Friday, November 16, 2007

குச்சூட்டான் 1; கேரக்டர் 3

கருக்கலானதும்தான் பயலுக்கு கொண்டாட்டம். காலு ஒரு இடத்துல நிக்காது. கார்சாண்ட்டுல இருக்குத, வாசமடக்கி மரத்து மூட்டுல போய் உக்காந்துகிடுவான். யாராவது ஊருக்கு போற, வாரவோள வேடிக்கை பாத்துட்டே இருப்பான். தெரிஞ்சவோ பஸ்ல இருந்து இறங்குனா ஓடிபோய், 'ஓ மச்சான் வாரும் வாரும்'னு பல்லெல்லாம் தெரிய இழிச்சு இழிச்சு பேசுவாம். பக்கத்துல இருக்குத ஓலப்பறை கடைல போய், கடுங்காப்பிய வாங்கி கொடுப்பான். அந்தானி, அவ்வோ குடும்பத்துல உள்ளவோல வெசாரிச்சுட்டு, திரும்பவும் வந்து மரத்துல வந்து ஒக்காந்துருவாம். அடுத்த பஸ்ஸ§ல எவனாது எறங்குனா ஆளை உத்து உத்துப் பாப்பான். ஆள் புதுசா இருந்தா, நேரா போய், ‘எய்யா யாரு வீட்டுக்கு வந்திருக்குயோ’ம்பான். இறங்குதவரு அவனை ஏற எறங்க பாத்துட்டு, யாரு வீட்டுக்கு வந்திருக்கேன்னு சொல்வாரு. அந்தாப்ல நேரா போனா பேச்சியம்மன் கோயிலு வரும் பாத்துகிடுங்கோ. அதுக்கு பின்னால வடக்க பாத்து வழி போவும். அதுல கொஞ்சம் போனதும் டீக்கடை இருக்கும். அதுக்கு மூணாவது வீடுதான்னு வெளக்கி சொல்லிட்டு வந்து மரத்து மூடுல உக்காருவாம். ஊர்ல எல்லாரு சொந்தக்காரங்களையும் தெரிஞ்சவன் இவன்மட்டும்தாம்.

இப்படித்தாம் ஒரு தடவை குத்தாலம் சீசனு. அங்க போயிட்டு வார கூட்டம்லாம் பாபநாசத்துக்கு போவும். சீசனு நேரத்துல தென்காசி ரோட்டுலயிருந்து, இந்த ஊர்ல திரும்பித்தாம் போவணுங்கதால ரோட்டுல காரு, பஸ்சுனு சர்புர்ருனு சத்தமா இருக்கும். ஒரு நாளு ரயில்வே கேட்டு பக்கத்துல காரும் காரும் மோதி, ஒரு காரு பள்ளத்துல சரிஞ்சுபோச்சு. நாலைஞ்சு பேரு கீழ கெடக்கானுவோ. மோதுன சத்தம் கேட்டு அக்கம்பக்கத்து வயல்ல இருந்தவோல்லாம் ஓடியாராவோ. அந்தப் பக்கத்துல ஆளுவோ நடமாட்டம் வேற கொறச்சலுதாம்.

பந்த முள்ளு பொறக்க சோமு தேவரு வெளையில இருந்த இவனும் என்ன ஏதோன்னு ஓடியாந்தாம். ரத்தத்தோட கெடக்குததை பாத்துட்டு எல்லாரும் என்ன செய்யன்னு நிக்காவோ. அந்தானி, இந்தப் பய வந்தாம் பாருங்கோ, ஆளுவோளை பொறட்டுனாம். எல்லாருக்கும் உசுரு இருந்துச்சு. எதுத்த கார்ல டிரைவரு மட்டும்தான் இருந்தாம். அவன் காரு வட்டுல மண்டைய சாச்சுக்கிட்டு அப்டியே கெடக்காம். பெரிய காயம்னு ஒண்ணுமில்லை. கொஞ்சம் தள்ளி இருக்குத மா வெளையில ஆளுவோ இருந்தாவோ. ஒரு சின்ன பயலை கூப்ட்டு, எதுத்தால நின்னவங்கிட்ட சைக்கிளை வாங்கி குடுத்து, ‘போயி ரெண்டு கொடம் தண்ணி வாங்கிட்டு வால’ன்னு அனுப்புனாம். பெறவுதான் தெரிஞ்சது. கீழ விழுந்து கெடந்தது ராசா அய்யரு மருமவம்னு. வேற யாருக்கும் அது யாருன்னு தெரியல. இந்தப் பயதான் உத்து உத்துப்பாத்துட்டு, அய்யரு வீட்டுக்கு தகவலு சொல்லிவுட்டாம்.

இவரு ராஜபாளையத்துல இருக்காரு. பேங்குல ஆபீசராம். சீசனுக்கு வந்தவரு பாபநாசம் போவயில இப்படி ஆயிருக்கு. தண்ணி கொண்டுவந்ததும் மூஞ்சியில ஊத்தி, உசுப்புனாம். அதுக்குள்ள டிரைவரும், இன்னொருத்தரும் எழுந்திரிச்சுட்டாவோ. வண்டி சரிஞ்சதுல ரொம்ப அடிபட்டுபோச்சு. பெறவு ரெண்டு டிரைவருக்கு பெரிய சண்டை நடந்துச்சு. ராசா அய்யரு வீட்டுலயிருந்து ஆளுவோ வந்துட்டாவோ. அய்யரு, குச்சூட்டானை கெட்டிப் புடிச்சுக்கிட்டாரு.

‘எம்மருவமன்னு ஒனக்கு எப்டிடா தெரியும்’னாரு அய்யரு.

‘அதாம் அடிக்கடி கார்சாண்டுல பார்த்திருக்கம்லா சாமி’ன்னான்.

யாரு மவன்/மவளுக்காவது கல்யாணம்னா மொத ஆளா போய் நிப்பாம். கூப்டாட்டாலும் போயிருவாம். ‘ஏம் உம்ம வீட்டு கல்யாணத்துக்கு, நீரு கூப்ட்டுதாம் வரணுமோயா?’ம்பாம். கல்யாண வீட்டுல எல்லா வேலையையும் இழுத்துப் போட்டு செய்வாம். சமைய கட்டுல போய், ரசத்தைக் குடிப்பாம். ‘ஏண்ண... என்ன உப்பே இல்லையே’ம்பாம். அவன் சொன்னாம்னா. சரியா இருக்கும். ‘அப்டியாடே’ன்னு தவசுபிள்ளை உப்பை போடுவாரு.
தாலிகட்டுததுக்கு ஐயரு வந்தா என்னென்ன கேப்பாருன்னு எல்லா வெவரத்தையும் வச்சிருப்பாம். திடீர்னு மணமேடைக்கு போயி, அது இருக்கா இது இருக்கா, அதை எவ்வளவு வச்சிருக்கியோ’ம்பாம். இப்டி எல்லாருக்கும் வேண்டிய புள்ளையாயிருப்பாம்.

இருட்டுனதும் துண்டை உதறிட்டு எந்திரிப்பான். பெரிய வாய்க்கா பொத்தையில மாரி பய, சாராயம் வித்துட்டு இருப்பான். வயக்காட்டோட நடந்து அங்க போவாம். கூட்டமே இருக்கும். வெறவுக்கு போய்ட்டு வார பயலுவோலாம் இவன் எப்படா வருவாம்னு இருப்பானுவோ. எடக்கு பண்ண ஆளு வேணும்லா?

மாரி பய, எளஞ்சூட்டோட ஒரு கிளாஸ்ல சாராயத்தைக் கொடுப்பாம். அது எளம்பச்சை நெறத்துல இருக்கும். கதலி பழ வாடை மாதிரி அந்த சாராய மணம் இருக்கும். குபுக்குனு சாத்திட்டு திரும்புனாதான் உசுரு வந்த மாதிரி இருக்கும். மத்த பயலுவோ மாதிர்லாம் குடிச்சுப்போட்டு வேட்டிய அவுத்துப்போட்டு ரோட்டுல கெடக்குத பய இவன் இல்லை. ரொம்ப சளம்பவும் மாட்டாம்.

அவன் பொண்டாட்டி இதைலாம் கண்டுக்கிடமாட்டா. குடிச்சுட்டு நேரா வீட்டுக்குதான் போவாம். அந்தானி, பொண்டாட்டி மேல பாசம் பொத்துக்கிட்டு வரும். பயலுக்கு ஒரு கவலை என்னன்னா... கல்யாணம் முடிஞ்சு பத்துவருஷமாச்சு. இன்னும் கொள்ளிபோட ஒரு புள்ளை இல்லையேன்னுதான். ராத்திரி மட்டும் இந்தக் கவலை வந்து தொலைக்கும். யாராவது போனா,ஆண்டவன் இப்படி பண்ணிட்டானேன்னு அழ ஆரம்பிச்சிருவாம். இல்லைன்னா அப்படியே தூங்குவாம்.

சொல்லுதேன்.

9 comments:

இலவசக்கொத்தனார் said...

நல்லா இருக்குடே, நம்மூரு ஆக்களை அப்படியே நேர்ல பாத்தா மாரி மனசு நெறஞ்சு போச்சுடே!

ஆடுமாடு said...

இலவசம் வாங்க... இன்னும் முடிக்கலை.. நாளைக்கு கொஞ்சம் இருக்கு.

☼ வெயிலான் said...

குச்சூட்டானுக்கும் கவல இருக்கத் தான் செய்யுது போல!!!!

துளசி கோபால் said...

அதுஞ்சரி. குச்சூட்டானோ, மச்சூட்டானோ கவலை எதாவது ஒண்ணு இருக்கத்தானே செய்யுது(-:

பய ரொம்ப சூச்சமமாக் கவனிக்கிறவந்தான்:-)

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, கவலை யாருக்குத்தான் இல்லை.

ஆடுமாடு said...

துளசி டீச்சர், இவன் பாசக்கார பய.

வீரமணி said...

சார் நல்லா இருக்கீங்கிளா.. குச்சூட்டான் படித்ததும் மிரண்டுப்போயிட்டேன்.. நல்லாருக்கு சார். மிரட்டுங்க.......

நிறைய அன்புடன்
வீரமணி

வீரமணி said...

சார் நல்லா இருக்கீங்கிளா.. குச்சூட்டான் படித்ததும் மிரண்டுப்போயிட்டேன்.. நல்லாருக்கு சார். மிரட்டுங்க.......

நிறைய அன்புடன்
வீரமணி

ஆடுமாடு said...

veeramani sir, nalla irukken. ungalukku vipathunnu kelvi patten. accidentame? kai paravaillaiya?
(font problem,athan english)