Sunday, October 23, 2011

கடவுள்களிடம் பேசுபவர்

பெரும்பாலு்ம் அவரை பெரியவாய்க்கால் பாலம் அருகே இருக்கிற சிறு தோப்பில் தென்னை மரத்தினூடாகப் பார்க்கலாம். காவிநிற கோவணத்தைக் கட்டியபடி வியர்க்க விறுவிறுக்க மண்வெட்டிக்கொண்டோ, ஈராய்ங்கம் உள்ளிட்ட செடிகளுக்கு தண்ணீர் பாய்ச்சிக்கொண்டோ இருப்பார். நீட்டமாக வளர்ந்திருக்கிற தலைமுடி, சடை சடையாக திரண்டிருக்கும். வளர்ந்து சுருண்டு கட்டியான முடிகளில் இரண்டு சடை, சிறு மாலை போல பின் பக்கம் தொங்கிக்கொண்டிருக்கும். நெற்றியில் எப்போதும் நாராயண சாமியின் முத்திரி. வயிற்றில் தொப்புளில் இருந்து நேர் மேலாக கழுத்துவரை முத்திரியால் ஒரு கோடு. இதே போல இரண்டு கைகளில். அது சாதாரண திருநீறு என்றால் வெளிவருகிற வியர்வையில் காணாமல் போயிருக்கும். ஆனால், வெண்பழுப்பு நிற முத்திரி அவ்வளவு சீக்கிரம் அழிந்துவிடுவதில்லை.


அந்த சிறு தோப்பு, ராஜம்மாள் தாங்கி அம்மன் கோயிலுக்கு வலப்புறம் இருந்தது. எதிரில் பெரிய வாய்க்கால் என்று சொல்லப்படுகிற சின்ன வாய்க்கால். இதன் படித்துறையில் பெண்கள் மட்டுமே குளிக்கும் துணிதுவைக்கும் பணியை செய்துகொண்டிருந்தனர். ஆண்களுக்கு அதன் மேல் பக்கம். கொஞ்சம் தள்ளி சின்னதாக நான்கைந்து பாறாங்கற்களைப் போட்டு குளிக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு குளிக்க வருகிற காலை நேரத்தில்தான் அவரை எப்போதும் பார்ப்பது. இதைத் தவிர்த்து கம்யூனிஸ்ட் கட்சி ஆபீஸுக்குப் பின் பக்கம் இருக்கிற தங்கம்மன் கோயில் தெரு மளிகை கடை அருகில் இரவு நேரங்களில் நின்று கொண்டிருப்பார்.

அடர்ந்து திருகிய மீசையும் முடிகள் படர்ந்த தேகமுமாக அவர் நடந்துவரும்போது ஒரு கம்பீரம் இருக்கும். கைகளை பின்பக்கம் கட்டிக்கொண்டு நெஞ்சை விரித்து விரித்து அவர் வேகமாக நடந்துவருகிற தோரணையில் பாரதியாரை நான் பார்ப்பேன். ஏன் பாரதியார் தெரிகிறார் என்பதெல்லாம் எனக்குப் புரியாதது. சல்லிசாக மேனி தெரிகிற துண்டைபோட்டுக்கொண்டுதான் நடப்பார். ஏதாவது ஒரு வளைவில் திரும்பும்போது நின்று பின்பக்கம் திரும்பி எங்காவது தெரிகிற கோயிலுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு தொடர்வார். கொஞ்சம் தூரத்திலோ, பின்பக்கமோ யாராவது வருகிறார்கள் என்றால் கொஞ்சம் ஓரமாக நின்று அவர்களைப் பார்ப்பார். அவர்கள் சென்ற பின்புதான் இவர் நடக்கத் தொடங்குவார்.

தோப்பு வேலை இல்லாத நாட்களில், அம்மன் கோயில் அருகில் இருக்கிற வேப்ப மர மூட்டில் அமர்ந்துகொண்டு போகிற வருகிறவர்களுக்கு-முன்பின் தெரியாதவர்களானாலும் கைகளைக் கூப்பி வணக்கம் சொல்லுவார். இந்த வணக்கம் உங்களிடமிருந்து பதில் வணக்கத்தை எதிர்பார்த்து அல்ல. அதுவொரு சுபாவம். எப்படி எங்கிருந்து வந்தது என்பதும் தெரியாது. அவரது பெயர் என்னவாக இருக்கும் என்பதை தெரிந்துகொள்ள கிட்டத்தட்ட உங்களைப் போல் எனக்கும் ஆசைதான். யாரிடம் விசாரித்தாலும் சடையன் என்றுதான் சொன்னார்கள். இது சடைமுடைகள் கொண்டவர் என்ற காரணத்தால் வந்த பெயர். ஆனால், அவரது நிஜப் பெயர் என்னவென்று தெரியவில்லை. இந்தப் பெயராக இருக்குமோ, அந்தப் பெயராக இருக்குமோ என்று நானே பல பெயர்களை அவருக்கு வைத்துப் பார்த்திருக்கிறேன். ஆனால், சடையனைத் தாண்டி வேறு எந்த பெயரும் அவருக்குப் பொருத்தமானதாகவும் இல்லை.

ஒவ்வொரு நாள் காலை மற்றும் மாலையில், அம்மனுக்கு பூசை நடக்கும். இந்தப் பூசைக்காக, திருமணமாகாத அக்காள்கள் சாயங்காலங்களில் கோயிலுக்கு வருவார்கள். அந்த அக்காள்களுக்காக சில அண்ணன்களும். சரியாக அவர்களுக்குப் பின்னால்தான் இவர்கள் நடப்பார்கள். இது அக்காள்களுக்கும் தெரியும். ஒரு வேளை அவர்களும் ரசிக்கிறார்கள் என்று நினைத்துக்கொள்வேன்.

தீபாராதனை முடிந்ததுமே அண்ணன்கள் வெளியில் வந்துவிடுவார்கள். அவர்களது நோக்கம் சாமி கும்பிடுவதல்ல என்பது குத்துமதிப்பாக அங்கங்கே தெரிந்ததுதான். இப்படி அண்ணன்களும் அக்காள்களும் வெளியே வந்தபிறகு, கோயில் அமைதியாக இருக்கும். அப்போதுதான், சடையனின் சத்தம் கேட்டு சாமி விக்ரகத்தைப் பார்த்தேன்.

'என்ன நீ? என்னைய கண்டுக்கிட மாட்டே... அப்படித்தானே... நானும் பாத்துக்கிடுதேன், எவ்வளவு நாள்தான் இப்படி பண்ணுதேன்னு... நேத்து நான் என்ன சொன்னேன்? இன்னைக்கு நீ இப்படி சொல்லுதே...ம்ம்' என்று சிலை பார்த்து பேசிவிட்டு ஒரு சிரிப்பு சிரித்தார். கோயிலுக்குள் எதிரொலித்து திரும்பி என் காதுக்குள் வந்தது. அப்போதுதான் முதன்முதலில் கடவுளிடம் பேசுபவரைப் பார்த்தேன். இவருக்கு மட்டும் எப்படி கடவுளின் மொழி தெரிந்திருக்கிறது. இல்லையே, இவர் பேசியது தமிழில்தானே... கடவுளின் மொழி தமிழா? இல்லை அம்மன் தமிழ்க் கடவுள். அதனால் தமிழ். மனதுக்குள்ளேயே கேள்வியும் பதிலும் வந்து வந்து போனது.

சாமிகளிடம் பேசுபவர் சாமானியனாக இருக்க முடியுமா? முடியாது என்று மறுநாளில் இருந்து அவர் வணக்கம் வைத்தால் பதிலுக்கு வணக்கம் வைக்க ஆரம்பித்தேன். என்னுடன் வரும் நண்பர்கள், 'ஏல என்னாச்சு.. இவனுக்கெல்லாம் வணக்கம் போடுதே" என்று சொல்ல ஆரம்பித்தார்கள். 'அவரு வயசென்ன, நம்ம வயசென்ன? பதிலுக்கு ஒரு வணக்கத்துல என்ன குறைஞ்சு போயிர போவுது' என்பேன். வணக்கங்கள் சில வாசல்களைத் திறக்கவும் செய்யும்.

அவர் அதிகம் பேசிப் பார்த்ததில்லை. எதிர்வயல்காரர்கள், அவரது உறவினர்கள் இப்படி யாராவது வந்தால், வார்த்தைகளை எண்ணிப் பேசுவதைப் போலதான் பேச்சு. 'ஆங்... ஆறு வார்த்தை முடிஞ்சுட்டு. இனி பேச மாட்டேன்' என்பது போல மேலே பார்ப்பார். அவருக்கு குடும்பம் இருக்கிறதா இல்லையா என்பதெல்லாம் தெரியாது. அவர் பற்றி வேறு யாரிடம் கேட்டாலும் 'அவனைக் கேட்டு என்ன பண்ணப் போற?' என்பதாகவே இருந்தது. இப்படிச் சொன்னதாலோ என்னவோ எனக்கு அவர் மீதான மதிப்பு உயர்ந்தது. அம்மன் கோயில் வாய்க்காலுக்கு குளிக்க வரும்போது என்றாவது அவர் தென்படாவிட்டால் மனம் அவரைத் தேட ஆரம்பித்தது. வலப்பக்கம் இருக்கிற தோப்பில் கோயிலின் பின் பக்கம் இருக்கிற ஓடையில், எதிர் வரப்பில் எங்காவது...

ஊரில் எங்கு கோயில் கொடை என்றாலும் வந்துவிடுவார் சடையன். எல்லா சாமிகளுடனும் பேசும் தன்மை கொண்டவர் அவர். பூடத்தின் முன் அமர்ந்தோ, நின்று கொண்டோ, அவர் பேசுவார். பேச்சினூடாக வருகிற சிரிப்புதான் பிரதானம. அந்த சிரிப்பில் ஏளனம், வீராப்பு, தெனாவட்டு, எல்லாம் இருக்கும். 'போய்யா போ... நீயெல்லாம்...' என்கிற திமிர் இருக்கும். இவ்வளவு தைரியமாக, கோபமாக, ஏளனமாக சாமியுடன் பேசுகிற ஒருவர், ஏன் சக மனிதர்களிடம் அதிகம் பேசுவதில்லை? சாமியுடனான இப்படியான உரையாடல்களில் சாமி என்னப் பதில் சொல்லியிருப்பார் என்றும் நினைப்பேன். மனிதர்களின் சத்தம் போல சாமிகளின் சத்தங்கள் கேட்பதல்ல. அது உணர்வது. எப்படி? இதோ சடையன் வழியாக. சடையன் சாமியின் வடிவமா? யார் கண்டது?

கண்டதும் காணாததும்தான் வாழ்க்கை.

மேட்டுத்தெருவில் இருக்கிற நாராயணசாமி கோயிலில் வெள்ளி, ஞாயிறுகளில் குறி சொல்லுவார் சாமியார். வெளியூர்களில் இருந்தெல்லாம் குறி கேட்க வந்திருப்பார்கள். இரவு ஒன்பது பத்து மணிக்கு மேல்தான் சாமி குறி சொல்ல ஆரம்பிப்பார். அந்த கோயிலின் நடுவில் நாராயணசாமியும், அதன் வலது பக்கம் ஆஞ்சநேயர் சாமியும். குறி சொல்பவர் செந்நிற வேட்டியுடன் நாராயணசாமி வாசலின் உள்ளே உட்கார்ந்துகொள்வார் கண்களை மூடி.

''யாரோ குழந்தை இல்லைன்னு குறி கேட்க வந்திருக்காவுளோ?" என்பார்.

'ஆமா' என்று குரல் வரும். 'நீங்க கீழ திசையில இருந்து வாரேளா?' என்று ஆரம்பித்து ஒவ்வொரு சம்பவமாக கண்களை மூடிக்கொண்டு சொல்லுவார். கேட்பவர்களுக்கு எல்லாம் சரியென்றே தோன்றும். அம்மாவுடன் இந்த கோயிலுக்குச் சென்றபோது ஆஞ்சநேயரின் அருகில் சடையன் அமர்ந்திருந்தார். வருகிறவர்களுக்கு முத்திரி கொடுப்பது உள்ளிட்ட வேலைகளை அவர் செய்துகொண்டிருந்தார். திடீரென்று சாமியுடன் பேசிக்கொண்டே, பல்லால் தேங்காயை வேகவேகமாக உரித்து, அவரது மண்டையிலேயே அடித்து உடைத்து தேங்காய் தண்ணி தலையிலிருந்து சிந்த, அப்படியே சாமியார் முன்னால் வைத்தபோது எனக்கு திக்கென்றது.

நான்கைந்து பேர்களுக்கு குறி சொல்லிவிட்டு, எந்த பக்தரோ கொடுத்த ஒரு வாழைத்தாரைக் காட்டி, உரிச்சு ஒரு சீப் கொடுங்க நாராயணனுக்கு என்றார் சாமியார். சடையன் அந்த தாரில் துண்டு துண்டாக இருந்த பழங்களில் ஒரு வரிசையின் கீழே கைவைத்து மேலே இழுக்க டொப்பென்று தொளியை உரித்துக்கொண்டு வந்தது பழ சீப். கொடுத்துவிட்டு, இன்னொரு சீப்பை பிய்த்து தொளியோடு தின்றுகொண்டு சடையன் பார்க்கும் பார்வையில் ஆஞ்சநேயர் தெரிந்தார்.

அம்மாவுக்கு சாமியிடம் கேட்க எதுவும் இல்லை. புதிதாக வாங்கியிருந்த பசுமாட்டின் பாலை கோயிலுக்கு கொடுத்துவிட்டு திரும்பினோம். போகும்போது கேட்டேன்.

'அந்தாளு யாருழா?'

'அவரும் சாமிக்கொண்டாடிதான்... எப்பவும் சாமியவே நினைச்சுட்டிருக்கவரு' என்றாள் அம்மா.

'பொண்டாட்டி பிள்ளைலு இல்லையோ?'

அம்மா என்னைத் திரும்பிப் பார்த்தாள்.

'ஏண்டே இந்த கதையெல்லாம் உனக்கு?" என்றாள்.

'இல்ல, சாமியவே நினைச்சுட்டிருந்தா, பொண்டாட்டி பிள்ளைலுவோள யாரு பார்ப்பா?'

'ஒனக்கு ரொம்ப முக்கியம்ல... வாய பொத்திட்டு வா?' என்றாள். அதன் பிறகு அவளிடம் யார் பற்றியும் கேட்கவில்லை.

சடையனிடமே அவர் பற்றி கேட்டுவிடலாம் என முடிவு செய்தேன். ஒரு சாயங்காலம், அம்மன் கோயிலோடு ஒட்டிய அறை ஒன்றில் சப்பரத்துக்கான சாமான்கள் வைக்கப்பட்டிருந்த வெட்டவெளி அறையில் நின்றுகொண்டிருந்தார் . குளித்துவிட்டுப் போகும் யாரோ ஒரு பெண்ணை, 'சீக்கிரமா போங்க... மழை வாரதாப்ல இருக்கு' என்று வான் நோக்கிப் பார்த்தவாறே சொல்லிக்கொண்டிருந்தார். வானில், மேகம் கருநிற சாம்பலாகியிருந்தது. வான் நோக்கியதிலிருந்து சடையனின் பார்வை வேறுபக்கம் திரும்பவில்லை. தலை மட்டும் அங்கும் இங்கும் ஆடிக்கொண்டிருந்தது. துண்டை எடுத்து இப்போது இடுப்பில் கட்டிக்கொண்டு சிரிக்கத் தொடங்கினார்.

'இப்பவும் அதையே சொல்லாதீரும்... நான் நம்ப மாட்டேன். உன்னை பார்த்தாலே போதும். வெறன்ன கேட்க போறேன் நான்? அல்லது என்னத்தை எனக்கு தந்துர முடியும் உன்னால?' என்றவாறு அவரது உரையாடல் தொடர்ந்துகொண்டிருந்தது.

அவரையேப் பார்த்துக்கொண்டிருந்தேன். நேராக அவர் முன் நின்றேன். என்னைப் பார்க்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு கண்ணை மூடி திறந்து என்னைப் பார்த்தார். கைகளை கூப்பி வணக்கம் வைத்தார்.

'யார்ட்ட பேசிட்டிருந்தயோ? என்றேன்.

'நம்ம ஐயாட்டதான். வேறு யாரு வந்து எங்கிட்ட பேசப்போறா?'- என்ற சடையன், பிறகு நடக்கத் தொடங்கிவிட்டார்.

அந்த 'ஐயா', கடவுளா என்பது தெரியாது.

5 comments:

ப.கந்தசாமி said...

ரசித்தேன்.

முத்துலெட்சுமி/muthuletchumi said...

\\'ஆங்... ஆறு வார்த்தை முடிஞ்சுட்டு. இனி பேச மாட்டேன்' என்பது போல //

:) இதுரொம்ப நல்லாருக்கு..

கடவுள்கிட்ட இப்படி சத்தமா இல்லாட்டியும் .. மனசுக்குள்ள இப்படித்தான் பேசறது நாங்களூம் ஒரு ப்ரண்டைப்போல :))

Shanmugam Rajamanickam said...

அய் அயம் பர்ஸ்ட்...

ஆடுமாடு said...

''ரசித்தேன்.//
நன்றி ஐயா.
.................
//கடவுள்கிட்ட இப்படி சத்தமா இல்லாட்டியும் ...
மனசுக்குள்ள இப்படித்தான் பேசறது
நாங்களூம் ஒரு ப்ரண்டைப்போல :))//
முத்து, நீங்களும் சாமிகிட்ட பேசுவீங்களா?
...................
சண்முகம் நன்றி.

சித்திரவீதிக்காரன் said...

கடவுளிடம் பேசுபவரைப் போல எல்லோரும் கடவுளிடம் தினமும் பேசுகிறார்கள். எல்லா வேண்டுதல்களையும் அவரிடம் சொல்லத்தானே செய்கிறார்கள். என்னவொரு வித்தியாசம் என்றால் இவர் மற்றவர்களைப் போல எதுவும் கேட்பதில்லை என்று நினைக்கிறேன்.
பகிர்விற்கு நன்றி.