Friday, April 9, 2010

பிறந்ததும் மறந்ததும்

கடந்துபோகிற காலங்கள் எல்லாம் ஏதாவதொன்றைக் கற்றுக்கொடுத்தே போகிறது. கற்பதும் கல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது.

பேஸ்புக்கில் பிறந்த நாளைப் பார்த்துவிட்டு, நண்பர்கள் போன் செய்தபோதுதான் மறந்துபோன எல்லாமும் மூளைக்கீறி மூச்சுமுட்ட வைத்தது.

கருவைக்காட்டிலும், தென்னந்தோப்புகளிலும் வயல் வரப்புகளிலும் ஆடுமாடுகளோடு அம்மணமாக, சகதியோடு சகதியாக, புரண்டு எழுந்த காலங்களில் எனது இன்னொரு பெயர், 'அப்பனை கொன்ன பய'. பிறந்த 22 வது நாளில் தந்தையானவர் மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்திலுள்ள மலைக்காட்டில் விபத்தொன்றில் உயிரிழந்துபோனார்.

'அவன் தாத்தா மாதிரியே இருக்கான் பாரேன்' என்ற சொந்தங்களுக்கு, பிறகு அப்பாவை கொன்ன பாவியாகிப்போனேன். பிறகான நான்கைந்து வருடங்கள் அவுரங்காபாத்தில், அரசு கொடுத்த சலுகைக்காக, அம்மா, தாத்தா, பாட்டி, அக்காவுடன் வாழ நேர்ந்தது. பிறகு, அந்த வேலையை உதறச்சொல்லிவிட்டு, அம்மாவை, சொந்த கிராமத்துக்கு அழைத்து வந்தார் தாத்தா.

'காய் வோ, கஷ காய்' என்றிருந்த என் மொழி, 'ஏலே... எங்கோற' என்றானது.

வாழப்பழகிய நாட்களில் பிறந்த நாளும் அப்பா இறந்த நாளும் எல்லாருக்குமே மறந்த நாளாகிவிட்டது. சில பல வருடங்கள் கழித்து, ஒரு மார்கழி மாதம், 19-ம் தேதி ஏதோ தோன்றியவளாக அம்மா, அய்யமார் தெருவில் இருந்த பெருமாள் கோயிலுக்கு அழைத்துச்சென்றாள். 'இவனுக்கு அர்ச்சனை பண்ணுங்க. இன்னைக்குதான் பொறந்தான்' என்றாள்.

இதுபற்றி ஆச்சிக்கும் அம்மாவுக்கும் கருத்து மோதல்.

'அவன் பொறந்தது மார்கழி 23 லா. நீ இன்னைக்கு சொல்லுத' என்று ஆச்சி சொல்ல, அம்மா மறுக்க, பிறகு மறந்துபோனது பிறந்ததும் தேதியும்.

பள்ளிச்சான்றிதழ் புதிதாக, ஏப்ரல் பத்தை தந்து போயிருந்தது. ஜாதகம் வேறொரு தேதி. பிறந்த நாள் என்கிற சொல், எப்போதாவது அப்ளிகேஷன் நிரப்புகிற இடத்தில் மட்டுமே ஞாபகத்துக்கு வந்து செல்லும் வஸ்தானது.

கல்லூரியில் முதல் வருடம் ஆச்சர்யமாக பரபரக்க பார்த்துக்கொண்டு வந்த ஒரு நாளில், சக தோழி பிலோமினா, 'இந்தாங்க, பிறந்த நாள் வாழ்த்துகள்' என்று ஒரு வாழ்த்தட்டையையும், கூலிகிளாஸ் கண்ணாடியையும் தந்துவிட்டு போனாள்.

பர்த் டேன்னா இப்படிலாம் பண்ணணும் என்கிற விஷயம் அப்போது ஆச்சரியமாக இருந்தது. பிறகு, அவள் பிறந்த நாள் எதுவென்று தெரியாமல் நான் ஏதும் அவளுக்கு பரிசு கொடுக்காத நாளில், அவள் மற்றொரு தோழியிடம் கோபித்துக்கொண்டதாக அறிந்தேன். கொடுப்பதும் வாங்குவதுமான பிறந்த நாள் பற்றி நானென்ன அறிவேன்?

அவளின் அடுத்த வருட பிறந்தநாளில் கொடுப்பதற்கு ஏதுமன்றி லீவு போட்டு அமர்ந்த கதை தனி.

பிறகு பிழைப்புக்கு மாநகரம் வந்தபிறகு, பிறந்த நாள் சுத்தமாக மறந்துவிட்டது. வாழ்வில் மோதும் வலிமை தேடி அலைபவனுக்கு அது தேவையில்லாததாகவும் பட்டது.

பேஸ்புக்கில் பிறந்த தேதியை அறிந்து கொண்டு, நேற்று நள்ளிரவு 12 மணிக்கு கதவை தட்டிய நண்பர்கள், ஷாக் கொடுத்தார்கள்.

பிறகு என் மழலைகள் கொடுத்த முத்தங்களுக்குப் பிறகு நண்பனின் வீட்டில் திறக்கப்பட்டது ரெமி மார்டின்.
திறக்கப்படுகிற பாட்டில்களுக்காகவும், நண்பர்களின் அன்புக்காகவுமாவது வந்துவிட்டுப் போகட்டும் பிறந்ததும் மறந்ததும்.

36 comments:

Chitra said...

பிறகு என் மழலைகள் கொடுத்த முத்தங்களுக்குப் பிறகு நண்பனின் வீட்டில் திறக்கப்பட்டது ரெமி மார்டின்.
திறக்கப்படுகிற பாட்டில்களுக்காகவும், நண்பர்களின் அன்புக்காகவுமாவது வந்துவிட்டுப் போகட்டும் பிறந்ததும் மறந்ததும்.


....... :-)
HAPPY BIRTHDAY!

க.பாலாசி said...

//எப்போதாவது அப்ளிகேஷன் நிரப்புகிற இடத்தில் மட்டுமே ஞாபகத்துக்கு வந்து செல்லும் வஸ்தானது. //

எனக்கும் அப்டித்தாங்க... நான் பொறந்த தேதியொண்ணு.. சர்டிபிகேட் தேதி ஒண்ணு சமயத்துல மறந்தும்போகும்...

அகத்துக்கும் புறத்துக்கும் யாதொன்றும் மகிழ்விருந்தால் அந்த நாளும் இனிமையானதே... வாழ்த்துக்கள்....

துபாய் ராஜா said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி.

காமராஜ் said...

அன்புத் தோழா...
வாழ்த்துக்கள்.

நாள் நட்சத்திரம் ஏதும் தெரியாது.

ஆனாலும் நண்பர்களும் குழந்தைகளும் சொல்லும் வாழ்த்துக்கள் கொஞ்சம் போதையாக இருக்கிறது. சில செயற்கை போதையும்.

நல்லா குடும்பம்குழந்தைகளோடும்,நண்பர்களோடும் ஜமாயுங்கள் தோழா .

ஆடுமாடு said...

சித்ராக்கா நன்றி.

ஆடுமாடு said...

//அகத்துக்கும் புறத்துக்கும் யாதொன்றும் மகிழ்விருந்தால் அந்த நாளும் இனிமையானதே...//

உண்மைதான் பாலாசி.

வாழ்த்துகள்.

ஆடுமாடு said...

//பிறந்த நாள் வாழ்த்துக்கள் அண்ணாச்சி//

நன்றி துபாய் ராஜா அண்ணாச்சி.

ஆடுமாடு said...

//நல்லா குடும்பம் குழந்தைகளோடும்,நண்பர்களோடும் ஜமாயுங்கள் தோழா//


நன்றி தோழர்.

DJ said...

பிறந்த நாள் வாழ்த்துக்கள் :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

வாழ்த்துக்கள்ப்பா.. :)

ஷங்கி said...

வாழ்த்துகள்!

ஆடுமாடு said...

DJ sir, நன்றி.
....

முத்துலட்சுமி, ஷங்கி நன்றி.

பத்மா said...

வாழ்த்துக்கள் சார் .ஒவ்வொரு கணமுமே கொண்டாடப்படவேண்டியவை என்னும் போது
பிறந்த நாள் விசேஷம் தான் .வாழ்த்துக்கள் .
உங்கள் தாயாருக்கு என் வணக்கம்

வீ.கே.சுந்தர் said...

பொதுவாக பிறந்தநாள் பற்றி இரண்டுவித கருத்துகள் உண்டு.ஒவ்வொரு பிறந்த நாளின் போதும் வயதில் ஒரு வருடம் கூடுகிறது என்று கவலைபடுபவர்கள் ஒரு பக்கம்...அட போடா...கடந்த ஆண்டில் நான் மரணத்தை வென்றுவிட்டேன்...என்ற மகிழ்ச்சியை கொண்டாடுபவர்கள் இன்னொருபக்கம்.இப்படியாக இருக்கிறது பிறந்தநாள்.நான் இரண்டாவது ரகம்..பதிவு அருமை.

Ahamed irshad said...

உங்கள் வார்த்தைகளின் கோர்ப்பு மீண்டும் அவ்வார்த்தையை படிக்க தூண்டுகிறது.

அருமை...

ஆடுமாடு said...

//கொண்டாடப்படவேண்டியவை என்னும் போது
பிறந்த நாள் விசேஷம் தான் .வாழ்த்துக்கள் .
உங்கள் தாயாருக்கு என் வணக்கம்//

நன்றி பத்மா மேடம்.
.........

//கடந்த ஆண்டில் நான் மரணத்தை வென்றுவிட்டேன்...என்ற மகிழ்ச்சியை கொண்டாடுபவர்கள் இன்னொருபக்கம்.இப்படியாக இருக்கிறது பிறந்தநாள்.நான் இரண்டாவது ரகம்..பதிவு அருமை//

நன்றி சுந்தர்ஜி.

என் பார்வை, மரணம் நோக்கி செல்லும் வாழ்வில் வருடமொன்று ஏறுகிறது.

ஆடுமாடு said...

//உங்கள் வார்த்தைகளின் கோர்ப்பு மீண்டும் அவ்வார்த்தையை படிக்க தூண்டுகிறது//

நன்றி அஹமது இர்ஷாத்.

☼ வெயிலான் said...

என்னோட வாழ்த்துக் குறுஞ்செய்தி கெடச்சுதா அண்ணாச்சி?

பா.ராஜாராம் said...

நெகிழ்வு.

பிறந்த நாளுக்கு,பிறந்த நாள் குடிப்பது என என் வாழ்வும் இருந்திருக்கலாம் என தோணுது. :-)

ரௌத்ரன் said...

ரொம்ப லேட்டா சொல்றேன்..

இருப்பினும் வாழ்த்துகள் :))

ஆடுமாடு said...

//என்னோட வாழ்த்துக் குறுஞ்செய்தி கெடச்சுதா அண்ணாச்சி?//

கிடைச்சது வெயிலான். நாந்தான் உங்களுக்கு ரிப்ளை பண்ணலை. ஸாரி.

நன்றி.

ஆடுமாடு said...

//நான் பொதுவாகச் சொன்னேன்//

பரவாயில்லை பிரகாஷ். நீங்கள் குறிப்பிட்டும் சொல்லலாம்.

உங்கள் பதிவுக்கு நான் பின்னூட்டம் இட்டால் பேகவே மாட்டேங்குது. ஏன்னு தெரியலை. என் சிஸ்டம் பிராப்ளமா? இல்ல வேறெதுவுமான்னு தெரியலை.


நன்றி பிரகாஷ்.

ஆடுமாடு said...

//பிறந்த நாளுக்கு,பிறந்த நாள் குடிப்பது என என் வாழ்வும் இருந்திருக்கலாம் என தோணுது. :-)//

இப்படியொரு ஆசையா?

நன்றி ராஜாராம்.

பனித்துளி சங்கர் said...

மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் மீண்டும் வருவேன்

ஆடுமாடு said...

//ரொம்ப லேட்டா சொல்றேன்//

லேட்டஸ்டா எடுத்துக்கிறேன். நன்றி ரவுத்ரன்.

ஆடுமாடு said...

//மிகவும் சிறப்பான பதிவு .
பகிர்வுக்கு நன்றி !
தொடருங்கள் //

நன்றி பனித்துளி சங்கர்.

சாந்தி மாரியப்பன் said...

லேட்டஸ்ட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள்.

ஆடுமாடு said...

//லேட்டஸ்ட்டான பிறந்தநாள் வாழ்த்துக்கள்//

நன்றி அமைதிச்சாரல் மேடம்.

ராமலக்ஷ்மி said...

நெகிழ்வான இடுகை.

சற்றே தாமதமானாலும், என் வாழ்த்துக்களையும் ஏற்றுக் கொள்ளுங்கள்!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்!

ஆடுமாடு said...

நன்றி ராமலட்சுமி மேடம்.

இரசிகை said...

negizhvu...!

//
கடந்துபோகிற காலங்கள் எல்லாம் ஏதாவதொன்றைக் கற்றுக்கொடுத்தே போகிறது. கற்பதும் கல்லாமல் இருப்பதும் அவரவர் விருப்பம் சார்ந்தது.
//

m...

//'அப்பனை கொன்ன பய'. பிறந்த 22 வது நாளில...//

yenga appaakum (thaaththaa irantha 16 vathu naal visheshathin pothu pianthaangalaam)intha perthaanaam.

ketta kathaikalin ninaivukalai kilari vidukirathu...ippathivu..:(

இரசிகை said...

//பர்த் டேன்னா இப்படிலாம் பண்ணணும் என்கிற விஷயம் அப்போது ஆச்சரியமாக இருந்தது.//

yenakkum college poithaan theriyum...:)

//பிறகு, அவள் பிறந்த நாள் எதுவென்று தெரியாமல் நான் ஏதும் அவளுக்கு பரிசு கொடுக்காத நாளில், அவள் மற்றொரு தோழியிடம் கோபித்துக்கொண்டதாக அறிந்தேன். கொடுப்பதும் வாங்குவதுமான பிறந்த நாள் பற்றி நானென்ன அறிவேன்?
//

:))

ஆடுமாடு said...

rasigai varukaikum vazthukkum nanti.

ஹேமா said...

பிந்தினாலும் மனம் நிறைந்த வாழ்த்துக்கள் சகோதரா.நிறைவான சந்தோஷம் எப்பவும் உங்ககூட.

இனியாச்சும் உங்க பேர் சொல்லுங்க.ஆடுமாடு சொல்ல என்னமோ போல இருக்கு !

ஆடுமாடு said...

நன்றி ஹேமா.

சும்மா ஆடுமாடுன்னே கூப்பிடுங்க.

மஞ்சூர் ராசா said...

இனிய வாழ்த்துகள்.

நானும் பல வருடங்களுக்கு என் பிறந்த நாளையே மறந்திருந்தேன். பின் என் மகள்தான் ஒரு முறை ஞாபகவைத்து கேக் வெட்ட வைத்தாள்.