Saturday, January 26, 2008

வசதி 4; கேரக்டர் 7

பெறவு இவனும் செவப்பா இருக்குத பிள்ளைய பாத்துக்கெட்டணும்னு ஊர் ஊரா தேடிப்போயி பொண்ணு பாத்தாம். இவன் அத்தைக்காரி மூணு பொட்டப்புள்ளைய வச்சிருக்கா பத்தையூர்ல.

அதெல்லாம் வேண்டாம்னுட்டாம். தோலு கருப்பா இருக்காம்.

பெறவு இப்படியே அலைஞ்சதுல மூதிக்கு வயசுதான் ஏறிச்சு. செவத்த தோலு பொண்ணு ஒண்ணும் கெடக்கல. இவன் ஆத்தாக்காரி, சொந்த பந்த கல்யாணத்துக்கு போவும்போது, செவப்பு தோலு பிள்ளைல பாத்தான்னா, யாரு என்னன்னு விசாரிச்சா... ஆனா, அவ்வோ கேட்ட வெஷயத்துல வாய பொத்திட்டு வந்துட்டா.

‘இப்படி பொண்ணு வேணுங்கிய. மாப்ள எங்க ஆபிசுல வேல பாக்காரு’ன்னு கேட்டா என்ன செய்ய முடியும்?

இந்தப் பயலுக்கு ஒரு மாதிரி ஆயிப்போச்சு. இதுக்கு மேல செவத்த தோலை தேட முடியாதுன்னுட்டா ஆத்தா. சேக்காளி பயலுவோலாம் தாலி கட்டுட்டு குழந்த குட்டின்னு இருக்கையில இவன் எவ்வளவு நாளுதான் காத்திருப்பாம்.

செரி யாரையாவது பாருன்னுட்டாம். பெறவு, பாப்பாக்குடில இருக்குத அய்யங்கோனாரு மவளை புடிச்சு கெட்டி வச்சா.அவ நீட்டி. தெனமும் குளிச்சு முழுவி, சொவத்துக்கு பெயிண்ட் அடிச்ச மாதிரி பவுடரை போட்டுட்டுதான் அலைவா. ‘இந்த ஊர்ல இப்டிய அலையாதட்டின்னு சொல்லிப்பாத்தான். ஊருக்கு போவும் போது மட்டும் படவுரை போடு’ன்னான். அவ கேக்கலை. ஊருல யாராவது பவுடரு வாசத்தோட போனன்ன்னா, அது வசதி பொண்டாட்டியாத்தாம் இருப்பாம்பாவோ.

வெறவுக்கு போயிட்டு வீட்டுக்கு வந்தாம்னா அசதியா இருக்கும். வெறவு விக்கலைன்னா வீட்டு சொவத்துல சாத்தி வச்சிட்டு குளிப்பாம். நீத்தண்ணிய குடிச்சிட்டு சாஞ்சாம்னா கண்ணை கெட்டிட்டு வரும். சின்ன புள்ளை, ‘எப்போ’ன்னு கிட்ட வரும்.‘ஏல... சத்தம் போடாத: செத்த தூங்கிக்கிடுதேம்’பாம்.

மழை காலத்துலதான் சிக்கலு. நனைஞ்சுக்கிட்டு கூட வெறவுக்கு போலாம். ஆனா, மலையில மழைபெஞ்சு மண்ணு வழுக்கும். தலையில வெறவ வச்சுட்டு நடக்க முடியாது. வழுக்கிரும். இதுக்காவ செல நேரத்துல நெறய வெறவ கெட்டிக்கொண்டாந்து, வீட்டுல வச்சு அதை ரெண்டு கெட்டா பிரிப்பாம். பாதியை வீட்டுக்கு வெளியில சாத்திப்போட்டுருவாம். அதை மட்டும் விக்க மாட்டாம்.

இப்டியே ஒரு பத்து, பதினெஞ்சு கெட்டு சேந்துதுன்னா நிம்மதியா இருக்கும். மழை நேரத்துல வெறவுக்கும் நல்ல வெலை கெடக்கும். அப்பம்லாம் இவன் சொல்லுததுதாம் வெல.

உடம்பு சரியில்ல, முடியலைன்னாலும் அவனால சும்மா இருக்க முடியாது வீட்ல. வாய்க்கா கரையில இருக்குத கருவை முள்ளை வெட்டிப்போட்டுட்டு, பொண்டாட்டிய விட்டு அள்ளிட்டு வர சொல்லுவாம். வந்ததுல வாக்கான கம்பு கெடச்சுதுன்னா சின்ன பயலுவோலுக்கு செல்லாங்குச்சு செதுக்கி கொடுப்பாம். எல்லாரும் செதுக்குவோன்னாலும் இவன மாதிரி கூர்மையா அழகா செதுக்க முடியாது.

ஒரு நா வெறவுக்கு போயிட்டு வந்தாம்னா மறுநா தூங்குவாம். அடுத்த நாளு பாவூர்க்காரனுவோ சத்தம் முழிப்பை கொடுக்கும். அறுவாளைத்தூக்கிட்டு, பொன்னம்மாவை கூட்டிட்டுப் போவும் வாழ்க்கை.

அவ்வளவுதாம்.

1 comment:

தங்ஸ் said...

வயித்துப்பொழப்புக்கு எத்தன பாடு பாருங்க..நல்லாருந்துச்சுங்க!