Thursday, March 11, 2010

காடு - 12

உ.மகாளி, பாம்பைக் கண்டதும் கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு நிற்பதை பார்த்தான் முத்தையா. அவனிடம் மூச் என்று சைகை செய்துவிட்டு, பக்கத்தில் இருந்த சிவப்பு கலர் போர்வையை எடுத்தான். பாம்பு, சாக்கு மூட்டையின் மேல் நின்று தலையை அங்கும் இங்கும் ஆட்டிக்கொண்டிருந்தது. கருநாகமாக இருக்கலாம். தலையிலிருந்து வழு வழு என்றிருந்த அதன் உடலில் நான்கைந்து வரிகோடுகள் இருந்தன. அது தலையை விரிக்கவோ, படமெடுக்கவோ செய்யவில்லை.


அதன் பின்பக்கம் இருந்த பெருங்கல்லில் மெதுவாக ஏறினான் முத்தையா. போர்வையை, மீன் பிடிக்க வலை வீசுவது போல, பாம்பின் மீது வீசினான். அது -பாம்பின் தலையை தொடுவதற்குள் சீறிப் பாய்ந்தது பாம்பு. இருந்தாலும் போர்வைக்குள் சிக்கிக்கொண்டு அங்கும் இங்கும் போர்வையோடு உருண்டது. அந்த கணத்த போர்வையை உடலோடு இழுத்துக்கொண்டே பாறைக்குள் செல்ல முயன்றது. அதற்குள் அருகில் கிடந்த மூன்று வெற்று சாக்குகளை எடுத்து அதன் மீது போட்டான் உ.மகாளி. இப்போது அந்த பாம்பால் வேகமாகச் செல்ல முடியவில்லை. இருந்தாலும் போர்வையில் இருந்து விடுபடும் பொருட்டு, அங்கும் இங்கும் உருண்டு கொண்டு முன்னேறியது.

அதற்குள், உ.மகாளி ஒரு பெரிய கல்லைத் தூக்கி அதன் மீது வீசப்போனான். தடுத்தான் முத்தையா. இப்போது பாம்பு மேலும் கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறி பெரும்பாறையின் அடியில் முட்டி உருண்டு கொண்டிருந்தது. ஆடிய அசைவில், சாக்கின் அடியில் வால் மீண்டது. இப்போது முழுவதுமாக பாம்பு வெளியே வந்துவிடும்.

உ.மகாளி, 'ஏண்ணே, இப்ப எகிறிட்டுன்னா' என்று பயத்தில் கேட்டான்.

'பேசாம இருல... அது போயிரும்'

'பழிவாங்கிருமேண்ணே'

'ஏதையாவது உளறாதல... இந்த மாதிரி இடங்கள்ல பாம்புவோ கிடக்கத்தான் செய்யும். அதுக்காவ கொல்லக்கூடாது. அதுவோளும் வாழணும்லால'

'இப்ப கடிச்சிருந்ததுன்னா'

'அதுக்கென்ன செய்ய முடியும். அதாம், மருந்து இருக்குல்லா. அதெல்லாம், கொண்டாராம, இங்க வ்ர முடியுமால'

இந்த சம்பவம் எதுவும் தெரியாமல் தூங்கிக்கொண்டிருந்தவர்களில் கேசரி, அருகில் உருண்டதில் பாறையில் தலை பட்டு, தடவிக்கொண்டே எழுந்தான்.

சுத்தி பார்த்தான். உ.மகாளியும் கந்தையாவும் பாறைக்கு வெளியில் அமர்ந்து பேசுக்கொண்டிருந்தார்கள்.

'ஏண்ண, தூக்கமே வரமாட்டேக்கு" என்றான் கேசரி, கொட்டாவி விட்டுக்கொண்டே.

'அப்ப நீ முழில. நாங்க தூங்குதோம்'

நொடிஞ்சானும் எழுப்பப்பட்டான். இப்போது தூக்கம் முறை மாறியது.

காலையில், நேற்றைய சோறின் மிச்சமான, நீத்தண்ணியை குடித்துவிட்டு, பயணம் தொடங்கியது. மாடுகளுக்கு தன்ணீர் காட்டிவிட்டு மேலே பத்தினான் கேசரி. அதன் பின்னால் பயணம் தொடங்கியது. செங்குத்தான பாதை. இதைக் கடந்ததும் வழுக்காம் பாறை இருக்கிறது. இங்குதான் கஷ்டம் மாடுகளுக்கு. மெதுவாக நடக்க வேண்டும். அடிக்கடி வழுக்கும் தன்மை கொண்ட இந்தப் பாறையின் ஓரத்தில், அதை வெட்டி பாதையாக்கியிருந்தார்கள். மாடுகள் அதில் சென்று தடுமாறினால், பள்ளத்தில் விழ வேண்டிய சூழல் இருப்பதால், அந்த வழியை இவர்கள் பயன்படுத்திக்கொண்டார்கள். ஐம்பது அடிதான். அதைத்தாண்டி விட்டால் 'அப்பாடா' என்றிருக்கும்.

கப்பைக்கொம்பு எருமைதான் அதில் நடக்க சிரமப்பட்டது. இரண்டு முறை சறுக்கி, தடுமாறி ஏறியது. ஊசி கொம்பு உள்ளிட்ட எருமைகள், தத்தக்கா பித்தக்கா என்று கடந்துவிட்டது. இதைதாண்டியதும் சுடலை கோயில். இந்தக் கோயிலின் சிறப்பே அந்த பெரிய மணி.

சின்ன பீடம். உருவம் சிதைந்த சிலை மட்டும்தான் கோயில். அருகில் இட, வலப்புறங்களில் தலா ஒரு சிலைகள். எதிரில் இரண்டு பக்கமும் கற்தூண்களைக்கொண்ட பரணில் பெரும் மணி. எந்த காலத்திலோ, யாரோ இதை இங்கு கட்டியிருக்க வேண்டும். எப்போதோ இங்கு பூஜை செய்ததற்கான அடையாளமாக, காய்ந்து, கருகி நைந்துபோன பூமாலைகள், கிழந்து போன சாமி வேட்டி என சிதறி கிடந்தன.

சாமி கும்பிட்டுவிட்டு, தொடர்ந்தார்கள். இன்னும் பதினைந்து நிமிட பயணம்தான்.

'ஏல, போனதும் கம்புவோ வெட்டணும்டே' என்றான் நொடிஞ்சான்.

'வடிப்பு (சாராயம்) எப்பம்' கந்தையா.

'அதுலயே இருங்கல... எதுக்கு வந்திருக்கோம், என்ன, ஏதுன்னு கேப்பியா?, ஆட்டை அறுக்கதுக்குள்ளயே புடுக்கை சுடுத கதையா, பேசுதாம் பாரேன்'

கேசரியும் கந்தையாவும் சாராயம் காய்ச்சுவதில் கில்லாடிகள். ஊரில், பெரும்பாலானவர்கள் இந்த தொழில் தெரிந்தவர்களாக இருந்தாலும், மஞ்சப்புளிச்சேரி மாரியை போலீஸ் பிடித்து, தலையில் பானையை வைத்து தெருத் தெருவாக அழைத்து சென்றதிலிருந்து அத்தொழில் ஊரில் இல்லாததாக ஆனது. ஆனாலும் கோயில் கொடை, சொந்தக்காரன் கல்யாணங்களுக்கு திருட்டுத்தனமாக, 'வடிப்பு' நடந்து வரத்தான் செய்கிறது.

வடிப்பு எப்படியிருந்தாலும் நண்பர்களுக்காக காய்ச்சுவதில் சில கைப்பக்குவங்கள் இருக்கிறது. அந்த பக்குவத்தில் கந்தையா கெட்டிக்காரனாக இருந்தான்.

இவர்கள் போகும் குள்ராட்டியை, நெருங்கும் முன்பே குளிர் வந்து மோதியது. நடக்கும் போது உரசும், செடிகளும் ஜில்லென்றிருந்தன. மாடுகள், உடலை சிலுப்பிக்கொண்டு நடந்தன.

'இதென்ன பனி காலம் மாதிரி...' என்றான் உ.மகாளி.

'இதுக்கே இப்டின்னா... ராத்திரிலாம் எப்டி இருக்கும் தெரியும்லா'

'ரெண்டு சாக்கை போத்துனாலும் குளுரு விடாது போலிருக்கே'

'நீ ஏம்ல நடுங்குத... இந்தா போனதும் வடிச்சிர வேண்டியதாம். ரெண்டு நாளு கண்ணை பொத்திட்டு இருந்தம்னா, அடுத்தாப்ல சரக்கு புண்ணியத்துல வெது வெதுதான்'

'அதுலயே இருங்கல'
குள்ராட்டி வந்துவிட்டது. வட்ட வடிவிலான, காடு. பெரும் மைதான அளவில் இடம் விட்டு மரங்கள் தனியாக வளர்ந்து நின்றன. இந்த வட்டவடிவத்தில் மட்டும் எப்படி மரங்கள் வளராமல் இருந்தது? இது இயற்கையே செய்து வைத்திருக்கிற காட்டின் மைதானம்.

மாடுகள் அங்கு கிடத்தப்பட்டன. கடந்த முறை வந்தபோது கட்டிய உயரமான குடில் பாழடைந்தது போல் இருந்தது. குடிலின் உள்ளே பூச்சிகள் வாழலாம். அதில் ஏறுவதற்குப் போடப்பட்டிருந்த மரப்படிகள் உடைந்து கிடந்தன. அதனருகில் சில விலங்குகளின் சாணங்கள். சமீபத்தில் போட்டுச்சென்றிருக்கலாம். கந்தையா, அந்த சாணத்தின் மீது கால்களை விட்டு நின்றான். கதகதப்பாக இருந்தது.

'ஏல எல்லாரும் அருவாளை எடுத்து வாங்க' என்றான் நொடிஞ்சான்.

உ.மகாளி, தலையில் இருந்த மூட்டையை தரையில் வைத்துவிட்டு படுத்துக்கிடந்த எருமையின் முதுகில் சாய்ந்து உட்கார்ந்தான். எதிரில் சரிவு. சரிவுக்கு கீழே கடனாநதி ஆற்றின், கண்ணாடி தண்ணீர். அதில் அலையும் மீன்களும், காய்ந்து விழுந்த மரங்களின் நனந்த கிளைகளும் அவனுக்கு புது உலகத்தைக் காட்டின.

அடுத்தது அறியாதவரை அவரவர்களுக்கு கிடைப்பதே சுகம்.

உ.மகாளி கண்ணை அகல விரித்துப்பார்த்துக்கொண்டிருந்தான்.

குடிலின் கிழே தூண் போல இருந்த மரக்கம்பை வெட்ட ஆரம்பித்தான் நொடிஞ்சான்.

தொடர்கிறேன்.

13 comments:

பத்மா said...

அடுத்தது அறியாதவரை அவரவர்களுக்கு கிடைப்பதே சுகம்.
""அருமை"""

சின்ன பீடம். உருவம் சிதைந்த சிலை மட்டும்தான் கோயில். அருகில் இட, வலப்புறங்களில் தலா ஒரு சிலைகள். எதிரில் இரண்டு பக்கமும் கற்தூண்களைக்கொண்ட பரணில் பெரும் மணி. எந்த காலத்திலோ, யாரோ இதை இங்கு கட்டியிருக்க வேண்டும். எப்போதோ இங்கு பூஜை செய்ததற்கான அடையாளமாக, காய்ந்து, கருகி நைந்துபோன பூமாலைகள், கிழந்து போன சாமி வேட்டி என சிதறி கிடந்தன.


"மனக்கண்ணால் காண இயல்கிறது"

ஆடுமாடு said...

நன்றி, பத்மா.

பித்தனின் வாக்கு said...

மிக்க நன்று, கதை சொல்லும் பாணியும் அருமை. கதையும் அருமை.

Balakumar Vijayaraman said...

காடு - கடந்த ஆறு இடுகைகளையும் இப்போது தான் ஒரேமூச்சில் வாசித்தேன். தொய்வில்லாமல் அருமையாக செல்கிறது. நானும் அவர்களுடன் காட்டுக்குள் போவது போல தோன்றுகிறது. நெல்லைத் தமிழ் மணக்கிறது. வாழ்த்துக்கள் சார். தொடருங்கள்.

மங்குனி அமைச்சர் said...

சார் அருமையா போரடிக்காம எழுதி இருக்கீங்க

ஆடுமாடு said...

பித்தனின் வாக்கு வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

//நெல்லைத் தமிழ் மணக்கிறது. வாழ்த்துக்கள் சார்//

நன்றி பாலகுமார்.

இந்த 'சார்' கொஞ்சம் ஓவர்.
பச்சப்புள்ளக்கு எதுக்கு 'சார்'?

ஆடுமாடு said...

நன்றி மங்குனி அமைச்சர்.

காமராஜ் said...

தவற விட்டுவிட்டேன் இரண்டாவதுக்குப்பின்னால் ஏதும் வாசிக்கவில்லை. காடுகளில் அவற்றை கண்கானிக்கிறேனென்று தொடரும் இந்த பயணம்,அற்புதமானது.நான் சதுப்புவெளிகளில் அலைந்திருக்கிறேன்.மலை எங்களுக்கு,ஸ்ரீவில்லி,குற்றாலம் தான்.

மணக்குது தோழா.

ஆடுமாடு said...

//மலை எங்களுக்கு,ஸ்ரீவில்லி,குற்றாலம் தான்//

நானும் இந்த மலைகளுக்கு வந்திருக்கிறேன் தோழர்.

நன்றி காமராஜ்.

vidivelli said...

அருமை அருமை.......
வாசித்தேன்............
அறிந்துகொண்டேன்........

ஆடுமாடு said...

நன்றி விடிவெள்ளி.

துபாய் ராஜா said...

அண்ணாச்சி, அப்படியே காட்டுக்குள்ள கையைப்புடிச்சு கூட்டிட்டு போறியளே..