Saturday, September 4, 2010

கி.ரா. என்கிற ஆச்சி

சுவாரஸ்யங்கள் அடங்கிய மொழி, சிலரின் வட்டமேஜையில் வட்டமடித்துக்கொண்டிருந்த போது, கிராமத்து கொச்சைத் தமிழுக்கான மொழி அந்நியப்பட்டு அனாதையாகக் கிடந்தது. அந்த அனாதையின் உயிர், அடர்த்தி, அழுத்தம், சகதிக்குள் முங்கி கிடந்தது.


அதை, மண்ணின் வண்ணங்களாகப் பார்த்துக்கொண்டிருந்த மைந்தர்களுக்கு, அந்த அவமானம் தொண்டையில் இறங்கிய முள்ளாகத் தைத்துக்கொண்டிருந்தது. அவ்வப்போது பேச்சு தமிழை எழுதி வந்தவர்களும், வசை பாடிகளால் வதைப்புக்குள்ளாகிக் கொண்டிருந்தனர். மொழியின் ஆளுமையை ஒரு கட்டுக்குள் அடக்கிக் கொண்டு இதுதான் எழுத்து, இதை எழுவதுதான் சிறந்தது என்பதான அடக்குமுறை அது.

புதிதாக ஒன்றைக்கொண்டு வரும்போது அதன் நிஜ, சுக வினைகளைப் பற்றி கருத்தில் கொள்ளாமல் எதிர்வினைக்குள்ளாக்குவதையே தொழிலாக கொண்டவர்களின் குரல்கள் அது. ஓங்கி ஒலிக்கின்ற அந்த குரல்களின் பதிவுகளில் கோபமும் துவேஷமும் இருந்ததே தவிர, தர்க்க ரீதியான காரணம் இல்லை.

கட்டுடைப்பு என்பது காலங்காலமாக வந்துகொண்டிருக்கும் விஷயமென்றாலும் கூடவே அதன் காலை சுற்றும் பாம்புகளின் விஷ நாக்குகளின் நீளமும் அதிகரித்துக்கொண்டே இருக்கின்றன.

இப்படியான பெருங்காட்டின் முட்களை தனது காலில் தாங்கிகொண்டு, வலிகளோடு, ‘கோபல்ல கிராமம்‘ வந்த போது, காடு தானாக பாதை விரித்தது. பரந்து விரிந்த அப் பாதையின் ஓரத்தில் பூக்கள் தானாகப் பூக்க தொடங்கின. இந்த பூத்தலையும் அது விரிக்கும் நீள அகலங்களையும் தாங்காமல் எறிந்து விழுந்த கற்கள், நிலை தடுமாறின. கி.ரா என்கிற வேர் ஆழமாக ஊடுருவியது.

மண்ணின் ஈரம் தாங்கிய அது தரும் குளிர்ச்சியும், நிழலும் தெக்கத்திக்காரர்களுக்கு தாய்ப்பாலானது. அந்த தாய்ப்பால் தந்த ஊட்டத்தில் பேச்சுத் தமிழின் உயிரும் உருவமும் நிமிர்ந்து அமர்ந்தன. ஏளனமாகவும் இடக்காகவும் பார்க்கப்பட்டு வந்த மொழி, தனது நரம்புகளில் புது ரத்தம் பாய்வதை கண்டு புளகாங்கிதம் அடைந்தது.

ஊருக்குள்ளும், ஊரின் தெருவுக்குள்ளும் வாய்க்கால் கரை, வயக்காட்டு வரப்புகளுக்குள் உருண்டு ஊஞ்சலாடி வந்த கதைகள், புத்தகத்துக்கு இடம்பெயர்ந்தன. நம் பாட்டனும் முப்பாட்டனும், தாத்தாவும் ஆச்சியும் சொல்லி வந்த சொலவடைகளும், கதைகளும் கிடை கூட்டங்களோடு இன்று பள்ளிக்கூடங்களுக்கு வந்திருக்கிறது.

எனது ஊர் தெப்பக்குளத்தில் எருமைகளையும் நான்கைந்து செம்மறிகளையும் தண்ணிருக்குள் இறக்கிவிட்டுவிட்டு திண்டில் அமர்ந்து நான் படித்த புத்தகங்கள் எனக்குப் பயங்களை கொடுத்திருந்தன. பயத்திற்கான காரணம் அந்தக் கதைகளும் கதைகள் கொண்டிருந்த கற்பனைகளும், அதன் மொழி நடையும். இந்தப் பயங்களினூடாக சேக்காளி ஒருத்தன் கொடுத்த புத்தகத்தைப் படித்ததும் எனது குறுணி விதைப்பாட்டில் ஐந்து கோட்டை நெல் விளைந்த சந்தோஷம்.

‘‘ஏலே இவன் நம்மூரு சன்னாசி மவன் மாதிரிலா இருக்கு. இந்த புள்ள ஐஸ் விக்க வந்தவன் கூட ஓடிப்போன கல்லிடக்குறிச்சா மவ மாதிரிலா இருக்கு. ஏல பொந்தா இங்கேரு உன்னய போல ஒருத்தன். ஏ நாசமா போனவனே இங்க பார்ல...‘‘

ஒவ்வொரு பக்கத்தையும் புரட்டும் போதும் என் அம்மாக்களும் அக்காளுவோலும் அண்ணன்மார்களும், மைனிகளும், மச்சான்களும், ஊர்க்காரர்களும் எனக்குள் கி.ரா.வின் வழியாகப் பேசிப் போனார்கள்.

சாணம் மெழுகிய மண் தரை முற்றத்தில் மாட்டுத்தொழுவத்திலிருந்து எழும் சாண, மூத்திர வாசனை நுகர்தலுடன், கேட்காமலேயே வரும் கொசுக்கடியையும் தாங்கி மல்லாந்து படுத்திருப்போம். பெரியாச்சி சொல்லும் கதைகளில் எங்கள் இரவு கனவுகளில் நீழும். அந்தப் பாலியல் கதைகளை கேட்டு அக்காள்கள் சிரிக்க, ‘சின்ன புள்ளைலுவோகிட்ட என்ன கதைய சொல்லுதியோ‘ என்ற அம்மாவின் செல்ல கோபத்தையும் தாண்டி ஆச்சியின் கதைகள் தொடரும்.

அவள் இறந்த பிறகு கதை சொல்லும் பாட்டிகளை தேட வேண்டியதாகிவிட்டது.

அந்தக் கதைகளை பேராசிரியர் ஒருவரிடம் யதேச்சையாக சொல்ல நேர்ந்த போது, எரித்து விடுவதாகப் பார்த்தார். இம்மாதிரி அசிங்கமான கதைகளைப் பற்றி யாரிடமும் பேசக்கூடாது. சொல்லக்கூடாது என்பது அவரது நிபந்தனை.

இந்தக் கதையை அறுவறுப்பாக பார்க்க அதில் என்ன இருக்கிறது. அது என் முன்னோர்கள் சொன்ன கதை.

‘ச்சீ... அசிங்கம்‘ என்று கூறப்பட்டு வந்த இப்படியான பாலியல் கதைகளை கி.ரா மூலமாக நான் படித்த போது எனக்கொரு ஆச்சி கிடைத்தாள் என்ற உணர்வுதான் எழுந்தது.

அந்தக் கதைகளை விட அதில் கையாண்டிருக்கும் அவரது மொழி வியக்க வைக்கும் விஷயம். அவரது எழுத்தின், மொழியின் தன்மையில் கதைகள் கால் முளைத்து நடக்கின்றன. இம்மாதிரியான மரபை மீறிய அவரது மொழி எல்லோரையும் போல எனக்குள்ளும் சம்மணமிட்டு உட்கார்ந்து நகர மறுத்தது.

இப்படியான கிராமத்துக் கதைகளை எழுதலாமா என்று நான் எழுத தொடங்கிய போது யோசித்திருக்கிறேன். அப்போதெல்லாம் ‘எவன்டே சொன்னாம் எழுதக்கூடாதுன்னு. இதைதாம் எழுதணும்‘ என்ற கி.ரா வார்த்தைகள் அசரிரீயாக எனக்குள் விதைத்துவிட்டுப் போனது.

‘எனது ஊரையும் மக்களையும் நான் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுதததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை தலையில் வாரிப்போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப் பட்டிருக்கிறேன்‘ என்கிற கி.ரா.வின் ஆசைதான் எல்லோருக்கும்.

கட்டி எழுப்பியிருக்கும் அணையை உடைத்துக்கொண்டு மண்ணின் மொழியிலேயே தனது படைப்புகளைக் கொண்டு வந்த, அவரது உரிமையும் உணர்ச்சியும்தான் சக எழுத்தாளர்களைப் போல எனது ‘கெடாத்தொங்கும்‘, ‘பூடமும்‘ ‘குள்ராட்டி‘யும் வெளிவர காரணமாயின.

பாரத தேவி, வீர வேலுச்சாமி உட்பட பலரை தனது ஆளுமையின் அடையாளமாக கி.ரா என்கிற கிராமம் உருவாக்கி இருப்பது அவரது மற்றொரு பரிணாமம். இந்த மண்ணின் சொந்தத்தை, கரிசல்காரராக பார்ப்பதை விட, தெக்கத்திக்காரராக பார்ப்பதைத்தான் நமது மண்ணின் சிறப்பாகக் கருதுகிறேன்.


‘கி.ரா 85‘ புத்தகத்துக்காக நான் எழுதிய கட்டுரை.

(எழுத நேரமில்லை. பழைய பதிவு)

13 comments:

vasu balaji said...

நன்றிங்க:).இதுக்கு மேலயும் கி.ரா.வைச் சொல்ல முடியும்னு தோணலை.

காமராஜ் said...

புத்தக வாசிப்பை பிரச்தாபிக்கும் நேரங்களில் அந்தப்பெயர் கட்டாயம் ஊடாடும்.அவரைப்பற்றியதான கதைகல் கேட்க கேட்க வேட்ககை உண்டாகி கோபல்லகிராமம் படித்தபோது மயங்கிப்போனேன்.நீங்க சசொன்னமாதிரியே ஊர்ப்பாட்டிகள் தலைக்குள் விரல்விட்டு பேன் தேடுகிற பாவனையில் விரலை அலையவிட்டபடி சொல்லும் கதைகள் கருப்புவெள்ளையில் பார்த்ததும் இன்னும் கூடுதல் தெம்பு வந்தது.பின்னர் விழுது பத்திரிகை நடத்தும்போது அவரின் கடிதங்களை கிரா வின் காயிதங்கள் என்ற தலைப்பில் பிரசுரித்தோம்.அஞ்சலட்டைக்குள் எழுதும் ஒவ்வொரு பகுதியும் ஒரு பத்தியாக உருவெடுக்கும்.(இப்போதைய பதிவு) அப்படிப்பட்ட எங்கள் முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த நினைவூட்டல் குறு குறுப்பை உண்டாக்குகிறது.

Chitra said...

‘எனது ஊரையும் மக்களையும் நான் நேசிக்கிறேன். நான் பிறந்து விழுந்தது இந்த மண்ணின் மேல்தான். நான் தவழ்ந்து விளையாடி மகிழ்ந்ததும், விழுந்து புரண்டு அழுதததும் இந்த மண்ணின் மடியில்தான். இந்தப் புழுதியை தலையில் வாரிப்போட்டுக்கொண்டும் என் கூட்டாளிகளின் தலையில் வாரி இறைத்தும் ஆனந்தப் பட்டிருக்கிறேன்‘ என்கிற கி.ரா.வின் ஆசைதான் எல்லோருக்கும்.


.....அழகு.

உங்கள் பதிவுகளில் இருக்கும் கிராமிய மணமே சிறப்புதாங்க....

பத்மா said...

உங்கள் எழுத்திலும் மண் வாசனை அழகாய் உள்ளதே ..அது தானே படிப்பவர்களை மீண்டும் மீண்டும் இங்கு இழுத்து வருகிறது....கி ரா ஒரு சகாப்தம் ..அவரைப் பற்றியும் அவர் எழுத்துக்கள் பற்றியும் எழுத எழுத மாளாது தான் ..

இதோ அவர் தடம் பின்பற்றி ஆடு மாடும் கூட .

பத்மா said...

காமராஜ் சாரின் முன்னத்தி ஏர் என்ற விளிப்பு சிலிர்ப்பைத் தருகிறது

ஆடுமாடு said...

நன்றி வானம்பாடிகள் ஐயா.

ஆடுமாடு said...

//எங்கள் முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த நினைவூட்டல் குறு குறுப்பை உண்டாக்குகிறது.//

எங்களுக்கு அவரு முன்னத்தி ஏர்தான் தோழர்.
நன்றி

ஆடுமாடு said...

நன்றி சித்ராக்கா.

ஆடுமாடு said...

//இதோ அவர் தடம் பின்பற்றி ஆடு மாடும் கூட //

நெசமாவா? நன்றி பத்மா மேடம்

க.பாலாசி said...

நல்ல பகிர்வுங்க... அவரை அறிந்திருந்தும் அவரது எழுத்தினை படித்ததில்லை... படிக்கவேண்டும்...

ரமேஷ் வைத்யா said...

முன்னத்தி ஏரைப்பற்றிய இந்த//
kamaraj, who coined the phrase? :-)))

ramachandranusha(உஷா) said...

சரியான தலைப்பு. ஆச்சி/ பாட்டியான கதை சொல்லிக்கு இணை கி.ரா தான்

ஆடுமாடு said...

நன்றி பாலாசி.

..................

//kamaraj, who coined the phrase? :-)))//

இதுல என்ன பிரச்னை ரமேஷ்ஜி.
..................

நன்றி ராமச்சந்திரன் உஷா.