Saturday, July 9, 2016

ஆதலால் தோழர்களே 10


அக்ரஹாரத்தில் இருந்த பியர்லஸ் லட்சுமியம்மாள் வீட்டில் கூட்டம் கூடியிருந்தது. கூட்டம் அதிகமாக இருந்ததால் டிவியை வராண்டாவில் இழுத்து வைத்திருந்தார்கள். ஊரில் மொத்தமே நான்கைந்து வீட்டில் தான் டிவி இருந்தது. கிழக்கே, திருநெல்வேலி தபால் ஆபிசில் வேலை பார்க்கும் கருப்பசாமி வீடு, தெற்கு அக்ரஹாரத்தில் கல்கத்தா ஐயர் வீடு, டாக்டர் வீடு, இந்த லட்சுமியம்மாள் வீடு.


மேலத் தெரு பொம்பளைகள் முழுவதும்,  சேலையை வாயில் வைத்து அழுது கொண்டிருந்தார்கள். தூர்தர்ஷனில் எம்.ஜி.ஆரின் இறுதி ஊர்வ லம் சென்றுகொண்டிருந்தது. ஏகப்பட்ட கூட்டம், போலீஸ்கார்கள் கயிறு கட்டி மக்கள் வெள்ளத்தை சமாளித்துக்கொண்டிருந்தனர். எம்.ஜி.ஆரின் உடலுக்கு ஒவ்வொருவராக அஞ்சலி செலுத்திக்கொண்டிருந்தனர். சிவாஜிகணேசனும், பாலசந்தரும் கூட்டத்துக்கு வெளியே சோகமாக நின்றுகொண்டிருந்ததைப் பார்த்ததும், 'அங்க பாருட்டி சிவாஜி' என்றொரு குரல் கேட்டது. எம்ஜிஆரின் உடலருகே நின்று பாரதிராஜா கையை விரித்து அழுத் தொடங்கினார். அவரை ஒருவர் பின்னால் இழுத்து விட்டார். சத்யராஜ் உள்ளிட்ட இன்னும் சில நடிகர்களும் மலர் வளையம் வைத்து அஞ்சலி செய்துகொண்டிருந்தனர்.
எல்லோரும் டிவியை பார்த்துக்கொண்டிருந்தபோது, கீழத்தெரு கொத்தனார் தங்கபாண்டி வெடித்துவிட்டார்.

'எங்களலாம் விட்டுட்டு போயிட்டேரே ராசா. எங்களுக்குன்னு இனும யாரு இருக்கா?' என்று அவர் போட்ட சத்தத்தில் இன்னும் சிலரும் அழத் தொடங்கினார்கள். சரிந்து விழப்போன தங்கபாண்டியை, பரமசிவம் கைத்தாங்கலாகப் பிடித்துக்கொண்டார். இவர் பிடித்துக்கொண்டார் என்பதற்காகவே அவர் இன்னும் அதிகமாக சாய்ந்து தரையில் விழப் போனார். பழனியும் கணேசனும் சேர்ந்து இழுத்து அவரை எதிர் வீட்டுத் திண்ணையில் உட்கார வைத்தார்கள். ஏங்கி ஏங்கி அழுதுகொண்டிருந்தார் அவர்.

இப்படியொரு அழுகையை லட்சுமியம்மாளும் அவரது கணவர் சங்கர சுப்ரமணிய ஐயரும் எதிர்பார்க்கவில்லை. சிறிது நேரத்துக்குப் பின் கணேசனையும் பழனியையும் அழைத்துக் கொண்டு ஆற்றங்கரையில் உள்ள ஆறுமுகம் தோப்புக்குச் சென்றார் பரமசிவம். அங்கு ஏற்கனவே சுப்பையாவுடன் பேசிக் கொண்டிருந்தார் ஆறுமுகம். எல்லாரும் உறவினர்கள்.

பரமசிவத்தைக் கண்டதும், 'அப்பம் மரத்துல ஏறட்டா?' என்றான் சுப் பையா.
'எந்த தென்னையில ஏறப்போற?'

'வடக்கோர மரத்துல...'

'அதுல, நாலு கொல காய். அதை பறிச்சிராத. கீழ்ப்பக்கமா ஒரு கொல கெடக்கு பாரு... அத பறி'

கீழே நின்று கைநீட்டிக் காண்பித்துக்கொண்டிருந்தார் ஆறுமுகம். வேட் டியை தார்ப்பாய்ச்சி கட்டிக்கொண்டு ஏறினான் சுப்பையா. இடுப்பில் கொடுக்கறுவாள் தொங்கிக்கொண்டிருந்தது.

கீழே விழுந்து கிடந்த சில சில்லாட்டைகளையும் காய்ந்த தென்ன ஓலைகளையும் தரையில் போட்டு அதில் உட்கார்ந்தார் ஆறுமுகம். பின்ன மரத்தில் இருந்து கீழே விழுந்து கிடந்த நான்கைந்து தூக்கணா ங்குருவி கூடுகளை எடுத்து, விறகுக்காக ஒதுக்கி வைக்கப்பட்டிருந்த செத்தைகளில் வீசினார். வரிசையாக நின்ற மரங்கள், இருட்டைப் போல நிழல் படர்த்தி இருந்தது.
பரமசிவம், கணேசன், பழனி எல்லாரும் வட்டமாக அமர்ந்தார்கள். ஆற் றோரக் காற்று இதமாக வீசிக்கொண்டிருந்தது. பரமசிவம் சிகரெட்டைப் பற்ற வைத்தார்.

'பொன்னையா பிள்ளையை ஆட்டைய போட்டு தோப்பை நீரு வாங் கிட்டேரு' என்று ஆரம்பித்தான் கணேசன்.

'ஆட்டைய போட்டனா? குறுக்குல மிதிச்சம்னு வையி, குந்தானிலாம் வந்துரும்' என்றார் ஆறுமுகம்.

'பெறவு நீரு இதெ எப்டி வாங்குனேரு'

'ஏன் மூதி ஒங்கப்பன் தான் அத்தாட்சி கையெழுத்து போட்டான். போயி கேளேன்'

'ஆமா, அவரு ஒருத்தரு' என்ற கணேசன், 'பரம்சம், தெரியுமில்லா, கேளுடே. நாலஞ்சு வருஷத்துக்கு முன்னால ஆத்துல வெள்ளம் வந்ததுலா. வயக்காடு எல்லாத்தையும் மூடிட்டு மணலு. இங்கயிருந்து அம்மன் கோயில் பக்கம் வரை வயலு பூரா மணலுதான். ஈரமணலு. ஒரு வாரம் வரை வயலுக்குள்ள மணலுதான் பாத்துக்கெ. சின்ன பயலுவோலாம் விளையாடதுக்கு இங்க வந்துட்டானுவோ. பெறவு மண்ணை அள்ளதுக்குள்ள பெரும் பாடு. கடனை வாங்கி பயிறு வச்சிருந்தவோ எல்லாருக்கும் சரியான நஷ்டம் பார்த்துக்கெ. அதுல அதிகமா பாதிக்கப்பட்டது பொன்னையா பிள்ளைதான். அவரு பொண்டாட்டிக்கு வேற ஒடம்பு சரியில்லாம போச்சு. ஒரேடியா இப்டி வந்துட்டேன்னு, வேற வழியில்லாம தோப்பையும் வயலையும் விய்க்கலாம்னு முடிவு பண்ணிட்டாரு. ஆத்தரத்துக்கு தேவைன்னு தெரிஞ்ச பெறவு, அவரு கேட்டதையா கொடுக்க முடியும்?. டாமார்னு உள்ள போயி, சவுட்டு ரேட்டுக்கு வாங்கிட்டாரு நம்ம ஆளு' என்று சிரித்தான்.

'இவென் கண்டாம்லா அது சவுட்டு ரேட்டுன்னு'

'சரி விடுல. எத பேச வந்தோம். என்ன எழவே பேசிட்டிருக்கெ?'

அதற்குள் சுப்பையா இளநீர்களைப் பறித்துப் போட்டிருந்தான். தரையில் விழுந்தால் இளநீர் சிதறிவிடும் என்பதற்காக தாழைக்குள் வீசியிருந் தான். கணேசனும் பழனியும் போய் அதை எடுத்துக்கொண்டு வந்தார் கள். பதமாக சீவி, ஒவ்வொருவருக்காகக் கொடுத்தான் சுப்பையா. குடித் து வயிறு முட்டிய பிறகு பெரிய ஏப்பத்தை விட்டார் ஆறுமுகம். மத்தி யானம் சாப்பிட்ட புளித்தண்ணி நெஞ்சுக்குள் ஏறி வாய்க்குள் வந்தது.

'பரம்சிவம் கேள்விபட்டோம் வெஷயத்தை. நீ அந்த சிரிச்சான் பொண்டாட்டி பழக்கத்தை விட்டுருடே. அதுதான் நமக்கு நல்லது. பொம்பள வெவாரம்னு வந்துட்டா, ஒரு பய நம்ம பக்கத்துல நிய்க்க மாட்டாம். அதுமட்டுமில்லாம, கேவலம் பாத்துக்கெ. ரொம்ப அசிங்கமா போயிரும்' என்றார் ஆறுமுகம்.

'ச்சே. நீ வேற. அதெல்லாம் ஒரு மயிரு பழக்கமும் இல்ல. சும்மா அவ்வோ வீட்டுல ஒரு நாளு கை நனைச்சுட்டேன், சிரிச்சான் இல்லாத நேரத்துல. இதை கண்ணு, காது, வச்சு பேசுனா என்ன செய்ய சொல் லுத?' என்று பொய் சொன்ன பரமசிவம், 'அது கூட பரவாயில்ல பாத்துக்கெ, இத வச்சுட்டு தலைவரு ரொம்ப ஏசிட்டாரு பாத்துக்க, அதாம் வருத்தமா இருக்கு' என்றார்.

'தலவரு என்ன சொன்னாரு'

'பிரச்னை வந்துச்சுன்னா, கட்சியில இருந்து நீக்க வேண்டியிருக்கும் னாரு'
'நீ என்ன சொன்னெ?

'நான் என்ன சொல்ல முடியும். பேசாம வந்துட்டேன்'

'சிரிச்சான் பொண்டாட்டியோட நீ பழவுதனா, அது தப்புதான். பழகலை, தலைவரு கட்சிய விட்டு நீக்கிருவோம்னு சொன்னது வருத்தமா இருந் தா சொல்லு, நாளைக்கே வேற கட்சிக்கு போயிருவோம். அதுக் கெல் லாம் கவலப் படாதடே. நம்ம ஒரு முப்பது முப்பத்தஞ்சு குடும்பம் இருக்கோம். எல்லாருமே வேற கட்சிக்குப் போயிருவோம், என்ன சொல்லுத' என்றான்.
'ச்சே... இவ்வளவு நாளா ஒரே கட்சியில இருந்துட்டு வேற கட்சியில போயி சேரச் சொல்லுத?'

'ஆமா. இந்தக் கட்சியில இருந்து என்னத்த சம்பாதிச்சுட்டன்னு சொல்லேன்? ஒங்கூட படிச்சவன்தான பக்கத்தூரு, பறம்பு சுப்பு. இன்னைக்கு அதிமுகவுல பெரிய புள்ளியாயிட்டாம். ஏதாவது பிரச்னைன்னா, அம்பாசமுத்திரம், கடையம் போலீஸ் ஸ்டேஷன்ல அவன் இல்லாம முடியாதுங்கானுவோ. பத்திரம் பதியதுல இருந்து பஞ்சாயத்து வரை அவந்தான் முன்னால நிய்க்காம். என்ன சம்பாத்தியம்ங்கெ... நீ என்ன டான்னா, ஒன் வயலை கூட சும்மா போட்டிருக்கெ?' என்றார் ஆறு முகம்.

'அதுக்காவ, அவன போல என்னைய ஆவ சொல்லுதியோ'

'பின்ன வருமானம்னு ஒண்ணு வேண்டாமாடே. ரெண்டு பொட்ட பிள்ளைல வேற வச்சிருக்கே'.

'செரி, நாளைக்கு கட்சியில இருந்து நீக்கிட்டாவோன்னு வையி, எந்தக் கட்சியில சேரலாங்கெ? அத சொல்லு மொதல்ல' - கணேசன் ஆர்வமாகக் கேட்டான்.

'மொதல்ல நீக்கட்டும் பாத்துக்கிடலாம். நீங்களே நீக்க வச்சிருவியோ போலருக்கெ?'

'இல்ல சும்மா சொல்லு. ஒருவேளை வேற கட்சில சேரணும்னா, எந்தக் கட்சி?'
'திமுகதான்'

'ச்சே... அதிமுகவுல சேருவோம்'

'எம்.ஜி.ஆர் செத்துப்போயிட்டாரு. நாளைக்கு கட்சியில என்ன நடக்கு ம்னு தெரியாது. எனக்கு தெரிஞ்சு இனும சேரணும்னா, திமுகதான் சரின்னு நெனக்கேன்'

'நெனக்கென், நெனக்கன்னுலாம் சொல்லாத. ஒரே முடிவா சொல்லிரு. ஏன்னா, எல்லாருமே கட்சி மாறணும் பாத்துக்கெ' என்றார் ஆறுமுகம்.

இளநீரைக் குடித்துவிட்டு சிறிது நேரம் ஆற்றைப் பார்த்துக்கொண்டிருந்தார் பரமசிவம். எதிர்கரையில் புல்லறுத்துக்கொண்டிருக்கும் பெண்களின் சிரிப்பொலி அவரை அங்குப் பார்க்க வைத்தது. அவர்கள் பேசிக் கொண்டிருந்தது, தெளிவாகக் கேட்டது.

'இன்னைக்கு ஏம்கா நம்ம பொன்னம்மாவ காணல'

'அவா புருஷன் நேத்துதான் பம்பாய்லருந்து வந்திருக்காம்'

'வெளிநாட்டுல இருக்கதாலா சொன்னாவோ'

'பம்பாயி வெளிநாடுதான, தாயி'

'என்னமோ யாரு கண்டா?'

'புருஷன் வந்துட்டாருன்னா, இன்னும் நாளு நாளைக்கு அவள வெளியில பாக்க முடியாது'

'நாலஞ்சு நாளு கழிச்சு, பிட்டி நவுண்டுதான் வருவான்னு சொல்லு'
-கிளுக்கென சிரித்துக்கொண்டார்கள்.

'ஆமா. ஒங்க வீட்டுக்காரருலாம் சும்மா விட்ருவாருலா..?'

'அவரை ஏம் இப்பம் பேசுத? இதே வேலையாவே இருக்க மனுஷன என்ன செய்ய சொல்லுத'

அவர்களின் பேச்சைக்கேட்டுவிட்டு, 'பொம்பளைலுவோலுக்கு எடக்கப் பார்த்தியா?' என்றார் ஆறுமுகம்.

'நம்ம இருக்கோம்னு நெனச்சே பேசுதாவோன்னு நெனக்கேன்' என்ற பழனியை, 'ஆமா இவங்கண்டாம்' என்றார் ஆறுமுகம்.

இளநீர் குடித்துவிட்டு போடப்பட்டிருந்த கூந்தல்களைப் பொறுக்கி ஓர மாக போட்டுவிட்டு வந்தான் சுப்பையா. மிச்சமிருந்த நான்கு இளநீர்க ளில் இரண்டு இரண்டாக முடிச்சுப் போட்டான். அதில் பரமசிவன் வீட் டுக்கு.
'திமுகவுலதான் சேரணும்னு முடிவு பண்ணிட்டன்னா, வைகோ மாதிரி பெரியாளுவோ முன்னாலதான் சேரணும் பார்த்துக்கெ' என்றான் பழனி.
அவன் சொல்வதை ஆமோதிப்பது போல, பரமசிவம் கட்சி மாறுவது என்று முடிவு செய்துகொண்டார்.

(தொடர்கிறேன்)

No comments: