Saturday, August 12, 2017

ஆதலால் தோழர்களே 19

திமுக ஆட்சியைக் கலைத்துவிட்டார்கள். சீக்கிரமே கடையம் யூனியனில் வேலை கிடைக்கும் என எதிர்பார்த்துக்கொண்டிருந்த பரமசிவத்தின் கனவு உடைந்துவிட்டது. அவனைவிட அதிகமாக உடைந்தது, அவன் மனைவி கிருஷ்ணவேணிதான்.

வாழ்க்கைத் திசை மாறும் என்ற கற்பனையில் இருந்தவள், இப்படி யொரு மாற்றத்தை எதிர்பார்க்கவில்லை. அவளைப் பரமசிவம் தேற்றினாலும் கவலை இருந்தது. மகள்கள் வளர்ந்திருந்தனர். அம்பாசமுத்திரம் அத்தான் சொன்னது சரிதான் என்று இப்போது தெரிந்தது.

'என்னைக்காது ஒரு நாளு நான் சொன்னதை நெனக்கியா இல்லை யான்னு மட்டும் பாருல' என்று அவர் திட்டிப் போனது கண்முன் வந்து நின்றது. மானசீகமாக அவரிடம் மன்னிப்புக் கேட்டுக் கொண் டான் பரமசிவம்.

வேறு என்ன செய்யலாம் என யோசனையில் இருந்தபோதுதான் தேர்தல் வந்தது. கண்டிப்பாக திமுக ஜெயிக்காது என தெரிந்திருந்தும் பிரசாரத்துக்குப் போனான். கட்சிக்காக நிறைய பேசினான். அக்கம் பக்கத்து ஊர்களில் பரமசிவம் பேசுகிறான் என்றால் முன்பெல்லாம் பெருமளவு கூட்டம் கூடும். இப்போது அப்படியில்லை. அதுவே பரமசிவத்துக்கு ஒரு மாதிரியாக இருந்தது. இருந்தாலும் ஏதோ கையில் காசு கிடைக்கிறது என்று போனான். ஒரு நாள், பேசிப்பேசித் தொண்டைக் கட்டிப்போனதால் பிரச்சாரத்துக்குப் போகாமல் வீட்டில் இருந்தான். அப்போதுதான், அவனுடன் படித்த ராஜேந்திரன் வந்திருந்தான் வீட்டுக்கு.

பரமசிவத்துக்கு ஆச்சரியமாகத்தான் இருந்தது. ஒரு நிமிடம் அவனால் நம்ப முடியவில்லை. பல வருடங்களுக்கு பிறகு தன்னை ஞாபகம் வைத்து சரியாகத் தேடி வந்திருக்கிறானே என்கிற ஆச்சரியம் அது. அவனுக்குத் திருச்சி பக்கம் ஏதோ ஒரு ஊர். இவனோடு கிறிஸ்தவ போர்டிங் பள்ளியில் ஒன்றாகப் படித்து, ஒன்றாக வளரந்தவன். படிப்பு முடிந்து பிரிந்த பின், சில மாதங்கள் கடிதத் தொடர்பில் இருந்தான். பிறகு காணாமல் போய்விட்டான். இப்போதுதான் வந்திருக்கிறான். 

'வி.கே.புரத்துக்கு வேல விஷயமா வர வேண்டியிருந்தது. அப்படியே விசாரிச்சு உன்னைப் பாக்கலாம்னு வந்தேன்' என்றான் ராஜேந்திரன். பிறகு இருவரும் பழங்கதைகளைப் பேசிக்கொண்டார்கள். கிருஷ்ணவேணி, நீண்ட நாட்களுக்குப் பிறகு கூட்டு, பொரியலுடன் சமைத்திருந்தாள். சாப்பிட்டு முடிந்தபின், ராஜேந்திரன் தான் அந்த ஐடி யாவை சொன்னான்.

'வேலை இல்லன்னு கவலைப் படாதடெ. உங்க ஊர்ல இருக்க டீ கடை, பெட்டி கடை, பலசரக்கு கடை, பீடி சுத்துத பொம்பளை பிள்ளைலுவோ, கொத்த வேலை பாக்கவங்கன்னு எல்லாருமே  சம்பாதிக்வோ. அவங்க எல்லாருக்கும் காசை சேத்து வைக்கணுன்னு ஆசை இருக்கும். பீடி சுத்துத பிள்ளேலு எத்தனை பேரு பேங்ல அக்கவுன்ட் வச்சிருக்குவோ? அதனால நீ வாரச் சீட்டு நடத்து. அதாவது சிட்டை போட்டு வசூலிக்கணும் பாத்துக்கோ. நூறு ரூபா சேர்ந்தா ஒனக்கு ஒரு கமிஷன். நாங்கூட கோயமுத்தூர்ல சைடு பிசினசா இதைப் பண்ணிட்டிருக்கேன். அட்டைய பாக்கியா?' என்று எடுத்துக் காண்பித்தான். 

முதல் போடாமல் ஒரு வியாபாரம். அதுவும் பணம் புழங்கும் வாழ்க்கை. பரமசிவத்துக்குத் திடீரென உற்சாகம் தொற்றிக்கொண்டது. அவனை விட கிருஷ்ணவேணிக்கு அதிக மகிழ்ச்சி. இப்போதே பணத்தில் புழங்குவது போல கனவு காண ஆரம்பித்தாள். 

'ஆனா ஒண்ணுடே' என்று நிறுத்திய ராஜேந்திரன், 'கணக்கு வழக்குல  சரியா இருக்கணும். பொதுத் துட்டுப் பாத்தியா?. ஆத்திர அவசரத்துக்கு அதுல கை வைக்கத் தோணும். தல போற காரியமா இருந்தாலும் அதுல இருந்து துட்டை எடுக்கக் கூடாது. அதே போல இந்தத் தொழில் பண்ணுனா கண்டிப்பா கடன் கேப்பானுவோ. சொந்த அண்ணன் தம்பியா இருந்தாலும் கறாரா இருந்தாதாம் அடுத்தக்கட்டமா நடத்த முடியும். இல்லன்னு வையி, முங்கிட்டன்னா, மீளுதது கஷ்டம். நிறைய பேர் அப்படி வீணா போயிருக்காவோ?' என்று எச்சரிக்கை செய்தான்.

'இது நமக்கு சரிபட்டு வருமா?' என யோசிக்கத் தொடங்கினான் பரம்சம். இருந்தாலும் அவனிடம் அட்டையை வாங்கிக்கொண்டான்.

ராஜேந்திரன் சொல்லிவிட்டுப் போன, அடுத்த மாதத்திலேயே அவனது ஆலோசனையின் படி, அவன் வைத்திருந்தது போலவே சிட்டை அச்சடிக்கப்பட்டது. கடைக்காரர்களை விட்டுவிட்டு பீடி சுற்றும் பெண் ளிடம் வார வசூல் செய்ய முடிவெடுத்தான். கிருஷ்ணவேணியும் சொன்னதால் நிறைய பேர் இதில் சேர்ந்தார்கள். அவன் எதிர்பார்த்ததுக்கு மேல் அதிகமானவர்கள் சேர்ந்தார்கள். அதில் ஒருத்தி, ஆனந்த வள்ளி டீச்சர். 

ஆழ்வார்க்குறிச்சி வங்கியில் கணக்குத் தொடங்கினான். வசூலாகும் தொகையை அதில் டெபாசிட் செய்தான். காசு விஷயத்தில் கறாராக இருந்தான். இருந்தாலும் கடன் என்று கேட்பவர்களிடம் இல்லை என்று சொல்ல மனசு வரவில்லை. கொஞ்சம் விட்டுப் பிடித்தான்.

கிருஷ்ணவேணியின் முகத்தில் இப்போது புது மலர்ச்சி. பரமசிவம் வித விதமான சட்டைகள் தைத்தான். பழைய ஹெர்குலீஸ் சைக்கிள் ஒன்றை விலைக்கு வாங்கினான். ஆளே மாறியிருந்தான். ஏற்கனவே அறிமுகமான கட்சிக்காரர்கள் அடிக்கடிச் சந்தித்தார்கள். அரசியல் பேசினானே தவிர, மேடைகளில் பேச்சைக் குறைத்திருந்தான். 

சில மாதங்களில் எல்லாமே மாறிவிட்டது. நம்பியார் கடையில் வைக்கப்பட்டிருந்த சில்லரை கடன் அடைக்கப்பட்டு விட்டது. அதுவே தெம்பாக இருந்தது. எப்போதும் கை பையில் பணம் இருந்து கொண்டே இருக்கிறது. இப்படியொரு பணப் புழக்கம் கொண்ட வாழ்வை அவன் எதிர்பார்த்திருக்கவில்லை. இந்தப் பணம் சந்தோஷத்தைத் தருகிறது, மரியாதையைத் தருகிறது. 

அதிமுக வெற்றிபெற்று ஜெயலலிதா முதல்வராகி இருந்தார். முருகையா பாண்டியன், அம்பாசமுத்திரம் தொகுதி எம்.எல்.ஏ ஆகியிருந்தார். 'வேணா சொல்லுடெ. நம்ம எம்.எல்.ஏ தங்கமான மனுஷன் பாத்துக்கெ. நாளைக்கே போயி பாப்போம். கட்சியில சேர்ந்திரு. சொல்லி சோலிக்கு ஏதாது ஏற்பாடு பண்ணுவோம்' என்றார்கள் சில நண்பர்கள். அது தேவையில்லை எனப் பட்டது.
ஆழ்வார்க்குறிச்சி வங்கிக்குச் சென்றுவிட்டு எதிரில் இருக்கிற கடை யில் தேநீர் குடித்துக் கொண்டிருந்தபோது பார்த்தான், ஆனந்த வள்ளி டீச்சரை. மஞ்சள் வண்ண பார்டர் போட்ட ராமர் பச்சைச் சேலையில் மின்னிக்கொண்டி ருந்தாள். கைகளைப் பிதுக்கிக்கொண்டிருந்த அதே இளம் பச்சை நிற ஜாக்கெட்டும் தலையை அலங்கரிக்கும் பூவுமென தேவதையாகத் தெரிந்தாள்.

டீச்சர், இன்னொரு பெண்ணுடன் பேசியபடி, அவனை நோக்கி வந்து கொண்டிருந்தாள். பரமசிவத்துக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டிப் போனது. டீச்சர் தன்னைப் பார்த்திருப்பாளா? இல்லை, எதேச்சையாக வருகிறாளா என்ற குழப்பம். தேநீர் கடையின் கூரை மறைவில் ஓரமாக ஒதுங்கி நின்றுகொண்டு டீச்சரையே பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் நெருக்கி வந்துகொண்டி ருந்தார்கள். டீச்சர் தன்னைப் பார்க்கவில்லை என நினைத்தான். தன்னைப் பார்த்தால், அவர் முகத் தில் வெளிப்படுகிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது இல்லை. 

பரமசிவம் திடீரெனத் திரும்பி நின்றுகொண்டான். டீச்சரும் அவருடன் வந்தவரும், அதே கடையில் தேநீர் வாங்கிக்கொண்டு குடித்துக் கொண்டி ருந்தார்கள். அவர்களின் பேச்சு, வேறு ஏதோ ஒரு வாத்தி யாரைப் பற்றியதாக இருந்தது. பரமசிவத்துக்கு அதுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. திரும்பினான். டீச்சர் அவனைப் பார்த்து விட்டார். பார்த்ததும் வந்துவிடுகிற அதே புன்னகையும் வெட்கமும் திடுப்பென வந்து டீச்சரின் முகத்தை மாற்றியது. 

பரமசிவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து, 'எப்படியிருக்கீங்க?' என்று ஆரம்பித்தான்.

'ஆங். நல்லாயிருக்கென்' என்ற ஆனந்தவள்ளி டீச்சர், 'நீங்க?' என்று இழுத்தாள்.
'எனக்கென்ன நல்லாருக்கேன்'

'தூரமா?'

'பேங்குக்கு... நீங்க'

'நாங்களும் அதுக்குத்தான்' என்ற ஆனந்தவள்ளி டீச்சர், பக்கத்தில் நின்ற டீச்சரிடம் திரும்பி, 'இவங்க தான் பரம்சம். பேச்சாளரு. நல்லா பேசு வாங்க. கம்னீஸ்ட் கட்சில இருந்தாங்க. ஒங்க ஊருக்கு கூட வந்திருப்பாங்க' என்று அறிமுகம் செய்து வைத்தாள்.

இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துக் கும்பிட்டான் பரமசிவம். பதி லுக்கு டீச்சரும் கும்பிட்டார். அவர் பக்கத்து ஊரான பாப்பாங்குளத்தில் வேலைப் பார்ப்பவராம். 

டீச்சர், பேக்கில் இருந்து காசைக் கொடுத்துவிட்டு, புன்னகைத்தாள். பரமசிவம் டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் எப்போதும் இருக்கிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது வெளிப்படுவதை ரசித்தான். டீச்சரின் முகத்தில் இருந்து இன்னும் மாறாமல் இருக்கிறது புன்னகை. அந்தப் புன்னகை பரமசிவத்தை ஏதோ செய்கிறது. அதெப்படி? அந்தப் பார்வைப் பட்டதும் அடுத்த நொடியே, தொட்டா சிணுங்கி செடி மாதிரி, உயிர் மூடி விரிகிறது என்கிற கேள்வி இப்போது அவனுக்குள் எழுந்தது. அவன் தனது நடுக்கத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை டீச்சருக்கு.

'வாரோம்' என்ற சென்று கொண்டிருந்த டீச்சர், சிறுது தூரம் சென்ற பிறகு எப்போதும் போல பரமசிவத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதை அவனும் எதிர்பார்த்தான். ஏதேதோ சொல்லிப் போகும் அந்தப் பார்வை சிலிர்ப்பாக இருந்தது பரமசிவத்துக்கு. 

-தொடர்கிறேன்.

No comments: