Sunday, November 11, 2007

குச்சூட்டான் - கேரக்டர் 3

தெப்பக்குள அரசமரடிதான் பயலுக்குப் போக்கிடம். காலைல கொட்டாவி விட்டுட்டே வீட்லயிருந்து வந்து சேந்துருவான். தோள்ல ஒரு துண்டு. தொவச்சு நாலு நாளான வேட்டி இடுப்புல. இடுப்பு மடிப்புதான் விசேஷமே. பதுங்கு குழி மாதிரி அது அவனுக்கு. வெளில இருந்து பாத்தா என்னமோ பொதையல அமுக்கி வச்ச மாதிரி கும்முனு தூக்கிட்டு இருக்கும். உள்ள, நாலுகெட்டு உடி. ரெண்டு ஙப்பெட்டி. நாலைஞ்சு வெத்தல, இத்தனூண்டு சுண்ணாம்பு, அங்கு விலாஸ் போயில. இவ்வளவயும் தாண்டி சில்லர பைசாவா நெறஞ்சு இருக்கும். ஒரு சாக்கு மூட்டையில போடுதத இப்படி வேட்டியில வச்சிருக்கியலேன்னு, பெரியாச்சி எடக்கு பண்ணுவா. அவன் எந்த எடக்குக்கும் மசியாத பய.

‘வேட்டியில வைக்காம இதுக்குனு ஒரு பைய தூக்கிட்டா அலைய முடியும்?’பாம்.

தெப்பக்குளம்னுதான் பேரு. அதெல்லாம் எந்த காலத்துல ஓடியிருக்குமோ. அரசமரத்தை சுத்தி, சிமெண்ட்ல தளம் போட்ருந்தாங்க. அதுல உக்கார்ந்துருவான். காலையில வயலுக்கு உழ, புல்லறுக்க, கடனாநதி ஆத்துல குளிக்கன்னு போவுத பொம்பளைலுவகிட்ட ஏதாவது தொண தொணத்துட்டே இருப்பான்.

‘‘ஏ இலஞ்சியா மவள, உங்கப்பன் சொவரு முட்டிய போட்டுட்டு, நேத்து லட்சுமணன் கடை முன்னால விழுந்து கிடந்தான... எப்ப வந்தான்?"

அவளுக்குச் சுள்ளுனு கோவம் வரும். கூட வார கொமரிகள் முன்னால அப்பாவ இளக்காரமா பேசுனா வராதா?

‘‘ஆமா ஒருந்தான் வேட்டியில்லாம கெடந்ஙரு. வேட்டிய அவுத்து போட்டுட்டு நெல கொல தெரியாம கெடந்தீராம?"

‘‘ஆமா, இவ பாத்தா?"
‘‘உன் வீட்டுக்காரி பிச்சம்மக்கா வாரியலால நாலு சாத்து சாத்துனதையும்தான் பாத்தேன்."

"ஏ கூறுகெட்டவளே..."

‘‘நீருதாம்யா கூறுகெட்டால இருக்கேரு"

‘‘மோறையில வக்கு"

‘‘ஒம்ம மோறையிலதான் வக்கணும்"

‘‘தொடைய நவுட்டி போடுவம்ட்டி"

‘‘அதெல்லாம் பிச்சம்மாக்காட்ட"

‘‘முளைச்சு மூணு எல விடதுக்குள்ள வாய பாரேன்"

‘‘பத்து எல விட்டது, பண்ணுத கூத்த பாரேன்"

அவ கூட வந்த பிள்ளைலூவோ சிரிச்சுட்டே போவும். பதிலுக்கு மானத்தை வாங்கிட்டாளேன்னு கோவமோ கவலையோ அவனுக்கு வராது. இதனாலயே நிறைய பொம்பளைலுவோவுக்கு இவனைக் கண்டா ஒரு இது.

வெயிலு சுள்ளுனு உறைக்குத நேரத்துல துண்டை ஒதறிட்டு கௌம்புவான். நேரா சைலு டீக்கடை. அங்க பந்தலு போடுதவரு நிப்பாரு. அவனுக்கு டீயும், கடைல வடை இருந்தா வடை, தட்டை இருந்தா தட்டையும் உண்டு.
‘‘அடுத்த வாரம் செக்கடியூர்ல கோயிலு கொடை. நெறைய முள்ளு வேணும் பாத்துக்கோ. மறந்துராத"னு அவன் கையில அஞ்சு ரூவாவ திணிப்பாரு. வாங்கிட்டு னட்டுக்கு போவான்.

பொண்டாட்டி பிச்சம்மா பெரிய வீட்டு தொழுவத்துல சாணி அள்ளி தூத்துட்டு வீட்டுக்கு வந்துருப்பா. பெரிய வீட்டுல பழைய சோறு இருந்தா ஒரு ஈய பானையில கொடுப்பாவோ. தண்ணியும், சோறுமா இருக்கும். வார வழியில கொல்லையில கீழ விழுந்து கிடக்குத மாங்காய்ல ரெண்டை பெறக்கிட்டு வந்துருவா.

இவன் வீட்டுக்கு வந்ததும் கையில இருக்குத அஞ்சு ரூவாய கொடுப்பான். அவளுக்கு தெரியும். இந்த மாதிரி கொடுத்தாம்னா முள்ளுக்கு போவணும்னு. கூரையில சொருவியிருக்குத டயரு செருப்பை எடுத்து டாம்னு போடுவான். தூசியா பறக்கும். முள்ளுக்கு போனா மட்டும்தான் செருப்பு. மத்த நேரத்துல வெறுங்காலுதான். அதுக்குள்ள அவா, மாங்காய சின்னசின்னதா வெட்டி, கிண்ணத்துல வச்சு, கூடவே உப்பையும் வப்பா.

சம்மணம் போட்டு உக்காருவான். சின்ன சட்டியில இவனுக்கு மட்டும் தண்ணியும் சோறுமா கொஞ்சம் ஊத்தி வைப்பா. கைய வுட்டு கலக்கிட்டு வாயில வச்சு ஒரே இழு. குளு குளுன்னு குப்புனு வயித்துக்குள்ள சோறு போவும். கூடவே மாங்காத்துண்டை எடுத்து சவப்பான்.

‘‘இந்த வெயிலுக்கு நீத்தண்ணியும் சோறும் தேவாமிர்தமா இருக்கே"ம்பான்.
தின்னு முடிச்சதும் வெளிய வந்து பீடிய பத்த வப்பான். நேரா ஒரு நடை. சுப்பையா கிழவன் தோப்புலதான் அவன் காலு நிக்கும். தோப்புன்னா சரியான தோப்பு. இந்த வழியிலயிருந்து பின் பக்கமா போவதுக்கு பர்லாங்க் நடக்கணும்.

தோப்புக்கு மேக்கத்தான் காரமுள்ளுவோ கிடக்கும். முள்ளுனா சாதாரண முள்ளுயில்லை. ஒவ்வொண்ணும் சுண்டுவிரல் நீளத்துக்கு இருக்கும். ஆக்கங்கெட்ட மூதியோ கையில குத்துனா தொண்டையில மீனு முள்ளு குத்தி நின்ன மாதிரி பிழிச்சு எடுத்துரும் வலி. அடுத்த நிமிஷமே ரத்தம் வடியுத இடத்துல சுண்ணாம்பை வச்சுரணும். சுண்ணாம்பு, வெஷத்தை முறிச்சுரும். இல்லனா படுத பாடு யாருக்கு தெரியும்?

முள்ளையும், சும்மா போனோம் வந்தோம்னு புடுங்கிர முடியாது. நேக்கு பாத்துதான் புடுங்கணும். அதுல குச்சூட்டான் கில்லாடிலா.

முள்ளு கொடிகிட்ட போயி வேட்டிய அவுத்துருவான். பீடி, வெத்தல, தீப்பெட்டி சமாச்சாரத்தையெல்லாம் ஓரமா வச்சுட்டு, ஏறுட்டுப் பாப்பான். மனசுக்குள்ள சொல்ல மாடனை சின்னதா வேண்டிக்கிடுவான். இடுப்புல இருக்குத சின்ன கொடுக்கருவாளை எடுத்து ஒவ்வொரு முள்ளா அறுப்பான். என்னதான் பத்திரமா புடுங்குனாலும் லேசா அங்க இங்க முள்ளு படாம இருக்காது. இப்பலாம் அவனுக்கு பழகிபோச்சு.

பெறவு அரிச்சு போட்டதயெல்லாம் அள்ளி குவிப்பான். பத்தெட்டு நடந்தா பனை மரங்க நிக்கும். சிறு பனைய பாத்து ஓல பறிப்பான். பயினி குடிக்க மடக்குத மாதிரி ஓலய மடக்குவான். அதுல முள்ளுவோல போடுவான். இதே போல மூணு ஓலையில மடக்கி வச்சிக்கிடுவாம். ஒரு ஓலைக்கு 10 ரூவா.

கோயில் கொடை, கல்யாணம், காதுகுத்துன்னா பந்தல் போடுவாங்க. தென்னந்தட்டி பந்தல போட்டு, அது தெரியாம இருக்க சலவை காரங்ககிட்ட வாங்குத வெள்ளை வேட்டிய போட்டு மறைப்பாங்க. வேட்டிய பந்தல்ல சேர்க்க இந்த முள்ளுதான் ஒதவும். பந்தல அவுக்கும் போது முள்ளுவோல திரும்ப எடுக்கத்தான் நெனைப்பாங்க. ஆனா மொறிஞ்சு போவும். கொஞ்சம் கீழ விழுந்துரும். இதனால ஒவ்வொரு பந்தலுக்கும் முள்ளு தேவைப்படும். இவன்தான் சப்ள. ஆடி மாசம்லாம் ஒரு விசேஷம் நடக்காது. இவனுக்கும் வேல இருக்காது. ஆனாலும் பந்தக்காரரு தங்கமானவரு. இவனுக்கு அஞ்சு பத்துனு அப்பப்போ கொடுப்பாரு. ஏன்கதுக்கு கதையிருக்கு.

குச்சூட்டானுக்கு அப்பம் 14 வயசு இருக்கும். ஒத்த புள்ள. இவன் அப்பனும் ஆத்தாவும் ஒரு தூசு துரும்ப தூக்க விடமாட்டவோ. அவ்ளோ செல்லம். தென்காசில துட்டி வீட்டுக்குப் போயிட்டு திரும்பும் போது ஆழ்வார்க்குறிச்சி திருப்பத்துல பஸ் கவுந்து, ரெண்டு பேரும் காலி. ஊரு ஜனமே துடிச்சுப் போச்சு. ஒருத்தரு இருந்து ஒருத்தரு போனா கூட பரவாயில்லை. இப்படி ரெண்டு போய் சேர்ந்துட்டா? இந்த பய அனாத மாதிரி நின்னாம். பெறவு அவன் குடிகார மாமா வளத்தாரு. அவரு கொத்த வேளைக்கு போறவரு. இவனை அவரால படிக்க வைக்க முடியலை. முடியனலங்கறதது அவனுக்கும்தான். மூணாப்பு்க்கு பைக்கட்ட தூக்குனதோட சரி. பெறவு நமக்கும் படிப்புக்கும் சரிபட்டு வராதுன்னுட்டு ஊர் சுத்த போயிட்டாம்.

குடியிருக்க குச்சு வீடு மட்டும் இந்தப் பயலுக்கு சொந்தம். அவனுக்கு அது மட்டும்தாம் இருந்ததால குச்சூட்டாம்னு பெயர் வச்சுட்டானுவோ ஊர்க்காரனுவோ. அவன் பேரு சொடல. இன்னைக்கு யாருக்கும் சொடலன்னா தெரியாது.

இன்னும் சொல்றேன்.

7 comments:

துளசி கோபால் said...

குச்சூட்டானுக்கு வாய் ரொம்பத்தான் இருக்கு.

ஆனாலும் இப்படி மனசுலே இருக்குறதைப் பட்டுன்னு சொல்ற வெள்ளந்தியாளுங்க இருக்காங்கதான் இப்பவும். என்ன......எண்ணிக்கைதான் கொறைஞ்சு போச்சு(-:

ஆடுமாடு said...

வணக்கம் டீச்சர். இதெல்லாம் நான் சின்ன புள்ளைல சந்திச்ச கேரக்டருங்க. இப்பலாம் இந்த மாதிரி ஆட்களை எங்க போய் தேட?.

நான் சின்ன வயசுல மரமேறி காக்கா முட்டை எடுத்து விளையாடுனேன். இப்ப எல்லா சின்ன பயலுவோளும் கம்ப்யூட்டர் முன்னால ரோட்ராஷ் ஆடிட்டு இருக்கானுவோ. என்ன மாற்றம் பாத்தீங்களா?

ESMN said...

அண்ணாச்சி,
நீங்க சொல்ற மாதிரி
நம்ம ஊருக்கு வாக்கப்பட்டு வந்த பொம்பளைகள அவுக ஊரு பேர சொல்லி கூப்பிடுவாக....
உதாரணத்துக்கு வள்ளியூரா,சத்திரத்தா( தாழையூத்து சத்திரம்),களக்காட்டா,பேய்குளத்தா.........

☼ வெயிலான் said...

(பிரசுரிக்க வேண்டாம்)

அண்ணாச்சி சில எழுத்து பிழைகள் இருக்குது. திருத்திக்கோங்க. தப்பா நெனச்சுக்காதீக. இது கால காலத்துக்கும் நெறய பேரு படிச்சு பாதுக்காக்க வேண்டியது.

நாலுகெட்டு உடி. ரெண்டு ஙப்பெட்டி.
நாலுகெட்டு பீடி. ரெண்டு தீப்பெட்டி


வேட்டியில்லாம கெடந்ஙரு
வேட்டியில்லாம கெடந்தீரு

மோறையில வக்கு
மோறையில வக்க

வாங்கிட்டு னட்டுக்க
வாங்கிட்டு வீட்டுக்கு

ஏன்கதுக்கு கதையிருக்க
ஏன்கிறதுக்கு கதையிருக்கு

கொத்த வேளைக்கு
கொத்த வேலைக்கு

☼ வெயிலான் said...

படிச்சிட்டிருக்கும் போதே, குச்சூட்டான் பேர உங்ககிட்ட கேக்கணும் நெனச்சிட்டிருந்தேன். கடசியில சொல்லிப்புட்டிங்க.

அடுத்து யாரு?

/// தண்ணியும் சோறுமா கொஞ்சம் ஊத்தி வைப்பா. கைய வுட்டு கலக்கிட்டு வாயில வச்சு ஒரே இழு. குளு குளுன்னு குப்புனு வயித்துக்குள்ள சோறு போவும். கூடவே மாங்காத்துண்டை எடுத்து சவப்பான்.///

இப்பல்லாம் எங்க இந்த சாப்பாடு சாப்பிட முடியுது? நெனக்க மட்டும் தான் முடியுது.

ஆடுமாடு said...

சுப்ரமணியன் அண்ணாச்சி வணக்கம். சரியா சொன்னீங்க. நம்மூரு பக்கமா? வருகைக்கு நன்றி.

ஆடுமாடு said...

வெயிலான் சார். நான் எதையும் ஹைட் பண்ணி வைக்கலை. நீங்க பின்னூட்டம் எழுதினா அதுபாட்டுக்கு வந்திட்டிருக்கும். எழுத்துப் பிழை உண்மைதான். சரி செய்கிறேன். வெறொரு எழுத்துருவில் எழுதி கன்வர்ட் பண்ணும் போது இப்படி ஆகிவிடுகிறது. சரிசெய்துவிடுகிறேன். நன்றி.