சூச்ச மாடனுக்கு இதைக் கண்காணிக்கிறதோட சரி. வயல்ல விழுந்த மாடுவோ எவன் பேச்சுக்கும் நிக்காது. என்னதான் காட்டுக்கத்தல் கத்தினாலும் 'போடா நீயும் ஒன் சத்தமும்'ங்கற மாதிரி தான் இருக்கும். சூச்ச மாடனாலும் சரி, பரம்சம்னாலும் சரி. ஒண்ணும் பண்ண முடியாது.
அதுக்கெல்லாம் நொய்யன்தான். அடங்காத மாடுவோ கூட இவனோட சத்தத்துக்கு சரண்டராயிரும். அப்படியொரு அதிகார சத்தம். மாடுவோளுக்கு அவன் சத்தம் மட்டும் ரொம்ப புடிக்குதோ என்னவோ. வயல்ல விழுத மாடுவோ, இவன் ஒரு கத்து கத்துனா தலைய குனிஞ்சுகிட்டு வெளிய வந்துரும். ஒட்டாங்காளைலு சிலது எவனுக்கும் கட்டுப்படாது. தலைய சிலுப்பிக்கிட்டு பாடாப்படுத்திப் போடும். வீட்ல பொம்பளைலுவோ தண்ணி, வைக்கலு வைக்க போவ முடியாது. கோவமா பாய்ஞ்சு முட்டிப்போடும்.
இப்படித்தான் மாடசாமி புதுசா வாங்குன ஒட்டங்காளைல ஒண்ணு அடங்காமா அலைஞ்சது. அவனால வண்டியில கெட்ட முடியலை. இது வலப்பக்க காளை. வண்டி ஒட்டுதவனுக்கு வலப்பக்க காளை முக்கியம். இது இப்படி அடங்காம இருந்துச்சுன்னா என்ன பண்ண முடியும்? அன்னா இன்னான்னு என்னென்னமொ செஞ்சு பாத்தான். அடங்கலை.
ஒரு நாளு தற்செயலா மாட்டைப் பத்திட்டு போய்ட்டிருந்த நொய்யன், இந்த மாட்டை பாத்தான். போற போக்குல அது முதுவுல ஒரு தட்டு தட்டுனான். காளை, திரும்பி பாத்துட்டு பேசாம நின்னுது. மாடசாமிக்கு ஆச்சர்யம் தாங்கலை. ஒரு பயலையும் கிட்ட சேக்காத பய மாடு, இவனை மட்டும் ஒண்ணும் பண்ணலையேன்னு மூக்குல விரலை வச்சான்.
நொய்யனைக் கூப்ட்டு வெஷயத்தை சொன்னான்.
'ரெண்டு நாளு எங்கிட்ட மேய்ச்சலுக்கு பத்து; பாத்துக்கிடுதம்'னான். மொத நாளு அது போற போக்குல விட்டாம். ரெண்டாவது நாளு முதுவுல தடவி, அது இதுன்னு வசக்கிட்டாம்.
மாடசாமி வீட்ல விடும்போது, நாலஞ்சு கொடம் தண்ணிய வாங்கி, நல்லா குளிப்பாட்டுனாம். கூடவே மாடசாமியையும் நிக்க வச்சாம். இவன் ஒரு பக்கம், அவன் ஒரு பக்கம்னு மாட்டை தேச்சாவோ. இதே போல மறுநாளும். பய மாடு இப்ப வசங்கிப் போச்சு. மாடசாமிக்கு சந்தோஷம் தாங்க முடியலை. உடனே அம்பாசமுத்ரம் போயி, எட்டு முழ வேட்டி ரெண்டு, தேங்காப்பூ துண்டு ரெண்டுன்னு வாங்கிட்டு வந்து கொடுத்தாம்.
'இதுலாம் நமக்குள்ள எதுக்குன்னே'
'ச்சே...புடிடா...நான் என்னமோ மாடுதானேன்னு விட்டுட்டேன். இதுல நிறைய விஷயம் இருக்குன்னு இப்பலாடா தெரியுது. நெறய வெலை கொடுத்து வாங்குன மாடு, அடங்கமாட்டேங்க, வித்துரலாம்னுலா நெனச்சேன்'
'அதுலாம் ஒண்ணுமில்லனே...நம்ம கிட்ட வந்தது அடங்காம எங்க போயிரும்'னு சொல்லிட்டு அதை வாங்கிட்டு போனாம்.
இதே போல மணிமுத்தாறு பக்கத்துல இருந்து சீதைக்கா ஒரு எருமைய வாங்கிட்டு வந்தா. வந்த நாள்ல இருந்து அதுகிட்ட பால் கறக்க முடியல. போனா காலால ஒரே போடு. கீழ உக்காந்து காம்புல தண்ணிய ஊத்துனா அடுத்த நிமிஷமே அங்க இங்கன்னு கட்டுல நின்னு ஆட ஆரம்பிச்சுடுது. ஆனா, கன்னுகுட்டி வந்து குடிச்சா மட்டும் பேசாம நிக்கி. சீதைக்கா என்னென்னமோ பண்ணி பாத்தா. முடியல.
நொய்யனை கூப்டா. மொதல்ல கன்னுகுட்டிய பூரா குடிக்க விட்டாம். அந்தானி, கன்னுக்குட்டிய கெட்டிப் போடாம பக்கத்துலயே நிக்க வச்சுக்கிட்டு, முதுவுல தடவுனாம். பெறவு செத்த நேரம் அப்படியே நின்னுட்டு, கீழ குனிஞ்சு காம்பை மெதுவா தொட்டாம். அவளுக்கு ஆச்சரியம். மாடு ஒண்ணும் செய்யலை. இருக்கத பாலை கறந்தாம். கொஞ்சம்தான் இருந்ததுன்னாலும் அடுத்தாப்ல சீதைக்கா போனதும் பாலை கொடுக்க ஆரம்பிச்சுட்டு. இதை போல நொய்யனுக்கு ஏகப்பட்ட மாட்டு அனுபவம் இருக்கு.
நொய்யனுக்கு என்ன வயசிருக்கும்னு நினைக்கியோ. ஒரு நாப்பது, நாப்பத்தஞ்சு. ம்ஹூம். சிரிக்க கூடாது. இருபத்தஞ்சுதான். இளவட்ட பய. சின்னஞ்சிறுசுலயே மாட்டோட மாடா மேஞ்சு, இன்னைக்கு மாடு விஷயத்துல ஊருக்குள்ள பெரிய ஆளா இருக்காம். அவனுக்கு எந்த ஊரு, யாரு பெத்த பிள்ளைனெல்லாம் வயசான ஆளுங்களுக்கு மட்டும்தான் தெரியும். அவன் சின்ன வயசுல முத்தையா கோனார் வீட்ல மாடு மேச்சுட்டு இருந்தாம். சில பேரு என்ன சொல்வாவோன்னா... யார்ட்டயும் சொல்லாதீங்க.
முத்தையா கோனாரு தோப்புல வேலை பாக்க, ஒரு பொம்பளை இருந்தாளாம். தோப்புக்குள்ளேயே ஒரு குச்சிலு அவளுக்கு. இவரு போனார்னா அங்கதான் சாப்பிடுவாராம். அவளுக்கும் இவருக்கும் தொசுக்கு இருந்துச்சாம். அவளுக்கு பொறந்த பிள்ளைதான் நொய்யனாம். சாதி பிரச்னைல அவன் அம்மாவ முத்தையா பொண்டாட்டி விரட்டி உட்டுட்டாளாம். இது எந்த அளவுக்கு உண்மைன்னு தெரியாது. ஆனா, ஊருக்குள்ள முன்னால பேசிக்கிடுவாவோ. இப்ப இவன் வளந்துட்டதால அவரு வீட்டு தொழுவுலயே தனியா சின்ன குச்சிலை கொடுத்து, 'இதுல இருந்துக்கோ. வீட்ல இருக்க மாட்டை மேய். கூட ஊர்ல யார் மாட்டையாவது மேச்சி சம்பாதிச்சுக்கோ'ன்னு பெரிய மனசு பண்ணி சொல்லிட்டாராம்.
ஒரு தடவை கடனாநதி ஆத்துல சரியான வெள்ளம். ஊருக்குள்ள தண்ணி வந்துட்டு. வயக்காட்டுல இருக்கத முத்தாரம்மன் கோயிலு முங்குத அளவுக்கு வெள்ளம். மஞ்சளும், காவியும் சேர்ந்த கலர்ல தண்ணி. எல்லாரும் வெள்ளம் பாக்க ஓடுதாவோ.
செடி, செத்தை, தென்னை, பனை மரம், குடிசை வீடுன்னு வெள்ளத்துல அடிச்சுட்டு போவுது. நல்ல பாம்புவோ தலைய தூக்கிட்டு தண்ணியில நீந்த முடியாம அது இழுக்குத இழுவைக்குள்ள போய்ட்டு இருக்கு. ஊரே அங்க இங்க நின்னு வேடிக்கை பாக்கு. அப்ப நொய்யன் சின்ன பய. முத்தையா கோனார் வீட்ல மாடு மேய்ச்சிட்டிருக்கான். சின்ன வாய்க்கா பக்கத்துல நின்னு வேடிக்கை பாக்க வந்தான். பாத்துக்கிட்டிருந்த பய திடீர்னு பாலத்துல இருந்து தண்ணிக்குள்ள விழுந்துட்டாம். சரியான ஆழம். கீழ கல்லு. முங்குன பயலை செத்த நேரம் ஆளை காணலை.
அந்தானி, வேடிக்கைப் பாத்துட்டிருந்த பட்சித்தேவரு மவன் முத்து, பரம்ச நம்பியாரு மவன் குட்டி, இன்னும் ரெண்டு பேருன்னு கரையில இருந்து வெள்ளத்துல இறங்கி தேடுனாவோ. என்னதான் வெள்ளம்னாலும் உசுரு போனா வருமா? அதுவும் ஊருக்கே வேண்டிய பய. தேடு தேடுனு தேடி, பெறவு கெழக்க தள்ளி ஒரு வாசமடக்கி மரத்தை புடிச்சுக்கிட்டு, பாதி செத்து போய் கெடக்காம். உடனே அவனை தூக்கிட்டு வந்து, மாட்டு வண்டியில போட்டு அம்பாசமுத்ரம் கொண்டு போனாவோ. பய மயங்கி போனாம். போன இடத்துலதான் தெரிஞ்சது. கால் எலும்பு முறிஞ்சு போச்சுன்னு. கட்டு போட்டு, வைத்தியம் பாத்தாரு முத்தையா கோனாரு. கொஞ்சம் கொஞ்மா தேறி வந்தான். ஆனாலும் பயலுக்கு இன்னும் சரியா நடக்க முடியாது. வலது காலை நொண்டி நொண்டிதான் நடப்பான். அதனால அவனுக்கு வேண்டாதவோ அவனை நொண்டின்னுதான் கூப்டுவாவோ.
நாளைக்கு முடிச்சிருவேன்.
9 comments:
ரொம்ப வித்தியாசமா ரொம்ப நல்லா இருக்கு. அவ்வளவு சீக்கிரம் முடிச்சுடாதீங்க.
உடனே முடிக்கணுமா?
எதுக்கு இந்த ஒட்டம்?
நிதானமாவே எழுதலாம்.
இலவசக்கொத்தனார், துளசிம்மா நன்றி. எனக்கு ரொம்ப வெக்கமா இருக்கு. நல்லாயிருக்குன்னு சொல்லிட்டீங்களே... ஓ.கே. இதை முடிச்சாதானே...அடுத்த கேரக்டரை எழுதலாம்.
Came from Valli's Blog. Eppadi iththanai nala kannile padama irunthuinganu puriyalai. arumaiyana ezuthu nadai. Ki.Raa.Iyea maathiriye irukku ezuththu, antha mannukku intha vasanai varumo? Great! Sorry for English. ithu vere orutharoda Computer. No tamil fonts downloaded for tamil typing.
நல்லாருக்கு அண்ணாச்சி.
அண்ணாச்சி என்ன இப்படி 'பொசுக்'னு முடிக்கிறேன்னு சொல்லிட்டிய. எங்களுக்காக, எழுதுறதுக்குனு கூடக்கொஞ்ச நேரம் ஒதுக்கினியள்னா நல்லாருக்கும்.
http://veyilaan.wordpress.com
கீதா மேடம்,
உங்க வருகைக்கு நன்றி. கி.ரா. ஐயா மாதிரியே இருக்குன்னு சொல்றீங்க. நானெல்லாம் எழுத ஆரம்பிச்சதுக்கு அவர்தான் காரணம். அவர் எழுத்தை படிக்கலைன்னா, நமக்கும் எழுத்துக்கும் சம்பந்தமில்லைன்னு இருந்திருப்பேன். நன்றி.
வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம். ஓ.கே.
பெரும்பாலான(?!) வாசகர்களின் வேண்டுகோளுக்குக்கிணங்க இன்னும் இரண்டு மேட்டராக நொய்யன் தொடர்வான்.
///வெயிலான் ஐயா, என்ன கொஞ்ச நாளா ஆளைக் காணோம் ///
நானும் நொய்யான் கூடமாட மேய்ச்சக் காட்டுக்கு வந்து போய்க்கிட்டு தான் இருக்கேன்.
http://veyilaan.wordpress.com
மேயுங்க...மேயுங்க...
Post a Comment