Monday, April 28, 2008

வெண்ணிலாக்கள் பூக்கும் தெரு

எப்போதாவது விடுபடுவேன் என நினைக்கிறேன். இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் வார்த்தைதான். எழவெடுத்த என்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. கீழ்ப்பாக்கம் மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாயிற்று. இன்னும் முதிரவில்லையாம். தினமும் நான்கைந்து மாத்திரைகளில் குணமாகலாம் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. பெரும்பாலான நம்பிக்கைகள் பொய்த்து போனதிலிருந்து நம்பிக்கை மீதே நம்பிக்கையற்று போனேன்.

நள்ளிரவில், யாருக்கும் தெரியாமல் எதிர்வீட்டு கேட்டை திறந்து இரண்டு தூண்களுக்கு நடுவே இருந்த வாசலில் நான் மூத்திரம் பெய்திருக்கக் கூடாது. அந்த சள சள சத்தம் கேட்டு வெளியே வந்த கோமதி டீச்சர், இதை பார்த்திருக்கவும் கூடாது. கதைவை திறக்கும் சத்தம் கேட்டபோது நான் ஓடியிருக்க வேண்டும். அந்த சத்தம் எனக்கு கேட்கவில்லை. முழுதாக முடிக்கும் முன்பே, டீச்சர் என்னை பார்த்து கத்த தொடங்கினார். கிராமமும் இல்லாத நகரமும் இல்லாத இந்த ஊரில் எப்போதும் ஒன்பது மணிக்கே கொட்டாவி விட்டுக்கொண்டிருக்கும் டீச்சர், நள்ளிரவு வரை விழித்துக்கொண்டிருந்தது எனது சாபக்கேடு. அவள் போட்ட சத்தத்தில் ஊரே கூடி, என்னை அடித்தது. என் அடிவயிற்றுக் கீழே ஒருவன் பலமாக மிதித்தது மட்டும் இன்னும் ஞாபகத்தில் இருக்கிறது.

ஒரு பலாத்காரத்துக்கு நான் முயன்றதாகக் குற்றச்சாட்டு. அப்பாவுக்கு அவமானம். கவுரம் கப்பலேறிய பிரச்னையில் தண்டிக்கப் பட்டேன் நான். அப்பாக்களின் தண்டனைகள் கொடூரமானவை. எல்லார் முன்பும் ஓங்கி அடித்தார். தர தரவென வீட்டுக்கு இழுத்து வரப்பட்டேன். வாசலில் ஜன்னலோடு நான் கட்டப்பட்டேன். அப்பாவின் கோபம் அடிகளாக என் மேல் விழுந்தது. வலது கால் தொடையில் என் சிகப்பு தோல்கள் பட்டையாக கன்னிப்போக, அவரது பச்சை மட்டை பிய்ந்திருந்தது. இப்போதும் அந்த தழும்பு இருக்கிறது.
நான் அழுதேனா என்பதும் தெரியவில்லை.

தெருவில் வழக்கமாக வேடிக்கைப் பார்க்கும் கூட்டம், ‘இந்தப் பயலா இப்படி? தெருவுக்குள்ள இவன எப்படி நடமாட விட?' என்று பேசிக்கொண்டிருந்தது. என் தோளை அணைத்த அம்மா அதிக நேரம் கண்ணீர் சிந்திக்கொண்டிருந்தாள். அவள் கண்ணீரிலிருந்து ஒவ்வொரு பூக்களாக என் மடியில் விழுந்துகொண்டிருந்தது. அதை சேகரிக்க தொடங்கியிருந்தேன் நான். வீட்டில் யாரும் அன்றிரவு தூங்கவில்லை. வீட்டில் என்றால் நான், அம்மா, அப்பா, தங்கை.

மறுநாள் காலையிலிருந்து எதிர்வீட்டு சீதா லட்சுமி உட்பட எல்லாரும் என்னை கண்டாலே கதவை மூட ஆரம்பித்தனர். இவ்வளவுக்கும் சீதா என்னுடன் படித்தவள். ஒரு முறை காலில் முள் குத்தியதற்காக ஊக்கால் அதை எடுத்தவன் நான்தான் என்பதையும் அவள் முட்டிக்கு கீழ் சிறு மச்சம் உண்டு என்பதையும் கூடுதல் தகவலாகச் சொல்லிக்கொள்கிறேன். அவளது கால் கொலுசு காணாமல் போனதிலிருந்து என்னிடம் பேசுவதை நிறுத்திவிட்டாள். இப்போது இரவில் வீட்டுக்கு வெளியே நின்று, நிலவிடம் நான் பேசிக்கொண்டிருந்தால் கூட வெண்ணிலாக்கள் பூக்கும் இத்தெருவின் எதிர்திசை வீடுகள் மூடப்படுகின்றன. இது நிலவுக்கும் தெரியும்.

தங்கைக்கு காய்ச்சல் என்று மருத்துவமனைக்கு கூட்டிச்சென்றாள் அம்மா. நானும் சென்றேன். நோயாளிகளால் நிரம்பியிருந்தது மருந்து வாசங்களால் ஆன அந்த மனை. அருகில் உக்காந்திருந்த கோதுமை நிற பெண்ணின் வலது தொடையில் பெரும் கட்டு போடப்பட்டிருந்தது. வெள்ளை நிற கட்டிலிருந்து ரத்தம் கசிந்துகொண்டிருந்தது. மெது மெதுவாக கொப்பளித்து கொப்பளித்து வந்துகொண்டிருப்பதை பார்க்க என்னால் சகிக்க முடியவில்லை. அம்மா, தங்கையை அழைத்துக்கொண்டு ‘இங்கயே இரு' என கூறிவிட்டு டாக்டரின் அறைக்குச் சென்றாள்.

நான் வெளியே இருந்தேன். அந்தப் பெண் ரத்தம் வருவதை பற்றி துளியும் கவலைப்படாமல் வார இதழைப் படித்துக்கொண்டிருந்தாள். எட்டிப்பார்த்தேன். ஏழெட்டு வருடங்களுக்கு முன் இறந்து போன நடிகையின் கதை அது. அதிலிருந்து விடுபடுபவளாக தெரியவில்லை. நான் அவள் தொடையையே பார்த்துக்கொன்டிருந்தேன். சுரிதாரை முழுவதுமாக நனைத்த ரத்தம், பொங்கி பொங்கி, சிறு நதி போல தரையை தொட்டது. அவளது இடது கால் பாதத்தை நனைத்து வலதுகால் பாதத்தை தொட்டது. இன்னும் சிறிது நேரத்தில் உட்கார்ந்திருக்கும் இடமெல்லாம் ரத்த ஆறாக மாறும். சுத்தமாக ரத்தம் வடிந்த பின் அவளது மரணம் நிகழும். இந்த நொடி வரை சுய நினைவோடிருக்கும் ஓர் இளம் பெண் இறக்கப்போவதை என்னால் தாங்க முடியவில்லை. மரணத்தை எதிர்கொண்டிருக்கும் அவளின் முகத்தை பார்த்தேன். ஒற்றைக்கல் மூக்குத்தியின் திருகை சரி செய்துகொண்டிருந்தாள்.

ரத்தம் வருவதை அவள் உணரவில்லையா? அல்லது தெரியவில்லையா? இப்படியரு வலியை அவளால் எப்படி இவ்வளவு சாதரணமாக தாங்க முடிகிறது? எதிரில் மருத்துவமனை ரிசப்ஷனில் இருந்த பெண் இதை பார்த்தும் பார்க்காததுமாக இருக்கிறாள்.

அவள் இறந்துகொண்டிருக்கிறாள் கொஞ்சம் கொஞ்சமாக. தங்கை, குளிருக்காக மூடியிருந்த டவல் என் அருகிலேயே இருந்தது. படாரென்று எடுத்து, அவளது தொடையில் கட்டி, ரத்தத்தை நிறுத்த நினைத்தேன். என் கைகள் மெதுமெதுப்பான அவளது தொடையை தொட்டதும் அலறிவிட்டாள். என் கன்னத்தில் ஓங்கி அறைந்தாள். இரண்டு மூன்று பேர் என் முகத்தில் குத்தினார்கள். நான் சுவற்றில் மோதி விழுந்தேன். கூட்டம் கூடி விட்டது. இடது நெற்றியில் கோலி குண்டு அளவில் சின்ன வீக்கம் வந்து விண்ணென்றிருந்தது. அதை தடவினேன்.

அம்மாவும் தங்கையும் அடிப்பவர்களிடமிருந்து என்னை விலக்கினார்கள். அவளது தொடையிலிருந்து ரத்தம் இன்னும் வடிந்துகொண்டிருந்தது. அம்மாவிடம் சொன்னேன் ரத்தம் வடிவதை. அந்தப் பெண், ‘எதுடா ரத்தம்... நாயே... மேலயா கைய வைக்க' என்று கன்னத்தில் அறைந்தாள். அம்மா, அவளிடம் ஏதோ பேசினாள். அவள் அம்மாவை திட்டினாள்.
டாக்டரிடம் விஷயம் சென்றுவிட்டது. என்னை மேலும் கீழும் பார்த்தார். ‘அந்தப் பெண்..., ரத்தம்... தொடை...' என்று விளக்கினேன். கையை தூக்கி, போதும் என்பது போல் சைகை செய்தார். அவரது நண்பரான வேறொரு டாக்டரின் கார்டை அம்மாவிடம் கொடுத்தார்.

ரத்தம் வருவதை தடுத்து நிறுத்த முயற்சித்தவனை ஏன் அடிக்க வேண்டும்? அம்மாவிடம் கேட்ட தினத்திலிருந்து என்னை எங்கேயும் அழைத்துச்செல்வதில்லை. வீட்டில் எனக்கென்று அறை ஒதுக்கப்பட்டிருந்தது. அதில் தடிமனான சிகப்பு நிற அட்டைப்போட்ட புத்தகங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்தன. அப்பா எப்போதாவது படிக்கின்ற புத்தகங்கள். எனக்கு புத்தகங்களைப் பிடிக்காது என்பதால் அதை தொட மாட்டேன் என்ற காரணத்தில் இந்த அறை எனக்கு ஒதுக்கப்பட்டிருக்கலாம். என் இரவுகள் இந்த அறையில்தான்.

இப்போதெல்லாம் இரவு தூக்கத்தில் சிங்கம், கரடி, யானை போன்ற விலங்குகளின் சத்தங்களை அனாயாசாமாக எழுப்புகிறேனாம். தங்கை, பயத்தில் அம்மாவை கட்டிப்பிடித்து தூங்குகிறாளாம். இதற்காகத்தான் தனி அறை. சுவருக்குள்ளிருக்கும் இந்த அறையிலிருந்து நான் வானத்தை பார்க்கிறேன். அறையில் இருந்து மரங்களைப் பார்க்கிறேன். வீட்டு வாசலில் இருக்கும் செம்பருத்தி பூக்கள், வாசலுக்குள் புகுந்து யாருக்கும் தெரியாமல் என்னிடம் பேசுவதை அப்பா பார்க்கவில்லை. மேகத்தோடு உரையாடுகிறேன். எனக்கு மட்டும் மழை பெய்வதாக உறுதியளித்திருக்கிற மேகம் பற்றி அம்மாவிடம் இதுவரை எதுவும் சொல்லவில்லை.

இப்படியான நாட்களில் வீட்டிலிருந்து தெரு கடந்து முனையில் இருக்கும், டீக்கடை வரை செல்ல எனக்கு, திடீரென அனுமதி அளிக்கப்பட்டிருந்தது. இந்த அனுமதி கூட, வீட்டிலிருந்து பார்த்தால் கடை தெளிவாகத்தெரியும் என்ற அடிப்படையில்தான். கடையில் கூட்டம் அதிகம் இருக்கும். மத்தியான வேளையில் யாரும் வருவதில்லை. டீக்கடைக்கார பாண்டி, அப்போதுதான் பேப்பர் படித்துக் கொண்டிருப்பான். ‘கள்ளகாதலன் கொலை', ‘ஆபாச படத்தில் பிரபல நடிகை...' உட்பட இது தொடர்பான செய்திகளில் அவனது ஆர்வம் அதிகம். படித்து முடித்துவிட்டு இது குறித்து விவாதங்களில் அவன் ஈடுபடும் பாங்கு இங்கு தேவையில்லாதது.

பாய்லரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். மேலிருந்து செல்லும் வெண்புகை வழியாக பூதம் ஒன்று, மேலெழுந்து செல்வதும் இறங்குவதுமாக இருந்தது. என்னைப் பார்த்து கண்களை அகல விரித்து சிரித்து மறைந்துகொண்டிருந்தது. நான் உற்றுப் பார்த்தேன். வாய்க்கு மேல் பக்கம் கருப்பு நிறம் அதிகமில்லாத வெள்ளையுமில்லாத நிறத்தில் சிறு கோடு போலான மீசை இருந்தது. கழுத்து வரை தொங்கி கொண்டிருந்த முடிகளோடு மீசை இணைக்கப்பட்டிருந்தன. அதன் வலது கையில் தங்க நிறத்திலான செவ்வக பெட்டி ஆடிக்கொண்டிருந்தது. இன்னும் வேகமாக ஆடினால் டீ பாய்லரில் தங்கங்கள் சிதறி விழக்கூடும். பெட்டியின் நடுவில் சிகப்பு நிற கற்கள் பதிக்கப்பட்டிருந்தன. மின்னும் அதன் ஒளி பிரகாசமாக இருந்தது. பாண்டி பேப்பரிலிருந்து கண்ணை எடுக்கவில்லை. நான் இமை அசைக்காமல் பார்த்துக் கொண்டிருந்தேன்.

சிறிது நேரத்தில் புகையின் மேலேயே சம்மணமிட்டு அமர்ந்தது பூதம். மெதுவாக கொட்டாவி விட்டது. என்னை நோக்கி கை நீட்டி, ‘இந்தா வாங்கிக்கோ பெட்டியை' என்றது. நான், ‘ஸ்... மெதுவா... பாண்டிக்கு தெரிஞ்சுரும்' என்றேன். பெஞ்சிலிருந்து எழுந்து பாண்டியை ஒரு கண்ணால் பார்த்துக்கொண்டே, பாய்லர் அருகே சென்றேன். கையை நீட்டினேன். பூதம் பெட்டியை கொடுப்பது போல என் கையை பிடித்து இழுத்தது. எனக்கு பயம் வந்துவிட்டது. இன்னொரு கையால் ஓங்கி ஒரு குத்து விட்டேன். செவ்வக வடிவ பெட்டி பாய்லரில் விழுந்தது. பூதம் என்னை முறைத்து பார்த்தது. நாக்கை துறுத்தி மிரட்டினேன். ஓடி விட்டது பூதம். பாண்டி இது எதையும் கவனிக்கவில்லை. பாய்லர் கொதித்துக்கொண்டிருநத்து. இன்னும் அதற்குள்ளேயே பெட்டி கிடந்தால் தங்கம் உருகிவிடும். நான் பாய்லருக்குள் கைவிட்டு பெட்டியை எடுக்க நினைத்தேன்.

பிறகு என்ன நடந்ததென்று தெரியாது. பாண்டி என்னை, நினைத்து நினைத்து மிதித்துக் கொண்டிருந்தான். பக்கத்தில் அம்மா என் கையை பிடித்து இழுத்துக்கொண்டிருந்தாள். ‘விடுங்கம்மா, பெட்டியை எடுத்துவிட்டு வருகிறேன்' என்றேன். என் பேச்சை அம்மா கேட்க தயாராக இல்லை.

மூன்று வருடங்களாகிவிட்டது. வீட்டுக்கு வரும் சித்தப்பா, சித்தி, அத்தை மாமா உள்ளிட்ட உறவினர்களுக்கு நான் காட்சி பொருளாகிப் போனேன். அத்தை ஒரு நாள் தன் மகளிடம், ‘கிட்ட போயிராத, கடிச்சிருவானாம்' என்றபோதுதான் எனக்கு பைத்தியம் பிடித்திருப்பதாய் அறிந்தேன். நான் யாரையும் கடித்ததாய் ஞாபகம் வந்ததில்லை. என் கால்களில் பிணைக்கப்பட்டிருக்கும் சங்கிலியின் வட்டம் அடித்து அடித்து காலில் புண் வந்திருக்கிறது. ரெத்தம் வருவதும் காய்வதுமான விளையாட்டில் எனக்கு இதுவரை வலித்ததாகத் தெரியவில்லை. நான் அடைக்கப்பட்டிருக்கிற அறையிலிருந்து பார்த்தால் இப்போது சீதாலட்சுமியின் வீடு தெரிகிறது. அவள் வீட்டுக்கு வருகிற குழந்தைகள், என் ஜன்னல் நோக்கி கல்லால் அடிப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள். ஜன்னல் வரை வரும் கற்கள் குறி தவறி கீழேயே விழுகின்றன.

நான்கு வீடு தள்ளியிருக்கும் சாரு மாமாவின் வேனில் நேற்றுதான் கீழ்ப்பாக்கம் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டேன். எப்போதாவது விடுபடுவேன் என நினைக்கிறேன். இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் வார்த்தைதான். எழவெடுத்த என்னை எப்போதும் திட்டிக்கொண்டிருக்க முடியவில்லை. மருத்துவமனையிலிருந்து வீடு வந்தாயிற்று. இன்னும் முதிரவில்லையாம். தினமும் நான்கைந்து மாத்திரைகளில் குணமாகலாம் என்பது மருத்துவர்களின் நம்பிக்கை. பெரும்பாலான நம்பிக்கைகள் பொய்த்து போனதிலிருந்து நம்பிக்கை மீதே நம்பிக்கையற்று போனேன்.

42 comments:

பாரதி தம்பி said...

மனம் பிறழ்வுற்றவர்களின் அகவுலகம், எந்தக் கற்பனை எல்லைகளுக்கும் அப்பாலானது. வெண்ணிலாக்கள் பூக்கும் தெருவும் ஒருவனை பைத்தியமாக்கும், சமயத்தில் வெண்ணிலாவும்.

Mathi said...

மிகவும் நன்றாக இருந்தது கதை.

Anonymous said...

விரைவில் முதிர்ந்து குணமடைய வாழ்த்துக்கள்! ;)

ஆடுமாடு said...

நன்றி ஆழியூரான். ஒருவகையில் மனம்பிறழ்வுற்றவனாகவும் இருக்கிறேன்.

ஆடுமாடு said...

ஏலியன் வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

வெயிலான உள்ளூர் மருந்து/சிகிச்சை இருந்தா சொல்லுங்க.

மெளலி (மதுரையம்பதி) said...

பாவம்...

M.Rishan Shareef said...

அன்பின் நண்பருக்கு,
(ஆடுமாடு என்றழைக்கச் சங்கடமாக இருக்கிறது.
அரைகுறையாக எழுதவுமில்லை,
ஆபாசமாக எழுதவுமில்லை,
அழகாக எழுதுகிறீர்கள்,
அருமையாக எழுதுகிறீர்கள்.
சொந்தப் பெயரிலேயே எழுதலாமே :) )

எந்த விதிகளுக்கும் கட்டுப்படாதவொரு ,முதிர்ச்சியுறா மனமுள்ளவரின் வாழ்க்கையை அற்புதமாகக் கையாண்டிருக்கிறீர்கள்.

சாலையோரங்களிலும்,பாழடைந்த வெளிகளிலும்,சுடுகாட்டிலும் இது போன்றவர்களைப் பார்த்திருக்கிறேன்.

பாதியில் மனப்பிறழ்வுற்றவர்களது இறந்த காலங்கள் எப்பொழுதுமே நமது கனவுகளுக்குக் கூடச் சாத்தியப்படாத பயங்கரங்களைக் கொண்டவையென்றே எண்ணுகிறேன்.

அழகான எழுத்துநடையும்,கதை சொல்லும் விதமும் உங்களுக்கு வாய்த்திருக்கிறது.வாழ்த்துக்கள் நண்பரே..!

தொடர்ந்து எழுதுங்கள்.புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெறும் நடைமுறையை வலைப்பதில் கைக் கொண்டால் உங்கள் ஒவ்வொரு புது இடுகைகளையும் உடனடியாகப் பார்க்கும் அதிர்ஷ்டம் எனக்குக் கிட்டும்.

துளசி கோபால் said...

இந்த மனப்பிறழ்வு இலங்கை டூர் போயிட்டுவந்தபிறகா?:-)))))

அருமையா வந்திருக்கு.

// நான் ஜன்னல் நோக்கி கல்லால் //

என் ஜன்னல் நோக்கின்னு இருந்துருக்கணுமா?

ரொம்ப நாளாக் காணொமா....ஆடுமாடு எங்கியோ மேய்ச்சலுக்குப் போயிருச்சுன்னு நினைச்சேன்:-)

ஆடுமாடு said...

மதுரையம்பதி ஐயா நன்றி.

ஆடுமாடு said...

ரிஷான்ஜி நன்றி. பெயரிகளில் ஒன்றும் இல்லை என்பதால்தான் ஆடுமாடு.

//புதுப்பதிவுகளை மின்னஞ்சலில் பெறும் நடைமுறையை வலைப்பதில் கைக் கொண்டால் உங்கள் ஒவ்வொரு புது இடுகைகளையும் உடனடியாகப் பார்க்கும்...//

இது எப்படியென்று தெரியவில்லை. கொஞ்சம் விளக்கமாக சொன்னால் செய்யலாம்.

ஆடுமாடு said...

வணக்கம் டீச்சர்.

//என் ஜன்னல் நோக்கின்னு இருந்துருக்கணுமா?//

கரெக்ட். திருத்திவிட்டேன். சுட்டிக்காட்டலுக்கு நன்றி.

//ரொம்ப நாளாக் காணொமா....ஆடுமாடு எங்கியோ மேய்ச்சலுக்குப் போயிருச்சுன்னு நினைச்சேன்:-)//

சில டார்ச்சர் வேலைகள் உண்டு இல்லைன்னு பண்ணிடுச்சு. அதனாலதான்.

துளசி கோபால் said...

ரிஷான்,
இவரைப் புடிச்சு 'கூகுள் ரீடரில்' போட்டுவச்சுக்குங்க.

புதுப்பதிவு வந்ததும் தெரிஞ்சுக்கலாம்.

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

ஆடுமாடு, நல்லா வந்திருக்கு கதை. இன்னும் நிறைய எழுதுங்கள்.

நித்யன் said...

வணக்கம்...

பதிவர் சந்திப்பின்போது உங்களை பார்த்தேன்.

மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி.

அன்பு நித்யகுமாரன்.

வல்லிசிம்ஹன் said...

மனம் சிதைந்தவர்களின் உலகத்தை ஒரு கதையில் கோடிட்டு விட்டீர்கள்!
மகா பரிதாபம்.
இன்னும் முதிரவில்லை என்றது கண்புரை என்று நினைத்துக் கொண்டேன்:)

ஆடுமாடு said...

சுந்தர்ஜி நன்றி.

ஆடுமாடு said...

//இன்னும் முதிரவில்லை என்றது கண்புரை என்று நினைத்துக் கொண்டேன்:)//

வல்லிம்மா இதைவச்சு காமெடி கீமெடி பண்ணலையே...

ஆடுமாடு said...

//மிகவும் அருமையான வாசிப்பனுபவத்தை தந்திருக்கிறீர்கள். மிக்க நன்றி//

நித்யகுமாரன் அப்போது அதிகமாக பேசமுடியவில்லை. இன்னொருமுறை சந்திக்கலாம். நன்றி.

Unknown said...

வாசிக்க அருமையாக இருந்தது. நன்றி!

ஆடுமாடு என்றால் வெண்ணிலாக்கள் பூக்கும் தெரு எழுதியவர் என்று என் நினைவில் பதிந்திருக்கும் என்று நினைக்கிறேன்!

ஆடுமாடு said...

அருட்பெருங்கோ ஐயா, ரொம்ப நன்றி.

Unknown said...

/அருட்பெருங்கோ ஐயா, ரொம்ப நன்றி./

:(((

கிருத்திகா ஸ்ரீதர் said...

மனம் பிறழ்ந்தவர்களின் வாழ்க்கையின் எந்த் ஒரு நொடியை தரிசிக்க நேர்ந்தாலும் இதுவரை அறியப்படாத உலகமென்று அந்தக் கணங்கள் என்னுள் ஓர் ஆற்றாமையை எப்போதும் தோற்றுவிக்கும். அதன் உள்சென்று மிக நேர்த்தியாக படைத்திருக்கும் படைப்பிற்கு பாராட்ட வார்த்தைகள் இல்ல நன்ப.. வாழ்த்துக்கள்...

கிருத்திகா ஸ்ரீதர் said...

"எப்போதாவது விடுபடுவேன் என நினைக்கிறேன். இது கொஞ்சம் ஆசுவாசப்படுத்தும் வார்த்தைதான்" எல்லோர் வாழ்விலும் எப்போதும் வார்த்தை...

ஆடுமாடு said...

நன்றி கிருத்திகா.

ரமேஷ் வைத்யா said...

ஆடு, நூவு மனவாடு!

ஆடுமாடு said...

ரமேஷ் அப்டின்னா?

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

கதை அருமை.

ஆடுமாடு said...

நன்றி சாமான்யன்

லதானந்த் said...

ஆடு மாடு அண்ணா!
ஒங்க வூட்டு அட்ரஸக் கொஞ்சம் சொல்றீங்களா? நீங்க என்னைய வா வான்னு கூப்பிடற மாரி இருக்கு. கூர்மையா எதாவது பொருளால ஒங்க வைத்திலே ஒளிச்சு வெச்சிருக்கிற முத்துக்களை தேடிப் பாருன்னு எதுகுண்ணா என்னையக் கூப்டீட்டே இருக்கீங்க?

Thekkikattan|தெகா said...

//ஒரு பலாத்காரத்துக்கு நான் முயன்றதாகக் குற்றச்சாட்டு. அப்பாவுக்கு அவமானம். கவுரம் கப்பலேறிய பிரச்னையில் தண்டிக்கப் பட்டேன் நான்.//

ஆடுமாடு,

இந்த நிகழ்வுக்கு முன்பு வரை அப்ப அவருக்கு பூதம் மண்டைக்குள் கிளம்பவில்லை, இல்லையா?

இது மாதிரி மனப்பிறழ்வுற்றவரை சமூகம் உருவாக்குதுன்னு நான் எடுத்துக்கிறேன். சரியா.

அப்ப அந்த ட்டீ போடுபவர் வெட்டு, குத்து, கள்ளத் தொடர்பு, கற்பழிப்பு பத்தி படிக்கிறவர்லெல்லாம் மனப் பிறழ்வுற்றவரயில்லையா ;)). இதெப்படி இருக்கு... நல்லா எழுதுறீயுயவே... :-).

இரா. செல்வராசு (R.Selvaraj) said...

வித்தியாசமான ஒரு கதையை நல்ல நடையில் எழுதியிருக்கிறீர்கள். நன்றாக இருக்கிறது.

ஆடுமாடு said...

லதானந்த் வருகைக்கு நன்றி.

நீங்க என்ன சொல்றீங்கன்னு புரியலை.

ஆடுமாடு said...

தெகா

நாட்டுலதான் இருக்கீங்களா? நன்றி.


வருகைக்கு நன்றி செல்வராஜ்.

seethag said...

உங்கள் கதைகளை விரும்பிப்படிப்பேன்.அதிலும் மிகவும் ஸென்ஸிடிவ் ஆக இருப்பதாகவே உணர்கிறேன்..ஆனால் இந்தக்கதையில் மட்டும் ஏனோ ஒரு ஸ்டீரியோடைப்பை பார்கிறேன்..ஒருவேளை மனனல மருத்துவராக இருப்பதால் இருக்கலாம்..மனனல நோயாளிகளை எல்லாம் சேது திரைப்படம் போல சித்தரிப்பதும்..பரிதாபமானவர்களாகவே காண்பிப்பதும் ஒரு தலைபட்ச்சமானதுதான்.உண்மையில் சிலருடய குடும்பங்களில் மனனோயால ஏற்ப்படும் அவலங்கள் மிகவும் துக்ககரமானவை..

ஆடுமாடு said...

சீதா மேடம் நன்றி.

'நீங்க கிராமத்து கதைதான் எழுதறீங்கன்னு ஒரே... புகார். அதான் ஒரு சேஞ்சுக்கு இதை எழுதினேன்"
ஸ்டீரியோ டைப்தான். ஒத்துக்கறேன்.
வருகைக்கு நன்றி.

நீங்க மனநல மருத்துவரா?

seethag said...

ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..

இந்தியவில் மனனலம் குன்றியவர்களுக்கு எந்த வசதியும் அரசாங்கம் செய்வதில்லை.(யாருக்கு தான் செய்கிறார்கள்...!!!அது வேறு விஷயம்).இதனால் பாதிக்கப்படுவது குடும்பத்தார்.மருத்துவத்திற்க்கு இணங்காதவர்களுக்கு மருத்துவம் செய்ய நமக்கு போதுமான சட்டங்கள் இல்லாததால், குடும்பத்தார் பெரு அவதிக்குள்ளாவதும் பின் இத்தகய நோயாளிகளை எங்காவது விட்டுவிட்டு ஓடுவதோ,இல்லை யார் தலையிலாவது கட்டுவதும்(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)மிகவும் வேதனையான விஷயங்களில் சில..

seethag said...

ஆமாம்...ஆடுமாடு அவர்களே...இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..

இந்தியவில் மனனலம் குன்றியவர்களுக்கு எந்த வசதியும் அரசாங்கம் செய்வதில்லை.(யாருக்கு தான் செய்கிறார்கள்...!!!அது வேறு விஷயம்).இதனால் பாதிக்கப்படுவது குடும்பத்தார்.மருத்துவத்திற்க்கு இணங்காதவர்களுக்கு மருத்துவம் செய்ய நமக்கு போதுமான சட்டங்கள் இல்லாததால், குடும்பத்தார் பெரு அவதிக்குள்ளாவதும் பின் இத்தகய நோயாளிகளை எங்காவது விட்டுவிட்டு ஓடுவதோ,இல்லை யார் தலையிலாவது கட்டுவதும்(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)மிகவும் வேதனையான விஷயங்களில் சில..

ஆடுமாடு said...

நன்றி சீதா மேடம்.

//இப்படி அழைப்பது சற்று கடினமாக உள்ளது..//

அப்டிலாம் ஒண்ணும் இல்லை. நானே விரும்பி வைத்த பெயர்தான் இது. அப்படி அழைப்பதை பெருமையாக நினைக்கிறேன்.

நீங்கள் குறிப்பிட்டிருக்கிற விஷயம் உண்மைதான்.

//(பெரும்பாலான நேரங்களில் பெண்கள் தான் இத்தகய கஷ்ட்டத்திற்க்கு உள்ளாவார்கள்)//

இந்த கதை என் நண்பனுடையது. நல்ல படிப்பாளி. எல்லோரையும் பொறாமைபட வைக்கிற ஆங்கில அறிவு கொண்டவன். என்ன நடந்ததோ தெரியவில்லை. ஒரு மாதம் அவனை காணவில்லை. பிறகு பைத்தியமானான். அப்பா இறந்த பிறகு அவனது அம்மாதான் பார்த்தார். கொஞ்ச நாளில் மனநோய் முற்றி, வீட்டிற்கு யாரும் வந்தால் நிர்வாணமாக நிர்க்க ஆரம்பித்தான். பிறகுதான் குற்றாலத்தில் சேர்த்தார்கள். இப்போது அவன் எங்கிருக்கானோ தெரியாது. இன்னும் நினைவில் இருக்கிறான்.

வளர்மதி said...

'மனப்பிறழ்வின்' வீரியங்களை மிக அருகிலிருந்து கவனித்த அனுபவத்திலிருந்தும், வாசிப்பிலிருந்தும் நோக்கும்போது மிகச் சாதாரணமான கதையாகத் தோன்றுகிறது.

எனினும் முயற்சி தொடர வாழ்த்துக்கள்.

அன்புடன்
வளர் ...

ஆடுமாடு said...

நன்றி வளர்.
உங்கள் அளவுக்கு வாசிப்பு அனுபவம் இல்லையென்றாலும் ஒரு முயற்சி.

கானகம் said...

நல்ல கதை. மனப்பிரழ்வுள்ளவனின் பிரச்சினையும் அதனை சமூகம் எப்படி எதிர்கொள்கிறது அல்லது நடத்துகிறது என்பதற்கு உங்கள் கதை ஒரு பதசோறு ஒரு பானையில்.. படிக்க நன்றாய் இருந்தது. உங்கள் பதிவில் நான் இட்ட முதல் பின்னூட்டத்தில் சொல்லியதை ரிஷான் ஷேரீப்பும் சொல்லி இருக்கிறார். ஆடுமாடு என ஒரு அருமையான எழுத்தைக் கொண்டவரை கூப்பிட மனம் ஒப்புவதில்லை, நன்றி நண்பரே.. ஜெயக்குமார்