சில வருடங்களுக்கு முன் நான் எழுதிய கவிதை ஒன்றை வாசித்துவிட்டு நண்பரும் மருத்துவருமான வஸந்த் செந்தில், ‘இந்தக் கவிதைக்குள் அழகான கதை இருக்கிறது, அதை எழுதலாம்ல’ என்றார். அவர் சொல்லி ஒரு வருடத்துக்குப் பிறகு கதையாக்கினேன். 2019-ல் ஆனந்த விகடனில் வெளியானது, அக்கதை. புதிதாகப் பதிப்பகம் தொடங்க இருந்த நண்பர் ஒருவர், "அந்தக் கதையை குறுநாவலா எழுதித் தாங்களேன்” என்றார். அவர் சொன்ன பிறகுதான் அதற்கான 'ஸ்கோப்' அதில் இருப்பது தெரிந்தது. எழுதினேன். ஆக, ‘அந்த சிறுகதையின் நீள்வடிவம்தான் இந்த ‘வேத’! 'இந்தக் கதைய எங்கயோ படிச்ச மாரி இருக்கே?' என்கிற ஆவலாதி வந்துவிடக்கூடாது என்பதற்காக இவ்விளக்கம்.
ஒரு கவிதை, சிறுகதையாகி, நாவலாக உருமாறியது கூட சுவாரஸ்ய கதையாகத்தான் இருக்கிறது. இது காதலின் வலியை, அவஸ்தையைப் பேசுகிற நாவல். வலியை, ‘வேத’ என்று சொல்வது நெல்லை, தென்காசி மாவட்டங் களில் வழக்கம். "என்னா வேதங்கெ? மூதி, உள்ளகெடந்து விண்ணு விண்ணுன்னுலா தெறிக்கி..., முடியலடெ?” என்பார்கள், பெருவலிகாரர்கள். அப்படியொரு வேத யாருக்கும் தேவையில்லைதான். ஆனாலும், கேட்டு வருவதா வலி? அதுவும் காதலின் வலி?
'வேத' என்பதைத் தலைப்பாக வைக்கலாமா? என்று ஊரையும் ஊர் வார்த்தை களையும் ரசிக்கிற எழுத்தாளர் சுகா சாரிடம் கேட்டேன். 'தாராளமா வையுங்க, ஊர்ச்சொல்லையும் வேர்ச்சொல்லையும் விட்டுரக்கூடாதுல்லா' என்றார். இப்படியாக இதன் தலைப்பு 'வேத' ஆனது.
நாவலை வெளியிடுகிற நெடில், விநியோகிக்கிற ஸ்நேகா, எப்போதும் என் நூல்களுக்கு முகப்பு அட்டையை வடிவமைத்துக்கொடுக்கிற பி.ஆர்.ராஜன், பின் அட்டைக்கான புகைப்படம் எடுத்து தந்த புதுவை இளவேனில் ஆகியோருக்கு நன்றி.
பக்கம் 100.
விலை ரூ.150/
புத்தகம் பெற:
சினேகா வெளியீடு
9600398660/ 7550098666
#வேத, வேத நாவல், ஏக்நாத்
No comments:
Post a Comment