Saturday, January 12, 2008

வசதி - கேரக்டர் 7

''நண்டு நசுக்காலாம் வெறவு வெட்ட வந்துருதுவோ. இதுல நம்ம என்னத்த வெட்டி, வெலக்கி விக்க. ஒரு மண்ணும் நடக்க மாட்டக்கு. இந்த சொக்கன் மவனுக்கு என்ன வயசிருக்கும். அதுக்குள்ள வெறவுக்கு வந்துட்டாம். ஒல்லிமாடன் மவன் சரட்டுங்கதுக்குள்ள ரெண்டு கெட்டுக்கு வெட்டிருதாம் வெறவ. முன்னாலயெல்லாம் ஒரு நாதி வராது வெறவுக்கு. எத்தன பேரை கூப்டுருப்பேன்ங்க. இந்த மலையாளத்தா மவன் என்ன எக்காளமா பேசுவான் தெரியுமா? வெறவு வெட்டுததெல்லாம் ஒரு வேலயாம்னான். இப்பம் பாரு, தங்க பாண்டியன் மரக்கடையில மரத்த வெட்டிட்டு இருக்காம் கேட்டியா?"

பீடிய இழுத்துக்கிட்டு, பேசிக்கிட்டே முன்னால நடந்தாம் வசதி. அருவாளை இடுப்புல சொருவிட்டு வந்த பொன்னாமா ம்ம்முனு கேட்டுட்டே வந்தா. விரையலு நடுக்கிக்கிட்டு இருந்துச்சு. பொழுது இன்னும் செத்த நேரத்துல விடிஞ்சுரும். விடிஞ்சாலும் வெரையலு விடாது.

ஊர்லயிருந்து ஏழு மைலு இருக்கும் மலை. வயக்காட்டு வழியா போனா செத்த சீக்கிரமா போவலாம். காலையில நாலு மணிக்கே எந்திரிச்சு வெறவுக்கு போவணும். ஒரு நாளு விட்டு ஒரு நாளுதான் போவ முடியும். தெனமும் போனா அசதி தாங்க முடியாது. அடிச்சுப்போட்ட மாதிரி இருக்கும் உடலு. ஒரு நாளு போயிட்டு வந்தாலே காலு கையிலாம் விண்ணுனு வலிக்கும்.

பாவூர் பால்க்காரனுவதான் கணக்கு. நாலு மணிக்கே ரோட்டுல பேசிக்கிட்டே போவானுவோ. சள சளன்னு அவனுவோ பேச்சும், சிரிப்பும் ஊரையே உசுப்பிரும். அரவமில்லாம இருக்குத நேரம் பாத்தியலா. அதனால லேசா தும்முனா கூட பெரிய சத்தமா கேக்கும்.

அவனுவ சத்தம் வந்துச்சுன்னா முழிப்பு வந்துரும் வசதிக்கு. அந்தானி, வீட்டுல நீத்தண்ணிய தொண்டயில ஊத்திட்டு, தெக்கூட்டு பொன்னம்மாவ கூப்டுவாம். அதுக்குள்ள அவம் பொண்டாட்டி, தூக்கு சட்டியில தண்ணியும் சோறுமா வச்சு, வீட்டுக்கு வெளியில சாச்சுட்டு தூங்க போயிருவா. கொறட்டைய விட்டுட்டு தூங்கிட்டிருப்பா பொன்னம்மா. இவம் போயி, அவயம் போட்டதும் எந்திரிப்பா. அந்தானி மொவத்த கழுவிட்டு, தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த புளியங்கா தொவலையும் எடுத்துக்கிட்டு கௌம்பிருவா. இடுப்புல எப்பவும் வெத்தல. அவனுக்கு பீடி.

நடப்பாவோ. சின்ன வாய்க்கா, ரயிலு கேட்டு, பறையாங்கொளம், பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூருன்னு கண்ணை மூடிட்டு போனா ரெண்டு மூணு மணிநேரத்துல மலை. அப்பலாம் அங்க போவ பஸ்சு கெடயாது. நடதாம். பறையாங்கொளத்து கரையில ரோடு போட, சல்லி போட்டுருந்தாவோ. சல்லிய போட்டு ரொம்ப நாளாச்சு. ஒதுக்கி வச்சிருந்ததெல்லாம் சைக்கிளுவோ போயி போயி ரோடு பூரா கருங்கல்லு பூவு மாதிரி நெறஞ்சு கெடந்தது. வசதிக்கு என்னன்னா ரெண்டு கால்லயும் பித்து. செருப்பில்லாம நடக்க முடியாது. கல்லுகாட்டுல நடக்கணும்னா செருப்பு போட்டுருந்தா கூட காலு கூசும். கெந்தி கெந்திதான் நடப்பாம். இந்த எடத்துக்கு வந்துட்டாம்னா என்னதாம் ஓரமா நடந்தாலும் அவனுக்கு ஒரு மாதிரி இருக்கும்.

சின்ன பயலுவோ அவன கண்டா,‘பொத்தியாம் பொத்தியாம்'னு எடக்கு பண்ணுவானுவோ. இவன், ‘செவுட்டுல போட்டம்னா’ ன்னுட்டு போவாம். வேறன்ன செய்ய முடியும்? இல்லததயா சொல்லுதானுவோ.

பூவங்குறிச்சி தாண்டுனதும் கோயில் பிள்ளை தோப்பு இருக்கு. பெரிய தோப்பு. சின்னதா கேட்டு மாதிரி அதுல போட்டுருப்பாரு. அதுக்கு பக்கத்துலயே சின்ன தொண்டு. ரோட்டோடி போவாம, இதுக்குள்ள ஆமை மாதிரி போயி நடந்தா, மலை பக்கம். தோப்புக்குள்ள போவும் போது சத்தம் போடமத்தான் போவணும். கோயில்பிள்ளைக்கு அறுவது வயசு இருக்கும். பேரன் பேத்தி எடுத்துட்டாலும் மனுஷனுக்கு ஆசை பொறுக்கல.

ஒருத்திய தொசுக்கா வச்சிருந்தாரு. அவளுக்கு இங்கதான் குச்சிலு. பம்பு செட்டு கெணத்துல பக்கத்துல இருக்குத குச்சிலை தாண்டிதான் போவணும். செல நேரத்துல பிள்ளை, இங்க வந்துதான் படுத்துக்கெடப்பாரு. யாராவது நடக்குத சத்தம் கேட்டுதுன்னா, கண்டமேனிக்கு ஏசிப்போடுவாரு.

‘‘இதுயென்ன தெருவா? இப்படிக்கூடிப் போறியோ... இப்டி வரக்கூடாதுன்னுட்டுதான் கேட்டு போட்டு வச்சிருக்கேன். அதையும் தாண்டி வந்தியன்னா என்ன அர்த்தம்? இனும வாங்க உங்களை... நாயை கெட்டி போட்டாத்தாம் சரிபடுவியோ’ம்பாரு.

கூட இருக்குத தொசுக்கு, ‘இப்பம் என்னா போயிட்டு போவுதுவோ’ம்பா. அவ சொல்லுததெல்லாம் கேக்க மாட்டாரு கிழவரு.

இதனால, சத்தம் போடாமதான் போவணும். போற வழியில ஏகப்பட்ட மா மரம். மாங்கா காய்ச்சி தொங்கும். கிளி மூக்கு காயை பாத்தா, வசதிக்கு நாக்குல எச்சி வந்துரும். யாருமில்லனா, நாலஞ்சை பறிச்சு, சத்தம்போடாம சாரத்துக்குள்ள போட்டுட்டு, தோப்பு தாண்டுனதும் கடிச்சு தின்னுட்டு போவாம்.

இந்த தோப்பை தாண்டுனதும் ஆறு வந்துரும். முட்டுக்குத்தான் தண்ணிங்கதால இறங்கி அக்கறைக்கு போவாவோ. அக்கரையில நாவப்பழ மரம் நிக்கும். கீழ விழுந்து கெடக்குத பொன்னம்மா பொறுக்கி சேலை ஓரத்துல வச்சுக்கிடுவா. ஒண்ணு ஒண்ணா வாயில போட்டு ஒதுப்பிட்டு நடப்பாவோ.

அந்தானி நடந்தா...

சொல்லுதேன்.

10 comments:

Unknown said...

பொங்கல் நல் வாழ்த்துக்கள்.

சாமான்யன் Siva(stocksiva.blogspot.com) said...

நல்லாருக்கு.

தங்ஸ் said...

அப்பாடா..பொங்கலுக்கு ஊர்மணத்தோட ஒரு கதை..ரொம்ப நன்றிங்க அண்ணாச்சி..

கானகம் said...

நல்ல பதிவு நன்பரே.. வட்டார வழக்குச் சொல் உங்களுக்கு தண்ணி பட்ட பாடு போல.. நான் மதுரை மொழியில பேசுனா எங்க வீட்ல அப்படியே அராபி மொழி பேசுன மாதிரி ஆச்சரியமா பாப்பாங்க..

நீங்க இன்னும் பிடிவிடாம இருக்கீங்க.. விட்றாதீங்க.. அதுதான் நம்ம அடையாளம்.

வாழ்த்துக்களுடன்..

ஜெயக்குமார்

ஜ்யோவ்ராம் சுந்தர் said...

நல்லாருக்குங்க.

தமிழ்மணம் கருவிப் பட்டையை இணையுங்களேன். அதன் மூலம் மறுமொழி திரட்டப் படுவதால் நிறைய பேர் பார்க்க / வாசிக்க வாய்ப்புண்டு.

மாற்று எழுத்துகளை எழுதும் உங்களைப் போன்றவர்கள் நிறைய வாசிக்கப் படவேண்டும் என்பது என் அவா. அதனாலேயே இந்த வேண்டுகோள்.

ஆடுமாடு said...

தாமோதர்ஜி, சாமான்யன், தங்ஸ், கானகம், சுந்தர்ஜி வருகைக்கு நன்றி.

சுந்தர்ஜி, அதை எப்படி பயன்படுத்தறதுன்னு தெரியலை.சீக்கிரமே யார்ட்டயாவது தெரிஞ்சுக்கிட்டு பண்றேன். நன்றி சார்.

அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் வாழ்த்துகள்

ச. கோசல்ராம் said...

ஆடு மாடு போக்கு மாறிக்கிட்டே வருதே... மேய்ச்சலுக்கு புல் கிடைக்கலியோ

Anonymous said...

/// தூக்குல சோத்தையும் நேத்தே அரச்சு வச்சிருந்த புளியங்கா தொவலையும் எடுத்துக்கிட்டு கௌம்பிருவா ///

புளியங்கா 'தொவயல்'னு நினைக்கிறேன். ரொம்ப நாளாச்சு அண்ணாச்சி. ஞாபகப்படுத்திட்டீங்க.

பொங்கல் எங்கே? ஊர்லயா? சென்னையிலா?

ஆடுமாடு said...

//மேய்ச்சலுக்கு புல் கிடைக்கலியோ//

கோசல் சார். புண்ணாக்குக்கு ஒ.கே. புல்லை இங்க எங்க போய் தேடுவேன் சொல்லுங்க. அதாம்வே

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, அது 'தொவயல்'தான். எழுத்துப்பிழை.

பொங்கலுக்கு எங்க ஊருக்கு போகலை. பக்கத்துல நண்பர் ஒருவர் வீட்டுல.