Thursday, August 30, 2007

ஒரு கால்நடை பயணம்

பாரதியின் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில்தான் நாங்கள் அந்த காளையை வாங்கினோம். (அப்போது எங்கள் வீட்டில் வில் வண்டியிருந்ததாக்கும்). வீட்டிலிருந்த ஒரு காளைக்கு கால் புண் வந்து நடக்க முடியாமல் கிடந்தது. பலமாதமாகியும் அதன் கால் சரியாகததால் வேறு காளை ஒன்றை வாங்க வீட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தெரிந்தவர் மூலமாக கடையத்தில் மாடிருக்கும் தகவல் கிடைத்து அதன் படி சென்றோம். கையில் துண்டை போட்டு மாட்டுக்காரரிடம் மாமா என்னென்னவோ செய்து, 'ம்ஹூம் கட்டுப்படியாகாதுங்க... இதுக்கென்ன வயசா ஆயிபோச்சு. இவ்ளோ ரேட்டுக்கு கேக்கியோ?' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு டீக்கடைக்குப் போய் விட்டார். மாமா தரகில் கிங் என்பதால் அவரை விட்டுப் பிடித்தார். நான் டவுசர் போட்ட வயதிலிருந்தேன். இருந்தாலும் நானும் அவரும் மாமா மருமகன் உறவில் இல்லை. அவருக்கு என்னைப் பிடிக்கும் என்பதால் எப்போதும் அவர் சைக்கிளின் பின்னால் நானிருப்பேன்.
'மாட்டை நம்மட்ட விக்காம எவன்கிட்டயும் அவன் விக்க முடியாது. இப்ப கொஞ்ச நேரத்துல பாரு, என்ன நடக்குன்னு' என்று சொல்லிவிட்டு, 'அப்ப முடிவா உன் ரேட்டு அவ்ளவுதானா? அப்படித்தாம்னா நான் கெளம்பிருதம்யா' என்றார் மாமா. அவர், 'பின்ன சவுட்டு ரேட்டுக்கு கேட்டேயோன்னா எப்படி' என்றார். சரி என்று மாமாவும் டீக்கடைக்குப் போனார். மாமாவின் தரகு உதவியாளரிடம் என்னவோ சொன்னார். அவர் மாடு விற்பவரை தனியாகக் கூட்டிச்சென்று பேசினார். மாமாவும் நானும் டீ குடித்தோம். நான் இரண்டு போண்டோ வாங்கி மென்று கொண்டிருந்தேன். மாமா பீடியை பற்ற வைக்கும் போது, மாட்டுக்காரர் வந்தார்.
'சரி, கொஞ்சம் பாத்து பண்ணிட்டுப் போங்க' என்றார். அடுத்த சில நிமிடங்களில் பணம் கைமாறியது. மாடு எங்கள் கைகளில். நான் சைக்கிளை உருட்ட, மாட்டை மாமா பிடித்துக்கொண்டார். கடையத்திலிருந்து எங்கள் ஊருக்கு பத்து கிலோமீட்டர். கால்நடை பயணம் தொடர்ந்தது. மாமாவிடம் கேட்டேன். 'தரவே மாட்டம்னு சொன்னவம் எப்படி மாமா மாட்டை கொடுத்தாம்?'.
'இதுலயெல்லாம் கொஞ்சம் டெக்னிக் இருக்குடா. மாட்டுக்கு வாயில கோழை அதிகமா ஒழுவுது. எல்லா மாட்டுக்கும் அப்படித்தாம். இதுக்கு கொஞ்சம் அதிகம். இது ஒரு நோயோட அறிகுறின்னு அவன்ட்ட சொல்ல சொன்னேன். நம்பிட்டான். மாட்டுக்கு என்னமும் ஆயிப்போச்சுன்னா கிடைக்கதும் கிடைக்காம போயிருமேனு அவனுக்குப் பயம். நூறு ரூவாயை அதிகமா கொடுத்ததும் பல்லை காட்டிட்டாம்' என்றார். மாமாவின் தரகு தந்திரம் ( அதாவது ஏமாற்றுதல்) என்னை வியக்க வைத்தது. இன்னும் பலவாறு அவர் ஏமாற்றிய அனுபவங்களை, தொழில் ரகசியம் கருதி இங்கே எழுதவில்லை.
இன்னும் சொல்வேன்.

விரிசல் விழுந்த குத்து

மாடுகளின் கொம்புகள் கத்திகளை விட பதமானவை. ஒட்டங்காளைகளின் கொம்புகள் அடிக்கடி எண்ணெய் தடவி ஊசி போல சீவப்படும். நன்றாக வளர்ந்திருக்கும் அம்மாடுகளின் அருகில் கொஞ்சம் ஜாக்கிரதையாகத்தான் செல்ல வேண்டும். மாட்டின் ஓனராக இருந்தால் கூட. எப்போது அவ்வகை மாடுகளுக்கு மதம் பிடிக்கும் என்று சொல்ல முடியாது. ஆனால் என் வீட்டு மாடுகளின் கொம்புகள் அவ்வளவு கூர்மையானதல்ல. பொங்கலை முன்னிட்டு கொஞ்சமாக எண்ணெய் மட்டும் தடவப் பட்டிருந்தது.
மாடுகள் வீட்டை விட்டு வெளியேறியதும் தெக்கூட்டு பரமசிவன் ஓடி வந்து அதன் கழுத்தைப் பிடித்தான். மேலத்தெரு பொந்தனும், வயித்துப் பாப்பாவும் அவனுடனேயே கழுத்தில் கரும்பை இழுக்க முற்பட்டுக்கொண்டிருந்தனர். எந்த வித எதிர்ப்பும் காட்டாமல் பசு அமைதியாக நின்று கொண்டிருந்தது. இது எனக்கு பெரும் கோபத்தை தந்தது. சும்மாவே என்னையெல்லாம் அருகிலேயே அண்ட விடாத இப்பசு, வெளியே யாரோ ஒருவன் தொடுகிறான். 'இந்தா புடுங்கிக்கோ என்பது போல அமைதியாக இருக்கிறதே என்ற என் கோபம் கொப்பளிக்க, பின்பக்கமாய் கம்பால் ஒரு போடு பேட்டேன். சட்டென்று திரும்பிய பசு கொம்பை இலேசாக ஆட்ட, அது என் வாயில் செல்லமாக நுழைந்து கிழித்தது. ரத்தம் கொட்டோ கொட்டென்று கொட்டி... அதன்பிறகான அலப்பறைகளுக்குப் பிறகு ஒரு நன்மை நடந்தது. எனது சிறு வயது குரல் அப்போதே கரகரவாகி கிழட்டுக் குரலைத் தந்துகொண்டிருந்தது. ஆறு ஏழு வருடங்களுக்குப் பிறகுதான் அது சரியானது என்பது வேறு விஷயம்.
இதன் பிறகு அப்பசுவிற்கும் எனக்குமான உறவில் நீண்ட விரிசல்.

Thursday, August 16, 2007

பொங்கல் போர்

மாடுகளின் உலகத்தில் இன்னும் தொலைந்து, அதன் உலகத்தில் வாழுவதன வாழ்க்கை எனக்கு அதிகம் கிடைக்கவில்லை என்ற வருத்தம் இருக்கிறது. பிழைப்பின் பொருட்டு நகரத்தின் நகக் கால்களின் சிக்கி சின்னாபின்னமானாலும் அவற்றின் மீதான மரியாதையும், மனதுக்குள் எழும் கரிசனமும் இன்னும் போய்விடவில்லை. பிடுங்கி நடும் நாற்று தழைக்கும் என்பது போல என் நினைவுகளைப் பிடுங்கி இங்கே நடுகிறேன். இந்த வயலில் நீங்கள் மேய்வீர்களா? மிதிப்பீர்களா என்பது பற்றிய கவலை எனக்கில்லை.
கனவுகளின் மூலமான மாடுகளின் கண்ணீரும், அதன் பிரதிபலிப்பும் எனக்குள் ஏதேதோ சொல்லுகின்றன. எல்லாவற்றையும் சொல்லிவிடத்தான் இந்த ப்ளாக்கை ஆரம்பித்திருக்கிறேன்.
அப்போது படித்துக்கொண்டிருந்தேன். பொங்கல் திருநாளன்று மாடுகளின் கொம்புகளில் கட்டப்பட்டிருக்கும் நான்கு பனங்கிழங்கு, கரும்பு மற்றும் பத்து ரூபாய்க்கு ஆசைப்பட்டு அந்த போர் தெருவெங்கும் நடந்துகொண்டிருந்தது. மதுரையில் நடக்கும் மாடு பிடித்தலுக்கும் இந்த பிடித்தலுக்கும் நிறைய வித்தியாசம். எங்கள் வீட்டில் நான்கு பசுக்கள் இருந்தன. அவற்றில் எனக்கு இரண்டும். என் அக்காவுக்கு இரண்டுமாக பிரிக்கப்பட்டிருந்தன. எனக்கென ஒதுக்கப்பட்ட பசுவில் ஒன்று கோபம் கொண்டது. நீண்ட அதன் கொம்புகள்தான் எனக்குள் பயத்தை ஏற்படுத்தின. பிறகு நான் சும்மா நின்றால் கூட ஏதோ கொலை செய்ய வந்தவன் மாதிரி கொம்பை கோபமாக ஆட்டும். கிட்டே சென்றால் விரட்டி விரட்டி அடிக்கும். இப்படியான அதிக சினேகம் கொண்ட அந்த பசு, லட்சுமி என்று அழைக்கப்பட்டாள்.
மாட்டுப் பொங்கலன்று பசுக்களின் கொம்புகளுக்கு விதவிதமான கலர்கள் பூசப்பட்டன. அவரவர்கள் கட்சி வண்ணத்தையும் மாடுகளின் கொம்புகள் சுமந்துகொண்டிருந்தன. கம்யூனிஸ்ட் குடும்பம் என்பதால் எங்கள் பசுக்கள் சிவப்பு மற்றும் வெள்ளையைக் கொண்டிருந்தன. அவற்றின் கழுத்துகளில் எண்ணி, நான்கு பனங்கிழங்குகள், கரும்பு, ஒவ்வொரு மாடுக்கும் பத்து ரூபாய் வீதம் கட்டப்பட்டன. வீட்டுக்கு வெளியே பத்து பதினைந்து பேர் நின்று கொண்டிருந்தனர். இதற்கே இவ்வளவு கூட்டமா? என வியந்தேன். கதவு திறக்கப்பட்டதும் நான் சேண்டி அடிக்க, மாடுகள் ஒவ்வொன்றாக வெளியேறின. ஒவ்வொரு மாட்டின் கழுத்தையும் பிடிப்பதற்கான முயற்சிகள் தொடர்ந்துகொண்டிருந்தன. அப்போதுதான் அந்த சம்பவம் நடந்தது.

Friday, August 10, 2007

மாட்டின் அழுகை

என் நள்ளிரவு கனவு பற்றி இன்னும் சொல்ல வேண்டும். அது மழை பெய்த இரவு. இழுத்துப் போர்த்திய போர்வையோடு அம்மா எப்போதோ தூங்கியிருந்தாள். வீட்டின் ஓட்டிலிருந்து ஒழுகும் சொட்டுக்களுக்காக ஒரு சருவ சட்டியை அதன் கீழ் வைத்தேன். அதில் பட்டுத்தெறிக்கும் மழைத்துளியை கண்களை இழுக்கும் தூக்கத்துடன் ரசித்தேன். இத்தனை நாள் இந்த ரசனை எங்க போனது என்று தெரியவில்லை. எப்போதும் வருவது ரசனையாகவும் இருக்க முடியாது. எனனுலகம் நான்கு மாடுகள், எட்டு செம்மறியாடுகள், சுப்பையா தோப்பு, மஞ்சப்புளிச்சேரி குளம் இவற்றிற்குள்ளேயே முங்கி கொண்டிருந்தது. எனக்கும் ரசனைக்குமான விஷயங்கள் தூரமானது. ரசிப்பதையே, 'ஓ இதுதான் ரசனையா' என்று பின்னர் உணர்ந்திருக்கிறேன்.
அப்போதுதான் தொழுவத்தில் அந்த சத்தம் கேட்டது. மாட்டின் அழுகை. அதுவரை மாடுகள் அழுமென்பது தெரியாது. இன்னும் கூட அப்படி நான் கேள்விப்பட்டதில்லை. ஆனால் அன்று நான் காதால் கேட்ட அழுகை. எழுந்து பார்த்த்தபோது விரிந்திருக்கும் கப்பைக் கொம்பு பசுவிடமிருந்து அந்த சத்தம் வந்தது. கணவன், குழந்தையை இழந்து தவிக்கும் ஒரு தாயின் அவலமாக அந்தச சத்தம் கேட்டது. ம்மா என்ற சத்ததின் சோக ஒலி. அதை என் அம்மாவி்ன அழுகையாக நினைத்தேன். அம்மாக்களி்ன் அழுகை சக்தி வாய்ந்தது. அந்தக் கண்ணீ்ரின் அடர்த்தியி்ல் ஒரு கடல் வற்றும். ஒரு கடல் பொங்கும்.
அதன் கண்களிலிருந்து நீர்க்கோடுகள் விரிந்திருந்தது. மழையின் பொருட்டு கொசுவும், குளிரும் சேர்ந்து தாக்கின. என் ஒல்லி உடம்புக்கு இவை இரண்டும் எமன்கள். இருந்து்ம் அந்தப் பசு்வை நான் அருகிலிருந்து பார்த்தேன். சோகத்தின் வலிகள் ஜீரணிக்க முடியாதவை. மாடுகளுக்கும் அப்படித்தான். அருகில் படுத்திருக்கும் மாடுகள் எதையோ இழந்தது போல எழுந்து நின்று, கண்ணீர் பசுவைப் பார்த்துக்கொண்டிருந்தன. மாடுகளின் பாஷை எனக்குப் புரியவில்லை. ஆனால், உணர முடிந்தது. தொடர்ந்து பத்து நிமிடங்கள் அந்த சோக ஒலி ஒலித்துக்கொண்டே இருந்தது.
தாங்க முடியாத குளிரின் பொருட்டும் நான் முக்காடாகப் போட்டு மூடியிருந்த சாரம் நனைந்ததன் பொருட்டும் அந்த சோகத்தை முழுவதுமாகச் சுமந்து வீட்டுக்குள் சென்றேன். எனனுறக்கம் என்னை இழுத்துச் சென்றது. அதனதன் இழுப்புக்கு ஆட்படுவதே மனித பண்பு?
அது நிலவொளி. பரந்து விரிந்த பனங்காடு. கள் கொடுக்கும் பனை மரங்களினடியில் சாராய விற்பனை நடந்து கொண்டிருந்தது. விற்கப்படும் போதைகளுக்கு ஏற்ப பணம். கொஞ்சம் வசதி படைத்தவர்களுக்கு கடனும் உண்டு. இளஞ்சூட்டு சாராயத்துக்கான ஆட்களும், பணமும் வெவ்வேறு. குடிப்பவர்களுக்கான எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. ஒன்றிரண்டாக இருந்த ஆட்களி்ன் எண்ணிக்கை அதிகரிக்கிறது. தலைப்பாகைகளுடன் தலைகள் பெருகுகின்றன. அந்தக் கூட்டத்திலிருந்த ஒருவன் ஆச்சர்யமாகக் கத்துகிறான். அவன் கத்தல் கேட்டு கூட்டம் திரும்புகிறது. ஒரு மாடு்ம் ஆடு்ம் ஏதோ பேசியபடி பணத்தைக்கொடுத்து சாராயம் கேட்கிறது. மாடு பேசுவதைக் கேட்டு அங்கு ஆச்சரியம் கலந்த பயம். போதையேறிய சிலர் கல்லெடுக்கிறார்கள். ஒருவன் பனை மட்டையை ஓங்குகிறான். 'ஏலேய்...' குரல் கேட்டு பனங்காடு அதிர்கிறது. அது மாட்டின் குரல். 'நீ கொத்தனார் மவந்தானலே. கல்லெறிஞ்சனா ஒழுங்கா வீடு போ்ய் சேரமாட்டே. உங்கப்பனுக்கு நீ கொள்ளி வைக்கணுமா? உனககு ஒங்கப்பன் கொள்ளி வைக்கணுமா? ம்ம்ம்..." மாட்டின் அதட்டல் எதிரொலித்து வருகிறது. மட்டையை எடுத்தவன் மலைத்துப் போய் நிற்கிறான். கல்லெடுத்தவன் பயத்தில் பின்னோக்கி நகர்கிறான். இந்த அதிசயத்தை சாரயக்காரன் கலக்கத்தோடு கவனிக்கிறான். மாட்டின் மடியில் பெரிய பை இருக்கிறது. அதிலிருந்து ஒவ்வொரு ரூபாய் நோட்டுகளாக எடுத்து அவனிடம் கொடுக்கிறது. ஞாபகமாக அருகிலிருக்கும் ஆடு, பாக்கிச் சில்லறை கேட்கிறது. கொஞ்சம் கொஞ்சமாகக் கூட்டம் சிதற, மாடும் ஆடும் அங்கேயே அமர்கின்றன. ஆடு ஊறுகாய் கேட்கிறது. மாடு தனது பையிலிருந்து எடுத்துக் கொடுக்கிறது. உரையாடல் தொடர்கிறது.
'வர வர சரக்கு ரொம்ப கசக்குது'
'நீ நேத்தே சொல்லியிருந்தேனா, காய்ச்சிர இடத்துக்குப்போயி, இளஞ்சூட்டோட நல்ல சரக்கு அடிச்சிருக்கலாம்'
அவசர அவசரமாக குடிக்கும் ஆடு இறுமுகிறது.
'மெதுவா குடி. முந்தா நாள் பல்லிலிச்சான் வந்தான். அவசர அவசரமா குடிச்சுட்டு அங்கயே கக்கி தொலைச்சு கேவலப்படுத்திட்டான்'
'எனக்கு எவ்வளவு குடிச்சாலும் போதை ஏறாது'
இவை குடிககும் அழைகைப் பார்க்க கூட்டம் சுற்றி நின்றது.
மாட்டுக்குப் போதை ஏறுகிறது. எழுந்து நின்று தலையை அங்குமிங்கும் திருப்புகிறது. நேராக சாராயம் விற்பனி்ன் இடத்துக்கு போய் அவன் சாய்ந்திருக்கும் பனை மரத்தில் முட்டுகிறது. சரியும் மரம் வேகமாக அவன் மீது விழுகிறது. அவனுக்கு அடியேது்மில்லை. எழுந்து முதுகை துடைத்துவிட்டு 'ஏனிப்படி பண்றே' என்கிறான் மாட்டை நோக்கி. அது கேட்கிறது.
'நேத்து என் சேக்காளி கால்ல கல்லெறிஞ்சு உடைச்சது நீதானே'
'சேக்காளியா?' அவனுக்கு குலை நடுக்கம். பயத்தி்ல் உளறல்.
'நேத்து வயல்ல பயிறை மேய்ஞ்சுட்டான்னு கல்லால எறிஞ்சு அவன் காலை ஒடைச்சல்ல...இப்ப பாரு...உன்னை...'
அவன் ஓடுகிறான். உயிருக்குப் பயந்து ஓடுகிறான். ஆடு்ம் அவனைத் துரத்துகிறது.

டக்கென்று விழித்துப் பார்த்தால் விடிந்திருந்தது. மழை இல்லை. அம்மாவிடம் மாடு அழுததை சொன்னேன். அவள் ஆச்சர்யமாக கேட்டுவிட்டு சொன்னாள்;
'போ்ன வருஷம் இதே நாள்லதான் அதோட கன்னு பஸ்காரன் அடிச்சுச் செத்துப்போச்சு.
இன்னும் சொல்வேன்.