Thursday, March 25, 2010

வேப்ப மரமும் ஆத்தாவும்

'ஏங் கண்ணுக்கு ஒரு மாதிரி தெரியுது செல்லத்தாயி. ஒந்தெருவுக்குள்ள இந்த வாரம் பூரா யாரயும் அங்க இங்கன்னு சுத்த சொல்லாத. கையில பெட்டிய வச்சுக்கிட்டு, பரக்க பரக்க பார்த்துட்டு ஒருத்தன் வாராம். யார கொண்டு போவ போறாம்னு தெரியலைய... ஆத்தா ரெண்டு நாளா இதைதான் கண்ணுல காட்டிட்டு இருக்கா''


-அம்மா இப்படிச் சொன்ன சில நாட்களில் கீழத்தெரு ராஜகோபால் மாமா வெட்டுப்பட்டுக்கிடந்தார் கோரமாக. அம்மா மீதான முதல் பயம் இதிலிருந்துதான் ஆரம்பமாயிற்று.

பொதுவாக எல்லாரையும் போல அம்மா குறி சொல்வதில்லை. எப்போதாவது திடீரென்று தோன்றியதை , தன்னைத் தேடி வருகிறவர்களிடம் சொல்வாள். இப்படி ஏதாவது தோன்றிய நாட்களில் காலையிலேயே எழுந்து கன்னத்தில் கை வைத்து வாசலில் எதையோ இழந்தது மாதிரி உட்கார்ந்துகொள்வாள். முகமெல்லாம் சோகம் தாங்கி, 'யாருக்கு என்ன நடக்கப் போவுதோ தெரியலயே?' என்பாள் வருத்தமாக.

'எங்கண்ணுல காமிச்சுட்டால ஆத்தா. நான் இதை எங்க போயி சொல்ல.. ஏ... ஆத்தா..."
புளியமரத் தெருவில் கூனையன் பாம்பு கடித்து செத்தபோது, அம்மா இப்படித்தான் ஒப்பாரி வைத்தாள். பிறகு, ராஜா அய்யர், காக்கா வலிப்பு வந்து தெப்பக்குளத்தில் விழுந்து இறந்துபோன விளக்கெண்ணை காரி புருஷன் உள்ளிட்டோர்களின் கொடூர சாவுகளை அம்மா முன்கூட்டியே குறிப்பால் உணர்ந்திருக்கிறாள்.

எப்படி கொடூரங்களை மட்டும் அவளால் உணறமுடிகிறது?

'எனக்கென்ன தெரியும், ஆத்தால்லா சொல்லுதா" என்றாள் ஒருநாள்.

'ஆத்தான்னா' என்று கேட்கலாம் போலிருந்தது. ஏதாவது ஏசிவிட்டால் என்னசெய்வதென்று விட்டுவிட்டேன்.

செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் வீட்டுத்தோட்டத்தில் நிற்கும் வேப்பமரத்தின் முன் அம்மா சாமி கும்பிடுவாள்.'ஆத்தா எல்லாரும் நல்லாருக்கணும்" என்பது அவளது வேண்டுதல். சில நேரங்களில் அருள் வந்து சாமியாடுவாள் இங்கே. கால்கள் தள்ளாடி கீழே விழுவது போல் சாய்ந்து சாய்ந்து...ச்சே. அம்மாவை பார்க்க பாவமாக இருக்கும். இதற்கு பிறகு அம்மா கண்ணீர் விடு அழுவாள். ஏன் இந்த அழுகை என்பது எனக்குத் தெரியாது.

வேப்ப மரம் எப்படி ஆத்தா ஆனது? இது விஷயமாக உடன் படிக்கும் மேல வீட்டு முத்துசாமிக்கும் எனக்கும் சண்டை வந்திருக்கிறது. வேப்பமரத்தில் பொம்பளைசாமிதான் இருக்குமென நானும், ஆம்பளைசாமிதான் இருக்குமென அவனும் சொல்ல பேச்சு முற்றி, அவனது புது சட்டையை கிழித்துவிட்டேன் நான். இதன் காரணமாக அம்மாவிடம் நான் வாங்கிய அடிகள் வேறு விஷயம்.
சாமி விஷயத்தில் அம்மாவை மிஞ்ச முடியாது. ஒவ்வொரு கோயிலாக என்னைக் கூட்டிப்போயிருக்கிறாள். இது இசக்கியம்மன், இது சாத்தூரு மாரி, இது காளி என ஒவ்வொரு கோயிலுக்கும் ஏதாவதொரு விசேஷத்திற்கு ஆஜராகிவிடுவாள்.

பெரிய தெரு நாராயணசாமி கோயிலுக்கும் பச்சேரி நாராயண சாமி கோவிலுக்கும் சென்று வந்தபிறகுதான் அம்மா குறி சொல்ல ஆரம்பித்தாள். முதலில் இந்த கோயில்களில் குறி கேட்கத்தான் சென்று வந்தாள். ஒரு நாள் பெரிய தெரு சாமியார்,'ஏம்மா, ஒனக்குதான் எல்லாமே தெரியுதம்மா... நான் என்ன சொல்ல?' என்று சொன்ன பிறகு, அம்மா அந்த கோயில்களுக்கு சென்றதில்லை.
வேப்பமரத்துக்குப் பிறகு அம்மா சாமியாடும் இடம் மந்திரமூர்த்தி கோயில். மூன்று நாள் கொடைக்கு மூன்று மாதம் விரதமிருப்பாள் அம்மா. இம்மாதிரியான சமயங்களில் அம்மா மீதான பயமும் மரியாதையும் அதிகரித்துக்கொண்டே போனது. ஆத்தா பற்றி அவளிடம் எடக்கு மடக்காக கேட்டுவிடக்கூடாது என்பதை கொண்டிருந்தேன்.

அக்காவிடம் கேட்டாலென்ன?

கோழி கூட்டுக்கருகில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தவளிடம், 'யக்கோவ், ஆத்தான்னா எந்த சாமி?'என்று கேட்டேன்.

என்னை முறைத்துப் பார்த்தவள், ஈரக்கையை பாவாடையில் துடைத்துவிட்டு, 'இது ரொம்ப அவசியம்ல... போட்டம்னா!. போய் புஸ்தத்த எடுத்டு படி... கேள்வி கேக்காம் பாரு கேள்வி' என்றாள். ஏண்டா கேட்டோம் என்றாகிவிட்டது. வீட்டுக்கு வரும் சொந்தக்கார சேக்காளிகளிடமெல்லாம் கேட்டுவிட்டேன். யாருக்கும் தெரியவில்லை.

போனவாரம் அம்மா என்ன நினைத்தாளோ தெரியவில்லை. வேப்ப மரத்தின் எதிரில் வளர்ந்திருந்த புற்களையும் செடிகளையும் வெட்டிவிட்டு, அதில் பந்தல் போட்டுக்கொண்டிருந்தாள்.தென்னம் மட்டைகளை அவளே பின்னி, கம்புகளையும் அவளே நட்டுக்கொண்டிருந்தாள். 'நான் அவளுக்கு சணல் உள்ளிட்டவற்றை எடுத்துக்கொடுத்துக்கொண்டிருந்தேன்.

ஏன் இந்த திடீர் பந்தல் என்பதற்கு செவ்வாய்க்கிழமை மாலைதான் விடை தெரிந்தது. தெருவில் இருந்த தாவணி போட்ட அக்காள்களும் பொம்பளைகளும் பந்தலில் கூடியிருந்தார்கள். வேப்ப மரத்தின் வலப்பக்கம் இருந்த பொந்துக்கு அருகில் விளக்கு ஏற்ற்ப்பட்டிருந்தது.

வீட்டுக்குத் தூரம் என்பதால் அக்காள் இங்கு வரவில்லை. தூரமான அக்காள்கள் கோழிக்கூட்டில் அமர்ந்து பீடி சுற்றிக்கொண்டிருந்தனர்.

விளக்கின் அருகில் வைக்கப்பட்டிருந்த டப்பாவிலிருந்து எல்லாருக்கும் திருநீறை எடுத்துப் பூசினாள் அம்மா. பிறகு, கண்ணை மூடிக்கொண்டு, 'யாரோ கொழந்த வேணும்னு வந்திருக்காவள" என்று ஆரம்பித்தாள்.,

மல்லிகாத்தை வந்து உக்கார்ந்தாள்.

இப்படி எல்லோருக்கும் குறி சொல்லிக்கொண்டிருந்த அம்மா, எனக்கோ அக்காவுக்கோ சொன்னதே இல்லை.

மேல தெரு நாராயண சாமி கோயில் திருவிழாவுக்காக, அம்மாவும் அக்காவும் சென்றுவிட, நான் வீட்டில் இருந்தேன். முத்துசாமி, கோலிக்காய் விளையாட அழைத்தான்.

'கணக்கு போடனுமடே... தமயந்தி டீச்சரு அடிப்பால்லா'

'நாளைக்கு அம்பி பய போட்டுட்டு வருவாம்ல. அவனப் பாத்து எழுதிக்கிடலாம்'

சரி என்று வீட்டுக்கு எதிரில் மண்ணில் குழி தோண்டி ஆட்டம் ஆரம்பமானது.

எனக்கு முன்பக்கம் அமர்ந்திருந்த அவன், என்னைப் பார்த்து கத்தினான்.'ஏல பாம்பு'

நான் ஓடி வருவதற்குள், ஒரு பெரிய கல்லை எடுத்து, அதன் தலையில் நச்சென்று போட்டான். அவ்வளவுதான், கல்லின் அடிப்பாகத்தில் அதன் தலை நசுங்கி கிடக்க, வாலும் உடல் பகுதியும் கல்லைச் சுற்றிக்கொண்டிருந்தன.

இதற்கிடையில் காம்பவுண்ட் போலான மண்சுவரிலிருந்து தெருவில் போனவர்கள் பார்த்து வீட்டுக்குள் வந்துவிட்டனர்.

'யார்டே கொன்னா'

'முத்துதான்'

'நல்லது பண்ணின, இல்லன்னா தெருவுலதான அலைஞ்சிட்டிருக்கும்'

'ஆமாப்பா'

'ஏய் இது நல்லது பாத்துக்கோ, பால் ஊத்திதான் பொதைக்கணும்'

வீட்டில் இருந்த கூட்டத்தை ஒதுக்கிட்டு அக்காவும், அம்மாவும்.'என்னது என்னது' என வேக வேகமாக வந்தார்கள்.

கெதக் என்று ஆன அம்மா, தலையை பிடித்துக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.

'ஆத்தாள கொன்ன பாவி உருப்புடுவானா?'

26 comments:

இரும்புத்திரை said...

அப்புறம் அம்மா குறி சொன்னாங்களா..உங்களுக்கு அடி விழுந்ததா..

Chitra said...

இப்படி எல்லோருக்கும் குறி சொல்லிக்கொண்டிருந்த அம்மா, எனக்கோ அக்காவுக்கோ சொன்னதே இல்லை.

.......... why?why?why????

:-)

மணிஜி said...

யதார்த்தம் நண்பரே..

பத்மா said...

இந்த மாதிரி பெண்மணிகளின் உள் மனதில் என்ன ஓடும்? எப்பவும் நான் நினைப்பதுண்டு.ஒரு விதத்தில் பாவம் இவர்கள்
எப்பவும் போல நல்லஇடுகை

க ரா said...

அருமை. அருமை.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

எல்லாத்தையுமே ஆத்தாவா பாத்திருக்காங்க உங்களுக்கு கிண்டலாக்கும் இந்தகதை.. :)

☼ வெயிலான் said...

நல்ல கத அண்ணாச்சி! பழசு மாதிரி இருக்கே?

ஆடுமாடு said...

//அப்புறம் அம்மா குறி சொன்னாங்களா..உங்களுக்கு அடி விழுந்ததா//

ஆமா, இரும்புத்திரை. வருகைக்கு நன்றி.
.....................

//இப்படி எல்லோருக்கும் குறி சொல்லிக்கொண்டிருந்த அம்மா, எனக்கோ அக்காவுக்கோ சொன்னதே இல்லை.

.......... why?why?why????//

சித்ராக்கா, குறி சொல்றவங்க அப்படித்தான். ஏன்னு தெரியலையே?

நன்றி.

ஆடுமாடு said...

//யதார்த்தம் நண்பரே...//

மணிஜீ, நன்றி.
..........

//இந்த மாதிரி பெண்மணிகளின் உள் மனதில் என்ன ஓடும்? எப்பவும் நான் நினைப்பதுண்டு.ஒரு விதத்தில் பாவம் இவர்கள்//

ஆமா, பாவம்தாம் பத்மா. அம்மாவாக இருந்தாலும்!

நன்றி.

பா.ராஜாராம் said...

ரொம்ப நல்லாருக்கு மக்கா!

நர்சிம் said...

மிகப் பிடித்திருந்தது ஸார்.

ஆடுமாடு said...

இராமசாமி கண்ணன் நன்றி.
.......

//உங்களுக்கு கிண்டலாக்கும் இந்தகதை.. :)//

இல்ல முத்துலட்சுமி,அப்படியே பதிவாக்கியிருக்கிறேன். நன்றி.
.......

வெயிலான், ஆமா, பத்துவருஷத்துக்கு முன்னால எழுதுனது. வருகைக்கு நன்றி.

vidivelli said...

அருமையிங்க......
ரசித்தேன்....

மாதேவி said...

"வேப்பமரமும் ஆத்தாவும்" வித்தியாசமான இடுகை.

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,அம்மா இன்னமும் குறி சொல்லுதாவுளா...

துபாய் ராஜா said...

அண்ணாச்சி,அம்மா இன்னமும் குறி சொல்லுதாவுளா...

ஆடுமாடு said...

ராஜாராம் நன்றி மக்கா.


//மிகப் பிடித்திருந்தது ஸார்//

நர்சிம் இந்த 'ஸார்' கொஞ்சம் அதிகப்படிதான்.

வருகைக்கு நன்றி.

விடிவெள்ளி, மாதேவி நன்றி.

ஆடுமாடு said...

//அண்ணாச்சி,அம்மா இன்னமும் குறி சொல்லுதாவுளா...//

இல்லை துபாய் ராஜா சார், ஒரு சோக சம்பவத்துக்குப் பின்னால சாமியும் வேண்டாம் ஒண்ணும் வேண்டாம்னு வந்துட்டாங்க.

ம்ம் அது ஒரு காலம்.

நன்றி அண்ணாச்சி.

காமராஜ் said...

ரொம்ப எச்சரிக்கையானதும்,
எதார்த்தம் போலதுமான
இது எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு.
இது கதை சொல்லியின் பார்வை பதிவு.
க்ளாஸ் தோழா.

நாடோடி said...

கிரமங்களில் நடக்கும் நிகழ்வு..அப்படியே பதிவாக்கி இருக்கீங்க நல்ல இருக்கு.

ஆடுமாடு said...

//இது கதை சொல்லியின் பார்வை பதிவு.
க்ளாஸ் தோழா//

நன்றி காமராஜ் ஜி.

..........

//கிரமங்களில் நடக்கும் நிகழ்வு..அப்படியே பதிவாக்கி இருக்கீங்க நல்ல இருக்கு//

நன்றி நாடோடி சார்.

கிருத்திகா ஸ்ரீதர் said...

இந்த பேச்சு வழக்குகளுக்காகவே உங்க இடுகைக்கு ஓடி ஓடி வரேனுங்க ஆனா லேட்டாத்தான் வரமுடியுது...:)

ஆடுமாடு said...

கிருத்திகா நன்றி.

தங்ஸ் said...

எப்படிங்க உங்களால மட்டும் முடியுது? என் அம்மாவுக்கும் இதே மாதிரிதான். ஊரில் நடக்கும் எல்லா (கெட்ட) நிகழ்வுகளுக்கும் முன்கூட்டியே கனவு வந்திருக்கும். பாதி கனவுகள் பலித்ததுண்டு.. ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு அப்புறம் கனவுகள் பலிக்கவுமில்லை,கனவுகளும் வருவதில்லை.

ஆடுமாடு said...

//என் அம்மாவுக்கும் இதே மாதிரிதான். ஊரில் நடக்கும் எல்லா (கெட்ட) நிகழ்வுகளுக்கும் முன்கூட்டியே கனவு வந்திருக்கும். பாதி கனவுகள் பலித்ததுண்டு.. ஒரு குறிப்பிட்ட நிகழ்வுக்கு அப்புறம் கனவுகள் பலிக்கவுமில்லை,கனவுகளும் வருவதில்லை//

ஓ... ஆச்சர்யமா இருக்கு தங்ஸ். நன்றி.

ஹேமா said...

வீட்டில் நடந்த நிகழ்வை இயல்பாய் எழுதிய விதம் அருமை.

நான் இல்லாத நேரங்களில் நிறையவே எழுதியிருக்கிறீர்கள்.
என்றாலும் ஒரு சுற்றுச் சுற்றி வருகிறேன் உங்கள் பக்கம்.