Saturday, December 9, 2017

ஒரு முன்னாள் காதல் கதை

'யாரு சுடலையாடெ?'

-முகத்தைக் கூர்ந்து பார்த்தபடிக் கேட்டார் அந்தப் பெரியவர்.

'ஆமா...'

'அடப்பாவி பயல... இப்டியா, ஒரேடியா ஊரை மறந்து போவ? கொடைக்கு கூட வரமாட்டேங்கியெ?'

சுடலை மெதுவாகப் புன்னகைத்தான். அந்தப் பெரிய மீசையை கொண்ட வயதானவர் கேட்டார், 'என்னைய யாருன்னு தெரியுதா?' என்று.

'தெரியாம இருக்குமா? சுப்பையா மாமால்லா?' என்றதும் அவர் சிரித்துக்கொண்டார். தோளில் கிடந்த துண்டை எடுத்து தலையில் கட்டினார்.

'ரயில்ல உக்காந்திருக்கும்போதே, சொடலையாதாம் இருக்கும்னு நெனச்சென். இருந்தாலும் கொஞ்சம் புடிபடலை பாத்துக்கெ. வயசாயிட்டுல்லா?'

'ஆங்...'

'நாங்கள்லாம் சொந்த பந்தம் இல்லயாடா ஊருல? ஒரு நல்லது பொல்லதுக்கு கூட வரலைன்னா, பெறவு என்னடெ மனுஷன் நீ? இங்க யாருதாம் தப்பு பண்ணல? எல்லாரும் யோக்கியனாவா இருக்காம்? கொலைகாரப் பயலுவோளே ஒண்ணுமே நடக்காத மாதிரி அலஞ்சுட்டு இருக்கானுவோ. நீ என்ன பண்ணிட்ட, ஊரு ஒலகத்துல பண்ணாத தப்பை?'

சுடலை எதுவும் பேசவில்லை. இது தேவையில்லாததாக இருந்தது. எல்லோரும் பழசை மறந்து, இனி புதிதாகப் பார்க்க வேண்டும், பழக வேண்டும் என்று நினைத்துதான் ஊருக்கு வருகிறார். இந்த நேரத்தில் சுப்பையா மாமாவின் பேச்சு எரிச்சலைத் தந்தது. பழசை நோண்டி நோண்டி இன்னும் புண்ணானதையே புண்ணாக்கிக் கொண்டிருக்கும் இவர்களைத் திருத்தவே முடியாதா என நினைத்தான். இருந்தாலும் பரவாயில்லை. இவரை போன்ற சிலருக்கு மட்டும்தான் தன் பழங்கதைத் தெரியும். அடுத்தடுத்த தலைமுறைகளுக்குத் தெரிய வாய்ப்பில்லை.

வியர்வையை ஊற்றென வடிய வைத்துக்கொண்டிருந்தது ஆடி மாத கோடை. ஆடாமல் அசையாமல் சிலை மாதிரி நின்றுகொண்டிருந்தன மரங்கள். இந்த வெயிலிலும் எதையோ தேடிப் பறந்துகொண்டிருந்தது சில பறவைகள். செங்கோட்டை செல்லும் ரயிலில் இறங்கி, ஊரை விட்டுத் தனியாக இருக்கும் ஸ்டேஷனில் இருந்து நடக்கத் தொடங்கினார்கள். சுடலைக்கு முன்னே சுப்பையா மாமாவும் சுடிதார் அணிந்த இரண்டு இளம்பெண்களும் ஒரு வயதானப் பொம்பளையும் சென்றுகொண்டிருக்கிறார்கள்.

தலையில் இறங்கும் சூட்டின் தகதகப்புக்கு ஒரு கர்சிப்பை அதில் போட்டுக்கொண்டார் சுடலை. செம்மண்தரை தாண்டி சில அடிகள் வைத்ததுமே, கருங்கல் சாலை.

ஸ்டேஷனுக்கு வெளியே இருந்த அரச மரம் அப்படியே இருக்கிறது. அதில் கட்டப்பட்டிருந்த திண்டு, மரத்தின் வேர்களால் வெடித்தும் அதில் இருந்த சின்ன பிள்ளையார் சிலை கொஞ்சம் சரிந்தும் இருக்கிறது. இடமும் வலமுமாக பெரும் கூண்டு போல நிழல்களால் மூடி இருக்கும் நாவல் மரத்தையும் புளியமரத்தையும் காணவில்லை.

'எத்தன வருஷமாச்சு?' என்று மனதுக்குள் நினைத்துக்கொண்ட சுடலை, தோளில் தொங்கிய பையை சரிபடுத்திவிட்டு பிள்ளையாரைப் பார்த்துக் கும்பிட்டார். 'என்னய ஞாபகமிருக்கா பிள்ளையாரே' என்கிற நினைவூட்டல் கும்பிடு அது. திண்டில் உட்காரலாமா என்று யோசித்தார். யாருமற்ற அந்த இடம் இப்போதும் பெரும் தனிமையைக் கொண்டிருக்கிறது. தூரத்தில் பொட்டல் காடாகக் கிடந்த இடம் கோழிப்பண்ணையாக மாறியிருக்கிறது.

'வாடெ, பேசிட்டே நடப்போம். வெயிலு இந்தா பொள பொளக்கு' என்ற சுப்பையா மாமா நின்று சுடலையுடன் சேர்ந்துகொண்டார்.
'ஒம்மவனுக்கு கல்யாணம்னு சொன்னாவோ?

'ஆமா...'

'நீ ஊருக்கு வரலைன்னாலும் நாங்க நெனச்சுக்கிடுவோம். இன்னா இருக்க தெங்காசிக்கு வாரெ. ஆனா, ஊருக்கு வரமாட் டெங்கெ? போன பொங்கலு போட்டியில கூட ஒங் ஞாவம் வந்துச்சுன்னா பாரென்'

'ம்ம்...'

'இப்பமாது சொந்த பந்தம் தேடுச்சே'

'பத்திரிகை கொடுக்கணும்லா'

'ஆயிரம் இருந்தாலும் இந்த மாதிரி விசேஷத்துல சொந்த பந்தம் இல்லாம முடியுமாடா? இன்னா, தேடி வந்துட்டல்லா?'

'ஊருக்கு வந்து இருவது இருவத்தஞ்சு வருஷம் இருக்குமா?

'இருவத்தியேழு வருஷம்'

'ஏ, பாவி பயல. வைராக்கியமா இருந்துட்டியடா...'

சுடலை, ஊரில் கபடி வீரனாக அறியப்பட்டிருந்தான். பொங்கல் விளையாட்டுப் போட்டிகளில் முக்கியமானதாக இருந்தது கபடிப் போட்டி. சின்னப் பயல்கள் செட், வாலிபர்களுக்கான செட், இளைஞர்களுக்கான செட், கொஞ்சம் வயது முதிர்ந்தோர் செட் என கபடி ஆட்டம் பிரிக்கப்பட்டிருந்தது. விளையாட்டும் அந்த வரிசைப்படியே ஆரம்பிக்கும்.

இந்தப் போட்டிகள் நடக்கும் இடம், உள்ளூரில் கொஞ்சம் வசதி படைத்தவரான கருப்பையாவின் வீட்டின் எதிரில். கபடி போட்டியில் பேரார்வம் கொண்டவரான அவர் வீட்டு மாட்டு வண்டிகள் இலவசமாக நான்கைந்து லோடு ஆற்றுமணலை அடித்திருக்கும். பெருங்கூட்டத்துடன் இருக்கும் அவர் வீட்டுப் பெண்கள், கோலப்பொடி கொண்டு வண்ணக்கோலம் போட்டு அழகுபடுத்துவார்கள் அந்தப் பகுதியை. மாலையில் டியூப் லைட் வெளிச்சம் பளிச்சென மின்ன, கபடி போட்டிக் கடுமையாக நடக்கும்.

அந்த வசதி படைத்த வீட்டில் ஒருத்தியாக இருந்தாள், பேரழகு எதையும் பெருமளவு கொண்டிராத வள்ளி நாயகி. ஆனாலும் அவளிடம் ஏதோ ஈர்த்தது சுடலைக்கு. யாரையும் எடக்காக பேசியே பழக்கம் கொண்ட அவளுக்கும் சுடலைக்கும் காதல் வளர்ந்தது இந்தக் கபடி போட்டிகளின் போது.

சண்டைச் சச்சரவுகளையும் சொந்த கோபத்தை மையப்படுத்திய தாக்குதல்களையும் உள்ளடக்கிய இந்தப் போட்டிகள், அடுத்தப் பொங்கல் வரை பேசப்படும் என்றால் இதன் வீரியத்தைப் புரிந்துகொள்ளலாம்.

காதல் லேசாக முளைவிட ஆரம்பித்ததுமே, பொங்கலுக்கு  மட்டுமே நடக்கும் கபடி போட்டியை ஒவ்வொரு வாரமும் சனி, ஞாயிறுகளில் விளையாடுவது என்கிற சூழலுக்கு ஊர்க்காரர்களைக் கொண்டுவந்தான் சுடலை. இதற்கு அவனுக்கு உதவி செய்தது, உள்ளூரில் வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கும் வள்ளிநாயகியின் அக்காள் கணவர் இசக்கி. அவருக்கும் சுடலைக்கும் வயது வித்தியாசம் தாண்டிய நெருக்கம் ஏற்படுவதற்கு காரணம், பீடி.

ஊரில் எவன் கூடச் சென்று பீடி குடித்தாலும் அரசல் புரசலாக பெரிய வீட்டுக்குள் கொளுத்திப் போட்டுவிடுகிறார்கள். 'என்னம்மா, மருமவம் பீடி குடிக்காராமே... காதுல விழுந்துச்சு. சொல்லி வை, இதெல்லாம் நம்ம குடும்பத்துக்கு ஆவாது' என்று மாமனார், இவர் காதுபடவே மகளிடம் கடுமையாகச் சொல்ல, அப்போது இசக்கிக்கு ஏறும் கோபத்தை அடுத்த சில நொடிகளிலேயே பயம் படுக்கப் போட்டுவிடும். இதன் அவஸ்தையை வீட்டோடு மாப்பிள்ளையாக இருப்பவரால் மட்டுமே உணர முடியும்.

'எங்க மாமனாருட்ட ஒரு நாளாது கேட்கணும்னுதான் இருக்கென்'
'என்னன்னு?'

'பீடி குடிக்கதுக்கும் ஒங்குடும்பத்துக்கும் என்னவே சம்பந்தம் இருக்குன்னு' என்பார் இசக்கி.

'அதெல்லாம் வேண்டாம்ணே. ஒரே வீட்டுக்குள்ள கெடந்து கரைச்சலு பண்ணிட்டிருந்தா நல்லாவா இருக்கும்?' என்கிற சுடலை, அவன் வீட்டுத் தொழுவுக்கு அவரை பீடி குடிக்க அழைத்துச் செல்வான். சுடலைக்கு பீடி பழக்கம் இல்லையென்றாலும் ஒரு கம்பெனிக்காக, அவருடன் அலைவான்.
பாவூர்சத்திரம் மற்றும் கடையத்தில் கபடி அணிகள் இருந்தன. அங்கு நடக்கும் போட்டிகளின் செய்தி, பத்திரிகைகளில் வந்ததை வாசித்துவிட்டு நாமும் ஒரு டீமை உருவாக்கலாம் என்றும் அதற்கு ஒவ்வொரு சனி, ஞாயிறுகளில் கபடி பயிற்சியை நடத்தலாம் என்றும் அப்படி நன்றாகப் பயிற்சிப் பெற்றால் அவர்கள் நடத்தும் டோர்னமென்ட்டுகளில் கலந்து பரிசுகள் வெல்லலாம் என்றும் சொன்னான் சுடலை. இதை இசக்கியும் அடிக்கடி பெரிய வீட்டில் சொல்ல, 'சரி, ஒரு டீமை உருவாக்குவோம்' என்றார்கள்.

இதைக் காரணமாக வைத்தே, தினமும் அந்த வீட்டுத் திண்ணைக்கு வந்துவிடுவான் சுடலை. கிராமத்துத் திண்ணைகள், கூடி கதை பேசும் இடமாக மட்டுமல்லாமல், காதல் வளர்க்கும் இடமாகவும் இருந்ததற்கு சுடலை சாட்சி. அவள் வீட்டுக்குள்ளிருந்து எப்போது வெளியே வருவாள் என்ற தேடலிலேயே அவன் பார்வை இருக்கும். அவளின் நடமாட்டம் இல்லையென்றால் வாசலில் நின்று கொஞ்சம் உரக்கக் கத்தியபடி, 'கொஞ்சம் தண்ணி...' என்பான். அவளிருந்தால் ஒரு சொம்பில் காதலைச் சுமந்தபடி வருவாள். இல்லையெனில் வீட்டுக்கு எதிரில் நிற்கும் வில் வண்டியில் உட்கார்ந்துகொண்டு அவள் வீட்டு ஜன்னலையே பார்த்துக்கொண்டிருப்பான், அவள் எப்போது வருகிறாளோ, அதுவரை. பிறகு அவள் இவனைக் காணும் பொருட்டு, ஏதாவது புத்தகத்தை கையில் வைத்துக்கொண்டு ஜன்னலருகே உட்கார்ந்துகொள்வாள். பிறகு யாருக்கும் தெரியாமல் கண்களாலும் சைகையாலும் தொடரும் காதல்.

மாலையில் வாய்க்காலுக்குத் தண்ணீர் எடுக்க இரட்டைக் குடமெடுத்துச் செல்வாள் வள்ளிநாயகி. நெல் அவிக்க, மாடுகளுக்குத் தண்ணீர் காட்ட, தொழுவைத் தூத்து அள்ள என தண்ணீர் தேவை அதிகமாகவே இருந்தது அவள் வீட்டில். இதற்காக வீட்டில் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும் அண்டாகுண்டாக்கள், தொட்டிகள், தொழுவு தொட்டி என எங்கெங்கும் தண்ணீர் நிரப்பி வைக்கும் பொறுப்பு வள்ளிநாயகியுடையது. இதற்காக கரைபுரண்டு ஓடும் சின்னவாய்க்காலில் இருந்து, தலையில் ஒன்றும் இடுப்பில் ஒன்றுமாக இரட்டைக் குடத்தோடு அவள் வரும்போது, சைக்கிளில் அவள் பார்வை படும்படி எதிரில் மெதுவாகச் செல்வான் சுடலை. சில நொடி சந்திப்புதான் நேருக்கு நேர் நடக்கும். அந்த நொடி நேர அருகாமை புன்னகை தரும் சுகம் அவன் ஆயுளை இன்னும் அதிகரிக்கச் செய்யும்.

யாருமற்ற முடுக்கில், அவள் வலது கையால், இடது பக்க இடுப்பில் இருக்கும் குடத்தில் கைவிட்டு தண்ணீர் அள்ளி, அவன் மீது எறிவாள். சிலிர்க்கும் அவனுக்கு. இதையடுத்து அவளை விட்டுவிட மனசு வராது. அவள் பின்னாலேயே போவான். பின் சிறிது தூரத்தில் திரும்பி வந்து, அதே போல காதல் விளையாட்டு.
இந்தக் காதல் ஒரு பொங்கல் நாளில், வீட்டோடு மாப்பிள்ளை இசக்கிக்குத் தெரிய வந்ததும் கெதக்கென்றிருந்தது சுடலைக்கு.

'இந்த வயசுல இதெல்லாம் இல்லாம எப்படி இருக்க முடியும்? நான் கண்டுக்கிடமாட்டேன். உன் லவ் மேட்டருக்கு  என்ன உதவின்னாலும் நா பண்ணுதம். நீ என் தம்பி மாரில்லா' என்றான் இசக்கி.

தம்பிகளின் காதலுக்கு எந்த அண்ணன்கள் உதவியிருக்கிறார்கள்? இருந்தாலும் சுடலைக்குத் தெம்பாக இருந்தது.

'ஒன் வயசுலலாம் நான் எங்கூர்ல தெக்க ஒண்ணு, வடக்க ஒண்ணுன்னு ரெண்டு லவ்வுலா பண்ணுனேன்?' என்று பெருமையாக வேறு சொன்னான் இசக்கி.

'பெறவு ஏம்ணே, இங்க வந்து கல்யாணம் முடிச்செ?'

'விதில்லா. நெனச்சதெல்லாம் நடந்துட்டா வாழ்க்கையில சுவாரஸ்யமே இல்லாமல்லா போயிரும். அதாம், ஆண்டவன் எனக்கு இப்படி எழுதிட்டாம்'

'ஏம்ணே ஒங்க காதலுக்கு ஊருல ஒருத்தருமே ஒதவி பண்ணலையா?'

'பண்ணுனாவோ. ஒருத்திக்கு நாளைக்கு கல்யாணம் இருக்கும்போது, என்னைய நீ கூட்டிட்டு போயிருன்னு ஒரே அழுவ. எங்கய்யாட்ட சொன்னா, ஒனக்கே தெண்ட சோறு போடுதென். இதுல இன்னொன்னா... வாரிய பிஞ்சுரும்னாரு...'
'பெறவு?'

'எங்காதல் தோச்சுப்போச்சு. அவளுக்கு கல்யாணமாயிட்டு'

'இன்னொரு காதலு?'

'அவளுக்கு, வீட்டுல மாப்பிள்ளை பாத்ததும் சத்தம்போடாம ஓகேன்னு சொல்லிட்டு போயிட்டா. கல்யாண பத்திரிகை பாத்துதாம் தெரிஞ்சுகிட்டென். எங்கிட்ட ஒரு வார்த்த கூட சொல்லல'

'வருத்தமா இல்லையா?'

'இருந்துச்சு. அதை மட்டும் வச்சு என்ன செய்ய?'

கல்லூரிக்கு கோடை விடுமுறை. வள்ளிநாயகிக்கு வீட்டில் பெண் பார்க்கத் தொடங்கியிருந்தார்கள்.

பத்தையூரில் அதிக மாடுகளையும் பெருந்தொழுவையும் கொண்ட ஒரு வீட்டுக்கு அவளை வாக்கப்பட வைப்பதற்கான வேலைகள் நடப்பதை இசக்கி மூலமாக அறிந்தான் சுடலை. இப்போது என்ன செய்யலாம் என்கிற யோசனையையும் சொன்னான் அவன்.
'பேசாம அவளெ கூட்டிட்டுப் போயி திருச்செந்தூர் கோயில்ல தாலி கட்டிரு. கெட்டிட்டு தெங்காசியில இருக்கெ ஒங்க சின்ன மாமா வீட்டுக்குப் போயிரு. ஒரு ரெண்டு, மூணு நாளு சத்தம் போடாம இருந்தன்னா, பெறவு எங்க மாமனாரு உங்களைத் தேடி வந்து பேசி, ஒரு நல்ல நாள் பாத்து, கல்யாணத்தை பண்ணி வச்சிருவாவோ. என்ன சொல்லுத?' என்றான் இசக்கி.

'கல்யாணம் பண்ணி வைக்கலன்னா?'

'பெறவு நா எதுக்கு இருக்கென்? உயிரைக்கொடுத்தாவது பண்ணி வச்சிருவம்லா'

எப்போதும் குடும்பம் குடும்பம் என்று பெருமை பீற்றும், மாமனார் குடும்பத்தை அவமானப்படுத்த வேண்டும் என்கிற வெறி இசக்கிக்கு கடந்த சில வருடங்களாகவே இருந்தது. அந்த வெறிக்கு, காதலால் பலியானான் சுடலை..

இசக்கி சொன்னதை நம்பி காரியத்தில் இறங்கிய சுடலை, ஒரு சுபயோக சுபதினத்தின் அதிகாலையில் வள்ளிநாயகியை அழைத்துக்கொண்டு திருச்செந்தூர் சென்றான். சின்ன தாலி ஒன்றை அம்பாசமுத்திரம் நகைக்கடையில் வாங்கி, அதை மஞ்சள் கயிறில் முந்தைய நாளே கோர்த்து தயாராக கொண்டு சென்றிருந்தான். பெருங்கூட்டம் அலைமோதிய செந்தூரில் முருகனை வழிபட்டுவிட்டு அவளுக்குத் தாலி கட்டினான் சுடலை. ஓடி வந்து உட்கார்ந்துகொண்ட வெட்கத்துடன் இருந்த வள்ளி நாயகிக்கு ஊரில் இப்போது என்ன நடக்கும் என்பதே பெரும் கவலையாக இருந்தது.

மதியம் வரை திருச்செந்தூரில் சுற்றிவிட்டு, தென்காசியில் இருக்கும் மாமா வீட்டுக்கு பஸ் ஏறினார்கள். அவரும் அத்தையும் என்ன நினைப்பார்களோ என்ற கவலை வேறு அவனுக்கு இருந்தது.

கருப்பையா மிருகமாகியிருந்தார். மகன், மகளையும் மனைவியையும் திட்டித் தீர்த்துக்கொண்டிருந்தார். அதோடு ஜாடை மாடையாக, வீட்டோட மாப்பிள்ளை இசக்கியையும். கடைக்குட்டி என்று செல்லமாக வளர்த்தப் பிள்ளை, இப்படி கரியள்ளிப் பூசிவிட்டாளே என்கிற நினைப்பே, அவரது ரத்தக் கொதிப்பை அதிகரிக்கச் செய்தது. அதற்குள் விஷயம் ஊருக்குள் கிசு கிசுவாகப் பரவிக்கொண்டிருந்தது.  நெருங்கிய சொந்தம் மட்டும் அவர் வீட்டில் கூடியிருந்தார்கள்.

சுடலையின் அம்மாவிடம், யாராரோ வந்து விசாரித்துவிட்டு போனார்கள். 'ஒம்மவன் மட்டும் கையில கெடைக்கட்டும், தலைய எடுக்கமா இல்லையான்னு மட்டும் பாரு' என்ற மிரட்டல்களில் மகன் பற்றிய கவலையில் மூழ்கியிருந்தாள் அவள்.

கஷ்டப்பட்டு அவனைப் படிக்க வைத்துக்கொண்டிருந்தால், இப்படியொரு காரியத்தை பண்ணிட்டானே என்று நினைத்தவள், இதற்கு, அவன் கெரகம் சரியில்லை என்பதுதான் காரணமென நினைத்து, அவனுக்காக சாத்தூர் மாரியம்மனுக்கு முடிகாணிக்கை செலுத்துவதாக வேண்டிக்கொண்டாள்.

இரவில் வீட்டுக்குத் திரும்பிய, லாரி கிளீனராக வேலை பார்க்கும் நாராயணன், தென்காசி பேரூந்து நிலையத்தில் இவர்கள் இருவரையும் பார்த்ததாகவும் தனக்கு ஏற்பட்ட சந்தேகம் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது என்றும் சொன்னான்.

தென்காசி என்று இவன் சொல்வதற்கு முன்பே தகவல் தெரிந்துவிட்டதால் கருப்பையா வீட்டில் வேறு யோசனையே இல்லை. பஸ் ஏறினார்கள் நான்கைந்து பேர்.

தென்காசியில் தனது மாமா வீட்டில், அப்போது அறுத்த வாழை இலையில் காதல் மனைவியோடு சுடலை, சுடு சோறு சாப்பிட்டுக் கொண்டிருந்த போதுதான் அந்த வீட்டுக்குள் அவர்கள் நுழைந்தார்கள். சாப்பாடு அதற்கு மேல் இறங்கவில்லை இருவருக்கும்.

சுடலையின் மாமாவுக்கும் அத்தைக்கும் என்ன செய்வதென்று தெரியவில்லை. எப்படிப் பேசவென்றும் புரியவில்லை. வள்ளி நாயகியின் சித்தப்பா, பொறுமையாகவே சொன்னார்.

'ஏல, ஒரு வார்த்தை சொல்லியிருந்தா நாங்க கல்யாணத்தை பண்ணி வச்சிருக்கமாட்டமா? இப்படி அவசரப்பட்டுட்டேளே... செரி கெளம்புங்கெ. ஒரு நல்ல நா பார்த்து நாங்களே கல்யாணத்தை பண்ணி வைக்கோம்...'

வள்ளிநாயகிக்குக் கண்ணீர் பொத்துக்கொண்டு வந்தது. சித்தப்பாவைக் கட்டிப் பிடித்துக்கொண்டாள்.

'இதுக்கு ஏம்ல அழுத. எங்கிட்டயாது ஒரு வார்த்தை சொல்லியிருக்கக் கூடாதா, கூறுகெட்டவளெ?' என்றவர் சிறிது நேரத்துக்குப் பிறகு, 'சுடலை நீ வேணும்னா, இங்க ரெண்டு நாளு தங்கிட்டு வா. இவளை மட்டும் கூட்டிட்டுப் போறோம். எல்லாரும் ஒண்ணா போனா, எவனாது தப்பா பேசுவானுவோ, கேட்டியா? ஒண்ணும் கவலப்படாத, நீ ஒண்ணும் வேற எவனோ கெடயாது. ஒங்க கல்யாணத்தை நா நடத்தி வைய்க்கேன்' என்றார் மீசையத் தடவியபடி.

தலையாட்டினான் சுடலை. அவன் மாமாவும் அத்தையும் ஒன்றும் செய்ய முடியாமல் நின்றார்கள். ஒரு வாடகை கார் அமர்த்தப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டாள் வள்ளிநாயகி. காரில் ஏறிய பின் அவள் பார்த்த அந்த ஏக்கப்பார்வை, சுடலையை அப்படியே அள்ளித் தின்பதாக இருந்தது.

பிறகு நடந்ததெல்லாம் சினிமாவில் பார்த்தது போல்தான். ஊரில் இருந்து தென்காசிக்கு வந்த அவன் அம்மா, 'எய்யா சொடலை. நீ ஊருக்கு வராண்டாம். அந்தப் புள்ளைக்கு உள்ளூர்லயே மாப்பிள்ளை பாத்தாச்சு. அஞ்சு நாள்ல கல்யாணம். ஒன்னய கொலை பண்ண பேசிட்டிருக்கானுவோ' என்று கண்ணீர் விட்டாள்.
சுடலைக்கு என்ன செய்வதென்று தெரியவில்லை. தன் இயலாமையை நினைத்து மவுனமாக அழுதான். ஊருக்குச் சென்று நண்பர்களுடன் அவளைத் தூக்கிக்கொண்டு வந்து எங்காவது ஓடிப் போய்விடலாம் என்று பொங்கியது நினைவு. இதெல்லாம் நடக்காத காரியம் என்றும் புரிந்தது. வெறுப்பாக இருந்தது அவனுக்கு. பிறகு அவளுக்கு கல்யாணம் நடந்த நாளில், தென்காசியில் இருந்து சென்னைக்கு பஸ் ஏறினான். இனி எக்காரணம் கொண்டும் ஊருக்கு வரக் கூடாது என்று வைராக்கியமாக முடிவு செய்தான். தன் காதலைச் சிதைத்த அந்தச் சொந்தங்களின் முகங்களை இனி பார்க்கக் கூடாது என்று நினைத்தான். சில முடிவுகளைக் காலம் எடுத்துவிடுகிறது. அது நல்லதாகவோ, கெட்டதாகவோ.

சென்னையில் தனியார் மோட்டார் நிறுவனம் ஒன்றில் வேலை கிடைத்தது. அங்கேயே திருமணம். மூன்று பிள்ளைகள். காலம் வேகமாக ஓட, மூத்தமகனுக்கு இப்போது கல்யாணம். இதோ வந்துவிட்டான், மீண்டும் சொந்த ஊருக்கு.

ஒவ்வொரு வீட்டிலும், 'இப்படி வராம இருந்துட்டியெ...' என்றே விசாரித்தார்கள். பழைய விஷயம் எதையும் யாரும் கேட்கவில்லை. அது அவனுக்கு இதமாக இருந்தது. ஒரு வேளை மறந்திருப்பார்களோ என்னமோ. எல்லோரும் ஒரு பெரும் டம்ளரில் காபி மாதிரியான ஒன்றைத் தந்தார்கள். தவிர்க்க முடியாமல் குடித்து சகித்து விட்டு, ஓடி, ஆடிய தெருவில் நடந்தான். அவன் பாதங்களை நன்றாக அறிந்திருந்த செம்மண் தரை, இப்போது இல்லை. ஊர் மாறியிருந்தது. தெருக்கள், சிமென்ட் சாலையாகி இருந்தன. மரங்களடர்ந்த வீடுகளைக் கொண்ட தெருவில் மரங்களற்ற வீடுகள் அதிகமாக முளைத்திருக்கின்றன. ஆற்றிலும் வாய்க்காலிலும் தண்ணீர் இல்லை என்று பேசிக்கொண்டார்கள்.

'அவரு வீடுதான இது. அது இவரு வீடுதானெ?' என்று விசாரித்தபடி பத்திரிகை கொடுத்துக்கொண்டிருந்தான். ஒவ்வொரு வீடாகப் கொடுத்துக்கொண்டே சென்றவன், அந்த மச்சி வீட்டின் வாசலில் நின்று, 'பழனியண்ணன் விடுதானெ இது?' என்று விசாரிக்கப் போனான். வீட்டுக்குள் இருந்து  வள்ளிநாயகி வந்தாள். அதிர்ச்சியாகி நின்றான். காணாததை கண்ட மாதிரி அவனுக்குத் திடீர் படப்படப்பு. இந்த வீட்டில் அவளை அவன் எதிர்பார்க்கவில்லை. திடீரென்று பழங்காதல் மூளைக்குள் வந்து மின்னல் வெட்டிப் போனது. அவளோடு பழகிய காலம் கண்முன் நின்று காதல் பேசியது. இருந்தாலும் வார்த்தை வரவில்லை. ஆனால், அவள் இயல்பாக இருந்தாள். 'வீட்டுக்குள்ள வாங்க' என்றாள் புன்னகைத்தபடி.

'இவ்வளவு வருஷம் கழிச்சாவது ஊருக்கு வரணும்னு தோணுச்செ' என்று சிரித்துக்கொண்டு கேட்டாள். அவனுக்கு ஏதோ போல இருந்தது. அந்த 'ஏதோ போல'வை எப்படி விவரிக்க என்று தெரியவில்லை. நிறைய பேச வேண்டும் என நினைத்தான். எதை பேசவென்றும் வரவில்லை. பிறகு, 'மவனுக்கு கல்யாணம்...' என்றான் தயக்கமாக. 'கேள்விப்பட்டென்' என்ற வள்ளி நாயகி உட்காரச் சொன்னாள்.

ஒரு பிளாஸ்டிக் சேரில் அமர்ந்து வீட்டின் ஹாலை சுற்றி பார்வையை விட்டான். பிறகு அவளைப் பார்த்தான். அவளிடம் பெரிய மாற்றம் ஏதுமில்லை. தலைமுடி நரைக்கத் தொடங்கி இருக்கிறது. கண்களில் கண்ணாடி மாட்டியிருக்கிறாள். இது கூட அவளுக்கு அழகாகத்தான் இருக்கிறது.

சுடலை, தன்னைப் பார்ப்பதை உணர்ந்தவள் சிரித்துவிட்டு,  வீட்டுக்குள் திரும்பி, 'ஏ லட்சுமி காபி போட்டுக் கொண்டாட்டீ...' என்றாள்.

'யாருக்கு?' என்று உள்ளிருந்து கேட்டபடி வந்த லட்சுமி, வள்ளிநாயகியின் சாயலையே கொண்டிருந்தாள். 'இது என்னோட ரெண்டாவது மவா...' என்று அறிமுகப்படுத்தினாள் சுடலையிடம். தனது மகளாக இருக்க வேண்டியவள் என நினைத்துக்கொண்டான் சுடலை. இது தேவையில்லாத நினைப்புதான். பிறகு அவளிடம் திரும்பிய வள்ளி நாயகி, 'நான் சொல்லியிருக்கம்லா, சுடலைன்னு... இவங்கதான் அவங்க' என்றதும் புரிந்துகொண்ட லட்சுமி, 'ஓ ஒங்க பழைய ஆள்..?' என்று நாக்கைக் கடித்தாள். பிறகு தவறாக எதையும் சொல்லிவிட்டோமோ என்று சடாரென காபி போட ஓடினாள்.

சுடலைக்குத் தர்ம சங்கடமாக இருந்தது.

'நான் எதையும் வீட்டுல மறைச்சதில்ல' என்ற வள்ளி நாயகியிடம், 'கல்யாணத்துக்கு வந்திருங்கெ. தென்காசியிலதான்' என்றான். அந்த 'ங்க' அவளுக்கு அந்நியமாக இருந்தது. பிறகு சம்பிரதாயங்கள் முடிந்து கிளம்பும்போது வெளியில் அந்தச் சத்தம் கேட்டது.

'நாம்லாம் அந்த காலத்துல ரெண்டு லவ்வு பண்ணுனவன். இந்த வயசுல இதெல்லாம் இல்லாம எப்படி இருக்க முடியும்? உன் லவ் மேட்டருக்கு என்ன உதவின்னாலும் கேளு, நா பண்ணுதம். நா இருக்கம்ல. நீ என் தம்பி மாரில்லா...' என்ற சத்தத்தை எங்கோ கேட்டது போல் இருக்கிறதே என வாசல் தாண்டி வந்து பார்த்தான்.

ஒரு வாலிபனின் தோளில் கைபோட்டபடி சொல்லி க்கொண்டிருந்தான் வீட்டோட மாப்பிள்ளை இசக்கி.

No comments: