பெரிதாகக் கிளை பரப்பி இருக்கிற அரச மரத்தின் கீழே, கால்களை விரித்து அமர்ந்திருந்தார் பெரிய மூக்கன். அருகில், முன்பக்கம் கொடுக்கறுவாளைக் கொண்ட நீண்ட அவரது கம்பு. கொடுக்கறுவா குலை, காய்களைப் பறிக்க. வெண்கம்பியாகக் காட்சியளிக்கிற தனது மீசையைத் திருக்கிவிட்டுக்கொண்டார்.
தரை நோக்கித் ஆடிக் கொண்டிருந்த இலைகளற்ற கிளையில் தொங்கிக் கொண்டிருந்தது பழையச் சோறும் சுண்டக்கறியும் கொண்ட அவரது தூக்குச் சட்டி. பின்பக்கம் வறண்டு குட்டையாகக் காட்சியளிக்கிற குளத்தில், கொக்குகள் மீன்களைக் கவ்வும் முயற்சியில் காத்திருக்கின்றன.
கண்ணுக்கெதிரே ஆடுகள் மேய்ந்துகொண்டிருக்கின்றன. புற்களற்றுப் போன குளத்துக்கரையில் நேற்று கரம்பிய இடத்திலேயே இன்றும் கரம்பிக்கொண்டிருந்தன ஆடுகள். இல்லாத புற்களைத் தின்றபடியே முன்னேறிக்கொண்டிருந்தன அவை. அக்கம் பக்கம் இருக்கிற கருவைக்காய்களைக் கடித்து அரைத்து நொறுக்குவதில்தான் அவற்றுக்கு ஆர்வம். அதுதான் ருசியும் கூட.
கையில் வைத்திருக்கிற கம்பால், பெரிய மூக்கன் அக்காய் களைப் பறித்து போடுபவர்தான் என்றாலும் எழுபது எழுபத்தைந்து ஆடுகளுக்கும் எங்கிருந்து பறிக்க? அல்லது அத்தனை ஆடுகளுக்கும் காய்களுக்கு எங்கு போவ?
‘அதுவோ மேய்ஞ்சிக்கிடும்’ என்று உட்காந்தார். வெயில் சுள்ளென்று அடித்துக்கொண்டிருந்தது. பீடியை பற்ற வைத்துக்கொண்டார். இந்த நேரத்தில் எப்போதும் இங்கு வந்துவிடும் குத்தாலத்தை இன்று காணவில்லை. ஒரு வேளை, இன்று கீழப்பத்தில் ஆடுகளைப் பத்திக்கொண்டு சென்றிருப்பான். அவனுக்கு அதுதான் தோது. அவனுக்குப் பிடித்த மூக்குறிஞ்சா, அங்குதான் எள்ளுக்காவலுக்கு இருப்பாள். அவளிடம் பல்லைக்காட்டிக் கொண்டிருக்காவிட்டால் அவனுக்குத் தூக்கம் வராது.
துண்டை பின்பக்கம் வைத்து, உடலை மரத்தின் தூரில் சாய்த்தார். காற்று விட்டுவிட்டு வந்துகொண்டிருந்தது. தூரத்தில் தெரியும் அனலில் செம்மண் சாலை பொன்னிறமாக மின்னின. கருத்தப்பிள்ளையூர் போகும் வாத்தியார் அதில் சைக்கிளை மிதித்தபடி வியர்த்து விறுவிறுத்து வந்துகொண்டிருக்கிறார்.
லேசாகக் கண்ணை மூடிய பெரிய மூக்கன், திடீரென எழுந்து சுற்றும் முற்றும் பார்த்தார். அவருக்கு ஏதோ ஓர் சத்தம் கேட்டது. ஆனால், யாருமில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு இயல்புக்குத் திரும்பி மீண்டும் உடலை சாய்த்தார். இப்போதும் அதே சத்தம். தெளிவற்ற ஏதோ உளறலான குரல். யாருமற்ற இடத்தில் எங்கிருந்து வருகிறது இந்தச் சத்தம் என நினைத்தவர், மீண்டும் சுற்றும் முற்றும் பார்த்தார். இப்போது அந்தச் சத்தம் தெளிவாகக் கேட்டது. ‘ஏய் மூக்கா… போதும்டெ உங்கோவம். என்னைக்கு வாரென்னு சொல்லு?’ என்று இப்போதும் கேட்டது. எழுந்து உட்கார்ந்துகொண்டார்.
இது மனித அரவம் இல்லை. ஆட்களற்ற இடத்தில் யார் பேசிவிட முடியும்? இது கசமாடனின் அழைப்பு என்பது அவருக்குப் புரிந்தது. மரத்தின் மேலே ஓர் பெயர் தெரியாத பறவை இவரைப் பார்த்தபடி கீழே இறங்கி ஒரு கிளையில் அமர்ந்தது. அது கிருஷ்ணப்பருந்தின் சாயலைக் கொண்டதாக இருக்கிறது. ஆனால் கிருஷ்ணப்பருந்து அல்ல. இது ஏதோ விளையாட்டு என்பது அவருக்குப் புரிந்தது. சாமி விளையாட்டு. கசமாடன் அவரது குடும்ப சாமி.
‘இதென்ன இவ்வளவு வருஷமா இல்லாம கசமாடன் எங்கிட்ட பேசுதாம்?’ என்ற யோசனை அவருக்கு வந்தது. பிறகு நான்கைந்து முறை அதே சத்தம் அவரது காதில் கேட்டுக்கொண்டே இருந்தது. கண்ணை மூடினால் இதே சத்தம். எழுந்து உட்கார்ந்து ஆடுகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்.
வீட்டின் திண்ணையில் உட்காந்திருந்த பெரிய மூக்கனுக்குத் தூக்கம் வரவில்லை. பெரிய ஏப்பம் ஒன்று ஏ….வ் என்று எழுந்து காற்றாக வெளியே வந்தது. வலது காலை, தரையில் ஊன்றிக்கொண்டு, அருகில் அவருடன் படுத்திருந்த கொடுக்கு கம்பை, இடது கை தாங்கலுக்கு வைத்துக்கொண்டார்.
திண்ணையில் விரித்திருந்த துண்டை ஒரு கையால் எடுத்து உடலில் போட்டுக்கொண்டார். அதிக ஈரப்பதம் இல்லாத அந்தக் காற்று கூட அவருக்குக் குளிரைத் தந்திருக்க வேண்டும்.
மேலுக்கு சரியில்லாததால் கடந்த இரண்டு நாட்களாக மேய்ச்சலுக்கு ஆடுகளைப் பத்திக்கொண்டு செல்லவில்லை. மேலத்தெரு ஒத்தக்கண்ணுவின் ஆடுகளோடு பத்திவிட்டிருந்தார். அவனுக்கு ஆத்திர அவசரமென்றால் ஆடுகளை, இவரிடம் பத்திவிடுவதும் வழக்கம்தான்.
ஆடு மேய்க்கும் இடங்கள் இப்போது கட்டிடங்களாகிவிட்டன. வயக்காடுகள் மனைகளாகிவிட்ட பிறகு ஆடுகளை எங்கே மேய்க்க? ஆற்றில் தண்ணீர் இல்லாததால் வயக்காடுகள் பச்சையை இழந்துவிட்டன. தோப்பு துரவுக்குள் புற்களுக்குப் பஞ்சம். இப்போது இரண்டு கிலோமீட்டர் தூரம் காட்டுக்குள் மேய்ச்சலுக்குச் செல்ல வேண்டியதாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச காலங்களில் மேய்ச்சல் நிலமே இல்லாமல் போய்விடுமோ என்கிற கவலை பெரிய மூக்கனுக்கு இருக்கிறது.
வர மறுக்கின்ற கிடாயை மூன்றாவது வீட்டுத் தொழுவில் இருந்து தரதரவென்று யாரோ இழுத்துவருவதைப் பார்த்ததும் கையை கண்களுக்கு மேலே வைத்து, ‘யாரு, மாசானமால?’ என்று கேட்டார் குத்துமதிப்பாக.
‘ஆமா’
‘ஏம்ல. இப்டி இழுத்துட்டுப் போற?’
‘எந்நேரமும் ஒரே நெனப்பா கெடந்தா..?’
‘ஏம், அங்ஙன கெடந்தா தாம் என்ன?’
‘ராத்திரி பூரா அவ்வூட்டுத் தொழுவுல இது மொணங்கிட்டு கெடந்ததுன்னா, ஆளுவோ தூங்காண்டமா? ‘
‘உன்னய மாதிரிதான இருக்கும் ஒன் கெடாயும்’
‘ஒமக்கு சாவப் போற வயசுலயும் குசும்பு போவல’ என்று சொல்லிவிட்டுக் கிடாயைப் பலவந்தமாக இழுத்து தொழுவின் ஓரத்தில் இருக்கும் பூவரசமரத்தின் அடியில் கட்டினான் மாசானம். இன்னும் ஏக்கமாக முனகிக் கொண்டிருந்த கிடாயைப் பார்த்து, ‘பய கெடாய போட்டம்னு வையு, கொதவலை அந்து போவும் அந்து, ஆமா’ என்றொரு அதட்டலைப் போட்டுவிட்டு வெளியே வந்தான்.
ஊர்க்கூட்டம் முடிந்து சங்காபீஸில் இருந்து ஆட்கள் வந்து கொண்டிருந்தார்கள். யார் முதலில், யார் பின்னால் வருகிறார்கள் என்பதை அவர்களின் பேச்சை வைத்துக் கணித்துக்கொண்டார் பெரிய மூக்கன். கொஞ்ச நாட்களாக அவருக்குப் பார்வை சரியாகப் பிடிபடவில்லை. பேரன், ஆபரேஷன் பண்ணச் சொல்லி கட்டாயப்படுத்தினாலும், ‘ஆபரேசனைப் பண்ணி நான் என்ன கோட்டையவாடே புடிக்கப் போறேன், இந்த வயசுல’ என்று செல்லமாக மறுத்து விட்டார்.
பரமசிவமும் குட்டியும் அவரின் அருகில் வந்து உட்கார்ந்தார்கள். அவர்களிடம் ‘என்ன முடிவுடே எடுத்தியோ?’ என்று கேட்டார் பெரிய மூக்கன்.
‘மாசானம் சொல்லலயா?
‘இல்லயே’
‘அப்பல பேசுனதுதான். புதுசா என்னத்த எடுக்க?’
‘வேற யாரும் என்னமும் சொல்லலியா?’
‘யாரு என்ன சொல்லுவா?’
‘பெரிய சாமி கொண்டாடி?’
‘அவர்ட்ட சொல்லல. மொதல்ல நாங்க மட்டும் பேசி முடிவு பண்ணியிருக்கோம். நாளைக்குத்தான் எல்லாரையும் கூப்பிட்டுச் சொல்லணும்’
‘வரலாத்துல இடம் பிடிச்சுட்டியோடெ?’
‘என்ன இடம்?’
‘ஒரு கோயில் கொடைய நிறுத்தி இடம் பிடிச்சுட்டியோ? உங்கப்பம்லாம் உயிரோட இருந்திருந்தா, இப்படி பண்ண உட்டுருப்பானால?’
‘நல்லாருக்கெ? எங்களுக்கு மட்டும் கொடைய நிறுத்திப் பார்க்கணும்னு ஆசையா? நெலம அப்படியாவிப்போச்சு. தலக்கட்டுக்கு மூவாயிரம் ரூவா வரி வச்சாலும் இன்னைக்கு நிலமைக்கு கொடை செலவை பார்க்க முடியாது, பெறவு என்ன செய்ய சொல்லுதீரு’ என்ற குட்டி, ‘ஊருல பாதி பேரு இதைதான் பேசிட்டிருக்கானுவோ. இந்த பூ சுத்தமா ஒண்ணுமில்லாம போச்சு வயக்காட்டுல. கஞ்சிக்கு என்ன செய்யன்னு தெரியாம இருக்காவோ எல்லாரும். இதுல கொடைக்கு வரின்னு கேட்டா காறிட்டு துப்பிட்டானுவன்னா? அதை வச்சுதான் இந்த முடிவை எடுத்திருக்கோம்’ என்றான் பெரிய மூக்கனிடம்.
தொழுவில் கட்டப் பட்டிருந்த கெடாவின் முக்கல் முனகல் கேட்டு, மாசானம் அதை அதட்டுவதற்காகப் போனான்.
பெரிய மூக்கனுக்கு இருக்க முடியவில்லை. நினைவு தெரிந்த நாளிலிருந்து ஒவ்வொரு வருடமும் நடந்து வரும் குடும்ப கோயில் கொடை, இந்த வருடம் நின்று போவதை அவரால் ஏற்க முடியவில்லை. கொடை என்பது கொடையல்ல. அது சொந்தங்கள் கூடி நடத்தும் கொண்டாட்டம். தன் குடும்பத்து முன்னோர்கள் எல்லோரும் திடீ ரென அவர் கண் முன் வந்துபோனார்கள். அவரது தாத்தாவின் கைப் பிடித்து கொடை பார்த்த அனுபவம் இன்னும் அவர் ஞாபகத்தில் இருக்கிறது. பிறகு கொடை குறித்த ஞாபகங்கள் ஒவ்வொன்றாக அவருக்கு வந்து போயின.
அவர் உடலில் இப்போது திடீரென நடுக்கம் ஏற்பட்டது. தொடைகள் இரண்டும் தன்னால் ஆடுவது போல உணர்வு. குனிந்து கால்களைப் பார்த்தார். அப்படி ஏதும் இல்லை. கசமாட சாமி எதிரில் நின்று நாக்கைத் துறுத்துவது போலவும் ‘என்னைய இப்படி அம்போன்னு விட்டுட்டீங்களடே’ என்று ஆக்ரோஷமாகக் கேட்பதாகவும் அவருக்குத் தோன்றியது. தனக்குள் ஏதோ மாற்றம் நடக்கிறது என்பதை உணர்ந்தார். நெஞ்சு பட படத்தது. கம்பை ஊனிக்கொண்டு ஆவேசமாக எழுந்தார். பிறகு என்ன நினைத்தாரோ, அப்படியே உட்கார்ந்தார். முப்பது வருட சபதத்தை, வீம்பை இந்த நொடியில் உடைத்துவிட வேண்டும் என்று அவருக்குள் பொங்கும் ஆவலை, அவரே கட்டுப் படுத்திக் கொண்டார்.
‘கசமாடனுக்கு கொடை கொடுத்தா என்ன, கொடுக்காட்டா எனக் கென்ன? அது ஊரு முடிவு. ஊருமாச்சு, சாமியுமாச்சு. நமக்கென்ன வந்திருக்கு?’ என்று அவர் மனதைத் திடமாக்கிக்கொண்டு வைராக்கியமாக உட்கார்ந்தார். முடியவில்லை.
காதில், கொட்டுச் சத்தம் கேட்கத் தொடங்கியது. அந்தக் கொட்டின் அதிர்வு, அதிகரித்துக் கொண்டே இருந்தது. அருள் வரும்போது அவர் எழுப்புகிற அல்லது அவருக்குள் எழுகிற அதே ‘ஏய்ய்ய்ய்…’ என்று நீளும் பெரும் சத்தம் இப்போது எழுகிறது. அவர் அடக்கிப் பார்க்கிறார். கண்கள் அப்படியே இறுகுகிறது. எல்லாமும் ஒன்றாய் சேர்ந்து அவருக்குள் ஒரு கொடை நிகழத் தொடங்குகிறது. அதற்கு மேல் அவரால் இருக்க முடியவில்லை. ஊனிக் கம்பை எடுத்தார். ஊருக்கு வெளியே புளியமர தோப்புக்கு அடுத்து இருக்கும் கசமாடசாமி கோயிலை நோக்கி நடக்கத் தொடங்கினார்.
கசமாட சாமிக்குப் பரம்பரை பரம்பரையாகக் கொடை கொடுத்த குடும்பம் பெரிய மூக்கனுடையது. ஊரில் அது, ராமாத்தா வகையறா என்றழைக்கப்பட்டது. ஊரைப் பாதியாகப் பிரித்து, கிழக்கே இருக்கிற மந்திரமூர்த்தி, பாண்டிராசா, நாராயணசாமி, ராஜம்மா தாங்கி, கசமாட சாமி ஆகிய கோயில்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையறாவுக்குப் பாத்தியப்பட்டதாக இருந்தது. ஊருக்கு மேற்கே இருக்கிற கோயில்களும் அப்படித்தான். ராஜம்மா தாங்கி ஊருக்கு கொஞ்சம் வெளியே, வாய்க்கால் கரையோரம் இருப்பதாலும் அந்தக் கோயிலுக்கு மக்கள் வரத்து அதிகம் இருப்பதாலும் ஒரு குடும்பத்து கோயிலாக இருந்தவள், பின்னர் ஊருக்குப் பொதுவாகிப் போனாள்.
கசமாடன் தன் கோயிலில் தளவாய் மாடசாமி, பட்றையன், பிரம்ம ராட்சதை உள்ளிட்ட சாமிகளின் துணையோடு பீடமாகி இருந்தார். பாண்டிராசா கோயிலில் சாமிக்கு கெடா வெட்டிப் படைப்பதில்லை என்பதால், அங்கிருந்த தளவாய் மாடசாமி, அசைவ படைப்புக்காக இந்தக் கோயிலுக்கு வந்ததாகக் கதை ஒன்றைச் சொல்வார்கள்.
தனது முன்னோர்களுக்கு பிறகு அவர்களின் வழிப்படி, கசமாடனுக்குச் சாமியாடிக் கொண்டிருந்தவர் பெரிய மூக்கன். கோயிலில் கசமாடன் தான் பெரிய சாமி என்பதால் அதற்கு ஆடும் பெரிய மூக்கன், பெரிய சாமி கொண்டாடி என அழைக்கப்பட்டார். வயக்காட்டில் வாழ்க்கையை தொலைக்கும் அந்த ஊர்க்காரர்களிடம், பெரிய சாமி கொண்டாடிக்கென்று ஒரு மரியாதை இருந்தது.
‘ஆயிரம்தான் இருந்தாலும் அவரு பெரிய சாமி கொண்டாடி. அவரு வார்த்தைக்கு ஒரு மரியாதை வேண்டாமாடெ?’ என்று ஆரம்பித்து விடுவார்கள். இதனால் பெரிய மூக்கனும் கொஞ்சம் தலைக் கனத்துடனே அலைந்து வந்தார்.
பெரிய சாமிக்கொண்டாடிக்கான மரியாதை இளம் வயதிலேயே பெரிய மூக்கனுக்கு கிடைத்ததில் சொந்தப் பந்தங்களுக்குள் புகைச்சல். பெரிய மூக்கனின் சித்தப்பா மகனான நம்பிக்கும் அந்த தலைமைப் பீட ஆசை வர, கிளம்பியது பிரச்னை.
நம்பி, இதை சொந்தப் பந்தங்களிடம் அவ்வப்போது பேச்சுவாக்கில் சொல்ல, ‘ஏல, இதுயென்ன சமுதாய தலைவர் பதவின்னு நெனச்சியா, வருஷத்துக்கு ஒருத்தரை தலைவராக்கதுக்கு? இது சாமி வெவாரமாங்கும். அதுவா வரணும். நாங்களா போய் சாமிட்ட சொல்ல முடியும், அவன் மேல அருள் வந்து இறங்கும், இவன் மேல இறங்கும்னு?. நல்ல கதையா இருக்கே, நீ சொல்லுதது’ என்று அறிவுரை சொன்னார்கள். இருந்தாலும் ஆசைகொண்ட மனது விடுவதாக இல்லை.
‘அவனுக்கு இருக்க உரிமைதாம்ல உனக்கும் இருக்கு. நீ வாயை பொத் திட்டு இருந்தா, சோத்தை நாங்களாடே திணிக்க முடியும்? பசிக்கப் பிள்ள தான் பால்குடிக்கும். தைரியமா நீ போய் கேளு. உன் உரிமைய கேக்கதுல உனக்கென்னல தயக்கம்? இல்லைன்னா ஊர்க் கூட்டத்துல வெவாரத்தைக் கொண்டுவா. நாங்க பாத்துக்கிடுதோம்’ என்று நம்பியிடம், தூபம் போடும் வேலையை சொந்தங்கள் தெளிவாகச் செய்தன. நேரம் பார்த்துக் கொண்டிருந்தான் நம்பி.
பெரிய மூக்கனுக்கும் மேல பத்தில் வயல் வைத்திருக்கும் ஆழ்வார்க்குறிச்சிப் பெண் ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு இருப்பதாக ஊரில் கதை ஒன்று அரசல் புரசலாகப் பரவியிருந்தது. அதை ஊதிப் பெரிதுபடுத்தும் வேலையை நம்பியும் அவனுக்கு வேண்டியவர்களும் செய்து கொண் டிருந்தார்கள்.
‘பெரிய சாமி கொண்டாடின்னா, அந்த மரியாதைய காப்பாத்த வேண்டாமாடெ. இப்படி இன்னொரு பொம்பளட்ட பழவிட்டு இருந்தார்னா, இவரு சாமியாடுததுல என்ன அர்த்தம் இருக்கு? ஒரு வரை முறை வேண்டாம்? இவரை எப்படி இனும சாமின்னு கும்பிட முடியும் சொல்லு? நாளைக்கு இது பிரச்னையானா, கோயிலுக்கும் ஊருக்கும்லாடா கேவலம்’ என நம்பிக்கு வேண்டியவர்கள், தங்கள் நியாயங்களை முக்குக்கு முக்கு நின்று பரப்பிக் கொண்டிருந்தார்கள்.
இது பெரிய மூக்கன் காதுக்கு வந்ததும் என்னதான் நடக்கும் என்பதைப் பார்ப்போமே என இருந்துவிட்டார். அது என் தனிப்பட்ட பிரச்னை. அதையும் இதையும் எப்படி முடிச்சுப் போடலாம் என பெரிய மூக்கனும் ஆங்காங்கே சொல்லி வந்தார். நேரடியாக இரு தரப்பும் இதுபற்றி பேசவில்லை என்றாலும் வெளியில் பேசிக் கொண்டுதான் இருந்தார்கள் இவ்விவகாரத்தை.
இந்த நேரத்தில்தான் வந்தது கசமாடனுக்குக் கொடை. ஆடி ரெண்டாம் செவ்வாயன்று நடந்த கொடை ஒன்றில், பெரிய மூக்கன் கசமாடனாக மாறி, ஆக்ரோஷமாக ஆடிக்கொண்டிருந்தார். அவர் உடல் முழுவதும் சந்தனம் பூசப்பட்டிருந்தது. தார்ப்பாய்ச்சிக் கட்டிய வேட்டி, சந்தனம் சிந்தி மஞ்சள் நிறத்துக்கு மாறியிருந்தது. முகத்தில் பூசப் பட்டிருந்த செந்நிற மஞ்சனம் மினுமினுத்தது. தலையில் இறுகக் கட்டப்பட்டிருந்த சிவப்பு நிற துணி, அவரை வேறொரு ஆளாகக் காண்பித்துக்கொண்டிருந்தது. கழுத்தில் பெரிய மாலை. கையில் வீச்சரிவாள் கொண்டு அவர் மேலும் கீழுமாகக் குதித்து போடும் ஆட்டத்தைக் காண, ஊரே கூடியிருந்தது. ஆறடி உயர பெரிய மூக்கன், அப்போது கசமாடனாகவே தெரிந்தார். அவர் கண்களில் தெரியும் அனலோடும் நாக்கைத் துறுத்தி பீடத்தை நோக்கி காட்டுகிற முறைப்போடும் கொட்டுச் சத்தத்தை மீறி எகிரும் ஏய்ய்ய்ய் என்கிற அதட்டல் குரலோடும் அவர் சாமியாகி ஆடுவதைப் பார்க்க, கோடி கண் வேண்டும்.
‘ஆத்தாடி, அந்த நேரத்துல அவரைப் பார்க்கவே முடியாது, ஆமா. சின்ன புள்ளைலுவோலாம் பயந்து போயிரும்னா பாரு. அவ்வளவு உக்கரமா இருப்பாரு. நாங்கள்லாம் கிட்டயே போவமாட்டோம். கொட்டடிச்சு முடிஞ்சு ஆடி உட்கார்ந்த பிறகுதான் அவரு கால்ல விழுந்து திருநாறு பூசுவோம். அந்த நேரத்துல அவருக்கா தோணுச் சுன்னு வையி, திடீர் குறி சொல்ல ஆரம்பிச்சுருவாரு. அப்படிச் சொன்னாருன்னா, அதெல்லாமே பழிச்சுரும் தாயி’
-வயலில் புல்லறுக்கும் பெண்கள் இப்படிச் சொல்லி, பெரிய மூக்கனின் புகழைப் பரப்பியதன் பொருட்டு, அந்த ஆசை வந்தது அவரது, அரசல் புரசல் காதலிக்கு.
பெரிய மூக்கனை அந்தக் கோலத்தில் பார்க்க ஆசைப்பட்டு, அவள் கோயிலுக்கு வந்ததில் ஆச்சரியமேதுமில்லை. அவள் பெரிய மூக்கனின் காலில் விழுந்து கும்பிட்டு திருநீறு பூசி வெளியே செல்லும் போது தான், நம்பியின் ஆட்கள் அவளை அடையாளம் காட்டினார்கள் மற்றவர்களுக்கு.
‘அவரு பொண்டாட்டிக்காரி கோயிலுக்கெ வரலை, கேட்டியா? அதுக்குள்ள வப்பாட்டி வந்து திருநாறு வாங்கிட்டு போயாச்சு சாமிகிட்ட. நல்லா நடக்குடே கதை’ என்று சிரித்துப் பேச ஆரம்பித்தி ருந்தார்கள். கோயிலுக்குள் திடீரென உலா வந்த, இந்த கிசு கிசு, கொடைக்காக வெளியூர்களில் இருந்து வந்திருந்த சொந்தங்களுக்கும் பரவ, பெரிய மூக்கன் அவமானத்துக்குள்ளானார்.
கொடைக்காகப் பாப்பாக்குடியில் இருந்து வந்திருந்த பெரிய மூக்கனின் மச்சினன், கொடை முடிந்து வீட்டில் பரிமாறப்பட்ட படைப்புச் சோற்றில் இருந்த நல்லி எலும்பை கடித்துவிட்டு, போதையில் சொன்னான். ‘என் மச்சான் பெரிய சாமி கொண்டாடின்னா, எங்க ஊருல கூட, எனக்குத்தாம் பெருமை. ஆனா, இன்னைக்கு உங்க ஊருல பேசுத பேச்சக் கேட்டு, மானங்கெட்டுப் போச்சு மச்சான். நான் சொல்லக் கூடாது, இருந்தாலும் சொல்லாம இருக்க முடியல. நீரு என்னமும் பண்ணிட்டுப் போரும். எவளையும் வச்சுட்டு இரும். அது பத்தி கவலையில்லை. வெவாரம் ஊருக்குள்ள வரை வந்துட்டுன்னா, அது நல்லதுக்குல்ல. இருந்தாலும் நான் சொல்ல வேண்டியதை சொல்ல ணும்லா, என் தங்கிச்சிக்கு ஒண்ணுன்னா, நாங்க அண்ணன் தம்பியோ சும்மா இருக்க மாட்டோம்’ என்று சொன்னதும், மீசையை திருக்கிய பெரிய மூக்கன், ‘என்னடே மிரட்டுதாப்ல இருக்கு. எங்க வந்து என்ன பேச்சு பேசுத? தெரிஞ்சுதாம் பேசுதியா?’ என்று குரலை உயர்த்த, அவர் பொண்டாட்டி ஓடி வந்து, ‘அவன் குடிச்சுட்டு ஒளறுதாம் மூதேவி. நீங்க இங்க வாங்க. யாரோ தேடி வந்திருக்காவோ’ என்று இழுத்துக்கொண்டு போனாள் பெரிய மூக்கனை.
அவருக்குக் கோபம் சுள்ளென்று ஏறியது. அவளின் பிடியை உதறிவிட்டு, அடிக்க கையை ஓங்கினார். ‘ஒங்க அண்ணன் தம்பியோ சேர்ந்து என்னத்தட்டீ கிழிச்சுருவானுவோ?’ என்று பொண்டாட்டியிடம் எகிறினார். வெளியில் இருந்து வந்த அவரது சகலை, இது பெரும் சண்டைக்கான ஆரம்பம் என கருதி, அவரை வெளியே இழுத்துக் கொண்டு போனான்.
பெரிய மூக்கனின் குடும்பத்துக்குள் ஒரு சண்டையை ஆரம்பித்து வைத்ததை அடுத்து, வைப்பாட்டி விவகாரம் விஸ்வரூபமெடுத்தது. ஒரு வெள்ளிக்கிழமை மாலையில் ஊர்க்கூட்டத்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கசமாடன் கோயில் விவகாரமென்பதால் அந்தக் கோயிலிலேயே கூட்டம் நடந்தது.
‘பெரிய மூக்கா, வெவாரம்னு வந்துட்ட பெறவு சொந்தம் பந்தம் பார்க்க முடியாது, கேட்டியா? நீ இப்படி இன்னொரு பொம்பளயோடயும் குடும்பம் நடத்திட்டு இருந்தா, சாமின்னு உன்னைய இன்னொருத்தன் எப்படி கையெடுத்துக் கும்பிடுவாம்னு கேக்காவோ, எல்லாரும். அப்படிக் கேக்கதுலயும் நியாயம் இருக்கு. இதுக்கு நீ என்ன சொல்லுத. சபையில சொல்லு’- சமுதாயத் தலைவர் கேட்டார்.
‘நான் சொல்லுதத விடுங்க. நீங்க என்ன செய்யணும்னு முடிவெடுத்திருக்கியோ, அதை சொல்லுங்க?’
‘வர்ற கொடையில இருந்து பெரிய சாமிக்கு நீ ஆடுதத நாங்க விரும்பல’
‘இதுதான ஒங்க முடிவு’
‘என் ஒருத்தன் முடிவில்லைடே. ஊரு இப்படியொரு முடிவ எடுத்திருக்கு. நீ என்ன சொல்லுதன்னு சொல்லு?’
‘நீங்க ஒரு முடிவை எடுத்திட்டியோ. பெறவு நான் என்ன சொல்லி, என்ன ஆவப் போவுது?’
‘அப்படியில்லலா, நீ உன் தரப்பு நியாயத்தை சொல்லுன்னு சொல்லுதோம்’
‘நான் சொல்லுததுக்கு ஒண்ணுமில்லை. இதுதாம் உங்க முடிவுன்னா தாராளமா எடுத்துக்குங்க. எனக்கொன்னும் பிரச்னையில்லை’ என்று சொல்லிவிட்டு வாசல்படிக்கு வெளியே வந்து பீடியைப் பற்ற வைத்தார். இது எப்பவோ எதிர்பார்த்த பிரச்னை என்பதால் இதை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்று பெரிய மூக்கன் முடிவு செய் துகொண்டார்.
ஒரு பெரிய பிரச்னையை, சண்டையை எதிர்பார்த்து வந்த நம்பிக்கு ஏமாற்றமாக இருந்தது. பெரிய மூக்கன் இப்படி பொட்டென்று சரணடைவார் என எதிர்பார்க்கவில்லை.
‘சரிப்பா, பெரிய மூக்கன், இனும பெரிய சாமிக்கு ஆடலைன்னாச்சு. வேற யாருக்கு விருப்பம் இருக்கோ, சொல்லுங்க. கசமாடன் முன் னால சீட்டு போட்டுப் பாத்துக்கிடுவோம் ‘ என்றார் தலைவர்.
முதலில் நம்பி தனது ஆசையைச் சொன்னான். சிறிது நேரம் கூட்டம் அமைதியாக இருந்தது. பெரிய மூக்கனின் இன்னொரு சித்தப்பா மகன் கசமுத்துவுக்கும் அந்த விருப்பம் உள்ளுக்குள் இருந்தாலும் அவனுக்குச் சிறுவயது என்பதால் எதிர்காலத்தை மனதில் வைத்து இப்போது விட்டுவிட்டான். பிறகு ஒரு மனதாக நம்பி, கசமாடன் முன்னிலையில் பெரிய சாமி கொண்டாடியாக ஆக்கப்பட்டார்.
மணி, இரவு பதினொன்றைத் தாண்டிவிட்டது. கூட்டம் முடிந்து மேலத்தெரு சுக்காப்பி கடைக்குக் கிளம்பினார்கள். பெரிய மூக்கன் கோயில் வாசலிலேயே இருந்தார். ஊர்த் தலைவர் அவர் அருகில் வந்து, ‘இதுல வருத்தப்படாத மூக்கா, அது யாரு உனக்கு தம்பிதானடே. விடு. வா, சுக்காப்பி குடிச்சுட்டு வருவோம்’ என்று அவர் கையைப் பிடித்தார்.
‘எனக்கு ஒரு வருத்தமும் இல்லை. நீங்க போங்க, பின்னாலயே வாரேன்’ என்ற பெரிய மூக்கன், அவர்கள் சென்ற பிறகு கசமாடன் கோயிலின் பீடத்துக்கு முன் வந்தார். கைகளை ஒன்றாக்கிக் கும்பிட்டார். பிறகு, சாமியிடம் பேச ஆரம்பித்தார். ‘கேட்டியா கசமாடா. உனக்கு சம்மதம்தானெ. எல்லாத்தையும் வேடிக்கை மட்டும் பார்த்துட்டு இரு. இது ஊர் எடுத்த முடிவா எனக்குத் தெரியல. நீ எடுத்த முடிவாதாம் தெரியுது. உன்னை நான் கும்பிடுதது இதுதான் கடைசி. இனும உன் வாசலை மிதிக்க மாட்டேன். இது சத்தியம்’ என்று பீடத்தின் அடியில், கையால் அடித்து புழுதி பறக்கச் சத்தியம் செய்துவிட்டுத் திரும்பி நடந்தார்.
முப்பது வருடங்களாகிவிட்டது இது நடந்து. பிறகு கசமாடனின் வாசல் நடையை அவர் மிதிக்கவே இல்லை. வீம்பு. அடுத்து பெரிய சாமியாக ஆடிக்கொண்டிருந்த நம்பி, இறந்து பல வருடங்கள் ஆகிவிட்டது. இப்போது அவரது சித்தப்பா மகன் கசமுத்து ஆடிக் கொண்டிருக்கிறான்.
கடந்த இரண்டு வருடமாக ஊரில் மழைத் தண்ணிப் பிரச்னை. எந்த வறட்சியிலும் வற்றாமல் தண்ணீர் வரும் ஆறு, வறண்டு கிடக்கிறது. மழைக்கு ஏங்கிக்கிடக்கிறது வயக்காடுகள். பயிர்கள் கருகி விட்டன. கடன் வாங்கி வைத்த பயிர், கடனை மட்டுமே அதிகப்படுத்தி இருக்கிறது. குறைந்தளவு ஈரப்பதமாகவாவது இருக்கும் வயல் வெளிகள், பாளம் பாளமாக வெடித்துவிட்டது. எந்த வருடமும் பார்க்காத வறட்சியை இப்போது பார்த்தாகிவிட்டது. சாப்பாட்டுக்கே சங்கடப் பட்டுக்கொண்டிருக்கும் வேலையில், கசமாடனுக்கு எங்கிருந்து கொடை கொடுப்பது?
‘போன கொடைக்கு வாங்குன கடனையே இன்னும் அடைக்கல பாத்துக்கெ. இந்த வருஷம் கொடைக்கு எப்படில வரி கொடுக்க?’ என்று குட்டிதான் முதலில் ஆரம்பித்தான். பூனைக்கு யார் மணி கட்டுவது என்கிற நிலையில், குட்டி இப்படிச் சொன்னது சொந்தங்களுக்கு மகிழ்ச்சியை தந்தது.
”ஒரு வருஷம் கொடை கொடுக்கலைன்னாதான் என்ன? பூவன்குறிச்சி கொளத்து மேல ஒரு கோயிலு இருக்கு பாரு…’
”சூச்சமடையாரு கோயிலு”
”ஆங். அதுக்குலாம் மூணு வருஷத்துக்கு ஒரு தடவைதான் கொடை கொடுக்காவோ. அதை மாதிரி பண்ண வேண்டியதாம்” என்றான் பரமசிவம்.
‘நல்லாருக்கும்போது கொடை கொடுக்கலையா என்ன? சாமி ஒன்னும் நினைக்க மாட்டாருடே. வயிறா, கொடையான்னா, வயிறுதாம் முக்கியம். மனுஷ கஷ்டம் தெரியாதவரா கசமாடன்?’ என்று குட்டி மேலும் ஆரம்பிக்க, பேச்சு வளர்ந்து வளர்ந்து, இந்த வருடக் கொடையை நிறுத்துவதாக முடிவெடுத்தார்கள்.
ஒவ்வொரு முறை கசமாடனுக்குக் கொடை கொடுக்கும்போது, மேற்கு தொடர்ச்சி அடிவாரத்தில் கெடை காட்டுக்குச் சென்றுவிடுவார் பெரிய மூக்கன். எங்கே தன்னையறியாமல் கால்கள் தன்னால் கோயிலுக்கு இழுத்துச் சென்றுவிடுமோ என்கிற பயம்தான் காரணம். கோயிலுக்குள் கால் வைக்க மாட்டேன் என்று செய்த சத்தியத்தை மீறி விடக்கூடாது என நினைத்தார்.
காட்டுக்கு மேய்ச்சலுக்குச் சென்றாலும் காதுக்குள் ஒலிக்கும் கொட்டுச்சத்தம் அவரை ஆடச் சொல்லித் தூண்டும். அப்போதெல்லாம் தன்னை அடக்கி ஆள்கிற பெரிய மூக்கனால், கொடை கொடுக்காமல் இருக்கப் போவதைத் தாங்க முடியவில்லை. அவருக்கு அது பெருங்குற்றமாகத் தெரிந்தது.
தெருவில் பெருமாள் கோயில் காளை மட்டும் படுத்தபடி அசை போட்டுக்கொண்டிருந்தது. ஐயமார் வீட்டு எருக்கெடங்குகளில் இருந்து தங்கள் இல்லம் திரும்பும் தாய் பன்றியும் அதன் ஏழெட்டுக் குழந்தைகளும் வரிசையாகச் சத்தம் எழுப்பியபடியே சென்றுகொண்டிருந்தன. எப்போதும் வயதின் காரணமாக, மெதுவாக நடக்கும் பெரிய மூக்கன் இன்று வேகவேகமாக நடப்பது போல தெரிந்தது.
வெட்டவெளி திடலில் ஒரு பீ(பூ)டமாக நின்றிருந்தார் கசமாட சாமி. கோயிலின் உள்ளே பூவரச மரமும் வாதமடக்கி மரமும் பெரிதாக வளர்ந்திருந்தன. வெளியே, தெரு விளக்கு மின்னிக் கொண்டிருந்தது. பெரிய மூக்கன், வாசல் அருகே வந்ததும் அவரால் நிற்க முடியவில்லை. வாசல் படியென போடப்பட்டிருக்கிற நீள் வடிவ சதுர கல்லை குனிந்து வணங்கினார். அவர் மூக்கு விரிந்து சுருங்கியது. மூச்சுக்காற்று மூஸ் மூஸ்சென்று வெளியே வருவது கேட்டது. நெஞ்சு, வேக வேகமாக அடித்துக்கொண்டது. அடக்கி வைத்திருந்த கண்ணீர் பீறிட்டு கிளம்ப, ஊனிக் கம்பை கீழே வீசிவிட்டு வேகமாக ஓடி, இரு கைகளையும் தலைக்கு மேல் வைத்துக்கொண்டு நெடுஞ்சாண் கிடையாக, கசமாடன் பீடத்தின் முன் விழுந்தார்.
ஒரு குழந்தையை போல ஏங்கி ஏங்கி அழுதார். அங்கும் இங்கும் உருண்டார். எழுந்துகொள்ள முடியவில்லை. எவ்வளவு நேரம் அப்படிக் கிடந்தாரோ தெரியவில்லை. ‘என்னை மன்னிச்சுரு கசமாடா’ என்று மண்டியிட்டு சாமியிடம் பேசத் தொடங்கினார். அது அவருக்கும் கசமாடனுக்குமான ஆத்மார்த்தமான பேச்சு.
சிறிது நேரத்துக்குப் பிறகு கன்னத்தைத் துடைத்துவிட்டு, கோயிலின் வெளியே வந்து தெருவை பார்த்தபடி உட்கார்ந்தார். இடுப்பில் இருந்த பீடி கட்டில் ஒரு பீடியை உருவினார்.
‘ம்ஹூம். உடமாட்டேன் கசமாடா. இருக்க ஆடுவளை பூரா நாளைக்கே வித்து என் செலவுல நான் மட்டும் கொடைய நடத்துவேன். உனக்கு கொடை கொடுக்காம என்னால அப்படி விட்டுர முடியாது கசமாடா. ஊரு கெடக்கு ஊரு, ஒருத்தனும் தர வேண்டாம் வரி. நான் நடத்துவேன். என் உயிரு இருக்க வரை ஒனக்கு கொடை கொடுக்காம இருக்க மாட்டேன். இது சத்தியம்’ என்று சொல்லிவிட்டு பீடியைப் பற்ற வைத்தார் பெரிய மூக்கன்.
தூரத்தில் குட்டியும் பரமசிவமும் வந்துகொண்டிருந்தார்கள்.

No comments:
Post a Comment