Thursday, January 22, 2009

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-3

பாதகத்தி பூத்து வச்சேன்
தென்னம்பிள்ளை மண்ணுல
பாதி வளந்து கொல்லுதே
வலப் பக்க கண்ணுல...
பால்குடிச்ச நெஞ்சை நீயும்
மாரடிக்க வச்சிட்டியே-என்
மாரடைக்க வச்சிட்டியே...


ராகமாக இழுத்துப் பாடிக்கொண்டிருந்தாள் சடச்சி. நேற்றிலிருந்து பிச்சம்மாளை காணவில்லை. சாயங்கால நேரம் தலைபின்னிக்கொண்டிருந்தவள், குடத்தைத் தூக்கிக்கொண்டு வாய்க்காலுக்கு தண்ணி எடுக்க சென்றாள். ராத்திரி ஆகியும் வரவில்லை. வாய்க்கால் படித்துறைக்கு சென்ற போது பித்தளை குடம் மட்டு்ம் அங்கிருந்தது. பயந்துபோனாள் சடச்சி. யாராவது கடத்திச்சென்றிருப்பார்களோ என்று பதறினாள். ஆனால் சமீபகாலமாக கல்யாண பேச்சு குறித்து அவள் தெரிவித்திருந்த எதிர்ப்பும், பேச்சும் காதல் விவகாரம் என்பதை எளிதாக அவளுக்கு விளக்கியது.

வீட்டின் எதிரில் இருக்கும் கோழி கூட்டின் அருகில் இருந்துகொண்டு யோசித்துக்கொண்டிருந்தார் கருப்பையா. யாருடன் போயிருப்பாள் என்பதாக இருந்தது அவளது யோசனை. தன் கண்ணுக்குள் வந்துபோன பயல்களில், அவனாக இருக்குமோ, இவனாக இருக்குமோ என்று தேடிக்கொண்டிருந்தார். இவள் யாரையோ காதலித்திருப்பது தனக்கு எப்படி தெரியாமல் போனது என்கிற கோபமும் அவருக்கு. 'ரெண்டாந்தாரமாக கெட்ட மாட்டேன்' என்று அவள் சொன்னபோதே விட்டிருக்கலாமோ, என்று நினைத்தார். இன்னும் வீட்டை விட்டு வெளியில் போகவில்லை. யாரிடமும் இதை சொல்லவும் முடியாது. கேவலமாக போய்விடும். மனதுக்குள் புரண்டு மனதுக்குள் உருண்டுகொண்டிருந்த நேரத்தில் வந்தாள் பலவேசத்தின் அம்மா.

திக் என்றது கருப்பையாவுக்கு. இவள் மகனுடனா? பலூன்காரப் பயலோடவா?

வீட்டுக்குள் அழுதுகொண்டிருந்த சடச்சியிடம் , 'ஏம்டீ அழுதே... இங்கென்ன கொலயா விழுந்துபோச்சு' என்றாள்.
'இனும என்ன வேணும். கஞ்சிக்கு வழியில்லன்னாலும் மானம் மருவாதயோட இருந்தோமே... இந்த செரிக்கி இப்டி பண்ணுவான்னு நா நெனக்கலியே"

'அவா என் மவன கூட்டிட்டுதான் போயிருக்கா'

இதை எதிர்பார்க்கவில்லை சடச்சி. அழுகையை டக் என்று நிறுத்தி,'நெனச்சேன். நாலு நாலுக்கு முன்னால வீட்டுக்கு பின்னால அவன் சைக்கிளைப் பார்த்தேன். அப்பமே தெரிஞ்சிருக்கணும்" என்றவள், ''இது ஒனக்கு தெரிஞ்சுதான் நடந்திருக்கா?. தெரிஞ்சுட்டுதான் ஊமை மாதிரி இருந்தியோ?' - கோபமாகக் கேட்டாள்.
'ஆங்கங்கெட்டால பேசாத்திட்டீ, நேத்து ராத்திரிதான் சொல்லிட்டிருந்தாம். விடிஞ்சால பேசலாம்னு இருந்தேன். அதுக்குள்ள இப்டி பண்ணுவாவோன்னு யாருட்டி கண்டா. கைக்குள்ள இருக்கற புள்ளன்னா கன்னத்துல அடிச்சு உக்கார வக்கலாம். கைநிமிர்ந்ததுவோல என்ன பண்ண சொல்லுத?'
கருப்பையாவின் காதிலும் இது விழுந்தது.
'இப்ப எங்க இருப்பாவோ"
'எங்க போயிருவாம். கருத்தபிள்ளையூர்ல இருக்குத மாமம் வீட்டுக்குதாம் போயிருப்பாம். நீங்க பேசமா இருங்க. நா போயி நயமா பேசி கூட்டியாரேன். பெறவு நல்ல நாளு பார்த்து தாலிய கெட்டிருவோம்".

சொன்ன மாதிரியே கருத்தப்பிள்ளையூரில் இருந்தான் பலவேசன். மாமன் வீட்டில் பாத்திரம் தேய்த்துக்கொண்டிருந்தாள் பிச்சம்மா. அவன் அம்மா வந்ததை தெரிந்ததும் ஓடி போய் காலில் விழுந்தாள். கண்ணீர் முட்டி நின்றது.

'இப்ப இதுலாம் பண்ணு. உங்கப்பன் ஆத்தால யோசிச்சியாட்டீ...ரெண்டு நாளு நீ இங்க இருந்தின்னா, அவ்வோதான் தூக்கு போட்டு சாவணும். ஆம்பளை பயலுவோலுக்கு என்ன வந்திருக்கு. அவன் பாட்டுக்கு கூட்டிட்டு வந்துட்டு நாளைக்கு தெருவுல வுட்டுட்டாம்னா நீ எங்கட்டீ போவ?'

பிச்சம்மா எதுவும் பேசவில்லை. நள்ளிரவு நேரம் பலவேசமும் பிச்சம்மாவும் ஊருக்கு அழைத்துவர பட்டார்கள். ஆட்கள் யாரும் பார்க்காதவாறு பிச்சம்மாள் அவளது வீட்டில் ஒப்படைக்கப்பட்டாள்.

ஒரு நாள் வீட்டைவிட்டு ஓடியது அவளுக்கு ஏதா செய்துகொண்டிருந்தது. பெரும் குற்ற உணர்ச்சி அவளை இம்சை பண்ணிக்கொண்டிருந்தது.

தொடர்கிறேன்.

Monday, January 12, 2009

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-2

தடுமாறிப் போனான் பலவேசன். திரும்பி கருப்பையாவை பார்த்ததும் மண்டையை கீறி வந்தது கோபம். இருந்தாலும் திருப்பி அடிக்கவோ, எதிர்த்து பேசவோ தோணவில்லை. மாமனாராகப் போகிறவரை தாக்கும் நிலையை அவன் பெற்றிருக்கவில்லை. காதல் இப்படியான பக்குவத்தை அவனுக்கு கொடுத்திருந்தது.

'சின்னப்புள்ளைலுவோட்ட துட்டை கொடுத்தா பாக்கி சில்லறை தரமாட்டியோல..."

அப்பாடா என்றிருந்தது பிச்சம்மாவுக்கு. தான் வர சொன்னதை தெரிந்துகொண்டு்தான் அப்பா அங்கு வந்திருப்பார் என முதலில் நினைத்திருந்தாள். மந்திர தேவனின் தொழுவுக்கு கிழ் புறமாக சுவற்றில் சாய்ந்துகொண்டு நின்றிருந்தாள் அவள். இருட்டு அவளை மறைத்திருந்தது.

'யோவ் பெரிசு, என்னத்தான் வெவரம்னாலும் இப்படியாய்யா கைய நீட்டுதது. நீராச்சும்னுதான் விட்டேன்"

'இல்லைனா...?"

'இங்கரும் வேண்டாம். வம்பு வளக்காண்டாம். நீரு சொல்லுத சின்னப்புள்ளட்ட, பாக்கி துட்டை கொடுத்துட்டேன். அது எங்கயாவது கீழ போட்டுட்டு வந்திருக்கும்.. போயி அதுட்ட கேளும்' என்றான் பலவேசம்.

'அது இல்லங்குன்னுதான வந்து கேக்கன்'

'யோவ்...அந்த அஞ்சு பைசாவ வச்சு வீடாய்யா கெட்ட முடியும்? சொல்லுதேன் திருப்பி திருப்பி அதையே சொல்லுதீரு"

'சரி இவ்ளோ சொல்லுதன்னு போறேன்'

கொஞ்ச தூரம் கருப்பையா போவதை பார்த்துவிட்டு, அவள் பக்கமாகத் திரும்பி, 'என்ன' என்றான். தெருவில் ஆள் நடமாட்டம் இல்லை. தூரத்தில், வெந்நீரில் குளித்த சுப்பையா கோனார், வேட்டியை விசிறி விசிறி காற்றில் காய வைத்துக்கொண்டிருந்தார். அவர் வேட்டியை ஆட்டும் சத்தம் டப் டப் என வந்துகொண்டிருந்தது. இந்த சத்தங்கள் இவர்களை ஒன்றும் செய்யப்போவதில்லை. மாசானம் வீட்டு நாய் மட்டும் இவர்களையே முறைத்து பார்த்து சென்றுகொண்டிருந்தது.

பிச்சம்மா புதிதாக மூக்கு குத்தியிருந்தாள். ஒற்றைக்கல் மூக்குத்தி. பலவேசம்,'' இதை காட்டத்தான் கூப்பிட்டியாக்கும்" என்றான்.

'ஆமா, இதை காட்டுததுக்கு வாரேன்"

'பெறவு?'

'வீட்டுல கல்யாணம் பண்ண சொல்லுதாவோ. ரெண்டாந்தாரமா..' என்று சொல்லிவிட்டு அவனைப்பார்த்தாள். கண்ணிலிருந்து அவளை கேட்காமலேயே தண்ணீர் வழிய தொடங்கியது. இன்னும் கொஞ்ச நேரத்தில் அவள் ஏங்கி ஏங்கி அழக்கூடும். அவனுக்குள் இதில் தமக்கும் பொறுப்பிருப்பதாக உணர்ந்தான்.

'ச்சீ அழாத... கொஞ்ச நா பொறு. இன்னும் எங்காத்தாட்ட நா சொல்லலை. அவ என்ன சொல்லுதான்னு பாப்போம்"

அதுக்கு மேல் பிச்சம்மாவால் அங்கு நிற்க முடியவில்லை. நடந்தாள்.


பலவேசம் வாசலில் சைக்கிளை சாத்திவிட்டு, வீட்டுக்குள் போனான். வீடு என்பது தென்ன ஒலைகளால் வேயப்பட்ட குடிசை. சாணம் மெழுகிய மண் தரை முற்றம் சூழ்ந்த வீடு அது. எதிரில் வேப்ப மரமும் பின்பக்கம் வாதமடக்கி மரமும் கொண்ட குளிர்ந்த காற்றுப்பிரதேசம். குறுணையை புடைத்துக்கொண்டிருந்த அவன் அம்மா, 'சோறு வைக்கவா. சுண்டக்கறி இருக்கு" என்றாள். சுண்டக்கறி என்பது முந்தாநாள் வைத்த குழம்பை சுண்ட சுண்ட காய்த்து, வறுவலாக்கி வைக்கப்பட்ட கறி. அது தனி ருசியை கொண்டது. அவனுக்கு இப்போதைய தேவை அதுவல்ல. அம்மாவிடம் தன் காதலை சொன்னான். அவனை ஏறிட்டு பார்த்தாள்.

'இதென்னல கதை. களவாணி பய வீட்டுல போயா சம்மந்தம் வைக்க சொல்லுத?" என்றாள்.

'களவாணி பய வீடா?'

'பெறவு... நீயெல்லாம் சின்ன புள்ளையா இருக்கையில நம்ம வீட்டுல 4 செம்மறிய களவாண்ட பயதான் அவன். இன்னைக்கு வரைக்கும் அவ்வோ வீட்டுக்கு களவாணி பய குடும்பம்னுதான் பேரு இருக்கு. உங்கய்யா இருந்து இதை கேட்டார்னா, பொடதியில அருவாளை வச்சிருப்பாரு..."

'இங்கரு, எப்பவோ என்னமோ நடந்ததுன்னு இன்னும் அதையே பேசிட்டிருக்காத'

'அந்த செரிக்கி உம்மனசுல இருந்து இப்டிலாம் பேச சொல்லுதா"

'நீயென்னழா... புரியாம பேசிட்டு. அவ அப்பன் பண்ணுனதுக்கு இவா என்ன செய்வா?'

'சரிதான். உங்கப்பன் வாங்குன கடனுக்கு நீ ஏம் இப்ப வட்டிகெட்டிட்டு இருக்கே?'

'அதுவும் இதுவும் ஒண்ணா?'

'இங்கருல, எனக்கு ஒரு மண்ணுமில்ல, நீ அவளத்தான் கெட்டுவேன்னு சொன்னா நான் என்ன செய்யமுடியும்?'

வீட்டுக்குள் கிடந்த கட்டிலை எடுத்து வாசலில் போட்டான். வானம் அமைதியாக இருந்தது. கூட்டுக்கு லேட்டாக போகும் பறவைகளின் சத்தம் கேட்டுக்கொண்டிருந்தது. தூங்கலாம் என நினைத்தான். வரவில்லை.

தொடர்கிறேன்.

Monday, January 5, 2009

கனவு பூச்சி அல்லது கனவுகளை பெய்யும் மழை-1

சைக்கிளில் இருந்து பறக்கும் வண்ணமயமான பலூன்கள் காற்றை நேசித்துக்கொண்டிருந்தன. தூரப்பார்வையில் கொலாஜ் ஓவியங்களாகத் தெரியும் அவற்றை பலவேசம் விற்பனை செய்துவந்தான். விற்பனை பிரதிநிதியாக அவனை பார்க்கும் காலம் அதுவல்ல. இது சில்லரை வியாபார பகுப்புக்குள் மிகச்சரியாய் பொருந்தும் வியாபாரம்.

அஞ்சு பைசா பத்து பைசாக்கள் சட்டை பைக்கட்டை நிரம்பி வழிய செய்த காலங்களில் அவன் பிழைப்பு இருந்தது அவனுக்கான அதிர்ஷ்டம். அது கருக்கலாகவும், இருட்டாகவும் இல்லாதிருந்ததொரு நேரம். சரியாக பன்னிரெண்டு மணிக்கு அம்மன் ஊர்வலம் வரும் என்பதால் ஆற்றுமணல்கள் போடப்பட்டிருக்கிற கோயில் வளாகம் குழந்தைகளால் நிரம்பியிருந்தது.

கொடைக்காக முளைத்திருந்த திடீர் டீக்கடைகளில் இருந்து வரும் வாழைக்காய் பச்சிகளின் வாசத்தில் பெருசுகள் திளைத்திருந்தார்கள். ஊருக்கு வந்திருந்த சொக்காரர்களின் நலன் விசாரிப்பிலும், உள்ளூரில் தங்கள் செல்வாக்கை காட்டுவதிலுமாக அவர்களின் மாயை இருந்துகொண்டிருந்தது. இந்த வீராப்பு காட்டும் விஷயத்தில் சில மான அவமானங்களையும் அவர்கள் சந்திக்க வேண்டியிருந்திருக்கும்.

கோயிலில் வெளியே இருந்த சுடலைமாடனின் சின்ன பூடத்தின் பின்னால்- லைட் வெளிச்சம் அதிகமில்லாத அந்த இடத்தில் இளங்குமரிகள் எடக்கும் பேச்சுமாக நின்றுகொண்டிருந்தார்கள். ஊர் பெண்களுக்கு அதை தவிர அதிகபட்ச சந்தோஷம் எதிலும் இருக்கப்போவதில்லை. அந்தக் கூட்டத்தில் ஒருத்தியாக பிச்சம்மாள்! பலவேசத்தை தனியாக சந்திக்க வேண்டும் என்பது அவளது ஆர்வமாக இருந்தது. வேட்டியை அண்டர்வேருக்கு மேல் கட்டிய உள்ளூர் பயல்கள் இவர்களைப் பார்ப்பதும் சிரிப்பதுமாக பொழுது போக்கி கொண்டிருந்தனர்.

குமரிகளிடமிருந்து தனியாக வந்த பிச்சம்மா, மூக்கதாத்தா பேரனை அழைத்தாள். காதில் கிசுகிசுத்தாள். மேல் சட்டை அணியாத அச்சிறுவன், பலவேசத்தை நோக்கி போனான். சொன்னான். ஏறிட்டு பெண்கள் பக்கம் பார்த்தான் பலவேசம். அவனுக்குள் சிறு தடுமாற்றம் இருந்தது.
சைக்கிளை தள்ளிக்கொண்டு சுடலைமாடன் பூடம் தாண்டி சொன்று இருட்டாக இருந்த மந்திர தேவனின் தொழுவினருகில் நின்றான். பின்னால் பிச்சம்மாள் வருவது தெரிந்தது. சைக்கிளை ஸ்டாண்ட் போட்டு விட்டு திரும்பினான். பொடதியில் பொத்தென்று அடி விழுந்தது. பிச்சம்மாவின் அப்பா கருப்பையா நின்றிருந்தார்.

தொடர்கிறேன்