Thursday, November 29, 2007
வில்லடிச்சான் 2: கேரக்டர் 5
காசி வாத்தியாரு அவன உம்முனு பார்த்தாரு. இவரு ஏம் இப்டி பாக்கருன்னுட்டு பேந்த பேந்த முழிச்சாம். அந்தானி, ‘நீலாம் வில்லடிச்சு கிழிச்சேன்'னுட்டு போயிட்டாரு. கூட வந்த மாடசாமி வாத்தியாரு, ‘உன்னலாம் கூட்டிட்டு வந்தம் பாரு...ஏல கண்ணகி யாருன்னு தெரியாதால'ன்னாரு.
‘தெரியல...சார்வாள்...யாருன்னு சொல்லுங்கோ; நா கதை ரெடி பண்ணிருதேன்னு சொன்னாம்.
‘நீ புடுங்குன'ன்னு சொல்லிட்டு அவரு தோப்ப பாக்க போயிட்டாரு.
கிட்னனுக்கு அவமானமா போயிட்டு. ஒரு காரியமும் நடக்க மாட்டேங்குதேன்னு ஒரு முடிவெடுத்தாம். அவங்க சொந்த கோயில்ல இந்த வருஷம் வில்லு பாடணும்னு.
அதும் லேசு பட்ட காரியமில்ல. மத்த கோயில்லயாவது சொள்ள மாடன், தங்கம்மன், கருப்பசாமி கதையல் பாடிட்டு போயிரலாம். மந்திரமூர்த்தி கதைய அவ்ளவு சீக்கிரத்துல முடிக்க முடியாது. ரொம்ப பெரிசு. மூணு நாளாவும். இந்த பய மாசா மாசம் நடக்குத ஊரு கூட்டத்துல போயி விஷயத்தைச் சொன்னாம். எல்லாருக்கும் சிரிப்பாணி.
‘அதுயென்ன வெளயாட்டு காரியமால, கூறுகெட்டால பேசாதே'னு தலைவரு சொல்லிட்டாரு.
‘இது எனக்கு மான பிரச்னை. நம்ம கோயில்லயே எனக்கு பாட வாய்ப்புக் கொடுக்காட்டா, வேற எந்த பய, என்னய கூப்டுவாம். நான்தாம் பாடுவன். வெளி வில்லுக்காரனுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுக்க போறியோ. எனக்கு சல்லிக்காசு வேண்டாம். வெறும் 101 ரூவா போதும். இதுவும் காசு வாங்காம பாடக் கூடாதுன்னுதான்'னு சொன்னான்.
ஆளாளுக்கு எடக்கு பண்ணி பேசுனாவோ.
‘பயலுக்கு கோட்டிக்கீட்டு புடிச்சுட்டாவே'
‘இந்த கிறுக்குக்கு வில்லுபாடணும்னு எப்டில தோணுச்சு?'
‘இவம் நம்மல கேவலப்படுத்தணும்னு நெனச்சுட்டாம் போலுக்கு'
ஆளாளுக்கு பேசுனாவோ. எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த பய, ‘நா ஒண்ணும் சாதாரண ஆளு கெடயாது; எல்லா பொலவருட்டயும் போயி பாடிட்டு வந்திருக்கேன்'ன்னான்.
ரூவா வேற வேண்டாம்னு சொன்னானா, காசு வெஷயம் வந்ததும் சத்தம் அடங்கி போச்சு. ரெண்டாயிரம் ரூவாயை இழக்காண்டாமேன்னுதான்.
‘ஏல கிட்னா மூணு நாளு, மந்திரமூர்த்தி, பலவேசக்காரன், பட்றையன், சொல்லமாடன் கதையெல்லாம் பாட வேண்டியிருக்கு. நீ ஒழுங்கா படிப்பியால? கொடைக்கு நாலு ஊர்லயிருந்து கூட்டம் வரும். எல்லாரு வீட்டுக்கும் சொக்காரன், சொந்தக்காரன்னு வருவானுவோ. மூஞ்சிய சுழிச்சுட்டானுவன்னா மானம் போயிரும்'ன்னாரு தலைவரு.
‘அதை நாம் பாத்துக்கிடுதேன். அந்தளவு மண்ணாவா இருக்கேன். நான்தான் இந்த வருஷம் பாடுவேன்'ன்னான். உடனே நொண்டி போலீசு, ‘நீ பொலவன்னு சொல்லுதே... நம்ம சாமி கதையாவது ஒழுங்கா படிப்பியால? கோயில்ல, முக்கியமான சாமி பூடம்லாம் இருக்கு. இதுல எந்த கதைய தப்பில்லாம படிப்பேன்னு சொல்லு. இல்லைனா நாளைக்கு இங்கயே படிச்சு காட்டு''ன்னாம். அவனுக்கும் கிட்னனுக்கும் ஆவாது. கீரியும் பாம்புமா இருப்பானுவோ. இதுதாம் நேரம்னு கொத்திட்டாம். இவன் சொன்னதுக்கு கொஞ்ச பேரு, ‘அதுவும் சர்தாம்'னாவோ.
கிட்னன் இதுதான் சரின்னுட்டு ‘சரி'ன்னுட்டாம். வார வெள்ளிக்கிழமை கோயில்ல வில்லு. ‘மந்திரமூர்த்தி கதைய படிக்கேன்'னு சொல்லிட்டாம்.
மறுநாள்லயிருந்து ஆரம்பிச்சாம் பாட்டை. ஏற்கனவே பப்பு பொலவருட்ட மந்தரமூர்த்தி கதைய எழுதி வாங்கியிருந்தாம். வீட்டுல உக்காந்து எவ்வளவு கொடுமையா பாடணுமோ அவ்வளவு கண்றாவியா பாடித்தொலசாம். அவன் பொண்டாட்டி, புருஷன் திடீர் பொலவனா ஆனதுல வெக்கப்பட்டு சிரிச்சுக்கிட்டே அவனுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு வச்சா.
வெள்ளிக்கிழமை. மந்திரமூர்த்தி கோயிலு முன்னால தெருவே கூடியிருக்கு. மைனரு மாதிரி மினுக்கிட்டு வந்துட்டாம். வில்லுலாம் ரெடியாயிட்டு. பக்கத்தூருல அருணாசல பொலவருக்கு கொடம் அடிக்க போறவன, கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு வந்துட்டாம். சிங்கி, உடுக்கைனு ஆறு பேரு வந்தாச்சு. பள்ளிக்கூடத்துல இருந்து நாலைஞ்சு பெஞ்சை தூக்கிட்டு வந்து மேடை போட்டாச்சு. மேடைக்கு எதுத்தாப்ல வரிசையா எல்லாரும் உக்காந்திருந்தாவோ. கிட்னன் ஆரம்பிச்சாம்.
மொதல்ல கணபதி புகழ்ல ஆரம்பிச்சு, மந்திரமூர்த்தி கதைக்கு கொஞ்ச கொஞ்சமா வந்தான். அந்தாப்ல ஆரம்பிச்சது பிரச்னை.
கோயில்ல பெரியசாமிக்கு ஆடுதவரு பாதியில எந்திருச்சு, நிப்பாட்டுன்னாரு.
‘என்ன?'ன்னான்.
அவரு கோபமா, ‘‘ஏல நீ என்ன பாடுத... கேரளாவுக்கு போன மந்திரமூர்த்தி, அக்கா தங்கச்சி ரெண்டு பேர் அழகுலயும் மயங்கி, பொய் சொல்லி கல்யாணம் முடிக்காரு... சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு இருக்கும்போது, சொந்த ஊர்ல ஜவுளி யாவரத்துக்கு வாரவன்தான் உண்மைய சொல்லுதான். அழகுல மயங்குன வர்ணனை இல்லை. பொய் சொல்றதுல வர்ணனை இல்லை. நீ என்ன மண்ணாங்கட்டிய படிக்க. முன்ன சொல்லுதத பின்னால சொல்லுத. பின்னால சொல்லுதத முன்னால சொல்லுத"ன்னு சத்தமா சொன்னாரு.
எல்லாரும் கெக்கபிக்கேன்னு சிரிச்சாவோ. அவன்,‘‘மொத மொத பாடுதேன். கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும். பொறுத்துக்கங்க'ன்னு சொன்னான். எல்லா பயலுவோலும் எடக்கு பண்ணுதானுவோ. கிட்னன் பொண்டாட்டி பிச்சம்மா பிள்ள, கூட உக்காந்துகிட்டு சிரிச்சுட்டு இருக்கா. சுப்பையா தாத்தா, மந்திர தாத்தா, சொக்கத்தாத்தா எல்லாரும் துண்டை ஒதறி தோள்ல போட்டுட்டு டீக்கடைக்குப் பொறப்டுட்டாவோ.
மூதிக்கு ராகம் சரியா வரல. ஏய், வோய்ன்னு இழுத்தாம்னா ரோட்ல போறாவன கூப்டுத மாதிரி இருக்கு. திரும்ப ஆரம்பிச்சான். கொடம் அடிக்குதவனுக்கு, ஏண்டா வந்தம்னு ஆயிட்டு. பின்னால இருந்து சிங்கி அடிக்குத கூனையன், கருப்பட்டிய பூரா காலி பண்ணிட்டு, கூட்டத்தோட சிரிச்சுட்டு இருக்காம்.
இவன் தேற மாட்டாம்னு முடிவுக்கு வந்துட்டாவோ. கதையில, மந்திரமூர்த்தி ஊருக்குத் திரும்பி, பெறவு நடக்குத கதை வரை சொல்ல ஒன்றரை நாளு ஆவும். இந்தப் பயலுக்கு கொஞ்சம் பயம் வந்துட்டு போலுக்கு.
‘இது சும்மா நான் பாடுவேன்னு காண்பிக்கதுக்குதான். கோயில்ல பாட வச்சா நல்ல பாடுவேன்'ன்னு சொல்லி வில்லை முடிச்சாம்.
கொடம் அடிச்சவன் அங்ஙனயே ரூவாய வாங்கிட்டு, ‘இனும என்னயலாம் கூப்டாதீரும்'னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிட்டு போயிட்டாம்.
வில்லு முடிஞ்ச அதே தோரணயோட செவுட்டு சந்திரன் கடைக்கு டீக்குடிக்கதுக்கு வந்துட்டாவோ எல்லாரும். கிட்னனும் வந்தாம்.
‘‘மந்திர மூர்த்தி கல்யாண காட்சிய நல்லா இழுத்து பாடுனம்லா... எப்டிய்யா இருந்தது''னு கொடுக்குகிட்ட கிட்னன் கேட்டாம் பாருங்கோ. அவருக்கு சுர்னு ஆயிபோச்சு.
‘இங்க பாரு...பாடுன சரி, எப்டியிருக்கு அது இதுனெல்லாம் கேக்காத. நல்லாயிருந்தா நாங்க சொல்லுவோம். உனக்கு வில்லு படிக்கணும்னு ஆசை இருந்தா, சுப்பு வில்லு கூட, அஞ்சாறு வருஷம் சிங்கி அடிக்க போ. பெறவுதான் கொஞ்சமாவது ராகம் வரும் பாத்துக்கோ''ன்னான்.
இவனுக்கு கோவம். கடையில எல்லாரும் உக்காந்திருக்கானுவோ. வெளிகாட்ட முடியல. நேரா வீட்டுக்கு போனாம். பொண்டாட்டிட்ட போயி, ‘எப்டியிருந்துச்சு?'ன்னாம்.
‘‘நல்லாருந்துது. எங்களுக்குத்தான் கேக்க முடியல''ன்னு நமட்டு சிரிப்பு சிரிச்சா அவ.
‘நல்ல பொலவனா ஆயி காட்டுதேம் பாரு'ன்னு அவாகிட்ட சபதம் போட்டாம்.
நாலஞ்சு வருஷமாச்சு. ஒருத்தரும் வில்லடிக்க கூப்டல. இப்பம் சுப்பையா பொலவருட்ட பக்கப்பாட்டு படிக்க போயிட்டிருக்காம். ஆனா சவாலை மட்டும் விடலை.
அவ்ளோதான்.
Tuesday, November 27, 2007
வில்லடிச்சான் 1: கேரக்டர் 5
மனசுக்குள்ளேயே படிச்சுப் பாத்துக்கிடுவாம். ஆனா, தங்கணுமில்ல. வீட்டுக்கு வந்ததுமே மறந்துரும். அம்மனுக்கு பாடுனதை பட்றையனுக்குள்ளதா நெனச்சுக்கிடுவாம். இந்த தொல்லை, நாளைக்கு வில்லங்கத்துலலா விட்டுரும்னு நினைச்சாம். அந்தாப்ல, தங்கிடு பயதாம் ஐடியா கொடுத்தாம். அண்ணே கேசட்டுல பதிவு பண்ணிரலாம்ணேனு. அது என்னல கேசட்டு?ன்னான்.
அப்பலாம் அது ரொம்ப பேருக்கு தெரியாது. ரேடியோ பொட்டித்தாம் ஊருபூராம். கோவங்கொளத்துக்காரன் ஒருத்தம் பம்பாய்க்கு போய்ட்டு வந்திருந்தாம். அவன் வீட்டுலதாம் டேப் ரெக்கார்டரு இருந்துச்சு. ரெண்டு ஸ்பீக்கரை வாசல்ல வச்சு ஊருக்கே கேக்குத மாதிரி பாட்டு போட்டுட்டு இருப்பாம். அங்க இருக்கத இருவது வீடுதாம். அது ஒரு ஊரு.தங்கிடு பய அவங்கிட்ட கூட்டுட்டு போனாம் கிட்னனை. டேப் ரெக்கார்டரை மேலும் கீழும் பாத்தான்.
‘இதுக்கு எம்புட்டு ஆவும்டே’ன்னான்.‘எல்லா ரேட்டுக்கும் இருக்குண்ணே’
‘கொறஞ்ச வெலக்கு’
‘ஆயிரம் ரூவா’
‘அவ்ளவு ஆவுமோ’
‘அதே கொறச்சலு’
‘அப்டியா...ஒரு மாசம் போவட்டும். சொல்லுதேன், வாங்கித்தாடே’ன்னுட்டு, பி.பி.ஸ்ரீனிவாஸ் பாட்டுவோ அஞ்சாறை கேட்டுட்டு வந்துட்டாம்.
வந்துட்டானே ஒழிய அதை எப்படி வாங்குததன்னுட்டு கொழம்பிட்டு இருந்தாம். பொண்டாட்டிக்காரிட்ட கேட்டா, ‘ஆமா, இதுமட்டுந்தான் கொற’ம்பா. இப்படி யோசனையோட அக்கம் பக்கத்தூர்கள்ல வில்லு நடந்ததுன்னா போயிருவாம்.அதே வேகத்துல வீட்டுக்கு வருவாம்.
ஒரு கிலோ கருப்பட்டியையும் வாங்கிட்டு வந்துருவாம். கருப்பட்டி எதுக்குன்னா மூணு, மூன்றரை மணி நேரம் வில்லு பாடும் போது, நாக்கு வரண்டு போவும். அதுக்கு இதைக் கொஞ்சம் கொஞ்சம் பிச்சு வாயில போட்டுக்கிடுவாவோ. மைக் இருந்தா நாக்கு வரளும். இங்க வீட்ல இருந்து பாடுததுக்கு கருப்பட்டி எதுக்கு? ஆனாலும் வாங்கிட்டு வந்துருவாம் இந்த பய. பழகணுமாம்.
எதுத்த வீட்டு அடுக்கூட்டா மவனை கூட கூட்டிட்டு, இவன் பாட, அவன் பக்கப்பாட்டுப் பாடன்னு இருந்தான். பக்கப்பாட்டு எல்லாராலயும் பாடிர முடியாது. பொலவரு, ‘சட்ட நாதன் சங்கிலி பூ...’ன்னு அரையுங்கொறயுமா முடிச்சு இழுப்பாரு. உடனே பக்கப்பாட்டு பாடுதவன் ‘‘பூ....த...ம்.’னு இழுத்து முடிக்கணும். அடுக்கூட்டா மவன் கொஞ்சம் கூறுள்ள பய. பக்கப்பாட்ட நல்லாதான் பாடுனான். இவனுக்குதான் இழுவ சரியா வரல.
என்னதான் கர்ர்புர்ருனு படிச்சாலும் பாட்டுல கெத்து இருக்கணும்லா. கொரலு கம்பீரமா இருக்காண்டாமா? இருந்தாலும் விடாப்பிடியா இருந்தான் பய. பொலவருங்க மாதிரி கழுத்துல பெரிய சங்கிலிய வாங்கி போட்டாம். பத்து வெரலுக்கும் பத்து வெதமான மோதரம். ரெண்டு பட்டு வேட்டி. நாலஞ்சு ஜிப்பானு வாங்கி வச்சுக்கிட்டாம். மைனரு மாதிரி மினுக்கிட்டி வந்துட்டிருந்தான். இதுக்கு, மேலபத்து வயக்காடு காலியாச்சு.
இதோட அந்த டேப்பையும் வாங்கிட்டாம். அஞ்சாறு கேசட்டையும் வாங்கிட்டு வந்துட்டாம். சுத்துபட்டுல எந்த கோயிலா இருந்தாலும் போயி, ரெக்கார்டு பண்ணிட்டு வந்துட்டு இருந்தாம். ஏதோ யாவத்துல பெருமா கோயிலு திருவிழாவுக்குலாம் டேப்பை தூக்கிட்டு போயிட்டாம் பய. பெருமா கோயில்ல யாராவது வில்லு பாடுவாவோலா? அது ஐயருமாரு கோயிலு. இப்படி கொஞ்ச கூத்தா பண்ணியிருக்காம்?
திடீர்னு எந்த பய கொடுத்த ஐடியாவோ தெரியல. கார்சாண்ட்ல தொரயப்பா கடை பக்கத்துல, சின்ன போர்டு வச்சாம். ‘வில்லு பொலவரு, அண்ணாவி கிட்னன். இங்கே தொடர்பு கொள்ளவும்’னு அதுல எழுதியிருந்தது. ஏற்கனவே இடைகாலுல இப்படியரு பொலவரு போடு வச்சிருந்தாரு. அதுல, ‘ரேடியோ புகழ் அண்ணாவி மாடசாமி’ன்னு இருந்ததைப் பாத்து இருக்க முடியல இவனுக்கு. நாமளும் எப்படியாவது ரேடியோ புகழ்னு போட்டுரணும்னு துடியா துடிச்சாம். அது என்ன லேசுபட்ட காரியமாய்யா? இதுவரைக்கும் ஒரு கோயில்ல கூட வில்லு பாடல. அதுக்குள்ள இந்த அலப்பறை.
அங்க இங்கன்னு போயி ரேடியோல பாட என்ன செய்யணும்னு கேட்டுட்டு இருந்தாம். காசி வாத்யாருட்ட கேளுன்னு ஒருத்தன் சொன்னாம். அவரு சும்மா ஏதாவதுன்னாலே, பொசுக்குனு பொடதில அடிச்சுருவாரு. அவருட்ட போய் எப்படி கேக்க?ன்னு யோசிச்சுட்டு இருந்தாம். காசி வாத்தியாரு கூட வேல பாக்குத மாடசாமி வாத்தியார்ட்ட கெஞ்சி கூத்தாடி, அவரையும் கூட்டி போனாம். அவரு இவனோட ஆர்வத்தை பாத்துட்டு, ‘நல்ல பயடா நீ’ன்னாரு. பெறவு, ‘ஏய்... கண்ணகி கதைய வில்லு பாட்டுக்கு ஏத்த மாதிரி பண்ணிட்டு வா. நான் பாத்துக்கிடுதேன்’னாரு.
இந்த அர்தலி திரு திருன்னு முழிச்சாம். அந்தானி, ஒரு கேள்வி கேட்டாம் பாருங்கோ, வாத்தியாருக்கு கோவம் வந்துட்டு.
‘கண்ணகின்னா யாரு சார்வாள்?’
சொல்லுதேன்
Sunday, November 25, 2007
வில்லடிச்சான்: கேரக்டர் 5
போன மாசம் வெய்க்காலிப்பட்டி தங்கம்மன் கோயில் கொடைக்குப் போனான் சேக்காளி கூப்டாம்னுட்டு. போனா, கெடா வெட்டி தின்னுட்டு, கெரகாட்டம் பாத்துட்டு வர வேண்டியதுதானே. பயலுக்கு கெறக்கம் அங்கதான் ஆரம்பிச்சுது. வில்லடிப்பு நடந்துச்சுப் பாத்துக்கிடுங்க. தங்கராசு பொலவரு பாடிட்டு இருந்தாரு. பக்கத்துல பக்க பாட்டு பாடுனது பொம்பள. சுத்துவட்டாரத்துல அவா கொஞ்சம் பேமசுதான் பாத்துக்கிடுங்க. இவள பாக்க அவ்வளவு கூட்டம். பெறகு எவன் வில்லு கதை கேக்க வருவாம்?
அந்த பொம்பளைக்காவே அந்த வில்லை அமர்த்துனாவோ கொடைக்காரவோ. புள்ளையும் வாட்ட சாட்டமா இருந்தது. கருப்புதான்னாலும் நல்ல களை. மூக்குல போட்டுருந்த ஒத்தக்கல்லு மூக்குத்தி எல்லா பயலுவோலயும் கெறக்கத்துல வச்சுட்டு. பொலவரு லேசா பாடி முடிக்காம இருந்ததும், இவ பொம்பள கொரலுல இழுத்து முடிப்பா பாருங்கோ அது அவ்வளவு நல்லாயிருக்கும். மைக் செட் குழாய்ல கேட்டா கூட ஒரு இது வந்துரும் பாத்துக்கிடுங்கோ. வில்லுபாக்க வந்த கூட்டத்துல இளவட்ட பயலுவோளும் ஜாஸ்தி. எல்லாரும் வாய பொளந்து பாத்துட்டு இருக்காவோ. பொலவருக்கு, நம்ம வில்லை கேக்க இவ்ளவு கூட்டமான்னு சந்தோஷம் தாங்க முடியலை. அவருக்கெப்படி தெரியும் வெஷயம்?
இவனும் எல்லாரு மாதிரியும் போனோம் வந்தோம்னு இருந்தா பரவால்ல. இந்த பயலுக்கும் வில்லடிக்கணும்னு ஆசை. அது சாதாரண வெஷயமாய்யா? எவ்வளவு சாமி கதை தெரியணும். ராகத்தோடு பாடணும். அதை ஒழுங்கா சொல்ல தெரியணும்னு ஏகப்பட்ட இது இருக்கு. இவனுக்கு ஆசை வந்துட்டு பாத்துக்கிடுங்கோ. எல்லாத்துக்குந்தான் ஏகப்பட்ட ஆசிஅ இருக்கு. அதயெல்லாம் நிறைவேத்த முடியுமா?
ரெண்டு நாளா பொரண்டுட்டு கெடந்திருக்காம். பெறவு சந்திரன் சுக்காப்பி கடையில பேசிட்டு இருந்தான். பத்தாடி மவன், கொரங்கன், நண்டன், வசதின்னு எல்லா பயலுவோலும் பேசிட்டு இருந்தானுவோ. பேச்சுவாக்குல வில்லு படிக்க போறம்னு சொல்லியிருக்காம். எடக்குக்குத்தான் சொல்லுதாம்னுட்டு எல்லாரும் எளக்காரமா பேசியிருக்கானுவோ.
‘எல, நான் பொலவனா ஆயி காட்டுதேன் பாருங்க‘ன்னு சவால் விட்டுட்டான். ஆசை ஒருபக்கம் இருந்தாலும் சவாலுன்னு வந்து போச்சுலா. இறங்கிட்டாம் காரியத்துல. எல்லா பயலுவோலும் சிரிக்கானுவோ.
‘ஏல, இருக்குத வெதப்பாட்டை ஒழுங்கா கவனில; அதைவிட்டுட்டு ஏம் இந்த சவாலுலாம்‘னாவோ.
‘நான் சொன்னா சொன்னதுதாம்ல‘ன்னுட்டாம்.
மேலத்தெருல பிச்சை நம்பியாரு, இப்ப முடியாம கெடக்காரு பாத்துக்கிடுங்கோ. நல்ல வில்லு பொலவரு. எல்லாகோயில்லயும் அவரு பாடியிருக்காரு. பாடுனாருனா கொரல் கணீர்னு இருக்கும். பாட்டுல வார வர்ணனைய ராகமா இழுத்துப்பாடுனாருனா ஒரு பொம்பளைலுவோ எந்திரிச்சு போவ மாட்டாவோ. இப்படி பாடியே ரெண்டு ஊர்ல தொசுக்கு வச்சிருந்தாருன்னா பாத்துக்கிடுங்கோ. இவரு மவன இதுல கொண்டு வந்துரணும்னு எவ்வளவோ பிரயாசப்பட்டாரு. வில்லுக்கு போற எடத்துக்கொல்லாம் கூட்டுட்டு போவாரு. அவன் கூறுகெட்ட பய. சேராத பயலுவோட சேந்து உருப்படாம போனவன். அதெல்லாம் ஒரு பொழப்பான்னுட்டாம் அவருட்ட. அவரு சொல்லத்தாம் முடியும். இப்டி சொன்ன பயல வேற என்ன பண்ண முடியும்? பொலவரு நெறய வெத்தலபாக்கு போடுவாரு. அதாவது பரவாயில்ல. போயிலையதான் அதிகமா போட்டு திம்பாரு. அதனால ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு கையும் இழுத்துட்டு. வேலை செய்ய முடியாது. கேரளால போயெல்லாம் பாத்தாவோ. ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாம். இப்பம் வீட்ல மொடங்கி கெடக்காரு.
இந்த நேரத்துல போய், இவன் வில்லு படிக்கணும்னு சொன்னதும் அவருக்கு ஆச்சரியம் தாங்கல. நம்மளயும் மதிச்சு ஒரு பய வாரேன்னுட்டு, ‘பொதங்கிழமை வா‘ன்னு அனுப்பிட்டாரு. ஊருபூரா சொல்லிட்டாம். பொதங்கிழமையில இருந்து வில்லு படிக்க போறேன்னுட்டு. பாதி ஜனம் எக்காளமா பேசிட்டு இருந்தது. இவன் எதுக்கும் கவலை படலை.
அன்னைக்கு காலைல குளிச்சு முடிச்சு, நெத்தில பட்டய போட்டுட்டு போயிட்டாம். அவரு அரிச்சுவடில ஆரம்பிச்சாரு. இவனுக்கு என்ன ஏறுச்சோ. தெனமும் உக்காந்து பொஸ்தவத்தை கொடுத்து எழுத சொல்லுவாரு. இவனுக்குதான் சரியா எழுத படிக்க தெரியாத. என்னத்தை எழுதுனானோ. பெறவு அவரு ராகமா பாடுவாரு. கொஞ்ச நாளு அவரு வீட்டுக்கு போயிட்டு இருன் தாம். அவரு ஒரு வார்த்தை சொன்னாரு:
என்னதான் நான் சொல்லிக்கொடுத்தாலும் பாடுறத கேட்டாத்தான் சரியா மனசுல பதியும். அதனால கொஞ்ச நாளு பக்க பாட்டுக்கு யாரு கூடவாவது போறியா? நா வேணா சொல்லிவுடுதேன்னாரு.
அந்தானி இவனுக்கு கோவம் வந்துட்டு. நம்மள போயி பக்கப்பாட்டுக்கு போவ சொல்றாரேன்னு. அதுலயிருந்து அவரு வீட்டுக்கு போறத விட்டுட்டாம்.
பெறவு, கல்லிடக்குறிச்சு பப்பு பொலவரு, நல்லா வில்லு பாட்டுப் படிப்பாருன்னு கேள்விபட்டு, சுத்து பட்டுல எந்த கோயில்லயெல்லாம் அவரு பாடுதாரோ, அங்கெல்லாம் போவ ஆரம்பிச்சான். கதையில எந்த வரியில பாட்டா பாடுதாரு, எதுவோல இழுத்து சொல்லுதாரு, எதை வேகமா படுதாருன்னு கவனிச்சான்.
சொல்லுதேன்
Saturday, November 24, 2007
கூவெலக்காரன் 2; கேரக்டர் 4
அவன் ரூட்டு வேற. இங்கயெல்லாம் ஓவ்வொரு கடையிலயும் எலய போட்டு, நேத்தைய பாக்கிய வாங்கிட்டு வருவாம்.
ஊருக்கு வந்ததும் செட்டியாரு கட, செம்பட்டயாம் கட, செல்லப்பா கட, அப்பதத்தா கட, மேட்டுத்தெரு முழிச்சான் கடன்னு எலய பிரிச்சு போட்டுட்டு வருவாம். வரதுக்கு எப்படியும் மூணு, நாலு மணி ஆயிரும். வெயில்ல சைக்கிளு மிதிச்சதால உடலு பூரா நச நசன்னு இருக்கும். மூக்கன் கடக்கு வந்ததும் சைக்கிளை ஸ்டாண்டு போட்டுட்டு எறங்குவாம். அவன் கடயில புதுசா ஃபேன் வாங்கியிருந்தாம். சாப்புட யாரு வந்தாலும் அதை போட மாட்டாம். எவ்வளவு வெயிலுனாலும் அப்டித்தாம். ஏம்னா கரண்டு பில்லு நெறய ஆயிருமாம்.
இவன் வந்ததும் ஓரமா இருக்குத ஃபேனை தூக்கிட்டு வந்து கல்லாபெட்டிக்கு மேப்பக்கம் வச்சுக்கிட்டு சட்டைய அவுப்பாம். அந்தானி, காத்து சிலு சிலுன்னு வரும் பாருங்கோ, லேசாகண்ணை அசத்தும். ‘ஏல சீக்கிரம் டீய போடு'ம்பாம். காலயில போட்ட வடை காஞ்சுப்போயி கெடக்கும். அதுல ரெண்ட வாயில பிச்சு போட்டுட்டு சொவத்துல சாய்வாம்.
மூக்கன், ‘இந்த சைக்கிளு மிதிக்கே இப்டி சொரணவுதியல'ன்னு சொல்லிட்டு டீயை போட்டுக்கொடுப்பாம். ‘ஒனக்கென்னல உக்காந்துட்டு இருக்க; நான் அலையுத மாதிரி சைக்கிளை மிதிச்சிப்பாரு தெரியும்...'ம்பாம் கருப்ப நம்பி. டீயை குடிச்சுட்டு மிச்சம் மிண்டாடி எலல கொஞ்சத்தை எடுத்து அவங்கிட்ட கொடுப்பாம்.
‘பெறவு வாரம்ல'ன்னு சொல்லிட்டு வீட்டுக்கு போவாம்.
வந்ததும் பிள்ளைலுவோ, ‘அப்பா வந்துட்டு; அப்பா வந்துட்டு'ன்னு கத்தும். சின்னது வந்து அவன் காலை புடிச்சுக்கிட்டு சிரிக்கும். எல்லாத்துக்கும் ஆளுக்கொரு கொய்யா பழத்த கொடுப்பான். கொடுத்த அடுத்த நிமிஷமே இன்னொன்னு கைய ஏந்தும் பச்சபிள்ளைலுவோ. இருக்கத காலி பண்ணிட்டு வேற இருக்கான்னு அவன் கொண்டுவந்த பைய நோண்டும். அவன் அந்தாப்ல படுத்தா போதும்னு துண்ட விரிச்சு, பொட்டனத்தை எடுத்து தலைல போட்டுட்டு, வாசலுக்கு நேரா கால நீட்டிக்கிட்டு கட்டய சாத்துவான்.
அந்தானி, லேசா கண்ணயரும் போது, பிள்ளைலுவோக்குள்ள சண்ட வரும். எதாவது ஒண்ணு வீலுன்னு தொண்டய போடும். தூங்க முடியுமா? தூக்கம் போச்சு. பொசமுட்டிக்கிட்டு வரும். பொறுத்து பொறுத்து பாப்பாம். முடியாது. அவன் வீட்டுக்கார மவராசி, எனக்கென்ன வந்ததுன்னு அடுக்களயிலயே எதாவது பண்ணிட்டு உக்காந்துருவா.
‘‘ஏட்டி, இதுவோல என்னன்னு கேளேன்''ம்பான்.
‘‘என்னத்த கேக்க, அதுவும் உங்கள மாதிரி வந்துருக்குவோ''ம்பா அவா.
சுள்ளுனு கோவம் வரும்.
‘‘அந்தானி பொடதில போட்டம்னா அந்துரும். முட்டா செரிக்கி''
‘‘நானா செரிக்கி, உங்க தங்கச்சி செரிக்கி, அக்கா செரிக்கி, நா வந்து இங்க மாட்டுனதுக்கு வேற எந்த எடுபட்ட செரிக்கியாவது வந்து வாச்சிருக்கணும்...''
‘‘இப்ப என்னா கஞ்சிக்கு பிச்சயா எடுத்துட்டு இருக்கட்டி?''
‘‘அது மட்டுந்தா பாக்கி''
‘‘ஏம்...போயம்ட்டி சட்டிய தூக்கிட்டு...வெதம் வெதமா சோறு கெடக்கும்''
‘‘உங்க அக்கா தங்கச்சியள போவ சொல்லும். எங்கப்பன் ஒண்ணும் சும்மா அனுப்பல''
‘‘இந்த வாயி மட்டும் இல்லனா...ஒரு நாய் மதிக்காது''
‘‘உங்க அக்கா தங்கச்சிமாருவளுக்கு வாய் ரொம்ப கொறச்ச...''
அவ்வளவுதான். அங்க எங்க படுக்க?
‘உம் மூஞ்சுல முழிச்சாலும் குடிக்க தண்ணி கெடைக்காதுட்டி'ன்னு வெளில போவான்.
அவ பேச்ச வுடமாட்டா. வீட்டு வாசலுக்கு வந்து ஒப்பாரிய ஆரம்பிப்பா.
பக்கத்து வீட்டுக்கார மரியம்மா புள்ளக்கு ஒரு வெஷயம் மட்டும் புரியல. பகல்ல இப்டி கெடந்து அக்கப்போரு பண்ணுதாவோ. ராத்திரில மட்டும் அணக்கமே இருக்க மாட்டேங்குதன்னு. தெனம் இந்த கூத்துதான். அந்தானி, சந்தையா மடத்துக்கு போவான். வயசாலியெல்லாம் அங்ஙன கொட்டாவி விட்டு தூங்கிட்டு இருப்பாவோ. இவனும் அவங்க கூட கட்டய போடுவான். அதுக்குள்ள தூக்கம் வராம பொரண்டு வார வயசாலியோ யாராவது, ‘ஏம்ல வீட்டுல சண்டயால'ன்னு ஆரம்பிக்கும்.
‘யோவ் பொத்திக்கிட்டு படும்யா...ரொம்ப முக்கியம்'ம்பாம்.
அவரும் விட மாட்டாரு.
‘பின்ன எதுக்குல இங்க வந்து படுக்க...அங்ஙனயே படுத்துக்கிட வேண்டியதான...'
‘ஆமா... இவருட்ட எல்லாத்தையும் எழுதணும்...'ம்னுட்டு தூங்குவாம்.
முழிச்சாம்னா கருக்கலாயிருக்கும்.
எந்திரிச்சு அம்மன் கோயிலு வாய்க்கால்ல குளிப்பான். வீட்டுல வந்து சாரத்தை மாத்திட்டு நிக்கதுக்குள்ள பிள்ளைலுவோலாம் அப்பான்னு வந்து நிக்கும்.
‘கண்ணாடிக்காரிட்ட சேல வாங்கணும், துட்டு கேளுட்டி'ன்னு வீட்டுக்காரி அடுக்களயிலயிருந்து மவள ஏவுவா. காது கேக்காத மாதிரி நிப்பான்.
‘எனக்கும் பாவாட, சட்டை'ன்னு ஆரம்பிக்கும் பிள்ளைலுவோ. பொசமுட்டிட்டு வரும் கருப்ப நம்பிக்கு. செத்த நேரம் பதிலு பேசாம நிப்பாம். இருக்க முடியாது.
அடுத்த வாரம் சேலய எடுத்துக்கோன்னு ஆரம்பிப்பான். அந்தானி, சண்டைதான். வெறுத்து போயி அண்ட்ராயருல இருக்கத எடுத்து கொடுத்துட்டு, கருவேலபறைக்குப் போவான். மாடு மேச்சுட்டு வார பயலுவோலாம் அங்ஙன உக்காந்திருப்பானுவோ. வம்பளப்பு நடக்கும். கண்டத பேசிட்டு வீட்டுக்கு வருவாம். ஒரு நா விட்டு ஒரு நா தான் கூவெலக்கு போவ முடியும். நாளைக்கு ஒரு நா எப்டி கழிய போவுதோன்னு கவலையாயிருக்கும் பயலுக்கு.
மூக்கன் கடக்கு வருவாம். ஊருக்கதைய பேசுவானுவோ. ராத்திரி வாக்குல கௌம்புவாம். பொண்டாட்டி புள்ளைலு தொல்ல தாங்காம படுப்பான். விடியுத வரை ஒரு மண்ணும் தெரியாது.
அவ்வளவுதான்.
Friday, November 23, 2007
கூவெலக்காரன் - கேரக்டர் 4
டீக்கட வச்சிருந்தான். டீக்கடன்னுதான் பேரு. ஓட்டலு மாதிரி எல்லாம் இருக்கும். கட பூரா சமையப்பறையிலயிருந்து வந்த புகை அடிச்சு, கருப்பா இருக்கும். சொவத்துல கைய வச்சு இழுத்தா கையெல்லாம் கரியா போவும். யாராவது வெளியூர் ஆளுவோ வெள்ளைசட்டைய போட்டுட்டு வந்து கடையைல சாஞ்சு கருப்படிச்சு, புலம்பிட்டு போவானுவோ. மூக்கனும் என்ன செய்வாம்? பொங்கலுக்கு மட்டும்தான் வெள்ளையடிப்பு. என்னதான் அடி அடின்னு அடிச்சாலும் சனியன் கருப்பு போவாது. அடுத்த நாளே இன்னும் கருப்படிச்சுரும். அதனாலயே கடக்கு இன்னொரு பேரும் வச்சிருக்கானுவோ ஊர்ல. ‘கருப்புக்கட‘.
மூக்கன் சொன்னது காதுல விழாதது மாதிரி பீடிய சுண்ட இழுத்துட்டு வாசல்ல சாஞ்சுக்கிட்டு நின்னாம் கருப்ப நம்பி. தலையில சீசனு துண்டை கெட்டியிருந்தாம். எவனயோ சொல்லுதாம்னு பரக்க பாத்துட்டு நிக்காம்.
‘‘காது பழுத்துட்டால''
‘‘... ... ...''
‘‘ஏல உன்னய தான...'' ன்னாம் திரும்பவும்.
‘‘ஆங். என்னயதானா கூப்ட. சொல்லு.''
‘‘இந்த சவுடாலுக்கெல்லாம் கொறச்ச இல்ல... காலைல உன் மூத்த மவ வந்தா, டீ வாங்கிட்டு போனா அப்பா துட்டு தரும்னு. அடுத்தாப்ல ரெண்டாவது புள்ள வந்தது நாலு இட்லி வாங்குச்சு. செத்த நேரத்துல அடுத்த புள்ள வந்தது மூணு வடய வாங்கிட்டு போச்சு. இப்பம் நீ உம் மவன கூப்டுட்டு வந்திருக்க. இப்டி கடயில பொறக்கி தின்னா எப்டி... ஒண்ணும் வெளங்குத மாதிரி தெரியல''ன்னான்.
சிரிச்சாம் கருப்ப நம்பி.
‘‘சிரில... ஆங்கங்கெட்டவன''
‘‘இன்னும் ரெண்டு புள்ளலு வராம இருந்ததே...''
‘‘த்தூ''ன்னான் மூக்கன்.
ரெண்டு பேரும் சின்னப் புள்ளைல இருந்தே சேக்காளியோ. அதுனால கண்ட மேனிக்கு எடக்கு பண்ணிக்கிடுவானுவோ. கருப்ப நம்பிக்கு ஆறு பிள்ளைலுவோ. மொத அஞ்சும் பொம்பள புள்ளைலு. ஓவ்வொரு மொறயும் அடுத்தாப்ல ஆம்பள புள்ளைதாம்னு பெத்து தள்ளூனாம். அவன் பொண்டாட்டியும் புருஷனுக்கு ஒத்தாச பண்ணுத மாதிரி, வரிசயா பெத்து போட்டா. ஆறாவது வந்தது ஆம்பள புள்ள. அதை தூக்கிவச்சுக்கிட்டுதான் இப்பம் அலையுதாம்.
கல்யாணத்துக்கு பெறவு ரெண்டு புள்ள பொறக்குத வர, ஒரு வேலக்கும் போவாம மைனரு மாதிரி அலஞ்சுட்டிருந்தான் கருப்ப நம்பி. வேலைக்கா? எனக்கென்ன தலவிதியான்னு இருந்தாம்.கொஞ்சமா வெதப்பாடு இருந்தது. அது ஒண்ண நம்பி இருக்க முடியுமா? காலம் போற போக்குல இதுலாம் காணுமா?
ஊர்ல உள்ள பெரியாளுவோ அந்தாப்ல, ‘ஏல இப்டி இருந்தன்னா பொட்ட புள்ளயல எப்டி கரயேத்த?’னு சத்தம் போட்ட பெறவு, கூவெல பறிக்க போவ ஆரம்பிச்சான். அவன் ஆத்தாட்ட கேட்டா, மந்திரமூர்த்திக்கு ஆடு நேந்துவிட்ட பெறவுதான் புள்ளக்கு புத்தி வந்து, வேலக்கு போனதா சொல்லுவா.
கடனாநதி அணைக்கு மேல நாலஞ்சு பல்லாங்கு காட்டுக்குள்ள சைக்கிள மிதிக்கணும். ஒரே ஏத்தம். உன்னி உன்னி அழுத்தணும். அழுத்தி அழுத்தி மூசு மூசுன்னு போனா, கண்ணு மண்ணு தெரியாம தள தளன்னு வளந்து கெடக்கும் கூவெல. என்ன சிக்கலுனா கண்ணாடி விரியன் பாம்புவோ, இதுவ மேலதான் கண்ண மூடிட்டு கெடக்குமாம். பய பாம்புவோ, மத்த பாம்புவோ மாதிரி கெடயாது. சுள்ளுனு பறந்து வந்து மேல விழுந்து கடிச்சுபுடும். அதனால எல பறிக்கதுக்கு முன்னால அங்ஙன நின்னு, ஆய் வூய்னு சத்தம் போடணும். கோயிந்தபேரி அய்யப்பன், இங்ஙன பாம்பு கடிச்சு செத்ததுலயிருந்து தனியா வரமாட்டாவோ எல பறிக்க. அய்யப்பன் செத்தத நீங்க கேக்கணும். ஆங்கங்கெட்டவனுக்கு எல எது பாம்பு எதுன்னு தெரியாமயா இருப்பாம். வழக்கமா எல மேல அது படுத்துக்கிடந்திருக்கு. கொஞ்சம் உள்ள போயி, இவன் அறுத்திருக்காம். எல காம்புல அறுவாளை போட்டாம் பாருங்க. அது காம்பு இல்ல. பாம்பு வாலு. சட்டுனு திரும்பி நெத்தியில போட்டுட்டு. ரெத்தமோ ரெத்தம்.
அந்தானி, எதுத்தாப்ல செத்த நடந்தா பச்சிலை கெடக்கும். இவன் இந்த பாம்புதானேன்னு விட்டுட்டாம். அந்தாப்ல மயக்கமா வந்திருக்கு. சைக்கிள எடுத்துக்கிட்டு கீழ வந்துட்டாம். கடனாநதி அணை கிட்ட வந்தவனுக்கு அதுக்கு மேல முடியல. சைக்கிளோட குப்புற விழுந்திருக்காம். அந்தப்பக்கமா வெறவு பொறக்கிட்டு வந்தவன் எவனோ இவனை பாத்துட்டு தூக்கியிருக்காம். லேசா மொணங்கிட்டு வேற இருந்திருக்காம். பாம்பு கடிச்சுட்டுன்னு சொல்லிட்டு உருண்டுருக்காம். அந்தானி, வெறவு கெட்ட போட்டுட்டு, பதறியடிச்சு தோள்ல போட்டுக்கிட்டு ஊருக்குள்ள போயி வெஷயத்த சொன்னாம். ஊரு சனமெல்லாம் கூடிட்டு. தோள்ல இருந்து இறக்குனா பேச்சு மூச்சு இல்ல. போய் சேந்துட்டாம். இந்த சம்பவத்துக்கு பெறவு அவன் ஊர்ல இருந்து யாரும் கூவெல பறிக்க வரல.
கூவெலய பத்தி சொல்லலயே. ஓவ்வொரு எலயும் ரெண்டு கை நீளத்துக்கு இருக்கும். அகலமா இருக்காது. கல்ல போட்டு குத்து குத்துனு குத்துனாலும் எல கிழியாது. கரும்பச்ச கலருல தடிசா இருக்கும். தண்ணிய ஊத்தி கழுவுனா பள பளன்னு இருக்கும். மோந்துப் பாத்தா சந்தன வாசனை மாதிரி வரும். லேசா கிழிச்சுட்டு மோந்தா ஒரு வாசனை வரும் பாருங்கோ அதான் கூவெல வாசனை. சும்மா நல்லா இருக்கும். எல கொஞ்சம் கூம்பு மாதிரி இருக்கதால கூம்பெலன்னு இருந்து, பெறவு கூவெலன்னு ஆயிருக்குமோன்னு தோணும். ஆனா, பெயர் காரணமெல்லாம் தெரியல.
வாழ எல எப்பவும் கெடக்காது ஊருல. கெடச்சாலும் விக்குத விலையில ரொம்ப வேங்கி வைக்கவும் முடியாது. அதுனால ஒட்டலுவோல இந்த எலய வேங்கி வெச்சுகிடுவாவோ. அந்த எலய விட வெலயும் சவுரியம்.
செட்டிகுளம் கந்தனும், கருப்ப நம்பியும்தான் சேக்காளியோ. எங்கயோ கல்யாண வீட்டுல சந்திச்ச பழக்கம். அடிக்கடி போவ வரன்னு இருந்து ரெண்டு பேருக்கும் ரொம்ப உறவாயிப் போச்சு. பெற வேலக்கு போவணும்னு கருப்ப நம்பி நெனச்சத்தும்,‘இனும எவங்கிட்டயும் வேலன்னு கேக்காத; எங்கூட வா எல பறிக்க’ன்னு கூட்டிப்போனான். அன்னைக்கி போனவன். இன்னைக்கு வரைக்கும் தொடந்துகிட்டிருக்கு. சுத்து பட்டுக்கு ரெண்டுபேருந்தான் சப்ள. இவனுக்கு நாலு ஊரு. அவனுக்கு நாலு ஊருன்னு பிரிச்சு எல போடுவானுவோ. கல்யாண சீசனு நாள்கள்ல ரெண்டு பேருக்கும் கிராக்கி வந்துரும். எல்லா ஊர்லயிருந்தும் தேடி வந்துருவாவோ எல கேட்டு. அந்த நேரத்துல இவனுவ ரெண்டு பேரும் வைக்குததுதான் ரேட்டு. கெஞ்சி கேட்டா கொஞ்சம் கொறச்சுக்கிடுவானுவோ.
விரிஞ்சு கெடக்குத காட்டுக்குள்ள எலய அறுத்து அறுத்து நாலஞ்சு கெட்டுக்கு சேந்ததும் அங்ஙனயே உக்காந்து கயிற போட்டு கட்டுவாவோ. பெறவு சைக்கிளு கேரியருல வச்சு கெட்டணும். இதுகாவ பெரிய கேரியலு இருக்கும். அதுல வச்சுக்கிட்டு சைக்கிளோட சேத்து ஒரு கெட்டு. சும்மா கப்புனு உக்காந்துக்கிடும்.
பெறவு கீழ்ப்பக்கமா இருக்குத அத்ரி கோயிலுக்கு ஒரு எட்டு நட. கோயில சுத்தி, கொய்யா, மா, நார்த்தாங்கா, சீத்தாப்பாழ மரம்னு நிக்கும். கொய்யாலாம் தேங்கா மாதிரி குண்டு குண்டா வெளஞ்சு கெடக்கும். பறிக்கதுக்கு நாதி கெடயாது. காட்டுக்குள்ள யாரு வரப்போறா? கொரங்குவத்தான் கொஞ்சம் கொஞ்சம் கடிச்சு தின்னுட்டு பாதிய கீழ போட்டிருக்கும்.
இவனுவ மரத்துல ஏறி கிடைக்கத பறிச்சு கீழ போடுவானுவோ. அதுல வேணுங்க மட்டும் எடுத்துட்டு ஒரு பையில போட்டுகிடுவாவோ. சைக்கிளு முன்னால அதை தொங்கப்போட்டு வருவானுவோ...
மிச்சத்தை நாளைக்கு சொல்லுதேன்.
Thursday, November 22, 2007
குச்சூட்டாம் - 2; கேரக்டர் 3
ஆத்துல பாதம் நனையுத மாதிரிதான் தண்ணி ஓடும். பெரிய ஆழமெல்லாம் இருக்காது. ஆனா, பளிங்கியா இருக்கும் தண்ணி. குளிக்க வாரவோ படித்துறையோ இருக்குத பக்கத்துல கொஞ்சமா குழி தோண்டி, ஆழத்தை ஏற்படுத்தியிருப்பாவோ. அதுல முங்கி மண்டை நனையுதான்னு பாத்துக்கிடணும். நனையலனா இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டிக்கிடணும். இப்டி அங்க இங்கனு குழிய தோண்டி வச்சிருப்பாவோ. இங்கதான் தோண்டணும்னு இல்ல. நீங்க எங்ஙன நின்னு குளிக்கணும்னு நினைக்கேளோ அங்ஙன தோண்டிக்கிடலாம். காலைல தோண்டுன குழி சாயங்காலம் ஆவதுக்குள்ள பாதி நிறைஞ்சுப்போயிரும். ஓடுத தண்ணி மணலை கொண்டுவந்து மூடிப்புடும். இதனால குளிக்க வாரவோயெல்லாம் ஒவ்வொருதடவையும் குழிதோண்டிதான் குளிப்பாவோ.
ஆளை முக்குத ஆழமெல்லாம் மழை காலத்துலதான். ரெண்டு மூணு நாளு மலையில மழை பெஞ்சா அணை தாங்குமா? பெசாம தண்ணிய தெறந்து விட்டுருவாவோ. குளிச்சுக்கிட்டிருக்கும் போதே தண்ணி கொஞ்சம் கொஞ்சமா கூடுததை பாத்துக்கிட முடியும். ‘வரும் போது மொத படிய நனைச்ச தண்ணி, இப்பம் ரெண்டாவது படிக்குலா வந்திருக்கு; ஏலே தண்ணிய தெறந்துவிட்டுட்டாவோ’ன்னு தெரிஞ்சுக்கிடுவாவோ.
சின்ன பாலத்துல இருந்து கிழக்கயும் மேக்கயும் ஆத்துக்கு ரெண்டு கரையுலயும் தாழையோ வளந்து நிக்கும். சும்மா குப்புனு ஈ, காக்கா நுழைய முடியாதபடி அடர்த்தியா முளைச்சிருக்கும். அதுக்கு மேல மேடு. இதுலயும் கரையதாண்டி வயக்காட்டுக்கு போவதுக்கு, சின்னதா வழிய ஏற்படுத்தியிருப்பாவோ. மேட்டை பாத்து வழி இருக்கதால மழை நேரத்துல வழுக்கும். செருப்பு போட்டுக்கிட்டுலாம் போவ முடியாது. கையில ஒரு கம்பை வச்சுக்கிட்டு மெதுவா ஊணி ஊணி அந்த பலத்துலதான் போவ முடியும்.
கிழக்க இருக்கத விட மேக்க இருக்கத தாழையிலதான் தாழம்பூவும் நிறைய மொளைக்கும். அப்டி ஒரு இது. அதெப்படிலன்னு கேள்விலாம் கேக்காதியோ. இது ஊர்ல எல்லாருக்குமே தெரிஞ்ச அதிசயம்தான். பெருசா வளந்து நிக்குத தாழையில தாழ குச்சி மொளச்சிருக்கும். குச்சுன்னா ஒரு அரை மொள நீளத்துக்கு இருக்கும். அத சுத்தி முள்ளுவோ.
குச்சூட்டான் இதுலயெல்லாம் கெட்டிக்கார பய. கொடுக்கறுவாவ ஒரு கம்புல கெட்டிக்கிடுவாம். அந்த தாழைக்குச்சியில வச்சுக்கிட்டு ஒரு இழு. லேசுல வந்துராது. ரெண்டு மூணு தடவை இழுத்தாத்தான் மூதியோ வரும். பத்து பதினைஞ்ச பறிச்சுப்போட்டுட்டு ஒரு துண்டுல முடிஞ்சுக்கிடுவாம். அந்தானி, வீட்டுக்கு வந்து போடுவாம். எல்லாம் ஈரப்பதத்தோட இருக்கும். காய்ஞ்சு போச்சுன்னா நறுக்க முடியாது. ஒவ்வொண்ணா எடுத்து சின்ன மடக்கு கத்தியை கையில வச்சுக்கிட்டு உரிப்பாம். அதுல கொஞ்சம் குவிஞ்சு போவும். நாறு ரெடி.
இந்த நாறு எதுக்குன்னா பந்தப் போடும்போது தென்னந்தட்டி இருக்கும்லா, அதலாம் ஒன்னு சேத்து கட்டுதது இந்த நாரை வச்சுதான். பந்தப் போடுததுக்கு முள்ளு எப்டி தேவயோ அதே மாதிரி இதுவோளும் வேணும்.
அவ்வளவையும் எடுத்துக்கிட்டு பந்தக்காரரு கிட்ட கொடுப்பாம். செல நேரம் அவரு கேக்கமலேயே கொண்டு போவாம். அப்டி வந்தாம்னா அவருக்கு தெரிஞ்சு போவும். மூதிக்கு ஏதோ ரூவா தேவயிருக்குன்னு. அதை வாங்கிட்டு கையில இருக்கத கொடுப்பாரு. அதிகமா வேணும்னாலும், கடனா வேணும்னாலு அவருகிட்டதான். வேற யாருக்கிட்டயும் கையேந்த மாட்டாம். மானம் போயிருமாம். நாளைக்கு என்னமாவது சண்டை கிண்டை வந்துன்னு வச்சுக்கிடுங்கோ. ஏதாவது கேட்டுப் போட்டாம்னா மானம் போயிரும்லா. அதுக்காவ.
மானத்தோட அவன் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு. நாளைக்கு காலையில என்ன செய்யணும்னு யோசிக்கதுலாம் கெடயாது. இன்னைய நிலமை சரியா போச்சு. நாளைக்கு நாளைக்கே பாத்துக்கிடலாங்கதுதான் பய பத்தி. அதனால நாளைக்கு என்ன செய்வாம்னு அடுத்தாப்ல சொல்லுதேன்.
முற்றும்
Friday, November 16, 2007
குச்சூட்டான் 1; கேரக்டர் 3
இப்படித்தாம் ஒரு தடவை குத்தாலம் சீசனு. அங்க போயிட்டு வார கூட்டம்லாம் பாபநாசத்துக்கு போவும். சீசனு நேரத்துல தென்காசி ரோட்டுலயிருந்து, இந்த ஊர்ல திரும்பித்தாம் போவணுங்கதால ரோட்டுல காரு, பஸ்சுனு சர்புர்ருனு சத்தமா இருக்கும். ஒரு நாளு ரயில்வே கேட்டு பக்கத்துல காரும் காரும் மோதி, ஒரு காரு பள்ளத்துல சரிஞ்சுபோச்சு. நாலைஞ்சு பேரு கீழ கெடக்கானுவோ. மோதுன சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வயல்ல இருந்தவோல்லாம் ஓடியாராவோ. அந்தப் பக்கத்துல ஆளுவோ நடமாட்டம் வேற கொறச்சலுதாம்.
பந்த முள்ளு பொறக்க சோமு தேவரு வெளையில இருந்த இவனும் என்ன ஏதோன்னு ஓடியாந்தாம். ரத்தத்தோட கெடக்குததை பாத்துட்டு எல்லாரும் என்ன செய்யன்னு நிக்காவோ. அந்தானி, இந்தப் பய வந்தாம் பாருங்கோ, ஆளுவோளை பொறட்டுனாம். எல்லாருக்கும் உசுரு இருந்துச்சு. எதுத்த கார்ல டிரைவரு மட்டும்தான் இருந்தாம். அவன் காரு வட்டுல மண்டைய சாச்சுக்கிட்டு அப்டியே கெடக்காம். பெரிய காயம்னு ஒண்ணுமில்லை. கொஞ்சம் தள்ளி இருக்குத மா வெளையில ஆளுவோ இருந்தாவோ. ஒரு சின்ன பயலை கூப்ட்டு, எதுத்தால நின்னவங்கிட்ட சைக்கிளை வாங்கி குடுத்து, ‘போயி ரெண்டு கொடம் தண்ணி வாங்கிட்டு வால’ன்னு அனுப்புனாம். பெறவுதான் தெரிஞ்சது. கீழ விழுந்து கெடந்தது ராசா அய்யரு மருமவம்னு. வேற யாருக்கும் அது யாருன்னு தெரியல. இந்தப் பயதான் உத்து உத்துப்பாத்துட்டு, அய்யரு வீட்டுக்கு தகவலு சொல்லிவுட்டாம்.
இவரு ராஜபாளையத்துல இருக்காரு. பேங்குல ஆபீசராம். சீசனுக்கு வந்தவரு பாபநாசம் போவயில இப்படி ஆயிருக்கு. தண்ணி கொண்டுவந்ததும் மூஞ்சியில ஊத்தி, உசுப்புனாம். அதுக்குள்ள டிரைவரும், இன்னொருத்தரும் எழுந்திரிச்சுட்டாவோ. வண்டி சரிஞ்சதுல ரொம்ப அடிபட்டுபோச்சு. பெறவு ரெண்டு டிரைவருக்கு பெரிய சண்டை நடந்துச்சு. ராசா அய்யரு வீட்டுலயிருந்து ஆளுவோ வந்துட்டாவோ. அய்யரு, குச்சூட்டானை கெட்டிப் புடிச்சுக்கிட்டாரு.
‘எம்மருவமன்னு ஒனக்கு எப்டிடா தெரியும்’னாரு அய்யரு.
‘அதாம் அடிக்கடி கார்சாண்டுல பார்த்திருக்கம்லா சாமி’ன்னான்.
யாரு மவன்/மவளுக்காவது கல்யாணம்னா மொத ஆளா போய் நிப்பாம். கூப்டாட்டாலும் போயிருவாம். ‘ஏம் உம்ம வீட்டு கல்யாணத்துக்கு, நீரு கூப்ட்டுதாம் வரணுமோயா?’ம்பாம். கல்யாண வீட்டுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வாம். சமைய கட்டுல போய், ரசத்தைக் குடிப்பாம். ‘ஏண்ண... என்ன உப்பே இல்லையே’ம்பாம். அவன் சொன்னாம்னா. சரியா இருக்கும். ‘அப்டியாடே’ன்னு தவசுபிள்ளை உப்பை போடுவாரு.
தாலிகட்டுததுக்கு ஐயரு வந்தா என்னென்ன கேப்பாருன்னு எல்லா வெவரத்தையும் வச்சிருப்பாம். திடீர்னு மணமேடைக்கு போயி, அது இருக்கா இது இருக்கா, அதை எவ்வளவு வச்சிருக்கியோ’ம்பாம். இப்டி எல்லாருக்கும் வேண்டிய புள்ளையாயிருப்பாம்.
இருட்டுனதும் துண்டை உதறிட்டு எந்திரிப்பான். பெரிய வாய்க்கா பொத்தையில மாரி பய, சாராயம் வித்துட்டு இருப்பான். வயக்காட்டோட நடந்து அங்க போவாம். கூட்டமே இருக்கும். வெறவுக்கு போய்ட்டு வார பயலுவோலாம் இவன் எப்படா வருவாம்னு இருப்பானுவோ. எடக்கு பண்ண ஆளு வேணும்லா?
மாரி பய, எளஞ்சூட்டோட ஒரு கிளாஸ்ல சாராயத்தைக் கொடுப்பாம். அது எளம்பச்சை நெறத்துல இருக்கும். கதலி பழ வாடை மாதிரி அந்த சாராய மணம் இருக்கும். குபுக்குனு சாத்திட்டு திரும்புனாதான் உசுரு வந்த மாதிரி இருக்கும். மத்த பயலுவோ மாதிர்லாம் குடிச்சுப்போட்டு வேட்டிய அவுத்துப்போட்டு ரோட்டுல கெடக்குத பய இவன் இல்லை. ரொம்ப சளம்பவும் மாட்டாம்.
அவன் பொண்டாட்டி இதைலாம் கண்டுக்கிடமாட்டா. குடிச்சுட்டு நேரா வீட்டுக்குதான் போவாம். அந்தானி, பொண்டாட்டி மேல பாசம் பொத்துக்கிட்டு வரும். பயலுக்கு ஒரு கவலை என்னன்னா... கல்யாணம் முடிஞ்சு பத்துவருஷமாச்சு. இன்னும் கொள்ளிபோட ஒரு புள்ளை இல்லையேன்னுதான். ராத்திரி மட்டும் இந்தக் கவலை வந்து தொலைக்கும். யாராவது போனா,ஆண்டவன் இப்படி பண்ணிட்டானேன்னு அழ ஆரம்பிச்சிருவாம். இல்லைன்னா அப்படியே தூங்குவாம்.
சொல்லுதேன்.
Sunday, November 11, 2007
குச்சூட்டான் - கேரக்டர் 3
‘வேட்டியில வைக்காம இதுக்குனு ஒரு பைய தூக்கிட்டா அலைய முடியும்?’பாம்.
தெப்பக்குளம்னுதான் பேரு. அதெல்லாம் எந்த காலத்துல ஓடியிருக்குமோ. அரசமரத்தை சுத்தி, சிமெண்ட்ல தளம் போட்ருந்தாங்க. அதுல உக்கார்ந்துருவான். காலையில வயலுக்கு உழ, புல்லறுக்க, கடனாநதி ஆத்துல குளிக்கன்னு போவுத பொம்பளைலுவகிட்ட ஏதாவது தொண தொணத்துட்டே இருப்பான்.
‘‘ஏ இலஞ்சியா மவள, உங்கப்பன் சொவரு முட்டிய போட்டுட்டு, நேத்து லட்சுமணன் கடை முன்னால விழுந்து கிடந்தான... எப்ப வந்தான்?"
அவளுக்குச் சுள்ளுனு கோவம் வரும். கூட வார கொமரிகள் முன்னால அப்பாவ இளக்காரமா பேசுனா வராதா?
‘‘ஆமா ஒருந்தான் வேட்டியில்லாம கெடந்ஙரு. வேட்டிய அவுத்து போட்டுட்டு நெல கொல தெரியாம கெடந்தீராம?"
‘‘ஆமா, இவ பாத்தா?"
‘‘உன் வீட்டுக்காரி பிச்சம்மக்கா வாரியலால நாலு சாத்து சாத்துனதையும்தான் பாத்தேன்."
"ஏ கூறுகெட்டவளே..."
‘‘நீருதாம்யா கூறுகெட்டால இருக்கேரு"
‘‘மோறையில வக்கு"
‘‘ஒம்ம மோறையிலதான் வக்கணும்"
‘‘தொடைய நவுட்டி போடுவம்ட்டி"
‘‘அதெல்லாம் பிச்சம்மாக்காட்ட"
‘‘முளைச்சு மூணு எல விடதுக்குள்ள வாய பாரேன்"
‘‘பத்து எல விட்டது, பண்ணுத கூத்த பாரேன்"
அவ கூட வந்த பிள்ளைலூவோ சிரிச்சுட்டே போவும். பதிலுக்கு மானத்தை வாங்கிட்டாளேன்னு கோவமோ கவலையோ அவனுக்கு வராது. இதனாலயே நிறைய பொம்பளைலுவோவுக்கு இவனைக் கண்டா ஒரு இது.
வெயிலு சுள்ளுனு உறைக்குத நேரத்துல துண்டை ஒதறிட்டு கௌம்புவான். நேரா சைலு டீக்கடை. அங்க பந்தலு போடுதவரு நிப்பாரு. அவனுக்கு டீயும், கடைல வடை இருந்தா வடை, தட்டை இருந்தா தட்டையும் உண்டு.
‘‘அடுத்த வாரம் செக்கடியூர்ல கோயிலு கொடை. நெறைய முள்ளு வேணும் பாத்துக்கோ. மறந்துராத"னு அவன் கையில அஞ்சு ரூவாவ திணிப்பாரு. வாங்கிட்டு னட்டுக்கு போவான்.
பொண்டாட்டி பிச்சம்மா பெரிய வீட்டு தொழுவத்துல சாணி அள்ளி தூத்துட்டு வீட்டுக்கு வந்துருப்பா. பெரிய வீட்டுல பழைய சோறு இருந்தா ஒரு ஈய பானையில கொடுப்பாவோ. தண்ணியும், சோறுமா இருக்கும். வார வழியில கொல்லையில கீழ விழுந்து கிடக்குத மாங்காய்ல ரெண்டை பெறக்கிட்டு வந்துருவா.
இவன் வீட்டுக்கு வந்ததும் கையில இருக்குத அஞ்சு ரூவாய கொடுப்பான். அவளுக்கு தெரியும். இந்த மாதிரி கொடுத்தாம்னா முள்ளுக்கு போவணும்னு. கூரையில சொருவியிருக்குத டயரு செருப்பை எடுத்து டாம்னு போடுவான். தூசியா பறக்கும். முள்ளுக்கு போனா மட்டும்தான் செருப்பு. மத்த நேரத்துல வெறுங்காலுதான். அதுக்குள்ள அவா, மாங்காய சின்னசின்னதா வெட்டி, கிண்ணத்துல வச்சு, கூடவே உப்பையும் வப்பா.
சம்மணம் போட்டு உக்காருவான். சின்ன சட்டியில இவனுக்கு மட்டும் தண்ணியும் சோறுமா கொஞ்சம் ஊத்தி வைப்பா. கைய வுட்டு கலக்கிட்டு வாயில வச்சு ஒரே இழு. குளு குளுன்னு குப்புனு வயித்துக்குள்ள சோறு போவும். கூடவே மாங்காத்துண்டை எடுத்து சவப்பான்.
‘‘இந்த வெயிலுக்கு நீத்தண்ணியும் சோறும் தேவாமிர்தமா இருக்கே"ம்பான்.
தின்னு முடிச்சதும் வெளிய வந்து பீடிய பத்த வப்பான். நேரா ஒரு நடை. சுப்பையா கிழவன் தோப்புலதான் அவன் காலு நிக்கும். தோப்புன்னா சரியான தோப்பு. இந்த வழியிலயிருந்து பின் பக்கமா போவதுக்கு பர்லாங்க் நடக்கணும்.
தோப்புக்கு மேக்கத்தான் காரமுள்ளுவோ கிடக்கும். முள்ளுனா சாதாரண முள்ளுயில்லை. ஒவ்வொண்ணும் சுண்டுவிரல் நீளத்துக்கு இருக்கும். ஆக்கங்கெட்ட மூதியோ கையில குத்துனா தொண்டையில மீனு முள்ளு குத்தி நின்ன மாதிரி பிழிச்சு எடுத்துரும் வலி. அடுத்த நிமிஷமே ரத்தம் வடியுத இடத்துல சுண்ணாம்பை வச்சுரணும். சுண்ணாம்பு, வெஷத்தை முறிச்சுரும். இல்லனா படுத பாடு யாருக்கு தெரியும்?
முள்ளையும், சும்மா போனோம் வந்தோம்னு புடுங்கிர முடியாது. நேக்கு பாத்துதான் புடுங்கணும். அதுல குச்சூட்டான் கில்லாடிலா.
முள்ளு கொடிகிட்ட போயி வேட்டிய அவுத்துருவான். பீடி, வெத்தல, தீப்பெட்டி சமாச்சாரத்தையெல்லாம் ஓரமா வச்சுட்டு, ஏறுட்டுப் பாப்பான். மனசுக்குள்ள சொல்ல மாடனை சின்னதா வேண்டிக்கிடுவான். இடுப்புல இருக்குத சின்ன கொடுக்கருவாளை எடுத்து ஒவ்வொரு முள்ளா அறுப்பான். என்னதான் பத்திரமா புடுங்குனாலும் லேசா அங்க இங்க முள்ளு படாம இருக்காது. இப்பலாம் அவனுக்கு பழகிபோச்சு.
பெறவு அரிச்சு போட்டதயெல்லாம் அள்ளி குவிப்பான். பத்தெட்டு நடந்தா பனை மரங்க நிக்கும். சிறு பனைய பாத்து ஓல பறிப்பான். பயினி குடிக்க மடக்குத மாதிரி ஓலய மடக்குவான். அதுல முள்ளுவோல போடுவான். இதே போல மூணு ஓலையில மடக்கி வச்சிக்கிடுவாம். ஒரு ஓலைக்கு 10 ரூவா.
கோயில் கொடை, கல்யாணம், காதுகுத்துன்னா பந்தல் போடுவாங்க. தென்னந்தட்டி பந்தல போட்டு, அது தெரியாம இருக்க சலவை காரங்ககிட்ட வாங்குத வெள்ளை வேட்டிய போட்டு மறைப்பாங்க. வேட்டிய பந்தல்ல சேர்க்க இந்த முள்ளுதான் ஒதவும். பந்தல அவுக்கும் போது முள்ளுவோல திரும்ப எடுக்கத்தான் நெனைப்பாங்க. ஆனா மொறிஞ்சு போவும். கொஞ்சம் கீழ விழுந்துரும். இதனால ஒவ்வொரு பந்தலுக்கும் முள்ளு தேவைப்படும். இவன்தான் சப்ள. ஆடி மாசம்லாம் ஒரு விசேஷம் நடக்காது. இவனுக்கும் வேல இருக்காது. ஆனாலும் பந்தக்காரரு தங்கமானவரு. இவனுக்கு அஞ்சு பத்துனு அப்பப்போ கொடுப்பாரு. ஏன்கதுக்கு கதையிருக்கு.
குச்சூட்டானுக்கு அப்பம் 14 வயசு இருக்கும். ஒத்த புள்ள. இவன் அப்பனும் ஆத்தாவும் ஒரு தூசு துரும்ப தூக்க விடமாட்டவோ. அவ்ளோ செல்லம். தென்காசில துட்டி வீட்டுக்குப் போயிட்டு திரும்பும் போது ஆழ்வார்க்குறிச்சி திருப்பத்துல பஸ் கவுந்து, ரெண்டு பேரும் காலி. ஊரு ஜனமே துடிச்சுப் போச்சு. ஒருத்தரு இருந்து ஒருத்தரு போனா கூட பரவாயில்லை. இப்படி ரெண்டு போய் சேர்ந்துட்டா? இந்த பய அனாத மாதிரி நின்னாம். பெறவு அவன் குடிகார மாமா வளத்தாரு. அவரு கொத்த வேளைக்கு போறவரு. இவனை அவரால படிக்க வைக்க முடியலை. முடியனலங்கறதது அவனுக்கும்தான். மூணாப்பு்க்கு பைக்கட்ட தூக்குனதோட சரி. பெறவு நமக்கும் படிப்புக்கும் சரிபட்டு வராதுன்னுட்டு ஊர் சுத்த போயிட்டாம்.
குடியிருக்க குச்சு வீடு மட்டும் இந்தப் பயலுக்கு சொந்தம். அவனுக்கு அது மட்டும்தாம் இருந்ததால குச்சூட்டாம்னு பெயர் வச்சுட்டானுவோ ஊர்க்காரனுவோ. அவன் பேரு சொடல. இன்னைக்கு யாருக்கும் சொடலன்னா தெரியாது.
இன்னும் சொல்றேன்.
Monday, November 5, 2007
வம்பளந்தான் -கேரக்டர் - 2
கீழ்ப்பக்கமும் மேல்பக்கமும் தண்ணி ஓடை. குட்டி குட்டி மீனுவோ துள்ளிக்கிட்டு பளிங்கு தரை மாதிரியான ஓடை. ஓடைக்கரை மேல தென்ன மரங்களா இருக்கு. அந்தாப்லயும் இந்தாப்லயும் பச்சைப்பசேல்னு வயக்காடுவோ. எங்க போயி ஒதுங்க? அடிக்கிற மழையும் கல் மழை மாதிரி தும் தும்முனு உடலுல விழுது. இந்தேறு இந்தா அடி அடிக்குன்னுட்டு அறுப்படிச்சுட்டு இருந்தவோயெல்லாம் அஞ்சாறு சாக்கை எடுத்து நெல்லை மூடிட்டு ஓடியாராவோ.
பிணையல் மாட்டை அடிச்சுட்டு இருந்தவோ, மாட்டை அவுத்துவிட்டுட்டு ஓடியாராவோ. எல்லாரும் ஓடியாந்தது அறுப்புக்கடைக்கு. அந்த எடத்தை தவிர அங்க ஒதுங்கதுக்கு வேற எடம் இல்லை.
கடைய வம்பளந்தான் போட்டிருந்தான். சின்ன வயசுக்கார பயதாம். நாலு மாசத்துக்கு முன்னாலதான் கல்யாணம் முடிச்சாம். ஒவ்வொரு அறுப்புக்கும் களத்துமேடு பக்கத்துல கடை போட ஏலம் நடக்கும். ஊரை விட்டு ரெண்டு ரெண்டரை மைல்லதான் களத்துமேடுங்கறதால சுக்காப்பி, பீடி வாங்கணும்னா கூட போயிட்டு வர முடியாது. அதுவும் ராத்திரி பூரா சூடடிடப்பு, பிணையல், வைக்கப்படப்பு காவல்னு ஏகப்பட்ட வேலை இருக்கு. ராத்திரி, பகல்னு பாராம ஆளுவோ வந்துட்டும் போய்ட்டும் இருப்பாவோ. அவங்களுக்காகத்தான் இந்தக் கடை.
ஊர்ல அஞ்சு அறுப்புக்கடைக்கு ஏலம் நடக்கும். ரைஸ் மில் களம். மேல ரைஸ் மில் களம். கோவங்குளம் வெதப்பாட்டுக் களம். காக்கநல்லூரு முக்கு களம். கடனாநதி ஆத்து களம்னு அஞ்சு களம் இருக்கு. இங்கல்லாம் அறுப்புக் கடை போடணும். கடனாநதி ஆத்துக்கு மேக்க ஆழ்வார்க்குறிச்சிக்குப் போற வழியில இந்த கடை. இங்கதான் அறுப்படி அதிகமா நடக்கதால, இந்த கடைய ஏலத்துல எடுக்க சரியான போட்டி. போன தடவையும் வம்பளந்தான்தான் ஏலத்துல எடுத்திருந்தான்.
ஒரு பூவுக்கு ஏலத்துல எடுத்தா, அடுத்த பூவுக்கு சும்மா கடை வச்சிக்கிடலாம். அதுக்கு ஏல நெல் அளவை உண்டு. நீர்ப்பாசன கமிட்டிக்கு கொடுக்கணும். சில பேரு, கடைய எடுத்தாம்னா,‘சரியா யாவாரம் நடக்கலை, நெல்லே கெடைக்கலை’ன்னு மூக்கால அழுதுட்டு நீர்ப்பாசனக் கமிட்டிக்குக் கொஞ்சமா நெல் கொடுப்பானுவோ. இவன் அப்டிலாம் இல்ல. சொன்னா சொன்ன மாதிரி நடந்துகிடுவாம்.
ஒன்னரை மாசம் கதிரடிப்பு நடக்கும். அதுவரை ஜகஜோதிதான். கூத்து, கும்மாளம்னு வம்பளந்தானுக்கு சந்தோஷம் பொங்கும். இதுக்கு காரணமில்லாம இல்ல. கதிரறுக்க வார அசலூர்க்கார பொம்பளைலுவோ இவங் கடையிலதான் கடனு வைப்பாவோ. வேறு யாருக்கும் கடங் கொடுக்காத இந்தப் பய, அவளுவோளுக்கு மட்டும் வாமடை மாதிரி வாய தொறந்துகிட்டு கொடுப்பான். அங்கங்க சின்ன சின்ன தொடுப்பும் உண்டு. இந்த தொடுப்புக்காகத்தான் அவன், இந்த கடைய போட்டி போட்டு ஏலத்துக்கு எடுக்காம்னு ஊர்ல பேசிக்கிடுவாவோ.
கடைன்னா பெரிசா எதுவும்னு நெனச்சுக்கிடாதீங்க. தென்னங்குச்சிலுதான். அதுக்குள்ள அஞ்சு பேரு உக்காரலாம். பத்து பேரு நிக்கலாம். ஒன்றரை மாசம் வரைக்கும் அவனுக்கு இதுதான் வீடு. உள்ளயே ஒரு மூலையில வேட்டி, சட்டைய தொங்க போட்டுருப்பாம். எல்லா சாமானையும் நெல்லுக்குத்தான் கொடுக்கதால அந்த நெல்லை, ரெண்டு மூணு சாக்குல சேர்த்து வச்சிருவான். நாலஞ்சு சாக்கு சேர்ந்ததும் வீட்டுக்குப் போயிரும் மூட்டை. இந்த நெல்லுக்காக நாலஞ்சு எலி அங்கன இங்கனன்னு அலைஞ்சுட்டே இருக்கும். மழை வந்துட்டா சிக்கலுதான். கடை இருக்கறது எறக்கத்துல. தண்ணி பூரா கடைக்குள்ள வந்துரும். சாக்கை விரிச்சு தூங்க முடியாது. இப்படியாவும்னு தெரிஞ்சே, ஒரு மர கட்டுலு கொண்டு வந்து போட்டுருந்தாம். அது கடையோட பாதி இடத்தை அடைச்சுக்கிட்டு அய்யோன்னு கெடந்தது. ரெண்டு மூணு சட்டியில சுண்டலு, வெள்ளப் பயிறு, சீனி கிழங்கு, அவலுன்னு வச்சிருந்தாம்.
ஆறிப்போன இட்லியும், தோசையும் அடுக்கி வச்சிருந்தாம். நாலஞ்சு பாட்டில்ல ஆரஞ்சுவில்ல, கடலமிட்டாயி, பிஸ்கட்டு. சுக்காப்பி அடிக்க மண்ணெண்ண ஸ்டவ்வு. அது பாதி நேரம் ரிப்பேராயிரும்.
மழைன்னு எல்லாரும் இங்க ஓடியாந்து நின்னாவோ. பத்து பதினஞ்சு பேருக்கு மேல கடையில நிக்க முடியல. ஒடுங்கிகிட்டு நிக்காவோ.
கூட்டத்தைப் பாத்ததும் வம்பளந்தானுக்கும் ஒண்ணும் சொல்ல முடியல. ஆளுவோ வாரத பாத்ததும் அவனாலயும் உக்கார முடியல. வந்தவோளும் சும்மா நிக்காம ஆளாளுக்கு சுக்காப்பிய கொடு, பீடிய கொடுன்னு கேக்காவோ. சுக்காப்பி போட்டுட்டுடிருந்த அவன் பொண்டாட்டிக்கு வேசடையா இருந்துச்சு. கூரைக்கு மேப்பக்கம் கொஞ்ச பேரு நின்னாவோ. மேக்க பாத்து அடிக்க மழைதான்னாலும் அவ்வோ மேல தண்ணி விழாம இல்ல. ஒதுங்க முடியாம எல்லாம் நனைஞ்சு போய், வேற வழியில்லாம நிக்கவேண்டியதா போச்சு. அரை மணிநேரம் உண்டு, இல்லைன்னு பண்ணிட்டு மழை.
செத்த நேரத்துல மழை தண்ணி, ஓடை மாதிரி கடைக்குள்ள வந்துட்டு. நெல் வச்சிருக்குத சாக்கு மூட்டைலாம் வம்பா போயிரும்னு கவலையில இருந்தாம். இருந்தாலும் அங்ஙன ஒண்ணும் செய்ய முடியாது. இந்த வேசடை வேற.
மழைய வச்சு கொஞ்சம் யாவாரமும் ஆச்சு. லேசா மழை உட்டதும், எல்லாரும் மூஞ்சிய சேலை, வேட்டியால துடைச்சுக்கிட்டு போனாவோ. தற்செயலா வம்பளந்தான் வாசல்ல பாத்தான். முந்தா நாளு ராத்திரி சுக்காப்பி வாங்க வந்த அதே பொம்பளை நின்னு சிரிச்சுட்டிருந்தது.
இவனுக்கு குபுக்குனு ரெத்தம் ஏறி இறங்குச்சு.
பக்கத்துல வீட்டுக்காரி இருந்தாலும் கேட்டான்.
‘என்னம்மா எப்படி இருக்க?’
அவ வெட்கமா சிரிச்சுட்டிருந்தா. பயலுக்கு கெறக்கம் ஜாஸ்தியாயிட்டு.
‘ஒனக்கு இடகாலுதான?’
‘ம்...தெரியாத மாரி கேக்கேளே’
‘அதான, உன்னய எப்படி மறப்போம். போன அறுப்புக்கு வந்திருக்கலா...?’ன்னு சொல்லிட்டு கண்ணடிச்சாம்.
அவா, அவன் வீட்டுக்காரிய கோஸ் கண்ணு போட்டு பாத்துட்டு கீழ பாத்து சிரிச்சா.
பயலுக்கு பழைய யாவம் வந்துட்டு.
‘ போன அறுப்புக்கு ஆத்துக்குள்ள குடிச போட்டிருந்தியோ. இப்ப எங்க?’கேட்டான்.
‘இன்னா ஒங்க கடைக்கு எதுதாப்ல. அந்தா தெரியுதுலா ஒத்தை தென்னம்புள்ள அதுக்கு கீழ.’
‘அதானா...செரி செரி... உங்கம்மா வந்திருக்காளா?’
‘இல்ல... அவ நாளைக்குதான் வாரா... தங்கச்சியும் நானுந்தாம் இருக்கோம்’
வம்பளந்தான் வீட்டுக்காரி இந்த பேச்சை கேட்டுட்டு கண்டுக்காம இருந்தா.
இன்னும் மழை முழுசா விடல. தூறிகிட்டுதான் இருந்தது.
‘சுக்காபி குடிக்கியா?’
‘வேண்டாம், பெறவு வாரன்'
வம்பளந்தானுக்கு கொஞ்சம் மீசை துடிச்சுட்டிருந்தது. லேசா சிரிச்சுக்கிட்டாம்.
போன அறுப்புக்கு அவா வந்திருந்தா. பேரு மரகதம்னு சொன்னா. நல்ல புள்ள. இதே போல திடீர் மழை. கடையில அவன் மட்டும்தான் இருந்தாம். ராத்திரி போல சுக்காபி வாங்க வந்தா அவா. இவனும் ஒரு நெனப்பும் இல்லாமத்தான் பேச்சுக்கொடுத்தாம். அவளப் பத்தி வெவரத்தையெல்லாம் சொன்னா. ஆத்தோரமா குடிசை போட்டிருக்கதையும் சொன்னா. சொன்னவா அதோடலா போயிருக்கணும். ‘என்னமோ தைரியமா வந்துட்டேன். போவதுக்கு பயமா இருக்கு. துணைக்கு வாருமே...’ன்னா. அந்தானிக்குத்தான் அவனுக்கு வயித்துக்குள்ள என்னமோ செஞ்சுது. கடைய லேசா சாச்சுவச்சுட்டு ராத்திரி போல கார்த்திகை மாச நாயி மாதிரி, பின்னாலயே போனாம். பச்சத்தி மாடன் கோயிலை தாண்டுனதும் அவ சொன்னா.
‘காப்பிய கொஞ்சம் நெறயதாம் தந்தான்னா.. நாங்க குடிச்சுருவோம்னா கிண்ணத்துல கொடுக்குத மாதிரி கொடுக்குயோ’ன்னா.
‘ஒனக்கு இல்லாததான்னு பேசிகிட்டிருக்கும்போதே பொசுக்குனு அவ கைய புடிச்சுட்டாம். அந்த புள்ள, ‘ச்சீ... விடுங்க யாராது பாத்திர போறாவோ’ன்னா. பயலுக்கு போதாதா?
இது ரெண்டு மூணு நாளா தொடர்ந்தது... இதே போல அவா ராத்திரி சுக்காபி வேங்க வருவா. ரெண்டு பேரும் போவாவோ.
பெறவு அறுப்படிப்பு முடிஞ்சதும் அவ அவ ஊருக்கு போயிட்டா. போன அறுப்பு இவ வரலை. இந்தா இப்பம் வந்திருக்கா. பயலுக்கு ஒண்ணுன்னா யாவம் இருக்கும். இதே போல எத்தனையோ?
களத்துல நெல் கெட்டை தூக்கிட்டு வந்தவோயெல்லாம் ஓரமா உக்காந்து சாப்டுட்டு இருக்காவோ. அந்த புள்ள கடைக்கு வந்துட்டு. பயலுக்கு சிரிப்பாணி. இளிச்சு இளிச்சுப் பேசிக்கிட்டிருந்தாம். மேல் பக்கம் ஆளுவோ இருந்ததால பேச்சோட நிறுத்திக்கிட்டிருந்தாம். இருந்தாலும் மனசு கேக்கலை. கையை லேசா அவ தோள்ல போட்டுட்டு நிக்கும் போது வந்து தொலைச்சா அவன் வீட்டுக்காரி. கறிக்குழம்பு வச்சு எடுத்துட்டு வந்திருந்தா. இதை பார்த்ததும் வம்பளந்தானுக்கு என்ன செய்யன்னு தெரியல. கையில வச்சிருந்த பித்தளை தூக்குச்சட்டியை அந்த புள்ள மேல தூக்கி எறிஞ்சா. ‘எடுபட்ட செரிக்கி என் தாலி அறுக்க வந்தியோ...கண்ட நாயிட்டலாம் முந்தானைய விரிச்சுட்டு இப்ப இவரா கெடச்சாரு’ன்னு கீழ கெடந்த மரக்கட்டையை தூக்கிட்டு விரட்டுனா. அவ வெளிய தெரிஞ்சா கேவலம்னு ஒரே ஓட்டம். அதுக்குள்ள அக்கம் பக்கத்துல சாப்டுட்டு இருந்தவோயெல்லாம் என்ன என்னன்னு வந்துட்டாவோ.
இந்த பய, ‘ஒண்ணும் இல்லை; ஒண்ணும் இல்லை; சின்ன பிரச்னை’ன்னு அவ்வோளை போவ சொல்லிட்டாம். ஆனா, இவ அவனை எரிக்கது மாதிரி பாத்துட்டு, இனும என் மூஞ்சியில முழிக்காண்டாம்னு போனா. அன்னைக்கு போனவதாம் இன்னும் இங்க வந்து எட்டிப்பாக்கலை. கல்யாணமும் பண்ணாம பத்தையில அவ அண்ணன் வீட்ல இருக்கான்னு பேச்சு.
வம்பளந்தானுக்கு என்ன? ஒவ்வொரு பூவுக்கும் ஏலத்துல கடைய எடுக்காம். அந்தானி, மரகதம் பிள்ளைய மாதிரி எத்தனையோ வந்து மாட்டுது. வாழ்க்கை அவனுக்கும் ஓடிக்க்கிட்டிருக்கு.