Sunday, January 8, 2017

ஆதலால் தோழர்களே 16

'சும்மா கட்சிக்காக பேசுதம் பேசுதம்ங்கெ. என்னடே பிரயோஜனம்? ஊர்ல மத்தவனுவோ இருக்கானுவன்னா, அவனுவளுக்கு வசதி இருக்கு, வீட்டுல ஒக்காந்து திங்கதுக்கு. ஒனக்கு? ரெண்டு பொட்டபுள்ளல வேற வச்சிருக்கெ? நாளைக்கு என்னத்த பண்ணி கெட்டிக் கொடுப்ப? இப்பம் ஒங்க ஆட்சிதானல நடக்கு. கடையம் யூனியன்ல என்னமோ ரெண்டு மூணு வேலை காலி இருக்குன்னானுவோ. நீதாம் படிச்சிருக்கியெ. யாரையாது புடிச்சு அதுல ஒரு வேலைய வாங்க பாரு. இல்லன்னா கைய நக்கிட்டு இருக்க வேண்டியதாம்'
- மூக்க மூப்பனார் சில மாதங்களுக்கு முன் இப்படிச் சொன்னது திடீரென்று ஞாபகத்துக்கு வந்து போனது.

அவர் சொன்னது வாஸ்தவம்தான். வயலைப் பார்க்க முடியவில்லை. அண்ணனிடம், 'நீ பயிறு வச்சுக்கோ. என்னமும் மிஞ்சுனா கொடு' என்று சொல்லியாகிவிட்டது. இப்போது கிடைக்கின்ற அஞ்சு, பத்து என்பது நிரந் தரமான வருமானம் இல்லை. கிருஷ்ணவேணியின் கழுத்தில், காதில் கிடப்பது ஆத்திர அவசரத்துக்கு அடகு வைக்க சென்று விடுகிறது. திடீ ரென்று கவலை ஆட்டியது. நியாயமான கவலை. நிஜமாகவே பிள்ளை களைக் கட்டிக்கொடுக்கும் காலத்தில் ஒன்றுமில்லாமல் போய் விடு வோமோ என்ற கவலை பயமுறுத்தியது. 'மரத்தை வச்சவன் தண்ணி ஊத்த மாட்டானாடா?' என்கிற விளக்கமும் அதற்குச் சமாதானமாக வந்தது. 'நான் பேச்சாளர், நான் எப்படி போய் ஒரு இடத்துல வேலை பார்க்க? பாக்குறவன் என்னமும் நெனய்க்க மாட்டானா?' என்பதாக மனம் ஒரு கதை சொன்னது. பிறகு பெரும் போராட்டத்துக்குப் பிறகு வேலைக்குச் சென்று விடுவது என்று ஒரு மனதாக முடிவெடுத்தான்.

ஆனால், 'கவருமெண்ட்டு வேலைக்குப் போயிட்டேன்னு வையி. பெறவு கட்சிக் கூட்டங்கள்ல பேச முடியாதுடே?' என்று ஒழக்குச் சொன்னதும் கொஞ்சம் தடுமாறித்தான் போனான். கட்சியா, மேடையா, வேலையா என்று பட்டிமனறத் தலைப்பு போல மனதுக்குள் பெரும் சண்டை நடந்து கொண்டிருந்தது. ஒன்றைப் பெற, ஒன்றை இழக்க வேண்டியதுதான். குடும்பம்தான் முக்கியம். அதுக்காக, மேடையை விட்டு விடலாம் என்று தடுமாற்றத்துடன் முடிவு செய்தான். கடினம் தான் அது. மேடைப் பேச்சால் வளர்ந்த வாழ்வு அவனுடையது. அதுதான் நான்கு பெரிய மனிதர் களைப் பழக்கப்படுத்தியது. தன்னை அக்கம் பக்கத்து ஊர்களில் பிரபல படுத்தியது. கம்யூனிஸ்ட் கட்சியின் தலைமை வரை தன்னை அடை யாளப்படுத்தியது. இப்போது திமுகவில் பலரை அறிமுகப்படுத்தியிருக் கிறது. இன்னும் இன் னுமாக அந்தப் பேச்சு அவனை செய்திருக்கிறது. அந்தப் பேச்செனும் போதைதான் கஷ்டத்தையும் கொடுத்திருக்கிறது.

'இருக்கட்டும்டே. ஏம் நம்ம குச்சுலுக்கு பெரியப்பா அன்பரசன், கல்லி டைக்குறிச்சுல வாத்தியாரு வேலை பாக்காரு. கட்சிக் கூட்டத்துல பேசா மயா இருக்காரு?' என்றான் பழனி.

'ஏல, அவரு பேரு முனியப்பன். அன்பரசம்னு பேரை மாத்திட்டுலா பேசுதாரு. அப்படி பேசலாமாம்லா' என்றான் கணேசன்.

'இதுக்காவ பரம்சம் எப்படிடே இனும பேரை மாத்த முடியும்?'

'இங்கரு பரம்சம், குடும்பம்தான் முக்கியம். கட்சிய ஓரங்கட்டிட்டு வேலைல சேரப்பாரு. அதுக்காவ ஒரேடியா ஓரங்கட்ட சொல்லல. அப்பப்பம் ஊர்ல நடக்குத கூட்டங்கள்ல கலந்துக்கோ' என்ற கருத்தை ஏற்றுக்கொண்டான் பரமசிவம்.

 கடையம் ஒன்றிய செயலாளருடன் மாவட்ட செயலாளரைச் சந்தித் தான், வேலைக்காக. ஒன்றிய செயலாளரும் பரமசிவமும் தூரத்துச் சொந்தம் என்பதால் நெருக்கம் அதிகமாக இருந்தது. கண்டிப்பாக அந்த வேலையை பரமசிவத்துக்கு வாங்கிக் கொடுக்க வேண்டும் என்று மாவட்டக் கழகத்திடம் சொன்னார் கிளைக் கழகம். இரண்டு மாத கடும் அலைச்சலுக்குப் பிறகு கிடைத்தது வேலை.

கிருஷ்ணவேணியின் முகத்தில் இப்போது புது மலர்ச்சி. பரமசிவம் வித விதமான சட்டைகள் தைத்தான். அரசு வேலைக்குச் செல்கிறவனுக்கு நல்ல சட்டை, பேன்ட் வேண்டாமா? புது சைக்கிள் ஒன்றை வாங்கி னான். ஆளே மாறியிருந்தான். கடையத்தில், ஏற்கனவே அறிமுகமான கட்சிக்காரர்கள் அடிக்கடிச் சந்தித்தார்கள். வேலை முடிந்ததும் ஊரில் நண்பர்களுடன் சந்திப்பு. பிறகு வீடு என்று பொழுது இனிமையாகச் சென்று கொண்டிருந்தது.

அலுவலகத்தின் எதிரில் இருக்கிற கடையில் தேனீர் குடித்துவிட்டு, திரும்பிய போது பார்த்தான், ஆனந்தவள்ளி டீச்சரை. அவர், இன்னொரு பெண்ணுடன் பேசியபடி, அவனை நோக்கி வந்துகொண்டிருந்தாள். பரமசி வத்துக்கு மண்டைக்குள் மின்னல் வெட்டிப் போனது. டீச்சர் தன்னைப் பார்த்திருப்பாளா? இல்லை, எதேச்சையாக வருகிறாளா என்ற குழப்பம்.

அவர்கள் மாதம் ஒரு முறை இங்கு ஏதோ ஓர் அதிகாரியைச் சந்திக்க வருவார்கள் என்பது தெரியும். இப்போதும் சந்தித்துவிட்டுதான் வருகி றார்கள். பரமசிவம், டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவர்கள் நெருக்கி வந்துகொண்டிருந்தார்கள். டீச்சர் தன்னைப் பார்க்கவில்லை என நினைத்தான். ஏனென்றால் தன்னைப் பார்த்தால், அவர் முகத்தில் வெளிப்படுகிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது இல்லை.

பரமசிவம் திடீரெனத் திரும்பி நின்றுகொண்டான். டீச்சரும் அவருடன் வந்தவரும், அதே கடையில் தேனீர் வாங்கிக்கொண்டு குடித்துக்கொண் டிருந்தார்கள். அவர்களின் பேச்சு, வேறு ஏதோ ஒரு வாத்தியாரைப் பற்றியதாக இருந்தது. பரமசிவத்துக்கு அதுக்கு மேல் தாக்குப் பிடிக்க முடியவில்லை. இப்போது தானும் அரசு அலுவலக த்தில் வேலை பார்ப் பவன் தானே என்று நினைத்துக்கொண்டு, டக்கென்று திரும்பினான். டீச்சர் அவனைப் பார்த்துவிட்டார். பார்த்ததும் வந்துவிடுகிற அதே புன்ன கையும் வெட்கமும் திடுப்பென வந்து டீச்சரின் முகத்தை மாற்றியது.

பரமசிவன் கொஞ்சம் தைரியத்தை வரவழைத்து, 'எப்படியிருக்கீங்க?' என்று ஆரம்பித்தான்.

'ஆங். நல்லாயிருக்கென்' என்ற ஆனந்த வள்ளி டீச்சர், 'நீங்க இங்க தாம் வேலை பாக்கதா கேள்விபட்டேன்' என்றார்.

'ஆமாமா'

'நாங்க, இங்க மாசத்துல ஒரு நாளு, டிஓவ பாக்க வருவோம்' என்ற ஆனந்த வள்ளி டீச்சர், பக்கத்தில் நின்ற டீச்சரிடம் திரும்பி, 'இவங்க தான் பரம்சம். பேச்சாளரு. நல்லா பேசுவாங்க. கம்னீஸ்ட் கட்சில இருந்தாங்க. ஒங்க ஊருக்கு கூட வந்திருப்பாங்க' என்று அறிமுகம் செய்து வைத்தாள்.
இரண்டு கைகளையும் ஒன்றிணைத்துக் கும்பிட்டான் பரமசிவம். பதிலுக்கு டீச்சரும் கும்பிட்டார். அவர் பக்கத்து ஊரான பாப்பான் குளத்தில் வேலைப் பார்ப்பவராம்.

டீச்சர், பேக்கில் இருந்து தேனீருக்கான காசைக் கொடுத்துவிட்டு, புன்ன கைத்தாள். பரமசிவம் டீச்சரையே பார்த்துக்கொண்டிருந்தான். அவளிடம் எப்போதும் இருக்கிற அந்த வெட்கமும் புன்னகையும் இப்போது வெளிப்படுவதை ரசித்தான். டீச்சரின் முகத்தில் இருந்து இன்னும் மாறாமல் இருக்கிறது புன்னகை. அந்தப் புன்னகை பரமசிவத்தை ஏதோ செய்கிறது. அதெப்படி? அந்தப் பார்வைப் பட்டதும் அடுத்த நொடியே, தொட்டா சிணுங்கி செடி மாதிரி, உயிர் மூடி விரிகிறது என்கிற கேள்வி இப்போது அவனுக்குள் எழுந்தது. அவன் தனது நடுக்கத்தை வெளிக் காட்டிக் கொள்ளவில்லை.
அதற்கு மேல் அங்கு நிற்க முடியவில்லை டீச்சருக்கு.

'வாரோம். அடுத்த மாசம் இங்க வருவேன்' என்ற சென்று கொண்டி ருந்த டீச்சர், சிறுது தூரம் சென்ற பிறகு இளம் காதலியைப் போல, ஓரக்க ண்ணால் பரமசிவத்தைத் திரும்பிப் பார்த்தாள். அதை அவனும் எதிர் பார்த்தான். அந்தப் பார்வை சிலிர்ப்பாக இருந்தது பரமசிவத்துக்கு.

No comments: