Thursday, September 13, 2007

எருமை புராணம்

கொஞ்சமல்ல...ரொம்பவே ஆச்சர்யமாக இருந்தது. கண்ணனின் புல்லாங்குழலை இரவல் வாங்கி, ராகமற்ற ராகத்தில் ஓர் இசையை கொடுத்தால் உங்கள் செவிகள் கேட்குமா? கேட்காதா?
கண்ணனின் புல்லாங்குழலை ஒரு காகம் இசைத்தால் கூட அதிலிருந்து வரும் ஒலி செவிக்கு இனிக்கிற இசையாகத்தான் இருக்கும் என்பவர்களையும் எனக்குத் தெரியும். இப்படியாக உணருகிற தருணத்தில் உங்கள் மேனி புல்லரித்திருக்கலாம்.
இல்லையென்றால், 'அட' என்கிற ஒரு புருவ உயர்த்தலையாவது காட்டி இருக்கலாம். நீங்கள் எப்படியோ? நான் ஏதேதோ உணர்ந்தேன்.

எருமை பற்றி 'எட்டேகால் லட்சணமே...'என்று ஒளவையார் பாடிப்போனப் பிறகு, நிலவு, வானம், காதல் பற்றி போதும் போதும் என்கிற அளவுக்கு எழுதி தீர்த்துவிட்டார்கள் கவிதை என்ற பெயரில். இன்னும் எழுதி'கொன்றி'ருக்கிறார்கள். அது அவரவர்களுக்கான (கொலை) உரிமை.

மயிலாப்பூரில் ஆழ்வார் பழைய புத்தகக் கடையில், 'என்னை படியுங்களேன்' என்று ஒவ்வொரு செவியாய் கேட்கும் புத்தங்களை மேய்ந்துகொண்டிருந்தேன். மேய்தல் ஆடுமாடுகளுக்கு மட்டுமல்ல. நமக்கும்தான். (இந்த பதிவு எழுத ஆரம்பித்த பிறகு எழுவதற்கு அடிமையாகி விட்டேன். தினமும் ஏதாவது எழுதிவிட வேண்டும் என்கிற ஆவலில் இப்போதெல்லாம் நிறைய புத்தகங்கள் படிக்கிறேனாக்கும்) அப்போதுதான் அந்தப் புத்தகம் கண்ணுக்குள் குத்தி, நெஞ்சுக்குள் தைத்தது.
இதை பார்த்த பிறகுதான் நீங்கள் படித்த முதல் பாராவின் முதல் வரியை எழுதினேன்.

இதுதான் தலைப்பு: எருமையின் மருத்துவ பண்பு
சித்த மருத்துவ ஆராய்ச்சி நிலையம் வெளியிட்டுள்ள இப்புத்தகத்தின் விலை வெறும் 15 ரூபாய்.

முதல் பக்கத்தில்
இறை நாமம்
நாலுகால் நாலுவேதம் நயனவும் இரவி திங்கள்
ஓதுவார் நமசிவாயம் உடம்பெலாம் லிங்கமாகும்
ஆலமாஞ் செவியும் கொம்பும் அரசனுட ரூபமாகும்
சீலமா மனிதனின் சாணி சிவமெனும் செப்பலாமே!

இதுக்குப் பிறகு புரட்டிக்கொண்டே சென்றால் உள்ளே எல்லாம் எருமை புராணம்தான். அதன் தோல், கொம்பு, எருமை பால், வெண்ணெய் எல்லாம் என்னென்ன நன்மை தீமைகள் தருமென்பதை சிறு சிறு குறிப்புகளால் விளக்கம்.

ஓர் உதாரணம்

எருமையின் பாலினை உபயோக மாக்கிடில்
வரும் மெய்யாம் புத்திக் கூர்மை குறைந்திடும்
அருமையாம் மருந்தானதின் வீறு போம்
வருமே வாய்வும் வாதத் திமிருமே....

அதாவது, எருமைப்பாலை தினமும் குடித்தால் புத்திக்கூர்மை குறையுமாம். சாப்பிடும் மருந்தின் வேகம் குறையுமாம். வாய்வும், வாதமும், திமிரும் எழுமாம்.

இப்படி கவிதைகளால் எழுதி அதற்கு விளக்கமும்.

3 comments:

துளசி கோபால் said...

புத்தி குறையுமா? வேணாம்ப்பா....... இருக்குன்னு நினைச்சுக்கிட்டு இருக்கறக் கொஞ்சநஞ்சமும் போனா வம்புதான்(-:

நல்லவேளை. இங்கே நியூஸியில் நோ எருமை. ஒன்லி பசுக்கள்

ஆடுமாடு said...

இதோட மட்டுமில்லை. இன்னும் பயங்காட்டுற மாதிரி வேற இந்தப் புக்ல எழுதியிருக்காங்க. உங்களை எல்லாம் பயமுறுத்த வேண்டாமேன்னுதான் அதோட விட்டேன்.

Thekkikattan|தெகா said...

நானும் படிச்சிட்டேன்... கொஞ்சம் ஊன்றிக் கவனித்தால் அப்படித்தான் தெரிகிறது...