Thursday, August 26, 2010

அலைபாயும் அரிசிகள்

'ஏ சொல்லமுத்து, பொண்டாட்டிய கூட்டிட்டு நாளைக்கு வீட்டுக்கு வந்திருல'


'ஏம் மைனி'

'புது அரிசிடே'

-இப்படி சொல்லி அழைப்பாள் அம்மா. அறுவடை முடிந்து, விற்றது போக, மூட்டையாகியிருக்கிற நெற்களில் ஒரு உழக்கு சாமிக்கு. அவித்த நெல் அரிசியாகி, பானையில் ஏறுகிற ஏதாவதொரு நாள் புதுஅரிசி நாள். இதற்காக, கீழத் தெருவில் இருக்கிற சுப்பு சித்தி வீட்டில் புதுபானை வாங்கி வருவாள் அம்மா. காலையிலேயே வாய்க்காலில் குளித்துவிட்டு அம்மன் கோவிலில் விழுந்து வணங்கி வீட்டுக்கு வரும்போது, பசி கப்பென்று இருக்கும். 'கொஞ்சம் நெரம் பொறுத்துங்கல' என்றவாறு அடுப்பில் விறகை திணிப்பாள். பானைக்கு பட்டை போடப்பட்டிருக்கும். டிரங்கு பெட்டியில் இருக்கிற புது துணியை நாங்கள் உடுத்த வேண்டும். (புது துணி என்பது தீபாவளிக்கோ, சித்திரை விசுவுக்கோ எடுத்து உடுத்திய துணி).

பாச்சா உருண்டை மணக்கிற சட்டை, டிரவுசை போட்டுக்கொண்டு ஹீரோவாகிவிட்ட உணர்வில் வாசலில் நின்று கொண்டு, மேல வீட்டு முத்துவை, 'ஏல முத்து வாரியா...' என்று ஒரு கத்து. 'உங்கம்மா மத்தியானம்லா வர சொல்லியிருக்கா' என்றவாறே புது சட்டையை பாப்பான்.

'புதுசாடே' ,

' தீவாளிக்கு எடுத்தது'

இது எனக்கு. அக்காவுக்கு கீழ வீட்டு பிச்சம்மா பிள்ள.

இன்னும் சோறு ரெடியாகியிருக்காது. சித்தி, சித்தப்பா, மாமா வருகைக்கு பிறகு,ஆச்சியின் புண்ணியத்தில் குத்துவிளக்கு சாமியாகும். மாலையிலேயே புளிபோட்டு விளக்கி புதுசாக்கியிருப்பாள் விளக்கை. செவ்வாய், வெள்ளி மட்டுமல்ல, எல்லா நாட்களுமே, சாயங்காலம் விளக்கு சாமியாகும் நாட்கள். கூடவே ஏதாவது ஒரு அகர் பத்தியின் வாசனை வீட்டிலும் தொழுவத்திலும் மணந்துகொண்டே இருக்கும். இருட்டும் அல்லாத பகலும் அல்லாத அந்த சாயங்காலங்கள் இனிமையானவை.

குமரியாகியிருக்கிற அக்காள்கள் குடத்தை தூக்கிக்கொண்டு இப்போதுதான் வாய்க்காலுக்கு தண்ணீர் எடுக்க செல்வார்கள். குற்றாலம் கல்லூரியில் படித்த சுந்தரவடிவு அத்தை பற்றிதான் ஊரில் அப்போது அதிகமான பேச்சு. அந்த கால ஸ்ரீப்ரியா மாதிரி, முடியை காதுக்கருகில் ஸ்டைலாக இழுத்துக்கொண்டும், வழு வழுக்கிற சேலையுமாக அவள் வருகிற அழகே அழகு.

'ஏல செவத்தான், நேத்து சொல்லிக்கொடுத்த கணக்கை போட்டியா?' என்று ஆரம்பிப்பாள் சு.வ.அத்தை. இவள் வந்தாலே, போதுமென்று எதிரில் இருக்கிற ஆச்சி வீட்டு மச்சில் ஒளிந்துகொள்வேன். பிறகு எப்படியோ இழுத்து வந்து சொல்லித்தருவாள். ஒவ்வொரு நாள் சாயங்காலமும் அத்தை பாடம் சொல்லிக்கொடுக்க வருவாள். எனக்கு எரிச்சல் எரிச்சலாக இருக்கும். பிறகொரு சாயங்காலத்தில் கணேச மாமாவை அவள் காதலிக்கிற விஷயம் தெரிந்ததில் இருந்து எனக்கு நிம்மதியானது. சு.வ.அத்தை எனக்கு பாடம் எடுப்பதில்லை.


குத்துவிளக்குக்கு எதிரில் பெரிய வாழை இலை போட்டு சோறு பரிமாறப்பட்டிருந்தது. சித்தி, சித்தப்பா, மாமா எல்லோரும் விளக்கை விழுந்து கும்பிட்டார்கள். கூடவே நானும் அக்காவும். சு.வ.அத்தை சிறிது நேரம் கழித்து வந்தாள். எல்லோருக்கும் ஆச்சி திருநீறு பூசிவிட்டாள். பிறகு எல்லோரும் வரிசையாக உட்கார்ந்து, வாழை இலைகளில் சாப்பாடு. சு.வ.அத்தைதான் பரிமாறினாள்.

'ஏட்டி, எல்லாத்தையும் அவனுக்கே (மாமா) வச்சிட்டிருக்காத, பிள்ளைலுவோலுக்கும் வையி' - அம்மா கிண்டலாக சொல்வாள்.

சின்னதாக சிரித்து, பெரிதாக வெட்கப்பட்டு, 'போங்க' என்றாள்.

அடுத்த அறுவடை நாள் முடிந்து, புது அரிசி சமைக்கும்போது, வீட்டில் வேறொரு அத்தை இருந்தாள்.

கோயில் கொடையில் நடந்த தேவையில்லாத தகராறில் சு.வ.அத்தை வெறொருவரையும் மாமா வேறொரு அத்தையையும் கட்டிக்கொண்டார்கள்.

16 comments:

vasu balaji said...

//கோயில் கொடையில் நடந்த தேவையில்லாத தகராறில் சு.வ.அத்தை வெறொருவரையும் மாமா வேறொரு அத்தையையும் கட்டிக்கொண்டார்கள்.//

:(. ரொம்ப சுளுவா சொல்லீட்டீரே. பொளிச்சுன்னு பொடனில விழுந்தாமாதிரி கலங்கிப் போச்சுங்க. அழகாக் கோலம் போட்டு ஒருபுள்ளி தப்புன்னு அழிச்சாமாதிரி.

காமராஜ் said...

பாச்சா உருண்டை மணக்கிறது.
குத்து விளக்கு சாமியாகிறது.மாமாக்களும் அத்தைகளும் முன் நடந்து போகிறார்கள். அருமை தோழா.

Chitra said...

அடுத்த அறுவடை நாள் முடிந்து, புது அரிசி சமைக்கும்போது, வீட்டில் வேறொரு அத்தை இருந்தாள்.

கோயில் கொடையில் நடந்த தேவையில்லாத தகராறில் சு.வ.அத்தை வெறொருவரையும் மாமா வேறொரு அத்தையையும் கட்டிக்கொண்டார்கள்.


.....வித்தியாசமான பதிவு. அருமை.

பா.ராஜாராம் said...

ஆடு மாடு,

ரொம்ப நல்லாருக்கு.

(உம்ம பேரை கண்டு பிடிச்சிட்டேன். ஆனா, இருக்கட்டும்) :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

நேராப்பாத்தமாதிரியே ஆகிடுச்சு .. எல்லாரையும்..

ஆடுமாடு said...

நன்றி வானம்பாடிகள் ஐயா.

..............

//குத்து விளக்கு சாமியாகிறது.
மாமாக்களும் அத்தைகளும் முன் நடந்து போகிறார்கள்//
நன்றி தோழர்.
..............

வித்தியாசமான பதிவு.
நன்றி சித்ராக்கா.
....................

ஆடுமாடு said...

//உம்ம பேரை கண்டு பிடிச்சிட்டேன். ஆனா, இருக்கட்டும்) :-)//


பா.ரா மக்கா,
இதுல ரகசியமே இல்லை.
பெயர் தெரிஞ்சு என்ன
ஆக போகுது?
நானே சொல்லிடறேன்.

பெயர் : ஏக்நாத் ராஜ்
அம்மா கூப்பிடறது: மாராஜ்.
ஊர்ல கூப்பிடறது: நக்நாத்து.
நண்பர்கள்: ஏக்.
தோழிகள்: நாத்து.

ஓ.கேவா.

Balakumar Vijayaraman said...

//அடுத்த அறுவடை நாள் முடிந்து, புது அரிசி சமைக்கும்போது, வீட்டில் வேறொரு அத்தை இருந்தாள்.//

சடார்ன்னு போறபோக்குல சொல்லிட்டீங்க!

நல்லா இருக்கு.

ராம்ஜி_யாஹூ said...

எழுத்திலேயே கிராமிய மனம் கமழ்கிறது.

வாழ்த்துக்கள், நன்றிகள்.

ஆடுமாடு said...

நன்றி முத்துலட்சுமி

ஆடுமாடு said...

பாலகுமார்ஜி நன்றி.
.................

//எழுத்திலேயே கிராமிய மனம் கமழ்கிறது//
ராம்ஜி எழுதி எழுதி பழகுறோம்.
நன்றி

க.பாலாசி said...

இதோட மூனாவது தடவை படிக்கிறேன். நேத்தே ரெண்டுமுறை, என்ன சொல்ல, மௌனத்தை வைத்துக்கொண்டு. பலநாட்களுக்குப்பிறகு பாச்சையுருண்டை வாசம் சட்டைகளில் அடிக்கிறது. முடிவு பல அத்தைகளுக்கும் நடந்திருக்கும்...

ஆடுமாடு said...

நன்றி பாலாசி

Mahi_Granny said...

அருமையாய் எழுதுகிறீங்க தம்பி . வாழ்த்துக்கள்

ஆடுமாடு said...

நன்றி் மேடம்

KarthigaVasudevan said...

என்னங்க இது உங்க எழுத்து நடையெல்லாம் பார்த்தா கரிசல் வாடையா இருக்கு ஆனா பேர் ஏக்நாத்,மாராஜ் ன்னு என்னவோ மராட்டிகாரங்க மாதிரி இருக்கு.'அலைபாயும் அரிசிகள் ' தலைப்பே அருமையா இருக்கு ,மேல என்ன சொல்ல ? நல்லா எழுதறிங்க.