Tuesday, January 17, 2017

ஆதலால் தோழர்களே 17


ராஜீவ்காந்தி படுகொலைச் செய்யப்பட்டிருந்தார். நள்ளிரவில் செய்தி  தீயாகப் பரவியிருந்தது. எப்போதும் சீக்கிரமே தூங்கிவிடும் ஊர், விழித்துக்கொண்டது. 

பிள்ளையார் கோயில் அருகில் தெருவிளக்கின் கீழ், காங்கிரஸ்காரர் கள் கூடி யிருந்தார்கள். ஆளாளுக்கு ஏதோ, மெதுவாகக் கதை சொல்லிக் கொண்டி ருந்தார்கள். 

வழக்கமாக தனது மளிகைக் கடையை ஒன்பது மணிக்கெல்லாம் அடைத்து விட்டு அருணாச்சலம் கடையில் சுக்காப்பி குடிக்கும், தீவிர காங்கிரஸ் காரரானவரும் உள்ளூர் கட்சி செயலாளருமான கடைக்காரர், இன்று ஏதோ கணக்கெழுதும் பொருட்டு, பத்து மணிவரை கடையைத் திறந்து வைத்தி ருந்தார். அதை மூடிவிட்டு கொப்பரையானுடன் வாய்க் காலுக்குப் போய் விட்டு வந்து, இப்போதுதான் தூங்குவதற்குச் சென்றார். வீட்டின் வெளியே திண்ணையில்தான் அவர் படுத்திருப்பார். அதற்குள் இந்தச் செய்தி அவரைக் கலவரப்படுத்தியது. முதலில் அவரிடம் இதைச் சொன்னது, ஈஸ்வரன். அவரது, கையாள் மாதிரி இருப்பவன். அவரால் நம்ப முடியவில்லை. அதற்கு பிறகுதான் அவர் வீடடின் ஃபோன் மணி ஒலித்தது. செய்தி உண்மை என்பதை உணர்ந்துவிட்டார். 

பொல பொலவென்று கண்ணீர் கொட்டியது. 'என் தலைவனை கொன் னு போட்டானுவளே' என்று விம்மி விம்மி அழுதார். ஈஸ்வரன் அவ ரைச் சமாதானப்படுத்தினான். திடீரென்று ஆவேசம் வந்தவாராக, 'ஏல நம்ம கட்சிக் காரன் எல்லாரையும் எழுப்புங்கல. ஒரு திமுககாரனையும் உயிரோட விட க்கூடாது' என்று எழுந்தார்.

வீட்டுக்குள்ளிருந்து ஒரு அரிவாளையும், ஒரு கம்பையும் எடுத்துக் கொ ண்டார். கம்பை ஈஸ்வரனிடம் கொடுத்துவிட்டு சைக்கிளை எடுத்தார். அவர் பொண்டாட்டியும், பிள்ளைகளும் என்னவென்று வந்தார்கள். 'ஒண்ணு மில்ல, தூங்குங்கெ' என்று விருட்டென வெளியேறினார். ஹாண்டில்பாரில் அரிவாளைத் தொங்கவிட்டுவிட்டு அழுத்தினார். 

ஊரெங்கும் திடீர்ப் பதட்டம் தொற்றிக்கொண்டது.  காங்கிரஸ்காரர்கள், திமுககாரர்களைத் தேடத் தொடங்கி விட்டார்கள். முக்கியமாக பரமசிவத்தை. பரமசிவத்தின் வீட்டின் முன், சிலர் கத்திக் கொண்டிருந்தனர். 

'ஏல பரம்சம் வெளிய வால, எங்கையாலதான் உனக்கு சாவு' என்று சத்தம் போட்டுக்கொண்டிருந்தார்கள் நான்கைந்து பேர். வெளிக் கதவில் கல்லால் எறிந்தார்கள். கிருஷ்ணவேணி பயந்துவிட்டாள். குழந்தைகள் தூங்கிக் கொண் டிருந்தன.

பரமசிவம் அவளின் தோளைத் தட்டி, 'பேசாம தூங்கு' என்று சொல்லிவிட்டு ஜன்னல் கதவின் ஓட்டை வழியே, யார் நிற்கிறார்கள் என்பதைப் பார்க்கப் போனான். கிருஷ்ணவேணி, போக வேண்டாம் என்று தடுத்தாள். 

மற்ற நாட்களில் என்றால் இதற்குள் தெருக்காரார்கள் கூடி, அடி தடியில் இறங் கியிருப்பார்கள். ஆனால், பரமசிவம், கட்சி மாறியதில் இருந்தே சொந்த ங்களுக்குள் கரைச்சல் இருந்ததால் தெரு அமைதி காத்தது. 

வெளியே சத்தம் அதிகமாக இருந்தது. கெட்ட வார்த்தை, கேவலமாக வந்து விழுந்தது. குரலை வைத்தே அது யார் என்பதையும் கூட யார், யார் நிற்பார்கள் என்பதையும் அனுமானித்தான் பரமசிவம். 

எதற்காக இந்த கொலைவெறி கோபம் என்பது பரமசிவத்துக்குத் தெரியவி ல்லை. ஆனால், ஏதோ ஒரு சம்பவம் நடந்திருக்கிறது என்பது மட்டும் புரிந்தது. என்னவென்பதில் குழப்பம்.

இதற்கு மேல் பொறுக்க முடியவில்லை. திடீரென்று எழுந்து,  வாசலி ன் மேலே, ஓட்டுக்குள் சொருகியிருந்த அரிவாளை உருவிவிட்டு கத வைத் திற க்க முயற்சிக்கையில், ஒரு சத்தம்.

'ஏல, யாரு எங்க வந்து அவயம் போடுதியோ, செரிக்குள்ளேலா' என்று. அது பக்கத்து வீட்டில் இருக்கும் பரமசிவத்தின் இரண்டாவது அண்ணன் கிட்டிண னின் குரல். சண்டைச் சச்சரவுகளுக்கும் வெட்டுக் குத்துவுக்கும் பேர் போன வர்.

'நில்லுங்கல, இன்னா வாரேன்' என்று அவர் சத்தமாகச் சொன்னதும் இன்னும் சிலர், கதவைத் திறக்கும் சத்தம் கேட்டது. வெளியே கத்திக் கொண்டிருந்த காங்கிரஸ்காரர்கள் ஓடினார்கள்.

'இன்னைக்கு இல்லனாலும் என்னைக்காது காங்கிரஸ்காரன் கையால தாம் ஒனக்கு சாவு' என்று மிரட்டல் குரலை விட்டுவிட்டு ஓடினான் ஒருவன். அந்தக் குரல் ராஜாமணியுடையது என்பது பரமசிவத்துக்குத் தெரிந்தது. 

வெளியே பரமசிவம் கையில் அரிவாளுடன் வந்தான். தெருக்காரர்கள் இப் போது ஒவ்வொருவராக மெதுவாக வெளியே வந்தார்கள். 

'எல்லாம் உன்னாலதாம்ல, அன்னைக்கே சிரிச்சானை சோலிய முடிச் சிருந்தா, எந்த நாயாவது அவயம் போட்டிருக்குமா, இப்படி. எல்லா பயலுக்கும் பயம் விட்டு போச்சு, பாத்துக்கெ' என்றார் கிட்டிணன்.   பதில் சொல்லவில்லை பரமசிவம். அருகில் இருந்தவர்கள், 'செரி, விடும். நாளைக்குப் பேசிக்கிடு வோம்' என்று சொல்லிவிட்டுக் கலைந்தார்கள்.

சத்தம் கேட்டு டெய்லரும் கதவைத் திறந்து வெளியே வந்திருந்தார். பரமசி வத்துக்குத் தூக்கம் கலைந்துவிட்டது. டெய்லரைப் பார்த்துவிட்டு புன்ன கைத்தான். அவரின் அருகில் ஜெயதேவி நிற்கிறாளா என்று தேடியது கண். இல்லை என்று தெரிந்ததும், சும்மா ஒரு சிரிப்பு சிரித்தான்.

அதற்குள் பரமசிவம் வீட்டருகே வந்த பழனி மெதுவாக, 'ஏய், ராஜீவ் காந்திய கொன்னுட்டாங்களாம்' என்றான்.

இந்த அவயமும் மிரட்டலும் இதற்குத்தானா என்பது இப்போதுதான் புரிந்தது, பரமசிவத்துக்கு. 

'ஏல, என்ன சொல்லுத?'

'ஆமா. வெடிகுண்டாம்'

'குண்டு போட்டுக் கொன்னுட்டாவளாம்?'

'நெசமாவால?'

'பின்ன, இதுல வெளாடுவாவோளா, யாராது?'

'அதாம் ஏசிட்டுப் போறானுவளோ?' என்ற பரமசிவத்திடம், 'அதுக்கு நம்மள ஏம்ல ஏசணும்?' என்று கேட்டான் பழனி.

'நாம, திமுகால்லா'

கணேசன், ஆறுமுகம், சுப்பையா என எல்லாரும் எதிர்சுவரில் உட்கார் ந்தார்கள். நிலா வெளிச்சம் பரவி இருந்தது. ஊரில் ஆங்காங்கே ஏதோ, பேச்சு சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. கிழக்கில் இருந்து, 'ஏலே பிடிங்கல' என்ற சத்தம் வந்துகொண்டிருந்தது.

அப்போதுதான் ஒழக்கு வேகமாக வந்தான். 'கெழக்க காசிப்பாண்டியை யாரோ அடிச்சு தொவச்சுட்டாங்களாம். இன்னும் ரெண்டு நாளு கரைச் சலுதாம். தேவையில்லாம பிரச்னை வரும். பேசாம அணைக்கு போயிருங்கெங்காரு மூக்க மூப்பனாரு' என்றான் ஒழக்கு. 

'அவரும் முழிச்சுட்டாரா?' 

'தெருவுல இப்படி காட்டுக் கத்து, கத்திட்டு போறானுவோ, காது கேக் காதா யாருக்கும்? அதூம் ராச்சத்தம், ராக்கெட்டு மாரிலா கேக்கும். அது மட்டுமி ல்லாம வெஷயம் அவருக்குத்தாம் மொதல்ல தெரிஞ்சு ருக்கு. கம்னீஸ்ட் கட்சி ஆபீஸ்ல தூங்குனவரு, பெறவு வீட்டுக்குப் போயிருக்காரு' என்று கிசு கிசுத்தான் ஒழக்கு.

'அவரு சொல்லுதது சரிதாம், பரம்சம்' என்றார் ஆறுமுகம்.

'என்ன சரிதாம்? அவனுவளுக்குப் பயந்து ஓட சொல்லுதீரோ' என்றான் பழனி.
'பயந்து இல்லடே. ஏம் தேவையில்லாம பிரச்னைய இழுக்கணும்?'

'அவனுவலாம் எம்மாத்திர பயலுவோ. அவனுவள சொட்டைய நொறிக்கத விடாம, ஒளிய சொல்லுதீரு' என்றான் பழனி.

'ஒங்க அண்ணன் மட்டும் இப்பம் சத்தம் கொடுக்கலைன்னு வையும். ஓடி வந்து குறுக்குல வெட்டிருப்பேன், அவயம் போட்ட நாயை' என்றான் கணேசன்.

வெளியே இறுமிக்கொண்டே வந்த கிருஷ்ணவேணி, 'மூக்க மாமா சொல்லு ததுதாம் சரி, எல்லாரும் ரெண்டு நாளு தோணியாறு போயிட்டு வாங்கெ' என்றாள் மெதுவாக.  

பிறகு சில நிமிட விவாதத்துக்குப் பிறகு ஒரு மனதாக அதை ஏற்றுக் கொண் டார்கள். மத்தியானமாக, கொடுக்காபுளி பயலும் அவன் தம்பி யும் சாப்பாடு கொண்டு வருவார்கள் என்றும் பேசப்பட்டது. எல்லாரும் அவரவர் வீட்டில் ஒரு சட்டி நீத்தண்ணியை வயிறு முட்டக் குடித்து விட்டு வடக்குத் தெரு வழியாகப் புறப்பட்டார்கள், மூன்று சைக்கிள் களில் ஆறு பேர். 

நிலா வெளிச்சத்தில் இருட்டு மங்கலாக இருந்தது. சைக்கிளை எடுக் கும் முன், பழனி சொன்னான்.

'போற வழியில ஆளுக்கு ரெண்டு இளநீய பறிச்சுட்டுப் போவோம். இல்லனா பசி தாங்காது'

'யாரு மரத்துல?' என்றார் ஆறுமுகம்.

'நீரு இருக்கும் போது, வேற யாரு மரத்துல பறிக்கச் சொல்லுதீரு' என்றான் பழனி.

'செரி, போவும்' 

பெத்தான் பிள்ளைக் குடியிருப்பை அடுத்து, மேற்கு மலைத் தொடர்ச்சியின் காட்டுக்கு அடியில் இருக்கிறது கடனாநதி அணை. மரங்களும் வயல்களும் சூழ்ந்த வனப் பகுதி. அணையைச் சுற்றி நடந்து காட்டுக்குள் ஏறினால் துண்டு துண்டான பாறைகள் இருக்கிறது. ஒவ்வொரு பாறையின் அடியில் மணல்கள் விரிந்து கிடக்கும். அருகில் சூரிய வெளிச்சத்தை உள்ளே விடாதபடி அடர்ந்த மரங்கள். காட்டின் உயர்ந்த, வளைந்த பல வருட மரங்கள். 

எப்போதாவது குடிகார நண்பர்கள் ஒன்று கூடுகிற நேரங்களில் அங்கே யே கோழி அடித்து, மீன் பிடித்து சமைத்துத் தின்பது வழக்கம். கூட சாராயமும் சேர்ந்துகொள்ள இனிமையாக இருக்கும். பதுங்கிக் கொள்வதற்கு தோதான இடம். சைக்கிளை மிதித்துக்கொண்டே, கேட்டான் கணேசன்.

'பரம்சம், ராஜீவ்காந்திய யாருடே கொன்னுருப்பா?'

'எவனுக்குத் தெரியும்?'

'அதுக்கு நம்மள தேடி, ஏம் வாரானுவோ, காங்கிரஸ்காரனுவோ'

'அவனுவளுக்கு யாரு எதிரியோ, அவனைத் தேடிதாம் வருவாம்'
'இது கடைக்காரரு வேலதாம்ல'

'பண்ணட்டும், பண்ணட்டும், கம்னீஸ்ட் கட்சில இருக்கும்போது நாம பண்ணலையா?'

'ஆமா, பெறவு. தராசையே சீரா புடிக்க முடியாதவரு, அரிவாள தூக் குனா கோவம் வராதா? நான்தான் மூஞ்சியில குத்துனேன். ரெண்டு பல்லு ஒடைஞ்சு போச்சு. வாயெல்லாம் ரத்தம்' என்றான் ஒழக்கு சிரித்துக்கொண்டே.

'அதுக்கு, பதிலு கொடுக்காண்டாமா? அதான் தேடியிருப்பாம்'

'மயிரப் புடுங்குனாம்? சரி, நீங்கலாம் பிரச்னை வேண்டாம்னு சொன் னதால வந்தேன். வீட்டுல இருந்தம்னு வையி, அந்த நாயி வந்தாம்னா, கரண்டை காலை வெட்டிருப்பேன்' 

'செரிடே விடு,  நீ சூரப்புலிதாம்.  இப்பவே வயிறு பசிக்க ஆரம்பிச்சுட் டெ. அவம் வார வரை வயிறு தாங்குமான்னு தெரியலயே' என்றான் பரமசிவம்.

'அப்பம் இன்னொரு எளநிய குடிச்சிருக்க வேண்டியதானெ?'

மூன்று சைக்கிள்களின் ஹேண்டில்பரிலும் நான்கு, நான்கு இளநீர்கள் தொங் கிக் கொண்டிருந்தன. 

'பசிக்க மாதிரி இருக்கு. பாத்துக்கிடலாம்' என்ற பரமசிவம், இப்போது கணேச னிடம் இருந்து சைக்கிளை வாங்கி, தான் அழுத்தினான். 

கருத்தப்பிள்ளையூர் ரோட்டைக் கடக்கும்போது, சி.எஸ்.ஐ சர்ச்சுக்கு வெளியே, சிலர் நின்று பேசிக்கொண்டிருப்பது தெரிந்தது. ராஜீவ் காந்தி கொல்லப்பட்ட விஷயத்தைத்தான் பேசிக்கொண்டிருந்தார்கள். இவர்களைக் கண்டதும், 'யாரு சைக்கிள்ல...' என்று சத்தம் வந்தது.

'யாரா? யோவ். சிவலிங்க நாடாரே, நான்தான் பழனி. என்னய்யா தூங்காம பேசிட்டிருக்கியோ?' என்றான் சத்தமாக.

'பழனியா, செரி, செரி. ஊருக்குள்ள போற ஆளு யாருன்னு தெரிய ணும்லா... அதாம் கேட்டேன்'

'ஊருக்குள்ளதாம்யா போறோம். யாரு வீட்டுக்குள்ளயும் போவல'

'ம்ம். அதுவேறயா? அப்படிலாம் போயிருவேரா என்ன?'

'அந்த அளவுக்கு கூறுகெட்டாவே இருக்கோம்'

'அதான பாத்தேன். வெவாரம் என்னன்னு தெரியும்லா'

'தெரியும், தெரியும்'

'தூரமா போறியோ, ராத்திரி போல'

'இனனா சிவசைலம் கோயிலுக்கு. காலைல மொத வேலை கெடக்கு. அதாம்'

'செரி போயிட்டு வாங்கய்யா'

சைக்கிள்கள் கிளம்பின.

'இவரு நம்மூர் காங்கிரஸ்காரனுவட்ட சொல்லிட்டாருன்னு வையேன்' என்றான் கணேசன்.

'எல்லாரும் ஒன்ன மாரி இருப்பாவுளாடே கணேசா? அதெல்லாம் தங்கமான மனுஷன். எதையும் சொல்லமாட்டாரு' என்றான் பழனி.

'அதாம் கோயிலுக்குன்னு பொய் சொல்லியாச்சே' என்றான் சுப்பையா.

'இல்லன்னாலும் அவருக்குத் தெரியாது பாரு' என்றான் ஒழக்கு.

ஆறுமுகம் பீடியைப் பற்ற வைத்துவிட்டு, 'அப்படியே சொன்னாதாம் என்னல? இங்க வந்து அடிச்சுட்டு, உயிரோட போயிருவனுவளா, நம்மள மீறி' என்றார் புகையை விட்டபடி. வீசிக்கொண்டிருந்த ஈரக் காற்று குளிர் தந்து போனது. 

ஒற்றையடி பாதையில் மாட்டுச் சாணங்கள் கிடந்தது. நேற்று மாலை யோ, இரவோ, மாடுகள் போட்டிருக்கும் சாணங்கள் இவை. அப்படியென்றால் யாரோ, கெடைக்காரர்கள் சென்றிருக்கிறார்கள் என நினைத்துக்கொண்டா ர்கள். செடி, செத்தைகளில் நடந்து சத்தம் கொடுத்துக் கொண்டே போனார்கள். 

இன்னும் நன்றாக விடியவில்லை. காட்டுக்குள் கும்மிருட்டாக இருந்தது. ஆறுமுகத்தின் கையில் டார்ச் லைட் இருந்தது. எல் லோரும் அவரைப் பின் தொடர்ந்தார்கள். செத்தைகளில் இருந்து சர் புர் சத்தமும், ஏதோ பூச்சிகள் தாவும், பறக்கும் சத்தங்களும் கேட்கத் தொடங்கின. ஏதோ ஒரு விலங்கு எதையோ விரட்டிப் போவது போன்ற சத்தமும் உள்ளே கேட்டது. விலங்குகள் ஏதும் நின்றால் விலகும் என்ற நம்பிக்கையில் இவர்களும் சத்தமாகப் பேசிக்கொண்டே போனார்கள். 

அணையில் தண்ணீர் அதிகமாக இல்லை. குளிர்ந்த காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது.

(தொடர்கிறேன்)

No comments: