Friday, September 21, 2007

நொய்யன் 2

என்னதான் காடு, கரைன்னாலும் வாழ்க்கைன்னு ஒண்ணு இருக்கும்லா. சூச்சமாடனுக்கு லெட்சுமி புள்ள மேல ஒரு இது. என்னதான் தூரத்து மொறன்னாலும் இவனுக்கு அவளைப் பாத்தா உதறல் எடுக்கத்தான் செய்யும். ஏம்னு தெரியாது. அவ்வோ வீட்ல நாலு மாடு. இவன் மாட்டோடதான் மேய விட்டுருக்காவோ. ஒரு நாளு அம்மங்கோயிலுக்கு கீழ்ப் பக்கம் மாடு மேய்ச்சுட்டு நின்னான் நொய்யனோட. ரெண்டு பேரும் நல்லாதான் பேசிட்டு இருந்தாவோ. திடீர்னு பாத்தா சூச்சமாடனுக்கு காலு கையெல்லாம் நடுங்க ஆரம்பிக்கு. மொகம் கோணுது. திடீர்னு திரும்பி நின்னுக்கிடுதாம். தலைய கீழ பாத்துக்கிடுதாம். எங்கயிருந்துதான் வெக்கம் வந்து தொலைக்கோ மூதிக்கு.
'ஏம் இப்படி ஆவுதாம்?னு நொய்யனுக்கு புடிபடலை.

'ஏல என்னாச்சு'ங்கான்.

'ஒண்ணுமில்ல. சும்மா இருல'ன்னு பதில் சொல்லுதான்.

ஆனா, அதே நடுக்கம்.

அந்தானி, எதுத்தாப்ல பாத்தா இந்த புள்ள வருது.

அதுவும் இவனை பாத்தும் பாக்காத மாதிரிதான் போவுது. தலை கீழ போய் கிடக்கு. இடுப்பு கொடத்தை கொஞ்சமா சாய்ச்சி, இவன் மொகத்தை மெல்ல பாக்கு. வரப்புக்குள்ள தத்தக்கா பித்தக்கான்னு அது நடந்து வரும்போதே புள்ளைக்கு பேய் கீய் புடிச்சிருக்குமோன்னுதான் தோணும்.
அப்பதான் நொய்யனுக்கே வெஷயம் புரியுது.

'ஏல ஆம்பளையால நீ. பொம்பளை புள்ளைய பாத்ததும் இப்படி ஒதறல் எடுக்கு ஆக்கங் கெட்டவனே... மூஞ்சியில வக்கு'ன்னான்.

'என்னன்னே தெரியலைல அந்தப் புள்ளைய பாத்தா மட்டும் எனக்கு இப்படியாவுதுல'

இதுக்குப் பெறவுதான் வெஷயம் ஊருக்கு தெரிஞ்சு, அந்த புள்ள வீட்லயும் கண்டும் காணாமயும் வுட்டுட்டாவோ. இப்ப மூதியோ ரெண்டும் அங்க இங்க நின்னு யாருக்கும் தெரியாம பேசிக்கிடும்.

நொய்யனுக்கு இந்த காதலு கீதலு எதுவும் வந்ததில்லை.
முத்தாரம்மன் கோயில் கொடைக்கு கெரகாட்டம் ஆட வந்த தென்காசி காரிய பாத்துதான் ஒரு தடவை கெறங்கி இருக்காம்.

'ஏல அம்சமா இருக்கால. கெட்டுனா இவளை போல பிள்ளையதாம்டா கெட்டணும்'ன்னான்.

அவ அன்னைக்கு ஆட்டத்தோட போயிட்டா. பெறவு அவனுக்கு காதலும் இல்லை. கத்தரிக்காயும் இல்லை. அவன் உண்டு மாடு மேய்க்கது உண்டுன்னு நிம்மதியா இருக்காம்.

ப்பத்தா டீக்கடையில கொஞ்ச வம்பளத்துட்டு, கெளம்புவானுவோ. வீட்டுக்கு போயி கொஞ்சம் நீத்தண்ணியோட கஞ்சிய குடிப்பானுவோ. வீட்ல இருக்குத ஆளு, தூக்கு சட்டியில பழைய சோறை போட்டு வச்சிருப்பாவோ. அந்தானி, தொழுவுக்கு போயி மாட்டை அவுத்துவிட்டு,
க்கியே...ன்னு ஒரு சத்தம். கிளம்பிரும் மாடுவோ.

யாரு யாரு வீட்டு மாட்டையெல்லாம் கூட சேத்துக்கிடணுமோ அந்தந்த மாடுவோ மந்தைக்கிட்ட வந்துரும். கீழ தெருவுலயிருந்தும் மேல தெருவுல இருந்தும் மாடுகளோட மேய்க்கிதவனுவோ வருவானுமோ. கீழ தெருவுல சுப்பையா கோனார் வீட்ல மட்டும்தான் அம்பது செம்மறி குட்டி இருக்கு. அதை மேய்க்கதுக்கு அவரு மவன் பரம்சம் வருவான்.

மந்தைல சின்னான் ஒரு பெட்டிக்கடை போட்டிருந்தான். மாட்டையெல்லாம் மந்தையில விட்டுட்டு இந்தக் கடையில உக்காந்துகிடுவானுவோ. ஊர்க்கதை, ஊர்வம்பு, இல்லாதது பொல்லாததுன்னு கதை நடக்கும். ஆளாளுக்கு கதையடிப்பானுவோ.

எல்லாரும் வந்த பெறவு, நொய்யன்தான் கெளம்பலாம்னு சொல்லணும். அவனுக்கு மட்டும்தான் உத்தரவு சொல்ல அதிகாரம். அவன் எப்ப சொல்லுதானோ அப்பதான் கெளம்பணும்.

கதை நடந்துக்கிட்டிருக்கும்போதே , 'எல்லாரும் வந்தாச்சாப்பாம்'பான் நொய்யன். எல்லாரும் ஒரு பார்வை பாத்துக்கிடுவாவோ. வந்தாச்சுன்னா கெளம்பல்தான். மாடுகளை ஒண்ணா சின்ன வாய்க்கால் வழியா உடுவானுவோ. தண்ணிக்குள்ள முங்கி கரையில ஏறும். இரண்டு கரையிலயும் தென்னம்பிள்ளைங்க. கீழ வயக்காடு. அதுல இருக்குத பச்சைய பாத்துட்டுவோன்னா, கள்ளப்பய மாடுவோ மாட்டுக்காரனை விட்டுட்டு தொப்புன்னு உள்ள குதிச்சு, வயக்காடை உண்டு இல்லைன்னு பண்ணிரும். அதனால அதை கவனிக்கது சூச்சமாடன் வேலை.

இன்றைய அரை மணி நேரம் முடிந்தது. நாளை முடிக்கிறேன்.

1 comment:

ஆடுமாடு said...

வருகைக்கு நன்றி