Thursday, September 13, 2007

செவ்வாரம்

தலைப்பை பார்த்துவிட்டு ஏதோ சங்க இலக்கிய மேட்டர் என்று நினைத்துவிடாதீர்கள். இது ஆடு மேட்டர்தான். உங்களிடம் நான்கு ஆடுகள் இருக்கிறது. வேலைக்குச் செல்கிறீர்கள். வளர்க்க முடியவில்லை. அதை பராமரிப்பதற்குள் போதும் போதும் என்றாகி விடுகிறது. ஆசையாக வளர்த்ததை விற்க மனமில்லை. என்ன செய்யலாம்? அதற்காகத்தான் இருக்கிறது செவ்வாரம்.


இதற்கு இந்தப் பெயர் எப்படி வந்ததென்று தெரியவில்லை. ஆனால், இன்றும் கிராமங்களில் இந்த முறை இருக்கிறது.
அதாவது ஆடு மேய்த்துக்கொண்டிருக்கும் மேய்ப்பரிடம் ஏற்கனவே நாற்பது ஐம்பது ஆடுகள் இருக்கும். அதோடு உங்கள் ஆடுகளையும் கொண்டு விட்டு விடுவது. அவரே அதன் 'நல்லது பொல்லது'களைப் பார்த்துக்கொள்ள வேண்டும். இதற்காகக் கூலி இல்லை. ஆனால், நீங்கள் ஒரு ஆட்டு குட்டி கொடுத்தால் அதற்கு பிறக்கும் (குறைந்தது இரண்டு குட்டிகள் என்றால்) குட்டிகளில் ஒன்று ஆடு மேய்ப்பவருக்கு. மற்றொன்று ஆடு கொடுத்தவருக்கு. இப்படிப் பெருகும் ஆடுகளில் இவருக்குப் பாதி அவருக்குப் பாதி. இதற்கு செவ்வாரம் என்கிறார்கள்.


நண்பன் கோசல் இப்போது சென்னையில் இருக்கிறான். (அவன் தயவில்தான் நான் சென்னை வந்தேன் என்பது செப்பரேட் ஸ்டோரி). அவனுக்கும் ஆடுமாடு, கோழிகளுக்குமான ப்ரியம் வித்தியாசமானது. நாமெல்லாம் எதிரில் வரும் மனிதர்களை, ஏதோ விரோதியை போல முறைத்துவிட்டு (சென்னையில இப்படித்தான் இருக்காங்க) போய்க்கொண்டிருக்கிறோம். ஆனால், அவனது பார்வை எதிரில் வருபவர்களை விட்டுவிடும். பக்கத்தில், ஓரத்தில் செல்லும், மேயும் ஆடுமாடு, கோழிகள் என்றால் ஒரு நிமிடம் நின்று, 'பாவம்ல, அந்த சேவலுக்குக் கொண்டையில புண்' என்பான். அதுவரை சேவலும் நம் கண்ணுக்குத் தெரியாது. கொண்டையும் தெரியாது. ஆடுகள் சென்றால், 'இதுக்கு ஏன் இவ்வளவு கோழை வடியுது? ஏதாவது நோயா இருக்குமோ?' என்று பரிதாபப்படுவான். எதிரில், கையில் கட்டுடன் யாராவது சென்றால் கூட நலம் விசாரிக்காத பார்ட்டி, இம்மாதிரியான இனங்கள் மீது கொண்டுள்ள பிரியத்தை கண்டு வியந்திருக்கிறேன்.

ஒரு நாள் ஒரு சேவலின் காலில் அடிபட்டிருக்க, அதை கால்நடை மருத்துவமனை கொண்டு செல்ல வேண்டும் என்கிற நல்ல எண்ணத்துடன் அதை விரட்டி பிடிக்க போய், பிறகு சேவலுக்கு சொந்தக்காரர் கோழி திருடன் என நினைத்து பஞ்சாயத்து வைத்தது காமெடி கதை.
இப்போது பிழைப்புக்காகச் சென்னையில் இருக்கிறான். அவனுக்கு ஆடுகள் மீது பிரியம். இப்போதும் எட்டு ஆடுகள் இருக்கிறது. அவனால் வளர்க்க முடியாததால் இந்த செவ்வாரம் முறையில் வளர்க்கிறான்.
ஒரு சின்ன உதாரணத்துக்குத்தான் நண்பனின் கதை.
உங்களுக்கும் அப்படியொரு ஆசை இருந்தா சொல்லுங்க.

வேறொரு விஷயத்தோடு சந்திப்போம்.

4 comments:

Unknown said...

எங்க ஊர்ப்பக்கம் இதை 'வாரத்துக்கு விடுறது' என்று சொல்வார்கள்.
நாங்கள் ஒரு பதினைந்து ஆடுகளை இதுபோல விட்டிருந்தோம்.
எல்லா ஆடுகளும் ஏதோ ஒரு தழையை உண்டு விட்டு, வளர்த்தவர் ஆடுகளோடு சேர்ந்து, சுமார் நாற்பது ஆடுகள் ஒரே நேரத்தில் உயிர் விட, ஆடு வளர்க்கும் ஆசையே போனது.

ஆடுமாடு said...

இது திருநெல்வேலி பக்கம். நாற்பது ஆடுகள் ஒரே நேரத்தில் உயிர் விட்டால் பாவம்தான். அதுக்காககாஅடு வளர்க்கும் ஆசையை விட வேண்டுமா?

துளசி கோபால் said...

என் தோழியின் பொண்ணும் இப்படித்தான். யாராவது ரோடுலே அடிபட்டுக்கிடந்தாக் கூட பேசாம
இருக்கும் பொண்ணு, ஒரு பூனை நாய்ன்னா பாய்ஞ்சு ஓடும்.
குணத்துக்கேத்தமாதிரி இப்ப மிருகவைத்தியம் படிச்சு, இங்கே மிருக மருத்துவம் பார்க்குது.
வீட்டுலே குதிரை, மாடு, ஆடு, நாய் பூனைகள்னு கூட்டம் ரொம்ப இருக்கு.

இப்ப மேற்படிப்பு மாட்டு வைத்தியத்துக்கு வேலை செஞ்சுக்கிட்டே படிக்குது,

ஆடுமாடு said...

வாங்கம்மா. எல்லாருக்கும் ஒவ்வொரு அனுபவம்.
நியூஸி.யில ஆடுமாடு நிலைமை பற்றி ஒரு போஸ்ட் போடுங்களேன். தெரிஞ்சுக்குறோம்.