Thursday, August 30, 2007

ஒரு கால்நடை பயணம்

பாரதியின் செல்லம்மாள் பிறந்த ஊரான கடையத்தில்தான் நாங்கள் அந்த காளையை வாங்கினோம். (அப்போது எங்கள் வீட்டில் வில் வண்டியிருந்ததாக்கும்). வீட்டிலிருந்த ஒரு காளைக்கு கால் புண் வந்து நடக்க முடியாமல் கிடந்தது. பலமாதமாகியும் அதன் கால் சரியாகததால் வேறு காளை ஒன்றை வாங்க வீட்டில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது. தெரிந்தவர் மூலமாக கடையத்தில் மாடிருக்கும் தகவல் கிடைத்து அதன் படி சென்றோம். கையில் துண்டை போட்டு மாட்டுக்காரரிடம் மாமா என்னென்னவோ செய்து, 'ம்ஹூம் கட்டுப்படியாகாதுங்க... இதுக்கென்ன வயசா ஆயிபோச்சு. இவ்ளோ ரேட்டுக்கு கேக்கியோ?' என்று துண்டை உதறி தோளில் போட்டுக்கொண்டு டீக்கடைக்குப் போய் விட்டார். மாமா தரகில் கிங் என்பதால் அவரை விட்டுப் பிடித்தார். நான் டவுசர் போட்ட வயதிலிருந்தேன். இருந்தாலும் நானும் அவரும் மாமா மருமகன் உறவில் இல்லை. அவருக்கு என்னைப் பிடிக்கும் என்பதால் எப்போதும் அவர் சைக்கிளின் பின்னால் நானிருப்பேன்.
'மாட்டை நம்மட்ட விக்காம எவன்கிட்டயும் அவன் விக்க முடியாது. இப்ப கொஞ்ச நேரத்துல பாரு, என்ன நடக்குன்னு' என்று சொல்லிவிட்டு, 'அப்ப முடிவா உன் ரேட்டு அவ்ளவுதானா? அப்படித்தாம்னா நான் கெளம்பிருதம்யா' என்றார் மாமா. அவர், 'பின்ன சவுட்டு ரேட்டுக்கு கேட்டேயோன்னா எப்படி' என்றார். சரி என்று மாமாவும் டீக்கடைக்குப் போனார். மாமாவின் தரகு உதவியாளரிடம் என்னவோ சொன்னார். அவர் மாடு விற்பவரை தனியாகக் கூட்டிச்சென்று பேசினார். மாமாவும் நானும் டீ குடித்தோம். நான் இரண்டு போண்டோ வாங்கி மென்று கொண்டிருந்தேன். மாமா பீடியை பற்ற வைக்கும் போது, மாட்டுக்காரர் வந்தார்.
'சரி, கொஞ்சம் பாத்து பண்ணிட்டுப் போங்க' என்றார். அடுத்த சில நிமிடங்களில் பணம் கைமாறியது. மாடு எங்கள் கைகளில். நான் சைக்கிளை உருட்ட, மாட்டை மாமா பிடித்துக்கொண்டார். கடையத்திலிருந்து எங்கள் ஊருக்கு பத்து கிலோமீட்டர். கால்நடை பயணம் தொடர்ந்தது. மாமாவிடம் கேட்டேன். 'தரவே மாட்டம்னு சொன்னவம் எப்படி மாமா மாட்டை கொடுத்தாம்?'.
'இதுலயெல்லாம் கொஞ்சம் டெக்னிக் இருக்குடா. மாட்டுக்கு வாயில கோழை அதிகமா ஒழுவுது. எல்லா மாட்டுக்கும் அப்படித்தாம். இதுக்கு கொஞ்சம் அதிகம். இது ஒரு நோயோட அறிகுறின்னு அவன்ட்ட சொல்ல சொன்னேன். நம்பிட்டான். மாட்டுக்கு என்னமும் ஆயிப்போச்சுன்னா கிடைக்கதும் கிடைக்காம போயிருமேனு அவனுக்குப் பயம். நூறு ரூவாயை அதிகமா கொடுத்ததும் பல்லை காட்டிட்டாம்' என்றார். மாமாவின் தரகு தந்திரம் ( அதாவது ஏமாற்றுதல்) என்னை வியக்க வைத்தது. இன்னும் பலவாறு அவர் ஏமாற்றிய அனுபவங்களை, தொழில் ரகசியம் கருதி இங்கே எழுதவில்லை.
இன்னும் சொல்வேன்.

No comments: