Monday, December 14, 2015

ஆதலால் தோழர்களே 1

எப்போதும் எல்லா கட்சிக் கூட்டங்களும் மாலை எட்டு மணிக்கு மேல்தான் ஆரம்பிக்கும். சில நேரம் கொஞ்சம் முன்னே பின்னே நடக்கும். மேடை என்பது பள்ளிக்கூட பெஞ்ச்களை அடுக்கி அதன் மேல் சேர்களைப் போட்டு உட்கார்ந்துகொள்வது. எந்த மனவருத்த மும் இல்லாமல் பள்ளி நிர்வாகமும் பெஞ்ச்களை இந்த மாதிரியான கூட்டங்களுக்கு இலவசமாகக் கொடுத்து வந்தது. கூட்டம் முடிந்ததும் பள்ளிக்கு, பெஞ்சுகள் திரும்பிவிட வேண்டும்.
இன்றும் அப்படித்தான். பேச்சாளர் பரமசிவனிடம் இருந்து, பைசா தேறாது என்பதால், பள்ளிக்கூடத்தில் இருந்து பெஞ்சுகளை வழக்கமாக எடுத்துவரும் சுப்பையாவும் மாரியும் இன்று காணாமல் போயிருந்தனர்.

காலையிலேயே மைக் செட் முத்து, இரண்டு பேரிடமும் பெஞ்ச்களை எடுத்துவருவது பற்றிச் சொல்லியிருந்தான். இருந்தும் காணவில்லை. பிறகு பரமசிவத்துக்காக, கணேசன் பணம் தருவதாகச் சொன்னதை யடுத்து சுப்பையாவும் மாரியும் திடீர் பிரசன்னமாகி இருந்தனர்.

வேலு கடையில் இருந்து டீ வந்தது. இடுப்புவரை தொங்கும் கரு நிறத்துண் டை பின்பக்கம் இழுத்துவிட்டுவிட்டு, பரமசிவம் கம்பீரமாகப் பார்த்தார். அது அவரது வழக்கமான பார்வை இல்லை. இன்று ஏதோ ஒன்று அவர் உடலில் புதிதாகத் தொற்றிக் கொண்டது மாதிரி தான் இருந்தது. அரசமரத் திண்டில் நான்கைந்து பேர் உட்கார்ந்திருந் தார்கள். தனது பேச்சைக் கேட்க, அவர்கள் இப்போதே வந்து விட்டா ர்கள் என அவர் நினைத்துக் கொண்டார்.

யார் என்ன பேசினாலும் எல்லாவற்றையும் கேட்டுவிட்டு, அமைதி யாகத் தங்கள் வேலைகளைப் பார்க்கச் சென்றுவிடும் மனிதர்கள் அவர்கள். 'எவன் பேசி நமக்கென்ன ஆவப்போது. கஞ்சி தண்ணிய அவனுவளா தரப்போறா னுவோ?' என்கிற கேள்வியை மனதில் வைத்துக்கொண்டே நடமாடிக் கொண்டிருப்பவர்கள். இருந்தாலும் யாரோ ஒரு ரட்சகர் தங்கள் நிலையை மாற்றுவார் என்கிற பிரம்மை யை மனதின் ஓரத்தில், துருப்பிடித்த நம்பிக்கையாக வைத்திருக்கிறார் கள். மேடையில் யார் என்ன பேசினாலும் அவர்களுக்கு அது பொழு துபோக்கு. எந்தக் கட்சிக்காரன் பேசினாலும் அவர்கள் கை தட்டு வார்கள். சில நேரங்களில் யாராவது விசிலடித்தால் அவர்களோடு சேர்ந்து விசிலடிப்பார்கள். மற்றபடி எவரின் கருத்துகள் மீதும் அவர் களுக்கு உடன்பாடே.

இதைத்தாண்டி ஊரில் அறிவாளிகள் என்று நம்பப்படும் சிலரும் இருந்தனர். தினமும் பேப்பர் வாசிக்கிற பழக்கமுள்ள அவர்கள் யார்  என்ன பேசினாலும் அதை அலசி ஆராய்ந்து, 'அவரு இப்டி பேசியி ருக்கக் கூடாது' என்று விவாதிப்பார்கள். அல்லது 'பிரம்மாதமா பேசிட் டாம்ல' என்று பாராட்டு வார்கள். இவர்களின் பாராட்டு, பேச்சாளர் பரமசிவத்துக்கு எப்போதும் உண்டு. இவர்கள் இன்னும் வந்து சேரவில்லை. கூட்டம் ஆரம்பிக்கப் போகிற அறிவிப்பைக் கேட்டு வருபவ ர்கள் இவர்கள்.

டீயை குடித்துக்கொண்டே, அரச மரத்தைத் தாண்டிப் பார்த்தார் பரமசிவம். அங்கே, வீட்டுவாசலில் ஆனந்தவள்ளி டீச்சர் தனது மகனை மடியில் வைத்துக்கொண்டு உட்கார்ந்திருந்ததைக் கண்டதும் முகத் தில் மலர்ச்சி. போதும் அவருக்கு. அந்த டீச்சருக்காக மட்டுமே அவர் பல மணி நேரம் பேசுவார். டீச்சருக்கும், பேச்சாளர் பரமசிவம் மீது ஒரு இது இருக்கத்தான் செய்கிறது. இருவரும் எதிரெதிர் சந்தித்தால் இளங்காதலர்கள் போல வெட் கத்தில் புன்னகைப்பதையும் தலையை கவிழ்த்துகொண்டு சிறிது தூரம் சென்று, திரும்பிப் பார்த்துக் கொள் வதையும் ஊரில் பலர் கவனித்திருக்கிறா ர்கள்.

எப்போதாவது மாலை நேரங்களில் டீச்சரைப் பார்க்கும் சாக்கில் அரசமரத் திண்டில் உட்கார்ந்து சிகரெட் புகைப்பார் பரமசிவம். அந்த நேரத்தை மனதில் வைத்துக்கொண்டு, டீச்சர், தான் வாங்கியிருக்கிற புது டேப் ரெக்கார்டரில், 'அலைகள் ஓய்வதில்லை' படத்தில் ஜானகி யின் குரலில் வரும், 'தரிசனம் கிடைக்காதா?' என்ற பாடலைச் சத்தமாக வைப்பாள். பிறகு தனது மகனை கையில் தூக்கி வைத்தபடி வாசலில் வந்து நின்றுகொண்டு புன்னகைப்பாள். அந்தப் புன்னகை தரும் கிறக்கம் வேண்டும் பரமசிவத்துக்கு. தனக்குள் சிரித்துக்கொண்டே இருக்கும் போது, அடுத்த பாடலாக, 'ஆயிரம் தாமரை மொட்டுக்களே வந்து ஆனந்தக்கும்மிகள் கொட்டுங்களே' வரும். இந்த நேரத்தில் டீச்சரின் முகத்தில் தெரியும் வெட்கமும் புன்னகையும் புதியது. இது காதல் வெட்கம் என்று எல்லோராலும் எளிதில் கண்டுபிடித்துவிடக்கூடிய முகமாற்றம் அது. இவ்வள வுதான். இந்தக் கோட்டை இரண்டு பேருமே தாண்டவில்லை என்பது இதுவரைக்கான கதை.

பரமசிவனின் காதல் மனைவிக்கு விவகாரம் தெரியாதவரை பிரச்னை என்று ஏதுமில்லை. தெரிந்தால் நடக்கின்ற வாய் மற்றும் குடுமிபிடி சண்டைகளுக்கு பல முன்னுதாரணங்கள், காணக் கிடைக்கின்றன ஊரில்.

பரமசிவன், காதல் திருமணம் செய்தவர். ஒரே இனத்தில், ஒரே தெருவில் வசித்த, அத்தை மகள் முறைகொண்ட கிருஷ்ணவேணியை காதலித்து, எந்தவிதச் சிக்கலுமின்றி திருமணம் செய்துகொண்டார்.

தெருவில் தண்ணீர் பிடிப்பதில் இருந்து பக்கத்துவீட்டு ஆட்டுக்குட்டி  வீட்டு வாசலில் புழுக்கைப் போட்டுப் போனால் கூட, கொதித்து கூப் பாடு போடும் புரட்சிக்காரியாகத் தெருவில் அடையாளம் காணப்பட்டிருந்தாள் கிருஷ் ணவேணி. அவளுக்குத் தெரியாத கெட்ட வார்த்தைகளே இல்லை என்பதால் அவளுடன் சண்டை போடுவதையோ, வாயைக் கொடுப்பதையோ எவரும் செய்வதில்லை. அப்படியும் வாய்த்தவறி அல்லது எதேச்சையாக ஏதும் பேசிவிட்டால், சண்டை நடக்கும் இடத்தில் இருந்து ஓடி விடுவதிலேயே குறியாக இருப்பார்கள். தெருவில் வளவு வீட்டில் பீடி சுற்றும் பெண்கள், அவளுக்கு 'ஆயிரம் கெட்டவார்த்தைப் பேசும் அபூர்வ கிருஷ்ணவேணி' என்கிற பட்டப் பெயரை ரகசியமாக வைத்திருக்கிறார்கள்.

டீ குடித்துவிட்டு சிகரெட்டை பற்ற வைத்துக்கொண்டார் பரமசிவன். புகையை இழுத்துவிடுவதில் ஒரு தோரணை தெரிந்தது. வி.கே.புரத்தில் மில் வேலையை முடித்துக்கொண்டு சைக்கிளில்  திரும்பும் முருகேசன், இவரைக் கண்டதும் நிறுத்தினான். அங்கிருக்கும் சூழலைப் பார்த்தவாறே, 'என்ன பரம்சம்?  கூட்டமாடே?' என்றான்.

'ஆமா'

'யாருமே சொல்லலயே'

'இது திடீர் கூட்டம்லா'

'திடீர் கூட்டமா? யாரு பேச வாரா?'

'நாந்தான்'

'நீ சரி, வேற யாரு?'

'வேற யாருமில்ல'

'யாருமில்லயா, கட்சிக்கொடியவும் காங்கல?'

'கட்சிக்கும் இதுக்கும் சம்பந்தமில்லை.  தனிப்பட்ட கூட்டம்'

அதிசயமாகப் பார்த்தார் முருகேசன்.

பெஞ்சுகள் கொண்டுவரப்பட்டு மேடை அமைக்கப்பட்டிருந்தது. வழக்கமாக எல்லா பொதுக்கூட்டங்களுக்கும் பந்தல் போடப்பட்டி ருக்கும். இந்தக் கூட்டத்துக்கு அப்படி ஏதும் இல்லை. இரண்டு பக்க மும் இரண்டு கம்புகளைப் பெயருக்கு நட்டு வைத்துவிட்டு நடுவில் பெஞ்சுகள் அடுக்கி வைக்கப் பட்டிருந்தன. அந்தக் கம்புகளில் ட்யூப் லைட் கட்டப்பட்டிருந்தது. பரமசிவம், மைக்செட் முத்துவிடம் ஒரு பள்ளிக்கூட பையனின் நோட்டில் இருந்து கிழித்த, கோடு போட்ட பேப்பர் ஒன்றைக் கொடுத்தார்.

அதில், 'பேரன்புகொண்ட பெரியோர்களே, தாய்மார்களே... இன்னும் சிறிது நேரத்தில் நம் உணர்வுகளை ஒருங்கிணைக்கும் விதமாக தோழர் பரமசிவம் அவர்கள், எழுச்சி உரை ஒன்றை இங்கே ஆற்ற இருக் கிறார்கள். அனைவரும் வருகை தந்து சிறப்பிக்க வேண்டுகிறோம். இது அரசியல் கூட்டமல்ல. ஆனால் அவசியக் கூட்டம் என்பதை மறந்து விடக் கூடாது...' என்று எழுதப்பட்டிருந்தது.

மைக்செட் முத்து, பரமசிவத்தைப் பார்த்தான். ஓடிக்கொண்டிருந்த கொள்கைப் பாடலை நிறுத்திவிட்டு, மைக்கை ஆன் செய்தான். பேப்பரில் எழுதப்பட்டி ருந்ததை வார்த்தைகளை கணமாக்கி மைக்கில் வாசித்தான். பரமசிவம் அவனைப் பார்த்துச் சிரித்தார். பிறகு இன்னுமொரு சிகரட்டை எடுத்து பற்ற வைத்துக்கொண்டார்.

இந்த அறிவிப்புக்குப் பிறகு அங்கு கொஞ்சம் கூட்டம் சேர்ந்திருந்தது.  ஒரு காலை இழுத்து இழுத்து நடக்கிற கீரைத் தோட்ட ஆச்சி, 'எய்யா பரம்சம். கட்சிக் கூட்டமில்லனா என்னத்தடே பேசப்போற?' என்று கேட்டுவிட்டு நின்றாள். அவள் பிடித்திருந்த வெள்ளாடு அவளை இழுத்தவாறு முன்னேறிக்கொண்டு நின்றது. அவள் திரும்பி அதை திமிறி இழுத்து, 'நில்லு' என்றொரு அதட்டலைப் போட்டாள்.

'இன்னா செத்த நேரத்துல ஆரம்பிச்சிருவம்லா, அப்பம் கேளு'

'போனக் கூட்டத்துல ஒரு பாட்டுச் சொன்ன பாரு. இன்னும் நெஞ்சுக்குள்ளயே கிடக்கு'

'அது கவிதை'

'என்னமோ. அத மாதிரி ரெண்டு பாட்டை சொல்லு இன்னைக்கும்' என்ற ஆச்சி, வெள்ளாட்டின் அவசரத்துக்காக, வாயைப் பிதுக்கிவிட்டு நடந்தாள்.

பரமசிவன் சிரித்தார். தன்னைத்தானே மெச்சிக்கொண்டார். வயலும் ஆடுமென இருக்கும் கீரைத் தோட்ட ஆச்சியையே அசர வைத்த தனது பேச்சுத் திறமையை வியந்து தனக்குத்தானே ஒரு மாலையை மனதுக்குள் போட்டுக்கொண்டார்.

இப்போது இன்னும் சிலர் கூடியிருந்தார்கள். அதில் அவரோடு கம்யூனிஸ்ட் கட்சிக் கூட்டங்களில் பேசுகிற பிச்சைமுத்துவும் கல்யாணி என்கிற கல்யாணசுந்தரமும் இருந்தார்கள். இவரைப் பார்த்து அங்கிருந்தபடியே சிரித்தார்கள். அவர்கள் தோளில் தொங்கும் சிவப்பு நிற தேங்காப்பூத் துண்டு சில நேரங்களில் குளிருக்கும் பயன்படும். இப்போது மைக்கை மேடையில் வைக்கச் சொன்னார் பரமசிவன்.  கட்சிக்கூட்டங்களில் அவர் பேசும்போது, 'பேச்சில் அனலையும் அன்பையும் வைத்திருக்கிற தோழர் பரமசிவன் அவர்கள், இப்போது உங்கள் முன் எழுச்சி உரையாற்றுவார்' என்று அறிவிப்பு செய்வார்கள். இன்று அறிவிக்க ஆளில்லை. தானே எல்லாம் என்று ஆன பின், தன்னை அப்படி அறிவிக்கத் தேவையில்லை. ஏறினார் மேடையில். வைக்கப்பட்டிருந்த மைக்கைப் பிடித்து, 'பேரன்பு கொண்ட பெரியோர்களே... தாய்மார்களே...' என்று ஈர்க்கும் குரலில் பேச ஆரம்பித்தார்.

ஊர் அமைதியானது.

(தொடர்கிறேன்)

No comments: