Monday, October 1, 2007

நொய்யன் 5

ரெண்டு தலையிலயும் தலைப்பா இருக்கு. ஒரு சைடுல துண்டோட குஞ்சலம் தொங்குது. நம்மள வேற எடத்துக்கு மாட்டைப் பத்த சொல்லிட்டு இங்க அப்படி யாரு கூட நொய்யன் பேசிக்கிட்டிருக்கான்?ன்னு சூச்சமாடனுக்கு மண்டைக்குள்ள கொடச்சல்.

தலை தூக்கி தூக்கிப் பாக்கான். மொகம் சரியா தெரியமாட்டேங்கு. எள்ளுக்காட்டுக்குள்ள நுழையற எடத்துல ஒத்தை பனை ஒண்ணு நின்னுது. சூச்சமாடன் அதுல ஏறி பாத்துரணும்னு போனான். இடுப்பு சாரத்தை இழுத்து கட்டிக்கிட்டு, மேல ஏறுனான். பாதி பனைக்கு ஏறுனப் பெறவுதான் தெரிஞ்சது அது பொம்பளைன்னு. மஞ்சள்ல பூப்போட்ட தாவணி போட்டிருக்கு. தலையில சீசன் துண்டி கட்டிருக்கு. பக்கத்துல பல்லைக்காட்டிக்கிட்டு உக்காந்திருக்காம் இந்த பய. கொஞ்ச நாளா யார்கிட்டயும் பேசாம உம்முனு இருந்த பயலுக்கு சிரிப்பை பாரேன். வாரியலை எடுத்து அடின்னு சூச்சமாடன் கீழ இறங்குனான். சந்தேகப்பட்டது சர்தாம்.

கீழ, கூட மேய்ச்சலுக்கு வந்த பயலுவோ நின்னானுவோ. விஷயத்தை சொன்னாம் சூச்சன்.

'இங்க எந்த புள்ளைல வரும்?'

'ஏல இதுக்கு அடுத்தாப்ல இருக்கது கோவங்கொளத்துக்காரன் வயலு'

'ஆமா. மரியம் வயலு'

'அப்பம் அந்த புள்ள அவன் மவதாம்ல. பாத்தா அவ மாதிரிதாம் தெரியுது'

'அது ஏம் இங்க வருது'

'சோளக்காவலுக்கு'

'நல்ல காவலுதாம்ல'

'இதென்னல இப்படிப் போயி பழக்கத்தை வச்சுட்டாம்'

'சும்மாவே ஊர்ல வெவாரம் வேற மாதிரி போய்ட்டிருக்கு. இவன் கொலை வழக்குல கொண்டு போய் வுட்டுருவானோ'

'நம்ம யாருகிட்டயும் சொல்லிரக்கூடாது. நொய்யங்கிட்ட நைசா பேசிப்பாப்போம் என்ன சொல்லுதாம்னு. இப்பம் சத்தம் போடாம போவும்'
போனாவோ. சாயந்தரம் மாட்டை தொழுவத்துல கட்டிட்டி சூச்சமாடன் அப்பத்தா கடைக்கு வந்தாம். எல்லா பயலுவோலும் வந்துட்டாவோ. இந்த பய இன்னும் வரலை.

அப்பத்தா வழக்கம் போல, 'கொஞ்ச நாளா யாவாரமே சரியில்லைடே'ன்னாம்.
'ஆமா, அம்பத்தைஞ்சு குடும்பம் இருக்கு ஊர்ல. இதுல எழுபத்திரண்டு கடைய தெறங்கோ. உங்களுக்கு யாவாரம் இருக்கும்? ஒண்ணுமில்லனா கூட டீக்கடைய தெறந்துருதானுவோ'ன்னு சூச்சமாடன் பேசிக்கிட்டே இருக்கும் போது, நொய்யன் வந்தான். வந்ததும் எல்லாரும் அவனை பாக்காவோ.
காரணம் என்னன்னா என்னைக்கும் இல்லாத அதிசயமா இன்னைக்கு அவன் மொகத்துல பவுடர் போட்டிருந்தாம்.

சூச்சனுக்கு, அவன் முன்னால ஒருதடவை சொன்னது ஞாபகம் வந்துச்சு:
'நமெக்கெதுக்குல அதுலாம். இந்த மாடு ,தொழுவு, சாணம்னு நாத்தத்தோட வாழுதோம். நமெக்கெதுக்குல பவுடரு, மண்ணுனு'.

இப்பம் எப்படி இப்படி மாறிப்போனாம்?

நொய்யன் வந்து உக்காந்ததும் ஒவ்வொருத்தனும் ஒருத்தரு மொகத்தை ஒருத்தரு பாத்துக்கிடுதானுவோ. சூச்சங்கிட்ட கண்ணை காட்டுதானுவோ. அதுக்கு அர்த்தம் என்னன்னா, வாய்க்காலுக்கு போயி நொய்யங்கிட்ட விசாரிக்கணுங்கறது.

சரின்னு கொளம்புனாவோ. புள்ளையாரு கோயிலு வாய்க்கா திண்டுல உக்காந்தாச்சு. சூச்சன் மெதுவா ஆரம்பிச்சாம்.

'ஏல ஏம் இப்ப எள்ளுக்காட்டு பக்கத்துல மாட்டை மேய்க்கடே'

'சும்மாதான்'

'சும்மாதாம்னா...வெறதுவும் கதை இருக்கா?'

'வெறென்ன கதை'

'அது உனக்குதாம் தெரியும்'

'ஒரு கதையுமில்ல. வேற பேச்சை பேசுல'

'எங்களுக்கு தெரியாதுன்னு நெனக்காத'

'என்னல தெரியும் உங்களுக்கு'

அந்தானி சண்டை வந்துட்டு, நொய்யன் சூச்சனை ஓங்கி கீழ தள்ளிட்டு, 'இனும எங்கிட்ட யாரும் பேசாண்டாம். உங்க வழியில நீங்க மாட்டைப் பத்திட்டு போங்க. இவன் அங்க இங்க போறாங்கதுலாம் தேவையில்லாதது ஆமா. சொல்லிட்டேன்.'

சூச்சனுக்கு சுள்ளுனு கோவம் வந்தது. மத்த பயலுவோ அடக்கிட்டானுவோ. 'இதை இப்படியே உட்டா நாளைக்கு ரெண்டு ஊருக்கும் சண்டை வந்துதான் நிக்கும். பேசாம முத்தையா கோனார்ட்ட சொல்லிர வேண்டியதாம்'
சூச்சமாடங்கிட்ட ஒருத்தம் சொன்னாம்.

'வாங்க போலாம்'னு கிளம்புனாவோ. எதுத்தாப்ல முத்தையா கோனாரு வந்துட்டிருந்தாரு.

முற்றும். அப்பாடி முடிச்சுட்டேன்.

6 comments:

துளசி கோபால் said...

என்னத்தை முடிச்சீங்க?

ச்சிண்டையா?:-))))

சஸ்பென்ஸ் இனிமேத்தான் இருக்குபோல.

விவரமாச் சொல்லிறணும்.ஆமா.......

ஆடுமாடு said...

ஐயோ துளசிம்மா அவ்ளோதான். முடிவை நீங்க தீர்மானிச்சுக்குங்கோ. எல்லாத்தையும் நானே சொல்லிரணுமா?

இலவசக்கொத்தனார் said...

என்னங்க இப்படி அம்போன்னு விட்டுட்டீங்க?

ஆடுமாடு said...

வாங்க இலவசகொத்ஸ் சார். அம்போன்னு எங்க விட்டேன். அப்புறம் நடக்கறதை நீங்க யூகிச்சுக்கங்க.

☼ வெயிலான் said...

என்ன இப்படி 'பொசுக்'ன்னு முடிச்சுட்டு எந்த வண்டிக்கு போறீங்க?

சொச்சத்தையும் சொல்லீட்டுப் போங்க.

- வெயிலான்
http://veyilaan.wordpress.com

ஆடுமாடு said...

வெயிலான் ஐயா, கொஞ்சம் பொறுங்க. அடுத்த கேரக்டர் வந்துட்டே இருக்கு.