Wednesday, November 30, 2016

ஆதலால் தோழர்களே 15


இப்போது பரபரப்பாகி இருந்தார் பரமசிவம். அவருடன் கம்யூனிஸ்ட் கட்சியில் இருந்த தோழர்கள், பரமசிவத்தின் பரபரப்பை கிண்டலுடன்தான் பார்த்தார்கள். 
'என்னடே எப்பவும் வெள்ளையும் சுள்ளையுமாவே அலையுதெ' என்று தோழ ர்கள் யாராவது கேட்டால், ஒரு சிரிப்பை மட்டுமே பதிலாகப் பெற முடிகிறது பரமசிவத்திடம் இருந்து. வேறு ஏதும் பேச்சில்லை.

'முந்தா நாளு, விகேபுரத்துல ஆர்ப்பாட்டம். போனா, ஒங்கதைதான் நடக்கு. மலையனும், அவங்கூட  வந்தவங்களும், பரம்சம் ஏம் கட்சி மாறிட் டாருன்னுதாம் கேக்காவோ. நாங்க என்ன சொல்ல முடியும்? அவரு வந்து பேசுனாலே ஒரு இது இருக்கும்லான்னு அங்கயே சொல்லுதாவோ ன்னா பாரேன்' என்றான் பச்சைமுத்து, ஒரு நாள்.

'அதை விடு. முடிஞ்சதை போட்டு ஏம் இன்னும் பேசிட்டு' என்று முறித்தார் பரமசிவம்.

உள்ளூர் தோழர்களுடனான நெருக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாக குறைக்க முயற்சித்தார். இந்த சின்ன கிராமத்தில் முடிகிற காரியமா அது? யாராவது வந்து ஞாபகத்தைக் கிளறி விட்டுப் போனார்கள். தலைவரை எதிரில் சந்திக்க நேர்ந்தால், ஏதோ சிந்தனையில் செல்வது போல, அவரைப் பார்க்காமல் முகத்தைத் திருப்பிச் செல்லப் பழகியி ருந்தார் பரமசிவம்.

ஊரில் எப்போதும் ஒரு கலவரம் வெடித்துவிடும் நிலையிலேயே எதிர் எதிர் குடும்பங்கள் முறைத்துக்கொண்டிருந்தன. மாதம் தோறும் நடக்கும் ஊர் க்கூட்டத்தில் சந்தா தொகையை சத்தம் போடாமல் கொடுத்து கொண் டிருந் தார்கள் பரமசிவம் வகையறா. அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஏதாவது சின்ன கங்கு விழுந்தாலும் அதை ஊதி எரிய விட ஒரு கும்பல் தயா ராகவே இருந்தது. 

இந்தச் சிக்கலுக்கு இடையே ஜெயதேவிக்கும் பரமசிவத்துக்குமான நெரு க்கம் ஒரு பக்கம் அதிகரித்துக்கொண்டிருந்தது. அந்த நெருக்கம் பரமசிவ த்தின் மன இறுக்கத்தைக் கொஞ்சம் கொஞ்சமாகக் கரைத்துக் கொண்டிருந்தது. 

பரமசிவம் வாசலில் நின்றுகொண்டு இறுமினால் அதே தெருவில் வல பக்க மாக நான்கைந்து வீடுகள் தள்ளி இருக்கும், நாழி ஓடு போட்ட வீட்டில் இருந்து, தலையை மட்டும் நீட்டிப் புன்னகைப்பாள் ஜெயதேவி. எப்போதாவது பவுடரும் முகமுமாக இருக்கும் அவள், பரமசிவத்தைக் காணும் பொருட்டு, எப்போதும் பவுடரும் முகமுமாக இருக்கலானாள். அவளருகே புதிதாகச் சடங்கான சின்னப் பிள்ளைகள் பீடியும் தட்டுமாக உட்கார்ந்துகொண்டு அவள் அழகை ரசித்துக்கொண்டிருப்பார்கள். 

'இது என்ன பவுடர்க்கா. நல்லா மணக்கெ'

'பாண்ட்ஸ்லா. எங்கப்பா திருநவேலியில இருந்து வாங்கிட்டு வந்தா வோ. கொஞ்சம் போட்டுங்கிடுங்கட்டீ' என்று கொடுப்பாள் அவர்களுக்கு. அவர்களும் முகத்தில் பூசிக்கொண்டு தங்களை உலக அழகியாக நினைத்துக்கொள் வார்கள்.

'நீ ஏம்க்கா, இப்டி டைட்டா பாடி போட்டிருக்கெ?'

'ஏம்ட்டீ, இதுக்கென்ன, இப்டி போட்டாதாம் எடுப்பா இருக்கும்'

'நீ வேற அலசலா ஜாக்கெட் போட்டிருக்கெ. உள்ள இருக்க பாடி, அப்படி யே கண்ணாடி மாரி தெரியுது'

'தெரிஞ்சா என்னட்டீ? என்னய இன்னொரு கெமரனா வந்து கெட்டப் போறாம்?'
'யாரும் பாத்தா என்ன நெனப்பாவோ'

'என்ன நெனப்பாவோட்டீ..?'

'ஆங். இவளுக்கு மட்டும் எப்டி, இவ்ளவு பெருசா இருக்குன்னு நெனய்க் க மாட்டாவளா?' என்றவள் மற்றப் பிள்ளைகளைப் பார்த்து கண்ணடித்துக் கொள்வாள்.

'ஏட்டீ, நீங்களே போதும்போலுக்கெ. மொதல்ல ஒங்க கண்ண திருப்புங் க' என்று சொல்லிவிட்டு முந்தானையை இழுத்துவிட்டுக் கொள்வாள் ஜெய தேவி. பிறகு அவர்கள் சொன்னதைத் தனக்குள் நினைத்து ரசித்துப் புன்னகைப் பாள். 

முந்தா நாள் ஆற்றில் குளித்துக்கொண்டிருந்தாள். பாவாடையை முந்தா னை போல் கட்டிக்கொண்டு முங்கி எழுந்து சோப்புப் போட்டுக் கொண் டிருந்தாள். எதிரில் உள்ள கல்லில் துணி துவைத்துக் கொண்டிருந்த நான்கைந்து வெளி யூர்க்காரப் பையன்கள், அவளையே வைத்த கண் எடுக்காமல் பார்த்துக் கொண்டிருந்தார்கள். அப்போதும் இவள்தான், 'என்னக்கா இப்டி நஞ்சுபோன, பாவாடைய கெட்டிருக்கெ. உள்ள இருக் கது, அப்படியே தெரியுது' என்ற பிறகுதான் தன்னைப் பார்த்தாள். அவளு க்கு வெட்கமாக இருந்தது. இதைத் தான் எதிரில் குளிக்கும் பயல்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்களோ, என்ற உணர்வு வந்ததும் திரும்பி நின்று, சேலையால் மேனியை மூடினாள். அது அவளுக்கு ஒரு நொடியில் மூளைக்கு வந்து போனது.  

பிள்ளைகள் அவளையே பார்த்துக்கொண்டும் ரேடியோவில் ஓடும் பாடல் களைக் கேட்டுக்கொண்டும் அமர்ந்துவிடுவார்கள். ஒவ்வொரு பாடல் முடிந் ததும் அந்தப் பாடலின் பல்லவியை மெதுவாகப் பாடத் தொடங்குவாள் ஜெய தேவி.

'ஒன் கொரலு அப்டியே இருக்குக்கா. நல்லா பாடுத' என்பார்கள். இந்த மாதிரியான பாராட்டுகளில் உச்சி குளிர்ந்து போகும் ஜெயதேவி, 'படிக்கு ம்போது ஸ்கூல்ல போட்டி வைப்பாங்கள்லா, அதுல எனக்குத் தாம்டி ரெண்டாது பிரைசு கிடைக்கும்' என்பாள்.

'மொத பிரைசு?'

'சுபஸ்ரீன்னு ஒரு ஐயமாரு பிள்ள. நல்லா பாட்டுப் படிக்கும். அதுக்கு  கொடுத்திருவாவோ' என்பாள்.

இந்த பேச்சுகளுக்கிடையே, ஓரக்கண்ணால் பரமசிவம் தெருவைக் கடக் கிறாரா என்கிற கவனிப்பும் அவள் கண்களில் அனிச்சையாக இருக்கும். அப்படி அவர் கடந்தால், ஜெயதேவிக்குள், மின்னலடிப்பது போல ஒரு சிலிர்ப்பு வந்து போவதை எதிரில் இருப்பவர்களால் பார்க்க முடியும்.

இதற்காகவே, பரமசிவமும் அந்தப் பகுதியைத் தாண்டும்போது வேண்டு மென்றே மெதுவாக நடந்து, ஜெயதேவியைப் பார்த்து ஒரு சிரிப்பை உதறிவிட்டுச் செல்வது வழக்கம். இப்படியான பார்வை காதல், கொஞ் சம் அதிகரித்ததன் விளைவாக, பரமசிவம் அடுத்தக் கட்டத்துக்கு முன்னேறினார்.

பரமசிவம் வீட்டுக்கு எதிரில் இருக்கிற தொழுவத்தில் இருந்து, பின்பக் கமாக கருவை முடிகள் அடர்ந்து இருக்கிற பாதையை கடந்து சென்றால் ஜெயதேவியின் வீட்டு அடுக்களை. ஆனால் அடுக்களைக் கதவை எப்போதும் மூடியேதான் வைத்திருப்பாள் ஜெயதேவி. கருக்கல் நேரம் அந்த வழியாகக் அவள் வீட்டுக்குள் சென்றுவிட  முடி வெடுத் திருந்தார். இதுபற்றி முன் கூட்டியே அவளுக்குச் சொல்லிவிட்டால் காரியம் எளிதில் முடிந்துவிடும் என நினைத்தாள். ஆனால் அதற்கான நேரம் வரவில்லை. இன்று, நாளை என நாட்கள் அதிகரித்ததுதான் மிச் சம். அவள் மீதான தவிப்பு அதிகரித்ததன் காரணமாக, அவளிடம் சொல்லாமலேயே அடுக்களைக்குச் சென்று அவளிடம் பேசினால் என்ன என நினைத்தார். அப்படிச் சென்று, அங்கு வேறு யாரும் தன்னைப் பார்த்துவிட்டால், 'இங்க என்ன பண்ணுத?' என்று கேட்டால், என்ன பதில் சொல்லி சமாளிப்பது என்பதையும் முன்னேற்பாடாய் வைத்திருந்தார். 

அப்படித்தான் காங்கிரஸ் கட்சிப் பொதுக்கூட்டம் நடந்துகொண்டிருந்த ஒரு நாளில், பரமசிவம், சாரமும் கருப்பு பனியனும் அணிந்துகொண்டு, அடுக்களை அருகே சென்றுவிட்டாள். வீட்டுக்குள் யாரோ அலையும் சத்தம் கேட்க, க தவை மெதுவாகத் தட்டினார் பரமசிவம்.

உள்ளிருந்து, 'யாரு, கதவ தட்டுதா?' என்று சத்தமாகக் குரல் வந்தது. அது ஜெயதேவியின் குரல்தான் என்பதை உறுதிப்படுத்திக்கொண்டார். ஆனால் அவளுக்கு அது, பரமசிவம் என்பது தெரியவில்லை. 

'நான் தான் கதவை தொற' என்று கீச்சுக்குரலில் பரமசிவம் சொல்ல, அவளுக்கு பயம் தொற்றிக்கொண்டது.

'ஏங்க இங்க வாங்க. யாரோ திருட்டு பய நிய்க்காம்' என்று கத்தித் தொலைக்க, வாசலில் இருந்து டெய்லரும், பக்கத்து வீட்டு ஆட்களும் ஓடி வர, தாவி ஓடினார் பரமசிவம். கருவை முட்கள் அவரின் கால்களை, தொடைகளை கிழித்து இழுத்தது. இந்த நேரத்தில் அதைப் பார்த்துக்கொண்டிருந்தால், மானம் மரியாதை போய்விடும் என ஓடினார். 

அதற்குள் தெருவே கூடி, அவள் வீட்டு அடுக்களைக்குப் பின் பக்கம் வந்து நின்றது. வீட்டில் முகத்தைக் கழுவி, துண்டால் தொடையை துடைத்தால், காந்தியது. முட்களில் வேலை அது என நினைத்துக் கொண்டார். வேறி சாரத் தையும் சட்டையையும் மாட்டிக்கொண்டு, தண்ணீர் குடித்துக் கொண்டிருந்த போது, கிருஷ்ணவேணி, வெளியில் இருந்து வந்து சொன்னாள்.

'டெய்லரு வீட்டுக்கு திருட்டுப் பய வந்துட்டானாம். நாலஞ்சுபேரு தேடி வெரட்டியிருக்காவோ, ஓடிட்டானாம்' என்று சொல்லிக்கொண்டிருந்தாள்.

'அப்படியா. எனக்கு தெரியாம போச்சே, இன்னா போய், பார்த்துட்டு வாரம்' என்று அவளிடம் சொல்லிவிட்டு, ஒன்றும் தெரியாதது போல ஜெயதேவியின் வீட்டுக்குப் போய் விசாரித்தார்.

அங்கு படபடப்பில் இருந்தாள் ஜெய தேவி. 'அங்கணக்குழியில தட்டைப் போட்டுட்டு நின்னேன். கதவ யாரோ தட்டுனாவோ. யாருன்னு கேட்டேன். மரியாதையா கதவைத் தொறன்னு ஒரு மிரட்டல். பயந்து அவ்வோள கூப்டேன். அதுக்குள்ள ஓடிட்டாம்' என்று ஜெயதேவி விவரித்துக் கொண்டி ருந்தாள்.

தான் சொன்னதை, இன்னும் கொஞ்சமாக சேர்த்து அவள் சொன்னதை ரசித் தார் பரமசிவம். பிறகு, அவர்களுக்கு சமாதானம் சொல்லிவிட்டு திரும்பினார். 

'அது நான் தான்' என்பதை ஒரு நாள் அவளைத் தனியாக சந்திக்கும் போது சொல்ல வேண்டும் என நினைத்தார் பரமசிவம். ஆனால் சொல்லவில்லை.
ஆழ்வார்க்குறிச்சியில் தேரோட்டம். ஊரே அங்கு கூடியிருந்தது. புதுத்துணி அணிந்து மாட்டு வண்டியிலும் பேரூந்துகளிலும் காலையி லேயே பயணித்து க்கொண்டிருந்தார்கள் ஊர்க்காரர்கள். வயக்காட்டு வழியாகவும் நடந்து செல்ல ஒரு கூட்டம் சென்று கொண்டிருந்தது. இந்தக் கூட்டம் மதியத்திற்கு மேல்தான் ஊர் திரும்பும்.  பரமசிவம் எப்போதும் தேரோட்டத்துக்குச் செல்வதில்லை. வீட்டில் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு சென்றுவிட்டாள் கிருஷ்ண வேணி. ஏற்கனவே சொல்லி வைத்த தால், ஜெயதேவியும் தேரோட்டத்துக்குச் செல்லவில் லை. 

பரமசிவம் குளித்து முடித்து வெளுத்த வேட்டிச் சட்டையில் வீட்டு வாச லுக்கு வந்தார். தெரு, வெறிச்சோடி கிடந்தது. திருட்டு ருசிக்கு ஏங்கும் மனம், ஆனந்தக் கூத்தாட்டத்தில் இருந்தது. கூடவே கொஞ்சம் பதட் டமும் இருந்தது. ஏதோ ஒரு தவறைச் செய்யப் போகிறோம் என்கிற படப்படப்பு அது. தவறெ ன்று தெரிந்தும் அது வேண்டுமானதாக இருக் கிறது. கதவைச் சாத்திவிட்டு இறங்கி நடந்தார். இங்கும் அங்கும் திரும்பிப் பார்த்துக் கொண்டார்.  தூரத்தில் ஒரு துணி வியாபாரி, 'சேலை சேலை' என்று சத்தம் கொடுத்துக்கொண்டு சைக்கிளில் வந்து கொண்டி ருந்தான்.

ஜெயதேவி வீட்டுக்குள் ஓரமாக நின்று பரமசிவத்தை எதிர்பார்த்தாள். யாரு மற்ற தெருவில் நாய் ஒன்று எலும்புத் துண்டைக் கவ்விக்கொண்டு ஓடிக் கொண்டிருந்தது. திடீரென, பொந்துக்குள் பாயும் பாம்பென, அவளின் வீட்டுக் குள் நுழைந்தார் பரமசிவம். 

(தொடர்கிறேன்)

No comments: