Thursday, February 18, 2010

காடு - 9

பள்ளம் என்பது அருவி நீர் பட்டுத் தெறித்து குளமாக்கப்பட்ட பகுதி. முழுவதும் தண்ணீர் இல்லாமல் ஒரு ஓரமாக மட்டும் தண்ணீர் சூழ்ந்திருந்தது. மறுபக்கம் மணலாகவே காட்சியளித்தது. கண்ணாடியான தண்ணீரை மேலிருந்து பார்க்கும் போது, அடியில் மணல்களும் கூழாங்கற்களும் தெரிந்தன.


தண்ணீரில் பாதி முங்கிய நிலையில் உடல்கள் வீங்கிய உருவம் தெரிந்தது.

கேசரி கொஞ்சம் நடுக்கமாகி, 'ஏல இங்கரு... எவனோ செத்துகிடக்காம்" என்றான்.

எதையுமே சீரியசாக எடுத்துக்கொள்ளாத கந்தையா, எந்தவித ரியாக்சனையும் காட்டாமல், எட்டிப்பார்த்தான்.

பிறகு கேசரிக்கு பொடதியில் ஒரு போடு.

'உனக்கு கண்ணு எளவும் தெரியாதால'

'ஏம்'

'செத்துக்கிடக்குதது கரடி'

'கரடியா... மனுசம் மாதிரிலா தெரியுது"

'ஆக்கங்கெட்ட கூவை... நல்லா பாருல'

கண்ணைக் கசக்கி கொண்டு பார்ர்த்தான் கேசரி. மல்லாக்க கிடந்திருந்தது கரடி. அதன் கரு உருவங்கள் கரடி என்பதை தீர்மானித்திருந்தன.

நள்ளிரவில், புலி போன்ற விலங்குகள் அல்லது கொடிய விஷம் கொண்ட பாம்புகளிடம் கடி வாங்கி கரடி இறந்திருக்கலாம் என்பது கேசரியின் நினைப்பு.

ஆனால், புலி எப்போதும் இடதுபக்கமாகத்தான் தாக்கும் என்பது ஊர் பெருசுகளின் பேச்சு. அது ஒரு போதும் வலபக்கம் அடிக்காது என்றும், தானே அடித்துதான் சாப்பிடும், இறந்துகிடப்பதை தொடாது என்பதும் பேச்சிதாத்தாவின் வாயிலிருந்து கேட்கப்பட்டவை.

பேச்சித் தாத்தா ஊரில் வீரம் செறிந்தவராக காணப்பட்டார். அவரது இளம் வயது கதைகள், அதை உறுதிப்படுத்துவதாக இருந்தது.

துப்பாக்கிகள் நகரங்களில் அறிமுகமாகியிருந்த காலத்தில், ஆழ்வார்க்குறிச்சி சின்ன ராசாவுடன் அவரும் ஒரு துப்பாக்கி வாங்கியிருந்தார்.

எப்படி சுடுவது என்பது உள்ளிட்டவற்றை சின்ன ராசா கற்றுக்கொடுத்திருந்தார். வாரத்தில் மூன்று நாட்கள் பொதிகை மலைக்குள் வேட்டையாடுவதை வழக்கமாக வைத்திருந்தார் தாத்தா. அதற்கு அத்தாட்சியாக, அவர் வீட்டு வாசலின் இரண்டு பக்கமும் மான் கொம்புகள் சுவற்றில் பதிக்கப்பட்டிருந்தன.

சட்டையில்லாத அவரு நெஞ்சில் ஆடும் பெரிய தங்க சங்கிலியில் சிங்கப்பல் பொருத்தியிருப்பதாக சொல்வார்கள்.

'எங்காலத்துல எல்லாம் இப்டியாடா... உங்க தாத்தாவும் நானும்தான் சேக்காளியோ. அந்தானி, வில்வண்டியை (கூண்டு வண்டி) எடுத்தம்னா, ரெண்டு மூணு நாளு ஆவும் வீட்டுக்கு வர.

ஏழெட்டு மானு, முயலுவோ, கருவாலி அது இதுன்னு அள்ளிப்போட்டுட்டு வருவோம். ஒரு தடவை, மலைக்கு மேலே வண்டி போற பாதை மாதிரி இருந்தது. தீப்பந்தத்தை வண்டியில சொருவி வச்சுட்டு அதுபாட்டுக்கு போயிட்டிருந்தோம். போனா, விடிஞ்சு போச்சு, உச்சிமலைக்கு வந்திட்டோம். சரியான காடு. பக்கத்துல தேயில தோட்டமா இருக்கு. அந்தானி வண்டிய நிறுத்தி மாட்டை அவுத்து, செத்த நேரம் படுக்கப்போட்டுட்டு, நின்னா, மலையில வாழுறவங்க ஒரு ஏழெட்டு பேரு வந்துட்டாங்க. விஷயத்தை சொன்னோம்.

சரின்னு ஒருத்தன் வீட்டுல போயி, நீத்தண்ணி குடிச்சிட்டு, பேசிட்டிருக்கோம். அவங்க பேச்சு நம்ம தமிழ் மாதிரியும் இருக்கு. இல்லாத மாதிரியும் இருக்கு.

அதுல ஒருத்தியை, உங்க தாத்தன் பாத்துட்டாம். அவ என்னடான்னா கலருன்னா கலரு, அப்படியொரு கலரு. அவளை கூட்டிட்டு போயிரணும்னு ஒத்த கால்ல நிக்காம். குடிக்க தண்ணி கொடுத்த இடத்துல அப்படிலாம் பண்ணக்கூடாதுடான்னு வந்துட்டோம்.

வரும்போதே, கால்ல சுடுதண்ணி ஊத்திட்டு நிக்குத மாதிரி, வா வீட்டுக்குபோலாம்னு பறந்துட்டிருப்பாம்... ஏம்னா, அவனுக்கு உங்க ஆச்சி பக்கத்துல தூங்கலைன்னா தூக்கம் வராது" என்று சொல்லிவிட்டு மீசையை திருகியவாறு, பலமாக சிரிப்பார் பேச்சித் தாத்தா.

அவருக்கான காலமும், அனுபவமும் அவருக்கானதுதான்.

சமையலுக்கான வேலைகள் ஆரம்பமாகிக்கொண்டிருந்தது. உ.மகாளி கண்களின் தண்ணீர் வர வெங்காயம் உரித்துக்கொண்டிருந்தான்.

ஏற்கனவெ அங்கு அடுப்பு மூட்டியிருந்த்தால் வசதியாக இருந்தது. அவர்கள் வேலைப் பார்த்துக்கொண்டிருக்க, கந்தையாவும் கேசரியும் அருகிலேயே மணலில் படுத்தார்கள்.

'சுகமா இருக்குலா... அப்டியே தூங்கிருவேம் போலிருக்கு'

'தூங்கேன். எங்களுக்கு ஒரு பிடி சோறு மிச்சமாவும்"

'நீங்க செஞ்சாலும் செய்வியோ" என்றவாறே எழுந்தார்கள் இருவரும்.

நாலைந்து பேர்கள் ஊரில் கூடுகிற இடத்தில் ஏதாவது ஒரு இளம் பெண்ணைப் பற்றியோ, அல்லது வேறு தெரு பெண்களைப் பற்றியோ இல்லாததும் பொல்லாததுமாக கதைகள் நடக்கும்.

இப்படியானதொரு தனிமையில் அது இல்லையென்றால் எப்படி?
நொடிஞ்சான்தான் ஆரம்பித்தான்.

'கொண்டை ஐயரு வீட்டுல வேலை பார்த்தாம்லா, கருப்பையா'

'ஆமா'

'அவன், அடிவாரத்துல இருந்து ஒருத்திய கூட்டிட்டு வந்திருக்காணாமே'

உ.மகாளி, ஆர்வமாகி, தொடந்தான்,

'ஆமா, இந்தப்பய ஐயரு வீட்டு, தென்னை மரத்துல இருந்து காய் எடுத்துட்டு வர, வண்டியில அடிக்கடி போயிருக்காம்... முதல்ல கொஞ்சம் தண்ணிக்கொடுங்கன்னு ஆரம்பிச்சிருக்கான். பிறவு, அப்படி இப்படி பழக்கமாயிருக்கு. பொண்டாட்டிக்காரிக்கு தெரிஞ்சு, வாரியலை எடுத்து அடிச்சுருவேன்னு சொல்லி ஒப்பாரி வச்சிருக்கா. அந்தப் புள்ளய விட்டுட்டு அவனுக்கு இருக்க முடியலை. அந்தானி ஐயரு வீட்டு தொழுவுல வாடகைக்கு வச்சிருக்காம். பாதி நேரம் இவன், தேங்காய் எடுக்க, ரைஸ் மில்லுக்கு மூட்டைய தூக்கிட்டு போவன்னுதான் இருக்காம். ஆனா, ஐயரு...'

'அப்படியில்லலை... அடிவாரத்துல ஒரு நா போதை போட்டுட்டு, பிரச்னையாகி தெருவுல கிடந்திருக்காம்... தண்ணிக்குப் போன இந்த புள்ள, ஐயோ பாவம்னுட்டு மூஞ்சியில் தெளிச்சிருக்கு. அதுக்குப் பிறவுதான் உணரு வந்து, அவளை பத்தி விசாரிச்சிருக்காம்... அந்தானி தொடர்ந்துட்டு தொடுப்பு'

அடுப்பில் சோறு கொதித்து கொண்டிருக்க, கதைகள் தொடர்ந்துகொண்டிருந்தது.நானும் தொடர்கிறேன்.

7 comments:

மாதவராஜ் said...

எவ்வளவு இயல்பான,தனித்த மொழி உங்களுடையது. காடு கொள்ளவே மாட்டேன்கிறது.
நானும் கதைகளை தொடர்ந்து கேட்டுக்கொண்டு இருக்கிறேன்.

ஆடுமாடு said...

நன்றி மாதவராஜ் அவர்களே!

உலகமயமாக்கலுக்குப் பிறகு காணாமல் போய்விட்ட, நம் மக்களின் வாழ்க்கையையும், இயல்புகளையும் மீட்டெடுக்கும் பொருட்டே இத்தளம்.

தொடர் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி.

ESMN said...

அண்ணாச்சி,
பேச்சி தாத்தா மாத்ரி நெறைய தாத்தாக்கள் உண்டு.
அவங பேசும் போது ‘கேட்டியா’ என்று ஒரு வார்த்தை வரும்.

இப்ப களக்காட்டு காட்ட்க்குள்ள போனா ஃபாரஸ்ட் காரன் தூக்கி உள்ள வைத்துவிடுவான்.

ஆடுமாடு said...

'ஏல கேட்டியா'
இது தான.

ஆமாமா. நன்றி எருமைமாடு அண்ணாச்சி.

துபாய் ராஜா said...

எங்க ஊர்ப்பெருசுங்க புலியை
'கடுவா'ன்னும் (கடுவாய்), பெரிய சாம்பவார் மானை 'மிளா'ன்னும் சொல்லுவாங்க. வேட்டைக்கு போய்ட்டு நாலைந்து மிளாவை சுட்டு வண்டியில எடுத்திட்டு வந்துட்டாங்கன்னா சொந்தக்காரங்க வீட்டுக்கெல்லாம் பெரிய பெரிய குத்துபோணில கறி போகுமாம். அதை வீட்டு பொம்பிளைய கறி வச்சது போக மீதியை கயித்துல கட்டி உப்புகண்டமா காயப்போட்டுடுவாங்களாம். வெளியூர்ல இருந்து விருந்தாள் வந்துட்டு போகும் போது இதை வேட்டில கட்டி பார்சலா கொடுத்து விடுவாங்களாம். கோட்டையூர் போனா கொடிக்கறியோட (உப்புக்கண்டம்)வரலாம்ன்னு ஒரு சொல்வடையே உண்டாம்.

ம்ம்ம்.இப்போ கோட்டை இருக்கு. கொடிக்கறிதான் இல்லை.

பேச்சித்தாத்தா மாதிரு எங்க அப்பா, பெரியப்பாக்களும் நிறைய வேட்டைக் கதைங்க சொல்லியிருக்காங்கல்லா...

இப்போ அருவிக்கரை அம்மன் கோயில் கொடைக்கு போகணும்ன்ன்னா கூட அம்பாசமுத்திரம் ஃபாரஸ்ட் ஆபிஸ்ல எழுதி கொடுத்திட்டுல்லா போக வேண்டி இருக்கு....

ஆடுமாடு said...

துபாய் ராஜா,

கடுவா வேற, மிளா வேற. அதுக்கும் புலி, மானுக்கும் சம்பந்தமில்லை.

உப்புக்கண்டம் இப்பவும் இருக்கு. இளம்கெடாக்கறின்னா உப்புகண்டம் போட்டு வச்சுக்கிடுவாவோ.

//இப்போ அருவிக்கரை அம்மன் கோயில் கொடைக்கு போகணும்ன்ன்னா கூட அம்பாசமுத்திரம் ஃபாரஸ்ட் ஆபிஸ்ல எழுதி கொடுத்திட்டுல்லா போக வேண்டி இருக்கு...//

பின்ன, போறவங்க ஏதாவது எழவை இழுத்து வச்சிருதாவலாம்லா.

அருவிக்கரை அம்மன், எங்களுக்கும் கொஞ்சம் வேண்டிய அம்மந்தான்

நன்றி ராஜா.

மாதேவி said...

"காடு " முழுவதும் படித்துவிட்டேன்.

மிகவும் அருமையான மொழிநடை மீண்டும் வாசிக்கத் தூண்டுகிறது.