Saturday, October 29, 2011

தகடுகள் புதைந்த நிலம்

ஸ்ரீவில்லிபுத்தூரில் கல்யாணம் முடித்துவிட்டு திரும்பிய சின்ன மாமாவையும் அத்தையையும் அக்ரகார புளியமரம் அருகிலிருந்து வில் வண்டியில் கூட்டி வந்துகொண்டிருந்தார்கள். கோபால் மாமாதான் வண்டி ஓட்டினார். அம்மா, சித்திகள், சித்தப்பா என்று யாருமே வரவில்லை. ஆச்சி, வாயில் துணியை வைத்துக்கொண்டு பெரியாச்சி வீட்டில் நின்றுகொண்டிருந்தாள். கல்யாணம் முடிந்த கையோடு அந்த வழியாகவே பெரிய மாமாவும் பெரிய அத்தையும் திருநெல்வேலிக்கு போயிருப்பார்களோ என்னவோ. இங்கு வரவில்லை. ஸ்ரீவில்லிபுத்தூர் அத்தைக்கு சொந்தக்காரர்களான அதிக உயரம் கொண்ட பெண்களும் சில முரட்டு மீசை ஆண்களும் வில் வண்டிக்குப் பின் நடந்து வந்துகொண்டிருந்தார்கள். அவர்களது நடையில் பெருமிதம் தெரிந்தது. வண்டி மெதுமெதுவாக புழுதி படிந்த செம்மண் சாலையில் நகர்ந்துகொண்டிருந்தது.


'ஏ தாயீ, உன் தம்பி வந்தாச்சாமே..?' என்று அம்மாவிடம் மேல விட்டு பாலா ஆச்சி சொன்ன பிறகுதான் எனக்கும் தெரிந்தது. அக்கா, வீட்டுக்குள் இருந்தாள். அம்மா, 'ஆமா... நல்லாயிருந்தா சரிதான்... யாரு பசிக்கு யாரு கஞ்சி ஊத்த?' என்று சொல்லிவிட்டு மாட்டுக்கு புண்ணாக்கு வைக்கப் போய்விட்டாள். வீட்டு வேலியின் வடக்கு ஓரத்தில் வளர்ந்திருக்கிற வாதமடக்கி மர மூட்டில் ஒண்ணுக்கடித்துக்கொண்டிருந்த செல்லையாண்ணன் புது வேட்டி அணிந்து கொண்டு மாமாவை பார்க்க ஓடினான். அம்மாவுக்கும் அக்காவுக்கும் தெரியாமல் பின்பக்க கருவை மூடு வழியாக டவுசரைப் பிடித்துக்கொண்டு நானும் ஓடினேன். அப்போதெல்லாம் சின்ன மாமா, என்னிடம் பேசுவதில்லை. அக்காவிடமும்தான். அம்மாவுடனான சண்டையில் நாங்களும் பலியாகி இருந்தோம். ஆனால், புதிதாக வர இருக்கிற அத்தையை பார்க்கும் ஆவலில் புளியமரம் வந்திருந்தேன்.

கொஞ்சம் கூட்டம் கூடிவிட்டது. 'எய்யா கணேசா... கல்யாணம் நல்லபடியா முடிஞ்சுதா?' என்று மாமாவிடம் கேட்டுக்கொண்டே அத்தையை நோட்டமிடும் பெண்கள், 'யம்மா, கணேசன் பொண்டாட்டி.. வா... பார்க்கதான் ஊரு புழுதிகாடு. பாசக்காரங்க ஊரு' என்று சொல்லிவிட்டு சிரித்தார்கள். வண்டியின் உள்ளிருந்து அத்தையும் சிரித்தாள். ஓரமாக நடந்துவந்துகொண்டிருந்தவன், அத்தையை பார்த்தேன். மூக்குத்தி மினுமினுத்தது. கழுத்தில் பெரும் நகைகள். அடிக்கடி மாமாவைப் பார்த்துச் சிரித்துக்கொண்டிருக்கிற முகம். ஒரு பக்கமாக கிட்னம்மா சித்தியின் சாயல் தெரிந்தது. பட்டுப்புடவையில் சம்மணம் போட்டு உட்கார்ந்திருந்தாள். இதுவரை கவனிக்காத மாமா, இப்போது என்னைப் பார்த்துவிட்டு, அத்தையிடம் ஏதோ சொன்னார்.

வண்டிக்குள்ளிருந்து தலையை நீட்டிப் பார்த்தாள் அத்தை. என்னுடன் நான்கைந்துபேர் நின்றுகொண்டிருந்தார்கள். திரும்பவும், மாமா ,கைகாட்டி ஏதோ சொன்னார். இப்போது அத்தை சிரித்தாள். 'இங்க வா" என்பது போல கையை ஆட்டினாள். நாங்கள் ஒருவருக்கொருவர் பார்த்துக்கொண்டோம். யாரை அழைக்கிறாள் என்பது தெரியவில்லை. அப்படியே என்னை அழைபபதாக இருந்தாலும் பேசாத மாமாவின் பொண்டாட்டி அருகில் ஏன் போக வேண்டும் எனபதாகவும் இருந்தது.

வண்டி நகர்ந்துகொண்டிருக்க தண்ணிக்குப் போகும் பெண்கள் திருவிழா காட்சிப் போல, 'எய்யா வண்டியை நிறுத்து... கணேசன் பொண்டாட்டியை பார்த்துக்கிடுதேன்' என்று உரிமையோடு நிறுத்தி பார்த்து விட்டுப் போனார்கள். அத்தைக்கு ஒரு மாதிரியாக இருந்திருக்கும். நகரத்தில் வாழ்ந்திருந்த அவளுக்கு இது புதிதாக இருந்திருக்கலாம். வெட்கம் பிடுங்கி தின்றிருக்கும். 'நான் என்ன பொம்மையா?' என்று செல்லமாக மாமாவிடம் கோபப்பட்டிருக்கலாம். 'கொஞ்சம் சீக்கிரமா வண்டியை அடிக்க சொல்லுங்க?' என்று மனதுக்குள் சொல்லியிருக்கலாம். பார்த்துவிட்டுப் போன பெண்கள், என்ன கமெண்ட் அடித்திருப்பார்கள்? என்பதும் அத்தையின் மனதில் மல்லுக்கட்டியிருக்கும்.

'இன்னும் கொஞ்சம் கலரா இருந்திருக்கலாம் என்றோ? 'ரெண்டு மூக்கு குத்தியிருந்தா எடுப்பா இருந்திருக்கும்? என்றோ...காது பக்கத்துல ரெண்டு முடியை இழுத்துவிட்டு ஸ்டைல் காட்டியிருக்கலாம் என்றோ அவர்கள் நினைத்திருக்கலாம். ஆனால் யார் நினைத்தும் எதுவும் ஆகப்போவதில்லை. எல்லாம் ஏற்கனவே முடிவு செய்யப்பட்டுவிட்டது.

பிறகு தமயந்தி டீச்சர் வீட்டுக்கு பின்னால் நானும் சிலரும் நின்றுகொண்டோம். வில் வண்டி தூர தூரமாக சென்றுகொண்டிருந்தது. வீட்டுக்கு போக நினைக்கையில் எனக்கு அழுகை வர ஆரம்பித்தது. ஏன் அழுகிறேன் என்று தெரியவில்லை. புள்ளியாக போகும் வண்டியைப் பார்த்துக்கொண்டே இருந்தேன். என் கண்ணீரோடு மாமாவின் பட்டு வேட்டியும் சட்டையும் தெரிந்துகொண்டிருந்தது.

வீட்டுக்கு எதிரிலிருக்கிற பெரிய வீட்டில்தான் மாமா தங்குவார். அந்த வீட்டின் மச்சி மாமாவின் அறை எனப்பட்டது. அவரது அறை என்று சொல்லப்பட்டாலும் பகல் நேரத்தில் மிளகாய், நெல், கத்தரி வத்தல், சீனிஅவரைக்காய் உள்ளிட்ட பொருட்கள் எப்போதும் காய வைக்கப்பட்டிருக்கும்.
அப்பா, மகாராஷ்ட்ராவின் அவுரங்காபாத்தில் வாங்கி கொடுத்த டிரான்ஸ்சிஸ்டர் ரேடியோவை அம்மாவை விட மாமாதான் அதிகம் பாதுகாத்து வந்தார். பழுப்பு நிறத்தில் முன்பக்கம் மட்டும் பளபளக்கிற யுடன் கூடிய அந்த ரேடியோவை பார்க்கிற யாரும், 'இதை எங்க வாங்குனியோ?' என்று கேட்காமல் இருந்ததில்லை. அப்படியான அழகை கொண்ட ரேடியோவை அக்கு அக்காக கழற்றி ரிப்பேர் பார்க்கும் தொழிலையும் மாமா கற்றிருந்தார். இரவு நேரங்களில் இலங்கை வானொலியின் பாடல், காற்றின் அலைகளுக்கு ஏறி இறங்கி கேட்டுக்கொண்டிருக்க, மாமாதான் அதை தெளிவாக கேட்கும் படி செய்து கொடுத்தார். பக்கத்து வீட்டு வானொலிகள் திக்கித்திணறி பாடிக்கொண்டிருக்கையில் இந்த ரேடியோ மட்டும் எப்படி இவ்வளவு தெளிவாக பாடுகிறது என்பது பற்றிய வியப்பு, பக்கத்து வீட்டு பட்சி தாத்தாவுக்கும் பாலா ஆச்சிக்கும் உண்டு.
உறை

மாமா பற்றிய நினைவுகளை இப்படியாக கொண்ட அந்த வீடு, அவர் வராமல் இருந்த பிறகு வெறுமையானது. ரோட்டில் என்னைப் பார்த்தால் கூட மாமா பேசுவதில்லை. பிறகு ஏதோ ஒரு விஷேசத்துக்கு அழைப்பதற்காக வீட்டுக்கு வந்திருந்தார். அப்போது, நெல் அவித்துக் கொண்டிருந்தாள் அம்மா. அதன் வாசம், வீடு முழுவதும் வெந்து வியாபித்துக்கொண்டிருந்தது. வேகமாக ஓடி மாமாவின் அருகில் உட்கார்ந்தேன். 'ஏன் அத்தையை கூட்டிட்டு வரலை' என்றாள் அக்கா. 'ஏல சாப்ட்டு போ' என்றாள் அம்மா. கோபம் திடீரென்று பிறந்து திடீரென எரிக்கும் தீ. பாசம் உயிருக்குள் உறங்கும் அக்னி.

மாமா கிளம்பும்போது சட்டைப் பையிலிருந்து பத்து ரூபாயை எடுத்து நீட்டினார். 'ஏல என்ன வேல பார்க்க? அவனுக்கு எதுக்கு துட்டு?' என்று அம்மா சொல்லிக் கொண்டிருக்கும்போதே சிரித்துக் கொண்டு வாங்கிவிட்டேன். 'வாரேன்' என்று கிளம்புபோதுதான் நிகழ்ந்தது அது. வீட்டின் ஓட்டிலிருந்து கற்களாக விழத் தொடங்கின. பெரும் பெரும் கற்கள். டொப் டொப் என்று வாசல் முழுதுவம் அதற்குள் நிரம்பியிருந்தது. எல்லாம் சரளைக் கற்கள். பின்னால் இருந்து யாரும் எறிகிறார்களா என்று நினைத்து, 'யார்ல அது' என மாமா வேகமாக பின் பக்கம் ஓடி பார்த்தார். யாருமில்லை. அக்காவும் நானும் பயத்தில் நின்றிருக்க, அம்மாவும் வெளியில் போய் பார்த்துவிட்டு வந்தாள். கற்கள் எங்கிருந்து வந்தன என்று தெரியவில்லை. வீட்டின் மேற்பகுதியில் இருந்து தானாக கற்கள் விழும் அதியசம் ஆச்சர்யமாக இருந்தது. வீட்டின் ஓடுகள் சில உடைந்திருந்தன.

பக்கத்துவீட்டு பாலா ஆச்சியும் எதிர்வீட்டு எஞ்கம்மக்காவும் வந்தார்கள். வீட்டில் வேலி தாண்டி செல்கிறவர்களும் என்ன ஏதென்று வந்தார்கள். மாமா ஆச்சரியமாக பார்த்தார். எப்படி கல் வந்து விழுது? அம்மா ஓரமாக உட்கார்ந்து அழ ஆரம்பித்துவிட்டாள்.

'ஏ சீதை அழாத..., இதுக்கு நீ அழுது என்னாவ போவுது?' என்றார்கள் வந்திருந்தவர்கள். நான் மாமாவை பார்த்துக்கொண்டிருந்தேன். ஆச்சர்யமாக பார்த்துவிட்டு போய்விட்டார்கள் எல்லாரும். மாமா, 'அதை விடு... என்னன்னு பாத்துக்கிடுவோம்' என்று அம்மாவுக்கு ஆறுதல் சொல்லிவிட்டு போய்விட்டார்.

இதற்கு பிறகு தினமும் ஒரு முறை இப்படி கற்குவியல் வீட்டின் மேலிருந்து விழுவது தொடர்ந்தது. அம்மா அவற்றை பெருக்கி ஓரமாக ஒதுக்கியிருந்தாள். மாலை நேரத்தில் கூடை கூடையாக கற்களை அள்ளி, நானும் அக்காவும் வீட்டின் பின்புறம் போட்டுவிட்டு வருவோம். பத்து பதினைந்து நாளுக்குப் பிறகு இது பழக்கமாகியிருந்த நிலையில் மேலத்தெரு மோர் பாட்டி சொன்னதன் பேரில் அம்மா, குறி கேட்க போனாள் முக்கூடலுக்கு.

'இங்கரு... சொன்னதெல்லாம் நடக்கு தாயீ... என் நடுவுள்ளானுக்கு என்ன மருந்து கொடுத்தும் கேக்கலைலா. அங்க போயி திருநாறு போட்டபெறவுதான் கேட்டுது' என்ற அவளின் நம்பிக்கையில் அம்மாவும் சரிந்தாள். முக்கூடல் குறிகாரர், 'அது குரலி வேலைம்மா... வாசல்ல படிக்கு வெளிய தோண்டி பாரு... செப்பு தகடு இருக்கும்.' என்று சொன்ன பிறகு, 'இதை யாரு வச்சிருப்பா? என்கிற கவலை அதிகமானது அம்மாவுக்கு.

கம்பர் மகன் நாராயணனை அழைத்து நள்ளிரவு புஜைக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கிட்டதட்ட ஹோமம் மாதிரி நடந்த பூஜைக்குப் பிறகு வீட்டு வாசல் தோண்டப்பட்டு, எடுக்கப்பட்டது சதுர வடிவ செப்புத்தகடு. அம்மாவுக்கு ஆச்சரியம். கண்களிலிருந்து திடீரென கண்ணீர் முட்டி வெளிவந்தது. 'அட பாவிகளா?' என்று மூக்கின் மேல் விரல் வைத்தாள். அந்த செப்புத்தகடில் ஏதேதோ எழுதப்பட்டிருந்தது. அம்மாவும், மாமாவும் ஆச்சரியமாகப் பார்த்துக்கொண்டிருந்தார்கள் தகடு புதைந்த நிலத்தை, இன்னும் ஏதாவது இருக்குமோ என்று. ஆச்சி, தூணுக்கு பின்பக்கம் நின்று கொண்டிருந்தாள். நானும் அக்காவும் அருகில் செல்ல தடை. நாராயண கம்பர், அதை எடுத்து அப்படியே ஒரு மஞ்சள் துணியில் பொதிந்தார். பிறகு அம்மாவுக்கும் மாமாவுக்கு திருநீறு பூசிவிட்டு, 'இன்னைல இருந்து ஒண்ணும் இருக்காது' என்று சென்றுவிட்டார்.

வாசலில் புதைக்கப்பட்ட சாதாரண செப்புத்தகடு எப்படி வீட்டின் மேலிருந்து கல்லெறியும்? என்கிற கேள்வியோடு தூங்கிப்போனேன் நான். காலையில் எழுந்தபோது வாசலில் பெரிய கோலம் போடப்பட்டிருந்தது. அதன் நடுவில் சாணிப்பிள்ளையார் அமர்ந்திருந்தார்.

வழக்கமாக கற்கள் விழும் பதினோறு மணி வாக்கில் வீட்டுக்குள் அமர்ந்துகொண்டு கற்கள் வரும் என்ற நினைப்பில் பார்த்தேன். கற்கள் விழவில்லை. சிறிது நேரத்துக்குப் பிறகு ஓட்டிலிருந்து சத்தமில்லாமல் உருண்டு உருண்டு வாசலில் விழுந்தது மஞ்சள் நிற பூவரசம் பூ.

இனி பூக்களாக விழுமோ தெரியவில்லை.

No comments: