Sunday, November 25, 2007

வில்லடிச்சான்: கேரக்டர் 5

நாப்பது வயசுக்கு மேல, கிட்னனுக்கு இப்டியரு புத்தி வந்து தொலைக்குமாயா? வில்லடிக்கது என்ன லேசுபட்ட காரியமா? பாருங்க... ஊர் பூரா, ராத்திரியானா தூங்க முடியல. வில்லு கொடத்தை அடிச்சுச்சுக்கிட்டு, மந்திரமுர்த்தி கதைய கொடூரமா படிச்சுட்டு இருக்காம். ஒரே காட்டுச்சத்தம். எருமைமாடு கணைக்கத மாதிரி வீட்டு வாசல்ல இருந்து தொண்டைய போடுதாம்.

போன மாசம் வெய்க்காலிப்பட்டி தங்கம்மன் கோயில் கொடைக்குப் போனான் சேக்காளி கூப்டாம்னுட்டு. போனா, கெடா வெட்டி தின்னுட்டு, கெரகாட்டம் பாத்துட்டு வர வேண்டியதுதானே. பயலுக்கு கெறக்கம் அங்கதான் ஆரம்பிச்சுது. வில்லடிப்பு நடந்துச்சுப் பாத்துக்கிடுங்க. தங்கராசு பொலவரு பாடிட்டு இருந்தாரு. பக்கத்துல பக்க பாட்டு பாடுனது பொம்பள. சுத்துவட்டாரத்துல அவா கொஞ்சம் பேமசுதான் பாத்துக்கிடுங்க. இவள பாக்க அவ்வளவு கூட்டம். பெறகு எவன் வில்லு கதை கேக்க வருவாம்?

அந்த பொம்பளைக்காவே அந்த வில்லை அமர்த்துனாவோ கொடைக்காரவோ. புள்ளையும் வாட்ட சாட்டமா இருந்தது. கருப்புதான்னாலும் நல்ல களை. மூக்குல போட்டுருந்த ஒத்தக்கல்லு மூக்குத்தி எல்லா பயலுவோலயும் கெறக்கத்துல வச்சுட்டு. பொலவரு லேசா பாடி முடிக்காம இருந்ததும், இவ பொம்பள கொரலுல இழுத்து முடிப்பா பாருங்கோ அது அவ்வளவு நல்லாயிருக்கும். மைக் செட் குழாய்ல கேட்டா கூட ஒரு இது வந்துரும் பாத்துக்கிடுங்கோ. வில்லுபாக்க வந்த கூட்டத்துல இளவட்ட பயலுவோளும் ஜாஸ்தி. எல்லாரும் வாய பொளந்து பாத்துட்டு இருக்காவோ. பொலவருக்கு, நம்ம வில்லை கேக்க இவ்ளவு கூட்டமான்னு சந்தோஷம் தாங்க முடியலை. அவருக்கெப்படி தெரியும் வெஷயம்?

இவனும் எல்லாரு மாதிரியும் போனோம் வந்தோம்னு இருந்தா பரவால்ல. இந்த பயலுக்கும் வில்லடிக்கணும்னு ஆசை. அது சாதாரண வெஷயமாய்யா? எவ்வளவு சாமி கதை தெரியணும். ராகத்தோடு பாடணும். அதை ஒழுங்கா சொல்ல தெரியணும்னு ஏகப்பட்ட இது இருக்கு. இவனுக்கு ஆசை வந்துட்டு பாத்துக்கிடுங்கோ. எல்லாத்துக்குந்தான் ஏகப்பட்ட ஆசிஅ இருக்கு. அதயெல்லாம் நிறைவேத்த முடியுமா?

ரெண்டு நாளா பொரண்டுட்டு கெடந்திருக்காம். பெறவு சந்திரன் சுக்காப்பி கடையில பேசிட்டு இருந்தான். பத்தாடி மவன், கொரங்கன், நண்டன், வசதின்னு எல்லா பயலுவோலும் பேசிட்டு இருந்தானுவோ. பேச்சுவாக்குல வில்லு படிக்க போறம்னு சொல்லியிருக்காம். எடக்குக்குத்தான் சொல்லுதாம்னுட்டு எல்லாரும் எளக்காரமா பேசியிருக்கானுவோ.

‘எல, நான் பொலவனா ஆயி காட்டுதேன் பாருங்க‘ன்னு சவால் விட்டுட்டான். ஆசை ஒருபக்கம் இருந்தாலும் சவாலுன்னு வந்து போச்சுலா. இறங்கிட்டாம் காரியத்துல. எல்லா பயலுவோலும் சிரிக்கானுவோ.

‘ஏல, இருக்குத வெதப்பாட்டை ஒழுங்கா கவனில; அதைவிட்டுட்டு ஏம் இந்த சவாலுலாம்‘னாவோ.

‘நான் சொன்னா சொன்னதுதாம்ல‘ன்னுட்டாம்.

மேலத்தெருல பிச்சை நம்பியாரு, இப்ப முடியாம கெடக்காரு பாத்துக்கிடுங்கோ. நல்ல வில்லு பொலவரு. எல்லாகோயில்லயும் அவரு பாடியிருக்காரு. பாடுனாருனா கொரல் கணீர்னு இருக்கும். பாட்டுல வார வர்ணனைய ராகமா இழுத்துப்பாடுனாருனா ஒரு பொம்பளைலுவோ எந்திரிச்சு போவ மாட்டாவோ. இப்படி பாடியே ரெண்டு ஊர்ல தொசுக்கு வச்சிருந்தாருன்னா பாத்துக்கிடுங்கோ. இவரு மவன இதுல கொண்டு வந்துரணும்னு எவ்வளவோ பிரயாசப்பட்டாரு. வில்லுக்கு போற எடத்துக்கொல்லாம் கூட்டுட்டு போவாரு. அவன் கூறுகெட்ட பய. சேராத பயலுவோட சேந்து உருப்படாம போனவன். அதெல்லாம் ஒரு பொழப்பான்னுட்டாம் அவருட்ட. அவரு சொல்லத்தாம் முடியும். இப்டி சொன்ன பயல வேற என்ன பண்ண முடியும்? பொலவரு நெறய வெத்தலபாக்கு போடுவாரு. அதாவது பரவாயில்ல. போயிலையதான் அதிகமா போட்டு திம்பாரு. அதனால ரெண்டு வருஷத்துக்கு முன்னால ஒரு கையும் இழுத்துட்டு. வேலை செய்ய முடியாது. கேரளால போயெல்லாம் பாத்தாவோ. ஒண்ணும் பண்ண முடியாதுன்னுட்டாம். இப்பம் வீட்ல மொடங்கி கெடக்காரு.
இந்த நேரத்துல போய், இவன் வில்லு படிக்கணும்னு சொன்னதும் அவருக்கு ஆச்சரியம் தாங்கல. நம்மளயும் மதிச்சு ஒரு பய வாரேன்னுட்டு, ‘பொதங்கிழமை வா‘ன்னு அனுப்பிட்டாரு. ஊருபூரா சொல்லிட்டாம். பொதங்கிழமையில இருந்து வில்லு படிக்க போறேன்னுட்டு. பாதி ஜனம் எக்காளமா பேசிட்டு இருந்தது. இவன் எதுக்கும் கவலை படலை.

அன்னைக்கு காலைல குளிச்சு முடிச்சு, நெத்தில பட்டய போட்டுட்டு போயிட்டாம். அவரு அரிச்சுவடில ஆரம்பிச்சாரு. இவனுக்கு என்ன ஏறுச்சோ. தெனமும் உக்காந்து பொஸ்தவத்தை கொடுத்து எழுத சொல்லுவாரு. இவனுக்குதான் சரியா எழுத படிக்க தெரியாத. என்னத்தை எழுதுனானோ. பெறவு அவரு ராகமா பாடுவாரு. கொஞ்ச நாளு அவரு வீட்டுக்கு போயிட்டு இருன் தாம். அவரு ஒரு வார்த்தை சொன்னாரு:

என்னதான் நான் சொல்லிக்கொடுத்தாலும் பாடுறத கேட்டாத்தான் சரியா மனசுல பதியும். அதனால கொஞ்ச நாளு பக்க பாட்டுக்கு யாரு கூடவாவது போறியா? நா வேணா சொல்லிவுடுதேன்னாரு.

அந்தானி இவனுக்கு கோவம் வந்துட்டு. நம்மள போயி பக்கப்பாட்டுக்கு போவ சொல்றாரேன்னு. அதுலயிருந்து அவரு வீட்டுக்கு போறத விட்டுட்டாம்.

பெறவு, கல்லிடக்குறிச்சு பப்பு பொலவரு, நல்லா வில்லு பாட்டுப் படிப்பாருன்னு கேள்விபட்டு, சுத்து பட்டுல எந்த கோயில்லயெல்லாம் அவரு பாடுதாரோ, அங்கெல்லாம் போவ ஆரம்பிச்சான். கதையில எந்த வரியில பாட்டா பாடுதாரு, எதுவோல இழுத்து சொல்லுதாரு, எதை வேகமா படுதாருன்னு கவனிச்சான்.

சொல்லுதேன்

9 comments:

☼ வெயிலான் said...

அண்ணாச்சி!

வில்லடிச்சானக் கூட்டிட்டு வந்துட்டீகளா?

மொதல்ல விசிலடிச்சான்'னு படிச்சுப்புட்டேன். அப்புறம் ஆற அமரப் படிச்சா வில்லடிச்சான்.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, வருகைக்கு நன்றி. இப்படி நிறைய கேரக்டர்களை எழுதி புத்தகம் போடலாம்னு இருக்கேன்.

துளசி கோபால் said...

நம்மைச்சுத்தி இருக்கும் மனுசங்களில்தான் எத்தனையெத்தனை வகை!

ஒவ்வொருத்தரும் ஒரு கேரக்டர்தாம்லெ.

அருமையாத்தான் எழுதிக்கிட்டு வர்றீங்க.

புத்தகம் சீக்கிரம் வரட்டும்.

வாழ்த்து(க்)கள்.

ஆடுமாடு said...

நன்றி துளசி டீச்சர்.

☼ வெயிலான் said...

// புத்தகம் போடலாம்னு இருக்கேன் //

மறக்காம எனக்கு ஒரு புத்தகம் அனுப்பிச்சிருங்க.

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, கண்டிப்பா.

ESMN said...

புத்தகம் போட வாழ்த்துக்கள்.

ESMN said...

வில்லுபாட்டு பிறந்ததே திருநெல்வேலியில்தான் என்று பிரபல வில்லுப்பாட்டு கலைஞர் சுப்பு ஆறுமுகம் கூறியுள்ளார்.மேலும் விபரங்களுக்கு கீழ்கண்ட இணைய முகவரியில் பார்க்கவும்.

http://www.aaraamthinai.com/kalai/interview/aug01interview.asp

ஆடுமாடு said...

எருமை மாடு நன்றி. சுப்பு ஆறுமுகம் பேட்டியை ஏற்கனவே படித்திருக்கிறேன்.