சரிந்துசெல்லும் வனாந்தரத்தில் தன் நினைவை இறக்கிக்கொண்டிருந்தான் உ.மகாளி. வனம் என்கிற வாழ்க்கை அவனுக்குள் கிறக்கத்தை ஏற்படுத்திக்கொண்டிருந்தது. சடாரென மோதிச்செல்லும் குளிர்காற்றில் சிலிர்த்த உடலை, தனக்குள் வாங்கிக்கொண்டான். தூரத்தில் தெரிகிற மரத்தின் வேர்களில் தொங்கும் பலாக்களாக கொஞ்சம் மாறிப்பார்த்தான். முட்கள் தாங்கிய உடலோடு அவனைப் பார்க்க அதிசயமாகத்தான் இருந்தது. ஆனால், அடுத்து, அதை கவ்வும் நரியின் வாயில் அகப்பட்டால்?
தன்னை, இன்னொன்றாக மாற்றிப்பார்க்கும் அனுபவம் அலாதியானது. உ.மகாளி, இன்னும் சாக்கு மூட்டையில் தலை வைத்துப் படுத்துக்கொண்டிருந்தான். கால்களி்ல் ஏறிச்செல்லும் சிறு பூச்சியின் மேனியில் வண்ணங்கள் படர்ந்திருந்த்தைப் பார்த்தான். அதைப் பின் தொடரும் மற்றொரு பூச்சியின் மேனி வண்ணங்களற்று இருந்தது. வண்ணங்களானதும் வண்ணங்களற்றதுமான வாழ்க்கையை பற்றிய யோசனை அவனுக்கு அப்போது எழ வாய்ப்பில்லை. ஏனென்றால் அவன் காட்டின் காற்றில் இரை தேடிக்கொண்டிருந்தான்.
நொடிஞ்சானும், கேசரியும் குடிலைப் புதுப்பித்துக்கொண்டிருந்தனர். மரப்பலகைகளில் சில துகளாகியிருந்தது. அதில நான்கைந்து பாம்பு சட்டைகள் பெரியதும் சிறியதுமாக நைந்து தொங்கிக்கொண்டிருந்தன. நொடிஞ்சான், அவற்றை எடுத்துப்பார்த்துவிட்டு, 'எங்க வந்து ஏறியிருக்கு பாரு' என்றான்.
குளிர் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக்கொண்டிருந்தது. கந்தையாவும் தவிட்டானும் சில கோங்கு கம்புகளைக்கொண்டு ஒரு ஆள் உயரத்துக்கான ஏணியை தயார் செய்திருந்தனர். ஏணி என்பது போல சமமான மரக்கம்புகளால செய்யப்பட்ட்வை அல்ல அது. அங்கும் இங்கும் நெளிந்து மரக்கம்புகளின் சைசுக்கு ஏற்றார் போல அது ஒரு வடிவத்தில் இருந்தது.
அதை, குடிலின் மேல்பாகத்தோடுச் சேர்த்து கட்டி விடலாம் என்றான் தவிட்டான். கந்தையா வேண்டாம் என்றான்.
'ராத்திரி எல்லாரும் மேல ஏறுன பெறவு, ஏணியை தூக்கி மேலய போட்டுர வேண்டியதானல' என்றான்.
'ஏம், எதுவும் ஏணியோடி ஏறி வந்திரும்னு நெனக்கியோ'
'வரணும்னா எதுவும் எப்படியும் வந்திரும்ல... ராத்திரி போடுத தீக் கங்குக்கு கிட்ட ஒண்ணும் வராது'
ஏணி ரெடியாகி, குடிலின் மேல் பக்கத்தில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. இன்னும் கனவுலகில் சஞ்சரித்துக்கொண்டிருந்த உ.மகாளியை, நொடிஞ்சான் அழைத்தான்.
'இப்படியே படுத்துக்கிடந்தன்னா, கெடக்க வேண்டியதாம்ல... போய் வெறவு பொறக்கிட்டு வா இவங்களோட. இன்னும் சோறு பொங்க வேண்டியிருக்கு'
கேசரி, கந்தையாவுடன் விறகு பொறுக்க ரெடியானான் உ.மகாளி.
இறங்கினார்கள். மைதானம் மாதிரியான இந்த இடத்திலிருந்து கொஞ்சம் வடக்குப் பக்கம் நடந்தால் அடர்த்தியான மரங்களின் பெருங்காடு. சுற்றி மரங்கள் அடர்ந்திருந்தாலும் வடக்குப் பக்கம் மேடாக இருந்ததால் மரக்கட்டைகளை தூக்கிக்கொண்டு வர வசதியாக இருக்கும்.
'ஏல மரத்துல உள்ளதை வெட்டிராதிங்க... பச்சையை. எரியாததை வச்சு என்னத்த மாரடிக்க' என்று குடிலின் மேலிருந்து கத்தினான் நொடிஞ்சான்.
மரங்களின் நிழல்கள் அதற்குள் இருட்டாக்கி இருந்தது சூழலை. வயதான மரங்களின் வேர்கள் மலைப்பாம்பை போல அங்கங்கு நெளிந்து வளைந்து கிடந்தது. மண்ணுக்குள் அமிழ்ந்தும் வெளிப்பட்டும் மீண்டும் அமிழ்ந்தும் கிடக்கிற வேர்களில், நம் முப்பாட்டன்களின் கால் ரேகைகள் பதிந்து கிடக்கலாம். வேரோடு வேராக நம் மூதாதையர்களின் வேர்வைகளும் வளர்ந்திருக்கலாம்.
அவற்றின் மீதேறி செடிகளோடு காய்ந்து கிடக்கிற கம்புகளைப் பொறுக்கலானான் உ.மகாளி. மரத்தோடு இருக்கிறவரை, கிளையாகும் கம்புகள் முறிந்து விழுந்ததும் விறகாகும் சூத்திரத்தை கிண்டலாகச் சொன்னான் கேசரி.
மரத்திலிருந்து தாவிப்போகும் பறவைகளின் படபடக்கிற சத்தங்களில் காட்டின் நிசப்தம் ஓய்ந்து அதிர்ந்தது. இவர்களின் காலடி சத்தம் கேட்டு, உதிர்ந்து கிடக்கிற செத்தைகளில் இருந்து வேகமாக ஓடுகிற ஊர்வன வகைகளில் எறும்பு தின்னியை மட்டும் பார்த்தான் உ.மகாளி.
'ஏண்ணே அங்கரு'
'ஆமா, அதுக்கென்னா, இதுக்கே இப்படின்னா? இன்னும் என்னமெல்லாம் பாக்கப்போற பாரு'
'ஏண்ணே, அதை பிடிச்சுரலாமா?'
'பொறுல... வந்த அன்னைக்கேவா. மொதல்ல வேலையை பாப்போம்'
இதற்கு முன், சிவசைலத்தில் சாமி சப்பரம் தூக்கச் சென்ற போது அங்கு, எறும்புதின்னியைப் பார்த்திருக்கிறான் உ.மகாளி. ஆறுகால் கன்னுக்குட்டி பிறந்த சொக்கம்பட்டியான் வீட்டு வாசலில், நான்கைந்து பேர் அதை வைத்து விளையாட்டுக் காட்டிக்கொண்டிருந்தனர். உடலோடு இருக்கிற அதன் செதில்கள் ரசனையானவை. உ.மகாளியும் அவர்களோடு வேடிக்கப் பார்த்துவிட்டு வந்ததில், 'நமக்கு இப்படியேதும் கிடைக்க மாட்டேங்குதே' என்று நினைத்துக்கொண்டான். இப்போது பார்த்துவிட்டான்.
'ஏண்ணே, போறதுக்குள்ள எங்கயாவது இதை தூக்கிரணும்'
'அதெல்லாம் ஒரு வெஷயமால. நாலஞ்சு ஐட்டம் இருக்கு, கொண்டு போறதுக்கு'
'நாலஞ்சா, வேற என்னண்ணே இருக்கு?'
'நீ மொதல்லா, வெறவெல்லாத்தையும் வச்சு மூணு தலைக்கு இந்த கயிறை வச்சு கெட்டு. போயிட்டு பேசிக்கிடுவம்'
விறகுகளை கட்டிக்கொண்டு குடிலுக்கு வரும் போது, இதே போல ஒரு கோடையில் மாத்ராங்குளத்து பொத்தையில் இருந்து விறகு தூக்கிக்கொண்டு வந்த பிச்சம்மாள், இப்போது உ.மகாளியின் ஞாபகத்துக்கு வந்தாள்.
தொடர்கிறேன்.
11 comments:
அன்புத்தோழா,
இந்த இடுகையை வாசிக்கும்போது,அடர்வனத்தின் காற்றையும் சேர்த்து மூச்சிழுத்துச்சேமிக்கத்தோணுகிறது.செடிபுடுங்கியதும் கிளம்பும் பச்சை மண்ணின்
சுகந்தம் மேலெல்லாம் அப்பிக்கொல்கிறது.நான் பிறந்தவீட்டுக்குப்போகிறேன்.உமாகாளியைப்போல.
உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா? :) உங்க கதை கேட்க எப்பவுமே ரெடி. தொடருங்க மக்கா.
வார்த்தைகளும், வர்ணனைகளும் வழக்கம் போல அருமை அண்ணாச்சி...
தொடருங்கள். தொடர்கிறோம்.
கிராமத்து மணத்துடன் தொடர்கிறது. வாழ்த்துக்கள்
//அடர்வனத்தின் காற்றையும் சேர்த்து மூச்சிழுத்துச் சேமிக்கத் தோணுகிறது.செடிபுடுங்கியதும் கிளம்பும் பச்சை மண்ணின்
சுகந்தம் மேலெல்லாம் அப்பிக்கொல்கிறது.நான் பிறந்தவீட்டுக்குப்போகிறேன்//
நன்றி தோழர்.
//உச்சிமாகாளிக்கு அடுத்த காதல் ஞாபகம் வந்திருச்சா? :)//
ஆமா, பாலகுமார்ஜி.
...........
//வார்த்தைகளும், வர்ணனைகளும் வழக்கம் போல அருமை அண்ணாச்சி... //
நன்றி ராஜா அண்ணாச்சி.
.......
சித்ராக்க நன்றி.
வண்ணங்களானதும் வண்ணங்களற்றதுமான வாழ்க்கையை பற்றிய யோசனை அவனுக்கு அப்போது எழ வாய்ப்பில்லை
போற போக்கில அப்பிடியே ஈஸியா சொல்லிட்டு போய்டறீங்க
மண்ணுக்குள் அமிழ்ந்தும் வெளிப்பட்டும் மீண்டும் அமிழ்ந்தும் கிடக்கிற வேர்களில், நம் முப்பாட்டன்களின் கால் ரேகைகள் பதிந்து கிடக்கலாம். வேரோடு வேராக நம் மூதாதையர்களின் வேர்வைகளும் வளர்ந்திருக்கலாம்.
ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும் .
ஆம் நம் வேர்கள் தான் அவர்கள் .
வாசிக்க கொடுப்பதற்கு மிக்க நன்றி
//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும்.ஆம் நம் வேர்கள் தான் அவர்கள்.//
உண்மைதான். நன்றி மேடம்.
பெயர்கள்..பெயர்கள்...
மண்ணோடு மண்ணான பெயர்கள்.
great!
//ஒரு கோவிலுக்குள் நுழையும் போது இவ்வாறு எனக்கு அடிக்கடி தோன்றி சிலிர்க்கும் .
ஆம் நம் வேர்கள் தான் அவர்கள்.//
ஆமா, வேர்கள்தான் பத்மா மேடம்.
நன்றி
//மண்ணோடு மண்ணான பெயர்கள்//
ஆமா. ராஜாராம். வருகைக்கு நன்றி.
Post a Comment