Tuesday, July 24, 2007

ஆடு மாடுகளின் வாழ்க்கை -3

கப்பைக் கொம்பு, ஊசிக்கொம்பு, மொட்டைக்கொம்பு என்பது உட்பட மாடுகளை வகைப்படுத்தும் கொம்பு பெயர்கள் அதிகம். வேறெந்த ஊருக்கோ மாடுகள் விற்கப்பட்டு, அதை எப்போதாவது பார்க்க நேர்ந்தால் கூட கொம்பின் பெயரிலேயே அவை அழைக்கப்படும். இப்படி அழைப்பது மாட்டுக் காரர்களுக்கான கவுரவம் சார்ந்த விஷயம். இந்தக் கொம்புகள் இல்லையென்றால் மாடுகள் எப்படி இருக்கும் என கற்பனை செய்திருக்கிறேன். கிளை இல்லாத மரம், வால் இல்லாத நாய், பயிர்கள் முளைக்காத கட்டாந்தரை போல இருக்குமென நினைத்திருக்கிறேன். முதுகில் சொரிய, கோபம் வந்தால் பயமுறுத்த, குஷியானால் தரையைக் குத்த என கொம்புகளுக்கு பல்வேறு அவசியம் இருக்கிறது. அவசியங்களின் அடிப்படையிலேயே ஆண்டவனின் படைப்பு.
நள்ளிரவின் அடர்ந்த இருட்டுக்குள், வீட்டின் வாசலில் உட்கார்ந்து யோசித்திருக்கிறீர்களா? அப்படியொன்றும் இது கட்டாயமான விஷயமில்லை. அடிக்கடி சந்தோஷம் இழந்து, மூளையின் உட்கிரகத்தில் கம்பளிப்பூச்சிகள் ஊறும் தருணங்களில் இப்படியான நள்ளிரவு விழிப்பு, எனக்கு ஏற்படும் சாபக்கேடு. இந்த சாபக்கேடான இரவுகளில் என்னை மாடாக்கிப் பார்த்திருக்கிறேன். எருமையா காளையா பசுவா என்பதை கணிக்க முடியவில்லை. இரண்டு கொம்புகளுக்குப் பதில் நான்கு கொம்புகள். கால்கள் நான்கிலும் கொலுசுகள். முகத்தில் அடர்ந்த மீசை. கழுத்தில் சங்கிலிகளுக்குப் பதிலாக எமனின் பாசக்கயிறு. என் கோபத்துக்குள்ளாகும் மனிதன் உள்ளிட்ட விலங்குகளை பாசக்கயிறால் இழுக்கிறேன். கறை படிந்த அனைத்துப் பற்களும் தெரிய அகோரமாகச் சிரிக்கிறேன். என் சிரிப்பைக் கேட்டு கிடையில் அடைந்து கிடக்கும் ஆடுகள், அன்போடு என்னை நோக்கி வருகின்றன. நான் சிரிக்கிறேன். அவை அழுகின்றன. சூழ்நிலை மாறுகிறது. நான் மனிதனாகிறேன். ஆடுகள் ஆண்டவனாகின்றன. மாடுகள்? இதுதான் என் சாபக்கேடான நள்ளிரவில் அடிக்கடி வரும் கனவு. கனவுகள் ஆழ்மன உணர்வின் வெளிப்பாடு என்ற ஃபிராய்டுவுடம் இதற்கு என்ன அர்த்தம் என்று கேட்க வேண்டும்.
இன்னும் சொல்வேன்.

Thursday, July 19, 2007

ஆடு மாடுகளின் வாழ்க்கை...2

இன்னும் சில நாட்களில் வயல்காரர்களே சம்பந்தப்பட்ட இடத்துக்கு வந்து, 'நீ பண்ணுதது நல்லா இருக்காடே; இனும மாடு வயல்ல விழுந்ததுன்னா, பெறவு என் வீட்டுல கெட்டிப்போட்டுருவேன். பாத்துக்கோ' என்று உரக்க கத்துவார்கள்.
இந்த கத்தல்களுக்கெல்லாம் செவிசாய்க்காமல் 'ஆங்..ஆங்..' என்ற சத்தத்தை பதிலாக்கி மேய்ப்பர்கள் நடப்பார்கள். மந்தைக்கு மாடுகள் வந்ததும் மேய்ப்பர்கள் கூட்டம் நடக்கும்.
'ஏல நீ எங்க பத்த போற'
'நான் சுப்பையா கோன் தோப்புக்கு'
'நான் ரயிலடி பக்கம்'
'நேத்தும் அங்கதானல மேய்ச்ச'
'பேசாம மஞ்சப்புளிச்சேரி போவும் எல்லாரும். கொளத்துல தண்ணி பொங்கிட்டு கெடக்கு. மாட்டை பத்திவுட்டு கருப்பசாமி கோயில்ல கட்டைய சாத்துவோம்' என்பான் ஒருவன்.
இதற்குள் நான்கைந்து மாடுகள் எல்லை தாண்டி ஏதாவது ரோட்டோர வயலை நோக்கி ஓடிக்கொண்டிருக்கும்.
'க்கே...க்கே. எங்க போய் தொலையுதே' என்று அதை விரட்டுக்கொண்டு ஓடுவான் ஒருவன்.
இவர்களுக்கான பேச்சுக்கிடையே மாடுகளின் சாணங்களுக்கு சில பெரியாச்சிகள் அவற்றின் பின்பகுதியில் பனை ஓலை பெட்டிகளை வைத்துக்கொண்டு நிற்பார்கள். இப்படி சாணத்தை நேரடியாக பெட்டிக்குள் பிடிப்பதே கலை. இம்மாதிரியான கலைகள் பெரியாச்சிகளுக்கு மட்டுமே உரியது. பெட்டியை மாடுகளின் பின்னாலேயே வைத்துக்கொண்டு அது சாணம் போட்டுக்கொண்டே நடக்க, மெதுவாக அவற்றின் பின்னால் பெரியாச்சிகள் அலைவது சுவாரஸ்யத்தின் உச்சம். சளப் என்று சில மாடுகள் போடும் சாணம் தெறித்து, ஆச்சிகளின் முகத்தில் அப்பிக்கொள்வதும் அன்றாட வாடிக்கை.
மந்தைக்கு அருகிலேயே தார் ரோடு. டவுண் பஸ்கள் வந்தத்திலிருந்து ரோடுகள் காட்டிறைச்சலைக் கொண்டிருந்தன. டிரைவர்களின் புஜ பலம் காட்ட்டி, ஏர்ஹாரனை முடித்த மட்டும் அமுக்ககுவதால் எழும் ஓசையால் ஆரம்ப காலகட்டத்தில் எருமை மாடுகல் அரண்டு ஓடி கடும் கோபத்தைக் காட்டியிருக்கின்றன. இப்போது மாடுகளின் முதுகில் வந்து பஸ்கள் முத்தம் கொடுத்தாலும் அசைவதில்லை.
ஒரு முறை, கல்லூரி பெண்கள் பஸ்சின் முன் பக்கத்தில் இருந்ததால் உணர்ச்சி வசப்பட்ட டிரைவர் ஒரு மாட்டின் முதுகில் பஸ்ஸை டொக்க, மாட்டின் பின்பக்க எலும்பு நொருங்கி, அந்த இடத்திலேயே படுத்துவிட்டது மாடு. பிறகு அக்கம்பக்கத்து ஆட்கள் வந்து டிரைவரை உண்டு இல்லையாக்கி, மாட்டின் மருத்துவ செலவுக்காக ஐநூறு ரூபாயை பெற்றுக்கொண்டு விட்டார்கள். இந்தச் சம்பவத்துக்குப் பிறகு மாடுகளின் ராஜ்யம் தொடங்கிவிட்டது. அவற்றிற்கான மரியாதையும் அன்றிலிருந்துதான் அதிகமாயின. அவை எவ்வளவு மெதுவாக சென்றாலும் அதுவரை பஸ்சை மெதுவாக ஓட்ட வேண்டும். 'அதுவாக பார்த்து போனா போய் தொலை' என்று வழி விட்டால்தான் உண்டு. இப்போதும் மாடுகளுக்கான ராஜ மரியாதை தொடர்கிறது.
(இன்னும் சொல்வேன்)

Tuesday, July 17, 2007

ஆடு மாடுகளின் வாழ்க்கை

ஆடு, மாடுகளின் வாழ்க்கை சுவாரஸ்யமானது. பட்டிகளில் கிடக்கும் ஆடுகள் 'சிவாஜி' படம் பார்க்க, முதல் நாள் டிக்கெட் கிடைத்த மகிழ்ச்சியை ஒத்துக்கிடக்கின்றன. புல்வெளிகளில் மேயும் மாடுகள் விண் வெளியில் உலாவுதாக நினைக்கின்றன. அவரவர்களுக்கான சுதந்திரம் அவரவர்களுக்கான ம்னதை பொருத்தது. எனக்கும் இந்த ஜீவ ராசிகளுக்குமான உறவு அலைப்பறையானது. திருநெல்வேலியின் மூலையில் இருக்கிற எங்கள் கிராமம் மாடுகளால் சூழ்ந்தது. கிழக்கு மேற்கு , தெற்கு,வடக்கு என எங்கு திரும்பினாலும் ஆடு மாடுகள் சாவாகசமாக அலைந்து கொண்டிருக்கும். அலைந்து கொண்டிருக்கும் என்பது கூட கொஞ்சம் நாகரிகம் கருதி சொல்லும் வார்த்தைதான். டவுண் பஸ்காரர்கள் பாஷையில் சொல்வதென்றால் 'ஆக்கங்கெட்டதுவோ எப்ப பார்த்தாலும் நம்ம பிராணனை வாங்குதுக்கே வருதுவோ".
காலையில் பத்து மணிவாக்கில் மாட்டுக்காரர்கள் மேய்ச்சலுக்கு தயாராகிவருவதே ஏதோ போருக்கு போவது போலத்தான் இருக்கும்.
''ஏல...ஆத்துக்கு மேப் பக்கம் மாட்டை பத்திராதே, சுப்பையா தேவன் நேத்தே பொலம்பிட்டு இருந்தான் வயல்ல விழுந்துட்டுன்னு. பாத்துக்கோ. இல்லைனா அவன் எழவுல நிக்க முடியாது" என்று ஒரு பெரிசு காது கிழிய கத்தும்... சுவாரஸ்யங்களை மீண்டும் தொடவேன்.