Tuesday, November 3, 2009

காடு-4

முதல் டவுஸ் பஸ் வந்துவிட்டது. வழக்கமாக ஒன்பது, பத்து மணிக்கு மேல்தான் சாலையை அடைத்துக்கொண்டு மாடுகள் போகும். என்னதான் ஹாரன் என்கிற கருவியை அழுத்தினாலும் மாடுகள் சவகாசமாகத்தான் நகரும். லேசாக மாட்டின் முதுகில் பேருந்தை கொண்டு முட்டி, பிறகு கொஞ்சம் மாடுகள் கலைந்து செல்வதற்குள் வாகன ஓட்டியின் ரத்த அழுத்தம் அதிகரித்துவிடும். ‘இந்த ஊருக்கு வண்டியை எடுத்துட்டு வந்தா, இதான் ரோதனை... சனியம்புடிச்சதுவோ. மாட்டை பத்துதவனுவளாது தூர வெரட்டுதானுவளா... எனக்கென்னன்னு போறானுவோ’ என்பது கன்டக்டரின் எரிச்சல்.

இன்று, காலையிலேயே எரிச்சல் ஆரம்பமாகிவிட்டது. சாலை என்பது ஒரு பேரூந்து மட்டுமே செல்லக்கூடிய அளவிலான செம்மண் தரை. அதில் இருக்கின்ற குண்டு குழிகள், சாலை என்கிற பெயரை மாற்றியிருந்தன. இரண்டு பக்கமும் ஆங்காங்கே இருக்கிற சுமை தாங்கி கற்களுக்கு அருகில் வேம்பு, புளியமரங்கள் நிழல் கொடுத்துக்கொண்டு நிற்கின்றன. பொத்தாம் பொதுவாக இந்த வழியாக பாபநாசம், விக்கிரமசிங்கபுரம் செல்லக்கூடிய பேருந்துகள் குறைவுதான். சைக்கிளில் குடும்ப பயணங்கள் நடந்து விடுவதால் பேருந்துகள், அதிகக் கூட்டத்தை கொண்டிருக்க இயலாது. திருமணம், காதுகுத்து, திருவிழா உள்ளிட்ட நாட்களில் மட்டுமே பிதுங்கிகொண்டு செல்லும். இன்னொன்று பக்கத்தூர் துஷ்டி.

மந்தை தாண்டி இருக்கிற செல்லையா டீக்கடையில், கொம்பனும், சடச்சானும் நின்றிருந்தார்கள். ஓலை வேயப்பட்ட குடிசை கடை. மாடுகளை பார்த்துவிட்டு, ‘ஏல காபி குடிச்சுட்டு போறேளா?’ என்றான் கொம்பன்.

‘ஒனக்கு வேல இல்ல. நாங்க இன்னும் எவ்வளவு வழி போவ வேண்டியிருக்கு? என்னைக்கு டீயை குடிச்சு, எப்ப போவ?’

‘ஆமா, நீங்கதான் அலூவசமா போறியோ. நாங்களாம் போவல பாரு’.

‘வேண்டாம் மாமா. அந்தானி, கருத்தப்பிள்ளையூர் பக்கத்துல போயி குடிச்சுக்கிடுதோம்’

உச்சிமகாளிக்கு கொம்பனை பார்த்தபோதுதான் ராம லட்சுமியானவள் மனதுக்குள் குதித்தாள். தண்ணீர் டேங்கிற்கு பின்பக்கம் இருக்கிற மூங்கில் காட்டுக்கு செல்லும் வழியில்தான் அவளது வீடு. கொம்பையா அவளது தந்தையென ஊரில் நம்பப்பட்டான். முங்கில் குச்சி வெட்ட, அருகில் இருக்கிற சுப்புத்தேவனின் மாமரங்களில் கிளி மூக்கு மாங்கா பறிக்க என்று அந்தப் பகுதிக்கு செல்லும் போது ராமலட்சுமி அறிமுகமானாள் அவனுக்கு. தூரத்து உறவென்பது கூடுதல் வசதியாக இருந்தாலும் ஊரில் இருக்கிற, சிவப்புதோல் குமரிகளில் அவளும் ஒருத்தி என்பதே அவனுக்கு முக்கியமானதாகப் பட்டது. சமீபத்தில் அவன் பார்த்த சினிமா நடிகையின் சாயலை கொண்டிருந்தாள் அவனுக்கு அவள் மீது ஏதோ ஒரு ஈர்ப்பு அதிகமாயிருந்தது.

தண்ணீர் குடத்தை இடுப்பில் வைத்துக்கொண்டோ, மாட்டுச் சாணக் கூடையை தலையில் வைத்துக்கொண்டோ சென்ற நேரங்களில் இப்படியான உரையாடல்கள் அவனுக்கும் அவளுக்குமிடையில் நடந்திருக்கிறது.

‘என்ன, இந்த பக்கம்லாம் ஆளு வந்திருக்கு’

‘உன்னய பாக்கதாம்...’

‘சொல்லியிருந்தா உங்க வீட்டுக்கு வந்திருப்பம்லா’

‘தேடியாந்து பாத்ததான அது இருக்கும்’

‘அதுன்னா?’

‘அதுன்னா, அதாண்டி... செவப்பி’

-இப்படியான உரையாடல்கள் சிலருக்கு கிறக்கத்தையும், சிலருக்கு காதலையும் கொடுத்திருக்கிறது. அவளது பேச்சில், அவனோடு மாடு மேய்க்கும் சிலரும் காதலாகி கனிந்துருகியிருக்கின்றனர். உ.மகாளிக்கு அவளது பேச்சும் பிடித்திருந்தது. எப்போதுதாவது மூங்கில் காட்டுக்கு போகிறவன், இவளுக்காக கொஞ்ச காலம், ரெண்டு நாளுக்கொருமுறை அங்கு சென்று வந்தான். அவளோடு பேச வாய்ப்பில்லாத நேரங்களில் அர்த்த சிரிப்புகளோடும் கண்களாலும் காதல் வளர்த்தான்.

சில மாதங்களுக்கு முன் அவளுக்கு அம்மை போட்டிருந்தது. முகம் உள்ளிட்ட இடங்களில் சிறு சிறு புள்ளிகளை தோற்றுவித்து, அவள் அழகை குறைத்திருந்தாள் அம்மன். இதன் பொருட்டு, அவள் வெளியில் வருவதை குறைத்துக்கொண்டாள் என்பதும், உ.மகாளியை விசாரித்தாள் என்பதும் அவள் வீட்டருகே இருக்கும் இவனது சேக்காளி மூலமாக அறிய வந்தது. ரெண்டு மாத காலம் இந்தப் பக்கம் வருவதை தவிர்த்ததன் காரணமாகத்தான் அடுத்து மூக்கம்மாளை காதலிக்க ஆரம்பித்தான் என்பது முன் கதை.

குள்ராட்டிக்கு செல்லும் வழியில் கொம்பனை பார்த்ததும் அவளது ஞாபகம் வந்தது. இப்போது அவள் உடல் குணமாகியிருக்கலாம் என்று நினைத்தான். ஆனால், இன்னும் சில வாரங்களுக்கு குள்ராட்டியிலிருந்து ஊருக்குள் இறங்க கூடாது என்கிற முடிவோடு போகிற உ.மகாளி, இவள் பொருட்டு ஒரே வாரத்தில் வரும் ஆசையை கொண்டான். ஆசைகள் ஆளும் சக்தி கொண்டவை.

பூவன்குறிச்சி தாண்டி, கோயில்பிள்ளை நாடார் தோப்பருகில் செல்லும்போது நான்கு எருமைகள் வயல்களுக்குள் குதித்தது. அங்கு, ஈராய்ங்கம் மற்றும் உளுந்து விதைக்கப்பட்டிருந்தன. நொடிஞ்சானும், தவிட்டானும் அதை விரட்டப்போக, நடு வயலுக்குள் அங்கும் இங்கும் ஓடி வயலை சிதைத்துவிட்டன. தவிட்டான், கப்பை கொம்பு மாட்டின் முதுகில் கம்பால் ஓங்கி அடித்தான். அடி தாங்காமல் அது ரோட்டுக்கு வந்தது. அதை பார்த்து மற்றதும். வயல்காரர்கள் அங்கு யாரும் இல்லாததால் தப்பித்தார்கள்.

கருத்தப்பிள்ளையூரிலிருந்து கீழாம்பூர் பள்ளிக்கூடத்துக்குச் செல்லும் பால் சாமுவேல் வாத்தியார், சைக்கிளில் லேட்டாக வந்துகொண்டிருந்தார். உ.மகாளி அவரிடம்தான் மூன்றாம் வகுப்பு வரை படித்தான். அந்த வகுப்பில்தான் ஏபிசிடி ஆரம்பமாகியது. அவன் மண்டைக்குள் அது ஏற மறுக்க, பள்ளிக்கூடத்தை முழுவதுமாக நிராகரித்திருந்தான் அவன். அதற்காக சாமுவேல் வாத்தியாருடனான அவனது நட்பு வேறுவிதமாக வளர்ந்திருந்தது.

‘என்ன சார்வாள்... லேட்டா போறியோ’

‘ஏல உச்சி, எங்கடா போற இங்க’

‘குள்ராட்டிக்கு’

‘அப்டியா, எள்நீ குடிச்சுட்டு போறியா... எந்தோப்புதான், இந்தா எதுத்தாப்ல இருக்கது’

‘இல்ல சார்வாள். இன்னோரு நாளு பாப்போம்.. ஆமா, ஏம் லேட்டு?’

‘இன்னைக்கு கடையம் வரை போவணும். யூனியனு மீட்டிங்கு’

‘சரி சரி...வரட்டா’

கடனாநதி ஆற்றுக்குள் தண்ணீர் குடிப்பதற்காக மாடுகள் இறக்கி விடப்பட்டிருந்தன. கேசரியும் கந்தையாவும் இரண்டு தூக்கு வாளியில் பழையை சோறை கஞ்சியோடு எடுத்து வந்திருந்தார்கள். தொட்டுக்கொள்ள சுண்டக்கறியும் மாங்காய் ஊறுகாயும்.

நால்வரும் அமர்ந்து சாப்பிடும்போது ஆற்றுக்குள் மாடுகள் கணைக்கும் சத்தம் கேட்டது. திரும்பி பார்த்தார்கள். திக்கென்றிருந்தது அவர்களுக்கு.

(தொடரும்).

Tuesday, October 20, 2009

காடு -3

குள்ராட்டி - மேற்கு மலைத் தொடர்ச்சியின் குளு குளு பிரதேசம். குளிர் ஆட்டி என்பதே குள்ராட்டி என மறுவியதாகச் சொல்வார் பேச்சித்தாத்தா. எட்டு மாதக் கோடையில், ஊர் அனலாக மாறி வயக்காடுகளில் பாளங்கள் வெடித்திருக்கும் நேரங்களில் மனிதனுக்கும் மாட்டுக்கும் பசி பிடித்துக்கொள்ளும். ஊரில் உள்ள மாடுகள் அனைத்தையும் 5 பேர் கொண்ட குழு, இந்த குள்ராட்டிக்கு கொண்டு செல்வார்கள். கீழிருந்து மலைக்கு மேல் 18 கி.மீ தூரத்தில் இருக்கிறது குள்ராட்டி. கரடு முரடான வனாந்தரத்துக்குள் வெட்டவெளி மைதானம் இது.

மேலத்தெரு, கருவேலப்பிறை முன், அதிகாலை நான்கு மணியளவில் மாடுகள் கூடிவிட்டன. குள்ராட்டிக்கு செல்ல இருப்பதால் ஊரின் மொத்தக்கூட்டமும் இங்கு இருந்தது. மாடுகள் எண்ணப்பட்டன. மொத்த எண்ணிக்கை கணக்களவில் இருந்தாலும் திரும்பி வரும்போது ஒன்றிரண்டு மாடுகள் காணாமல் போயிருக்கும். அதாவது மிருகங்களின் பசிக்கு இரையாகியிருக்கும். அதையும் தாண்டி சில திருட்டு கணக்குகளும் இதற்குள் இருக்கிறது.

‘எய்யா, மாடுவோளை நல்லா பாத்துக்கோங்க’ என்கிற பாச வார்த்தைகள் காற்றில் கலந்துகொண்டிருந்தது. பிரிவின் வலி என்பது மனிதனுக்கு மட்டுமல்ல, மாடுகளுக்கும்.

ஊர் பெரியவர் எனச் சொல்லப்படும் சொல்லமுத்து நம்பியார், ‘டே, வரும்போது மாடு மேய்க்க நாலஞ்சு கம்பு வெட்டிட்டு வந்திரணும். தேன் எடுக்க எவனும் வந்தானுவோனா, கொஞ்சம் வாங்கிட்டு வந்திருங்கடே, சின்னவனுக்கு கொஞ்சம் செலம்பு கம்பு வேணும்’ என தனது பட்டியலை வாசித்துக் கொண்டிருந்தார்.

உச்சிமகாளிக்கு இது முதல் அனுபவம். குள்ராட்டி பற்றி ஒவ்வொரு வருடமும் ஊரில் பேச்சு வரும்போதெல்லாம் வாய்ப் பிளந்து கேட்டிருக்கிறான். ஆனால், அப்போதெல்லாம் அங்கு போகவேண்டும் என்கிற ஆவலோ, ஆசையோ வந்ததில்லை. இப்போது அதிக எதிர்பார்ப்போடும், ஏதோ ஒன்று கிடைத்துவிட்ட சந்தோஷத்திலும் அவன் பயணப்பட்டான்.

இவர்களுக்கு தலைவனாக ‘நொடிஞ்சான்’ குட்டி இருந்தான். இருந்தான் என்பது பெயருக்குத்தான். இங்கு யார் சொல்லி, யார் கேட்பது? அவரவர்களுக்கான ஆசை, தீர்வு அவரவர்களுக்கானது.

நொடிஞ்சான் தோற்றத்தில் கொஞ்சம் வித்தியாசமானவன். கூடு போல முன் வந்திருக்கும் நெஞ்சோடு கொஞ்சம் உயரமான தோற்றத்தில் இருப்பான். நடந்தால் ரெண்டு கால் முட்டிகளும் தட்டும். அதனால் அவனால் மெதுவாகவே நடக்க முடியும். மாடுகள் விஷயத்தில் விஷயம் உள்ளவன் என்பதாலும் குள்ராட்டிக்கு சிறு வயது முதலே சென்று வருபவன் என்பதாலும் அவனுக்கான மரியாதை அதிகமாகியிருந்தது.

இவர்களோடு, கந்தையா, தவிட்டான், கேசரி ஆகியோரும் இணைந்திருந்தார்கள். இதில் தவிட்டானுக்கு தினமும் அசைவம் வேண்டும். அது இல்லாமல் அவனால் உணவுகொள்ள முடியாது. தினமும் ஒரு முயலை பலியிடுவது என்றும், அங்கு வேறு சில வகை இறைச்சிகளை ஏற்பாடு செய்யலாம் என்று சொல்லப்பட்டதாலும் அவன் வந்திருந்தான். கந்தையாவும் கேசரியும் எதையும் பொருட்படுத்தாத தமது வேலைகளை மட்டுமே செய்கிற வகையறாக்கள்.

மந்திர மூர்த்தி சாமிக்கு பூஜை போட்டு, குள்ராட்டி செல்பவர்களுக்கு சாமி கொண்டாடி திருநீறு பூசிய பின் தொடங்கியது பயணம். ‘க்கியே... போங்க’& குரல் கேட்டு நடந்தன மாடுகள். மந்தை தாண்டி செல்லும்போதுதான், உச்சி மகாளிக்கு ஞாபகம் வந்தது, தனக்காக இன்னொரு காதலி காத்திருக்கிறாள் என்பது.

தொடரும்.

Sunday, September 20, 2009

காடு - 2

காதல், ஒரு கடலை கைக்குள் அடைத்துவிடும் சக்தி வாய்ந்தது. மூன்றாவதாக, அவன் ஒரு பெண்ணிடம் காதல் வயப்பட்டதாக உணர்ந்தான். காதலிப்பதைவிடவும் காதல் வயப்படுவது சுகமான அவஸ்தை.

நான்காவது தெருவில் இருந்து நெய் விற்க வரும் மூக்கம்மாள், மூக்கும் முழியுமாக இருப்பதாக அப்போது நினைத்தான். இருவரும் பேசத் தொடங்கிய நான்காவது வாரத்தில் அவளுடன் ஆழ்வார்க்குறிச்சி தேரோட்டத்துக்குச் சென்றான்.

அவள் நான்கடி முன்பும் இவன் நான்கடி பின்புமாக சென்று ஊரில் யாருக்கும் தெரியாதவாறு காதல் வளர்த்தார்கள். கல்யாணி சைலப்பரிடம் தங்கள் காதல் கைகூட சிறப்பு அர்ச்சனை செய்துகொண்டார்கள். எல்லாருக்கும் இலவசமாக அருள் பாலிக்கும் அம்மனும் அய்யாவும் கல்யாணத்துக்கு சம்மதித்து விட்டதாக நினைத்த மறுநாள், இடைகால் அத்தை மகனுக்கு நிச்சயிக்கப்பட்டாள் மூக்கம்மாள்.

விதியின் விளையாட்டுகள் விவரமானவை.

இம்முறை கலங்கவில்லை உச்சிமகாளி. விஷயத்தை உடன் ஆடுமேய்க்கும் அய்யாசாமியிடம் சொன்னதும்தான் அவன் எதையோ கண்டுபிடித்தவனாகச் சொன்னான்.

‘ஏல கவனிச்யா?‘

‘என்னத்த?‘

‘நீ ராசியான பயலே‘

‘என்ன அர்தலி சொல்லுத?‘

‘பெறவு, நீ எந்த புள்ளய காதலிக்கியோ கொஞ்ச நாள்லயே அந்த புள்ளைலுவோளுக்கெல்லாம் கல்யாணம் ஆயிருது பாரேன்‘

‘இதென்ன கூத்தா இருக்கு‘

‘நான் சொல்லுதம்னு பாக்காதல. நீயே யோசனை பண்ணி பாரு‘

ஆமா என்ற உ.மா, இந்த விசித்திர நிகழ்வை உணர்ந்து ஆச்சர்யப்பட்டான். கொஞ்சம் சிரிப்பாகவும் வந்தது. அதெப்படி எனக்கு மட்டும் இப்படியொரு ராசி?

பொழுது புலரும் முன்பே எழுந்துவிட்டான். அருணாசலம் டீக்கடையில் பால் சூடாகி கொண்டிருந்தது. இப்போது எந்த வீட்டுக்கும் பால் கறக்கும் வேலை இல்லை. பழகிவிடும் மாடுகள், அவர்களின் சொந்தக்காரர்கள் கைகளுக்கு பழக்கப்பட்டிருந்தது. மாடு மேய்ப்பதில் இப்போது அவனுக்கு ஆர்வம் குறைந்திருந்தது.

இருந்தாலும் இதைவிட்டால் வேறு பிழைப்பில்லை என்பதால் ஏனோ தானோ என்று தொடர்ந்துகொண்டிருந்தான். இனி காதல் வயப்பட ஊரில் அழகான குமரிகள் யாரும் இருப்பதாக தெரியவில்லை. அப்படியே இருந்தாலும் அவர்கள் சீக்கிரம் கல்யாணம் ஆகி போக தான் ஒரு காரணகர்த்தாவாக இருந்து விடக் கூடாது என்று முடிவெடுத்தான். அடுத்த வாரம் குள்ராட்டிக்கு செல்லும் கோஷ்டிகளுடன் தானும் ஐக்கியமாவது என தீர்மானித்தான். காடு அவனுக்கு ஆச்சர்யம் தரவும் அவன் காட்டை அனுபவிக்கவும் புறப்பட முடிவானது.

தொடர்வேன்

Tuesday, September 15, 2009

காடு-1

உச்சி மகாளி பற்றி நீங்கள் தெரிந்து கொள்வதில் சில சுவாரஸ்யங்கள் இருக்கலாம். இல்லாமலும் போகலாம். ரசனையை பொறுத்தது அது. மாடுகள் மேய்ப்பதில் கெட்டிக்காரனான உ.மகாளிக்கு வயது இருபது. வயது முக்கியமில்லையென்றாலும் இந்த பருவத்துக்கான சேட்டைகளை, நீங்கள் அறிய உதவலாம். பீடி குடிப்பது, தண்ணியடிப்பது போன்ற எந்த நல்ல பழக்கங்களையும் அவன் கொண்டிருக்கவில்லை. அதை கொண்டிருப்பதற்கு, பணம் ஒரு விஷயம் என்பதை தவிர, பிற காரண காரியங்களை தேட வேண்டியதில்லை. உ.மகாளியின் தந்தை எனப்படுவர் ஊரில் கஞ்சன் என பெயரெடுத்தவர். அவருக்கு தெரியாமல் மாடக்குழியில் இருந்து அஞ்சோ பத்தோ எப்போதாவது திருடும் பழக்கம் இருந்தாலும் அதை எப்போதும் செய்வதில்லை உ.மகாளி. இப்படியான இன்ட்ரோ உ.மகாளிக்கு போதுமென்பதால் கதைக்குள் செல்லலாம்.

தன்னைப்பற்றிய இப்படியொரு விஷயம், தனக்கு தெரியாமல், சேக்காளிகளுக்குத் தெரிந்திருக்கிறதே என்பதில் அவனுக்கு கொஞ்சம் வெசனைதான். தோளில் போட்டிருந்த துண்டை எடுத்து தலையில் கட்டினான். அவன் மேல் சட்டை அணிவதில்லை என்பதால் தோளில் இருக்கின்ற பெரிய மச்சம் பளிச்சென தெரிந்தது.

மேல பத்தில் மாடு மேய்த்துவிட்டு வந்துகொண்டிருந்தபோது, கோட்டிமணிதான் இதை சொன்னான். கொஞ்சம் புளங்காகிதமும், புல்லரிப்பும் இருந்தாலும் கூட, தனக்கு ஏன் இது தோணவில்லை என்பதில் குழப்பமடைந்தான். மறுநாள் கிட்டி ஐயர் கிணற்றில் குளித்துக்கொண்டிருந்தபோது பொன்னையாவும் இதை சொல்ல, மகிழ்ச்சியடைந்தான். மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையை பொறுத்தது.

முத்தையா பிள்ளை வீட்டுக்கு, காலையில் பால் கறக்க போனபோதுதான் லட்சுமியை அவன் சந்தித்தான். அதற்கு முன் பலமுறை சந்தித்திருந்தாலும் அன்று அவனுக்கு ஏதோவாகி இருந்தது. இந்த ஏதோவாகியை, காதலென்றும் கொள்ளலாம். தினமும் வெறும் பல்லிளிப்பும், பாட்டு பாடுவதுமாக அவனது காதல் ஒரு கட்டுக்குள் இருந்தது. விஷயத்தை, உடன் மாடுமேய்க்கும் அய்யா சாமியிடன் சொன்ன போது, ‘சும்மா சிரிச்சிட்டு இருந்தா என்னல அர்த்தம். ஐ லவ் யூன்னு சொல்லித் தொலைல’ என்றான். பக்கத்தூர் டூரிங் தியேட்டருக்கு, அப்போதுதான் அதிகமாக காதல் படங்கள் வரத்தொடங்கி, ஊருக்கு காதல் வார்த்தைகளை சொல்லிக்கொடுத்ததன் விளைவாக, ஐலவ்யூ வை அறிந்திருந்தான் அவன். அறிதலும் அறியப்படுதலும் அவரவர் விதிப்படி.

இப்படி இவன் சொன்ன ஐடியாபடி, அந்த வார்த்தையை சொல்லி விடுவதென்று முடிவெடுத்த காலையில், பால் கறக்கும்போது, லட்சுமியின் அம்மா பத்தமடையாள் வந்தாள். அவளுக்கு உடல் நலமில்லையாம். உடல் நலம் சரியில்லை என்பதற்கு, ஊரில் அந்த மூன்று நாள் என்றும் பொருள். நான்கைந்து நாள் கழித்து, சொல்லிவிடுவது என்று நினைத்த போது, அவளது அம்மாவானவள், ‘எய்யா விஷயம் தெரியுமா? நம்ம புள்ளைக்கு ஆழ்வார்க்குறிச்சியில மாப்பிள்ளை பாத்தாச்சு’’ என்றாள். குபுக்கென்று வியர்த்தது அவனுக்கு. ஒரு காதல், முளையிலேயே கிள்ளி எரியப்பட்டதற்காக, அவன் இரண்டு நாட்கள் மட்டுமே வருத்தப்பட்டான்.

இப்படியான, சின்ன காதல் சோகத்தில் அவன் சஞ்சரித்துக்கொண்டிருந்த போது, ஸ்ரீனிவாச அய்யங்கார்வாள் பசுமாடு வாங்கியிருந்தார். காலையில் 5 லிட்டரும் மாலையில் 5 லிட்டரும் கறக்கும் மாடு. கறப்பதற்கு தந்தைவழி பணிக்கப்பட்டிருந்தான் உ.மகாளி. இதன் பொருட்டு அக்ரகாரம் போகும் வழியில், கொஞ்சம் சுற்றி வளைத்து, அத்தை உறவான மாரியம்மாளின் வீட்டில் அவளது மகள் சுருட்டையை அடிக்கடிச் சந்திக்கும் வாய்ப்பை பெற்றிருந்தான். அவளும் அதிகாலை, இவன் வரும் வேளையில் அக்ரகாரத்துக்கு பின்பக்கம் இருக்கிற வாய்க்காலில் தண்ணீர் எடுக்க செல்வதை வழக்கமாகியிருந்தாள். வெறும் சந்திப்பு, புன்னகை என்றிருந்த வேளையில், அய்யாசாமியின் அறிவுரைப்படி கொஞ்சம் கொஞ்சமாக பேச்சு வழக்கில் ஈடுபட்டுக்கொண்டிருந்தான். அவள் நடிகை ராதாவின் சாயலை ஒத்திருப்பதாக நினைத்துக்கொண்டான்.

சுருட்டையும் சுமாராக இப்போது இவன் வசம் ஆகியிருந்தாள். மந்திர மூர்த்தி கோயில் கொடையை முன்னிட்டு, புது துணி அணியும் பழக்கம் இருந்ததால், உ.மாகாளி, அவளுக்காக சைக்கிளில் அம்பாசமுத்திரம் சென்று, மஞ்சள்பாவாடை, பச்சைக்கலர் தாவணி வாங்கி வந்தான். எறும்பு ஓடினாலே பொசுக்கென்று தெரியும் குச்சு, வீட்டில் இதை அவள் எங்கு போய் ஒளித்து வைக்க முடியும். கொடையை முன்னிட்டு அவள், தண்ணிக்கு போவதை மாலையில் வைத்துக்கொண்டாள். இரண்டு நாட்கள் அதை கையில் வைத்துக்கொண்டு காதலியிடம் கொடுக்க பெரும் சிரமப்பட்டான்.

கொடைக்காக வெளியூரிலிருந்தும் உறவினர்கள் வந்திருந்தனர். உந்த உறவினர்கள், சாமி வேட்டைக்கும் செல்லும் முன், மச்சினன்களுக்கு வேட்டி, சட்டை கட்ட வேண்டும் என்பது வழக்கம். அப்போது, பாப்பாக்குடியில் இருந்து பேண்ட், சட்டை போட்டு வந்திருந்த, மீசை சுப்பையா உறவினரான சிவப்பு ராசு, சுருட்டையின் மீது காதல் கொண்டான். மும்பை தாராவி பகுதியில் அவன் வேலைப்பார்ப்பதாகப் பேசிக்கொண்டார்கள். சுருட்டை சம்மதிக்க, கொடை முடிந்த நாள் நிச்சயதார்த்தத்தை நடத்திவிட்டார்கள். விஷயம் தெரியாத உ.மகாளி, தினமும் அவள் வீட்டை உற்றுப் பார்த்துக்கொண்டே சென்று கொண்டிருந்தான். அதிகமாக பொசமுட்டி, அந்த பாவாடை தாவணியை, அநியாயத்துக்கு பொய் சொல்லி தனது சித்தி மகளுக்கு கொடுத்தான்.

சுருட்டையின் அம்மாவின் அப்பாவும் பத்திரிகை வைக்க, வீட்டுக்கு வந்தபோதுதான் உ.மகாளி விஷயம் தெரிந்துகொண்டான். தனது இரண்டாவது காதலும் இப்படியானதில் உடைந்துபோனான் உ.ம.

தொடரும்.

Tuesday, September 1, 2009

காடு


காலில் பீய்ங்கான் கிழித்து
படுத்திருந்த நாட்களில்
அவள் கொடுத்த
கத்தரி வத்தலும்
கருவாட்டு துண்டும்
எந்த காதலனுக்கும்
கிடைக்காத மருந்து.
-தொகுப்பிலிருந்து


காடு- கோடானு கோடி புதிர்களை புதைத்துக்கொண்டிருக்கிறது. அது செல்லும் பாதையெங்கும் விரவி கிடக்கும் முப்பாட்டன்களின் மூச்சுக்காத்தில் நமக்கு பல கதைகள் கிடக்கிறது. இயற்கை நம்மோடு பேசவும் நாம் இயற்கையோடு பேசவும் காடு கட்டி வைத்திருக்கிறது பெரும் பள்ளிக்கூடம். இங்கு கற்கவும் சுத்தவும் ஏழாயிரம் வாசல்கள். புற்களால் நிரப்பப்பட்டிருக்கும் அம்மண்தரையெங்கும் எவனோ சென்று வந்த ஒன்றையடி பாதை எனக்கும் இன்னும் ஆச்சர்யம். காட்டையும் மாட்டையும் வாழ்க்கையாக கொண்டு பிராயம் எனக்கு தந்த அனுபவம் நிறைய. கண்ணாடி விரியன் பாம்பிலிருந்து பெயர் புரியாத ஊர்வன, பறப்பன, பாய்வன உள்ளிட்டவற்றை எனக்கு அறிமுகப்படுத்திய ஆசான் அது. ஆசான்கள் கொஞ்சம் பயமூட்டுபவர்கள். நிறைய படிப்பூட்டுபவர்கள். அலற வைக்கும் காட்டின் குரல்கள் நம்மையும் அதிர வைப்பவை. சுகங்களும் சுவாரஸ்யங்களும் புதையலாகியிருக்கும் அக்காட்டின் அனுபவத்தை நண்பனின் வாழ்க்கையோடு விரைவில் தொடரப் போகிறேன்.

(கவிதைக்கும் இதற்கும் சம்பந்தமில்லை பாஸு!)

Saturday, August 1, 2009

நினைவுகளை சேமிப்பவன்

என் சொற்களைத் திருடும் பாக்கியம் உனக்கிருக்கிறது.
நீ நானாகும் போது எனக்கான சொற்கள் உனக்கானதாக மாறுவதில் வியப்பில்லை.
கூந்தலுக்குள் அழுந்தாமல் வெளியேறும் உன் ஒற்றை முடியில், என் உயிரை தொங்கவிடும் ஆற்றல் பெற்றிருக்கிறாய்.

கருணையில்லா கடவுளர்கள், சக்திகளை பெண்களுக்கே படைப்பதிலான ஓரவஞ்சனையில் எப்போதாவது வெடிக்கக்கூடும் பெரும் போர்.
பார்வை பட்டோ அல்லது பேசியோ திரும்புகிற அதிர்ஷ்ட தருணங்களில் நான்கு முறை இறக்கிறேன். மூன்று முறை பிறக்கிறேன்.

பிறத்தலும் இறத்தலும் உனக்கான கொடூர விளையாட்டு. எப்போதும் நான் தோற்க நினைக்கிற விளையாட்டை உன்னால்தான் நடத்த முடிகிறது.

கைக்குள் காற்றை அடைத்து அதில் நீந்த நினைக்கின்ற மோசக்காரன் நான். நீ காற்றாக இருக்கும் வரை இதுவும் சாத்தியமென்றே நினைக்கிறேன். நேற்றைய கனவில் வந்த யுத்தம் பற்றிய விவாதத்தில் உன் ஞாபகங்களே வென்றன. உன் நினைவுகளை சேமிப்பவனாகவே எப்போதும் இருக்கிறேன். உடலெங்கும் வீங்கி, பிதுங்கிக் கிடக்கும் நினைவின் துறுத்தல்களில் எப்போதாவது தெறிக்கக்கூடும் ஒரு துளி ரத்தம்.

இதுபற்றியான நம் உரையாடல் நிலமெங்கும் சிதறி கிடக்கிறது. கடலை தாண்டவோ, நீந்தவோ தகுதியற்ற என் ஏக்கங்களின் வாய்க்கால்கள், ஆற்றை தொடும் முன்னே முடிந்து விடுவதன் காரணம் மட்டும் புரியவே இல்லை.

(பழைய பதிவு)

Thursday, July 30, 2009

மூனு பொட்டு செவளை

மழை விட்டபாடில்லை பாத்துக்கிடுங்க. வீட்டை விட்டு அங்க இங்க நகரமுடியலை. ஜிலுஜிலுன்னு ஊதக்காத்து. சும்மாவே வெறயல்னா தாங்க முடியாது. இப்ப மழை வேறயா. ரெண்டு சாக்கை இழுத்து மூடிட்டு, இருக்க வேண்டியாதா போச்சு. குடிச வேற டொப்பு டொப்புனு ஒழுவிட்டு இருக்கு. கூரையிலயிருந்து தண்ணி விழுத எடத்துல எல்லாம் தம்ளரு. தூக்குச்சட்டி, கொடம், குத்துப்போணின்னு வரிசையா வச்சிட்டேன். இன்னும் ரெண்டு எடத்துல தண்ணி விழத்தான் செய்யுது. வைக்கதுக்கு பாத்திரம் இல்ல.

துணி மணியயெல்லாம் கட்டுல மேல தூக்கி வச்சிட்டேன். தூக்கம் வேற கண்ணை இழுத்துட்டு இருக்கு. செத்த நேரம் படுக்கலாம்னு பாத்தா இந்த தண்ணிக்குள்ள எங்க போயி படுக்க?
நமக்கே இப்படி இருக்கே , தொழுவுல மாடுவோ என்ன பாடுபடும்னு எட்டிப்பாத்தேன். தொழுவுக்குள்ள தண்ணி எட்டிப்பாக்கு. இன்னும் செத்த நேரம் மழை பெஞ்சா தண்ணி நெரம்பிரும். சள சளன்னு இந்த தண்ணிக்குள்ள அதுவோ என்ன பாடுபடும், பாவம்னு நினைச்சா அதுவோ பாட்டுக்கு வாலை ஆட்டிகிட்டு படுத்துகெடக்குவோ. அட ஆக்கங் கெட்டதுகளா... குளிரு கொஞ்சங் கூட ஒரைக்கல பாருங்களேன்.

இருக்குத எட்டு மாடுவோல்ல அந்த எருமைக்கு பின்னால வாயசைச்சுட்டு கெடக்கு பாருங்க, மூனு பொட்டு செவளை, சரியான திமுரு புடிச்சது. திமிருன்னா சும்மா இல்ல. எமகாதகன். பாருங்களேன்... சூலி பொத்தை பக்கத்துல மேய்க்கதுக்கு பத்திட்டுப் போனேன். எல்லா மாடுவோளும் கம்முனு வருது. இந்த ஆக்கங்கெட்ட மூதியும் அப்படி வரவேண்டியதுதான.

பெரிய தெரு வம்பன், வயல்ல கடலை போட்டிருந்தான். சும்மா போயிட்டிருந்த இது, திடுக்குன்னு வயல்ல போயி விழுந்துட்டு. மாடுன்னா வயல்ல விழத்தானய்யா செய்யும்னு நீங்க சொல்லுவியோ! நானும் இல்லங்கல. ஆனா, இது என்ன பண்ணிச்சு கேட்டேளா? வரப்போரமா தின்னுட்டிருந்த மாட்டை பத்துனா பயந்து ஓடும்னு கண்டிருக்கோம். இது உள்ள பூந்து வயக்காட்டை உண்டு இல்லைன்னு பன்னிட்டு. அந்த அறுவது வயசுல நான் எவ்வளவுதான் ஓடி வெரட்ட முடியும் சொல்லுங்க. கூடுன மட்டும் வெரட்டுனேன். வெரட்ட வெரட்ட வெளிய வரல. மொத்த வயலையும் நாசம் பண்ணிட்டு.

மண்ணுக்குள்ள இருக்கதால கடலைக்கு ஒண்ணும் சேதமில்லைன்னு வையுங்க. ஆனா, அந்த பய விடலை. பேரே வம்பம்னு வச்சிருக்கான். விட்டுருவானா என்ன? ஊரக்கூட்டி வெவாரத்தை வச்சிட்டான்.

இந்த அளவுக்கு போன பெறகு நானும் விடலை பாத்துக்கிடுங்க. இதுக்கு முன்னால இப்படி எதுவும் நடக்கலங்கதால, இந்த தடவை மட்டும் முத்தாரம்மனுக்கு ஒரு லிட்டரு எண்ணெய் வாங்கி ஊத்த சொல்லிட்டாவோ. அம்மனுக்கு அதை ஊத்திட்டு பெருசா ஒரு கும்புடு போட்டேன். இந்த அர்தலிக்கு நீதான் புத்தி சொல்லணும்னு.

வெவாரம் முடிஞ்சு ரெண்டு நாளு, அவன் வய பக்கமா மாடு பத்திட்டு போவலை. மூணாவது நாலு அந்தப் பக்கமா போனேன். இந்த அர்தலி புத்திதான் தெரியுமேன்னும் மூக்குல மூக்கணாங்கயிறு போட்டு இழுத்துட்டு போனேன். வாய்க்கா பாலம் தாண்டிச்சி பாருங்க, இந்த வம்பன் பய எதிர்ல வந்தான். வந்தவன் கம்முனுலா போவணும்.

‘இனும மாடு வயல்ல விழுந்தா பவுண்டிக்கு பத்திட்டு போயிருவேன்,னு சொன்னாம். இதுலதாங்க எனக்கு ரோசம் வந்துட்டு. பிரச்னை அன்னைக்கே முடிஞ்சு போச்சு. இன்னும் என்ன வீராப்பு வேண்டி கெடக்கு? எம்மாட்டை இவன் எப்படி பவுண்டிக்கு பத்திட்டுப் போவான்? மூஞ்சியில அடிச்சாப்ல சொன்னேன்,‘அப்படி நடந்தா எங்காதை அறுத்துட்டு ஊருக்குள்ள அலையுதேன்,ன்னு.

‘நீ ஒரு அப்பனுக்கு பொறந்தென்னா இன்னொரு மாடு வயல்ல விழட்டும், அது நடக்கா இல்லையானு மட்டும் பாரு,

‘நீ பாருல வெறுவாகெட்டவன'

‘யாரை வெறுவா கெட்டவனங்க'

‘ஒன்னயதாம் சொன்னேன்'

‘உன்னய என்ன செய்யுதம்னு பாரு'

‘பேசாத செய்யு'.

போய்ட்டாம் அந்தப் பய. ஒரு நாலஞ்சு நாளு கழிச்சு கருக்கல்ல மாடுவோளை தொழுவுக்குள்ள பத்திட்டு நான் அருணாச்சலம் சுக்காப்பி கடைக்கு போயிட்டேன். அங்க போனா சீக்கிரம் வர முடியுமா சொல்லுங்க... மாட்டுக்கு போன எல்லா பயலுவோளும் அப்பதான் வருவானுவோ. காலையில போயிட்டு அடஞ்சிதான் வாரதால, ஊருக்குள்ள என்னமும் கதை நடந்தா அப்பதான் பேசுவாவோ.

அன்னைக்கு பாத்து பத்தமடையா மவ, அப்பளப்பு விக்குதவன் கூட ஓடிபோயிட்டாளாம். கதை சீக்கிரம் முடியுமா? ரொம்ப நேரம் ஆயிபோச்சு. எல்லா கதையும் பேசிட்டு, வீட்டுக்கு வந்தா அளிக்கதவு தெறந்து கெடக்கு. அந்த அர்தலிய காணலை. அந்த அர்தலின்னா மூனு பொட்டு செவளை.

ஒரு பக்கமும் போவாத... எங்கபோயிருக்கும்னுட்டு, சோமுதாத்தா வைக்கப்படப்பு, பெராமாச்சி தேவரு தோட்டம்னு, சுப்பையா கோனாரு தொழுவுன்னு தேடுதேன் தேடுதேன் கண்டுபிடிக்க முடியலை. நான் தேடுததை பாத்துட்டு பக்கத்தூட்டு பச்சை பய, என்ன தாத்தா என்ன தேடுதியோ,ன்னான். வெஷயத்தை சொன்னதும் வாரும்யா நானும் வாரேன்னு வந்தாம். எனக்கு சின்ன சந்தேகம் வந்துச்சு. வம்பன் வயலுக்கு கண்டா போயிருக்குமோன்னுட்டு. கடலை எல ருசி இதை அங்க இழுத்திருக்கும்னு நெனச்சேன். வேக வேகமா போய் பாத்தா... வயலுக்குள்ள முள்ளம் பன்னி மாதிரி முதுவு தெரியுது. தலையை கவுத்து போட்டுட்டு செடிய நொறுக்கிட்டு இருக்கு. எனக்கு கெதக்குனு ஆயிபோச்சு.

சனியன் மாடு, எங்காதை அறுக்கணும்னு முடிவுபண்ணுடுதான்னு, ஒரு கல்லை எடுத்து போட்டேன் ஒரு போடு. மூஞ்சியை தூக்கி பாத்துது. எனக்குன்னா கோவம் தாங்க முடியலை. பச்சைய பய பின்னாலயே போயி கயித்தை புடிச்சுட்டான். அந்தானி புளிய விளாரு கையில இருந்துச்சு. சளார் சளார்னு சாத்தி போட்டேன் சாத்தி. அந்தாப்ல, அது ஒரு பார்த்தது பாருங்க, கண்ணுல தண்ணி எட்டிப்பாத்துட்டு. எம் பொண்டாட்டி, ஏதாவது கோவத்துல நான் ஏசிட்டம்னா இப்படித்தான் பாப்பா. அதே மாதிரி இருந்துச்சு. எனக்கு அவ ஞாபகம் வந்துட்டு.

புளிய விளாரை தூரவீசிட்டு பச்சைட்ட, மாட்டை பத்தியார சொன்னேன். வயல்ல விழுந்தது யாரும் பாக்கலை; பிரச்னை இல்லன்னு நெனச்சா, கருப்பசாமி பய வந்துட்டாம். இவன், வம்பனுக்கு மச்சினன். சொல்லாம விடுவானா? பயலுவோ எங்க கோளு மூட்டலாம். எவனை கவுக்கலாம்னு நினைச்சிட்டிக்கானுவோ. இவன் எப்படி சொல்லாம இருப்பான்? ராவோட ராவா போயி ஊதிருப்பாம்

காலைல விடிஞ்சும் விடியாம இருக்கும் போது வந்துட்டான் வம்பன். கெட்ட கெட்ட வார்த்தையில திட்டுதாம். கோவம் கோவமா வருது. என்ன செய்ய முடியும்? இந்த அர்தலி தப்பு பண்ணிட்டுலா வந்திருக்கு. நான் வாயே தெறக்கலை. மத்த நேரமா இருந்தா கொரவளைய அறுத்திருப்பேன்.

என்னைய ஏசிட்டு, நேரா தொழுவுக்குள்ள போயி வம்பன் மாட்டை அவுத்தாம் பாருங்க, இந்த அர்தலி கொம்பை லேசா சிலுபிட்டு. கொம்புகிட்ட போயா மூஞ்சியை வச்சிருப்பாம்? மோற கட்டைக்கு கீழ ஒரு இழு. குபுக்குன்னு ரெத்தம். கட்டை வெரலு நீளத்துக்கு பொந்துபோட்டுருக்கும்.

‘ஏ பேதில போவாம், மாட்டை வச்சி கொல்ல பாக்கானே,ன்னு அவயம் போடுதான். மொகம், நெஞ்சுன்னு ரெத்தமா வடியுது. வேகமா போயி துண்டை எடுத்து ரெத்தம் வார இடத்துல பொத்துனேன். ‘நீ அமுக்காத, துண்ட எடு. நான் பாத்துக்கிடுதே,ங்கான். நானும் விடலை. ‘எம்மேல உள்ள கோவத்தை பெறவு காட்டுன்னுட்டு, பாய் டாக்டரு வீட்டுக்கு கூட்டிட்டு போயிட்டேன். டாக்டரு, தையலுதான் போடணும். முன்னூரு ரூவா ஆவும்னு சொன்னாரு. எம்மாடு முட்டுனதுக்கு அவ எங்க துட்டை அவுப்பான்? இருநூத்தி நாப்பது ரூவாதான் இருந்துச்சு எங்கிட்ட. கொடுத்தேன்.

இதுக்குள்ள வெஷயம் வேற மாதிரி பரவி, டாக்கரு வீட்டுல கூட்டம் கூடிட்டு. அவன் சொக்காரனுவோலாம் என்னை அடிக்க வந்துட்டானுவோ. பெறவு வெவரமா சொன்னேன். மானங்கெட்ட கேள்வி கேட்டனுவோ.

எனக்கும் ஆதரவா ரெண்டு பேரு பேசத்தான் செஞ்சாம். என்னதான் பிரச்னைனாலும் தொழுவுக்குள்ள போயி இவன் ஏன் மாட்டை அவுக்காம்,னு கேட்டானுவோ. ஆனா, பிரச்னை இதோட முடியலை.

வம்பன் பயலுக்கு வேற என்னவோ நோயிருந்துருக்கு. சக்கரை சக்கரைன்னானுவோ. நான் என்னத்தை கண்டேன். புண்ணும் ஆறலை, நோயும் தீரலை. மூனே மாசத்துல பொட்டுனு போயிட்டாம்யா. என் நேரத்தை எங்க போயி சொல்ல? எனக்கு ஒரு வாரத்துக்கு தூக்கம் வரலை. பாவமா போச்சு. நாந்தான் கொன்னுப்போட்டேன்னு ஊரெல்லாம் பேசுதாவோ. நீங்களே சொல்லுங்க. இதுல நான் ஏதாவது பண்ணுனனா?

செத்த வீட்டுக்கு போனா, இங்க எதுக்கு வந்தாம்னு பேச்சு நடக்கு. நாலஞ்சு எளவட்ட பயலுவோ மாட்டை காலி பண்ணனுங்கான்னுவோ. அந்த எடத்துல எவன் என்ன பேசி எடுபடுங்கியோ?

பெறவு ரெண்டு மூனு மாசத்துல இந்த பிரச்னையெல்லாம் அடங்கிபோச்சு. இந்த அர்தலி என்ன செஞ்சது தெரியுமா? நம்ம காக்கநல்லூராம் வீட்டுப் பசு பின்னாலயே அலையுது. ஊருல பசுமாடாயா இல்லை? அது சரியான பசு. சும்மா கொழு கொழுன்னு லட்சணமா இருக்கு பாத்துக்கிடுங்கோ. நெறய வெல கொடுத்து வெளிய எங்க இருந்தோ வாங்கிட்டு வந்திருக்கான். பாலும் அதிகமா கொடுக்குமாம். நல்ல தெடமான பசுதான். இருந்தாலும் ஒரு இது வேண்டாமா?
அது ஈனி, மூனு நாளுதான் இருக்கும். அதுக்குள்ள அது பின்னாலயே மூக்கை வச்சுட்டு சுத்துனா, அவன் சும்மா வுடுவானா? நாளுநாளு வெரட்டுனாம். அஞ்சாவது நாலு அவன் வீட்டு தொழுவுல புடிச்சு கெட்டிப்போட்டுட்டாம். அவங்கிட்ட வெவாரமெல்லாம் கெடயாது. வெட்டுக்குத்துதான். இது கெடக்குமா? மத்தியானத்துலயிருந்து ராத்திரி வரை கெடந்திருக்கு. வைக்கலு கூட போடலை.

நான் மாட்டை காணலைன்னு நாயா பேயா தேடுதேன். திடீர்னு பாத்தா கயித்தை அத்துக்கிட்டு அவன் வீட்டு வைக்கப்படப்பை நாசம் பண்ணிட்டு இங்க வருது. எங்க என்ன பண்ணிட்டு வருதுன்னு தெரியலையேன்னு நான் முழிச்சுட்டு இருக்கேன். காலையில காக்கநல்லூரான் தேடி வாராம். ஒரே பிரச்னை போங்க. நல்லவேளை வயசாலிகிட்ட என்னத்தை சண்டை போடன்னு நெனச்சானோ என்னவோ? பெரிசு பண்ணாம போயிட்டாம்.

பெறவு எல்லாரும் காயடிச்சு போடுன்னாவோ. மனசு கேக்கலை. அது பாவமில்லையா? சரி, இதை இனும மேய்க்கதுக்கு பத்திட்டு போவாண்டாம். கெட்டியே போட்டுரலாம்னு நெனச்சேன். கெட்டிப்போட்டாலும் கெடக்கணும்லா? அத்துட்டுலா போயிரும்னு நெனச்சிட்டு இருக்கும்போதே பச்சை பய, அவன் வீட்டுல இரும்பு சங்கிலி கெடக்குன்னு சொன்னான். கொண்டான்னு வாங்கி கெட்டி போட்டுட்டேன். ராத்திரியானா ‘ம்ம்மா,ன்னு கத்தும். ரெண்டு நாளா மனசை தெடபடுத்திட்டு இருந்துட்டேன். மூணாவது நாளு முடியலை. புலி குட்டி மாதிரி சுத்துன மாட்டை இப்படி கெட்டுல போட்டா என்னாவும்? நம்ம பிள்ளைய இப்படி போட முடியுமா?ன்னு யோசனை. மாட்டை பாக்க பாவமா இருந்துச்சு. அவுத்து விட்டுட்டு, மறு நாளு மாடுவோளோட மேய்க்க பத்திட்டு போனேன்.

மஞ்சப்புளி கொளத்துல மாடுவோ மேய்ஞ்சிட்டு இருந்ததுவோ. மேலத்தெரு கண்ணம்பி பயலும் மாடு பத்திட்டு வந்திருந்தான். நல்ல புல்லும் கோரையுமா இருந்ததுல மாடுவோளுக்கு நல்ல வேட்டை.
பக்கத்துல பட்றையன் கோயில் திண்டுல அரச மரத்து காத்து ஜிலு ஜிலுன்னு வருது. கண்ணம்பி பய ரெண்டு பீடியை ஊதிட்டு துண்டை விரிச்சுப் படுத்தாம். நானும் அவன் கூட கதை பேசிட்டுப் படுத்தேன். முழிச்சுப் பாத்தா மாடுவோளை காணும். எங்க போயி தொலைஞ்சதுன்னு பாத்தா கொளத்து கரைமேல மாடுவோலாம் நிக்கு. இந்த அர்தலியை காணலை. திரும்பவும் வில்லங்கத்துல கொட்னு விட்டுட்டான்னு முழிச்சுட்டு இருக்கேன்.

கீழ பத்து கரையில ஒருத்தன் மாட்டி இழுத்துட்டு போயிட்டிருக்கான். இது மாதிரியும் தெரியுது. இல்லங்கத மாதிரியும் இருக்கு. போய் பாக்கலாம்னு போனா, நம்ம செவனாண்டி பய, இந்த அர்தலிய இழுத்துட்டு போறான். நெனச்சது நடந்து போச்சு. என்ன எழவை பண்ணிச்சோ தெரியலையே. ஒரே எரிச்சலா இருந்தது. இப்படியா ஒரு மனுஷன் தெனம் தெனம் இதோட அழுவாம்? ஊரு ஒலகத்துல இப்ப்படியாய்யா மாடுவோ இருக்கு. அவன் என்ன சொல்ல போறாம்னு தெரியலையேன்னு மஞ்சப்புளிச்சேரிக்கு போயிட்டேன்.

செவனாண்டி பய கம்யூனிஸ்ட் கொடி கம்பத்துக்கு கீழ உக்காந்திருக்கான். என்னைய பாத்ததும், ‘யோவ் வாரும். என்னய்யா எங்க ஊருக்கு அதிசயமா வந்திருக்கீரு,ன்னான். எம்மாடுதான் அதுன்னு தெரிஞ்சா என்ன ஆவான்னு தெரியலையேன்னு யோசனை. அவன் பக்கத்துல உக்காந்தேன். ‘காபி சாப்பிடுதேளா,ன்னான். வேண்டாம்னு தலையாட்டிட்டு, ஒரு மாடை புடிச்சுட்டு வந்தியேன்னேன் பாருங்க. சுருக்குனு கோவம் வந்துட்டு.

‘ஆமா, சனியன் புடிச்ச மாடு. கீரைய பூரா காலிபண்ணிட்டு. நானே ராசா ஐயருட்ட வட்டிக்கு வாங்கி இதை போட்டிருக்கேன்'

‘மாடு நம்ம மாடுதாம்'

‘என்னது நம்ம மாடா... இங்கரும் நான் இதுவரை செலவழிச்ச துட்டை வச்சிட்டு மாட்டை கூட்டிட்டு போரும். நீரெல்லாம் ஏம்யா மாடு வளக்கேரு. ஊரான் வயக்காட்டுல தின்னுட்டு வரும். நீரு பாத்துட்டு இருப்பேருன்னா?'

‘இப்படி வெட்டு ஒண்ணு ரெண்டு துண்டுன்னு பேசுனா எப்படி?'

‘பெறவு எப்படி பேசணும்?'

இப்படி பேசிட்டிருந்ததை கேட்டுட்டு நல்லமுத்து நம்பியாரு வந்தாரு, பேச்சு சூடா போவது வரை சும்மா நின்னுட்டு, நானுறு தெண்டம் கொடுக்கணும்னு சமானம் பேசுனாரு. நானும் ஒண்ணும் சொல்லலை. போய் தொலையுதாம்னு, ‘நாளைக்கு தாரேன்,னு சொல்லுட்டு மாட்டை அவுத்துட்டு வந்துட்டேன்.

ஊரு பூரா இந்த மூனு பொட்டு செவளை மேல எரிச்சலா இருக்காவோ. ஒரு ரெண்டு பேரு வந்து, ‘அதுதான் இந்தா வரத்து வருதுலா. வித்து தொலைக்க வேண்டியதுதானே,ன்னானுவோ. எனக்கு சுள்ளுனு கோவம் வந்துட்டு. விக்கதுக்காயா நான் மாடு வளக்கேன். பேச வாரானுவோ பாருங்க.


மழை இன்னும் விடலை. தூறிட்டே இருக்கு. இன்னைக்கு மேய்க்கதுக்கு போவ முடியாது. கொஞ்சம் போல வைக்கலு கெடக்கு. அதை அள்ளி, எல்லா மாடுவோளுக்கும் வச்சிர வேண்டியதுதாம். சுக்காப்பி கடைக்குப் போவலாம்னா கொங்காணி கிழிஞ்சு போயி கெடக்கு. சாக்கை மூடிட்டு போலாம்னா அங்க எல்லா பயலும் சிரிப்பானுவோ.
அங்கென்னமோ சத்தம் கேக்குத... என்னயா அது? ஏ பேதில போவாம் மாடு, கெடுத்துபோட்டே. எய்யா அந்த அர்தலி அத்துட்டு போவுதுயா... எவன் தாலிய அறுக்க போதுன்னு தெரியலையே...
‘க்கிய... க்கிய... வந்தம்னா முதுகு தொலிய பிச்சிருவேன். க்கிய... க்கிய... பய மாடு கேக்காம வேகமாலாயா போவுது... எய்யா யாராவது புடிங்களேன்.

- என் தொகுப்பிலிருந்து