Showing posts with label கெடை காடு. Show all posts
Showing posts with label கெடை காடு. Show all posts

Sunday, May 15, 2016

கெடைகாடு பற்றி ஆரூர் பாஸ்கர்


தமிழில் இன்றைய  வாசிப்புச் சூழல் பற்றி பெரிதாக சொல்லத் தேவையில்லை. இருபத்தி நான்கு மணிநேரமும் ஓளிபரப்பாகும் நூற்றுக்கணக்கான தனியார் தொலைக்காட்சிகள். அவற்றைத் தாண்டி திரைப்படங்கள், சமூக வலைதளங்கள் என மக்களுக்கு பல பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள். அச்சில் வெகுஜன ஊடகங்களாக தினசரிகளும், வாராந்திர பத்திரிகைகளும் தொடர்ந்துகொண்டிருக்கின்றன.

இந்தச் சூழ்நிலையிலும் கட்டுரைகள், அரசியல், சுய முன்னேற்றம், பொது அறிவு புத்தகங்களைத் தாண்டி தமிழில் கதைகளை வாசிக்க சிறிய கூட்டம் ஓன்று இருக்கத்தான் செய்கிறது.

அந்த வாசகர்களை கருத்தில் கொண்டு வருடம்தோறும் நூற்றுக்கணக்கான படைப்புகள் வெளிவருகின்றன.  அவற்றில் பிரபலமான எழுத்தாளர்கள் மற்றும் பதிப்பகங்களின் படைப்புகள் ஏதோ ஓரு வகையில் வாசகர்களின் கவனத்தைப் பெற்றுவிடுகின்றன. மற்ற படைப்புகளில் தரமானதை அடையாளம் காண வாசகனுக்கு பெரும் வழிகாட்டலாக இருப்பது மூத்த எழுத்தாளர்கள் தான்.

அப்படி எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணனால் சமீபத்தில் அடையாளம் காட்டப்பட்டது ஏக்நாத்தின் "கெடைகாடு" புதினம் (நாவல்). நாவலாசிரியர் ஏக்நாத் எனக்கு அறிமுகம் இல்லாதவர். அவரைப் பற்றிய குறிப்புகளும் இந்தப் புத்தகத்தில் பெரிதாக இல்லை. அதனால் எதிர்பார்ப்புகள் ஏதுமின்றியே இந்த நூலைப் படித்தேன்.

தமிழில் கிராமத்தை கதைக்களமாகக் கொண்டு பல படைப்புகள் வந்திருந்தாலும் இந்த படைப்பு கொஞ்சம் வித்தியாசமானது அல்லது புதுமையானது என்றுகூட சொல்லலாம் அதற்குக் காரணம் கதை நடப்பது மலையும் மலை சார்ந்த மேய்சல் நிலம். புதுமையான நாவல் என பரவலாக பேசப்பட்ட மேய்ச்சல் நிலத்தைப் பேசும் ஓநாய் குலச்சின்னம் நாவல்கூட சீன மொழிபெயர்ப்புதான்.

கிராமங்களில் கிடை (கெடை) போடுதல் என்பது மாடுகளையோ, ஆடுகளையோ பகல் நேரங்களில் வயலில் மேயவிட்டு இரவில் அங்கேயே படுக்க வைப்பது. ஆடுகளை வைத்து போடப்பட்டால் ஆட்டுக்கிடை இல்லை மாடுகள் என்றால் மாட்டுக்கிடை என்பார்கள். இதை செய்பவர்கள் நாடோடிகள். அவர்கள் வெளியூர்களிலிருந்து தங்களுடன் ஆடுகளையோ மாடுகளையோ மந்தையாக அழைத்து வருவார்கள்.

அவர்கள்  ஓரு இரவிற்கு இவ்வளவு எனப் பேசி நெல் அல்லது பணத்தைக் கூலியாக வாங்கிக் கொள்வார்கள். கிராமங்களில் வயலில் வேலையில்லாத கோடைககாலங்களில் பெரும்பாலும் இதைச் செய்வார்கள். மாடுகளின் சாணம் மற்றும் சிறுநீர் வயலுக்கு இயற்கை உரம் என்பதால் இதை விவசாயிகள் இதை பெரிதும் விரும்பவார்கள். விவசாயத்திற்கு ரசாயன உரங்கள் பெரிதாக பயன்படுத்த தொடங்கிய பின் இந்த நடைமுறை கொஞ்சம் கொஞ்சமாக அழிந்துவிட்டது என்றே சொல்லாம்.

இந்த நாவலில் அப்படி மாடுகளை மேய்ச்சலுக்காக காட்டுக்கு நண்பர்களுடன் ஓட்டிச் செல்லும் உச்சிமாகாளி எனும் பாத்திரத்தின் வழியாக கதை விரிகிறது.

நாவலில் பெரும்பாலும் பேசப்படுவது காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், அதன் மேய்ச்சல். அது போல கிராமம், அந்த கிராமத்தில் உச்சிமாகாளிக்கு நேரும் காதல், அவர் நண்பர்களின் காமம் என விரிகிறது.

உச்சிமாகாளி காட்டில் இருப்பது ஓரு தளமாகவும் கிராமத்தில் நடக்கும் இன்ன பிற விஷயங்களை இன்னோரு தளமாகவும் எடுத்துக் கொண்டால் என்னைக் கவர்ந்தது முதல் தளம்.  ஆனாலும் இரு தளங்களையும் ஆசிரியர் கதையில் அருமையாக இணைத்திருக்கிறார். ஓரு நாவலின் படைப்பாளி என்ற முறையில் அதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை அறிவேன். அதற்காக முதலில் வாழ்த்துக்கள் ஏக்நாத்.

நாவலில் மலையின் குளிர்ச்சியையும், காடுகளின் இயற்கை அழகையும் தன் எழுத்தில் கண் முன்னே நேர்த்தியாய் ஆசிரியர் விரிய வைக்கிறார்.  மாடுகள் மற்றும் காடுகளின் நுணுக்கமான விவரிப்பு படிக்கும் நம்மை மலைக்க வைக்கின்றன. காட்சிரீதியான அனுபவத்தை அவருடைய எழுத்தில் கொண்டுவருகிறார். உதாரணமாக அத்தியாயம் ஏழில் இருந்து சில வரிகள் உங்களுக்காக.

"விடிந்துவிட்டது. மாட்டின் சாணமும் மூத்திரமும் ஓரே இரவுக்குள் மூக்கில் வந்து அடித்தது.  இந்த வாடை புதிதில்லை என்றாலும் அந்நிய பிரதேசத்தில் இந்த வாசனை புதிதாகத் தெரிந்தது."

இதில் கவித்துவனமான வரிகளில்லை ஆனால் நாவலினூடே இதை படிக்கும் போது மூத்திரவாடை உங்களுக்கு புரியத் தொடங்கும். அது போல ஓரிடத்தில் தேங்காய் அளவில் கொய்யா பழங்கள்  என்றொரு வரி வரும். திருகலான வார்த்தை பிரயோகங்கள் இல்லாத எளிதான அனைவருக்கும் புரியும் மொழி நடை. இப்படி முழுக்க முழுக்க கிராமிய மணத்துடன் அந்த வட்டார பேச்சு வழக்கில் கதையை நகர்த்துகிறார். அதுபோல "வனம் பெரிது, வானத்தைப் போல. கால் போன போக்கில் போகவும் மனம் போன போக்கில் பாடவும் முடியும்." உணர்ந்து எழுதியிருக்கிறார்.

காட்டின் உள்ளே நடக்கும் பல விஷயங்கள் நுட்பமாக சிறு சிறு சம்பவங்கள் மூழமாகப் பதிவாகியிருக்கின்றன. உதாரணமாக காடுகளில் தேன் எடுப்பது, ரேஜ்சர்கள் எனப்படும் வன அதிகாரிகளின் அத்துமீறல்கள், புலி, மான் போன்ற விலங்குகளைத் திருட்டுத்தனமாக வேட்டையாடப்படுவது, சந்தன மர திருட்டு, காட்டில் சாமிக்கு நடக்கும் படையல் என இந்தப் பட்டியல் நீள்கிறது.

நாவலில் இந்தப் பகுதியையே மேலும் செழுமைப்படுத்தி, கிராமத்து பஞ்சாயத்துகள், சாராயச் சாவுகள் போன்றவற்றைத் தவிர்த்திருக்கலாம் என்பது எனது கருத்து. அதுபோலச் சில காட்டு விலங்குகளைப் பற்றிய சிறிய குறிப்புகள் பயனுள்ளதாக இருக்கும். உதாரணமாக "மிளா" என்பது ஓரு வகையான மான் என்பதை பின்னால் தெரிந்து கொண்டேன். அதே சமயத்தில சில வழக்குச் சொற்களுக்கான மாற்றுச் சொல்லை அடைப்புக் குறியில் கொடுத்திருக்கிறார்கள். அந்த வகையில் அட்டளை எனபதற்கு பரண் எனக் குறிப்பிட்டிருந்தது சிறப்பு. மற்றபடி கெடைகாடு ஓரு நல்லதொரு வாசிப்பனுபவம்.

கண்முன்னே  நகர்மயமாதலுக்கு நம் கிராமங்களைப் பலிகொடுத்துக் கொண்டிருக்கும் இந்தக் காலகட்டத்தில் "கெடைகாடு" போன்றதொரு நாவலின் எழுத்துக்கள் மட்டுமே இழந்த வாழ்க்கையை மீட்டேடுக்க உதவும்.
அதுபோல அடுத்தத் தலைமுறைக்கு இது போன்ற படைப்புகள் மட்டுமே அந்த வாழ்க்கைக்கு சாட்சியாக இருக்கும்.

நன்றி; பாஸ்கர்
http://omnibus.sasariri.com/2016/03/blog-post.html

Friday, October 10, 2014

புதிய வடிவமைப்பில் கெடை காடு

'கெடை காடு' அடுத்த பதிப்பு வெளியாக இருக்கிறது. முதலில் காவ்யா வெளியிட்டது. இப்போது டிஸ்கவரி புக் பேலஸ் வேடியப்பன் வெளியிடுகிறார். முந்தையை அட்டைப்படம் அழகாக இருந்தும், அடுத்தப் பதிப்புக்கு மாற்றிவிட்டேன்.


'அருமையா இருந்தது. இது வழக்கமான நாவல் இல்லை. வேறு நாவல் வகை' என்று சொன்ன  ஐயா, பா.செயப்பிரகாசம், 'எடுத்து ஒரே மூச்சுல படிச்சு முடிச்சுட்டேன். ரொம்ப சுவாரஸ்யமா இருக்கு. அந்த ஏரியாவுக்கு நானும் வந்து போயிருக்கிறேன்ங்கறதால இன்வால்மென்டோட வாசிக்க முடிஞ்சது' என்று தட்டிக்கொடுத்த நாஞ்சில் நாடன் அவர்கள், 'அப்பா முடியாமல் இருந்த நேரம் அது. உங்கள் பிரதியைப் படித்து, எதை எதைச் சொல்ல வேண்டும் என்ற குறிப்புகளையும் எடுத்து எழுதிவைத்திருந்த நிலையில், மடிக்கணினியில் உட்காரும் நேரம் வராமலே போய்விட்டது' என்று அஞ்சல் செய்த பிரியத்துக்குரிய வண்ணதாசன் அண்ணாச்சி, 'இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார்' என்று எழுதிய, பாராட்டிய, எழுத்தாளர் எஸ்.ரா அவர்கள், 'வீட்டுக்கு வந்த உச்சியை, தேக்கி வைத்திருந்த சந்தோஷச் சிரிப்புடன் வரவேற்கும் அவன் அம்மா, புண்ணியத்தாயி, ‘காட்டுல என்னத்தல கண்ட?’ என்று கேட்கும் போது, அவிழ்ந்து விழுந்த சாரத்தை மடித்துக் கட்டிக்கொண்ட உச்சிமகாளி சொல்கிறானே, ‘காட்டையே பாத்தாச்சு. வேற என்னத்த பாத்தியான்னு கேக்கே?’ என்று. அந்த ஒரு பதிலுக்குள், நாவல் அடங்கி விடுகிறது' என்று வாழ்த்திய இயக்குனர் சுகா, 'அருந்ததிராயின் 'தி காட் ஆப் ஸ்மால் திங்க்ஸ்' எனக்கு நேற்றைய இன்றைய கேரளாவை காட்டியது போல, தமிழர்களின் ஆதிபண்பான மேய்ச்சல் நிலம் சார்ந்த வாழ்வை தம்பி ஏக்நாத் வனங்களின் பச்சை வாடையோடு கொடுத்திருக்கிறார்' என்ற அண்ணாச்சி கவிஞர் வித்யாஷங்கர், 'மேய்ச்சல் வாழ்க்கை என்பது, மனித இனத்துடன் ஒன்றிப்போன ஒன்று. அந்த வாழ்க்கையை மனித இனம் படிப்படியாக இழந்து வரும் நிலையில், அதன் முக்கியத்துவத்தை, கொடை காடு மீண்டும் நமக்கு உயிர்ப்பித்து தருகிறது' என்ற நண்பர் நா.முத்துகுமார், 'முடிவை வேற மாதிரி வச்சிருக்கலாம்' என்று போன் வழி வாழ்த்திய நண்பர் க.சீ.சிவகுமார், 'பழந்தமிழ் வாழ்வின் சாரங்களை ஒவ்வொன்றாக தமிழகம் இழந்துவருகிறது. நவீனம் என்று அதற்குப் பெயர் வைத்து பெருமைப்படுகிறோம். பொருளாதாரம் பெருகுகிறது. வாழ்வாதாரம் உயர்கிறது. அடையாளங்களை இழந்து கொண்டிருக்கிறோம். இந்த தருணத்தில் மலையும் காடும் மயங்கும் மலங்காட்டை அணு அணுவாக அனுபவிக்க வைத்திருக்கிறார் ஏக்நாத்' என்ற நண்பர் புத்தன், இன்னும் நாவலை வாசித்துவிட்டு பேசப்போகிற எழுதப்போகிற அனைவரையும் இப்போது நினைத்துப்பார்க்கிறேன்.

முதல் நாவல் இப்படியொரு கவனிப்புக்கு வந்ததே மகிழ்ச்சியாக இருக்கிறது. இந்த உற்சாகத்தோடு அடுத்த நாவலை எழுத ஆயத்தமாகிவிட்டேன்.
...................

நாவல் பற்றி நண்பர் பாலு சத்யா, குங்குமம் தோழி டாட் காமில்...


‘இந்த நாவலின் கதைக் களம் தமிழுக்கு மிகவும் புதியது’ என்று புகழ்ந்திருக்கிறார் எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன்.

‘காடு, அது சார்ந்த வாழ்க்கை, மாடுகள், மேய்ச்சல், காதல், காமம் என மேய்ச்சல் காடுகளின் கசப்பும் இனிப்புமான தனித்துவமான இனத்தின் வாழ்வியலைப் பேசும் தமிழின் முதன்மையான புதினங்களில் ‘கெடை காடு’க்கு மிகப் பெரிய இடம் இருக்கிறது…’ என்று குறிப்பிடுகிறார் எழுத்தாளர் சுந்தர புத்தன்.

-இந்த நூல் குறித்த அறிமுகத்துக்கு இவையெல்லாம் அவசியமாக இருக்கின்றன. எழுத்தில் கொங்கு வட்டார வழக்கை முன்னிறுத்திய ஆர்.சண்முகசுந்தரம் தொடங்கி கரிசல் பூமி வட்டார வழக்கை வெகு லாவகமாகக் கையாண்ட கி.ராஜநாராயணன் வரை தமிழகத்தின் கிராமங்களும் மனிதர்களும் அவர்கள் வாழ்க்கையும் எத்தனையோ படைப்புகளில் மிளிர்ந்திருக்கின்றன. அந்த வரிசையில் ‘கெடை காடு’ நாவலுக்கு மிக முக்கியமான, அதே நேரத்தில் தனித்துவமான இடமுண்டு. வழக்கம் போல ஒரு கிராமம், அதில் ஏதோ ஓர் ஆண் அல்லது பெண்ணை மையப்படுத்தி, ஏதோ ஒரு பிரச்னையை முன்னிலைப்படுத்தியபடி நகரும் நாவலாக ‘கெடை காடு’ இல்லை. ஒவ்வொரு மலருக்கும் ஓர் வடிவம், மணம் என்று தனித்தன்மை இருப்பது போல இந்நாவலில் காட்சிப்படுத்தப்படும் மனிதர்களும் அவரவர்களுக்கான இயல்புகளுடனும் குணங்களுடனும் வலம் வருகிறார்கள்.

கணவன், இன்னொருத்தியின் வீட்டில் இருப்பதைப் பார்த்து அதிர்ந்து போனாலும், அவன் வெளியே வரும் வரை காத்திருந்து, ‘‘ஆம்பள யோக்கியம் தெரியாண்டாமா? அதான். இன்னையோட முடிஞ்சாச்சு. இனி ஒட்டும் இல்ல. உறவும் இல்ல’’ என்று உதறிவிட்டுப் போகிற புண்ணியத்தாயி…
‘‘இவங்க நினைச்சா சேர்க்கதுக்கும் நீக்கதுக்கும் நான் என்ன இவ்வோ வீட்டு மாடா, ஆடா? எனக்கு சங்கமும் வேண்டாம், ஒண்ணும் வேண்டாம்’’ என படபடக்கிற தனித்து வாழும் கல்யாணி…

எதிர்ப்பாலினத்தின் மேல் எழும் வேட்கையும் பார்க்கிற பெண்ணின் மேலேல்லாம் காதல் வயப்படத் தூண்டுகிற பருவத்திலிருக்கும் உச்சிமகாளி என நாவலில் வரும் ஒவ்வொரு கதாபாத்திரமும் நாம் நேரில் சந்தித்துப் பேசும் எத்தனையோபேரின் சாயலைக் கொண்டிருக்கிறார்கள். பாத்திரப் படைப்புகளின் யதார்த்த தன்மை நாவலின் போக்குக்கு பெரும் பலம்.
குள்ராட்டிக்கு மேய்ச்சலுக்குப் போன இடத்தில் அட்டளையில் தொங்கும் பாம்புச் சட்டைகள்… அநாமதேயமாக நடு வழியில் நிற்கும் பட்றையன் கோயில்… அமைதி சூழ் மலைப் பகுதியில் அவ்வப்போது கேட்கும் ஓநாய்களின் இரைச்சல்… இவற்றுக்கு மத்தியில் மாடுகளையும் காபந்து பண்ணி, தங்களையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டிய நிலையில் இருக்கும் மேய்ச்சலுக்கு வந்த மனிதர்களின் வாழ்க்கை… என இந்த நாவல் பதிவு செய்யும் விஷயங்கள் ஏராளம்.

மனித வாழ்வின் வசீகரத்தையும் அவலத்தையும் வலிந்து திணிக்காமல், போகிற போக்கில் யதார்த்தமாக கோடிட்டுக் காட்டுகிறது ஏக்நாத்தின் எழுத்து நடை. கால்நடை மேய்த்தல் தொடர்பாக தமிழில் பூமணியின் ‘ரீதி’ சிறுகதை போல வெகு சில படைப்புகளே வெளியாகியுள்ளன. அதையே முக்கியக் களமாகக் கொண்டு வெளியான முதல் நாவல் ‘கெடை காடு’ என்று தோன்றுகிறது. தங்கு தடை இல்லாத எழுத்து நடை, திடீர் திருப்பங்கள் என்று சலிப்பூட்டாத இயல்பான நிகழ்வுகள், இது வரை பார்த்தும் கேட்டும் அறியாத புதிய அனுபவத்தை தரும் கதைக் களம் என விரிகிற இந்நாவல் ஒரு வாழ்வியலை ஆவணப்படுத்தியிருக்கிறது. அது ஒவ்வொருவரும் படித்து, அனுபவிக்க வேண்டிய வாழ்வியல்!

கெடை காடு
விலை: 170
வெளியீடு: டிஸ்கவரி புக் பேலஸ்,
முகவரி: எண் 6, மஹாவீர் காம்ப்ளக்ஸ், முதல்தளம்,
முனுசாமி சாலை, மேற்கு கே.கே நகர்,
சென்னை – 600078.
(பாண்டிச்சேரி விருந்தினர் மாளிகை அருகில்).
போன்: 044-65157525. செல்: 9940446650.


Sunday, July 20, 2014

கெடை காடுக்கு ஜெயந்தன் விருது


 மறைந்த எழுத்தாளர் ஜெயந்தன் நினைவாக, மணப்பாறையில் இயங்கும் ‘செந்தமிழ் அறக்கட்டளை’  ஒவ்வொரு ஆண்டும் சிறந்த இலக்கிய நூல்களைத் தேர்ந்தெடுத்து விருதுகள் வழங்கி வருகிறது.

2013-ம் வருடத்திற்கான விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாவலாக திரு நிஜந்தன் எழுதிய ‘என் பெயர்’ நாவலும், ஏக்நாத் எழுதிய ‘கெடை காடு’ நாவலும் ஜெயந்தன் விருதிற்காகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.  சிறந்த நாடக நூலுக்கான விருது க. செல்வராஜ் அவர்களின் ‘நரிக்கொம்பு’ நூலுக்கு வழங்கப்படுகிறது.

சிறந்த சிறுகதை நூல்களுக்கான விருதுகள், புதிய மாதவி எழுதிய ‘பெண் வழிபாடு’ நூலுக்கும், ஜெயந்தி சங்கர் எழுதிய ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் என்கிற நூலுக்கும் வழங்கப்படுகிறது.

சிறந்த கவிதை நூலுக்கான விருதுகள் இரா. வினோத் எழுதிய ‘தோட்டக் காட்டீ’ தொகுப்பிற்கும்,  ஜான் சுந்தர் எழுதிய ‘சொந்த ரயில் காரி’ தொகுப்பிற்கும் வழங்கப்படுகிறது. மேலும், கவிதைக்கான சிறப்பு விருதிற்காக திலகபாமாவின் கவிதை தொகுப்பு தேர்வு செய்யப்பட்டிருக்கிறது.

விருதுகள் வழங்கும் விழா ஆகஸ்ட் 2ம் நாள், சனிக்கிழமை, மாலை சென்னை தி. நகரிலுள்ள சர் பிட்டி தியாகராயர் கலை அரங்கத்தில் நடைபெறுகிறது.  மாலை 4.00 மணிக்கு ஜெயந்தன் படைப்புகள் குறித்த கருத்தரங்கமும், 5.30 மணிக்கு, ஜெயந்தன் எழுதி ஞாநியின் இயக்கத்தில் ‘மனுஷா மனுஷா’ நாடகமும் நடைபெறும்.  இரவு 7.00 மணிக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெறும்.

Tuesday, July 1, 2014

கெடை காடு பற்றி எஸ்.ராமகிருஷ்ணன்


சமீபத்தில் ஏக்நாத் எழுதிய கெடை காடு நாவலைப் படித்தேன். இன்று பெரும்பான்மை நாவல்கள் நகர்மய வாழ்க்கையை எழுதிக் கொண்டிருக்கையில் மண்மணத்துடன், கிடைமாடுகளின் யதார்த்தமான வாழ்க்கையைச் சிறப்பாக எழுதியிருக்கிறார் ஏக்நாத்.


மலை கிராமங்களில் இருந்து மாடுகளைக் கெடை காடு நோக்கி அழைத்துச் செல்வது கண்கொள்ளாத காட்சியாக விரிகிறது.
ஒநாய் குலச்சின்னம் நாவலை வாசிக்கும் போது மங்கோலிய வேட்டை நிலத்தை எவ்வளவு நுட்பமாக எழுதிப்போகிறாரே என வியந்தேன், அந்த விவரணைகளுக்கு இணையாகக் கிடை மாடுகளின் வாழ்க்கையை அதன் தனித்துவமான அனுபவங்களைத் தனது இயல்பான மொழியில், நுட்பமான கதை சொல்லலில் விவரிக்கிறார் ஏக்நாத்.

மேய்ச்சலுக்கு செல்லும் மனிதர்களின் காதல், காமம், வாழ்க்கை நெருக்கடிகள்  என உயிரோட்டமான நிகழ்வுகளை பதிவு செய்திருப்பது நாவலின் தனித்துவம் என்பேன்

இந்த நாவலின் கதைகளம் தமிழுக்கு மிகவும் புதியது. உச்சிமகாளி, மீசை சுப்பையா,தவிட்டான், கேசரி, நண்டு என மறக்கமுடியாத கதாபாத்திரங்கள் வழியே கதை நீள்கிறது.

மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய கிராமப்புற மேய்ச்சல் மாடுகளின் வாழ்வியலை  சிறந்த நாவலாக்கியிருக்கிறார். காவ்யா பதிப்பகம் இந்நாவலை வெளியிட்டுள்ளது. ஏக்நாத்திற்கு என் மனம் நிரம்பிய வாழ்த்துகள்.


காவ்யா பதிப்பகம்
16, இரண்டாம் குறுக்குத் தெரு, டிரஸ்ட்புரம்
கோடம்பாக்கம்
சென்னை- 24