த வாடை வீசும் காற்றுவாங்க போகலாம் என்று சென்றேன். என் குர்தாவும் லேசான தாடியும் அந்த ஆர்மி மேனுக்கு ஏதாவது சந்தேகத்தை ஏற்படுத்தியிருக்க வேண்டும். என்னை தவிர அந்த கடற்கரை ரோட்டில் யாருமில்லை. நான்கைந்து ஆர்மி வாகனங்களைத் தவிர. துப்பாக்கியுடன் வந்த ஆர்மிமேன், என் முகத்தைப் பார்த்தான். விவரம் சொன்னேன். எட்டு மணிக்கு மேல இங்க சுத்த கூடாது என்று சொல்லப்பட்டது. பக்கத்து நாட்டு அதிகாரத்துக்கு பயந்து கடற்கரையை அறையின் ஜன்னலில் இருந்துதான் பார்த்தேன்.
பாவம் உள்ளூர் மக்கள்.

காலையில் கண்டி பயணம். போகும் சாலையெங்கும் துப்பாக்கி தாங்கிய ராணுவத்தினர். ஒரு இடத்தை கடக்கும்போது, ஒரு டேப் போட்டு ரோட்டை பாதியாக்கியிருந்தனர். இரண்டு பேர் சுட்டுக்கொல்லப்பட்டார்களாம். வேதனை மனதுள் எழுந்து அடங்கியது. கண்டி பொட்டானிக்கல் கார்டன் பெரியது. உள்ளே செல்ல செல்ல போய்க்கொண்டே இருந்தது. ஒவ்வொரு மரத்தின் அடியிலும் தவிக்கும் காதலர்கள் தங்கள் தாகத்தை தணித்துக்கொண்டிருந்தார்கள். சொல்ல, எழுத ஆயிரம் இருந்தாலும் இப்போது வேண்டாம். மீண்டும் ஒரு முறை அங்கு செல்ல வேண்டும். யுத்தம் இல்லாத, ஆர்மீ இல்லாத நாட்டில், என் மக்களை பார்க்க. அவர்களிடம் பேச!
முடியுமா?