Thursday, September 27, 2007

நொய்யன் - 4

இவன் எதை பத்தியும் கவலைப்பட மாட்டான். எவனாது நொண்டின்னு கூப்டாம்னா சும்மா ஒரு பார்வை. அதுல கோவம் இருக்கா? அன்பு இருக்கா? எரிச்சல் இருக்கான்னு தெரியாது. கூப்டவனுக்கு ஒரு மாதிரி ஆயிப்போவும். ஏண்டா கூப்டம்னு தோணும்.
அதுக்கு பெறவு கூப்டுவானுவலா... மாட்டனுவோ.

நொய்யனுக்கு கல்யாணத்தை பண்ணி வைக்கணும்னு குத்தால நம்பியாரு ஊருக்குள்ள சொல்லிட்டு அலைஞ்சாரு. பெத்தவா இருந்தாலே, 'என்ன சேத்து வச்சிருக்காம் கல்யாணம் பண்ணன்'னு கேப்பாவோ. இவனுக்கு யாரும் இல்லை. வளத்த முத்தையா கோனாரு, உம்பாட்டை நீ பாத்துக்கோன்னு விட்டுட்டாரு. இனும எவன் பொண்ணு கொடுப்பாம்? கொடுக்க வந்தாலும் இவங்கிட்ட என்ன இருக்கு நாலஞ்சு மாட்டைத் தவிர? இருக்குத குச்சிலு, முத்தையா கோனாரு கொடுத்தது. அதுவும் எழுதியா கொடுத்திருக்காரு. இல்லை. நாளைக்கு அவரு மவனுவோ வில்லங்கத்தை கெளப்பி, இருக்கத வீட்டையும் காலி பண்ண சொல்லிட்டானுவோன்னா? ஊர்ல வில்லங்கத்தை உசுப்பி விடவே ஆயிரம் பேரு இருக்கானுவோ. இதுல, வலதுகாலை வேற இழுத்து இழுத்து நடக்காம்.

குத்தால நம்பியாரு, முத்தையா கோனார்ட்ட கல்யாணம் பத்தி சொன்னதும், அவரு ஒண்ணும் சொல்லலை. நொய்யன் கூட சேந்த பயலுவோலுக்கெல்லாம் ஏற்கனவே கல்யாணமாயி புள்ளைக் குட்டியலு இருக்கு. இவன் அதை பத்திலாம் நினைக்காம இருக்கானேன்னு ஊருக்குள்ள சொல்லுதாவோ.

ஒரு நாளு முத்தையா கோனாரு அவன்ட்ட கேட்டாரு. 'ஏய்...கீழ புலியூர்ல சொந்தக்கார புள்ள இருக்கு. கஷ்டப்படுத குடும்பம்தான். கெட்டிக்கிடுதியா? சொன்னா நாளைக்கே போய் பேசிட்டு வந்துருவேன்'ன்னார்.
'இங்க பாருங்க. நானுண்டு மாடுண்டுன்னு இருக்கேன். எனக்கு கல்யாணமும் வேண்டாம். ஒரு மண்ணும் வேண்டாம். கேட்டேளா?'ன்னான் நொய்யன். அதோட முடிஞ்சு போச்சு. பெறவு யாரும் கல்யாணத்தைப் பத்தி பேசுதது இல்ல.

ஆனா, கொஞ்ச நாளா நொய்யங்கிட்ட மாறுதலு தெரியுது. மாடு மேய்க்க போற எடத்துல சரியா யாருகிட்டயும் பேசமாட்டக்காம். வழக்கமா ஒரு வாரம் ஒரு எடத்துல மாடு மேய்க்க போனா, அடுத்த வாரம் வேற எடத்துக்குப் போறதுதான் வழக்கம். இப்பம் பூவங்குறிச்சி கொளத்து பக்கத்துலதான் அடிக்கடி மாட்டை உடுதாம். ஆடு மாடு மேய்க்குத எல்லா பயலுவோலையும் ஒண்ணா கூட்டிக்கிட்டு அலையுத பய, இப்ப தனியா போறததைதான் விரும்புதானாம். ரயில்வே கேட் தாண்டி மாடுலாம் போவும்போது, 'ஏலே நீங்க எங்கயாவது போய் மேயுங்க; நான் கொளத்து பக்கம் போறேன்'ன்னு சொல்லுதானாம். சொல்லிட்டு அவன் பாட்டுக்குப் போய்ட்டிருக்காம். இப்படி சொன்ன பெறவு யாராவது அவங்கூட போவ முடியுமா?


இருந்தாலும் சூச்சமாடனுக்கு சந்தேகம். கூட்டாளியட்ட, 'அப்படி என்னல ஆச்சு இந்த பயலுக்கு?'ன்னு பேச்சு.
வழக்கமா பூவங்குறிச்சி கொளத்து பக்கம் சராயம் காய்ச்சுவாவோ. அதுக்கும் இந்த பயலுக்கும் சம்பந்தமில்லையே... வேறெதுக்கு அங்க போறாம்?
இவனுவோலுக்கு இருக்க முடியல.

'மூதி நல்லாத்தானல இருந்தாம். என்னாச்சுல'

'யார் கண்டா? சும்மாவே வல்லுனு விழுவாம். இப்பம் அவங்கிட்ட பேச முடியுமா சொல்லு?'

'அதுக்காவ விட்டுரமுடியுமால; ஒண்ணுக்கெடக்க ஒண்ணு ஆயிப்போச்சுன்னா...'

'என்ன ஆவுங்க?'

'ஏல, நயினாரு மவன் இப்படித்தான் திடீர்னு பைத்தியக்காரன் மாதிரி அலைஞ்சாம். என்னாச்சு பாத்தல்லா?'

'என்னாச்சு?'

'மேட்டுத்தெரு புள்ளைய கூட்டிட்டுப் போயி, கேவலப்பட்டது தெரியாதால'

'அதுக்கு அவனயும் இவனையும் ஒண்ணா சேத்துர முடியுமால'

'இங்கேரு...இப்பலாம் எந்த பயலையும் நம்ப முடியல'

பேச்சு போய்க்கிட்டிருந்தது. பயலுவோலாம் ஒரு ஐடியா பண்ணுனானுவோ. அதாவது, நொய்யன் மாடு பத்திட்டு கொளத்து பக்கம் போவுத வரை பேசாம இருக்கணும். நம்ம மாட்டை வேலு கோனாரு வெளையில மேய்க்க பத்திட்டு, ஒருத்தன் அங்க நின்னுக்கிடணும். மத்தவங்க எல்லாரும் இவன் என்ன செய்தான்னு கொளத்துல இருக்குத பொத்தையில மறைஞ்சு பாக்கணும். இதுதான் திட்டம்.

அதே போல போனானுவோ. கொளத்துக்கு போற ரோட்டு பாதியில சின்ன வாய்க்கா இருக்கு. ரோட்டோடி நேரா போனா வேலுக்கோனாரு வெளை. அதுக்கு கீழ்ப் பக்கம் திரும்புனா பாபநாசம் போற ரோடு.
நொய்யன் வழக்கமா என்ன பண்ணுவான்னா...சின்ன வாய்க்காலுக்குள்ள மாட்டை விட்டுருவாம். அதை தாண்டி தென்ன மர கரையோரம் மாடு ஒத்தையடி பாதையில போவும். சுத்தி முள்ளுக்காடு. கொஞ்ச தூரம் போனதும் ரயிலு பாதை இருக்கு. அதை தாண்டி செம்மண் தரை. அந்த பாதை பூவங்குறிச்சி, கருத்தப்பிள்ளையூருக்குப் போவும். அந்த பாதையில ஏறுனா கீழ்ப்பக்கம் எள்ளு வெளை. அதுக்கு பக்கத்துல புல்லு காடு. சும்மா கின்னுன்னு வளந்து கிடக்கும். அதுக்கு மேக்க கொளம். கொளத்து கரையில துண்டு துண்டா நிறைய பாறையோ இருக்கு. எள்ளு காட்டுக்குப் பக்கத்துல சின்னதா ஒரு பனையோலை குச்சிலு. மாட்டை அங்ஙன மேய்க்க விட்டுட்டு, நொய்யன் அதுல போயி, துண்டை உதறிட்டு கட்டைய சாத்துவான் வழக்கமா. இப்பம் என்ன செய்வான்னு பாக்கணும்லா.

ஐடியா படி போயாச்சு. எள்ளு காட்டுப் பக்கத்துல மாடுவோ மேய்ஞ்சுட்டு இருக்கு. இவனுவோ கொளத்து பாறை மேல மறைஞ்சிருந்துகிட்டு குச்சிலை பாக்காணுவோ. அதுல ஈ, எறும்பு இல்ல. சந்தேகம் வலுத்து போச்சு. அர்தலி எங்க போய் தொலைஞ்சாம்?

அந்தானி, தூரத்துல என்னமோ சத்தம் கேக்கு. சுத்தி சுத்திப் பாக்கணுவோ. எங்கயும் ஆள் இல்லை. சத்தம் மட்டும் குசு குசுன்னு வருது. கூடவே சிரிப்பு சத்தம். நாய்க்குட்டி குரை வேற கேக்கு.

சூச்சமாடன்தான் தலைய குனிஞ்சுக்கிட்டு பாறைய விட்டு வெளிய வந்தான். பூனை மாதிரி நடந்தான். குச்சில்ல யாரும் இல்ல. கழுத்தை தூக்கி எள்ளுக்காட்டுக்குள்ள பாத்தா ரெண்டு தலை தெரியுது. திக்குன்னு ஆயிப்போச்சு அவனுக்கு.

நாளை முடிக்கிறேன்.

4 comments:

துளசி கோபால் said...

நொய்யனுக்கு,

காதல் வந்துருச்சு
ஆசையில் ஓடிவந்தேன்......:-))))

ஆடுமாடு said...

வந்ததுக்கு நன்றி

☼ வெயிலான் said...

சூச்சமாடன் கூட நாங்களும் தான் பார்த்தோம். ஒண்ணும் தெரியலயே?

http://veyilaan.wordpress.com

ஆடுமாடு said...

வாங்க வெயிலான் ஐயா.கொஞ்சம் வெயிட் பண்ணுங்க. நல்லா தெரியும்