Saturday, February 20, 2010

காடு - 10

சோறு, சாம்பார், ரசம் என்றில்லாமல் காய்கறி குழம்பு கலந்த கூட்டாஞ்சோறும் காண துவையலும் ரெடியானது.


ஈயப்பாத்திரைத்தை விட மண்பானையில் செய்யப்படும் சோறுக்கு ருசி ஜாஸ்தி. பயணத்தின் பொருட்டு மண் பானையை கொண்டு வருவது சாத்யமில்லாததால், ஈயப்பாத்திரம் சோறாக்கப் பயன்படுத்தப்பட்டது.

கூட்டாஞ்சோறின் வாசம் மூக்கைத் துளைத்தது. உ.மகாளி இன்னொரு ஈயப்பாத்திரத்தில் ஆற்றிலிருந்து குடிக்க தண்ணீரும், சாப்பிடுவதற்கு தேக்கு இலைகளையும் பறித்து வந்தான்.

நொடிஞ்சான், அடுப்பிலிருந்து பானையை இறக்கும் முன், மூடியை அகற்றிப் பார்த்துவிட்டு, 'அரிசிக்கு யாருல தண்ணி ஊத்துனா?" என்று கேட்டான்.

'நாந்தான்' என்றான் உ.மகாளி.

'கூறுகெட்டவன... இவ்வளவு தண்ணியால ஊத்துவாவோ'

'நெறய ஊத்திட்டனோ... அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'

பசி, வாயின் வழியாக ஏப்பத்தைக்கொண்டு வந்திருந்தது. ஆனால், இன்னும் கொஞ்சம் அடுப்பில் கிடந்தால்தான் தண்ணீர் உறியப்பட்டு சோறு நன்றாக இருக்கும் என்பதால், மீண்டும் ஆளுக்கொரு பீடியை எடுத்து பற்ற வைத்தார்கள்.

உ.மகாளி சாப்பிட கொண்டு வந்திருந்த இலைகளை கழுவிகொண்டு வைத்தான். பாறையில் அரைக்கப்பட்ட காணத்துவையலை அள்ளி, ஒரு தேக்கிலையில் வைத்தான்.

குப்பென்று மணம். நொடிஞ்சான், அப்படியே துவையலில் ஒரு குத்து அள்ளி வாயில் போட்டான். கேசரிக்கும், கந்தையாவுக்கும் எடுக்கலாம் போலிருந்தது. இப்போதே துவையலை சாப்பிட்டுவிட்டால் சோறு இறங்காது என்பதால் மனதை நிறுத்தி வைத்தனர்.

பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.

நொடிஞ்சானும் கேசரியும் சாப்பாட்டுப் பிரியர்கள். பிரியர்கள் என்பதற்கு ருசி தேடிச் சாப்பிடுபவர்கள் என்பதான அர்த்தமல்ல. இருவரும் சொள்ள மாடன் சாமிக்கு வைக்கும் படப்பு சோறு போல, ரவுண்ட் கட்டி சாப்பிடுபவர்கள்.

அதுவும் கெடைச்சோறு என்றால் இவர்களுக்கு கொள்ளை பிரியம். இதற்காகவே ஊரில் எந்த வயக்காடாக இருந்தாலும் யாராவது பக்கத்தூர்க்காரர்கள் கெடை போட்டிருந்தால் சாப்பிட கிளம்பிவிடுவார்கள்.

நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன.

போனமுறை கல்லிடைக்குறிச்சானும் அவனது தம்பியும் இங்கு கெடைப்போட்டிருந்தார்கள். 25 வெள்ளாடுகள். இரவு 7 மணி வாக்கில் தோப்பு மணலில் அடுப்பு மூட்டி சோறாக்குவார்கள். தண்ணீரோடு சேர்த்து ஆக்கும் சோறு. கூடவே அனைத்து காய்கறிகளையும் போட்டு கூட்டு மாதிரி தொட்டுக்குள்ள. இல்லையென்றால் ஈராய்ங்க துவையல்.

அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்.

அடுப்பிலிருந்து சோறை இறக்கி கொஞ்சம் ஆற வைப்பார்கள். கல்லிடைக்குறிச்சானுக்கு சுட சுட தின்றுதான் பழக்கம். ஆனால், பனையோலையை மடக்கி கூம்பு மாதிரி செய்யப்பட்ட தட்டு, சூடு தாங்காது என்பதால் காத்திருப்பான்.

வெறும் சோறும் தண்ணி, துவையல்தான். ஆனால், கெடைக்காரர்கள் பொங்கும்போதுமட்டும் அவ்வளவு ருசு. ஏனென்பது தெரியவில்லை. இருட்டு வயக்காடும் காற்றும், பனையோலை வாசமும் நாக்கை இழுக்க வைக்குமோ என்னமோ?

அதே போல ஆவலில் இருந்தார்கள் இப்போது இவர்கள்.

இதற்கு மேல் பசி தாங்காது என்று சோறு பரிமாறப்பட்டது. உ.மகாளிக்கு சோற்றில் போடப்பட்டு வெந்த மாங்காய் துண்டுகள் மீது தனி ப்ரியம். அவனுக்கு மட்டும் ஒவ்வொன்றாய் பொறுக்கி இலையில் வைத்தான்.

'ஏல நாங்கலாம் மனுசம் இல்லையால... நீயே பொடையில போடுத'

'இரிண்ணே... எல்லாத்துக்குந்தான் சேர்த்து எடுக்கேன்'

தூரத்தில் நரி ஊளையிடும் சத்தம் கேட்டது. மாடு கெடையில் கிடந்த இடத்தில் இருந்து ரெண்டு மாடுகள் முட்டிக்கொள்வது போலவும் சத்தம்.

'ஏல அங்கென்னன்னு பாரு'

'நீயும் வாயேன்'

சாப்பாட்டை முடிக்காமல், பாதி சாப்பிட்டவாறே சென்றார்கள். கப்பை கொம்பு பசுவும், நீட்டிக்கொம்பு எருமையும் முட்டிக்கொண்டு நின்றன.

'இதென்னல கூத்தா இருக்கு...'

உச்சி மகாளி அருகில் சென்றதும் பசு, திரும்பி அவனைப் பார்த்தது. முதுகில் ஒரு குத்து விட்டான். எருமை, துள்ளிக்கொண்டு அருகில் ஓடியது.

'இது யாரு எருமை... பத்தையூரா(ள்) மாடுதான'

'ஆமா'

'ராத்திரியானா அவளை மாதிரிதான் துள்ளிட்டு அலையுது பாரேன்'

எல்லாரும் சிரித்தார்கள்.

'ஏம், நீ, அவா வீட்டுக்கு போலயோல'

'ச்சீ... அவ, வா வான்னு தாங்குனாலும் நா போமாட்டேன்'

'ஏண்டே'

'ஒண்ணா, ரெண்டா... ஒரு ஊரே நின்னு மேய்ஞ்சிருக்கு... அதை போயி'

'த்தூ... மூஞ்சியில வக்கு'

பத்தையூரா கட்டுப்பட்டியான ஊரில் வித்தியாசமானவள். அவள் திருமணம் முடிந்து வந்த 7 மாதத்தில், அவள் கணவனாகப்பட்ட கருப்ப நம்பி, வாழைத்தோப்பில் மருந்தடித்து தற்கொலை செய்துகொண்டான். அவர்ன் இறந்ததற்கான காரணங்கள் பலவாறு ஊரில் சொல்லப்பட்டன. அதில் ஒன்று:

'அவா, ஏழு மாசமா இருக்காளாம். இந்த பய்லுக்கு அதுக்கான வழி கிடையாதமே... பின்ன எப்படி வயித்துல உண்டான்னான்னு மனசொடிஞ்சு போயி, இப்படி பண்ணிட்டானாம்".

உண்மை வெளியில் வரும் வரை உலகம் போடும் கதைகள் ஆயிரம்.

பிறகு, சில காலம் தனது அப்பா ஊரில் வசித்தாள் பத்தையூரா... அவளது பெயர் செங்கமலம் என்பது யாருக்கும் தெரியாதது.

மகன் பிறந்ததும் கணவன் ஊர்க்கு வந்துவிட்டாள். கருப்பநம்பிக்கு சொத்துகள் அதிகம்.

முதலில் அரசல் புரசலாக அவள் பற்றி வரும் செய்திகளை அதிகம் நம்ப முடியாமல் இருந்தது. ஆற்றில் குளிக்கச் சென்ற இவளும், மாடுமேய்த்துக்கொண்டிருந்த கொடுக்கு ராசுவும் ஆற்றில் உள்ள பாழ் மண்டபத்தில் இருந்து அலங்கோலமாக வருவதை சுப்பு மைனி பார்த்ததில் இருந்து அவள் பற்றிய பேச்சு ஊர்ஜிதப்படுத்தப்பட்டது.

ஊரில் ஒரு மாதிரி பேசுவார்களே என்கிற கவலையெல்லாம் அவளுக்கு இல்லை. உடல் தேவை, உள்ளத்தை மீறுவது இயல்பு.

பிறகு, அவள் ஊரில் பல பேருடன் தொடர்பு கொள்ள ஆரம்பித்திருந்தாள். இவ்வளவுக்கும் அவள் உ.மகாளிக்கு சித்தி முறை. நொடிஞ்சான், கந்தையா, கேசர் போன்றோருக்கும் ஏதோ ஒரு வகையில் உறவு. முதலில் சொந்தக் கார பயல்களுடன் 'வாழ்ந்து' கொண்டிருந்த அவள், தெரு தாண்டி தன் எல்லையை விரித்தபோது, ஊர் பஞ்சாயத்து வரைக்கும் விஷயம் வந்துவிட்டது.

பஞ்சாயத்து தலைவர், மற்றும் செயலாளரின் மனைவிகள், அவளிடம் பேசினார்கள்.

'இதெல்லாம் நல்லதுக்கில்ல... கேவலமாலா இருக்கு'

'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'

இன்னும் பேசினால் பெரும் பிரச்னையாக வாய்ப்பிருப்ப்பதாலும், அது சொந்தங்களுக்குள் சிக்கலை உருவாக்கும் என்பதாலும் அந்த ப்ஞ்சாயத்து அதோடு நிறுத்தப்பட்டது.

பின்னர் அவள், கல்லூரிக்கு செல்லும் மாணவர்களின் தேவையாக இருந்தாள்.

13 comments:

துபாய் ராஜா said...

ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும்... நாக்கு ஊற வச்சுப்புட்டியள...

தேக்கு இலை, பனை ஓலைப்பட்டை மாதிரி பாறைச்சோறும் அம்புட்டு ருசியா இருக்குமே அண்ணாச்சி...

பாறையை தண்ணியால கழுவிட்டு சூடா சோறை அள்ளி போட்டா சூட்டை எல்லாம் பாறை எடுத்துகிட்டு ருசியை மட்டும் வாய்க்கும், வயித்துக்கும் தரும்ல்லா...

துபாய் ராஜா said...

//நொடிஞ்சானின் சித்தப்பா வயல், ஆற்றோரமாக இருக்கிறது. அருகிலேயே ஏழெட்டு தென்னை மரங்கள், நான்கு மா மரங்களை கொண்ட சின்ன தோப்பும். அதில் இரண்டும் தென்னைகள் ஆற்றுத்தண்ணீர் அரித்து அரித்து கருப்பு வேர்கள் வெளியில் தெரியுமாறு எப்போது விழுவேனோ என்கிற நிலமையில் இருந்தன..//

//அரிக்கேன் விளக்கு வெளிச்சத்தில் சமையல் நடக்கும். காத்து தீயை அங்குமிங்கும் அலைகழித்து செல்வதை தடுக்க, அடுப்பை சுற்றி மூன்றுபுரமும் பனை தட்டிகளை மறைப்புக்காக வைத்திருப்பார்கள்./

வர்ணிப்புலே காட்சியை கண்ணு முன்னாடி கொண்டு வந்துட்டியளே அண்ணாச்சி... :))

துபாய் ராஜா said...

//'எது கேவலம், எது கேவலமில்லைன்னு எனக்கு தெரியும். உங்க வீடுவோள்ல வந்து நான் நிக்கலை. என் பேச்சை யாரும் பேசாண்டாம்'//

ஊருக்கு ஒருத்தி இப்படி இருப்பா போலிருக்கே.... :((

துபாய் ராஜா said...

//பொதுவாகவே, வயக்காடுகள், தோப்புகள், காடு போன்ற இடங்களில் சாப்பிடும் போது, வழக்கத்தைவிட அதிகமான சாப்பாடு இறங்கும் என்பதால் அதிகப்படியாகச் சோறாக்கப்பட்டிருந்தது.//

உண்மைதான் அண்ணாச்சி. ஊருக்கு போகும் போதெல்லாம் ஆத்துக்கு சாப்பாடு எடுத்துட்டுபோய் சாப்பிட்டா எவ்வளவு எடுத்துட்டு போனாலும் கொண்டா, கொண்டான்னு அடிபுடியா காலியா போயிடும்ல்லா... :))

Anonymous said...

சூப்பர் அண்ணே..,மறந்து போன காடுகளின் சுற்றல் ஞாபகங்கள் கண் முன்னே விரிகிறது.தொடருங்க..,

ராகவன் said...

ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உங்கள் எழுத்து நடையும், கதை சொல்லும் த்வனியும் கொண்டாட வேண்டியது. இந்த பயணம் எனக்கு சுகமாய் இருக்கிறது... தொடர்கிறேன்.

அன்புடன்
ராகவன்

ஆடுமாடு said...

//ஆஹா.. கெடைச்சோறும், கல்லுல அரைச்ச கானத் துவையலும்... நாக்கு ஊற வச்சுப்புட்டியள//

ஆமாமா, ராஜா சார், நினைச்சாலே ஊறுது.

//ஊருக்கு ஒருத்தி இப்படி இருப்பா போலிருக்கே.... :((//

பின்ன, அது இல்லாம எப்படி?

//உண்மைதான் அண்ணாச்சி. ஊருக்கு போகும் போதெல்லாம் ஆத்துக்கு சாப்பாடு எடுத்துட்டுபோய் சாப்பிட்டா எவ்வளவு எடுத்துட்டு போனாலும் கொண்டா, கொண்டான்னு அடிபுடியா காலியா போயிடும்ல்லா... :))//

ஐயோ, கொண்டா கொண்டான்னு இழுக்கும்.

நன்றி அண்ணாச்சி.

ஆடுமாடு said...

ஒரு வார்த்தை நன்றி.

ஆடுமாடு said...

//ரொம்ப விரும்பி படிக்கிறேன். இந்த காடு தொடரை... உங்கள் எழுத்து நடையும், கதை சொல்லும் த்வனியும் கொண்டாட வேண்டியது. இந்த பயணம் எனக்கு சுகமாய் இருக்கிறது//

ராகவன் மகிழ்ச்சியாக இருக்கிறது. நன்றி.

ESMN said...

//அப்ப செத்த நேரம் அடுப்புல கெடக்கட்டும்'//

செத்த நேரம் காந்தல்ல கெடக்கட்டும்

சரியா அண்ணாச்சி....
நம்மூர் சைடு தான் இந்த கூட்டாஞ்சோறு இருக்குது நினைக்கிறேன்.

ந்மபி கோயில்,சொரி முத்து அய்யனார் கோயில்லுக்கு போற கூட்டம் பாதி சோத்த்க்கு தானே போகுது..

ஆடுமாடு said...

//செத்த நேரம் காந்தல்ல கெடக்கட்டும்//

சரிதாம்ணே.

//ந்மபி கோயில்,சொரி முத்து அய்யனார் கோயில்லுக்கு போற கூட்டம் பாதி சோத்த்க்கு தானே போகுது...//

ஹி ஹி ஹி.

செல்வநாயகி said...

விரும்பி படிக்கிறேன் காடு தொடரை.

ஆடுமாடு said...

நன்றி செல்வநாயகி.