Tuesday, February 16, 2010

காடு-8

மாடுகள் சென்றுக்கொண்டிருந்தபோது, கீழே கிடக்கும் சருகுகளில் இருந்து சர்புர் சத்தம் வந்துகொண்டிருந்தது. நிழலாக மூடியிருந்த மரக்கிளைகளில் இருந்து விழுந்துகிடந்த அவற்றின் மீது அணில்கள் ஓடி விளையாடிக்கொண்டிருந்தன.


தூரத்தில் இருந்து, இதுவரை கேட்டிராத பல பறவை மற்றும் வண்டுகளின் சத்தங்கள் ராகங்களாய் வந்துகொண்டிருந்தன. உ.மகாளி அவற்றை ஆச்சர்யமாகவும் அதிசயமாகவும் பார்த்துக்கொண்டும் கேட்டுக்கொண்டும் நடந்தான்.

உயரமான மரங்களில் இருந்து தாவும் கருங்குரங்கள், மாடுகளையும் இவர்களையும் வேடிக்கைப் பார்த்துக்கொண்டு சென்றன. குற்றாலம், பாபநாசம் பகுதிகளில் இப்படியான குரங்களை பார்த்திருக்க முடியாது. இது பாடப்புத்தகங்களில் காட்டப்பட்டிருக்கும் குரங்கு. சாதாரண குரங்குகளை விட இவை, அதிக சேட்டைகளை கொண்டவை.

உ.மகாளியின் தலையில் இருக்கும் அரிசி, காய்கறி உள்ளிட்டவை அடங்கிய மூட்டையை பத்திரமாக பாதுகாக்கும் பொருட்டு, அவனை முன்னே விட்டு, பின்னால் வந்தார்கள தவிட்டான் உள்ளிட்டவர்கள்.

இந்த வகை குரங்குகள் எதற்கும் பயப்படாதவை. நேராக தலையில் வந்தமர்ந்து மூட்டையை தள்ளி, அள்ளிக்கொண்டு போகும் வகையறாக்கள்.

உ.மகாளிக்கு இப்படியானதொரு குரங்கு அனுபவம் ஏற்கனவே இருக்கிறது.

அக்ரஹாரத்துக்கு புதிதாக வந்திருந்த கல்யாணி டீச்சர், பின் வாசலில் நின்று மேலே பார்த்துக்கொண்டிருந்தாள். உ.மகாளி கீழ வீட்டில் பால் கறந்துகொடுத்துவிட்டு வெளியே வந்தான்.

சில பல முறை கல்யாணி டீச்சர், அவனை பார்த்திருந்தாலும் பேசிக்கொண்டதில்லை. அறிமுகமில்லாதவனிடம் எப்படி பேச என்கிற தயக்கம் அவளுக்கு இருந்தது.

உ.மகாளிக்கு அறிமுகங்கள் தேவையில்லை. முகத்தை பார்த்தே நோக்கம் அறிந்துகொள்ளும் அபிப்ராயன். இருந்தாலும் கல்யாணி டீச்சர், இளவட்ட பசங்களின் கனவு கன்னியாக இருந்த படியாலும் இப்படியான பெண்களிடம் பேசுவதற்கு வாய்ப்பு கிடைக்கிறதே என்பதாலும் கொஞ்சம் துணிந்தே கேட்டான் உ.மகாளி.

'என்ன டீச்சரு மேலயே பார்த்துட்டு இருக்கீயோ"

'தேங்கா உடைச்சேன். குரங்கு தூக்கிட்டு மச்சிக்கு ஓடிட்டு. தேங்கா போனா கூட பரவாயில்லை. சேலை, ஜாக்கெட் எல்லாத்தையும் அள்ளிட்டு போயிட்டு"

'மச்சியிலதான இருக்கு. இந்தா போறேன் பாருங்க" என்ற உ.மகாளி, அவள் வீட்டின் காம்பவுண்ட் சுவர் ஏறி. மச்சிக்கு சென்றான். அங்கு இருக்கிற அறை பூட்டி இருந்தது. அதற்கு அடுத்து, அடுத்த வீட்டின் மச்சி. அது ராசா ஐயர் வீட்டினுடையது. அங்கு அனுமதி இல்லாமல் பிரவேசித்தால் திருட்டு குற்றம் சுமத்தப்படலாம் என்பதால் இங்கிருந்தே அவர் வீட்டு மச்சியை எட்டிப்பார்த்தான்.

குரங்கு இல்லை. ஆனால், சிவப்பு கலர் ஜாக்கெட்டும், இரண்டு கருப்பு கலர் பிராவும் பத்தடி தூரம் தள்ளிக் கிடந்தது. டீச்சர் இதைதான் எதிர்பார்த்தாள் என்பதால், ஆசையாக முதலில் பிராவையும் பிறகு ஜாக்கெட்டையும் எடுத்துக்கொண்டு திரும்பும்போது... வேகமாக வந்து முதுகில் விழுந்தது குரங்கு. முதுகில் டர்ர்ர்ர். கொஞ்சம் பயமும், திகிலும் கலந்த உ.மகாளி மச்சியில் இருந்து எப்படி விழுந்தான் என்று தெரியாது. கிழே காயப்போட்டிருந்த மிளாகாய் வத்தலில் மீது சப்பென்று அவனின் பின்பகுதி அமர்ந்திருந்தது.

துணி காய போடுவதற்காக கட்டப்பட்டிருந்த கொடியை கிழித்தும் விழுந்திருந்தான் உ.மகாளி. பிறகு எப்படி டீச்சரின் வீட்டுக்குள் தூக்கிச்செல்லப்பட்டான். சட்டை களைந்து தூங்க வைகக்ப்பட்டான் என்பது அவனுக்கு பிறகுதான் தெரிந்தது. அவன் உணர்வு வந்து பார்த்தபோது, அவனது பின்பக்கத்தை ஐயோடக்ஸால் தடவிக்கொண்டிருந்தாள் டீச்சர்.

டமாலென்று அவளது கையை தட்டிவிட்டு, எழுந்தான். லேசாக வலி இருந்தது. சாரத்தை இழுத்துக்கட்டிக்கொண்டான்.

டீச்சர் அவனது முகத்தைப் பார்க்காமல் பேசினாள்

'ஐயோ நேக்கு உயிரே போயிடுச்சு... சிவ சிவா"- கண்ணை கசக்கினாள்.

'ஒண்ணுமில்ல டீச்சரு. அது முதுவுல விழுந்ததும் காலு தடுமாறிபோச்சு. லேசாதான் வலி, பரவாயில்ல".

பிறகு பலமுறை அவனது கனவுகளில் டீச்சர் வரத்தொடங்கினாள் என்பதும், ஐயோடக்ஸ் மேட்டர் அடிக்கடி ரிபீட் ஆவதும் தனிக்கதை.


வெயில் மறைய தொடங்கிவிட்டது. இப்போது அவர்கள் தோணியாறை நெருங்கி இருந்தார்கள். சின்ன அருவியும் பெரும் பள்ளமும் நிறைந்த பகுதி இது. அருகிலேயே இவர்கள் மாதிரி மாடு மேய்க்க, தேன் எடுக்க, விறகு வெட்ட வருபவர்கள் இங்கு ஏற்கனவே அடுப்பு மூட்டி சோறாக்கிய வடுக்கள் அங்கு இருந்தன.

இரண்டு பாறைகள் ஒன்றுக்கொன்று ஆங்கில ஏ எழுத்து போல சேர்ந்து குகை மாதிரி இருந்ததால், நடுவில் உட்கார்ந்து சோறாக்க வசதியாக இருந்தது. பறைகள் மீது சாக்பீசால், முத்தம்மா, செல்லத்துரை லவ் என்கிற மாதிரியான ஆர்டின் வடிவ சிம்பல்கள் அதிகமாகச் செதுக்கப்பட்டிருந்தன. இப்படியான பெயரிகளில், தான் எவள் பெயரைச் சேர்த்து எழுதுவது என்று நின்று யோசித்துக்கொண்டிருந்தான் உ.மகாளி.

காலை மதியத்திற்கு கொண்டு வரப்பட்ட பழையச்சோறு காலியானதால் இங்கு சோறாக்கிவிட்டு செல்வது என்று முடிவெடுத்தார்கள்.

அப்பகுதி முழுவதும் வீட்டில் செய்யப்படும் முறுக்கின் வாசனை வந்துகொண்டிருந்தது.

'இங்க யாரு வந்து, முறுக்கு சுட போறா" என்று உ.மகாளி, மூக்கை இன்னும் உரிஞ்சு உரிஞ்சு வாசம் தேடிக்கொண்டிருந்தான். தூரத்தில் சாய்ந்து கிடக்கிற மரத்தில் அமர்ந்து பீடிக்குடிக்கலாம் என்றிருந்தவனை, காய்கறி வெட்ட சொன்னான் தவிட்டான்.

'முறுக்கு வாசனை வருது... அங்க இங்கன்னு அலையாத... பாம்புவோ எங்கயாது கிடந்து காத்து குடிச்சாதான் இப்படி வாசனை வரும்" என்று நொடிஞ்சான் சொன்னதும் உ.மகாளிக்கு குபுக்கென வியர்த்தது.

கந்தையாவும் கேசரியும் மாடுகளை கிடையில் போட்டுவிட்டு வந்தார்கள். கால், கைகளை கழுவிவிட்டு வர அருவி அருகே செல்லும் போது, பக்கத்து பள்ளதில் இருந்து துர்நாற்றம் வீசிக்கொண்டிருந்தது.

எட்டிப்பார்த்தான் கேசரி, திக்கென்றிருந்தது அவனுக்கு.

தொடர்கிறேன்.

6 comments:

துபாய் ராஜா said...

வர்ணனைகளில் காட்டை கண்முன் கொண்டு வந்து விட்டீர்கள்.

//'என்ன டீச்சரு மேலயே பார்த்துட்டு இருக்கீயோ"//

நம்ம ஊரு பாஷை படிக்கும் போது தேனா இனிக்கல்லா செய்யுது அண்ணாச்சி... :))

/அவனது பின்பக்கத்தை ஐயோடக்ஸால் தடவிக்கொண்டிருந்தாள் டீச்சர்./

அய்யோ..அய்யோ...பட்டெக்ஸ்ல்ல அய்யோடெக்ஸா..... உச்சிமாகாளிக்கு அடிச்சுது லக்கி பிரைஸ்ல்லா... :))

பாம்பு காத்து குடிக்கும் போது முறுக்கு சுடுத வாசனை வருமா.. ஆஹா.. இனி எந்த காட்டுக்கு போனாலும் உஷாரா இருந்துக்கிடணும்...

கெதக்குங்க...பள்ளத்துக்குள்ள அப்படி என்ன கெடந்தது அண்ணாச்சி...

மதுரை சரவணன் said...

ayya aruputhmaana kathai thalam , viruviruppaana nadai . teacher over thaan. thotarattum settai, saari aatu maatu vettai.

ஆடுமாடு said...

//நம்ம ஊரு பாஷை படிக்கும் போது தேனா இனிக்கல்லா செய்யுது அண்ணாச்சி... :))//

பின்ன இருக்காதா ராஜா சாரு.

//கெதக்குங்க...பள்ளத்துக்குள்ள அப்படி என்ன கெடந்தது அண்ணாச்சி...//

இன்னா, நாளைக்கு சொல்லிருதேன்.

நன்றி சார்.

ஆடுமாடு said...

மதுரை சரவணன் சார் நன்றி.

//teacher over thaan//

ஹி ஹி ஹி

சாமக்கோடங்கி said...

எல்லாத்தையும் படிச்சிட்டு வரேன்..

ஆடுமாடு said...

பிரகாஷ் வருகைக்கு நன்றி.

அப்படியே நல்ல குறி சொன்னா நல்லாருக்கும்!