Thursday, January 24, 2008

வசதி 3; கேரக்டர் 7

மலைலயிருந்து செத்த எறங்குனதும் வயிறு குப்புனு பசிக்கும். கடனாநதி ஆத்துக்கு வார வரைக்கும், பசியை பொறுத்துக்கிட்டு வருவாவோ. வந்ததும் தலைல இருக்குத வெறவு கெட்ட, ஏதாவது ஒரு மரத்தை பாத்து அதுல சாத்தி வைப்பாவோ. சாத்திதான் வைக்கணும். கீழ போடக் கூடாது. போட்டா தூக்கிவிட ஆளத் தேட முடியாதுலா. அதனால.

வசதிக்கு கழுத்துலயிருந்து உடம்பு பூராவும் கறி தென்னிக்கிட்டு இருக்கும். இரும்பு உடம்புல அடிக்கடி பீடிக்குடிக்கதால கொஞ்சமா இறுமல் மட்டும் வரும். மத்தபடி தெடகாத்திரமான பயதான். ரெண்டு மூட்டை நெல்லை முக்கி முக்கி ரெண்டு கையிலயும் தூக்கிருவாம்னா பாத்துக்கிடுங்க.

ஒரு தடவை, கொம்பையாவுக்கும் இவனுக்கும் போட்டி. கொம்பையா, தொன்னாத்த மலையில வெறவுக்கு போறவன். அதுக்கு முதலியார்பட்டி பக்கமா போவணும். ஊர்லயிருந்து இவங்கலாம் மேக்கு பக்கமா போனா, கொம்பையா ஆளுவோ தெற்கு பக்கமா போவாவோ.

தொன்னாத்த மலையில வெலங்குவோ தொல்லை இருக்காது. அங்க பாம்புவோதான் நெறய. இங்கயிருந்து வெறவு கொண்டுட்டு வந்தா முதலியார்பட்டி, கோவங்கொளத்துலயே வித்துட்டு வந்துருவாவோ. பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூர்ல வசதி விப்பாம். இல்லனா ஊருக்கு வெறவை கொண்டு வந்துட்டு, கருவேலப்பறை திண்டுல சாத்திவச்சுட்டு நின்னாம்னா வித்து போவும்.

சும்மா பேசிட்டு இருக்கும்போது, கொம்பையனுக்கும் வசதிக்கும் போட்டி வந்துபோச்சு.

‘நீ இந்த பொத்தி காலை வச்சுக்கிட்டு என்னத்தல கிழிப்பே’& கொம்பையா.
‘என்னத்த கிழிக்கணும்னு சொல்லுல’

‘இந்தா வா போவும். ரைஸ் மில்லுல அடுக்கி வச்சிருக்குத நெல் மூட்டையில, ஒவ்வொரு கையில ஒரு மூட்டைய நெஞ்சி வரைக்கும் தூக்கிரணும்.
முடியுமால?’

‘இதுலாம் எம்மாத்திரம்... நீ தூக்கலைனா என்ன செய்யணும் சொல்லு.’

‘ஒரு நாளு வெறவுக்கு விக்க துட்டு’

அக்கம் பக்கத்துல இருந்த லூசுவோ வேற தூண்டுவிட்டுதுவோ. அந்தானி இறங்கியாச்சு. ரைஸ் மில் போனாவோ. அங்க பட்சி தேவரு நின்னாரு.

வெஷயத்தை சொன்னதும், மூட்டைய தூக்க சரின்னுட்டாரு.

மொதல்ல கொம்பையா... ஒரு கையில தூக்கிட்டாம்... இன்னொரு கையில முடியல. உன்னி உன்னி இழுத்துப்பாக்காம். முடியல. கையு வலிக்கு. அந்தானி, மூட்டைய வச்சுக்கிட்டு சாரத்தை நல்லா தொடை வர இழுத்துக்கட்டிக்கிட்டு பெறவும் தூக்குனாம். முடியல. உடம்பெல்லாம் வேத்து போச்சு. ஆனா, பய ஒத்துக்கிட மாட்டேங்காம். ‘ச்சே.. இப்பம் பாரு தூக்கிருவேம்’ன்னு சொல்லிக்கிட்டே இருக்காம். அரை மணிநேரம் ஆயிப் போச்சு.

பொறுத்து பொறுத்து பாத்தாம் வசதி.

‘ஏல தூரப்போ... பெரிசா போட்டிப்போட வந்துட்ட மூதி...’ன்னு சொல்லிட்டே ஒரு கையால ஒரு மூட்டைய தூக்குனாம். இடது கையால தூக்க முடியல. ரெண்டு தடவை மூசு மூசுன்னு மூச்சி விட்டு, குப்புனு ஒரு தூக்கு. செத்த நேரம் நெஞ்சு வரை தூக்கிட்டு மூட்டைய கீழப் போட்டாம். சுத்தி நின்னவோயெல்லாம் கை தட்டுனாவோ. கொஞ்ச நேரம் குத்த வச்சு உக்காந்துட்டு, ஒரு பீடிய பத்தவச்சாம். கொம்பையாவுக்கு மானம் போச்சு. எல்லாரும் அவனை எடக்கு பண்ணுதானுவோ.

பேசுன மாதிரி இன்னொரு நாளு எல்லாரு முன்னாலயும் ஒரு நா வெறவு துட்டை கொடுத்துட்டாம்.

பாத்துக்கிடுங்கோ பயல. அப்படிப்பட்ட பய வசதி.

பொன்னம்மா ஆத்துக்குள்ள எறங்கி கைய காலை கழுவிட்டு வருவா. இவன் அங்ஙனயே கரையில முதுவை நீட்டு சும்மா படுப்பாம். காலைல தின்னுட்டு மிச்சம் வச்சிருக்குத சோத்தை தூக்குச்சட்டியில இருந்து எடுப்பா.

அவனுக்குள்ளதையும் எடுத்து வைப்பா. ரெண்டு பேரும் தின்னுட்டு ஆத்துக்குள்ள இறங்கி வருவாவோ. ஒரே நடதான்.

வார வழியில அந்த ஊர்ல எதும் கல்யாணம், சடங்குன்னா ஒரு வெலை சொல்லி வெறவு கேப்பாவோ. சொன்னவெலைக்கு யாரு வாங்குதா? ரெண்டு மூணு ரூவா கொறச்சுக்கேட்டா கூட கொடுத்துருவாவோ. அப்டி பாதி வழியிலேயே வித்தாச்சுன்னா, வசதிக்கு அந்தானி ஊருக்கு போவணும்னு தோணாது. வா, வெரசா போயி இன்னொரு கெட்டு எடுத்துட்டு வருவோம்னு கௌம்புவாம். பொன்னம்மா வேண்டாம்யா காலு வலிக்கும்பா.

அவளுக்கு என்னன்னா, ஒரு நாளு கெடக்கதை ரூவா நாலு நாளைக்கு வச்சுக்கிடுவா. அறுப்பு நேரத்துல வய அறுக்க போவதால நெல்லுக்கு பிரச்னையில்ல. வீட்டுக்காரன் இருக்கவரைக்கும் இவ வெறவுக்கு வரமாட்டா. அவன் காக்காவலிப்பு வந்து தெப்பக்குளத்துல விழுந்து செத்ததுலயிருந்து இவ ஆரம்பிச்சுட்டா வெறவு போறத. பின்ன ஒரு பயதாம் இருக்காம். அவனுக்குன்னு ஏதாவது வேணும்லா. வசதி பொண்டாட்டி மரகதம், வெறவுக்குலாம் வரமாட்டேன்னுட்டா.

பீடி சுத்ததுதாம் அவளுக்கு. வாரா வாரம்தாம் காசுன்னாலும், ‘மொகத்துல பவுடரை பூசிட்டு அலையுதவளுக்கு வெறவு பொறக்கி, வேர்வை நாத்தத்துல இருக்க முடியுமா? கூறுகெட்ட செரிக்கி’ம்பா வசதி ஆத்தா. இப்பம் அவளுக்கு கண்ணு தெரியல. ரெண்டு பொட்ட புள்ளைலு வேற. பொழப்பு ஒடணும்லா.

ஆங்... இவனுக்கு வசதிங்கத பேரு எப்டி வந்ததுன்னு சொல்லலியே...

ஆழ்வாக்குறிச்சி மேஸ்த்ரி ஒருத்தரு, கேரளால இருக்குத பொனலூர்ல பாலம் கட்டுததுக்கு கான்ட்ராக்ட்டு எடுத்திருந்தாரு. ஊர்லயிருந்து ஒரு அம்பது பேரை கூட்டிட்டுப் போனாரு. வெறவுக்கு போறத விட, நல்ல சம்பளங்கதால இவனும் போனாம். இவன் பேரு சூச்சமாடன்.

போயிட்டு, தெனமும் மண்ணள்ளி போட்டுட்டு இருக்கும் போதே, கூட மண்ணள்ளி போட்ட முத்தையா பிள்ளை மவன், எதுத்தாப்ல பழகுன மலையாளத்து பிள்ளைய காதலிச்சுத் தொலைச்சுட்டாம். முத்தையா பிள்ளைக்கு ஊர்ல நல்ல சொத்து.

அவரு, இதுக்கு சம்மதிக்கவே மாட்டேன்னுட்டாரு. ‘நம்ம சொந்தத்துலயே எவ்வளவு வசதியில நான் பொண்ணு பாப்பேன். நீ ஒரு மண்ணும் இல்லாம எவளையோ இழுத்துட்டு வார பாக்கியோல’ன்னு குதிச்சாரு. அந்தப் பய அவளைத்தான் கெட்டுவேன்னு ஒத்தகால்ல நின்னாம்.

பெறவு மலையாளத்தாட்ட பேசி, ‘உங்களுக்கு எவ்வளவு வேணாலும் தாரேன். எனக்கிருக்கது ஒரே புள்ள. நல்லா பாத்துக்கிடுங்க’ன்னு சொல்லிட்டா. முத்தையா பிள்ளைக்கு உச்சிக் குளுந்து போச்சு. சரின்னுட்டாரு.

ரெண்டு லாரில லொட்டு லொசுக்குன்னு ஏகப்பட்ட பண்ட பாத்திரம். கல்யாணத்தன்னிக்கு பார்க்கணுமே. எல்லா செலவும் பொண்ணு வூடுதாம்.
பலாப்பழமும், பச்சைப்பழமுமா விதைச்சுட்டானுவா கல்யாண வீட்டுல. ஏழு வவை கறி. இந்த கல்யாணத்தை தவிர ஊர்ல எந்தக் கல்யாணத்துலயும் ஏழு வவை கறி வச்சதில்ல. முத்தையா பிள்ளை தோள்ல துண்டை போட்டுட்டு பண்ணுன அலப்பறையும், கல்யாண பிரம்மாண்டமும் நம்ம சூச்சமாடனை ஒரு வழி பண்ணிட்டு. நாமளும் என்னைக்கு இப்படி வசதிக்காரம் மாதிரி வாழன்னு நெனச்சாம்.

அடுத்தாப்ல பொனலூருக்கு வேலக்குப் போவும் போது, இவனுக்கும் ஏகப்பட்ட மலையாளத்து பிள்ளைலுவோ கூட பழக்கம் வந்துச்சு. ஆனா, எந்த புள்ளையும் லவ்வு அது இதுன்னு சொல்லித் தொலைக்கல. இதுக்கு என்னடா காரணம்னு ராத்திரி போல யோசனை பண்ணுனாம். மறு நாள்லயிருந்து ஆரம்பிச்சாம்.
‘‘ஊருல எனக்கு நல்ல வசதியிருக்கு. ஏகப்பட்ட சொத்து’ன்னு ஆரம்பிச்சாம். ஆக்கங்கெட்டவன் எல்ல புள்ளைலுட்டயும் போயா இதை சொல்லணும்.

அவளுவோ இவனை பாத்தாலே எடக்கு பண்ண ஆரம்பிச்சுட்டுவோ. கூட வேல பாக்குத உள்ளூர்க்காரப்பயலுவோளும், பொம்பளைலுவோளும் சும்மா இருப்பாவோளா?

எடக்குக்கு ஆரம்பிச்சது...பெறவு வசதின்னு ஆயிப்போச்சு. இதுல என்ன கொடுமைன்னா... அங்க வேலை பாத்த நாலு பேரு அந்த ஊர்லயே மலையாளத்து பிள்ளைல கெட்டிட்டு வந்துட்டாம்ங்கதுதான்.

இன்னும் சொல்லுதேன்...

2 comments:

தங்ஸ் said...

வசதி-க்கு எப்படி கண்ணாலம் ஆச்சு?

ஆடுமாடு said...

சொல்லுறேன். அடுத்த எபிசோட்ல. நனறி தங்ஸ்.