Tuesday, December 22, 2015

ஆதலால் தோழர்களே 2

பரமசிவம், குடும்பத்தில் கடை குட்டி. பொதுவாக, எல்லா குட்டி களுக்குமே செல்லம் அதிகம் என்பதால், கடை குட்டியான இவருக்கும் வீட்டில் செல்லம். மூன்று அண்ணன்கள், ஓர் அக்காள். அக்காவை சிறு வயதிலேயே அம்பாச முத்திரத்தில் கட்டிக்கொடுத்து விட்டார்க. பக்கத்து ஊர்தான் என்றாலும் அதிகமாக இங்கு வருவதில்லை அவள். எப்போதாவது வருவாள் என்பதால், அக்கா என்பவள், அல்வாவும் காரச்சேவும் வாங்கி வருபவள் என்பதும் ஊருக் குத் திரும்பும்போது காசு தருபவள் என்றளவிலேயே பரமசிவத்துக்குத் தெரி யும். அண்ணன்களில் மூத்தவருக்கு ரெண்டு மனைவி. அவருக்கு கொஞ்சம் வயலும் சிறு தோப்பும் இருக்கிறது என்பதால் எப்போதும் அங்கு உழைத்துக் கொண்டிருப்பவர். அடுத்த அண்ணன், கூவிலை பறித்து விற்கும் தொழில் செய்துவந்தார் சிறுவயதிலேயே. கடைசி அண்ணன், வில்லடிக்கப் போய்க் கொண்டிருந்தார். அவர்க ளுக்கும் இவனுக்கும் பதினைந்து வயது வித்தியாசம். ரொம்ப தாமத மாக பிறந்ததாலோ என்னவோ அண்ணன்கள் அநியாயத்துக்குப் பாசத் தைக் கொட்டினார்கள்.

அவனது அப்பா ஆண்டியுடன் தேனீர் கடைக்கோ, அல்லது வேறு எங்காவதோ பரமசிவன் போனால், 'என்ன ஆண்டி, இது உம் பேரனாடே?' என்று கேலி பேசு வார்கள் அவரது வயதையொத்தவர்கள்.

'ஒங்களுக்கெல்லாம் எடக்காவால இருக்கு, ஏலுவத்தவனுவளா?'

'யாரை ஏலுவத்தவன்னு சொல்லுத?

'பின்ன என்னல எடக்கு? என்னய மாதிரி, இந்த வயசுல, ஏறி நின்னு பெத்து போடம்ல. அதை விட்டுட்டு எடக்கு பண்ணுத?'

'ஒனக்கு வெட்கம், மானம் கெடயாது. பேரனை கொஞ்ச வேண்டிய நேரத்துல பிள்ளய பெத்துப்போடுவே... எங்களால முடியுமா?'

'முடியலன்னு ஒத்துக்கிட்டலால. அப்பம் வாயை பொத்து. இதுக்கு என்ன வெட்கம் மானம் வேண்டி கெடக்கு?' என்பார் ஆண்டி. 

டீ போட்டுக்கொண்டே இதைக் கவனிக்கும் வேலு, வேடிக்கையாக சிரிப்பான்.
'என்னடே வேலு. முடியலன்னு சொல்லிட்டாம், கேட்டியா?'

'கேட்டேன், கேட்டேன்'

'நான் முடியாதுன்னு சொன்னது வேற வெஷயத்தை?'

'பெரிய மனுஷனுவோ பேசுத பேச்சாவே இது. அக்கம் பக்கத்துல பொம்பளைலுவோ இருக்காவோ, பேசுதானுவோ பேச்சு' என்று விறகு வெட்டப் போகும் கருத்தக்கண்ணு சொன்னதும் வேறு விஷயத்துக்கு தாவு வார்கள். 

பரமசிவத்துக்கு அந்தக் கடையின் ஆம வடையும், சுக்காப்பியும் பிடிக்கும். எப்போதெல்லாம் அது தேவையாக இருக்கிறதோ, அப்போ தெல்லாம் அப்பாவுடன் இங்கு வந்துவிடுவான். வழக்கம் போல அப்போதெல்லாம் இதே கேலி பேச்சுகளும் நடக்கும்.

இப்படியான பாசக் குடும்பத்தில், 'நம்ம வம்சத்துல இவனை மட்டு மாவது படிக்க வைக்கணும்' என்று தீர்மானம் நிறைவேற்றினார்கள். இதற்கு, கொ ஞ்சம் படித்தவரான, அக்காள் கணவரான அம்பாசமுத்திரம் அத்தானிடம் விவ ரம் கேட்டார்கள்.

'உங்க கூட இருந்து உள்ளூர்ல படிச்சாம்னா, அவன் நாசமா போயி ருவான். நீங்களே கழுதையாக்கிருவியோ. அதனால எங்கிட்ட விட்டுருங்க. நான் பாத்துக்கிடுதேன்' என்கிற விருப்பத்தைச் சொன்னார் அவர்.

பரமசிவத்தின் அம்மாவான அனச்சி, 'ஐயையோ எம் புள்ளய எங்கயோ விட் டுட்டு, நான் என்ன செய்ய? என்னால புள்ளய பாக்காம ஒரு நிமிஷம் இருக்க முடியாது. அவன் படிக்கவும் வேண்டாம், ஒண்ணுஞ் செய்யாண்டாம்' என்று அழத் தொடங்கி விட்டாள்.

சமீபத்தில்தான் மூன்றாவது அண்ணன், வயல் பிரச்னையில் மேலத் தெரு பலாசத்தை கத்தியால் குத்திவிட்டு தலைமறைவு வாழ்க்கையை வாழ்ந்து வந்தார்.

'இங்கரு, உங்க கிட்னப்பயல போலீஸ் தேடிட்டு இருக்கு. இந்த நேரத்துல இவன இங்க வச்சா, அவனுவள மாதிரி இவனும் உருப்படாம போயிருவாம். நான் சொல்லுதத கேளுங்க. இவனையும் கொலைகாரனா மாத்திராதிய. பெற வு உங்க இஷ்டம்' என்று அம்பாசமுத்திரம் அத்தான் வேகமாகக் கிளம்பிய போது, ஆண்டி, 'மருமவனே நில்லுங்க' என்று கண்ணைக் கசக்கிவிட்டு அவர் முன் சென்றார். அனச்சியும் உடன் வந்தாள்.

'ஏல பரம்சம், மாமா கூட கொஞ்ச நாள் இருந்துட்டு வா, ன்னா' என்று சொல் லிவிட்டு முந்தியில் முடித்துவைத்திருந்த ஏழெட்டு ரூபாய் களையும் சில நயா பைசாக்களையும் அவனிடம் கொடுத்தார் ஆண்டி. ஒரு மஞ்சள் பையில் அவனது இரண்டு சட்டைகளையும் ஒரு டவுசரையும் அமுக்கி வைத்தாள் அனச்சி. மனசு கேட்காமல் கார்சாண்டு வரை வந்து மகனை பேரூந்தில் அனுப்பி வைத்துவிட்டு கண்ணீர் வடித்தாள் பாசக்கார அனச்சி.

பரமசிவன் பிறகு எங்கோ ஒரு ஊரில் கிறிஸ்தவ போர்டிங் பள்ளியில் சேர்ந்த தாகச் சொன்னார்கள். அங்கு ஸ்டீபன் என்கிற பாதிரியார் பரமசிவத்தைத் தனி யாகக் கவனித்து படிப்புச் சொல்லிக்கொடுக்க, நன்றாக படிக்கத் தொடங்கினார் பரமசிவம். பிறகு பேச்சு போட்டி, கவிதை, கட்டுரை போட்டிகளில் முதல் நிலைக்கு வர, உதவி தொகை அதிகரித்தது. பியூசியை அங்கேயே முடித்து விட்டு, ஊருக்குத் திரும்பினார். 

தீபாவளி, பொங்கல், கிறிஸ்துமஸ் மற்றும் கோடை விடுமுறைக்கு ஊருக்கு வந்து போகிறவர்தான் என்றாலும் இப்போது ஊர் அவருக்குப் புதிதாகத் தெரிந்தது. அத்தை மகள்கள் எல்லாம், தான் காதலிப்பதற்காவே பிறந்தவர்கள் என்று நினைத்ததன் பலனாக, அதை மட்டுமே முழு நேரத் தொழிலாகச் செய்து வந்தார். 

அப்போதுதான் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில மாநாடு திருச்சியில் நடைபெற்றது. இதன் பொருட்டு கட்சி அலுவலகத்தில் காலையிலேயே மைக்செட் கட்டப்பட்டு அழைப்புகள் தொடர்ந்து கொண்டிருந்தன. கீழ மற்றும் மேலத் தெருக்களில் பரபரப்பாகிக் கொண்டிருந்தார்கள் ஆட்கள்.

வாய்க்காலில் கூட்டம் கூட்டமாக குளித்துக்கொண்டிருந்தவர்கள், 'ஏல லாரி வந்து அரை மணி நேரமாச்சாம்' என்று சொன்னதும், அரை குறை குளியலோடு பரபரத்துக்கொண்டிருந்தார்கள் சிலர். 

'வந்தா என்னல, நிப்பான். நம்மள விட்டுட்டு போயிருவானுவளோ?' என்று நிதானமாக குளித்துக்கொண்டிருந்தவர்களும் உண்டு. இப்படி ஏதாவது வாய்ப்பு வந்தால்தான் திருச்சி மாதிரியான பெருநகரங்களை அவர்கள் பார்க்க முடியும். போய்விட்டு வந்து, தேநீர் கடைகளில் உட்கார்ந்துகொண்டு, அங்கு கண்டதைக் கொஞ்சம் கூட்டிக் குறைத்து பேசுவதைப் பெருமையாக நினைப்பார்கள். சில வருடங்களுக்கு முன் மதுரையில் நடந்த மாநாட்டுக்குச் சென்றுவந்துவிட்டு இன்று வரை அந்த ஊரில், தான் ஒரே ஒரு நாள் பார்த்ததைச் சிலாகித்துச் சொல்லிக் கொண்டிருக்கிறார்  பால்கார முத்தையா.

ஊரில் இருந்து இரண்டு லாரிகளில் கட்சிக்காரர்கள் செல்ல இருந் தார்கள். எழுதப்பட்ட பேனர், லாரிகளின் முன் பக்கம் கட்டப் பட்டிருந்தது. கம்புகளில் கட்டப்பட்ட கட்சிக் கொடிகள் லாரிகளின் பின் பக்கம் வரிசையாகக் கட்டப் பட்டிருந்தன. 

மைக் செட் இப்போது லாரிக்குள் ஏற்றப்பட்டிருந்தது. வெள்ளை வேட்டி, சட்டையில் சிவப்புக்கலர் தேங்காப்பூ துண்டு எல்லோரு டைய தோளிலும் தொங்கிக்கொண்டிருந்தது. புதிதாகக் கல்யாணம் ஆகியிருக்கிற சுடலை, (அவனுக்கு ஒழக்கு என்ற பட்டப் பெயர் இருக்கிறது) தன்னிடம் இருக்கும் ஒரே ஒரு சிவப்பு நிற பேன்டை அணிந்துகொண்டு லாரியின் அருகில் வந்து ஸ்டைலாக நின்றான். அந்த பேன்ட்டை அணிவதற்கு இப்போதுதான் நேரம் வந்திருக்கிறது. மற்றபடி அதை அணிந்துகொண்டு எங்கும் செல்ல முடியாது. அவ னுக்கு அது வெட்கமாக இருக்கும். அவன் வேலை பார்க்கிற பஞ் சாயத்து அலுவலகத்துக்கு வேட்டியே அதிகம் தான். இதில் பேன்டை எங்கு அணிந்து செல்வது? அதனால் இந்த வாய்ப்பை பயன் படுத் தினான். திருச்சி போன்ற பெரு நகரங்களுக்குப் போகும்போது இப்படிச் செல்வதுதான் சரியாக இருக்கு மென்று நினைத்தான். வெள் ளை சட்டையை இன்சர்ட் பண்ணிக் கொண்டு பெரிய பொக்கிலீஸ் வைத்த பெல்ட்டை அதில் கட்டியிருந்தான்.

'ஏல ஒழக்கு. நீ இப்டி ஸ்டைலா போனனா, இன்னொரு பொண் டாட்டி, உம்பின்னால வந்துருவாளேடே?'- ஏதாவது மைனிகள் இடக்கு பண்ணு வார்கள்.

'வந்தா, வச்சி கஞ்சி ஊத்திட்டுப் போறேன்' என்பான் ஒழக்கு.

'வீட்டுல இருக்கவள என்னல பண்ணுவே?

'ஒண்ணுக்கு ரெண்டுன்னா வேண்டாம்னா இருக்கு'

'இன்னா சொல்லுதம்ல ஒம்பொண்டாட்டிட்ட. வாரியல எடுக்கப் போறா?'

'நீ போத்தா'-  என்ற படி நடப்பான் ஒழக்கு. இந்த ஒழக்கு பேன்ட் சட்டை அணிந்துப் போவதைப் பார்த்ததும்தான் பரமசிவத்துக்கு ஆசை வந்தது. இவனுடன் தாமும் போனால் என்ன என்கிற ஆசை. கூட்டத்தோடு கூட்டமாகச் சென்றால் கூட, அது சுகமான அனுபவம் தான் என நினைத்தான்.

'என்ன சுடலைண்ணே. எந்த ஊருக்கு?

'திருச்சிக்கு. வாரியால, சும்மாதான தெருவ சுத்திக்கிட்டு இருக்கே, வா. நாலு இடத்தையும் நாலு புது ஆளுவளயும் பார்த்த மாதிரி இருக்கும்?'

'எங்க அம்மாட்ட சொல்லிட்டு வாரேன். நீயும் வாயேன்' என்றான் பரமசிவன்.
ஒழக்கு அவனின் அம்மா அனச்சியிடம் சொல்லி, அழைத்துவந்தான் கம்யூனிஸ்ட் ஆபிசுக்கு. லாரியில் அதற்குள் கொஞ்சம் கூட்டம் சேர்ந்தி ருந்தது. டாப்பில் சிலர் ஏறி வாகாக அமர்ந்துகொண்டார்கள். மைக் செட் அங்கு தான் இருந்தது. தோழர் பிச்சைமுத்துவும் கல்யாணி என்கிற கல்யாண சுந்தரமும் மைக்கில் முழங்கிக்கொண்டிருந்தார்கள்.

'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி'

'வாழ்க'

'இந்திய கம்யூனிஸ்ட் கட்சி'

'வாழ்க'

'கதிர் அரிவாள்'

வாழ்க'

'இன்குலாப்'

'ஜிந்தபாத்'

'ஜிந்தாபாத்... ஜிந்தாபாத்
'இன்குலாப் ஜிந்தாபாத்'

கோஷங்கள் முழங்கின. பரமசிவமும் கூட்டத்துக்குள் ஒருவனாக நின் றான். சத்தம் கேட்டு வருகிறவர்கள் லாரிகளில் ஏறிவிட்டார்கள். பிள்ளையார் கோவிலில் இருந்து இரண்டு லாரிகளும் கிளம்பின. கிழக்கே இருக்கிற பேரூந்து நிறுத்ததில் சிலர் நிற்பதாகவும் போகும் வழியில் அவர்களை ஏற்றிக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டது. 

வண்டி கிளம்பத் தயாராகிவிட்டது என்று அறிவித்தவுடன், கையை காட்டிய படியே ஓடோடி வந்தான் எண்ணெய் சட்டி மகன்.

'என்னல?'

'எங்கப்பா வாராரு. நிக்கணுமாம்'

'த்தூ, வெக்கங்கெட்டவனே. எவ்வளவு நேரமா வண்டி நிக்கி. இவ்ளவு நேரம் என்னல பண்ணுனாம்?' என்று கேட்டார் பிச்சை.

'இன்னா சாப்பிட்டுட்டு இருக்காரு மாமா'

'போல போயி சீக்கிரம் வரச்சொல்லு' என்றவர் வந்த எரிச்சலை கட்டுப் படுத்திக்கொண்டார். சிறிது நேரத்தில் அவரோடு இன்னும் சிலரும் வர, லாரி கிளம்பியது.

லாரி, ஒவ்வொரு ஊருக்குள்ளும் போகும்போது மைக்கை ஆன் செய்து பேசிக் கொண்டே போவார்கள். கடையநல்லூர் தாண்டியதும் பேசிக் கொண்டிருந்த பச்சைமுத்துவும் கல்யாணியும் மைக்கை வேறு யாருக்காவது கொடுக்கலாம் என்று நினைத்தார்கள். அதன் பேரில் 'பரமசிவத்துக்கிட்ட கொடுப்போம், நல்லா பேசுவாம்' என்று கொடுக்க, மைக்கில் பரமசிவத்தின் குரல் வேறு மாதிரி தெறித்தது. எல்லாரும் திரும்பிப் பார்த்தார்கள். பிறகு அவரிடம் இருந்து திருச்சி போகும் வரை யாரும் மைக்கைத் திரும்பிக் கேட்க வில்லை.

திருச்சி மாநாட்டில் கம்யூனிஸ்ட் தலைவர்களின் பேச்சைக் கேட்டு விட்டு திரும்பிய பின், அந்தக் கட்சியின் மீது தனி பிடிப்பு வந்தது பரமசிவத்துக்கு. சிவப்புக் கொடியும், வெளியூரில் இருந்து வருகின்ற இளைஞர்கள், கம்யூனிஸ்ட் கொள்கைகளையும் நாட்டு நடப்புக ளையும் பற்றி நடத்தும் நாடகங்களும், பரமசிவத்துக்கு அந்தக் கட்சியின் மீது ஈர்ப்பைக் கொடுத்தது. இப்படி நடத்தும் நாடகங்களின் மூலம் உள்ளூர் இளம் பெண்களை இன்னும் கவர முடியும் என்பதும் அவரது இன்னொரு நம்பிக்கையாக இருந்தது. 

அப்படித்தான் ஒரு பொதுக்கூட்டத்தின்போது, ஏழெட்டு உள்ளூர் இளைஞர் களுடன் சேர்ந்து தன்னையும் கம்யூனிஸ்ட் இயக்கத்தில்  இணைத்துக் கொண்டார் பரமசிவன்.  

'ஏல, பரம்சம்' என்று அழைத்த உள்ளூர்காரர்கள், இப்போது அவரை தோழர் பரம்சம் என்று அழைக்கலானார்கள். தோழர் என்கிற வார்த்தை, சில வெளியூர் நண்பர்களின் வாயிலாக காம்ரேட் என்று வேறு வடிவம் எடுத்தபோது, இன்னும் பெருமைகொண்டார்.  இதையடுத்து அக்கம் பக்கத்து ஊர்களில் நடக் கும் கட்சிக் கூட்டங் களுக்குத் தோழர்களோடு பயணிக்கத் தொடங்கினார். அப்போது தான், கல்லூரி ஒன்றில் விரிவுரையாளர் பணிக்கான நேர்முகத் தேர் வுக்கு அழைப்பு வந்திருந்தது பரமசிவத்துக்கு. அது அவரது அம்பாசமுத்திரம் அத்தானின் ஏற்பாட்டால் வந்த அழைப்பு.

ஆனால், முழுவதாகக் கட்சிப் பணிக்கு தன்னை அர்ப்பணித்துவிட்ட பரமசிவம், நான்கு நாட்களுக்கு முன் கட்சியின் தலைவர் ஒருவர் பேசியதை நினைத்துப் பார்த்தார்.

'இந்தச் சமூகம் இருட்டடைந்து கிடக்கிறது. இதைச் சுத்தம் செய்ய, படித்த உங்களை போன்ற இளைஞர்களால் மட்டுமே முடியும். நீங்கள் ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு முக்கியம். நாட்டுக்கு முக் கியம் என்றால் நீங்கள் கட்சிக்கும் முக்கியம். அடிமைப்பட்டுக் கிடந்தால் எதுவும் நடக்காது. புரட்சியால் மட்டுமே மாற்றத்தைக் கொடுக்க முடியும். அந்த மாபெரும் புரட்சி, உங்களால் மட்டுமே நடக்கும். உங்களால் மட்டுமே இந்தச் சமூகத்தை, தேசத்தை, மக்க ளை, இருட்டில் இருந்து வெளிச்சத்துக்கு கொண்டு வர முடியும்' என் று தொடங்கி பேசியிருந்தார்.

'புரட்சிக்காகப் போராடிக்கொண்டிருக்கிற ஒருவர், எங்கோ போய் வேலை பார்ப்பதா? கட்சிப் பணியே சமூகத்துக்கான சேவை தானே?' என்று நினைத்ததன் பொருட்டு அந்த நேர்முகத்தேர்வுக்கு எந்த மரியாதையையும் அவர் கொடுக்கவில்லை. 

இந்த வேலைக்காக, பல முக்கியஸ்தர்களிடம் கெஞ்சிக் கூத்தாடி ஏற்பாடு செய்திருந்த அம்பாசமுத்திரம் அத்தான், வேக வேகமாக வந்தார் அன்று. 

'இதுக்கா ஒன்னய இவ்வளவு கஷ்டப்பட்டு படிக்க வச்சேன், கூறு கெட்டவனே...' என்று திட்டத் தொடங்கினார். வாயில் வெற்றி லையைப் போட்டு உதப்பிக்கொண்டிருந்த அனச்சிக்கு ஒன்றும் புரியவில்லை.

'ஏம், எம்புள்ள என்ன பண்ணுனாம்?

'என்ன பண்ணுனானா? இதுக்கா இவன படிக்க வச்சேன். எத்தன பேரு கால புடிச்சு, அந்த வேலைக்கு ஏற்பாடு பண்ணியிருப்பேன். இப்படித் தான் கட்சிக்குப் போவாம்னு தெரிஞ்சிருந்தா, இங்ஙனயே கெடன்னு விட்டுருப்பன அப்பமே?'
அனச்சி, மலங்க மலங்க விழித்தாள். வெளித்திண்ணையில் ஓரமாக உட்கார்ந்திருந்த பரமசிவம் எதுவும் பேசவில்லை. கருவாட்டுத் துண்டைக் கவ்விக்கொண்டுப் போகும் பூனையை பார்த்தவாறு, இரண்டு காகங்கள் கரைந்துகொண்டிருந்தன, எதிரில் இருக்கிற மண் சுவரில்.

'நா பேசுதேன் பதிலு பேசுதானா பாரு? உன்னயதாம்ல கேக்கேன். இப் டியா என்ன கேவலப்படுத்துவ?'

'இல்ல, எனக்கு வேல பாக்க விருப்பம் இல்ல. கட்சியில சம்பளம் தரு வாங்கன்னு சொல்லிருக்காங்க' என்று தலையை கவிழ்த்துக் கொண் டே மெதுவாகச் சொன்னார் பரமசிவம்.

'சரியா போச்சு. அந்தளவுக்கு பெரிய மனுஷனாயிட்டியோடே. அப்பம் எண் ணமும் பண்ணித் தொல. ஆனா, என்னைக்காவது கஞ்சிக்கு வழியில்லன்னு ரோட்டுல நிய்க்கும்போது நான் சொன்னது ஞாவத்துக்கு வரும்' என்றவர் வேகவேகமாக வீட்டைவிட்டு வெளியேறினார். அனச்சி, 'மருமவனே, ஏன் அவசரம்? சாப்ட்டுட்டு போங்க' என்று அவர் பின்னால் ஓடி னாள்.

'நா ஒண்ணும் சோறு தின்னுட்டு போவ வரல' என்றவர் திரும்பிக்கூட பார்க்காமல் போனார்.  பரமசிவனிடம், 'ஏம்ல அவரு கோவப்பட்டுட்டு போறா ரு?' என்று கேட்டதற்கு, 'அவரு கெடக்காருலா. எதுக்கெடுத்தாலும் கோவப் பட்டுக்கிட்டு...' என்று சொல்லிவிட்டு வெளியே வந்தார்.

பரமசிவன் கட்சிக்குள் நுழைந்த முன் கதை இது.

(தொடர்கிறேன்)

No comments: