கிடைப்பதறிந்தே தேவைகள் அதிகரிக்கிறது. பத்தையூராளை விரும்புகிற யாரையும், அவள் கவனத்தில் கொள்வதில்லை. யார் தேவை என்பதை அவளே முடிவுசெய்பவளாக இருந்தாள். இப்படியொரு பெரும் மனம் அவளிடமிருந்ததை, முக்கு கடைகளில் பேசிக்கொண்டிருப்பார்கள். அவள் செயல்பாடுகள் எப்படியிருந்தாலும் அவளைத் தொடரும் நடவடிகைக்களை, மீசையை திருக்கும் கீழ, மேல தெரு ஆண்கள் விடவில்லை. என்றாவது ஒரு நாள் இரங்கிவர மாட்டாளா என்பதாக அது தொடர்ந்தது.
வாய்க்காலில் துணி துவைக்கும்போதோ, ஒரு கிலோமீட்டர் நடந்து அவள் தனியாக ஆற்றுக்கு செல்லும்போதோ, அவளிடம் பேச வேண்டும் என்றே ஒரு கூட்டம் அலைந்தது.
'என்னா ஆத்துக்கா'
'பின்ன எப்படி தெரியுது'
'இல்ல கேட்டேன்'
அவ்வளவுதான், அதோடு பேச்சை முடித்துவிடுவாள். யாரிடம் தொடர வேண்டும் என்பதும் அவளுக்கு தெரியும். கார்சாண்டில் கடைவைத்திருக்கும் ஊழைக்காதன், அவளை கெஞ்சி, கால் கையில் விழுந்து அனுபவித்ததாகச் சொல்லியிருக்கிறான். ஊரில் அவன் இதை தம்பட்டம் அடித்ததில் இருந்து, இன்னும் பலருக்கு ஏக்கம் ஏக்கமாகவே இருந்தது.
இப்போது அவள் தன்னை மாற்றியிருக்கிறாள். மகன் வளர்ந்துவிட்டான். நான்கைந்து பசுக்கள், ஏழெட்டு செம்மறியோடு அவள் வாழ்க்கைச் சென்றுகொண்டிருக்கிறது.
கூட்டாஞ்சோறும் காண துவையலும் வயிற்றை அடைத்தாலும், இன்னும் வேண்டுமாய் இருந்தது ருசி. இங்கேயே இரவை கழித்துவிட்டு செல்ல முடிவு செய்தார்கள். இருட்டு மெல்ல சூழத் தொடங்கியது. உ.மகாளியும் கேசரியும் தீப்பந்தங்களை நான்கு பக்கம் சொருகி வைத்துவிட்டு, மணலில் படுத்தார்கள். மூன்று பேர் முதலில் கொஞ்ச நேரம் தூங்க வேண்டும் என்பதும் பிறகு அவர்கள் முழித்துக்கொள்ள, இவர்கள் தூங்க வேண்டும் என்றும் முடிவானது.
உ.மகாளியும் கந்தையாவும் முழித்துக்கொண்டிருந்தார்கள். காட்டின் இருட்டு பயத்துக்குப் பதிலாக, ரசிக்கச் சொன்னது அவர்களை. எங்கிருந்தோ வரும் புரியாத சத்தம் இதமாக இருந்தது. கூடவே, உய்ய்ய் என்ற வண்டுகளின் ஒலியும். அருவியில் தண்ணீர் குறைவுதான் என்றாலும் சர்ர்ர் சத்தம் வந்துகொண்டிருந்தது.
இவர்கள் இருக்கும் இடத்துக்கு மேல் பக்கம், ஓநாய்களின் இரைச்சல் கேட்டது. அல்லது ஏதோ ஒன்று ஏதோ ஒன்றை அடித்து முடித்திருக்கலாம். சிறிது நேரத்தில் சத்தம் மெது மெதுவாக அடங்கி முடிந்தது. ஓநாய் இறந்திருக்கலாம். அதை எந்த மிருகம் அடித்திருக்கும் என்கிற ஆவல் உ.மகாளிக்கு. சத்தம் வந்த திசை நோக்கிப் பார்த்தான். செடி, செத்தைகள் அசைவது கேட்டது.
'போய் பாக்குமா' என்றான்.
'பாக்குமாவா? செந்நாய் மாதிரி எதுவும் நின்னா, கொட்டைய கவ்விரும்ல, தெரிஞ்சுக்கோ'
'இன்னா, அறுவா எதுக்கிருக்கு கையில'
'ஆங்... கிழிச்சே... அது வந்து பாய்ஞ்ச பெறவு, அரிவாளை எங்க போய் எடுக்க'
'என்னண்ணே செந்நாய்க்கு இந்தாப் பயப்படு பயப்படுத'
'நீ பெரிய வீரன்தாண்டே... இந்த காட்டுக்கு ஒண்ணு ரெண்டு தடவ இல்லல, நாலு வருஷமா வந்திட்டிருக்கேன். எனக்கு தெரியாதோல... பொத்திட்டு இருப்பியா...'
'நீ ஒரு வெலங்காதவன், செரி, எவ்வளவு நேரந்தான் இப்படியே இருக்க. அவங்க தூங்குததை பாத்தா எனக்கும் தூக்கம் வந்துரும்'
'இந்தா தாயத்தை போடுவோம்'
மணலில் தாயக்கட்டத்தை வரைந்தான் கந்தையா. காய்களுக்குப் பதிலாக, வெவ்வேறு வண்ணங்களிலான கூழாங்கற்கள் பயன்படுத்தப்பட்டன.
வீட்டில் பீடி சுற்றும் பெண்கள், வளவில் பெரிய வீடான, வீரமணி வீட்டு திண்ணையில் இருந்துதான் சுற்றுவார்கள். கீழ், மேல், வட சுவர் ஓரங்களில் அவர்கள் உட்கார்ந்துகொள்வார்கள். தொடையில் பீடி தட்டு. இரவு ஒன்பது மணிவாக்கில் கரண்ட் அணைந்து எரியும். அதுவரைதான் பீடி சுற்றல். பிறகு தாயம் விளையாட ஆரம்பிப்பாகள்.
உ.மகாளி நேரம் போகாத நாட்களில் இவர்களோடு வந்து அரட்டையடிப்பான்.
'ஏல உச்சி, உனக்கு செக்க செவேல்னு ஒரு பொணு பாத்திரும்ல' என்பாள் சுந்தரி அத்தை.
'செவப்பு சேலை உடுத்துனவளையா?' என்று ஆரம்பிப்பாள் முத்தம்மா பாட்டி.
இவன் என்ன சொன்னாலும் ஏதாவது ஒரு கொக்கியை போட்டு வம்படிப்பார்கள். இந்த வம்படித்தலில்தான் இந்த விளையாட்டை கற்றான்.
இரண்டு மூன்று ஆட்டங்களுக்குப் பிறகு, வாய் பிளக்க கொட்டாவி வந்து இம்சித்தது. கந்தையா, பீடியை பற்ற வைத்துக்கொண்டான். இப்போது குளிர் அதிகமாகியிருந்தது. தீப்பந்தம் காற்றில் அலைந்துகொண்டிருந்தது. பின்பக்கம் வைத்திருந்த பந்தம் அணைந்துவிட்டது. மீண்டும் அதை பற்ற வைக்க சோம்பல்.
கண்ணை கசக்கி விட்டு, சாக்கில் இருந்த மாங்காயை எடுக்கப்போனான் உ.மகாளி. சாக்கின் மேல் கருநிற பாம்பு ஒன்று விஷுக்கென்று சீறி நின்றது.
தொடர்கிறேன்.
4 comments:
பின்னுறீங்க.. உச்சிமாகாளிய விட்டு பத்தையூரா மேல எங்க கவனம் போகுது...ஜாக்கிரதை:-))))
நன்றி தங்ஸ்.
//உச்சிமாகாளிய விட்டு பத்தையூரா மேல எங்க கவனம் போகுது...ஜாக்கிரதை:-))))//
இன்னா, கதை மாறுதுலா.
ஆடுமாடு..ரொம்ப நாளுக்கு அப்புறம் வந்திருக்கேன்.கொஞ்சக் காலம் விட்டதெல்லம் பிடிக்க நிறைய எழுதியிருக்கீங்க.தொடர் கதை முழுதாக வாசித்தேன்.நிறைய நேரம் பிடித்தது.சிறுகதைக்குரிய அழகான எழுத்து நடை.உங்கள் மொழிவழக்குத்தான் எனக்கு மிகவும் பிடித்தது.
நன்றி ஹேமா.
Post a Comment