‘கண்ணகின்னா யாரு சார்வாள்?'
காசி வாத்தியாரு அவன உம்முனு பார்த்தாரு. இவரு ஏம் இப்டி பாக்கருன்னுட்டு பேந்த பேந்த முழிச்சாம். அந்தானி, ‘நீலாம் வில்லடிச்சு கிழிச்சேன்'னுட்டு போயிட்டாரு. கூட வந்த மாடசாமி வாத்தியாரு, ‘உன்னலாம் கூட்டிட்டு வந்தம் பாரு...ஏல கண்ணகி யாருன்னு தெரியாதால'ன்னாரு.
‘தெரியல...சார்வாள்...யாருன்னு சொல்லுங்கோ; நா கதை ரெடி பண்ணிருதேன்னு சொன்னாம்.
‘நீ புடுங்குன'ன்னு சொல்லிட்டு அவரு தோப்ப பாக்க போயிட்டாரு.
கிட்னனுக்கு அவமானமா போயிட்டு. ஒரு காரியமும் நடக்க மாட்டேங்குதேன்னு ஒரு முடிவெடுத்தாம். அவங்க சொந்த கோயில்ல இந்த வருஷம் வில்லு பாடணும்னு.
அதும் லேசு பட்ட காரியமில்ல. மத்த கோயில்லயாவது சொள்ள மாடன், தங்கம்மன், கருப்பசாமி கதையல் பாடிட்டு போயிரலாம். மந்திரமூர்த்தி கதைய அவ்ளவு சீக்கிரத்துல முடிக்க முடியாது. ரொம்ப பெரிசு. மூணு நாளாவும். இந்த பய மாசா மாசம் நடக்குத ஊரு கூட்டத்துல போயி விஷயத்தைச் சொன்னாம். எல்லாருக்கும் சிரிப்பாணி.
‘அதுயென்ன வெளயாட்டு காரியமால, கூறுகெட்டால பேசாதே'னு தலைவரு சொல்லிட்டாரு.
‘இது எனக்கு மான பிரச்னை. நம்ம கோயில்லயே எனக்கு பாட வாய்ப்புக் கொடுக்காட்டா, வேற எந்த பய, என்னய கூப்டுவாம். நான்தாம் பாடுவன். வெளி வில்லுக்காரனுக்கு ரெண்டாயிரம் ரூவா கொடுக்க போறியோ. எனக்கு சல்லிக்காசு வேண்டாம். வெறும் 101 ரூவா போதும். இதுவும் காசு வாங்காம பாடக் கூடாதுன்னுதான்'னு சொன்னான்.
ஆளாளுக்கு எடக்கு பண்ணி பேசுனாவோ.
‘பயலுக்கு கோட்டிக்கீட்டு புடிச்சுட்டாவே'
‘இந்த கிறுக்குக்கு வில்லுபாடணும்னு எப்டில தோணுச்சு?'
‘இவம் நம்மல கேவலப்படுத்தணும்னு நெனச்சுட்டாம் போலுக்கு'
ஆளாளுக்கு பேசுனாவோ. எல்லாத்தையும் கேட்டுட்டு இருந்த பய, ‘நா ஒண்ணும் சாதாரண ஆளு கெடயாது; எல்லா பொலவருட்டயும் போயி பாடிட்டு வந்திருக்கேன்'ன்னான்.
ரூவா வேற வேண்டாம்னு சொன்னானா, காசு வெஷயம் வந்ததும் சத்தம் அடங்கி போச்சு. ரெண்டாயிரம் ரூவாயை இழக்காண்டாமேன்னுதான்.
‘ஏல கிட்னா மூணு நாளு, மந்திரமூர்த்தி, பலவேசக்காரன், பட்றையன், சொல்லமாடன் கதையெல்லாம் பாட வேண்டியிருக்கு. நீ ஒழுங்கா படிப்பியால? கொடைக்கு நாலு ஊர்லயிருந்து கூட்டம் வரும். எல்லாரு வீட்டுக்கும் சொக்காரன், சொந்தக்காரன்னு வருவானுவோ. மூஞ்சிய சுழிச்சுட்டானுவன்னா மானம் போயிரும்'ன்னாரு தலைவரு.
‘அதை நாம் பாத்துக்கிடுதேன். அந்தளவு மண்ணாவா இருக்கேன். நான்தான் இந்த வருஷம் பாடுவேன்'ன்னான். உடனே நொண்டி போலீசு, ‘நீ பொலவன்னு சொல்லுதே... நம்ம சாமி கதையாவது ஒழுங்கா படிப்பியால? கோயில்ல, முக்கியமான சாமி பூடம்லாம் இருக்கு. இதுல எந்த கதைய தப்பில்லாம படிப்பேன்னு சொல்லு. இல்லைனா நாளைக்கு இங்கயே படிச்சு காட்டு''ன்னாம். அவனுக்கும் கிட்னனுக்கும் ஆவாது. கீரியும் பாம்புமா இருப்பானுவோ. இதுதாம் நேரம்னு கொத்திட்டாம். இவன் சொன்னதுக்கு கொஞ்ச பேரு, ‘அதுவும் சர்தாம்'னாவோ.
கிட்னன் இதுதான் சரின்னுட்டு ‘சரி'ன்னுட்டாம். வார வெள்ளிக்கிழமை கோயில்ல வில்லு. ‘மந்திரமூர்த்தி கதைய படிக்கேன்'னு சொல்லிட்டாம்.
மறுநாள்லயிருந்து ஆரம்பிச்சாம் பாட்டை. ஏற்கனவே பப்பு பொலவருட்ட மந்தரமூர்த்தி கதைய எழுதி வாங்கியிருந்தாம். வீட்டுல உக்காந்து எவ்வளவு கொடுமையா பாடணுமோ அவ்வளவு கண்றாவியா பாடித்தொலசாம். அவன் பொண்டாட்டி, புருஷன் திடீர் பொலவனா ஆனதுல வெக்கப்பட்டு சிரிச்சுக்கிட்டே அவனுக்கு வேண்டியதெல்லாம் செஞ்சு வச்சா.
வெள்ளிக்கிழமை. மந்திரமூர்த்தி கோயிலு முன்னால தெருவே கூடியிருக்கு. மைனரு மாதிரி மினுக்கிட்டு வந்துட்டாம். வில்லுலாம் ரெடியாயிட்டு. பக்கத்தூருல அருணாசல பொலவருக்கு கொடம் அடிக்க போறவன, கெஞ்சி கூத்தாடி கூட்டிட்டு வந்துட்டாம். சிங்கி, உடுக்கைனு ஆறு பேரு வந்தாச்சு. பள்ளிக்கூடத்துல இருந்து நாலைஞ்சு பெஞ்சை தூக்கிட்டு வந்து மேடை போட்டாச்சு. மேடைக்கு எதுத்தாப்ல வரிசையா எல்லாரும் உக்காந்திருந்தாவோ. கிட்னன் ஆரம்பிச்சாம்.
மொதல்ல கணபதி புகழ்ல ஆரம்பிச்சு, மந்திரமூர்த்தி கதைக்கு கொஞ்ச கொஞ்சமா வந்தான். அந்தாப்ல ஆரம்பிச்சது பிரச்னை.
கோயில்ல பெரியசாமிக்கு ஆடுதவரு பாதியில எந்திருச்சு, நிப்பாட்டுன்னாரு.
‘என்ன?'ன்னான்.
அவரு கோபமா, ‘‘ஏல நீ என்ன பாடுத... கேரளாவுக்கு போன மந்திரமூர்த்தி, அக்கா தங்கச்சி ரெண்டு பேர் அழகுலயும் மயங்கி, பொய் சொல்லி கல்யாணம் முடிக்காரு... சந்தோஷமா குடும்பம் நடத்திட்டு இருக்கும்போது, சொந்த ஊர்ல ஜவுளி யாவரத்துக்கு வாரவன்தான் உண்மைய சொல்லுதான். அழகுல மயங்குன வர்ணனை இல்லை. பொய் சொல்றதுல வர்ணனை இல்லை. நீ என்ன மண்ணாங்கட்டிய படிக்க. முன்ன சொல்லுதத பின்னால சொல்லுத. பின்னால சொல்லுதத முன்னால சொல்லுத"ன்னு சத்தமா சொன்னாரு.
எல்லாரும் கெக்கபிக்கேன்னு சிரிச்சாவோ. அவன்,‘‘மொத மொத பாடுதேன். கொஞ்சம் அப்படி இப்படிதான் இருக்கும். பொறுத்துக்கங்க'ன்னு சொன்னான். எல்லா பயலுவோலும் எடக்கு பண்ணுதானுவோ. கிட்னன் பொண்டாட்டி பிச்சம்மா பிள்ள, கூட உக்காந்துகிட்டு சிரிச்சுட்டு இருக்கா. சுப்பையா தாத்தா, மந்திர தாத்தா, சொக்கத்தாத்தா எல்லாரும் துண்டை ஒதறி தோள்ல போட்டுட்டு டீக்கடைக்குப் பொறப்டுட்டாவோ.
மூதிக்கு ராகம் சரியா வரல. ஏய், வோய்ன்னு இழுத்தாம்னா ரோட்ல போறாவன கூப்டுத மாதிரி இருக்கு. திரும்ப ஆரம்பிச்சான். கொடம் அடிக்குதவனுக்கு, ஏண்டா வந்தம்னு ஆயிட்டு. பின்னால இருந்து சிங்கி அடிக்குத கூனையன், கருப்பட்டிய பூரா காலி பண்ணிட்டு, கூட்டத்தோட சிரிச்சுட்டு இருக்காம்.
இவன் தேற மாட்டாம்னு முடிவுக்கு வந்துட்டாவோ. கதையில, மந்திரமூர்த்தி ஊருக்குத் திரும்பி, பெறவு நடக்குத கதை வரை சொல்ல ஒன்றரை நாளு ஆவும். இந்தப் பயலுக்கு கொஞ்சம் பயம் வந்துட்டு போலுக்கு.
‘இது சும்மா நான் பாடுவேன்னு காண்பிக்கதுக்குதான். கோயில்ல பாட வச்சா நல்ல பாடுவேன்'ன்னு சொல்லி வில்லை முடிச்சாம்.
கொடம் அடிச்சவன் அங்ஙனயே ரூவாய வாங்கிட்டு, ‘இனும என்னயலாம் கூப்டாதீரும்'னு மூஞ்சில அடிச்சாப்ல சொல்லிட்டு போயிட்டாம்.
வில்லு முடிஞ்ச அதே தோரணயோட செவுட்டு சந்திரன் கடைக்கு டீக்குடிக்கதுக்கு வந்துட்டாவோ எல்லாரும். கிட்னனும் வந்தாம்.
‘‘மந்திர மூர்த்தி கல்யாண காட்சிய நல்லா இழுத்து பாடுனம்லா... எப்டிய்யா இருந்தது''னு கொடுக்குகிட்ட கிட்னன் கேட்டாம் பாருங்கோ. அவருக்கு சுர்னு ஆயிபோச்சு.
‘இங்க பாரு...பாடுன சரி, எப்டியிருக்கு அது இதுனெல்லாம் கேக்காத. நல்லாயிருந்தா நாங்க சொல்லுவோம். உனக்கு வில்லு படிக்கணும்னு ஆசை இருந்தா, சுப்பு வில்லு கூட, அஞ்சாறு வருஷம் சிங்கி அடிக்க போ. பெறவுதான் கொஞ்சமாவது ராகம் வரும் பாத்துக்கோ''ன்னான்.
இவனுக்கு கோவம். கடையில எல்லாரும் உக்காந்திருக்கானுவோ. வெளிகாட்ட முடியல. நேரா வீட்டுக்கு போனாம். பொண்டாட்டிட்ட போயி, ‘எப்டியிருந்துச்சு?'ன்னாம்.
‘‘நல்லாருந்துது. எங்களுக்குத்தான் கேக்க முடியல''ன்னு நமட்டு சிரிப்பு சிரிச்சா அவ.
‘நல்ல பொலவனா ஆயி காட்டுதேம் பாரு'ன்னு அவாகிட்ட சபதம் போட்டாம்.
நாலஞ்சு வருஷமாச்சு. ஒருத்தரும் வில்லடிக்க கூப்டல. இப்பம் சுப்பையா பொலவருட்ட பக்கப்பாட்டு படிக்க போயிட்டிருக்காம். ஆனா சவாலை மட்டும் விடலை.
அவ்ளோதான்.
6 comments:
விடாக்கண்டனாத் தான் இருக்காம் கிட்னன்!
தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட, வந்துவிட்டான் கிட்னனுமே.....
//தந்தனத்தோம் என்று சொல்லியே வில்லினில் பாட, வந்துவிட்டான் கிட்னனுமே.....
//
ரிப்பீட்டேஏஏஏஏஏஏய்:-))))
கிட்ணன் பாடவந்தா சொல்லியனுப்புங்க.
இங்கே எங்கூர்லே ஒரு முறை( ஒரே ஒருமுறைதான்) நம்ம தமிழ்ச்சங்கத்துலே வில்லுப்பாட்டு நடத்துனோம்.
பலன்?
சிலர் சங்கத்துலே இருந்து விலகிட்டாங்க.
வெயிலான் ஐயா. நன்றி. சீக்கிரமே அடுத்த கேரக்டர்.
இலவசம் இது நிஜ கேரக்டர்தான். எங்க ஊர்ல இருக்காரு. மனுஷன் இதை படிச்சாரு. கோங்கருவாவ தூக்கிட்டு வந்து ஒரே போடு போட்டிருவாரு.
துளசி டீச்சர். இவங்கூத்து நெறய இருக்கு. சபை நாகரீகம் கருதி சிலதை விட்டிருக்கிறேன். இவனாவது வில்லு பாடுததாவது...
Post a Comment