Tuesday, October 15, 2024

சாத்தா - கவனிக்கப்பட வேண்டிய நாவல்

 


குலதெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்வியலில் முக்கியமான ஓர் அங்கம். குறிப்பாக, தமிழக தென்மாவட்ட மக்களின் `சாத்தா’ (சாஸ்தா) வழிபாடு மிகவும் தொன்மையானது. அதை மையமாக வைத்துக்கொண்டு விரிகிறது நாவல். குலதெய்வக் கோயிலுக்கே அதுவரை சென்றிருக்காத முத்துசாமி சந்திக்கும் எளிய மனிதர்கள்தான் கதை மாந்தர்கள். அதிகம் அறியப்படாத சாத்தா வழிபாடு, அதன் மூலம், நாட்டின் எந்தெந்த மூலையிலிருந்தோ ஆண்டுக்கொரு முறை குலதெய்வத்தைக் கும்பிட வரும் மக்கள் என வித்தியாசமான ஒரு களத்தை இந்நாவலில் முன்வைக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத்.

ஒரு நாவலுக்கு, கதைக்களனும் கதாபாத்திரங்களும் முக்கியமானவை. இந்நூலில் அவற்றைத் தெளிவாகக் கையாண்டிருக்கிறார் எழுத்தாளர் ஏக்நாத். தெக்கத்தி மக்களின் வட்டார வழக்கு உரையாடலும், கதை விவரிப்பும் நம் மனதில் காட்சிகளாகப் பதிந்துவிடுகின்றன. எளிதாக கதைக்குள் ஆழ்ந்துபோகச் செய்துவிடுகின்றன. சாமிகளுக்கு எப்படி நம் மொழி தெரிகிறது, சாமியாடிகள் வழியாக அவை எப்படி நம்முடன் உரையாடுகின்றன, மக்களின் கோரிக்கைகளை சாமியாடிகள் வழியாக அவை எப்படித் தீர்க்கின்றன என்பதையெல்லாம் குறிப்பிடுகிறது நாவல். அதேநேரத்தில் யதார்த்தத்தையும், அநியாயம் செய்பவர்களை சாமிகள் ஒன்றும் செய்வதில்லை என்கிற உண்மையையும் போட்டுடைக்கிறது.

சினிமாவில் உதவி இயக்குநராக இருக்கும் முத்துசாமி ஒரு ஜோசியக்காரர் சொன்னதற்காகவும், அம்மாவின் வற்புறுத்தலின் பேரிலும் குலதெய்வத்தைத் தேடிப் போகிறான். அவனுடைய குலதெய்வம் பேச்சியம்மன், இணை தெய்வங்களான தளவாய் மாடசாமி, சுடலை ஆகியோரை காட்டுக்குள் பார்த்துவிட்டு வரும்போது நிகழும் சம்பவங்களின் கோர்வைதான் கதை.  முத்துசாமியின் பழைய காதல், சாமி கும்பிடப்போன இடத்தில் பார்த்த நாகர்கோவில் பெண் அழகு மேல் ஏற்படும் ஈர்ப்பு, சென்னை வாழ்க்கை, டிராக்டரிலும் லாரியிலும் ஒற்றுமையாகக் கிளம்பிப்போன மனிதர்கள் கோயிலில் மோதிக்கொள்வது என எதையெதையோ தொட்டு கதை நகர்கிறது. அதேநேரத்தில், இந்தச் சம்பவங்கள் மையப்புள்ளியைவிட்டு விலகாமல் நகர்கின்றன.

மருத்துவமனையில் படுத்திருக்கிறார் ஆச்சி. அவர் கையைத் தொட்டுப் பார்க்கும் டாக்டருக்கு, சட்டென சுருக்குப்பையிலிருந்து திருநீறை எடுத்துப் பூசிவிடுகிறார். இது எங்காவது நடக்குமா... நடக்கும். வெள்ளந்தி மனிதர்கள் அப்படித்தான் இருப்பார்கள் என்பதைப் போகிற போக்கில் உணர்த்திவிடுகிற சம்பவம் அது.

எங்கோ மலை உச்சியிலிருக்கும் சாமி, மனிதர்களின் கோரிக்கையை ஏற்று அடிவாரத்துக்கு வர சம்மதிக்கிறது. அடிவாரத்தில் சாமி அறிகுறி காட்டிய இடத்தில், குலதெய்வத்தை வைத்து வழிபட முடிகிறதா... சாமி சம்மதித்தாலும், அதற்குக் குறுக்கே நிற்கும் மனிதர்களை என்ன செய்வது? இந்தப் பெரும் கேள்வியை தனக்கே உரிய பாணியில் முன்வைக்கிறார் ஏக்நாத். சாமானியர்களின் வாழ்க்கையில் இன்னமும் மீதமிருக்கும் பழைய நம்பிக்கைகளையும், இன்றைய யதார்த்தத்தையும் எடுத்துவைக்கும் 'சாத்தா’கவனிக்கப்படவேண்டிய நாவல்.

நன்றி: பாலு சத்யா

விகடன் படிப்பறை 




சாத்தா

ஆசிரியர்: ஏக்நாத்

வெளியீடு: நெடில் வெளியீடு

விற்பனை உரிமை: ஸ்நேகா, 8, ரமணி நகர் மெயின் ரோடு, மேற்கு தாம்பரம், சென்னை - 600 045.

தொடர்புக்கு: 7550098666

பக்கங்கள்: 152

விலை: ரூ. 220


No comments: