Sunday, January 13, 2008

வசதி 2; கேரக்டர் 7

இதுக்குள்ள வசதி, நாலஞ்சு பீடிய ஊதி தள்ளிருப்பாம். மூதிக்கு அதை குடிக்கலன்னா முடியாது. மலைக்கு அடிவாரத்துல நாலஞ்சு வீடுவோ இருக்கு. இவ்வோ போனதும், ‘ஏய் பெரியாத்தா’ன்னு ஒரு சத்தம். நடு வீட்டுலயிருந்து ரெண்டு பொம்பளைலுவோ வருவாவோ. கொஞ்சம் குடிக்க தண்ணிய வாங்கிட்டு, வீடுவோளுக்கு எதுத்தாப்ல இருக்குத வாக மரத்துக்கு கீழ உக்காருவாவோ. சட்டியில இருக்கததுல பாதியை ரெண்டு பேரும் திம்பாவோ. பெரியாத்தா, சுண்டக்கரி இருந்தா கொண்டு வந்து தருவா.
பெறவு ஊருகதை நடக்கும்.

‘புள்ளைக்கு கால்ல புண்ணு சொன்னியே வசதி, பரால்லாயா?'

‘ஆமா, நேத்துதான் ஆழ்வாக்குறிச்சி ஆஸ்பத்திரியில காட்டிட்டு வந்திருக்கா. டாக்டுரு என்ன மருந்தோ கொடுத்திருக்காரு'

‘பூச்சி கடியா?'

‘என்னன்னு தெரியுது?, கடலை எடுக்க போயிருக்கு. போன எடத்துல என்னமோ கடிச்சுட்டுங்கு. எதுவும் கடிச்சதோ, இல்லன்னா எங்கயும் விழுந்து தொலைஞ்சுதோ... தெரியல'

‘ம்..'

ரேடியோவுல பாட்டு ஓடிட்டிருக்கும். அந்தானி பாதி சட்டிச்சோறை மூடி எடுத்துக்கிட்டு நடப்பாவோ. மேலே ஏறணும். அங்கங்க ஒத்தையடி பாதை. ஏதாவது ஒரு பாதய புடிச்சு போவணும். போற எடத்துல மொயலு, கருவாலு புழுக்கையோ கெடக்கும். வசதி, இங்க மொயலுவோ ரொம்ப கெடக்குன்னு நினைச்சுக்கிடுவாம். கொஞ்சம் தூரம் போனதும் பெரிய ஆலமரம் இருக்கும். அந்த எடம் மட்டும் வெட்டையா இருக்கும். பக்கத்துல ஒரு மரம் கெடயாது. மைதானம் மாதிரி கெடக்கும். பக்கத்தூர்லயிருந்து மாட்டுக்கு வாரவனுவோ, மாட்டை மேய விட்டுட்டு, இங்ஙன உக்காந்துக்கிடுவானுவோ. தரையில தாய கட்டம்லாம் இருக்கும். கருக்கலாச்சுன்னா நரியோ கூடிரும். ஒரே கூச்சலுதாம்.
இதை தாண்டுனதும் பெரிய பாறை. வெள்ளைப் பாறைன்னு சொல்லுவாவோ. கீழ பள்ளம். பாத்துதாம் போவணும். மெதுவா போவாவோ. பாறைக்கு பின்னால செத்த நடந்தா காடு. கோங்கு, இலுப்பை மரம், கொட்டை மரம், புளிச்சி மரம், மஞ்சணத்தி மரம், வாவ மரம்னு எல்லா மரமும் பெருசு பெருசா வளந்து நிக்கும். இதுல இலுப்பை மரத்து பக்கம் எல்லாரும் போவ மாட்டாவோ. மரத்து பூவு மருந்துன்னாலும் செலருக்கு ஒத்துக்கிடாது. மூக்குல வச்சு ம்ம்முனு இழுத்தா, செலருக்கு மயக்க வந்துரும். அந்த மரம் இருக்குத பக்கம் போனாலே செலருக்கு ஒரு மாதிரி தலை சுத்துத மாதிரி ஆவும். பொன்னம்மா இந்த மரத்துக்கிட்ட கூட நடக்க மாட்டா.

அங்க இங்க ஆ ஊன்னு வெலங்குவோ சத்தம் கேக்கும். இதுக்காவ, ரெண்டு பேரும் சத்தம் போட்டு பேசிக்கிடுவாவோ. சத்தம் கேட்டா, செல வெலங்குவோ வராதுலா.

யாரும் போயி மரத்தயெல்லாம் வெட்ட மாட்டாவோ. வெட்டுனா கீழ பாரஸ்டுகாரன் எவனாவது பாத்துட்டாம்னா அயிரெத்தெட்டு கேள்வி கேப்பாம். அவனுவோ பச்சை மரக்கட்டையல பாத்துட்டாம்னா புடிச்சுட்டுப் போயிருவானுவோ. காய்ஞ்சு போயி, அங்க இங்க ஏகப்பட்டது முறிஞ்சு கெடக்கும். அந்த கிளைய வெட்டி, ஒரு இடத்துல குமிப்பாவோ. செல நேரத்துல எக்கச்சக்கமா கெடைக்கும் வெறவு.

கோங்கு வெறவுன்னா கொள்ளை வெல. கரும்பாளை மாதிரி இருக்கும் ஒவ்வொரு வெறவும். தூக்கி அடுப்புல வச்சா, பொகை சும்மா குப்புனு வரும். ரெண்டு வெறவு போதும் ஒரு பானை சோத்தை பொங்க. அந்த வெறவு கெடச்சா வசதிக்கு சந்தோஷத்தை பாக்கணுமே. மூதிக்கு வாயெல்லாம் பல்லா இருக்கும். இதை திருட்டுத்தனமாத்தான் கொண்டு போவணும். இதும் சந்தனமரம் மாதிரிதான். நடுவுல இந்த வெறவ வச்சு, மத்த வெறவு எல்லாத்தையும் சுத்திக்கெட்டிட்டு போனாத்தான் தெரியாது.

கீழ கெடக்குததே இவ்வளவுன்னா பெறவு எதுக்கு மரத்தை வெட்டணும். இருந்தாலும் வெட்டுவாம் வசதி. அஞ்சாறு மரத்துல கிளைய வெட்டி பொத்தைக்கு கீழ இருக்குத பள்ளத்துல போட்டுக்கிடுவாம். நாலஞ்சு நாளு கழிச்சு அதை எடுத்து கெட்டிட்டு வந்துருவாம். ஒரளவுக்குதான் தலையில வச்சு சொமந்துட்டு போவவும் முடியும். ஊர்ல யாராவது செலம்பாட்டத்துக்கு, இல்ல மாடு பத்த தார்க்குச்சிக்கு கம்பு வேணும்னு கேட்டா, மரத்தை தேடிப் போயி, குச்சியும் வெட்டிக்கிடுவாவோ.

இதுக்குள்ள பத்து பன்னெண்டு மணி ஆயிரும். கால்ல மட்டும் சிக்கலு இருந்தாலும் வசதி கொஞ்சம் பலமுள்ள பயதான். ரெண்டு பேருக்கும் தனி தனியா வெறவ கெட்டிட்டு, அவளுக்கு தூக்கி விடுவாம். நல்ல செம்மாடை வச்சுக்கிட்டு அதுக்கு மேல தூக்கி விடுவாம். இவன் தன்னாலயே முக்கி முக்கி தூக்கிக்கிடுவாம். அவளுக்கு வெறவு கொஞ்சம்தான் இருக்கும். அவ என்னதான் வசதி மாதிரி, நெறய சொமந்துட்டு போனாலும் ஊருக்குள்ள பொம்பளை கட்டுனா வெல கொறச்சலாத்தான் கேப்பானுவோ. அதுக்காவே அவ கொறச்சலாத்தான் சொமந்துட்டு வருவா.

நடப்பாவோ...

சொல்லுதேன்.

7 comments:

தங்ஸ் said...

படிக்கப்படிக்க கண் முன்னாடி அப்படியே ஓடுது..
பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

Anonymous said...

அண்ணாச்சி!

சிலம்பத்துக்கு மூங்கில் மரத்துலருந்து தான் கம்பு எடுப்பாங்களா? இல்ல வேற மரத்துலருந்தா?

ஆடுமாடு said...

நன்றி தங்ஸ். பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, வணக்கம். மூங்கில்தான். நல்லா வளர்றதுக்கு முன்னால பருவத்துல எடுக்கணும்.

நம்ம நெற்றி அளவு உயரம்தான் கணக்கு. அதாவது ஆறடி. கரெக்டா வெட்டி எண்ணெய் போட்டு வச்சா கம்பு சர் சர்ங்கும்.

வாரீங்களா... வீடு கட்டலாம்.

நீங்க சொன்னதும் இப்பவே கம்பு சுத்தணும் போல இருக்கு. இங்க மொட்டை மாடியில கூட சுத்த முடியல.

'அங்க பாரு கோட்டிக்கார பய மாதிரி சுத்திக்கிட்டிருக்காம்"னு அக்கம் பக்கத்துலயிருந்து கிண்டல்.

என்ன பண்ண சொல்லுதீங்க?

நன்றி ஐயா.

தங்ஸ் said...

//பொங்கலுக்கு என்ன பண்ணினீங்க?
//
பக்கத்து வீட்டுல பொங்கல் சாப்பிட்டேன். ரெண்டு ப்ளேட்தான் கெடச்சுது..ஊருக்கு போன் பண்ணி மாடு கழுவினீங்களா, என்ன கலர் பெய்ண்ட்,பட்டி கட்டியாச்சா-ன்னு விசாரிச்சேன்..

ஆடுமாடு said...

//ஊருக்கு போன் பண்ணி மாடு கழுவினீங்களா, என்ன கலர் பெய்ண்ட்,பட்டி கட்டியாச்சா-ன்னு விசாரிச்சேன்..//

என்னையை மாதிரியே இருந்திருக்கீங்க.

துளசி கோபால் said...

வசதியைப் படிக்க இப்பத்தான் வசதி வந்துச்சு.

நாலு வூடு கட்டலாமா?

:-)))))

சிலம்பத்துலே இருக்குதானே?