Friday, October 21, 2011

கொடைகால குறிப்புகள்

பத்து சென்ட் இடத்தில் இருபத்தியோரு சிறு பீடங்களின் கூட்டாட்சியுடன் பிரமாண்டமாக வளர்ந்திருந்தார் மந்திரமூர்த்தி சாமி. வெட்டவெளி கோயிலின் மற்ற பீடங்களை விட, இவரது பீடம் வான்நோக்கிய உயரம் கொண்டது என்பதால், வளர்ந்திருந்தார் என்ற வார்த்தை உண்மையே. கோயிலில் இவருக்கான முக்கியத்துவம் கருதி பீடம் உயரமானது என்றாலும் வான்நோக்கலுக்கான காரணம் வேறாகவும் சொல்லப்படுகிறது.

வில்லிசைப்புலவர் கல்லிடைக்குறிச்சி பப்பு வார்த்தையில் சொல்வதென்றால், ‘‘எம்பெருமான் மந்திரமூர்த்தி, மேற்கு மலைத்தொடரில் கடனாநதி அணைக்கு மேலே கோலோச்சிக் கொண்டிருக்கிற கோரக்கநாதரை, தினமும் பார்க்க வேண்டும் என்றும் எல்லோரையும் விட உயரமான பூடம் (பீடம்) இருந்தால்தான் என்னால் தரிசிக்க முடியும் என்று கண்ணன் குடும்பத்து மூத்தவரின் கனவில் சொன்னதன் பேரில் உயரமான பூடம் படைக்கப்பட்டது...''இப்படி இழுத்துப் பாடப்பட்டது.

இந்த உயரமான பீடம் உருவாக்கப் படுவதற்கு முன், சின்ன பீடத்தில் அருள்பாலித்து வந்த மந்திரமூர்த்தி, இப்போதும் மற்ற பூடங்களுடன் அப்படியே இருக்கிறார். அந்த பீடத்திலிருந்து மண் எடுத்து மெகா சைஸ் மந்திரமூர்த்தியை உருவாக்கியிருந்தார்கள். இந்த கோயிலின் ஹெட் மந்திரமூர்த்தி சாமி என்பதால் அவருக்கு ஆடுபவர்கள் பெரிய சாமிகொண்டாடி ஆனார்கள். மேற்கு நோக்கி இருக்கும் மந்திரமூர்த்திக்கு எதிரே பிரம்மராட்சதை, சிவனனைந்த பெருமாள், சுடலை ஆகியோரின் பீடங்கள் இருந்தன. இடபக்கம் சங்கிலி பூதத்தார், வலப்பக்கம் பலவேசக்காரன், மற்றும் தளவாய் மாடசாமி, பட்றையன், மாடன் போன்ற குற்றேவல் சாமிகளும் அரிவாள் தாங்கி, உள்ளூர் மக்களின் நிம்மதிக்கு அருள்வழங்கி வந்தனர். ஒவ்வொரு சாமிக்கும் ஆடுபவர்கள், இந்த சாமி, இன்னாரின் குடும்ப சாமி என்பதாக கொள்ளப்பட்டு கொடையின் போது ஆட கடமைப்பட்டிருந்தார்கள். இவர்களின்றி திடீரென அருள் வந்து ஆடுகிற அசலூர் உறவுக்காரர்களும் உண்டு.

ராமர் கோயில் அடுத்து, புதிதாகக் கட்டப்பட்டிருந்த சங்காபீஸில் (சங்க அலுவலகம்) வெளியூரில் வேலைப்பார்க்கிற பத்தமடையாள் மகன் தவிர, மொத்த வரிகாரர்களும் கூடியிருந்தார்கள். தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிற சூச்சமடையான், சுவரில் முதுகை சாய்த்து, மூக்குப் பொடியை மூக்கினுள் திணித்துவிட்டு, ‘எல்லாரும் வந்தாச்சாடே...' என்றார் ஒரு தும்மலை போட்டுவிட்டு. அது தெறித்து, பக்கத்தில் இருந்த பச்சைமுத்துவின் கண்ணில் விழுந்தது. ‘உங்கிட்ட வந்து உக்காந்தேம் பாரு' என்று எழுந்து, தள்ளிப்போய் உட்கார்ந்தான்.

‘வந்தாச்சா... எல்லாரும்...' திரும்பவும் கேட்டார்.

‘இங்கருங்க. இத்தனை மணிக்கு சங்காசுக்கு வந்திருங்கன்னு தாக்கல் சொல்லியாச்சு... வராதோளப் பத்தி நமக்கென்ன? இருக்கவோள வச்சு பேசிக்கிட வேண்டியதானே’ என்றான் கொத்தனார் குட்டி. அவனையொத்த இளவட்டங்கள், குட்டியின் பேச்சை ஆமோதித்தனர்.

‘சரிதான்’ என்ற தலைவர் எழுந்து உட்கார்ந்துகொண்டு, எல்லாரையும் பார்த்தார். அங்கொன்றும் இங்கொன்றுமாக சிலர் தூங்கிக்கொண்டும் ஒருக்களித்துப் படுத்துக்கொண்டும் இருந்தனர். இவர்கள் பேச்சையும் தாண்டி குறட்டை சத்தமும் மெதுவாக ஏறி இறங்கி கொண்டிருந்தது. முகத்தை கொஞ்சம் தூக்கி எட்டிப்பார்த்தார். தூங்கிக் கொண்டிருந்தது உப்பிலி என்று தெரிந்தது. இவருக்கு தங்கச்சி மகன்.

‘அங்க தூங்குதவன எழுப்புங்கல... எங்க வந்து படுத்திருக்காம்..?'

படுத்திருந்த உப்பிலியை, உட்கார்ந்துகொண்டே வலது காலால் மிதித்தான் குட்டை. அதைக் கண்டுகொள்ளாமல், திரும்பி படுத்தான் உப்பிலி.

‘அவன் தூங்கிட்டு போறாம். பகல் பூரா கெணறு வெட்டிட்டு வந்திருக்காம். அசதியாயிருக்கும். அவன எழுப்பி என்ன நடக்க போவுது?' என்றான் மாரி.

‘சரி, விஷயம் இதான்டே. இந்த வருஷ கொடைக்கு எவ்வளவு வரிங்கதை பேசணும்... போன கொடைக்கு வச்சதையே வச்சிக்கிடலாமா? இன்னைக்கு இருக்குத வெலதாச்சிக்கு அது பத்துமான்னும் சொல்லுங்க...' என்ற சூச்சமடையான், வெள்ளை மீசையை தடவ ஆரம்பித்தார். மூக்குப்பொடிபட்டு உதட்டு மேலே மட்டும் வெள்ளை மீசை, காப்பி கலருக்கு பட்டை அடித்தாற்போல் மாறியிருந்தது. வெண்ணிற தாடியும் எதையோ தேடுகிற கண்களும் அவருக்கு ஒரு தேஜஸை கொடுத்திருந்தன.

'பூ செலவுதான் கூடியிருக்கும்... மத்த செலவுவோ என்னத்த பெரிசா ஆயிரப்போவுது...' என்றான் கொம்பன். அவன், போன வருடத்தை விட, வரியை குறைத்தால் நல்லது என்று நினைத்துக் கொண்டான். ஒவ்வொரு வருட கொடையின்போதும் கடன் வாங்கி வாங்கி அதை அடைப்பதற்குள் போதும் போதும் என்றாகிவிடுகிறது. இதைதாண்டி மச்சினன்மார் முறைக்கு, பதில் செய்வதற்குள் தாவு தீர்ந்துவிடுகிறது. இந்த சாமிகள், செலவு வைப்பதை தவிர பண வரவுக்கு ஏதும் செய்வதில்லை என்கிற கடுப்பு கொம்பனுக்கு ரொம்ப நாளாக உண்டு. போன கொடையின்போது இரண்டு ஆடுகளை விற்றான். இந்த முறை அப்படி விற்கவும் முடியாது.

‘வரிய எப்படின்னு பேசிக்கிடுவோம். அதுக்கு முன்னால இன்னொன்னையும் பேசணும்' என்றான் கூட்டத்திலிருந்த பலவேசம். பக்தி பரவசக்காரன். இவனது பெரியப்பாதான் பெரியசாமிக் கொண்டாடி என்பதால் எப்போதும் சாமி கதை, பக்தி என்றே பேசிக்கொண்டு அலைபவன். நடக்கும் வழியில், தூரத்தில் சிறு கோயில் தெரிந்தால் கூட அப்படியே நின்று இரண்டு கைகளையும் தலைக்கு மேல் தூக்கி வைத்துக்கொண்டு ஒரு சுற்றுசுற்றி வணங்கிவிட்டுதான் செல்வான். இப்படியான பக்திக்கு அடிமையாகியிருந்த பலவேசம், தன்னுள்ளும் பலவேசக்காரன் சாமி இறங்கி, அருள் வரச் செய்வதாகவும் கொடையின்போது ஆடச்சொல்லி தூண்டும் என்றும் ஆனால், அடக்கிக்கொண்டு ஆடாமல் இருப்பதாகவும் சமீபகாலமாகச் சொல்லிக்கொண்டு அலைகிறான்.

தலைவர் சூச்சமடையான், எட்டிப்பார்த்தார் பலவேசத்தை. தூணுக்கு பின்பக்கம் இருந்த அவனை நோக்கி, ‘என்னத்த பேசணுங்கடே பலாசம்..?' என்றார் தலையை ஆட்டி.

‘இல்ல. நமக்கும் பொறுப்பு இருக்கு பாத்துக்கிடுங்கோ. இது என்ன சாதரண சாமியாய்யா? தண்ணியெடுக்க ஆத்துக்கு சாமி போனா, எதிர்ல ஒரு பய நடக்க மாட்டான். திமிறி போனவன் கெதியும் நமக்கு தெரியும். அப்படியிருக்கும்போது, சின்னபயலுவோலாம், இப்படி பண்ணுதது நல்லாவா இருக்கு? போன கொடைல நிலையாவா நின்னானுவோ?'

‘செரிவே, வெவரமா சொல்லும். என்ன பண்ணுனானுவோ? எவளையும் கைய புடிச்சு இழுத்தானுவளோ? இல்ல கெடா குட்டிய களவாண்டு போனானுவளா...' &தோளில் கிடந்த துண்டை எடுத்து தலைப்பாகை கட்டிக்கொண்டு கேட்டான் குட்டி.
‘நா என்ன சொல்ல வாரேன்... நீ என்னல சொல்லுத... நீ, உன்கூட வேலைப்பாக்குத பயலுவோளுக்கும் மச்சினன்மார்களுக்கும் நல்லா ஊத்திக் கொடுத்துட்டு கோயில் வாசல்ல சலம்பிட்டு நின்னதைதான் சொல்லுதேன்... குடிச்சுட்டு ஆடுததுக்கு இது என்ன கருமாதி வீடால... எதெத எங்க பண்ணணும்னு இருக்குலா?'

இந்த விஷயம் தெரிந்ததுதான். மூன்றாவது நாள், சாமி வேட்டைக்குப் போகும்போது குடித்துவிட்டு வரலாம் என்பதை எழுதாத விதியாக வைத்திருந்தார்கள். இளவட்டங்கள் தமக்கு வேண்டிய மற்ற தெரு நண்பர்களுக்கு வாங்கி கொடுப்பது வழக்கமானதாகவே இருந்தது. இருந்தாலும் சிலர் இரண்டாவது நாள் இரவே ஆரம்பித்து விடுவதும் அதைக் கண்டும் காணாமல் இருப்பதும் தொடர்ந்தது. இதுபற்றி பேச என்ன இருக்கிறது? கொடை முடிந்த மறுநாளே சாமிகொண்டாடிகளுக்கும் போதை தேவையாக இருக்கிறது.

குட்டி, குட்டை உள்ளிட்ட அவனது நண்பர்கள் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். பலவேசத்தைப் பார்த்து எழுந்த குட்டி, ‘குடிச்சுட்டு வந்து சாமி முன்னால நின்னாவே ஆடுனாவோ. வாசல்ல நின்னுதான பேசிட்டுருந்தோம். ரெண்டு நாளு சோறு, தண்ணி, தூக்கம் இல்லாம கோயில் வேலையை பூரா நாங்களாங்கும் பார்த்திருக்கோம்... உனக்கென்னவே... சீமை துரை மாதிரி, இடுப்புல துண்டைக்கட்டி சாமி கும்புட்டுட்டு வீட்டுல போயி தூங்கவா செஞ்சோம்? நாலு ஆட்டை உரிச்சு வெட்டி, படைப்பு போடும்போது என்னைக்காவது நின்னுருக்கியா எங்க கூட? ஒரு ஆட்டைமட்டும் உரிச்சு பாரு ஒனக்குலாம் தெரியும்... மயிராண்டி அலுவசமா ஆவலாதி சொல்ல வந்துட்டாம் கூட்டத்துல... குடிச்சாவோளாம்... கும்மாளம் அடிச்சாவுளாம்னுட்டு...'என்றான் ஆவேசமாக. பதிலுக்கு பலவேசமும் எதிர்ப்பேச்சுக்கொடுக்க, காட்டுக்கத்தாலாக இருந்தது கூட்டம்.


‘ஏய்... சும்மாருல பலாசம்... குட்டி, போய் உக்காரு' என்ற தலைவர், ‘சனியனை இழுக்கதுக்குன்னே எப்பவும் அலையுதானுவளே' என மனதுக்குள் நினைத்துக்கொண்டார். பிறகு, ‘இங்க பாருங்க... யாரும் சின்ன பிள்ளைலுவோ கிடையாது. நானோ, நீயோ சொல்லி தெரியுததுக்கு. எது நல்லது கெட்டதுன்னு எல்லாத்துக்கும் தெரியும் கேட்டேளா. அதனால நீங்களா மனசாட்சிப் படி நடந்துக்கணும். கொடை வைக்க போற நேரத்துல இதுக்கெல்லாம் வெவாரம் வச்சுட்டிருந்தா நல்லாருக்காது. மற்ற பட்றை கோயில்ல எல்லாரும் எப்படி நடந்துக் கிடுதாவோன்னு பார்த்துக்கிடுங்கோ. அந்த மரியாதைய காப்பத்தணும். கொடைன்னா, நம்ம மட்டும் நின்னு சாமி கும்புட்டு போற இடமில்ல. அசலூர்க்காரவோளும், சொந்தக்காரவோளும் வந்து போற இடம்...' என்று சொல்லி முடிப்பதற்குள் குட்டி எழுந்து கதவை திறந்து வெளியே போகப்போனான். அவனைத்தொடர்ந்து குட்டையும் மாரியும் எழுந்திரிக்க, ‘ஏலே எல்லாரும் எங்க போறியோ? அப்ப இங்க எதுக்கு வந்திருக்கோம். எல்லாரும் வெளிய போனா, நாங்க எதுக்கு உட்காந்திக்கிட்டு... உள்ள வாங்கல' என்றார் தலைவர்.

‘இன்னா... ஒரு பீடிய பத்தவச்சுட்டு வாரேன்' என்ற குட்டியை, ‘இல்லைனாலும் நீ பீடி குடிக்கது தெரியாது பாரு. சும்மா உள்ள வச்சு குடிங்கடே' என்றார் தலைவர். உள்ளே வந்தார்கள்.

பிறகு ஒவ்வொருவராக அது இது என்று பேசி, போன கொடைக்கு வைத்த வரியையே வைத்துக்கொள்வது என்றும் புதிதாக கல்யாணம் செய்தவர்களுக்கான அரை வரி, முழுதானதில் கடந்த வருடத்தை விட சில ஆயிரங்கள் அதிகமாக கிடைக்கும் என்றும் முடிவானது. ஆடி மாதம் நான்காவது செவ்வாய்க்கிழமை கொடை என தேதியும் குறிக்கப்பட்டது. பூ, பந்தல், மைக் செட், வில்லுபாட்டு, சாமி அலங்காரம் போன்றவற்றுக்கு இன்னார் இன்னாருக்கு அட்வான்ஸ் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது. வெள்ளையடிப்பது மற்றும் பூடங்களின் பூச்சு வேலைகளுக்கான செலவுகளை, வரியையும் தாண்டி குட்டி ஏற்றிருந்தான்.

கொடைக்கான வேலைகள் பரபரத்துக் கொண்டிருந்தது. இதற்கிடையில் குட்டியும் பலவேசமும் ஒருவரையொருவர் முறைத்துக் கொண்டும் சாடை மாடையாக பேசிக்கொண்டும் அலைவது வாடிக்கையானது. கோயில் கால்நாட்டுக்குப் பிறகு ஒருவாரத்துக்கு வரிக்கார வீடுகளில் கவுச்சி கிடையாது. சுத்த பத்தம் கடைபிடிக்கப்பட்டது. வெளியூர்களில் இரவு தங்கல் கூடாது என்பதால் எந்த வேலையாக இருந்தாலும் இரவே வீடு திரும்பும் பழக்கம் வந்தது.

திங்கட்கிழமை காலையில், குட்டி குளித்து முடித்துவிட்டு கோயிலுக்கு வந்துவிட்டான். அவன் கூட்டாளிகள் செல்லையா, குட்டை, மாரி என நான்கைந்து பேர் கூடிவிட்டார்கள். இன்று மத்தியானத்திலிருந்து கொடை துவங்க வேண்டும். நள்ளிரவு கோயிலுக்கு இரண்டு கெடாவும், மறுநாள் சாமக்கொடைக்கு நேர்த்திக்கடனாக வந்திருக்கும் 23 கிடாவும் வெட்ட வேண்டும். கிடா வெட்டு முடிந்ததும் படைப்புச் சோறு, கறிக்குழம்பு ரெடி பண்ண வேண்டும்.

தலைவரைக் கூப்பிட்டான் குட்டி. ‘இங்க பாரும் என்னென்ன சாமான் வாங்கணுமோ, எழுதிகொடும். இப்பவே வாங்குனாதான் சரியா வரும். போனகொடை மாதிரி, கடைசி நேரத்துல அங்க இங்கன்னு ஓடிட்டு இருக்க முடியாது' என்று சொல்லிக் கொண்டிருக்கும்போது பலவேசம் வந்தான்.

கோபம் முட்டிக்கொண்டு வந்தாலும் வெளிக்காட்டாமல், ‘பலாசண்ணே வா.., அம்பாசமுத்ரம் போயி சாமான வாங்கிட்டு வருவோம். இப்டி தூர தூர போனன்னா என்னத்த தெரியும் உனக்கு? நீயென்ன எனக்கு வேண்டாதவனா? சொக்கரனுவக்குள்ள முஞ்சியையும் மோறையும் துக்கிட்டு அலைஞ்சா நல்லாவாவே இருக்கு... வா' என்றான். இந்த திடீர் பாசத்தை பலவேசம் எதிர்பார்க்கவில்லை. என்னத்த இருந்தாலும் நம்ம பயலுவோ பாசக்காரனுவதான் என்று நினைத்துக்கொண்டான்.

‘சரி வா... இதுல என்ன இருக்குல?. நம்ம கோயிலு, நாம போவாம வேற யாரு போவா?' என்று குளிர்ந்து போனான் பலவேசம்.

‘ஆமாடே. நாலு சாமான் வாங்க ஏழு பேரு போங்க?' என்று குட்டை சொல்ல, ‘அதுவும் சரிதான். சரிண்ணே, நாங்களே போயிட்டாரோம். நீரு வேணா, நம்ம செண்பவம் ஆசாரிட்ட பலகை சொல்லிருந்தது... ரெடியாயிருந்தா கொண்டாரும்?' என்ற குட்டி, தலைவரிடம் லிஸ்டையும் பணத்தையும் வாங்கிக்கொண்டு பொந்தனின் மினி டெம்போவில் ஏறினான். கூடவே செல்லையா, மாரி, குட்டை. அம்பாசமுத்திரம் போனது வேன்.

மத்தியானம் திரும்பியிருந்தார்கள். நல்ல வெயில், கோயிலில், இன்னும் சில நிமிடங்களில் வில்லுபாட்டு ஆரம்பமாக இருந்தது. வாங்கிய சாமான்களை ஒவ்வொருவருவராக கோயில் வாசலில் இருந்த அரங்குக்குள் வைத்தார்கள். குட்டி, மசாலா சாமான்கள் இருந்த பெட்டியை தலையில் வைத்துக்கொண்டு படியேறும்போது லேசாக லம்பினான். செல்லையா பிடித்துக்கொண்டான். கொடை கோலாகலமாகத் தொடங்கியது.

செவ்வாய்க்கிழமை நள்ளிரவு சாமக்கொடை முடிந்து, அதிகாலை நான்கைந்து மணி வாக்கில் சாமியாடிகள் வெளியில் போய்விட்டு வந்தார்கள். படைப்புச்சோறு தயாரிப்பில் இருந்த குட்டி, ஒவ்வொரு பூடத்துக்கு முன்பும் இரவில், முனை வெட்டி வைக்கப்பட்டிருந்த இளநீர்களை சேகரித்தான். செல்லையா உள்ளிட்டவர்களுக்கு கொடுத்தது போக, மூன்று இளநீர்களை மட்டும் தனியாக ஒதுக்கி வைத்தான். பெரியசாமி பூடத்தின் முன்பு பெரிய வாழை இலை விரிக்கப்பட்டிருந்தது. மற்றப்பூடங்களின் முன்பு சிறு சிறு இலைகள் விரிக்கப்பட்டு படைப்புச் சோறு படைக்கபப்ட்டது சாமிக்கு. பெரியசாமி கொண்டாடி, சாமியை பார்த்து கும்பிட்டுவிட்டு ஒரு குத்து எடுத்து வாயில் போட்டுக்கொண்டார். வேலை முடிந்துவிட்டது. விடிந்ததும் வரிக்காரர்களுக்கு கொடுக்க வேண்டும். அதற்கு முன், வேண்டிய மட்டும் இவர்கள் சாப்பிட்டுக் கொள்ளலாம். தெரியாமல் ஆட்டுக்கறிகளை மொத்தமாக ஒதுக்கி தின்பதும் உண்டு.

பெரிய சாமி கொண்டாடியின் வேட்டியை வாங்கிக்கொண்டு மாத்துவேட்டி கொடுப்பதற்காக வந்தான் பலவேசம். ‘சோறு வேலை முடிஞ்சுப்போச்சா' என்று தட்டியை எட்டிப்பார்த்தான். உள்ளிருந்த குட்டி, ‘ஏண்ண, வா... இந்தா உனக்குதான் வச்சிருக்கேன். எளநீ குடி... எல்லாரும் குடிச்சதுபோவ இதுதான் மிச்சம்... அதும் துவர்த்துலா கெடக்கு' என்று சொல்லிவிட்டு மூன்று இளநீர்களையும் பாசமாகக் கொடுத்தான். சாமி இளநீர் என மிகுந்த மரியாதையோடு ஒவ்வொன்றாக குடித்தான் பலவேசம். கோயிலை விட்டு இறங்கும்போது கண்முட்டிக்கொண்டு வந்தது. லேசாக நடை தடுமாறியது. பிறகு என்ன நினைத்தானோ, கோயிலில் வாசலருகே போடப்பட்டிருந்த கட்டிலில் உட்கார்ந்தான். இலேசாக விடிந்ததும் படைப்புச் சோறு வாங்க, வரிக்காரர்கள் வந்துகொண்டிருந்தார்கள். திடீரென்று வந்த சத்தம் கேட்டு, குட்டி, செல்லையா உள்ளிட்டவர்கள் வாசலுக்கு ஓடி வந்தார்கள்.

சுப்பையாண்ணனின் பெரிய மகள் அழுதுகொண்டிருந்தாள். எதிரில், கண்கள் சொருக சொருக பார்த்து சிரித்துக் கொண்டிருந்தான் பலவேசம்.

படாரென்று அவன் முதுகில் விழுந்தது ஒரு மிதி. பொத்தென்று கீழே விழுந்தான். இரண்டு மூன்றுபேர் கட்டைகளை எடுக்கப்போனார்கள் கோயிலுக்குள். கண்முன் நடக்கும் போரை ஆக்ரோஷமாக பார்த்துக்கொண்டிருந்தார் மந்திரமூர்த்தி சாமி.

தினகரன் தீபாவளி மலரில் வெளியான கதை

6 comments:

சாந்தி மாரியப்பன் said...

அப்படியே ஊர்க்காட்டுப் பக்கம் போய் கொடை பார்த்துட்டு வந்த மாதிரி இருக்கு..

க ரா said...

நல்லா இருக்கு ஆடுமாடு சார்...

ஆடுமாடு said...

//அப்படியே ஊர்க்காட்டுப் பக்கம் போய் கொடை பார்த்துட்டு வந்த மாதிரி இருக்கு...//
நன்றி மேடம்.
...........................

ராமசாமி சார் நன்றி.

மாதேவி said...

கிராமத்துச் சாமிகள் கொடை எல்லாம் நல்லாக இருக்கிறது.

சித்திரவீதிக்காரன் said...

அ.கா.பெருமாள் அவர்களின் புத்தகங்கள் வாசித்ததிலிருந்தும், ஒருமுறை திருநெல்வேலி அருகிலுள்ள தென்கரை மகாராஜா கோயிலில் கொடை பார்த்ததிலிருந்தும் நாகர்கோயில், திருநெல்வேலி பக்கம் கொடைக்கு வரணும்னு ஆசையாத்தான் இருக்கு. வாய்ப்புத்தான் கிடைக்க மாட்டேங்குது. வில்லுப்பாட்டு, சாமியாட்டம் எல்லாம் பார்க்கணும்னு ஆசை. மதுரையில திருழாவெல்லாம் வேறு மாதிரி கொண்டாட்டமா இருக்கும். பகிர்வுக்கு நன்றி.

ஆடுமாடு said...

மாதேவி நன்றி.