Thursday, November 22, 2007

குச்சூட்டாம் - 2; கேரக்டர் 3

விடிஞ்சதும், அதே தெப்பக்குள அரசமரடி. வேற பொம்பளைலுவோ... எடக்கு! ஒரு நாளு முள்ளுக்குப் போனா, அடுத்தாப்ல கொஞ்ச நாளு வேலையும் இருக்காது. இந்த மாதிரி நேரத்துல நார் புடுங்க போவாம். நார்ன்னா தாழை நார். இதுவும் பந்தலு போடுதவருக்குத்தான். வீட்லயிருந்து ஒரு கொடுக்கருவாவ இடுப்புல சொருவிட்டு ஆத்துக்கு நடப்பாம்.

ஆத்துல பாதம் நனையுத மாதிரிதான் தண்ணி ஓடும். பெரிய ஆழமெல்லாம் இருக்காது. ஆனா, பளிங்கியா இருக்கும் தண்ணி. குளிக்க வாரவோ படித்துறையோ இருக்குத பக்கத்துல கொஞ்சமா குழி தோண்டி, ஆழத்தை ஏற்படுத்தியிருப்பாவோ. அதுல முங்கி மண்டை நனையுதான்னு பாத்துக்கிடணும். நனையலனா இன்னும் கொஞ்சம் ஆழமா தோண்டிக்கிடணும். இப்டி அங்க இங்கனு குழிய தோண்டி வச்சிருப்பாவோ. இங்கதான் தோண்டணும்னு இல்ல. நீங்க எங்ஙன நின்னு குளிக்கணும்னு நினைக்கேளோ அங்ஙன தோண்டிக்கிடலாம். காலைல தோண்டுன குழி சாயங்காலம் ஆவதுக்குள்ள பாதி நிறைஞ்சுப்போயிரும். ஓடுத தண்ணி மணலை கொண்டுவந்து மூடிப்புடும். இதனால குளிக்க வாரவோயெல்லாம் ஒவ்வொருதடவையும் குழிதோண்டிதான் குளிப்பாவோ.

ஆளை முக்குத ஆழமெல்லாம் மழை காலத்துலதான். ரெண்டு மூணு நாளு மலையில மழை பெஞ்சா அணை தாங்குமா? பெசாம தண்ணிய தெறந்து விட்டுருவாவோ. குளிச்சுக்கிட்டிருக்கும் போதே தண்ணி கொஞ்சம் கொஞ்சமா கூடுததை பாத்துக்கிட முடியும். ‘வரும் போது மொத படிய நனைச்ச தண்ணி, இப்பம் ரெண்டாவது படிக்குலா வந்திருக்கு; ஏலே தண்ணிய தெறந்துவிட்டுட்டாவோ’ன்னு தெரிஞ்சுக்கிடுவாவோ.

சின்ன பாலத்துல இருந்து கிழக்கயும் மேக்கயும் ஆத்துக்கு ரெண்டு கரையுலயும் தாழையோ வளந்து நிக்கும். சும்மா குப்புனு ஈ, காக்கா நுழைய முடியாதபடி அடர்த்தியா முளைச்சிருக்கும். அதுக்கு மேல மேடு. இதுலயும் கரையதாண்டி வயக்காட்டுக்கு போவதுக்கு, சின்னதா வழிய ஏற்படுத்தியிருப்பாவோ. மேட்டை பாத்து வழி இருக்கதால மழை நேரத்துல வழுக்கும். செருப்பு போட்டுக்கிட்டுலாம் போவ முடியாது. கையில ஒரு கம்பை வச்சுக்கிட்டு மெதுவா ஊணி ஊணி அந்த பலத்துலதான் போவ முடியும்.

கிழக்க இருக்கத விட மேக்க இருக்கத தாழையிலதான் தாழம்பூவும் நிறைய மொளைக்கும். அப்டி ஒரு இது. அதெப்படிலன்னு கேள்விலாம் கேக்காதியோ. இது ஊர்ல எல்லாருக்குமே தெரிஞ்ச அதிசயம்தான். பெருசா வளந்து நிக்குத தாழையில தாழ குச்சி மொளச்சிருக்கும். குச்சுன்னா ஒரு அரை மொள நீளத்துக்கு இருக்கும். அத சுத்தி முள்ளுவோ.

குச்சூட்டான் இதுலயெல்லாம் கெட்டிக்கார பய. கொடுக்கறுவாவ ஒரு கம்புல கெட்டிக்கிடுவாம். அந்த தாழைக்குச்சியில வச்சுக்கிட்டு ஒரு இழு. லேசுல வந்துராது. ரெண்டு மூணு தடவை இழுத்தாத்தான் மூதியோ வரும். பத்து பதினைஞ்ச பறிச்சுப்போட்டுட்டு ஒரு துண்டுல முடிஞ்சுக்கிடுவாம். அந்தானி, வீட்டுக்கு வந்து போடுவாம். எல்லாம் ஈரப்பதத்தோட இருக்கும். காய்ஞ்சு போச்சுன்னா நறுக்க முடியாது. ஒவ்வொண்ணா எடுத்து சின்ன மடக்கு கத்தியை கையில வச்சுக்கிட்டு உரிப்பாம். அதுல கொஞ்சம் குவிஞ்சு போவும். நாறு ரெடி.

இந்த நாறு எதுக்குன்னா பந்தப் போடும்போது தென்னந்தட்டி இருக்கும்லா, அதலாம் ஒன்னு சேத்து கட்டுதது இந்த நாரை வச்சுதான். பந்தப் போடுததுக்கு முள்ளு எப்டி தேவயோ அதே மாதிரி இதுவோளும் வேணும்.
அவ்வளவையும் எடுத்துக்கிட்டு பந்தக்காரரு கிட்ட கொடுப்பாம். செல நேரம் அவரு கேக்கமலேயே கொண்டு போவாம். அப்டி வந்தாம்னா அவருக்கு தெரிஞ்சு போவும். மூதிக்கு ஏதோ ரூவா தேவயிருக்குன்னு. அதை வாங்கிட்டு கையில இருக்கத கொடுப்பாரு. அதிகமா வேணும்னாலும், கடனா வேணும்னாலு அவருகிட்டதான். வேற யாருக்கிட்டயும் கையேந்த மாட்டாம். மானம் போயிருமாம். நாளைக்கு என்னமாவது சண்டை கிண்டை வந்துன்னு வச்சுக்கிடுங்கோ. ஏதாவது கேட்டுப் போட்டாம்னா மானம் போயிரும்லா. அதுக்காவ.

மானத்தோட அவன் வாழ்க்கையும் ஓடிக்கிட்டிருக்கு. நாளைக்கு காலையில என்ன செய்யணும்னு யோசிக்கதுலாம் கெடயாது. இன்னைய நிலமை சரியா போச்சு. நாளைக்கு நாளைக்கே பாத்துக்கிடலாங்கதுதான் பய பத்தி. அதனால நாளைக்கு என்ன செய்வாம்னு அடுத்தாப்ல சொல்லுதேன்.

முற்றும்

13 comments:

இலவசக்கொத்தனார் said...

//அதனால நாளைக்கு என்ன செய்வாம்னு அடுத்தாப்ல சொல்லுதேன்.//

சொல்லுவே, நீரு வார வரையிலே இங்ஙனவே சுத்திக்கிட்டுத் திரியுதோம் என்னா...

Veera said...

எந்த வட்டார நடை இது?

துளசி கோபால் said...

குச்சூட்டான் இப்படி என்னைக் கொசுவத்தி ஏத்தவச்சா எப்படி?

மஞ்சளாத்துக்கு வரும் மல்லிக்காக்கா, பித்தளையில் செஞ்ச ஒரு பட்டை( பார்க்கறதுக்குத் தென்னம்பாளைக் குருத்து மாதிரி இருக்கும்)யும் குடமும் எடுத்துக்கிட்டுத்தான் ஆத்துக்கு வரும். அந்தப் பட்டையைவச்சுக் கரையோரம் பள்ளம் தோண்டும். நல்லா ஆழமா இருக்கும். ரெண்டு முழம்கூட இருக்கும் சிலசமயம். அதுலெ வர்ற ஊத்துத்தண்ணியையும் அந்தப் பட்டையாலெ மொண்டு வெளியே ஊத்தும். நல்ல தெளிவான தண்ணி வந்தபிறகு கொண்டுவந்த குடத்துலே துணி ஒண்ணு விரிச்சு வடிகட்டி அந்தத் தண்ணியை ரொப்பிக்கும். அதுதான் சமைக்க, குடிக்கன்னு எல்லாத்துக்கும். ஆத்தை ஒட்டின தெரு. பலநாட்களில் நாந்தான் அதுக்குச் சித்தாளு:-))))

அந்தக் காலத்துலே ஆறுகளும் சுத்தமா இருந்துச்சு. இப்ப அதையெல்லாம் நினைச்சே பார்க்கமுடியாது. ஹூம்.....

ஆடுமாடு said...

இலவசம் பின்னுதியோ போங்க. வந்ததுல சந்தோஷம்வே.

ஆடுமாடு said...

வீர சுந்தரு திருநெல்வேலி பக்கம்.

ஆடுமாடு said...

துளசி டீச்சர் ஊரு ஞாபகம் வந்துட்டாக்கும். ஆமா, உங்களுக்கு திருநெல்வேலியில எங்க?

lucky said...

ஒரு நொடியில் நம்ம நெல்லைக்கு அனுப்பி விட்டிஙக அருமை..........

ஆடுமாடு said...

வாங்க தங்கை, நம்மூர்க்காரங்க கூட்டம் ஜாஸ்தியாயிடுச்சு.

ESMN said...

அண்ணாச்சி,
இப்படி தான் ஒரு தடவ அத்தாளநல்லூர் ஆத்துல குளிச்சப்ப இடுப்பு வரைக்கும் வ்ந்த த்ண்ணி ஒரு முங்கு போட்டுட்டு பார்த்தா கழுத்து வரைக்கும் போகுது..
இந்த டேம் காரணுவ எப்ப தண்ணிய திற்க்கறானு தெரியமாட்டெங்குது.

அண்ணாச்சி எப்டி இப்படியெல்லம் அருமையா எழுதிருங்க...
நல்லா இன்னும் எழுதுங்க.....

ஆடுமாடு said...

எருமை மாடு அண்ணாச்சி வாங்க. எனக்கு போட்டியாதானே இப்படி பேரு வச்சிருக்கீங்க.

Veera said...

ஆடுமாடு, எருமை மாடு - எல்லா மாட்டையும் அடிச்சு பத்துங்களே!!! (ஹி..ஹி..ஹி.. திருநெல்வேலி தெரியுதாலே!? )

ஆடுமாடு said...

வீர சுந்தரு பின்னுதியலே..

ESMN said...
This comment has been removed by the author.